Home

Sunday, 17 May 2026

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 3

(தொடர்ச்சி......) 


த்ச்...எல்லாம் எனக்குத் தெரியும்பா. நா சொல்றத கேளு.”

மாமா.”

அவளால ஒனக்கு சதாகாலமும் இம்சயாத்தான் போச்சே தவிர நிம்மதியே இல்லை. வாழ்நாளு பூராவும் ஒன்ன நிம்மதியில்லாம  அடிச்சிட்டன். அப்பா பார்த்தசாரதி தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடுப்பா.”

மாமா.”

ஆமான்டா. நீ மன்னிச்சாதான் என் ஒடம்பு வேகும்.”

சொல்லிட்டுச் சிரித்தார். உடைந்த சிரிப்பு. சோகமும் இயலாமையும் கலந்த சிரிப்பு. வாழ்வின் எல்லா முடிச்சுக்களையும் நழுவவிட்டமாதிரி துயரமான சிரிப்பு.

நா போயி ஊட்லேர்ந்து ருக்குவ கூப்டாரட்டா மாமா?”

வேணாம்.”

எதுக்கு மாமா?”

வேண்டாம்டா.”

ஆஸ்பத்திரிக்காச்சும் போயி டாக்டர கூட்டியாரனே.”

எதுவும் வேணாம் பார்த்தசாரதி. இத்தினி நாளு எப்படி சொல்லறது எப்படி சொல்லறதுன்னு இழுத்து இறுக்கி வெச்சிக்னு இருந்த பாரத்த எறக்கிட்டன். இது போதும் போ.”

மாமா.”

ஒன்னுத்துக்கும் கவலைப்படாத பார்த்தசாரதி. நீ போப்பா. போய்க் கடவேலய கவனி.”

வீடு திரும்பி மறுநாள் காலையில் கடையைத் திறக்கும்போது பனங்குப்பத்தார் மீண்டும் வந்து சொன்னார்.

மாமா போயிட்டாரு தம்பி.”

தேகம் நடுங்க ஓடிய பார்த்தசாரதி மூச்சு நின்றுபோய் ஓர் அழுக்குத் துணிக்குவியல் மாதிரி இருந்த மாமாவைப் பார்த்தான். உடைந்து அழுதான். தேறினான். மாமியாரைத் தேற்றினான். ருக்குவுக்குச் சொல்லி அனுப்பினான். உறவு ஜனங்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னான். தகவல் சொல்ல ஆள் அனுப்பினான். சாயங்காலமாய் எல்லா சம்பிரதாய வழக்கங்களுடனும் இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ததான்.

அடக்குதல், அடங்குதல் இரண்டையுமே தவறு என்று நினைத்தான் பார்த்தசாரதி. இதனாலேயே ருக்குவை எல்லாத் தருணங்களிலும் அவனால் மன்னிக்க முடிந்தது. அடங்காதவரையும்  சாவு அடக்கி வழிபடுத்தும் என்று சொல்வார்கள். மனசு மாறி ருக்கு நிதானம் கொள்வாள் என்று நினைத்தான். ஆனால் ருக்கு விஷயத்தில் அதுவும் பொய்யானது. ஏதோ குழந்தைத்தனத்தில் செய்கிறாள். இன்று திருந்துவாள், நாளை திருந்துவாள் என்று நினைத்தது எல்லாம் வீணானது. வேண்டுமென்று செய்வது போலவே செய்தாள் ருக்கு.

ஒரு சாயங்காலத்தில் இவன் திண்ணையில் உட்கார்ந்திருக்கும்போது கேட்டாள்.

இது கோயில் மண்ணுதான?”

ம்.”

இந்தக் கூர ஊட்ல எத்தினி வருசமா இருக்கீங்க?”

பொறந்ததிலேந்து இங்கதான் இருக்கம்.”

இதான் நமக்குச் சொந்தமில்லியே. இத வுட்டுட்டு எங்கனா டவுன் பக்கம் போயிர்லாமா?”

எதுக்கு ருக்கு?”

