Home

Sunday, 31 May 2026

எதிர்பாராத அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய உழைப்பு - நேர்காணல்

 


கேள்வி: குடும்பத்தில் உங்களுக்கு இலக்கிய ஆர்வத்தை உருவாக்கியவர் யார்?

 

பதில்: எனக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை ஊட்டியவர்கள் என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஊக்கமளிக்கும் நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிற சமயத்தில் ஒவ்வொரு வாரமும் நூல்வாசிப்பு என்றொரு பாடவேளை இருக்கும். அப்போது, எங்கள் பள்ளி நூலகர் நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து ஒவ்வொரு மாணவரிடமும் கொடுத்து படிக்கச் செய்வார். நாற்பத்தைந்து மணித்துளிகள் கொண்ட பாடவேளையில் அரைமணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். 

எஞ்சியிருக்கும் கால்மணி நேரம் படித்த புத்தகத்தைப்பற்றிப் பேசவேண்டும். மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கு அது ஒரு வழி. என் ஆர்வத்தை அறிந்துகொண்ட ஆசிரியர்கள் என்னைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம் வீட்டுநூலகத்திலிருந்த புத்தகங்களை எனக்கு இரவலாகக் கொடுத்து படிக்கும்படி சொன்னார்கள். பள்ளி நூலகத்தில் புத்தகம் எடுத்துப் படிப்பதற்கும் என்னை அனுமதித்தார்கள். எங்கள் கிராமநூலகத்தில் நூலக ஊழியராகப் பணியாற்றியவர் என் அப்பாவுடைய நண்பரின் மகன். பள்ளிச்சிறுவனாக இருந்தபோதே நான் நூலகத்துக்குச் செல்லத் தொடங்கிவிட்டேன். நான் நூலக உறுப்பினராக  இல்லாவிட்டாலும் நான் புத்தகங்களை எடுத்துச் சென்று படிப்பதை அவர் தடுத்ததில்லை. நாங்கள் வசித்த வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டில் வாழ்ந்த ஒரு அக்காவுக்கு நான்தான் ஒவ்வொரு வாரமும் வாராந்திரிகளை வாங்கிவந்து கொடுப்பேன். அவர் படித்து முடித்த எல்லாப் புத்தகங்களையும் சில நாட்களுக்குப் பிறகு என்னிடம் கொடுத்துவிடுவார். அவற்றையெல்லாம் குவித்துவைத்துக்கொண்டு விழுந்துவிழுந்து படிப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊரில் இயங்கிவந்த திருக்குறள் கழகம் என்னும் அமைப்பைச் சேர்ந்த மூத்த அண்ணன்மார்களும் என் வாசிப்பை ஊக்கப்படுத்தி வளர்த்தவர்கள். சிறுவர் கதைகள், நீதிக்கதைகள், புராணக்கதைகள், படக்கதைகள், பத்திரிகைத் தொடர்கதைகள், துப்பறியும் கதைகள் என சென்றுகொண்டே இருந்த என்னிடம் ஒருநாள் அழகிரிசாமியின் கதைத்தொகுதி ஒன்று  தற்செயலாக வந்து சேர்ந்தது. அந்தப் புத்தகம் என் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை. அந்த வாசிப்புதான் என்னை இலக்கியத்தை நோக்கித் திசைதிருப்பியது. என் அப்பா ஒரு தையல் தொழிலாளி. என் அம்மா அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். இருவரும் நான் புத்தகம் படிப்பது சார்ந்து ஒருநாளும் என்னிடம் வருத்தப்பட்டுப் பேசியதில்லை. என்னைச் சுற்றி என் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதற்கு இசைவான வகையில் அமைந்த நல்ல சூழலும் என் மீது பாசம் கொண்டு என்னை உற்சாகப்படுத்திய மனிதர்களும்தான் இலக்கிய வாசிப்பின் மீது என் ஈடுபாடு பெருகுவதற்குக் காரணங்கள். 

 

கேள்வி: தபால் துறை மற்றும் பி.எஸ்.என்.எல்-இல் பணியாற்றிய அனுபவம், உங்கள் எழுத்து வாழ்க்கையில் எந்த தாக்கங்களை ஏற்படுத்தியது?

 

