Home

Sunday, 21 June 2026

ஆவணமாகும் நினைவுக்குறிப்புகள்

 

கல்கத்தாவில் 15.08.1872 அன்று பிறந்த அரவிந்தர் ஆங்கிலேயர் காலத்து ஐ.சி.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் உதவித்தொகை பெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காகச் சென்றார். படிப்புக்காலத்தின் இறுதியில் நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில் தேறியபோதும் குதிரையேற்றத் தேர்வில் பங்கேற்காமல் அவர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார்.


சிறிது காலம் பரோடா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார் அரவிந்தர். அப்போது இடையிடையே பத்திரிகைகளில் இந்திய விடுதலை குறித்த கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அதனால் அரவிந்தரைத் தொடர்ந்து கண்காணித்துவந்த காவல்துறையினர், முஸபர்பூரில் நடைபெற்ற வெடிகுண்டு விபத்தில் இரு ஆங்கிலேயப் பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில்   அரவிந்தர் பெயரையும் இணைத்து ஓராண்டு சிறையில் அடைத்துவிட்டனர்.

சிறைவாசத்தின்போது அரவிந்தரின் உள்ளம் இளமைமுதல் தான் நம்பிவந்த யோகசாதனையை நோக்கித் திரும்பியது. அவர் ஆன்மிகப்பாதையை நோக்கி தன் வாழ்வை மாற்றிக்கொள்ள இச்சிறைவாசம் காரணமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு கர்மயோகி, தர்மா என்னும்  பெயர்களில் இதழ்களைத் தொடங்கி நடத்தினார். அவற்றில் தேசியம், தத்துவம், இலக்கியம் குறித்த கட்டுரைகளை எழுதினார். ’என் நாட்டு மக்களுக்கு’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை மக்களிடையில் பேசுபொருளாக மாறியது. அதைக் கண்டு வெகுண்ட அரசு அவரை அந்தமானுக்கு நாடு கடத்த முனைந்தது. அந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டதும் அரவிந்தர் கல்கத்தாவைவிட்டு ரகசியமாக வெளியேறி படகு வழியாக முதலில் சந்திரநாகூருக்குச் சென்றார். அங்கிருந்து 04.04.1910 அன்று புதுச்சேரிக்குச் சென்று சேர்ந்தார்.

புதுச்சேரியில் சங்கர செட்டியார் என்பவருடைய வீட்டில் இரண்டாவது மாடியில் தங்கினார். 1920இல் பிரான்ஸிலிருந்து வந்த அன்னை  அரவிந்தரின் சீடரானார். இருவரும் இணைந்து ஆசிரமமொன்றை உருவாக்கினர். அந்த ஆசிரமத்திலேயே ஓர் அறையில் தங்கிய அரவிந்தர் எவ்விதமான குறுக்கீடுகளுமின்றி தன் யோகசாதனையைத் தொடர்ந்தார். 05.12.1950 அன்று இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தார்.  

அரவிந்தரின் மறைவையொட்டி ஏராளமான அஞ்சலிக்கட்டுரைகள் உலகின் பல பகுதிகளிலிருந்து வெளிவந்தன. அரவிந்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரும் ஆசிரமத்தின் பொறுப்பாளர்களில் ஒருவருமான அமுதன் என்பவர் அரவிந்தரைப்பற்றிய நினைவுகளைத் தமிழிலேயே எழுதினார். நீண்ட காலத்துக்குப் பிறகு அக்குறிப்புகள் நூறு பக்க அளவில் ஒரு தனி நூலாகவே ஆசிரமத்தின் வெளியீடாக வெளிவந்தது. மாணவப்பருவத்திலிருந்தே அரவிந்தரோடு பழகியவர் என்பதால் அமுதனுடைய நினைவுக்குறிப்புகளை வாசிக்கும்போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் நம் கண்முன்னால் நிகழ்வதுபோலவே உள்ளது. ஒரு நிகழ்ச்சியை உயிர்த்துடிப்போடு சித்தரிப்பதில் அமுதனுக்கு இருந்த ஆற்றலை அறிந்துகொள்ள இந்நூல் உதவியாக இருக்கிறது.

