Home

Sunday, 24 May 2026

புதிர்களும் விடைகளும்

 

ஒரு கணத்தில் வாழ்க்கைப்பரப்பில் மீது மின்னி மறையும் ஒளிச்சுடரை அல்லது கவிந்து மறையும் இருளை நோக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவமாக சிறுகதை உலகெங்கும் எழுதப்பட்டு வருகிறது. அள்ளியள்ளி எடுத்தாலும் வற்றாத அமுதசுரபியாக சிறுகதை வடிவம் கோடிக்கணக்கான கணங்களை நமக்கு வழங்கியுள்ளது.  இத்தனை ஆண்டு காலம் எழுதிய பின்னும் நமக்குத் தெரியாத ஒளிப்புள்ளிகளும் இருட்புள்ளிகளும் இந்த வாழ்வில் நிறைந்திருக்கின்றன என்பதை புதிதாக வெளிவரும் ஒவ்வொரு சிறுகதைத்தொகுதியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது.

சிறுகதை எழுதுவதன் வழியாக அல்லது வாசிப்பதன் வழியாக நாம் அடைவதென்ன என்னும் கேள்வி ஒருசிலருக்கு எழக்கூடும். முதலாவதாக, நம் மனத்தில் தோன்றும் எளிய முன்தீர்மானங்களையும்  ஆணவத்தையும் நசுக்கிக் கூழ்கூழாக்குகிறது. இரண்டாவதாக, உன்னதமான மானுடத்தருணங்களின் முன்னால் நம்மைக் கொண்டுசென்று நிறுத்துகிறது. மூன்றாவதாக, எல்லையற்ற அன்பின் பேராற்றலை நம்மை உணரவைக்கிறது.

வளவ.துரையனின் முப்பத்தொன்பதாவது புத்தகமாக வெளிவந்திருக்கும்  ’வினைவிளை காலம்’ என்னும் சிறுகதைத்தொகுதியில் மானுடத்தின் பரிமாணத்தை உணர்த்தும் சில சிறுகதைகள் அடங்கியுள்ளன.

இத்தொகுப்பில் சிறந்த சிறுகதைகளில் ஒன்று ‘பார்வதி பாட்டி’. கணவனைப் பறிகொடுத்துவிட்டு, பிறந்த இரு பெண்குழந்தைகளை தனி ஆளாக உழைத்துப் பாடுபட்டு வளர்த்துவருகிறாள் அவள். வெயில், மழையைப் பொருட்படுத்தாது முதுகில் தொங்கும் சாக்குப்பையோடு நகரத்தெருக்களில் அலைந்து திரிந்து சிதறிக் கிடக்கும் அட்டைகள், தாள்கள், கிழிந்த புத்தகங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்தையும் சேகரிப்பதுதான் அவள் தொழில். நாள்முழுதும் அலைந்து திரிந்து சேகரித்தவற்றைத் தனித்தனியாகப் பிரித்து கட்டுகட்டி சேர்த்துவைத்தால், வாரத்துக்கு ஒருமுறை வீட்டுப் பக்கம் வண்டியோடு வருகிற  வியாபாரி பணத்தைக் கொடுத்துவிட்டு அவற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு செல்வார்.

முதல் பெண்ணுக்கு அவள் நடத்திவைத்த திருமணம் நிலைக்கவில்லை. தன் கணவன் நடத்தை கெட்டவனாக இருப்பதை நேருக்கு நேர் கண பிறகு, அவனோடு வாழ்க்கையைத் தொடர விருப்பமில்லாமல், அவனுக்குப் பிறந்த இரு குழந்தைகளோடு தாய்வீட்டுக்கே அடைக்கலமாக வந்து சேர்கிறாள். தன் பாரம் குறையவேண்டும் என்பதற்காக, எப்பாடுபட்டாவது இரண்டாவது பெண்ணுக்கு ஒரு திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று அவள் படாத பாடு படுகிறாள். அதற்குத் தேவையான பொருளை ஈட்டுவதற்குத்தான் காகிதம் பொறுக்கும் வேலையை ஆண்டுக்கணக்காகச் செய்து வருகிறாள்.

ஒருநாள் அவளுடைய கனவு பலிக்கும் நேரம் கைகூடி வருகிறது. அந்தப் பெண்ணுக்குப் பொருத்தமான லாரி ஓட்டும் ஒரு டிரைவர் மாப்பிள்ளை கிடைக்கிறான். திருமணத்தேதியும் குறிக்கப்பட்டுவிடுகிறது. தன் சேமிப்பிலிருந்த பணத்தை எடுத்து பெண்ணுக்குத் திருப்தியாகத் திருமணம் செய்து அனுப்பிவைக்கிறாள் பார்வதி பாட்டி.

