Home

Sunday, 17 May 2026

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி - 2

 

( தொடர்ச்சி.......)

நீ சொல்ற வெலயல்லாம் கேட்டப்பறம் இனிமே அதான் செய்யணும்.”

யோவ், எதுக்குய்யா வளவளன்னு பேசிக்னு. சீக்கிரமா ஒரு வெலயச் சொல்லி எடுத்துக்கினு போயா.”

யேன் போவலன்னா போலீஸ்ல சொல்லிருவியா?”

இன்னாடி இது ஒரே வம்பா இருக்குது இந்த மனுசங்கிட்ட.”

இல்ல, போலீஸ்ல சொல்லிருவியான்னு கேக்கறேன்.”

யோவ் ஒனக்கு புல்லு வேணுமா வேணாமா?”

வேணும்.”

எடுத்துக்கனு போய்யா

வெல

ம். ஆயிரம் ரூபா. இருந்தா குடேன். எடுத்துக்னு நவுருன்னு சொல்றனில்ல. குடுக்கறத குடு.”

மூணு ரூபா.”

ம்க்கும். இந்த மூணு ரூபா காச மடிலேந்து அவுக்கறதுக்கா இவ்ளோ வாய். இவ்ளோ பேச்சி.”

தொடப்பம் மாதிரி இருக்குது ஒன் புல்லுக் கட்டு. இந்த லட்சணத்துல மூணு ரூபாயே அதிகம்.”

சரியா குடுய்யா.”

எதுக்கு உயிர வுடற. குடுக்கறன்.”

வியாபாரம் என்பது விற்றல் வாங்கல் என்கிற ரீதியில் எந்திரத்தனமான விஷயம் கிடையாது. இதைத் தாண்டிச் சக மனிதர்களை அடையாளம் காண்கிற பிரியம் பொதிந்த சங்கதி. மனசைப் புரிந்து பழகுதலை வளர்ப்பதே அதன் உத்தேசம். நூறு பேச்சுப் பேசி ஆயிரம் திட்டுத் திட்டினாலும் குதிரை வண்டிக்காரன் தினசரி வாடிக்கைகாரன் என்கிற மரியாதை மனசுக்குள் இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை மறித்து வம்பு வளர்த்தாலும் மானசீகமான ஒரு மனிதாபிமானமும், இவள் தரும் புல்லே எனது குதிரையை ஜீவிக்க வைக்கிறது என்கிற மரியாதையும் பார்த்தசாரதிக்கு உண்டு.

பணத்தைக் கொடுத்துப் புல்லை எடுத்து வண்டிக்கு அடியே சாக்குத் தொங்கலில் போட்டு பார்த்தசாரதி நிமிரும்போது தூரத்தில் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே யாரோ ஓடி வருவது தெரிந்தது. வரும் வேகத்தையும் பதட்டமான முகத்தையும் பார்க்கும்போதே புரிந்துவிட்டது. ஏதோ அவசரமான சவாரி என்று.

வந்தவன் முகத்தில் துக்கம் எழுதி இருந்தது. கட்டையைப் பிடித்துக் கொண்டு அவசரப்படுத்தினான்.

அவசரம் பார்த்தசாரதி. ஒன்ன எங்க எல்லாமோ தேடிட்டு இங்க ஓடியாறேன். விழுப்புரம் ஆஸ்பத்திரிக்குப் போவணும். முனியம்மா பேத்தி செல்வாம்பா அரளி வெதய குடிச்சிட்டுது. நம்மூரு ஆஸ்பத்திரில பாக்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. இழுத்துப் புடிச்சிகின்னு இருக்குது. அவசரமா போவணும்.”

அடுத்த கணம் சிட்டாய்ப் பறந்தது வண்டி. உள்ளூர் ஆஸ்பத்திரி வாசலில் கும்பலாய் இருந்த ஜனம் வண்டிச்சத்தத்தைக் கேட்டு விலகி வழிவிட்டது.

தூக்குங்க...”