பதில்: பட்டப்படிப்பை முடித்ததும் முதன்முதலில் அஞ்சல்துறையில்தான் எழுத்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விழுப்புரத்தில் ஓராண்டுக்காலம் பணிபுரிந்தேன். பிறகு தொலைபேசித்துறை மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக அதிலிருந்து விலகி டெலிப்பொன் ஆப்பரேட்டராக புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் வேலை செய்தேன். அங்கும் ஓராண்டுதான் பணியில் இருந்தேன். அதற்கிடையில் தொலைபேசித்துறையிலேயே இளநிலைப் பொறியாளர் பணிக்குத் தேர்வாகி ஓராண்டு பயிற்சியை முடித்துக்கொண்டு கர்நாடகத்தில் பணிபுரிந்தேன். வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு நகரங்களில் பணிபுரிந்து, கடைசியாக கோட்டப்பொறியாளராக 2018இல் துறையிலிருந்து ஓய்வு பெற்றேன். ஏறத்தாழ முப்பத்தெட்டாண்டு கால அலுவலக வாழ்க்கையில் பல்வேறு விதமான மனிதர்களைச் சந்தித்து உரையாடி பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அலுவலகம் சார்ந்தவர்களோடு மட்டுமன்றி, அலுவலகத்துக்கு வெளியேயிருக்கும் பொதுமனிதர்களோடும் விரும்பிப் பழகியிருக்கிறேன். அவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டிருக்கிறேன். அவர்களுடைய உரையாடல்களில் பங்கெடுத்திருக்கிறேன். பலருடைய வீடுகளில் விருந்துண்டிருக்கிறேன். கர்நாடகம் மட்டுமன்றி, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றுவந்திருக்கிறேன். அலுவலக வாழ்க்கையின் வழியாக நான் பெற்ற அனுபவங்கள் ஏராளம். அந்த அனுபவங்கள் அனைத்தும் மனிதர்களைப் புரிந்துகொள்ளும் வழிவகைகளை எனக்குக் கற்பித்திருக்கின்றன. வாழ்க்கையையும் சமூகத்தையும் புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் எனக்கு உற்ற துணையாக அமைந்திருக்கின்றன. இன்றும் நான் ஏதேனும் ஒரு கட்டுரையையோ, கதையையோ எழுதத் தொடங்கும்போது, என் ஆழ்மனத்தில் படிந்திருக்கும் அனுபவத்தொகையிலிருந்து ஒன்றிரண்டு செய்திகளை எடுத்து கதைகளுக்காகவும் கட்டுரைகளுக்காகவும் பயன்படுத்தியிருக்கிறேன். சமீபத்தில் சில வாரங்களாக, கிழக்கு டுடே என்னும் இணையதளத்தில்  ’நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதிக்கொண்டு வருகிறேன். என் பணிக்காலத்தில் நான் சந்தித்துப் பழகிய கன்னட நண்பர்கள் என்னிடம் சொன்ன கதைகளையே இத்தொடருக்காக, என் நினைவிலிருந்து எழுதிவருகிறேன். இவை எல்லாமே என் அலுவலக வாழ்க்கையினால் நான் பெற்ற பேறு.

 

கேள்வி:      வேலைவாழ்க்கை மற்றும் எழுத்து வாழ்க்கையை எப்படி சமநிலைப்படுத்தினீர்கள்?

 

பதில்: இவ்விரண்டு வாழ்க்கைக்கூறுகளோடு நீங்கள் இன்னொரு கூறையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் குடும்பவாழ்க்கை என்னும் கூறு. மானுட வாழ்க்கை என்பது இப்படி மூன்று பெரும்பிரிவுகளால் ஆனது. பெரும்பாலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் வேலைவாழ்க்கைக்கூறும் குடும்பவாழ்க்கைக்கூறும் பொதுவாக இருக்கும். மூன்றாவது கூறு மட்டுமே  ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலருக்கு ஓவியம் மீது நாட்டமிருக்கலாம். சிலருக்கு நடனம் மீது நாட்டமிருக்கலாம். இன்னும் சிலருக்கு இசை, பயணம், சிற்பம் என ஏதோ ஒன்றின் மீது நாட்டமிருக்கலாம். தன்னுடைய அடையாளத்தை நிறுவ விரும்பும் ஒவ்வொருவரிடமும் இந்த மூன்றாவது கூறு  தென்படும். ஆனால், எல்லோருக்கும் காலம் ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணி நேரத்தை மட்டுமே வழங்கியிருக்கிறது. இந்த வரையறைக்குள் மூன்று கூறுகளிலும் சிறப்பாகச் செயல்படுவது என்பது மிகப்பெரிய சவால். அப்படி செயல்பட்டால் மட்டுமே, ஆசைப்படும் துறையில் நம்மை வளர்த்துக்கொள்ள முடியும். நீங்கள் ஒரு கூறுக்கான நேரத்தில் அக்கூறுக்குரிய வேலைகளைத்தான் செய்யவேண்டும். இன்னொரு கூறைப்பற்றி நினைத்துக் குழப்பிக்கொள்ளவே கூடாது. இங்கிருக்கும்போது அதையோ, அங்கிருக்கும்போது இதையோ நினைக்கவே கூடாது. ஒருவர் இம்மூன்று வடிவங்களிலும் தனித்தனியாக சிறப்பாக வெளிப்படுவதுதான் சிறந்த வாழ்க்கை. நான் இந்த மூன்று நிலைகளிலும் ஒரு சமநிலையைப் பேணி வருபவன். எந்தக் கட்டத்திலும் எனக்குத் தடுமாற்றமில்லை.

 

கேள்வி:     உங்களை மொழிபெயர்ப்புக்குத் தூண்டிய அனுபவம் எது?