இங்க எனக்கொன்னும் புடிக்கவே இல்ல. பேசாம நாம விழுப்புரம் போயிர்லாம். இந்தக் குப்பகாட்லியே எவ்ளோ காலம்தான் இருக்கணும்....--?”

நம்ம ஊரு, நம்ம ஜனங்கள வுட்டுட்டு அவ்ளோ தூரம் எப்டிம்மா போவறது.”

ம்க்கும். நீங்கதா நம்ம ஜனம் நம்ம ஜனம்னு தலைல வச்சிக் கொண்டாடறிங்க. எவங்கிட்டியாவது பத்தாயிரம் ரூபா இருந்தா குடுங்கடான்னு அவசரத்துக்கு பொரட்டிக்னு வாங்களேன்.”

பத்தாயிரம் ரூபா இப்ப நமக்கெதுக்கு ருக்கு?”

யாராச்சும் குடுத்துருவாங்களா கேளுங்க பாப்பம்னு சொல்றன்.”

வெறும் பணத்துக்காகத்தான் ஜனங்கன்னு நெனச்சிடக் கூடாது ருக்கு.”

நா அப்பிடித்தான் நினைப்பேன். பணம்தான் எனக்கு முக்கியம்.”

சரி டவுனுக்குப் போய்ட்டா அங்க மட்டு குடுத்துருவாங்களா?”

ஆளுங்க குடுக்காட்டாலும் வழிங்க நெறயா இருக்கும்.”

ருக்கு.”

ம்க்கும். வெறும் ருக்கு ருக்குன்னே ஒக்காந்திக்னிருங்க. இன்னம் எச்ச பாட்டில் கழுவிக்னு இந்தக் குப்பக்காட்டுல எவ்ளோ காலம்தா இருக்கப் போறிங்களோ. தானாவும் தெரியல. சொன்னாவும் புரியல ஒங்களுக்கு பணம் சம்பாதிக்கணும் முன்னேறணும்ங்கற நெனப்பு மனசுல இருந்தாத்தான.”

ருக்கு.”

பேசாதிங்க எங்கிட்ட. இத்தினி காலத்துக்கும் சொல்லிச் சொல்லி எனக்குத்தான் அலுக்குது. ஒரு எழவாவது ஒங்க மண்டைக்குப் புரியுதா. லட்சணமா கட்டிக்க ஒரு பொடவ இருக்குதா, ஒரு நகை நட்டு இருக்குதா. வெறும் சோத்த தின்னுட்டா போதும்னு நெனப்பு. சோறு மானம் கெட்ட சோறு. நாய்கூடத்தா சோறு திங்குது...”

இன்னொரு நாள் மதியமாய்ச் சாப்பாடு பரிமாறிக் கொண்டே சம்பாஷணை வளர்ந்தது.

சேதி தெரிமா ஒங்களுக்கு?”

என்ன ருக்கு?”

எதுத்த வீட்டுல வெற்றிவேல் கவுண்டர் புள்ள சந்திரன் துபாய்க்கு போயிருந்திச்சில்ல, அது வந்திருக்குதாம்.”

ம்.”

காலைலதா வந்திச்சி. விழுப்புரத்லேர்ந்து ஸ்பெஷலா டாக்சி வச்சிக்னு வந்திச்சி போல. எத்தினி பொட்டி, எத்தினி சூட்கேஸ், எத்தினி பைங்க தெரியுமா? அப்பாடி. எண்ணக்கூட முடியலியே...?”

அப்படியா.”

ஒரு நாலு வருஷம் அந்த மாதிரி கஷ்டப்பட்டாலும் அதுக்கப்பறம் எல்லாம் சௌகரியம்தான். பணத்துக்குப் பணம். சொகத்துக்கு சொகம். என்னா சம்பளங்க குடுப்பாங்க அவுங்களுக்கு.”

தெரியல ருக்கு.”

எதயும் தெரிஞ்சிக்காதிங்க நீங்க. இந்தக் குப்பக்காடே கதின்னு கெடங்க...”

ருக்கு.”