பார்த்தசாரதி தலைப்பக்கம் கையைக் கொடுத்து செல்வாம்பாளைத் தூக்க, யாரோ ஒருவர் கால்பக்கம் தாங்கலாய்த் தூக்கினார். அதற்குள் வண்டிக்குள் ஒரு அம்மா ஏறி நின்றுகொண்டு, செல்வாம்பாளைக் கவனமாகப் பிடித்து வண்டிக்குள் படுக்கவைத்தாள். தலையிலும் மார்பிலும் அறைந்தபடி பெற்றவர்கள் ஏறினார்கள். கடைசியாக, செல்வாம்பாளுடைய அண்ணன் ஏறினான்.

அந்த அம்மாளுக்கு காத்த உட்டு, எல்லாரும் ஓரமா ஒக்காருங்க.”

எச்சரிக்கையாய்ச் சொல்லிவிட்டுக் குறுக்குக் கம்பி போட்டு மூடி வண்டிக்கு முன்னால் உட்கார்ந்தான் பார்த்தசாரதி. லகானை இழுத்தும் பாய்ச்சலாய்ப் பாய்ந்தது குதிரை.

செல்வாம்பாளுக்கும், இரும்புப் பட்டறையில் வேலை செய்யும் பால்ராஜுக்கும் நெருக்கம் இருந்திருக்கிறது. சிறுவந்தாட்டுக்கு சினிமா பார்க்கப் போகிற அளவுக்கு சம்பந்தம் நெருக்கம். வீட்டில் அப்பாக்காரன் உதைத்திருக்கிறான். “எண்ணய ஊத்திக் கொளுத்தினாலும் கொளுத்துவனே தவிர அவனுக்கு மாத்திரம் ஒன்ன கட்டி வக்கமாட்டன்என்று உறுமி இருக்கிறான். போதாக்குறைக்கு அண்ணன்காரன் இரும்புப் பட்டறைக்கே போய் அந்தப் பையனை இழுத்துப்போட்டு துவட்டிவிட்டான். கல்யாணத்தை நடத்திவிடுகிற வேகத்தில் எங்கிருந்தோ அவசரத்துக்கு ஒரு நொண்டி மாப்பிள்ளையைப் பிடித்து வந்து பரியமும் நடந்திருக்கிறது. இன்னும் ஒருவாரம் கல்யாணத்துக்கு. பெண்ணுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. தோப்புக்குத் தப்பிச் சென்று வாழ்வை முடித்துக்கொள்ள அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டிருக்கிறது.

வண்டி வேகமாய் ஓடியது. அம்மாக்காரி துக்கம் தாளாமல் பொங்கி அழுதாள். செல்வாம்பாளுக்கு அவ்வப்போது பிரக்ஞை வருவதும் மலங்கமலங்க விழிப்பதுமாக இருந்தது.

விழுப்புரம் ஆஸ்பத்திரி தனது சுபாவப்படி இயங்கியது. ஆபத்துக்கு ஓடி வந்தவர்களின் அவசரத்துக்கு அது கட்டுப்படுவதாக இல்லை. முதலில் வாசலில் கிடத்து என்றார்கள். பெயர் எழுதிச்  சீட்டுப் பதித்துக்கொண்டு வந்ததும் அறைக்குள் கிடத்து என்றார்கள். டாக்டர் வந்து பார்த்ததும் வாசலுக்கே மாற்று என்றார்கள். மாற்றியதும் நீண்ட குழாயை வாய்க்குள் பலவந்தமாய் அழுத்தி நீர் ஊற்றி வாந்தி எடுக்கச் செய்தார்கள். வாந்தி நிற்கவும், மூச்சு நிற்கவும் சரியாக இருந்தது. இத்தனை வேகத்தையும் இத்தனை பிரயத்தனங்களையும் மீறி உயிர் பிரிந்துவிட்டது. தாயும் தகப்பனும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள். அண்ணன்காரன் சோகமாய்த் தள்ளிப்போய் உட்கார்ந்தான். பா£ர்த்தசாரதிக்குப் பார்க்கப்பார்க்க வேதனையாய் இருந்தது. சொல்லத் தெரியாத சோகம் நெஞ்சை அழுத்தியது. மெதுவாய் நடந்து வெளியே வந்தான். அஸ்தமனம் நெருங்கிய ஆகாயத்தை வெறித்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரி வேலை முடிந்தது. அறுத்துத் தைத்து களேபரமாக்கிய செல்வாம்பாளைத் தூக்கி வந்தார்கள். அண்ணன்காரன் வந்து பார்த்தசாரதியை அழைத்துக் கொண்டு போனான். எல்லாரும் கைதாங்கலாய்ப் பிடித்து செல்வாம்பாளை ஏற்றினார்கள்.