 

பதில்: இந்தி மொழி வழியாக பல இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தமிழாக்கம் செய்து அளித்த சரஸ்வதி ராம்நாத் அவர்களைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். அவர் கடந்த தொண்ணூறுகளில் பெங்களூரில் வசித்துவந்தார். நான் பெங்களூருக்கு வருவதற்கு முன்பிருந்தே எங்கள் இருவருக்குமிடையில் கடிதப்போக்குவரத்து இருந்தது. பெங்களூருக்கு வந்ததும் அவரைச் சந்தித்து அவருடைய நட்பைப்பெற்றேன். கன்னட இலக்கியச்சூழலை நன்கு அறிந்தவன், கன்னடப் படைப்புகளை கன்னடத்திலேயே படிப்பவன் என்கிற நிலையில் அவருக்கு என் மீது நல்ல மதிப்பிருந்தது. நான் மொழிபெயர்ப்பில் ஈடுபடவேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தியபடி இருந்தார். ஆனால் எனக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது.  ஒருமுறை இந்திய அளவில் நடைபெற்றுவரும் நாடக முயற்சிகளை தமிழ்ச்சூழலில் இருப்பவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எல்லா மொழிகளிலிருந்தும் நாடகப்பிரதிகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து மொழிபெயர்த்து ஒரு பெருந்தொகுதியாகக் கொண்டுவரவேண்டும் என்ற கனவோடு சரஸ்வதி ராம்நாத் பேசிக்கொண்டிருந்தார். அடுத்த சந்திப்பிலேயே அந்த மொழிபெயர்ப்பு சார்ந்து ஒரு வேலைத்திட்டத்தையும் அவர் உருவாக்கிக்கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார். இந்தி, மராத்தி, அசாமி, காஷ்மீரி, குஜராத்தி, ஒரிய மொழிகளில் எழுதப்பட்டு இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நாடகங்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாகத் தமிழில் மொழிபெயர்த்தார். அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து சில மாதங்களிலேயே ‘இந்திய மொழி நாடகங்கள்’ என்னும் பெயரில் ஒரு தொகுதியும் வந்துவிட்டது. அந்தத் தொகுதிக்குத்தான் 1993ஆம் ஆண்டில் அவர் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார். மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் நாடகங்கள் எதுவும் இந்தியில் மொழிபெயர்க்கப்படவில்லை. அதனால் அந்தந்த மொழி சார்ந்த படைப்பாளர்களிடம் தகவல் தெரிவித்து அவர்கள் வழியாக அவற்றை மொழிபெயர்த்து வாங்கித் தொகுத்து ஒரு தொகுதியாகக் கொண்டுவரவேண்டும் என்பது அவர் திட்டமாக இருந்தது. அப்போதுதான் அவர் கன்னட நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் வழங்கினார். நான் பலமுறை மறுத்தபோதும் அவர் புன்னகைத்தபடி “சரி சரி, இந்த ஒரு தரம் செய்ங்க” என்று சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதற்குப் பின்பு, அவருடைய வேண்டுகோளை என்னால் தட்டிக் கழிக்கமுடியவில்லை. சந்திரசேகர் பாடீல் என்பவர் எழுதிய  ஒரு நாடகத்தை அவருக்காகத் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்தேன்.  அதுதான் முதல் முயற்சி. அந்த ஒன்றோடு முடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. ஆனால் சூழல் வேறுவிதமாக நினைத்துவிட்டது.  இன்னொருவருக்காக, மற்றொருவருக்காக என என் மொழிபெயர்ப்பு வேலைகள் அடுத்தடுத்து நீண்டுகொண்டே சென்றுவிட்டன.

 

கேள்வி: உங்கள் எழுத்தை பாதித்த மூன்று முக்கியமான எழுத்தாளர்கள் யார்?

 

பதில்: தமிழ்மொழியைப் பொறுத்த அளவில் என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் அழகிரிசாமியும் ஜெயகாந்தனும். இந்திய அளவில் என்னைப் பாதித்தவர்கள் சிவராம காரந்த்தும் தாராசங்கர் பானர்ஜியும். உலக அளவில் டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, செகாவ் நால்வருமே எனக்கு முக்கியமான படைப்பாளிகள்.

 

கேள்வி:     ஒரு படைப்பைத் தொடங்கும் போது உங்களுக்கு முதலில் தோன்றுவதுகதையா அல்லது காட்சியா?

 