அக்காலத்தில் புதுச்சேரி கலவையன் பள்ளியில் படிப்பதற்காக, புதுச்சேரியிலிருந்து பத்து மைல் தொலைவிலிருந்த கிராமத்திலிருந்து வந்த மாணவர்தான் அமுதன். அவர் முத்தியால்பேட்டையில் ஒரு வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்துதான் தன் நினைவுக்குறிப்பைத் தொடங்குகிறார் அமுதன். அதே பகுதியில் கிருஷ்ணசாமி செட்டியார் என்னும் செல்வந்தர்  வசித்து வருகிறார். அவர் பாரதியாருக்கு நெருக்கமான  நண்பர். பாரதியாரைக் குருவாக நினைப்பவர். அவர் அமுதனைவிட வயதில் மூத்தவர் என்றபோதும் அவருடைய நட்பும் நம்பிக்கையும் அமுதனுக்குக் கிடைக்கின்றன. ஒருநாள் அமுதனை அழைத்துச் சென்று பாரதியாரிடம் அறிமுகப்படுத்துகிறார். ஒவ்வொரு நாளும் பொழுது சாய்ந்த வேளையில் பாரதியாரும் ஸ்ரீநிவாசாச்சாரியாரும் இணைந்து கடற்கரைக்குச் சென்று, இரவு கவிந்த வேளையில் திரும்பும் வழியில் அரவிந்தரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிவிட்டு வரும் செய்தியை இருவரும் அறிந்துகொள்கிறார்கள். அதன்பிறகு தாமும் அரவிந்தரை நேரில் சந்திக்கவேண்டும் என இருவரும் ஆசை கொள்கின்றனர்.

ஏதோ ஒரு துணிச்சலில் ஒருநாள் மாலையில் ஐந்து மணிக்கு இருவரும் மிதிவண்டியிலேயே அரவிந்தர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டுகின்றனர். சில கணங்களுக்குப் பிறகு கதவு திறக்கப்படுகிறது. திறந்தவர் அரவிந்தர்தான். ஆனால் அவர் தன் முகம் தெரியாதபடி சட்டென திரும்பிச் சென்றுவிடுகிறார். அவருடைய முதுகையும் நீண்டிருந்த கேசத்தையும் பாதங்களையும் மட்டுமே அவர்களால் பார்க்கமுடிகிறது. 1912ஆம் ஆண்டில் அரவிந்தரைச் சந்திக்கச் சென்ற இந்த முதல் அனுபவத்தோடு தன் நினைவுக்குறிப்புகளை எழுதத் தொடங்குகிறார் அமுதன்.

அமுதனின் நினைவுக்குறிப்புகளில் பாரதியார், ஸ்ரீநிவாச ஐயங்கார், வ.ரா., அன்னை, காந்தியடிகள், இராஜாஜி என பல ஆளுமைகளைப்பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. பாரதியார் தன் மகனைப்போல தன் மீது பாசம் கொண்டிருந்தார் என பல இடங்களில் அமுதன் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நேரத்தில் அமுதன் தங்குவதற்கு இடமின்றித் தவித்தபோது தன் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என அமுதனுக்கு பாரதியார் ஆறுதல் சொல்கிறார்.

வ.ரா. எப்போதும் அரவிந்தரின் வீட்டு முகப்பை அடுத்த அறையிலேயே தங்கி அரவிந்தருடைய சந்திப்புகளை ஒழுங்குசெய்யும் பொறுப்பில் இருந்திருக்கிறார். அவரும் ஒரு சகோதரனிடம் பழகுவதுபோல தன்னிடம் பேசிப் பழகியதாக அமுதன் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் அரவிந்தரைச் சந்திக்க வேண்டும் என பலமுறை தன் விருப்பத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டபோதும், அதை அவர் கடைசிவரைக்கும் பொருட்படுத்தவே இல்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார். நாளை, நாளை என ஒவ்வொரு நாளையும் தள்ளிப்போட்டு காலம் தாழ்த்தியபடி வந்திருக்கிறார் வ.ரா. கடைசிவரைக்கும் அந்தச் சந்திப்புக்கு வ.ரா. வழி செய்யவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வ.ரா. சொந்தக் காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேறிய சமயத்தில் விஜயகாந்தன் என்னும் வங்கத்து இளைஞர் அரவிந்தரின் உதவியாளர் பொறுப்பை எடுத்துக்கொள்கிறார். ஒருநாள் அவரிடம் தன் விருப்பத்தை எடுத்துரைக்கிறார் அமுதன்.  அமுதனின் ஆவலைப் புரிந்துகொண்ட விஜயகாந்தனும் அதைக் குறித்து அரவிந்தரிடம் பேசி அவருடைய ஒப்புதலையும் பெற்றுவிடுகிறார். ஒருநாள் நண்பகல் வேளையில் அரவிந்தர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது அவரே அரவிந்தரின் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறார். பல மாதங்களாக காத்திருந்ததற்குப் பயன் கிடைத்துவிடுகிறது.