வண்டி ஊருக்கு திரும்பியது.

வழிமுழுக்க அழுதபடி வந்தாள் அம்மாக்காரி. தெரு வந்து வீடு நெருங்கநெருங்க இன்னும் ஜாஸ்தியானது அவள் அழுகை. வாசலில் வண்டி நின்று ஆட்கள் கூடி இறக்கும்போது உக்கிரமானது.

மனம் வலிக்கக் காத்துக்கொண்டிருந்த பார்த்தசாரதி வண்டி காலியானதும் திரும்பி நடந்தான். அண்ணன்காரன் வந்து பணம் கொடுத்தபோது மறுத்தான். சோர்வான மனத்தோடு ஏரிக்கரைக்கு ஓட்டிச் சென்று வண்டியைக் கழுவினான். குதிரையைக் குளிப்பாட்டினான். கனைத்த குதிரைக்கு புல்லை உதறிப் போட்டுவிட்டுப் பத்து நிமிஷம் குளித்தான். சின்ன நிலவு வெளிச்சத்தில் நீருக்குள் முங்கி எழுந்தான். மேலே வந்து உடல் துவட்டினான்.

பஞ்சாயத்து போர்டு தெரு, பிள்ளையார் கோயில் தெரு ஜனமும், உறவு ஜனமும் வந்து வாழ்த்த தனக்கும் ருக்குவுக்கும் நடைபெற்ற கல்யாணத்தை அசைபோட்டான் பார்த்தசாரதி. அன்று கோடி கோடியாய் வண்ணத்துப்பூச்சிகள் மனசுக்குள் பறக்கப் பொங்கிய சந்தோஷம், பரவசத்துடன் பார்த்தசாரதியின் கை தாலியை எடுத்து ருக்குவின் கழுத்தில் கட்டியது. பெண்ணின் சமீபம் சந்தோஷமாய் இருந்தது. வாழ்வின் சகல சுக துக்கங்களிலும் இவள் பங்காளி எனப் பக்கத்தில் வைத்துக் கொள்வது இதமாய் இருந்தது. மழை கண்ட கழனியாய்ப் பூரித்தது மனசு.

மனசில் இருந்த சங்கதிகளை இழை இழையாய்ப் பிரித்துப் பேசினான். இத்தனை வருஷங்கள் பேசவே இல்லை என்கிற மாதிரி கிளுகிளுப்போடு சுற்றிச்சுற்றி வந்து பேசினான். கடைத்தெருவுக்குப் போய் வரும் போதெல்லாம் ஏதாவது வாங்கி வந்து தந்தான். பளபளப்பாய் விழுப்புரத்தில் இருந்து அவளுக்குப் பிடிக்குமே என்று புடவை வாங்கி வந்து தந்தான். நெடிக்கொருதரம் ஏதாவது தெருவில் நிற்கும்போதுகூட கனவு கண்டு தனியே சிரித்தான். இரவு முழுக்க மயக்கம் கொண்ட மனசோடு அவளுடன் இருந்தான். சுகமாக உணர்ந்தான் பார்த்தசாரதி.