பதில்: ஒரு படைப்பாக்கத்தைப் பொறுத்தவரையில் அது அல்லது இது என எந்த ஒன்றையும் சுட்டிக்காட்டித் ஒருபோதும் தீர்மானமாக வரையறுக்கவே முடியாது. நூறு சிறுகதைகளை எழுதிய எழுத்தாளனாக இருந்தாலும் கூட நூற்றியோராவது சிறுகதையை எழுதத் தொடங்கும்போது முதல் சிறுகதையை எழுதும் எழுத்தாளனைப்போல முட்டிமுட்டி மோதும் தவிப்பும்  தடுமாற்றமும் நிச்சயமாக இருக்கும். ஒருவரால் நினைப்பதையெல்லாம் எழுதிவிடவும் முடியாது. நினைத்த கணத்திலேயே எழுதிவிடவும் முடியாது. எவ்விதமான சூத்திரங்களுக்குள்ளும் வகைப்படுத்த முடியாத ஒன்று எழுத்து. பல சமயங்களில் உங்களிடமிருக்கும் நெருப்பைத் தூண்டிவிட ஒரே ஒரு சொல் போதும். சில சமயங்களில் ஒரே ஒரு காட்சிகூட போதும். சில சமயங்களில் உங்களுக்கு நிகழ்ந்த ஏதோ ஒரு தனித்துவமான அனுபவமே எழுதவைத்துவிடும். சிற்சில சமயங்களில் யாரோ ஒருவருக்கு நேர்ந்த அனுபவமாக இருந்தாலும் அது உங்களையும் உடல்நடுங்க வைக்கக்கூடிய அல்லது கரைத்துவிடக்கூடிய அனுபவமாக உருமாறி எழுதவைத்துவிடும். அதே சமயத்தில், உங்கள் ஆழ்நெஞ்சில் நெருப்பில்லாதபோது, சொல், காட்சி, அனுபவம் என எல்லாமே உகந்தவகையில் அமைந்தாலும் எழுதமுடியாமல் போகலாம்.  எழுத்து எப்போதும் தன்னிச்சையானது. அதற்குப் புறவயமான இலக்கணங்களை ஒருபோதும் வகுக்கமுடியாது. 

 

 

கேள்வி:     நீங்கள் அதிகம் எழுத விரும்பும் நேரம் எது?

 

பதில்: பெரும்பாலும் இரவு நேரங்களையே நான் எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன்.

 

கேள்வி:     குழந்தைகளுக்கான பாடல்களை எழுதும் உந்துதல் எப்படித் தோன்றியது?

 

பதில்: எங்கள் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். நான்தான் மூத்த பிள்ளை. எனக்குக் கீழே நான்கு பிள்ளைகள். எல்லோருக்கும் நான்தான் பாட்டு பாடி கதைசொல்லி விளையாட்டு காட்டி பொழுது போக்குவேன். என் நண்பர்கள் வீடுகளிலும் இதே கதைதான். எட்டுப் பிள்ளைகள், பத்து பிள்ளைகள் என்பதெல்லாம் அந்தக் காலத்தில் ரொம்ப சாதாரணம். அவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கும் நான் கதையும் பாட்டும் சொல்லும் அண்ணனாகவே இருந்தேன். இதற்கெல்லாம் என் புத்தக வாசிப்பு மிகவும் உதவியாக இருந்தது. நான் படித்த கதைகளுக்கு கொஞ்சம் கண்ணும் காதும் வைத்து சுவாரசியமூட்டி அவர்களை ம் கொட்டவைப்பேன். ஆறேழு பிள்ளைகள் நம்மைச் சுற்றி உட்கார்ந்து ஆர்வத்துடன் கதை கேட்க, அவர்களுடைய ஆர்வத்தை மேன்மேலும் தூண்டும் வகையில் கற்பனையைக் கலந்து கதையும் பாட்டும் சொல்வது இனிய அனுபவம். அத்தகு அனுபவம் எனக்கு நிறைய உண்டு. அது இயற்கையாகவே அமைந்த குணம். நான் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும்போது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் தமிழகம் நன்கறிந்த பாவலர் ம.இலெ.தங்கப்பா. அவர்தான் என்னை ஊக்கப்படுத்தியவர். அதுவரை நான் எந்தப் பாட்டையும் தனியாக நோட்டு போட்டு எழுதிவைத்ததில்லை. மனம்போன போக்கில் வரிகளைத் தாளத்தோடு உருவாக்கிப் பாடுவதோடு சரி. ஆனால் தங்கப்பா சொன்ன பிறகுதான் ஒவ்வொரு பாட்டையும் நான் எழுதிவைக்கத் தொடங்கினேன். ஒரு தொகுப்பு அளவுக்குச் சேர்ந்த பிறகு அவரிடம் அப்பாடல்களைக் காட்டினேன். அவர் அதை வாங்கிச் சென்று படித்துப் பார்த்தார். மறுநாள் சந்தித்தபோது தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து தொடர்ந்து எழுதுமாறு உற்சாகப்படுத்தினார். அவரே இத்துறையில் என்னை ஆற்றுப்படுத்தியவர். அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

கேள்வி: கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பின் போது உங்களுக்கு அதிகம் சவாலாக இருப்பது என்ன?

 

பதில்: திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளிடையில் மொழிபெயர்ப்பு என்பதில் பொதுவாக பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. வட்டாரத்தன்மை கொண்ட பழமொழிகளையும் மரபுத்தொடர்களையும் வழக்குச்சொற்களையும் மொழிபெயர்ப்பதில் ஒரு மொழிபெயர்ப்பாளர் பெரிதும் கவனமாக இருக்கவேண்டும். அது ஒன்றுதான் சவால். பெரும்பாலான சொற்கள் குறியீட்டுத்தன்மை கொண்டிருக்கும். அச்சொற்களை நேர்ப்பொருளில் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அது எதைச் சுட்டுகிறது என்பதை நாம் கதையோட்டத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். மங்களூர் போன்ற தென்கன்னடக் குடும்பங்கள் சிலவற்றில் அப்பாவை அண்ணா என்று அழைக்கும் பழக்கமுண்டு. அந்தப் பண்பாட்டையும் அது நிலவும் சூழலையும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நமக்குத் தெரியாதபோது தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதில் பிழையில்லை.  அத்தகு முயற்சிகள் எதிலும் ஆர்வமின்றி செய்யப்படும் மொழிபெயர்ப்பு வாசிப்புக்கு உகந்ததாக இருக்காது.