ஆனால் பாட்டியுடைய திருப்தி நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஓட்டுநராக இருந்த அந்த மாப்பிள்ளை ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட, மகள் விதவையாகி தாய்வீட்டுக்கே திரும்பி வருகிறாள். சிறிதுகாலம் சாக்குப்பையைச் சுமக்காமல் வீட்டில் அமர்ந்திருந்த பாட்டி மீண்டும் சாக்குப்பையோடு காகிதம் சேகரிப்பதற்காகத் தெருத்தெருவாகச் செல்லத் தொடங்குகிறாள். அவளுடைய முடிவற்ற பயணம் தொடர்கிறது.

வாழ்நாள் முழுதும் ஓய்வில்லாமல் உழைத்த பார்வதி பாட்டி தன் முதுமைக்காலத்தை அவளே திட்டமிட்டபடி ஓய்வாகக் கழிப்பதற்கு ஏதுவாக காலம் கனிந்துவரும் ஒரு தருணத்தில், அவள் கனவு சுக்குநூறாக நொறுங்கிவிடுகிறது. அதற்கான காரணத்தை ஒருவராலும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான கேடும் நினைக்கப்படும்’ என்னும் குறளில் வள்ளுவர் ஆழ்ந்த யோசனையோடு குறிப்பிடும்  ’நினைக்கப்படும்’ பட்டியலில் பார்வதி பாட்டியின் கதையையும் நாம் சேர்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. புரிந்துகொள்ள முடியாத ஒரு மாபெரும் புதிரின் முன்னால் நம்மைக் கொண்டு சென்று நிறுத்துகிறது வளவ.துரையனின் சிறுகதை.

’குகை’ இத்தொகுப்பின் மற்றொரு நல்ல சிறுகதை. ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் இளைஞனும் இளம்பெண்ணும் காதலர்கள். இருவரும் சமூகத்தட்டில் வேறுவேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் அவர்கள் தமக்குள் இரண்டாண்டுகளாக தினமும் உரையாடி தம் காதலை வளர்த்துக்கொள்கிறார்கள். திடீரென ஒருநாள் அந்த இளம்பெண் அவனிடம் வந்து சில குடும்பக் காரணங்களுக்காக தம் காதலைத் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டு பழகுவதை நிறுத்திவிடுகிறாள்.

அவள் விலகிச் சென்ற விதம் அவனுக்குத் தீராத மன உளைச்சலைக் கொடுக்கிறது. தன்  வேதனையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் நெஞ்சுக்குள்ளேயே வைத்துக்கொண்டு உருகித் தவிக்கிறான் அவன். அலுவலகத்தில் காரணமே இல்லாமல் உயர் அதிகாரியிடம் வசைபடுகிறான்.

அவன் நிலையைப் புரிந்துகொண்ட நண்பரொருவர் ஏதோ ஓர் ஊரில் மலையுச்சியில் இருக்கும் குகைக்குச் சென்று அங்கு தனிமையில் சிறிது நேரம் அங்கு உட்கார்ந்திருக்குமாறும் அந்தப் பயணம் அவனை லேசாக்கும் என்றும் சொல்லியனுப்புகிறார். தன் உளைச்சலிலிருந்து விடுபடும் ஆர்வத்தில் ஒருநாள் அவன் அந்த இடத்தை நோக்கி விசாரித்துக்கொண்டே செல்கிறான். ஆனால் அந்த மலையுச்சியில் குகை என எதுவும் இல்லை. வெட்டவெளியாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றமடைகிறான். குழப்பத்துடன் அங்கேயே நின்றிருக்கும்போதுதான் ஒரு பெரியவரைச் சந்திக்கிறான்.

குகை என்னும் சொல்லுக்குப் புதியதொரு விளக்கத்தை அளிக்கிறார் அந்தப் பெரியவர். நான்கு பக்கங்களும் சுவர்களாலோ, மலைச்சரிவுகளாலோ அல்லது மரங்களாலோ சூழப்பட்டு இருண்டிருக்கும் நடுப்பகுதியைத்தான் எல்லோரும் குகை என்று குறிப்பிடுவது வழக்கம். மலையுச்சியில் அப்படி ஒரு குகை  இருப்பதாக யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டுத்தான் கதிரவனும் அங்கு சென்றிருக்கிறான். ஆனால் அந்தத் தனி இடத்தில் அமர்ந்திருந்த பெரியவர் அவன் நெஞ்சைக் குத்திக் காட்டி அதைத்தான் குகை என்று சொல்கிறார். எதையும் மனம்விட்டுக் கலந்து பேசாமலும் விவாதிக்காமலும் தீர்வை நோக்கிய உரையாடலுக்கான வழியைக் கண்டுபிடிக்காமலும் எல்லாவற்றையும் அடக்கிவைப்பதாலேயே அவர்  நெஞ்சைக் குகை என்று சொல்கிறார்.