நூல் இழை மாதிரி மனசு முழுக்க ஓடிய சந்தோஷம் ஒரு மாதத்துக்குப் பிறகு அறுந்து விழுந்தது. தான் சந்தோஷமாய் இல்லை என்கிற ரீதியில் ருக்கு பேசிய தருணம் அது.

வண்டி ஒட்டறத வுட்டுடுங்க...”

எதுக்கு ருக்கு-?”

வுட்டுட்டு வேற ஏதாவது செய்யுங்க.”

எதுக்கும்மா?”

வுடுன்னா வுட்டுடுங்களேன்.”

எப்டி ருக்கு. நல்லா நடக்கற தொழில திடீர்னு எப்டிம்மா வுட்டுற முடியும். இவ்ளோ காலம் இதத்தான செஞ்சிக்னிருந்தன்.”

இவ்ளோ நாளு செஞ்சிருக்கலாம். இனிமே வேணாம்.”

எதுக்கு ருக்கு?”

எதுக்கு எதுக்குன்னு நோண்டிநோண்டிக் கேட்டா எல்லாத்தையும் வாய் வுட்டா சொல்லமுடியும்? அசிங்கமா இருக்குது.”

நாம திருடல, பொய் சொல்லல, ஏமாத்தல, நம்ம கையாலதான நாம பொழைக்கறம். இது எதுக்கு அசிங்கமாத் தெரியணும்?”

எனக்கு அசிங்கமா தெரியுது?”

சாட்டையால் அடிபட்டமாதிரி மனசு துவண்டது. ஊசி குத்தின மாதிரி ஒவ்வொரு வார்த்தையும் இறங்கியது. ஒரே கணத்தில் கூனிக் குறுகி இளைத்தான்.

வண்டிக்காரன் பொண்டாட்டின்னு சொல்லிக்கறதுக்கு அசிங்கமா இருக்குதா ருக்கு?”

இப்ப நான் சொன்னனா?”

அசிங்கமா இருக்குதுன்னா வேற என்னா அர்த்தம்?”

பாருங்க, எல்லாத்துக்கும் அர்த்தம் சொல்லிக்னு இருக்க முடியாது. வேணாம்னா வுட்டுடுங்களேன்.”

நல்லா வருமானம் வர்ற தொழில். எதுக்கு வுடணும் ருக்கு...”

பத்து ரூபா ஒரு வருமானமா? இது போதுமா ஒரு குடும்பத்த நடத்த?”

பட்டினி இல்லாம ரெண்டு பேரு இதுல சாப்புட முடியாதா ருக்கு...”

வெறும் சாப்பாட்டுக்கு ஒரு கல்யாணம், ஒரு வாழ்க்கை வேணாம். கௌரவம்தான் முக்கியம்.”

குதிரைவண்டி கௌரவமில்லியா?”

திருப்பித்திருப்பி இன்னும் எத்தனை தரம் சொல்லணும்?”

மாமாதான இது நல்லதுன்னு பார்த்து வச்சாரு ருக்கு?”

அவருக்கு வயசாய்டிச்சி. மூளயில்லாம அவுருதான் சொன்னாருனா ஒங்க மூள எங்க போச்சி?”

மீண்டும் ஒரு சவுக்கடி. சுளீர்சுளீர் என்று இதயத்தின் மேல் விழுந்தது. குப்பென்று உடம்பு சுட்டது, வந்த சுவடு தெரியாமல் ஓடிப் போனது சந்தோஷம். இத்தனை வேகத்தையும் கோபத்தையும் எந்த மூலையில் ஒளித்திருந்தாள் இவள். இத்தனை அலுப்பும் சலிப்புமான எண்ணங்களைத் தாண்டி இவ்வளவு காலத்துக்குச் சந்தோஷம் தர எப்படி முடிந்தது இவளால். பலவீனம் படர நடந்த எல்லாவற்றையும் மாமாவிடம் சொன்னான் பார்த்தசாரதி. மாமாவுக்கு நம்பிக்கையில்லை. பார்த்தசாரதியையும் கூப்பிட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து ருக்குவைக் கேட்டார்.