 

கேள்வி: நீங்கள் மொழிபெயர்த்த எஸ்.எல். பைரப்பாவின்பருவம்மொழிபெயர்ப்பு  மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த அனுபவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

பதில்: கன்னட நாவல் வரிசையில் மட்டுமன்றி, இந்திய நாவல் வரிசையிலும் எஸ்.எல்.பைரப்பா எழுதிய பருவம் நாவலுக்கு முக்கியமான ஓர் இடமுண்டு. அது மகாபாரதக்கதையை அதன் மீதிருக்கும் புராணத்தன்மையை விலக்கி எதார்த்தச்சித்தரிப்புடன் எழுதப்பட்ட படைப்பு. எல்லாப் பாத்திரங்களையும் அவர் மானுடருக்கே உரிய குணநலன்களுடன் எழுதி முன்வைத்தார். அந்த நாவலை நான் மொழிபெயர்த்து முடிக்க ஓராண்டு காலம் பிடித்தது. சாகித்திய அகாதமி அந்த நாவலை 2002இல் வெளியிட்டது. இன்றுவரை அந்தப் புத்தகத்துக்கு மறுபதிப்பு வந்துகொண்டே இருக்கிறது. புதிய வாசகர்கள் அந்த நாவலை நோக்கி வந்தபடி இருக்கிறார்கள். அந்த நாவல் வெளிவந்த ஆண்டில் பிறந்தவர்கள் கூட இன்று அந்த நாவலுக்கு வாசகர்களாக இருக்கிறார்கள். ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்கு அது மகிழ்ச்சியையே அளிக்கிறது.

 

கேள்வி: கன்னட நாடகங்களை (கிரிஷ் கார்னாட், எச்.எஸ். சிவப்பிரகாஷ் போன்றோரின் படைப்புகள்) மொழிபெயர்க்கும்போது, மேடைமொழியின் தன்மையைப் பாதுகாப்பதில் என்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?

 

பதில்: கன்னட நாடகங்களைப் பொறுத்தவரை அவற்றைப் பிரதியாக வாசிப்பது மட்டுமன்றி, மேடைக்காட்சியாகவும் நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு இருக்கிறது. கிரீஷ் கார்னாடின் நாடகங்கள் எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மேடைகளில் நடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதுப்புது இயக்குநர்கள் அந்த நாடகப்பிரதிகளை மேடைகளில் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். முதன்முதலாக ஹயவதனன் நாடகம் எழுதப்பட்டு மேடையில் நடிக்கப்பட்ட போது பத்மினி பாத்திரத்தை ஏற்று நடித்தவர் ஒரு பிரபலமான நடிகை. முப்பதாண்டுகளுக்குப் பிறகு அதே நாடகம் பெங்களூரில் அரங்கேற்றப்பட்ட போது அதே பத்மினி பாத்திரத்தை ஏற்று நடித்தவர் முன்பு நடித்த நடிகையின் மகள். அவருடைய ஒவ்வொரு நாடகமும் இவ்விதமாக முப்பதாண்டுகளுக்கும் மேலாக புதுப்புது பார்வையாளர்களுக்குப் பார்ப்பதற்கு வாய்ப்பான சூழல் இந்த நகரத்தில் அமைந்துள்ளது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன். நான் ஒவ்வொரு நாடகத்தையும் ஆறேழு முறை பார்த்திருக்கிறேன். வாசிப்பு அனுபவமும் காட்சி அனுபவமும் ஒருங்கே கிடைப்பதால் அந்த உரையாடல் மொழியை அதே வீச்சுடன் தமிழிலும் அமைப்பது எனக்கு எளிதாக இருக்கிறது.

 

கேள்வி: கன்னட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள்ஒவ்வொரு வகையிலும் மொழிபெயர்ப்பின் முறை எவ்வாறு மாறுகிறது?

 

பதில்: எல்லா வகையான படைப்புகளிலும் சித்தரிப்பு மொழியென ஒன்றும் உரையாடல் மொழியென ஒன்றும் மாறிமாறி விரவி வரும். அவற்றைச் சரியான வகையில் கவனமுடன் எதிர்கொண்டால் போதும், ஒரு படைப்பைச் சிறப்பான முறையில் மொழிபெயர்த்துவிடலாம். மொழிபெயர்க்கும் வேலையை முடித்த பிறகு இரண்டுமூன்று முறை மீண்டும் மீண்டும் படித்துச் செம்மைப்படுத்துவது முக்கியம். கதையோட்டமும் அதற்கு இணையாக மொழியோட்டமும் சீராக இருக்கிறதா என்பதை உரிய கவனம் கொடுத்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

 

கேள்வி:     கன்னட தலித் இலக்கியங்களை தமிழில் அறிமுகப்படுத்தியதன் மூலம், தமிழ்த் தலித் இலக்கிய இயக்கத்தில் அடிப்படை அலை உருவானது எனச் சொல்லப்படுகிறது.  இதைப் பற்றி உங்கள் பார்வை?