அரவிந்தரைச் சந்தித்த பரவசத்தை வாசகர்களும் உணரத்தக்க வகையில் ஒரு சொற்சித்திரமாகத் தீட்டியிருக்கிறார் அமுதன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு நாள்தோறும் சந்தித்திருக்கிறார். ஆங்கிலம் பேச வராத சூழலில் அரவிந்தருடன் தப்புத்தப்பாகப் பேசியே ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டதாக அமுதன் குறிப்பிட்டிருக்கிறார்.

மெட்ரிகுலேஷன் தேர்வு நெருங்கிவந்த சமயத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்த அமுதனிடம் பணமில்லை. பெற்றோர் வழியாகக் கிடைத்த பணம் போதுமானதாக இல்லை. கூடுதலாக ஒன்பது ரூபாய் தேவைப்பட்ட சூழலில் அரவிந்தரே அந்தப் பணத்தைக் கொடுத்து “போ, போய் படி” என்று கூறி அனுப்பிவைக்கிறார். அக்காலத்தில் சென்னைக்குச் சென்றுதான் அத்தேர்வை எழுதும் நடைமுறை இருந்திருக்கிறது. அதையொட்டி அவரும் சென்னைக்குச் சென்று தங்கியிருந்து தேர்வுகளை எழுதிவிட்டுத் திரும்பிவிடுகிறார்.

அப்போதுதான் பிரான்சிலிருந்து அன்னை புதுச்சேரிக்கு வந்து துய்ப்ளேக்ஸ் வீதியில் வீடெடுத்துத் தங்கத் தொடங்குகிறார். அரவிந்தரின் வீட்டிலிருந்த விஜயகாந்தனே அமுதனை அன்னையின் இல்லத்துக்கும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

தேர்வுமுடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. சென்னையில் இருக்கும் நண்பரொருவர் அமுதன் வெற்றி பெற்ற செய்தியை ஒரு கடிதம் வழியாக அவருக்குத் தெரிவிக்கிறார். உடனே அமுதன் ஓடோடிச் சென்று அரவிந்தரையும் பாரதியாரையும் சந்தித்து வெற்றி பெற்ற தகவலைக் கூறி ஆசி பெறுகிறார்.  மெட்ரிகுலேஷன் வரைக்கும் படித்ததே போதும் என நினைத்த அமுதன் அரவிந்தரிடம் “இனிமேல் உங்களோடேயே தங்கிவிடட்டுமா?’ என்று ஆவலோடு கேட்கிறார். அரவிந்தருக்கு அருகிலேயே தங்கியிருக்கவேண்டும் என்னும் கனவு அவரை ஆட்கொண்டிருக்கிறது.

ஆனால் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்த அரவிந்தர் புன்னகையுடன் சென்னைக்குச் சென்று அவரை மேற்படிப்பு படிக்குமாறு சொல்கிறார். அவருடைய குடும்பத்தினருக்கும் அவர் மேற்படிப்பு படிக்கவேண்டும் என்பதுதான் கனவாக இருக்கிறது. அரவிந்தரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பெற்றோரின் கனவை  நிறைவேற்றுவதற்காக சென்னைக்குச் செல்கிறார். சென்னையில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து உதவுமாறு கஸ்தூரிரங்கன் என்கிற தன் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்புகிறார் அரவிந்தர். அந்த நண்பரும் அமுதனுக்கு ஒரு தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கிறார். அங்கு தங்கி தன் கல்வியைத் தொடர்கிறார் அமுதன்.

சென்னைக்குச் சென்றாலும் வார விடுமுறை தினங்களான இரு நாட்களில் புதுச்சேரிக்கு வந்து அரவிந்தரைச் சந்தித்து அவரோடு பொழுதைக் கழித்துவிட்டுத் திரும்புவதை அமுதன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்தச் சந்திப்புகளில் நிகழ்ந்த தொடர்ந்த உரையாடல்களின் விளைவாக அரவிந்தரின் வழியில் அமுதனும் யோகப்பயிற்சியில் ஈடுபடத் தொடங்குகிறார்.

ஒருநாள் இரவில் அரவிந்தரின் இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவருடைய குடுமியை யாரோ ஒருவர் கத்தரித்துவிடுகின்றனர். காலையில் விழித்தெழுந்த அமுதன் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், அச்செயலுக்குப் பின்னால் அரவிந்தர் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டதும் அந்த இழப்பை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்.