இன்னா ருக்கு. பார்த்தசாரதி சொல்லறது நெஜமாவா?”

இன்னா சொன்னாரு?”

வண்டியோட்டறது அசிங்கம்னு சொன்னியாமே?”

இப்ப இன்னா அதுக்கு...”

இன்னா அதுக்கா? தங்கம் மாதிரி இருக்கற ஒரு புள்ள மனச ஒடச்சிட்டு இன்னா அதுக்குன்னு திமிராவா கேக்கற. கழுத. ஒரு பொம்பளையா, லச்சணமா குடுத்தனம் பண்ணற வேலய பாப்பியா இல்ல புருஷன் மனச கலக்கி உட்டு வேடிக்க பாக்க வந்தியா? இதுக்குத்தான் ஒனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களா...”

நீங்க எதுக்கு பண்ணி வெச்சிங்கன்னு எனக்குத் தெரியாது. இது எங்க ரெண்டு பேருக்குள்ளாற நடக்கற விஷயம். நீங்க ஒன்னும் தலையிட வேணாம்.”

வந்த பதில் மாமாவை உலுக்கியது. செதில்செதிலாய்த் தன் ஆகிருதி தன் முன்னேயே சிதைந்து விழுவதை உணர்ந்தார். சீற்றமும் ஆத்திரமும் தாளாமல் எட்டி ருக்குவை ஒரு அறை அறைந்தார். மேலும் அறையப் போனவரை பார்த்தசாரதி கை பிடித்து வெளியே அழைத்து வந்தான். கோபமும், துடிப்புமாய் இருந்தவரைச் சாந்தப்படுத்தினான். சமாதானப்படுத்திக்கொண்டே வாசலில் மாமா மீண்டும் பொங்கினார்.

இப்படி பேசுவான்னு நான் கனவிலயும் நெனச்சிப் பாக்கல பார்த்தசாரதி.”

சரி வுடுங்க மாமா. நடந்தத மறந்துடுங்க.”

எப்படி மறக்கறதுப்பா, கண்ணாடி சில்லால கிழிச்ச மாதிரி கேட்டாளே, எப்படி மறக்கறது சொல்லு...?”

சரி வுடுங்க...”

என்ன வுடு வுடுன்னு சொல்லறியேடா, நீ எப்படி வுடப்போற? ஒன்னால தாங்க முடியாமதான வந்து பொலம்பன...”

நிதானமா மறந்துடணும் மாமா. அதுதான் எல்லார்க்கும் நல்லது.”

அவளப்போயி ஒன் தலைல கட்டி வச்சனே, என்ன சொல்லணும்டா என்ன சொல்லணும்.”

எதுக்கு மாமா பழசயெல்லாம் நெனைக்கறீங்க...”

பாவி அன்னிக்கே அவள வேணாம்னு சொல்லி இருக்கக்-கூடாதா? ம்னு சொல்லி இவ்ளோ துன்பத்த வெலகொடுத்து வாங்கிட்டியேடா...”

எல்லாம் சரியாய்டும் மாமா.”

அவள சௌகரியமா வளத்துட்டன் பாரு அதுதான்டா தப்பு. இதான் ஒலகம். இதான் கஷ்டம்னு எதுவுமே தெரியாம சோத்தப்போட்டு சோத்தப்போட்டு வளத்ததுக்கு இன்னிக்கு சரியான நன்றி காட்டிட்டா. வாடி கழுத வந்து நாத்து புடுங்குடின்னு அன்னிக்கு கூடவே இட்டும்போயிருந்தா வெயிலு நெழலு பழகி இருக்கும். கஷ்டம் நஷ்டம் தெரிஞ்சிருக்கும். இந்த சொகம்  கேக்காது. திருட்டு கௌரவம் பாக்காது. எல்லாம் என் தப்புடா பார்த்தசாரதி. என் தப்பு. என் பையன் கூட கேக்காத கேள்விய இவ கேட்டுட்டாடா.”

சரி மாமா, ருக்குவ நான் சமாதானப் படுத்தறன். நீங்க வாங்க.”