 

பதில்: நான் கர்நாடகத்துக்கு 1982இல் வந்தேன். அப்போதே வாசிப்பின் வழியாக சிவராம காரந்த், மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என ஒருசில கன்னடப்படைப்பாளிகளை அவர்களுடைய மொழிபெயர்ப்புகளை வாசித்ததன் வழியாகத் தெரிந்துவைத்திருந்தேன். இங்கு வந்த பிறகுதான் கன்னட மொழியைக் கற்றுக்கொண்டு கன்னட இலக்கியப் படைப்புகளை நேரிடையாகப் படிக்கத் தொடங்கினேன். அந்த நேரத்திலேயே கர்நாடகத்தில் தலித் இலக்கியம் உருவாகி நிலைபெற்றுவிட்டது. கர்நாடகத்துக்கு அருகிலேயே இருந்த மகாராஷ்டிரத்தில் ஏற்கனவே தலித் இலக்கியம் பரவலான கவனத்தைப் பெற்று தன் தடத்தை அழுத்தமாகப் பதித்திருந்தது. மராத்தி மொழியில் எழுதப்பட்ட பல தன்வரலாற்று நூல்களும் கவிதைகளும் அதற்கு அடித்தளமிட்டன.  அச்சமயத்தில் அவை கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வாசகர்களிடையில் பேசுபொருளாக விளங்கின. கல்வியால் தலைநிமிர்ந்த கர்நாடகத்தைச் சேர்ந்த முதல்தலைமுறை தலித் இளைஞர்களிடம் அவை ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின. அவர்களிடம் உருவான புதிய சிந்தனைப்போக்கின் விளைவாக புதிய வகையில் அமைந்த கவிதை, சிறுகதை, தன்வரலாறு ஆகியவை எழுதப்பட்டன. கன்னட தலித் படைப்பாளிகள் என்னும் புதிய வரிசை உருவானது. அத்தகு படைப்புகள் கர்நாடகச்சூழலில் ஒரு பேசுபொருளாக விளங்கிய தருணத்தை நான் நேருக்கு நேர் பார்த்தேன். இலக்கியம் வழியாக இத்தகு மாற்றம் தமிழ்ச்சூழலிலும் நிகழும் என எனக்குத் தோன்றியது. அதனால் கன்னடத்தில் முன்மாதிரியாக விளங்கிய சிறுகதைகளையும் தன்வரலாறுகளையும் தமிழில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்தேன். அப்படைப்புகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று யாராவது சொல்வதைக் கேட்கும்போது  மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அத்தகு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த காலத்துக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

 

கேள்வி:     தலித் சுயசரிதைகள் (சித்தலிங்கையா, கவர்மென்ட் பிராமணன் போன்றவை) மொழிபெயர்க்கும்போது நீங்கள் எத்தகைய நுணுக்கங்களைப் பின்பற்றினீர்கள்?

 

பதில்: நான் ஒரு படைப்பை நேரடியாக எழுதினாலும் சரி, மொழிபெயர்த்தாலும் சரி, அதை மீண்டும் மீண்டும் சலிக்காமல் படித்து செம்மை செய்ய நினைப்பவன் நான்.  ஒரு வேலையைச் செய்துமுடித்து அச்சுக்குக் கொடுக்கும் வரையிலும் மீண்டும் மீண்டும் வாசித்து, ஒவ்வொரு வாசிப்பிலும் ஏதேனும் ஒரு திருத்தத்தால் அப்பிரதியை மேம்படுத்தியபடி இருப்பேன். அதே கவனத்தைத்தான் இவற்றை மொழிபெயர்க்கும்போதும் மேற்கொண்டேன்.

 

கேள்வி: சொற்களை அப்படியே கொண்டுவரலாமா? அல்லது உணர்வைத் தக்கவைத்துக் கொண்டு சொற்களை மாற்றலாமா?

 

பதில்: ஒரு படைப்பில் ஒரு மொழிபெயர்ப்பாளர் தானாக எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது. அது அறமல்ல. குறிப்பிட்ட உணர்வையும் இணைத்து வெளிப்படுத்தும் பொருத்தமான சொல் கிடைக்கும் வரை தேடிக்கொண்டிருப்பதும் காத்திருப்பதும் முக்கியம்.

 

கேள்வி:      மொழிபெயர்ப்பில்நம்பிக்கைக்குரிய வாசிப்புஎன்றால் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

 

பதில்: மூலப்படைப்பில் இருக்கிற எந்தக் கருத்தையும் வரிகளையும் சிதைக்காமலும் மாற்றாமலும் மொழிபெயர்த்து  வெளிவரும் படைப்பே சிறந்த மொழிபெயர்ப்பு. அதை நாம் நம்பிக்கையோடு வாசிக்கலாம். 