பேசாம அவுரு மாதிரி நீங்களும் துபாய் கிபாய்னு போவ முடியுமான்னு பாருங்க. அதயே இன்னா வழிமொறன்னு கேட்டா சொல்லாதா. நாமளும் நாலு பேரு மாதிரி முன்னேற முடியும்.”

ருக்கு.”

ஒரு தரமாச்சும் நா சொல்ற பேச்சு கேளுங்க.”

முகத்தில் அடித்த மாதிரி பேசினாள். நாளாக நாளாக ஒவ்வொரு வார்த்தையாலும் அம்பு மாதிரி தைத்தாள். உதாசீனப்படுத்தினாள். கூட இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் நீ கையாலாகாதவன், நீ பிரயோஜனம் இல்லாதவன் என்று பேச்சினால் குத்தினாள். அருவருப்பான பொருளை பார்க்கிற ரீதியில் ஒதுக்கினாள்.

ஒதுங்கி இருந்தாலும் கவலைப்பட்டான் பார்த்தசாரதி. எல்லாச் சம்பவங்களும் அவனைச் சங்கடப்படுத்தின. துவண்டான். காயப்பட்டான். நசுங்கினான். புழுங்கினான். ஒவ்வொரு நிமிஷமும் முள்மேல் நிற்கிறமாதிரி வேதனைப்பட்டான்.

வேதனையே இல்லாமல் ருக்கு சந்தோஷ முகத்துடன் சந்திரனை சிநேகம் பிடித்தாள். வீடுவரை அழைத்து விருந்து வைத்தாள். பொழுது வித்தியாசமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

ருக்குவைக் காணும்போது இன்னும் வேதனைப்பட்டான் பார்த்தசாரதி.

சாப்பிட உட்கார்ந்தால் சாப்பாடு ஓடவில்லை. தூங்கப்போனால் தூக்கம் வரவில்லை. நெஞ்சின் மேல் ஒரு பாறாங்கல்லைத் தூக்கி வைத்ததுபோல் சதா நேரமும் கவலையும் துக்கமுமாக இருந்தது. சோடாவோ கலரோ யாருக்காச்சும் கேட்டு உடைத்துத் தரும்போதும், ஒன்று இரண்டு என்று எண்ணியபடி பாட்டில்களை அடைக்க மிஷினைச் சுற்றுகிற போதும்என்னய்யா ஆளயே காணம். புத்துல பாம்பு அடஞ்சமாதிரி கடைலியே அடைஞ்சிக்னு இருக்கியா?” என்று தெரிந்த முகங்கள் கிண்டல் செய்யும்போதும்கூட ஒரு சம்பிரதாயத்துக்கு என்ற ரீதியில சிரப்பையோ, மலர்ச்சியையோ வரவழைத்துக்கொள்ளமுடியவில்லை. பிடிப்பற்ற ஒரு நிராதரவான சூழலுக்கு உள்ளாகிவிட்ட சோகமான முகம் வந்துவிட்டது. விரக்தியான முகம் எல்லா நேரத்திலும், ருக்குவுடனான சந்தோஷமான வாழ்வு கிடைத்துவிடும் என்கிற ஆறுதல் தாங்கிய மனநிலையையெல்லாம் கடந்து வந்து சேர்ந்த அசதியான முகம்.

இதுமாதிரி சந்தர்ப்பத்தில் வாழ்கிற விருப்பமே சுத்தமாய் அற்றுப்போனது. என்னமோ, ஏதோ என்று சம்பந்தமே இல்லாத ஒரு மனோபாவனை தோன்றியது. சிற்சில தடவை அடித்து நொறுக்கிப் பயம் காட்டி ருக்குவை வழிக்குக் கொண்டு வரலாமா என்று யோசனை வந்தது. அடுத்தடுத்த கணங்களிலேயே அந்த மாதிரியான உத்தேசங்கள் வேறு ஏதாச்சும் ஏடாகூடமான சங்கடங்களை உருவாக்கி விட்டால் இன்னும் மகா தப்பாகிவிடும் என்று தோன்றிக் கைவிட்டான்.