நா போய்க்கறன், நீ போடா.”

ஒங்கள ஊட்டுல விட்டுட்டு நா போறன். நீங்க வாங்க.”

வந்தார்கள். தொங்கிய முகமும், துக்கமுமாய் வந்த புருஷனைப் பார்த்து மனைவி துணுக்குற்றாள். “இன்னாங்க நடந்திச்சிஎன்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல்எல்லாம் முடிஞ்சி போச்சிஎன்று விரக்தியாய்ச் சொன்னார். பதறியவள் பார்த்தசாரதியை பார்த்துநீயாச்சும் சொல்லுப்பா, இன்னா நடந்திச்சிஎன்றாள். எல்லாவற்றையும் சொல்லக் கேட்டு ஆத்திரப்பட்டாள்.

கழுத்த குனிஞ்சி தாலி தாங்கனதும் அம்மாவுக்கு கண்ணு மண்ணு தெரியாம போச்சா. ஒங்களப் பாத்தா எங்க விஷசயத்துல தலையிடக்கூடாதுன்னு சொன்னா? போறன். ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வரன்? யார் விஷயத்துல யார் த்¬ல்யிடக்கூடாதுன்னு. பாத்துப்பாத்து கட்டி வச்சமே நம்மளயே கண்ண கசக்க வுடறாளா. வாப்பா தம்பி வா, நா கேக்கறன் வண்டி ஓட்டறதுல இன்னா கொறவுனு...”

வேணாம் வுடுக்கா. ஏதோ அறியா வயசு. ஆத்திரத்துல கேட்டுட்டா.”

எதுப்பா அறியா வயசு? புள்ள பெத்து வளக்க வேண்டிய வயசாடா அறியா வயசு...”

சரி வுடுக்கா. நம்ம பொண்ணுதான். கொஞ்சம் வுட்டுப்புடிக்கலாம்.”

விட்டுப்பிடிக்கத்தான் பார்த்தசாரதி வண்டியையும் குதிரையையும் விற்றான். நீடாமங்கலத்தில் இருந்து கவுண்டர் ஒருத்தர் விலைபேசி வாங்கிப்போனார். விற்ற தருணம் மனசு நடுங்கியது. குதிரையை மெல்ல வருடினான். குனிந்த குதிரையின் கழுத்தில் முகம் புதைத்துக் கேவினான். வண்டியை நிதானமாய்த் துடைத்தான். சக்கரத்தைக் கழுவி அச்சுக்கு கிரீஸ் தடவினான். இனி அரக்கப்பரக்க ஓடும் அலைச்சல் கிடையாது. கால் இருட்டில் ஏரிக்குப் போய் குதிரையைக் குளிப்பாட்டுகிற அவசியம் கிடையாது. “அவசரமாக கோயில்  பூஜைக்குப் போகணும் வாஎன்று சொல்பவர்கள் கிடையாது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஜனங்களை ஏற்றி வருகிற அவசியம் இருக்காது. மத்தியானச் சங்கு அச்சம் தராது. சாயங்காலம் புல்லுக்கட்டுக்கு வாயாடத் தேவை இருக்காது. இத்தனை மணிக்குச் சேரவேண்டும் என்கிற பரபரப்பு இருக்காது. இவை எதுவுமே இல்லாமல் வாழவது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று எண்ணும்போது பயமும் திகிலும் மனசு முழுக்கப் பாசி மாதிரி பரவியது.

வந்த பணத்தில் வீட்டிலேயே ஒருபக்க அறை மாதிரி ஒதுக்கி தெருவைப் பார்க்கிற மாதிரி சோடாக்கடை வைத்தான். சரக்குப் போட, வாடிக்கைக்கடைகளுக்குப் போகவர வசதியாய் பையன் ஒருவனை வைத்தான்.

கூரைவீடு சரிவராததில் தெருமுனையில் இருந்த சிவலிங்கத்தின் ஓட்டு வீட்டில் வாடகைக்குக் கடையை மாற்றிக் கொண்டான்.