 

கேள்வி:      மொழிபெயர்ப்பு என்பது ஒரு பாலமா அல்லது புதிய இலக்கியச் சிருஷ்டியா?

 

பதில்: லியோ டால்ஸ்டாயோ, செகாவோ எழுதிய ஒரு படைப்பை நாம் தமிழில் படித்துத் தெரிந்துகொள்ள உதவியாக இருப்பவர்கள் தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்களே. அவர்களுடைய அரும்பணியை நாம் என்றென்றும் போற்றவேண்டும். ஒரு படைப்பாளி தம் சொந்தப் படைப்புக்குச் செலுத்தும் அதே உழைப்பைத்தான் அர்ப்பணிப்புணர்வு கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் தம் மொழிபெயர்ப்புக்கும் செலுத்துகிறார். எல்லா நிலைகளிலும் அவரை ஓர் இணைப் படைப்பாளி என்றே நாம் கருதலாம்.  தம் இடையறாத மொழிபெயர்ப்புகள் வழியாக நம் சூழலில் அவர்கள் நிலைபெறும்போது, அவர்களை நாம் இரு மொழிகளுக்கு இடையில் இயங்கும் பாலமாக நினைக்கத் தொடங்குகிறோம்.

 

கேள்வி:     சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது பெற்றது உங்கள் பயணத்தில் எவ்வாறு ஒரு திருப்பமாக இருந்தது?

 

பதில்: ஒரு படைப்பாளி அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளர் தன் வாழ்க்கையில் தான் பெறும் விருதை ஒருபோதும் ஒரு திருப்புமுனையாக நினைப்பதில்லை. ஒரு தேனீ ஒவ்வொரு நாளும் மலர்களை நாடி தேன் சேகரிப்பதைப்போல அந்தக் கலைஞர்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். கலை ஈடுபாடு என்பது ஒரு கலைஞனுக்கு மூச்சு விடுவதுபோல. அந்த ஈடுபாடும் செயல்பாடும்தான் அவன் அடையாளம். தமிழில் மொழிபெயர்ப்பாளர்களாகச் செயல்பட்ட வி.ஆர்.எம்.செட்டியார், ரதுலன், தி.ஜ.ர., த.நா.குமாரசாமி, த.நா.சேநாபதி, அ.கி.ஜெயராமன், ரா.வீழிநாதன், கா.ஸ்ரீ.ஸ்ரீ., ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் அனைவரையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவர்களில் ஒருவராவது தம் வாழ்நாளில் ஒரு விருதாவது வாங்கியிருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்களுடைய மொழிபெயர்ப்புகள் அனைத்தும் உரமாகி இன்றுவரை நம் இலக்கியம் செழித்து நின்றிருக்க உதவியாக அமைந்திருக்கின்றன. கைம்மாறு கருதாத அந்த மூத்தோரின் உழைப்பை நாம் என்றென்றும் நன்றியுடன் நினைத்துக்கொள்ள வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகளாகத்தான் சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர்களுக்கென தனி விருதை அளித்து வருகிறது. தன் மொழிபெயர்ப்பைப் பிறர் கவனிக்கிறார்கள், பிறர் மதிக்கிறார்கள், பிறர் கொண்டாடுகிறார்கள் என்பதன் அடையாளமாகவே அந்த விருது அமைகிறது. நான் விருது பெறும் ஒவ்வொரு தருணத்திலும் என் மனத்தில் மகிழ்ச்சிக்கு இணையாக, எனக்கு முன்னால் எண்ணற்றோர் இச்சூழலிலிருந்து ஒரு பாராட்டுச்சொல்லைக்கூடப் பெறாமல் இத்துறையில் தம் பங்களிப்பை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்னும் எண்ணமும் தோன்றும். அந்த எண்ணம், அந்த விருதுக்கு முன்னால் நான் எப்படிச் செயல்பட்டேனோ, அதே விதமாக விருதுக்குப் பிறகும் சீரான வகையில் செயல்படவைக்கும்.

 

கேள்வி: விருதுகள் மொழிபெயர்ப்பின் மதிப்பை அதிகரிக்கிறதா?

 

பதில்: ஒரு மொழிபெயர்ப்பின் மதிப்பு ஒருபோதும் விருதுகளால் பெருகிவிடாது. ஒரு விருது, ஒரு மொழிபெயர்ப்பை நம் சூழலில் கவனப்படுத்துகிறது. வாசகர்களை அப்புத்தகத்தை நோக்கிச் செலுத்துகிறது. அவ்வளவுதான். மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பி, நேமிசந்திரா என்னும் கன்னட எழுத்தாளர் எழுதிய யாத்வஷேம் என்னும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக சாகித்திய அகாதமி விருதை அளித்தது. அதுவரை அந்தப் புத்தகத்தைப் படிக்காத வாசகர்களுக்கு அது ஒரு முக்கியமான செய்தி.

 

கேள்வி:     கன்னட-தமிழ் இலக்கியப் பரிமாற்றத்தின் தற்போதைய நிலையை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?