பாதி பாட்டில்களை பன்னீர்சோடாவுக்கும், பாதி பாட்டில்களை கலருக்கும் பையனை அடுக்கச் சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்த தருணத்தில்தான் இப்படியே இறங்கித் தெருவில், நடந்து போய்விடலாமா என்று யோசனை வந்தது. யோசனையைத் தொடர்ந்து நெஞ்சுக்குள் ஒரு வெளிச்சமும் இறுக்கம் தளர்ந்தமாதிரி ஒரு விடுதலையும் தோன்றியது. சட்டென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி விறுவிறுவென்று நடந்தான். தெருமுனை வந்து கடை இருக்கிற திசையைப்பார்த்தான். வீடு இருக்கிற திசையைப் பார்த்தான். இனி இந்தப் பாரம் இல்லை என்கிறமாதிரி தோன்றியது. ஊரைத் தாண்டி மெல்ல நடந்தான்.

2

நடப்பது இதமாய் இருந்தது. மனசுக்குள் சுழன்றுசுழன்று சுவாலை விட்டு எரிந்த நெருப்புக் குறைந்தது. எந்த ஊரிலும் தங்கவில்லை. எந்த மனிதனுடனும் அதிகம் பிடிப்பில்லை. போகிற இடத்தில் கிடைக்கிற இடத்தில் வேலை செய்தான். எதுவானாலும் சாப்பிட்டான். எங்கேயானாலும் தூங்கினான். கட்டுப்பாடற்று நடந்து கொண்டே இருந்தான்.

மாந்தோப்பு இருந்த ஒரு ஊரின் எல்லையில் நொண்டிப் பிச்சைக்காரனுடன் கொஞ்ச காலம் நெருக்கமாய் உணர்ந்தான். நொண்டிக் காலிலேயே ஊர்ச் சிறுவர்கள் பைத்தியம் பைத்தியம் என்று கேலிசெய்து கல்லால் அடிப்பதைத் தடுக்கப் போய்த்தான் அந்தச் சிநேகிதம் உண்டானது. பிள்ளைகளின் உதை சசிக்காமல் அவன் வாய்விட்டு அழப்பார்த்து பரிதாபத்துடன் தோளில் தூக்கிக்கொண்டு வந்து கோயில் மண்டபத்தில் நிறுத்தினான். காயங்களைக் கழுவிக் கட்டுக் கட்டினான். அந்த நிமிஷத்தில் தோன்றிய பிரியமும் ஆறுதலான காரியமும் பிச்சைக்காரனை நெகிழ்த்தியது. பிச்சைக்காரனுக்காகவே அந்த ஊரில் பத்துப் பதினைந்து நாள்  தங்கி கிடைத்த வேலையைச் செய்து சோறு போட்டான். குணமாகி அந்தப் பிச்சைக்காரனுக்குச் சௌகரியமானதும் தொடர்ந்து புறப்பட்டான். “இங்கியே இருந்துரலாமேஎன்று இழுத்து சோகத்துடனும் கம்மிய குரல் உடைவுகளுடனும் அழுகையுடனும் தேம்பித்தேம்பித் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான் பிச்சைக்காரன். நிர்ப்பந்தத்தின் மத்தியில் விரக்தியின் உந்துதலால் புறப்பட்டுவிட்ட தனது சூழல்களை வெளிப்படுத்தாமலும் மனதில் அவியாமல் இன்னும் கனிந்து எரியும் நெருப்புத் துண்டுகள் சாம்பாலாகும்வரை ஒரு இடத்தில் தரிப்பது தன்னால் இயலாது என்பதைச் சொல்லாமலும் அமைதியாய்ச் சிரித்தபடிஇல்ல, நா போவணும்என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டு புறப்பட்டான்.

புறப்பட்டுப் போன இடத்தில் எல்லாம் விதவிதமான சிநேகிதம். எல்லோருக்கும் அவனைப் பிடித்திருந்தது. எல்லா மனிதர்களையும் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் எங்கும் தங்கத்தான் முடியவில்லை. மனசில் ஒரு மூலையில் மிகப் பாதுகாப்பான இடத்தில் இருந்த பாறையை யாரோ உருட்டிவிட, காலகாலத்துக்கும் அது உருண்டுகொண்டே இருக்கிற மாதிரியும் எந்தச் சரியிலாவது அது விழுந்து நின்றால் தான் தன்னாலும் ஒரு இடத்தில் நிற்க இயலும் என்கிற மாதிரியும் உணர்ந்தான்.