குடுமி போனால் பிராமணத்துவமே போய்விட்டது என்கிற நம்பிக்கை நிலவிய அன்றைய சூழலில் அமுதன் கவலையில் ஆழ்ந்தாலும் தன் குருவான அரவிந்தரின் விருப்பப்படியே அனைத்தும் நிகழட்டும் என அமைதிகொண்டு சென்னைக்குத் திரும்புகிறார்.  எதிர்பாராத விதமாக சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை வேளையில் அமுதனைத் தேடிக்கொண்டு அவருடைய அப்பா வந்துவிடுகிறார். மகனுடைய திருமணத்துக்காக ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசி முடித்துவிட்டுத்தான் அங்கே வந்திருக்கிறார். ஆனால் குடுமி இல்லாமல் கிராப்புத்தலையோடும் பாழ்நெற்றியோடும் சந்தியாவந்தனம் கூட செய்யாமல் தன் மகன் சென்னையில் நடமாடுவதைப் பார்த்து மனம் நொந்துவிடுகிறார். தான் பிறந்த பிராமண குலத்துக்கே அமுதன் கேடு விளைவித்துவிட்டதாக அவர் கதறி அழுகிறார். அந்தத் திருமண முயற்சி அந்தத் தகவலோடு அப்படியே நின்றுவிடுகிறது. ‘எது நடந்தபோதும் சம்பவத்தைவிட்டு விலகி சாட்சிபூதனாக இருந்து பார்த்துக் கற்றுக்கொள். நிகழ்ச்சிகளோடு கலந்துகொண்டு  உழலாதிரு’ என ஒருமுறை அரவிந்தர் சொன்ன சொற்களை நினைத்து மெல்லமெல்ல தன் துயரத்தை மறக்கிறார் அமுதன்.

நீண்ட காலம் அரவிந்தரோடு பழகி பிரதம சீடராக இருந்தவர் என்றபோதும், அமுதன் ஆரம்பகால ஐந்தாறு ஆண்டு கால அனுபவங்களை மட்டுமே தன் நினைவிலிருந்து எழுதியிருக்கிறார். அந்நினைவுக் குறிப்புகளே அரவிந்தருக்கான அஞ்சலிக்குறிப்பாக அமைந்துவிட்டது.

அஞ்சலிக்குறிப்பாக இருந்தாலும் புதுச்சேரியை ஒட்டி வேறு சில தகவல்களை அறிந்துகொள்வதற்கு அமுதனின் நூல் பேருதவியாக இருக்கிறது. சென்னையில் கருப்பர் நகரம், வெள்ளையர் நகரம் என பகுத்துவைத்ததுபோல, புதுச்சேரியிலும் பாகுபாடு இருந்திருக்கிறது. நகரத்தின் மையத்தில் ஓடும் வாய்க்கால் நகரையே இரு பிரிவாகப் பிரிக்கிறது. ஒருபுறம் பிரெஞ்சுக்காரர்களின் வசிப்பிடம். மறுபுறம் உள்ளூர்வாசிகளின் வசிப்பிடம். உள்ளூர்வாசிகளின் வீடுகளில் மின்சார வசதி அமைந்த வீடுகள் மிகவும் குறைவு. மின் இணைப்பு வசதி கொண்ட வீடுகளுக்கு மின்கட்டணத்தை விதிக்க அன்றைய பிரெஞ்சு அரசு புதியதொரு வழிமுறையைப் பின்பற்றியிருக்கிறது. மின்னிணைப்புடன் மீட்டர் இணைக்கப்படும் வழக்கம் அப்போது நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. ஓர் இணைப்பில் நான்கு விளக்குகளை மட்டுமே பொருத்திக்கொள்ளலாம்.  அதற்கு மேல் பொருத்திக்கொள்ள அனுமதி இல்லை. ஒரு விளக்குக்கு ஒன்றேகால் ரூபாய் கட்டணம். பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் நான்கு விளக்குகளுக்கான கட்டணம் செலுத்தப்படவேண்டும். ஒரு நகரத்தின் வளர்ச்சி எப்படி படிப்படியாக மேலோங்கி வந்திருக்கிறது என்பதை இதுபோன்ற குறிப்புகள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

ஊர்மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் சென்று உட்கார்ந்து உரையாடுவதை ஒரு வழக்கமாகவே பின்பற்றி வந்தனர் என்பதைப்  புரிந்துகொள்ள முடிகிறது.  வில்லியனூர் ஆற்றங்கரை அந்தக் காலத்தில் ஒரு சுற்றுலா மையமாக விளங்கியிருக்கிறது. நகரத்தில் வசிப்பவர்கள் வார விடுமுறை தினங்களில் வண்டி கட்டிக்கொண்டு அங்கு சென்று பொழுதுபோக்கிவிட்டுத் திரும்புகின்றனர். புதுச்சேரியில் இன்னொரு பகுதியில் உள்ள மடுக்கரையில் ஒவ்வொரு மாதமும் சமபந்தி போஜனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பாரதியார் அங்கு அடிக்கடி சென்றுவந்திருக்கிறார்.