 

பதில்: பல நல்ல கன்னடப் படைப்புகள் மொழிபெயர்ப்பாளர்கள் வழியாக தொடர்ச்சியாக நமக்குக் கிடைத்தபடி இருக்கின்றன. இம்மொழிபெயர்ப்புகள் கன்னடச் சூழலைப் புரிந்துகொள்ள மிகவும் உறுதுணையாக உள்ளன. மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பி மிகமுக்கியமான வகையில் பங்காற்றியிருக்கிறார். கடந்த பத்தாண்டுகளில் அவர் முப்பதுக்கும் மேற்பட்ட கன்னடப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வி, மலர்விழி, நரேன், கு.பத்மனாபன் என பலரும் அந்தப் பாதையில் பயணம் செய்துவருகிறார்கள். இன்றைய நிலை உற்சாகமளிப்பதாகவே இருக்கிறது.

 

கேள்வி: .   மொழிபெயர்ப்பில் தற்போது குறைவாக கவனிக்கப்படும் துறைகள் எவை?

 

பதில்: தற்சமயம் இலக்கியப்படைப்புகள் மட்டுமே பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல், நிலவியல், சமூகவியல், தத்துவம் என பிற துறைகள் சார்ந்த எந்தப் புத்தகமும் கவனிக்கத்தக்க அளவில் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதில்லை. தமிழில் மட்டுமல்ல, பிற இந்திய மொழிகளிலும் இதுதான் நிலைமை. நாம் அனைத்துத் துறைகளையும் ஆங்கில மொழி வழியாகக் கற்றுக்கொள்ளலாம் என்னும் மனநிலைக்கும் அதுதான் சிறந்தது என்கிற எண்ணத்துக்கும் வந்துவிட்டோம். அதுதான் பிரச்சினை.  நான் தொலைபேசித்துறையில் பணியிலிருந்த காலத்தில் சிறிது காலம் சீனாவிலிருந்து வந்த  பொறியாளர்களோடு இணைந்து ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டியிருந்தது. அவர்கள் பொறியியல் பட்டப்படிப்பையே சீன மொழியில் படித்து முடித்ததாகச் சொன்னதைக் கேட்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன். ஆங்கிலத்தை ஒரு தொடர்புமொழியாக மட்டும் படித்தால் போதும் என்பதுதான் அவர்களுடைய வழிமுறை என்று தெரிவித்தார்கள். என்றாவது ஒருநாள் அப்படிப்பட்ட சூழல் இந்தியாவில் வருமெனில், பிற துறைகள் சார்ந்த நூல்களையும் நாம் நம் தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு அமையலாம்.

 

கேள்வி:     அடுத்ததாக மொழிபெயர்க்க நினைக்கும் படைப்புகள் எவை?

 

பதில்: பல ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஜீவன்லீலா என்னும் புத்தகத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சாகித்திய அகாதமி வெளியிட்ட நூல் அது. காந்திய ஆளுமையான காகா காலேல்கர் என்பவர் இந்திய ஆறுகளையும் அருவிகளையும் நேரிடையாகச் சென்று பார்த்த அனுபவங்களை முன்வைத்து ஒரு புத்தகத்தை எழுதினார். அதன் மொழிபெயர்ப்புதான் அந்தப் புத்தகம். அதே காகா காலேல்கர் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இமயமலைக்கு நடந்தே சென்று பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய அனுபவங்களை இன்னொரு நூலாக அதே காலகட்டத்தில் குஜராத்தி மொழியில் எழுதினார். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. அது ஒரு முக்கியமான புத்தகம். ஜீவன்லீலா அளவுக்கே ஆர்வமூட்டக்கூடிய புத்தகம். ஏறத்தாழ முன்னூறு பக்கங்கள் அளவுக்கு நீண்ட புத்தகம். சமீபத்தில்தான் அப்புத்தகத்தை ‘இமயமலை : ஒரு பண்பாட்டுப்பயணம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்து முடித்தேன். அது விரைவில் நூலாக வெளிவரும். அதற்கான வேலையில் மூழ்கியிருக்கிறேன்.

 

கேள்வி:     இன்றைய இளம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நீங்கள் வழங்க விரும்பும் ஆலோசனைகள் என்ன?

 

பதில்: வாழ்க்கையில் பல தளங்களில் பயனை ’எதிர்பாராத அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய உழைப்பு’ என்ற வாசகத்தை நாம் கேட்டிருப்போம். அந்த வாசகம் மொழிபெயர்ப்பு என்னும் தளத்துக்கும் பொருத்தமானது. இந்த உலகம் என்றாவது ஒருநாள் திரும்பிப் பார்க்கும் என்கிற நம்பிக்கையையும் கனவையும் நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.

 

(தமிழ்ச்சூழலில் தற்போது இயங்கிவரும் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களின் நேர்காணல்களையும் சில மொழிபெயர்ப்புகளையும் கொண்ட ஒரு பெருந்தொகுதியை ’முகத்துவாரம்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் பத்மா அமர்நாத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். திருவண்ணாமலையைச் சேர்ந்த புழுதி பதிப்பகம் கடந்த மே மாதம் அத்தொகுதியை வெளியிட்டுள்ளது. அத்தொகுதியில் இடம்பெற்ற நேர்காணல்.)