ஒவ்வொருவருடைய நெஞ்சமே அவர்களுடைய குகை. எல்லாப் பிரச்சினைகளையும் குகைக்குள் பூட்டிவைப்பதால் ஒரு பயனும் இல்லை. அது மேன்மேலும் குழப்பத்துக்கே வழிவகுக்கும். மனம்திறந்த உரையாடல் மட்டுமே பிரச்சினையின் தன்மையைப் புரிந்துகொள்ள வைக்கும். அந்தப் புரிதல் நமக்கு சில சமயங்களில் வெற்றியையும் தரலாம். சில சமயங்களில் தோல்வியும் தரலாம். வெற்றி தோல்வியைவிட நாம் புரிந்துகொண்டோம் என்கிற நிம்மதி தரும் நிறைவுணர்ச்சி பெரியது.

மனம் திறந்த உரையாடல் நம் மனப்புண்ணை ஆற்றும் மாமருந்தாக இருக்கும் என்பது எளிய உண்மைதானே என தோன்றும். பல நேரங்களில் எளிமையாக காட்சியளிப்பதாலேயே மனிதர்கள் அந்த வழியை மிக எளிதாக உதறிவிட்டுச் செல்கிறார்கள். அது ஒருவராலும் விளக்கிச் சொல்லமுடியாத ஒரு புதிர். வளவ.துரையன் அந்தப் புதிரை ஒரு சிறுகதையாக முன்வைத்து நம் நெஞ்சில் பதிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஒருவரை நம் வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாதவராக என்றென்றும் நினைத்திருக்க ஒரே ஒரு சிறிய காரணம்  போதும். அது ஏதேனும் ஒரு பொருளுதவியாக இருக்கலாம். தக்க தருணத்தில் நம்பிக்கையூட்டி திடமாக நின்றிருக்கத் தூண்டிய செயலாகவும் இருக்கலாம். நினைத்தே பார்க்கமுடியாத மாற்றத்தை வாழ்க்கையில்  ஏற்படுத்துகிற வகையில் ஏதேனும் திட்டம் வகுத்தளித்தவராகவும் இருக்கலாம். தக்க நேரத்தில் திருப்புமுனையான சிந்தனையைத் தூண்டியவராகவும் இருக்கலாம். உரையாடிப் பார்த்தால் இப்படி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒருசிலர் இடம்பெற்றிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையை வளவ.துரையன் தன் தொகுதியில் எழுதியிருக்கிறார்.

கதையின் தலைப்பு ‘அமைதி’. கதையின் தொடக்கத்தில், ஒரு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வெளியூரிலிருந்து ஒரு மரணச்செய்தி தந்தி மூலம் வருகிறது. அந்த மரணத்தை ஒட்டி நிகழும் உரையாடல்களாலும் அடுத்து மரண வீட்டுக்குச் சென்ற பிறகு நிகழும் உரையாடல்களாலும் கதை நிறைந்திருக்கிறது.

இறந்தவர் ஒரு பெண்மணி. ஞானம் நிறைந்த ஒரு பெரியவரின் மனைவி. அந்த அம்மாவின் மரணச்செய்தி அவர்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது. எந்த உரையாடலைத் தொடங்கினாலும் தவிர்க்கமுடியாமல் அந்த அம்மாவைப்பற்றிய உரையாடலாகவே அது மாறிவிடுகிறது.  ”நம்மள கூட வீட்டுக்குள்ள கூப்பிட்டு சாப்பாடு போட்டாங்க” என்று அவர்கள் தமக்குள் மீண்டும் மீண்டும் ஆற்றாமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள்.

ஒருவரை இன்னொருவர் எப்படி நினைவுகூர்கிறார் என்பது மிகமுக்கியமான செய்தி. ”வாங்க வாங்க” என்று முகம்மலர யாராவது கூப்பிட்டாலேயே அது மிகப்பெரிய வரவேற்பு. தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்து உபசரித்தால் அது இன்னும் சிறந்த வரவேற்பு. கூடத்தில் அமரவைத்து உரையாடுவது அதைவிடச் சிறந்த வரவேற்பு.  உட்காரவைத்துச் சாப்பாடு போடுவது மிகப்பெரிய வரவேற்பு. அது வெறும் சாப்பாடு அல்ல. அவர்களுடைய நெஞ்சில் நமக்கு எந்த அளவுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வழி.  பிறரைச் சமமாக நடத்தும் வாழ்க்கையை அந்தப் பெண்மணி இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் இக்கதையில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி.

வாழ்க்கை என்பதே புதிர்களால் ஆன மாபெரும் களம். வளவ.துரையனுடைய இப்புதிய தொகுதியில் பதினேழு சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு படைப்பிற்கும் தன் அனுபவத்துக்குட்பட்ட வகையில் தாம்கண்ட புதிர்களையும் விடைகளையும் களங்களாக வகுத்துக்கொண்டுள்ளார்.

 

 

(வினைவிளை காலம். வளவ.துரையன். சிறுகதைகள். சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை – 600083. விலை. ரூ.200)

(புக் டுடே – இணைய இதழ் – 20.05.2026)