வ.ரா. வங்கமொழியைக் கற்றுக்கொண்ட விதத்தைப்பற்றிய ஒரு குறிப்பையும் அமுதன் எழுதி வைத்திருக்கிறார். அரவிந்தர் வங்கத்திலிருந்து வந்ததால் அவரோடு சில வங்க நண்பர்களும் வந்து தங்கியிருக்கின்றனர். அனைவரும் வ.ரா.வோடும் எவ்விதமான வேறுபாட்டையும் காட்டாமல் நட்புறவோடு பேசிப் பழகுகின்றனர்.  அவர்களோடு ஒவ்வொரு நாளும் சிலமணி நேரங்கள் இடைவிடாமல் பேசிப்பேசி வ.ரா.வும் வங்கமொழியைக் கற்றுக்கொள்கிறார். பிறகு அரிச்சுவடியில் தொடங்கி வங்க மொழியைப் பிழையின்றி பேசவும் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்கிறார். அதையடுத்து, பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ’ஜோடி மோதிரம்’ என்னும் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்குத் தேர்ச்சி பெறுகிறார்.  ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள விழைகிறவர்களுக்கு, அதற்குரிய வழிகள் தாமாகவே அமைகின்றன என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாக விளங்குகிறது.

பாரதியாரோடு தொடர்புடைய ஒரு முக்கியமான தகவலை அமுதனுடைய குறிப்புகளில் காணமுடிகிறது. காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்த சமயத்தில் அவரைச் சந்தித்து கடற்கரையில் தாம் நடத்தவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பதற்காக பாரதியார் சென்றிருந்தார் என்னும் குறிப்பை வ.ரா. தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதுவரை அந்தக் குறிப்பு ஒன்றே ஆவணம் என நினைத்திருந்தேன். இப்போது அமுதன் குறிப்புகளைப் படிக்கும்போது இன்னொரு முக்கியமான தகவல் என்றே தோன்றுகிறது.

காந்தியடிகளைச் சந்திப்பதற்குச் சென்ற பாரதியார் தன்னோடு அமுதனையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது காந்தியடிகள் இராஜாஜியின் இல்லத்தில் தங்கியிருந்தார். காந்தியடிகளைச் சந்திக்க மக்கள் திரள்திரளாக வந்துகொண்டிருந்தார்கள். சந்தித்தவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். பாரதியார் வீட்டுக்கு வெளியிலேயே நின்றிருக்க, சூழலைக் கவனித்து வருவதற்காக அமுதன் மட்டும் உள்ளே சென்றார். அங்கே வ.ரா. நின்றிருப்பதை அப்போதுதான் அமுதன் பார்த்தார்.  புதுச்சேரியிலிருந்து அவர் புறப்பட்டுச் சென்ற பிறகு இருவரும் சந்திக்கவே இல்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்க நேர்ந்ததால் தனிப்பட்ட நல விசாரிப்புகளில் தொடங்கிய உரையாடல் சற்றே நீண்டுவிடுகிறது.  

அதற்குப் பிறகு பாரதியார் காந்தியடிகளைச் சந்திக்க வந்திருக்கும் செய்தியை வ.ரா.விடம் தெரிவித்தார் அமுதன். ‘”இது உடனடியாக நடக்கக்கூடிய காரியமல்ல” என்று வ.ரா. தயக்கத்துடன் பதில் சொன்னார். “நீங்களே அத்தகவலை நேரிடையாக பாரதியாரிடம் சொல்லுங்கள்” என்று அவரை அழைத்துக்கொண்டு வாசலுக்கு மறுபுறத்தில் நின்றிருக்கும் பாரதியாரிடம் அழைத்துச் சென்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதியாரை நேரில் பார்த்த வ.ரா. கைகூப்பி வணக்கம் சொன்னார். பிறகு மெல்லிய குரலில் “உள்ளே கூடத்தில் வந்து அமருங்கள். நீங்களே இராஜாஜியிடம் தகவலைச் சொல்லலாம்” என்று சொன்னபடி கூடத்துக்கு  அழைத்துச் சென்றார்.