இதற்கப்புறம் சிலகால நடைக்குப் பிறகு போதும் என்று தோன்றியது அவனுக்கு. இரவு பிரியாத அதிகாலையில் குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த தருணம் இந்த யோசனை வந்தது. பனிகொட்டும் சூழலில் குளத்து நீர் குளிர்ச்சியுடன் உடலைத் தழுவியது. இந்தக் குளிர்ச்சியே இத்தனை காலத்துக்கும் எரிந்த நெருப்பை அவித்துவிட்ட மாதிரி ஒரு பேரமைதி பிறந்தது. முங்கிமுங்கி எழுந்தபோது ஆனந்தமாய் இருந்தது. எல்லாச் சுமைகளும் இறங்கி மனசு ஒரு தக்கையானது போல உணர்ந்தான். துணுக்குத்துணுக்காய் அரித்த வேதனைக்கு ஒரு முடிவு வந்துவிட்டமாதிரி இருந்தது அவனுக்கு.

பறவைகளின் கரைசல்தான் கவனத்தைக் கலைத்தது. அப்பொழுதும் எழ மனசில்லாமல் தண்ணீரில் மடங்கி நீந்திக் கொண்டிருந்தான். சூரியனின் வெளிச்சம் குளத்தில் விழுந்து பரவியது. மெல்லக் கரையேறி வெளியே வந்தான். உடம்பைத் துவட்டிக்கொண்டு வேட்டியை நனைத்து அலசிப் பிழிந்து உலர்வதற்குக் காற்றில் உயர்த்திப் பிடித்தான். இன்னும் குளிர்ச்சியான காற்று வீசியது.

சமீபமாய் வந்த இருவரின் பேச்சு காதுக்குள் விழுந்த தருணம் பளீரென விடிந்தது. வானம் அழகாக இருந்தது. இவனையே கவனித்த அவர்களைப் பார்த்து இதமாய்ச் சிரித்தான்.

யாருப்பா அது, புதுசா?”

ஆமாங்க...”

இன்னா குளிச்சாச்சா.”

ஆச்சுங்க.”

தலையசைத்துக்கொண்டே விடுபட்டுப்போன தம் விஷயத்தை மீண்டும் தொடர்ந்தபடி நடந்தார்கள்.

குளக்கரையில் இருந்து பார்ப்பதற்கு ஊர் அழகாக இருந்தது. ஒருபக்கம் முழுக்கக் கரும்பு விளைந்து நிற்கும் கழனிகள். இன்னொரு பக்கம் புறாக்கூட்டம் உட்கார்ந்திருந்த மாதிரி பஞ்சு வெடித்த பருத்திக் காடு. பெரியபெரிய மரங்கள் ஊரைச் சுற்றி நின்றன. முழு வெளிச்சத்தில் தூரத்தில் கோபுரம் மின்னியது. கோபுரத்தைத் தாண்டித்தான் ஜனங்களின் இருப்பிடம் தொடங்குகிறது என்று நினைத்துக்கொண்டான்.

உலர்ந்த வேட்டியை உடுத்திக்கொண்டு மெல்ல நடந்தான்.

ஒரு சின்ன மாரியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறம் இருந்த வேப்பமரத்தையொட்டி இரும்புப்பட்டறை ஒன்று கிழித்திருந்தது. சிவந்து அகன்ற இரும்பு ஒன்றை இடது கையால் பிடித்தபடி வலக்கையில் சம்மட்டியைப் பிடித்து ஓங்கி அடித்தான். சம்மட்டியில் பலம் கூடும்போது வெந்த இரும்பு நழுவியது. இரும்பு நழுவாமல் இருக்க இடுக்கியை இறுக்கியபோது சம்மட்டி பலம் குறைவானது. சமீபத்தில் நின்று பார்த்தபடி இருந்த இவன் மடமடவென்று பக்கத்தில் போய் நின்றான்.