ருக்குவுக்கு இந்த உயரம் போதவில்லை. இன்னும் உயரத்தில் பறக்க வேண்டும் என்று நினைத்தாள். உயர உச்சமே கௌரவம் என்று வாதம்செய்தாள். உச்சிக்குச் செல்ல விரும்பாதவன் வாழ லாயக்கில்லாதவன் என்று கத்தினாள்.

**

அந்த வருஷத்து ஐப்பசியில் வழக்கத்துக்கு மாறாக தாரைக் காய்ச்சித் தலையில் ஊற்றியமாதிரி வெயில். மரங்கள் இலைகளை உதிர்த்துச் சுள்ளிகளாய் நின்றன. ஏரி வற்றிப் பாளம்பாளமாய் வெடித்தது. தைக்கு நெல்லாக வேண்டிய பயிர்கள் சுருண்டு வதங்கின. மகளும் மண்ணும் சொல்லி வைத்தது மோசம் செய்வதாய் மனசு உடைந்தார் மாமா. சதா காலமும் பார்த்தசாரதியை நினைத்து குற்றவுணர்வால் குறுகியது. துக்கமும் வேதனையும் உடம்பை ஒடுக்கியது. மிடுக்கும் துடிப்புமான உடம்பு அலுமினியப் பாத்திரம் மாதிரி நசுங்கியது. நோய் வந்தது. படுக்கையில் தள்ளியது.

சாலையாம்பாளையத்துக்கு அவசரமாய் ஒரு பை சோடாவும், கலரும் அனுப்ப தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கும்போது பனங்குப்பத்தார் வந்து பார்த்தசாரதிக்குச் சொன்னார்.

ஒங்க மாமா கூப்ட்டாரச் சொன்னாரு.”

பையனிடம் வேலையை ஒப்படைத்து அரக்கப்பரக்க மாமா வீட்டுக்கு வந்தான். கூடத்தில் இடது பக்க மூலையில் வதங்கிய செடிமாதிரி மாமா படுத்திருந்தார். தங்க பஸ்பம் சாப்பிடுகிற  மனுசன் என்று சொல்லி ஊரே அங்கலாய்த்த மிடுக்கும் உடம்பு வாகும் கலைந்துபோயிருந்தது.

மாமா.”

யாரு?”

நான்தான் மாமா பார்த்தசாரதி.”

ரொம்பவும் முயற்சி செய்து எழுந்து உட்காரப் பார்த்தார் மாமா. மூச்சு அடைத்தது. இரைப்பு வாங்கியது தூக்கிச் சாயவை என்கிற மாதிரி சைகை செய்தார். பிடரியைத் தாங்கலாய்ப் பிடித்து மாமாவைத் தூக்கி சுவரோரம் தலையணையை அண்டக் கொடுத்துச் சாய்த்தினான். இருமினார். இருமி முடிந்ததும் தண்ணீர் வாங்கிக் குடித்தார்.

ஒன்னத்தான் கடைசியா பார்த்துட்டு சாவணும்னு இருந்தன் வந்துட்டியா...”

அப்படிலாம் பேசாதீங்க மாமா.”

ஏன்டா பயமா இருக்குதா?”

மாமா.”

இங்க வா... வந்து ஒக்காரு

அருகில் உட்கார்ந்தான். மனசு பொங்கி துக்கத்தில் அழுகை கண்களில் முட்டியது.

ஒரே ஒரு உபகாரம் செய்யணும் நீ.”

சொல்லுங்க மாமா.”

நல்லா இருந்த புள்ள ஒன்ன, பொண்ணை கட்டிக் கடான்னு சொல்லி கெடுத்துட்டன்.”

மாமா

த்ச் குறுக்குல பேசாம கேளு.”

அதயே எதுக்கு மாமா திருப்பித் திருப்பி நெனச்சிக்கறீங்க. நா சந்தோஷமாதா இருக்கறன் தெரியுமா?”

(தொடரும்  )