கூடத்தில் ஒருகணம் அமர்ந்த பாரதியார் மறுகணமே வேகமாக எழுந்துநின்று “நான் தெய்வ ஆணை பெற்று காந்தியடிகளைச் சந்திக்க வந்திருக்கிறேன். அவரை உடனே பார்க்கவேண்டும்” என்று சொன்னவாறு வேகவேகமாக காந்தியடிகள் அமர்ந்திருக்கும் அறைக்குச் சென்றுவிட்டார்.  வ.ரா. கூடத்திலேயே நின்றுவிட்டார். அமுதன் வாசலிலேயே நின்றுவிட்டார். அறைக்குள் பாரதியாரும் காந்தியடிகளும் என்ன பேசினார்கள் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து வில்லைவிட்டுக் கிளம்பிய அம்புபோல வேகமாக வெளியே வந்த பாரதியார் அமுதனையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

காந்தியடிகளையே நேரில் பார்த்து என்ன நடைபெற்றது என அறிந்துகொள்வதற்காக மறுநாள் அமுதன் மட்டும் தனித்து அந்த வீட்டுக்குச் சென்றார். ஆனால் வாசலில் இருந்த வ.ரா.  அடுத்தநாள் வருமாறு பதில்சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார். தன் முயற்சியிலிருந்து பின்வாங்க விரும்பாத அமுதன் மறுநாள் காலையில் பத்துமணியளவில் மீண்டும் அந்த வீட்டுக்குச் சென்றார். வ.ரா. வேறு வழியில்லாமல் அவரைக் காந்தியடிகள் அமர்ந்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவரை நிமிர்ந்து பார்த்த காந்தியடிகள் “எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?” என்று கேட்டபோது அவரிடம் நேரிடையாகப் பேச சொல் கிட்டாது தடுமாறினார் அமுதன்.

காந்தியடிகளுக்கு அருகில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர விரும்புவோர் கையொப்பம் இடுவதற்காக அச்சடித்த தாள்களின் கட்டுகள் இருந்தன. அவற்றிலிருந்து ஒரு தாளை எடுத்து அமுதனிடம் கொடுக்கும்படி சொன்னார் காந்தியடிகள். பிறகு “தேச சேவைக்காக ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்வாயா? யோசித்து முடிவு செய்துவிட்டு மூன்றுநாள் கழித்து வா” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.  அதற்குப் பிறகு அமுதனால் அங்கு நின்றிருக்க முடியவில்லை. கேட்க நினைத்ததைக் கேட்காமலேயே திரும்பி வந்துவிடுகிறார் அமுதன். பாரதியாரின் உரையாடலைப்பற்றித் தெரிந்துகொள்ள நினைத்த அவர் எண்ணம் ஈடேறவில்லை. மூன்றுநாள் கழித்து வருகவென காந்தியடிகள் குறிப்பிட்டிருந்தபோதும், அமுதன் அவரை மறுபடியும் சந்திக்க முயற்சியே செய்யவில்லை. இந்தத் தகவலைத் தமிழுலகம் அறிந்துகொள்வதற்கு அமுதனின் நினைவுக்குறிப்பு மட்டுமே நம்மிடம் எஞ்சியிருக்கிறது.  

அரவிந்தர் என்னும் மகத்தானதொரு ஆளுமையோடு, மாணவப்பருவத்திலிருந்தே பேசிப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்ததால்,  அமுதனுடைய குறிப்புகள் ஒரே அமர்வில் வாசித்துவிடும் அளவுக்கு சுவாரசியத்தன்மை கொண்டதாக உள்ளது. ஆன்மிகத் தகவல்களுக்கு அப்பால் அரவிந்தருடைய தனித்துவம் வெளிப்படும் வகையில் பல  நிகழ்ச்சிகளைத் தம் நினைவிலிருந்து எழுதியிருப்பதால் அமுதன் எழுதிய நூலுக்கு இயல்பாகவே ஓர் ஆவணத்தன்மை அமைந்திருக்கிறது.

 

 

(ஸ்ரீ அரவிந்த தரிசனம். அமுதன் நினைவு அஞ்சலி. ஸ்ரீ.அரவிந்த ஆசிரமம். புதுச்சேரி -2)

 

(புக் டுடே – இணைய இதழ் – 20.06.2026)