அந்தச் சம்மட்டிய இப்பிடிக் குடுங்கபுரியாமல் அந்த ஆள் நிமிர்ந்து கேள்வியுடன் இவனைப் பார்த்தான்.

பரவால்ல குடுங்க

கொடுத்தான். குறி மாறாமல் அடித்தான் இவன். மதியம்வரை தொடர்ச்சியான வேலை. முடித்து வேர்வையைத் துடைத்தபடி மரத்தடியில் உட்கார்ந்தபோது அவன் சொன்னான்.

வழக்கமா அடிக்கிற ஆளு இல்ல. ஆலைல வேல கெடச்சிடுச்சினு நின்னுட்டான். அதான் கஷ்டமாய்டுச்சி.”

அப்படிங்களா, நாங்கூட ஏதாச்சும் வேல கெடைக்குமான்னுதா பாத்துக்னே வந்தான்.”

வசதியாப் போச்சு, இங்கியே இருந்துடுங்க.”

சரி.”

**

பட்டறைக்காரன் கண்ணாயிரம் ஒரு சகோதரனுக்குரிய பாசத்தோடு இவனை வைத்திருந்தான். அந்தப் பாசமே பத்து வருஷங்களாய் அதே இடத்தில் அவனைக் கட்டிவைத்திருந்தது. அவனை அண்ணன் என்றும் அவன் மனைவியை அண்ணி என்றும் அழைக்கிற அளவுக்கு நெருக்கமாய் இருந்தான். சித்தப்பா என்று கூப்பிட்டபடி ஓடிவருகிற அவன் பிள்ளைகளும் இவனிடத்தில் பிரியமாகவே இருந்தார்கள். இவன் கதையை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு கண்ணாயிரமும் அவன் மனைவியும் ரொம்ப வேதனைப்பட்டார்கள். சட்டென்று பல சமயம் இவனைப் பார்த்துபோய் அவளக் கூட்டியாயேன்என்பார்கள். பதட்டமும் இல்லாமல் நிதானமும் இல்லாமல் நடுவாந்திர முகத்துடன் அவன் அவற்றையெல்லாம் மறுத்தான்.

ஒரு தடவை சாப்பாடு முடிந்து மரத்தடியில் பேசிக் கொண்டிருக்கிற தருணத்தில் அண்ணி அந்தப் பேச்சை மீண்டும் எடுத்தாள்.

யான மதங்கொண்டா தானா தலைல மண்ணவாரிப் போட்டுக்கும்பாங்க. அந்த மாதிரி நடந்துட்டுது அந்தப் பொண்ணு. ஏதோ அறியாத வயசு, தெரியாத புத்தி, தப்புப் பண்ணிட்டுது. ஒலகத்துல யார்தான் தப்பு செய்யல சொல்லுங்க. குருவி பொறுக்குதுன்னு யாரோ வெதைக்காம இருந்த மாதிரி நீங்களும் ஒரு கோபத்துல வந்துட்டிங்க. கோபப்பட்டிங்க, வாஸ்தவம். கோவத்த காட்டுறது எதுக்கு? நெதானமா சொன்னா புரியாத ஆளுக்கு கொஞ்சம் மூஞ்சில அடிச்சமாதிரி அழுத்திச் சொல்லி புரிய வய்க்கறதுக்குத்தான். இத்தினி வருஷம் உட்டுட்டு தனியா வந்துட்டிங்க, ஒங்க கோபத்த அந்த அம்மா புரிஞ்சிக்க இத்தினி வருஷம் போதாதா? இப்பவாச்சும் போய் ஒன்னா வாழக்கூடாதா...”

ஒடஞ்ச பான ஒட்டாதுங்கற மாதிரி ஆய்டுச்சி அண்ணி இந்த வாழ்க்க. தப்பு அவ பேர்லியோ என் பேர்லியோ இனிமே ஒன்னா இருக்க முடியாதுன்னு மனசுல பட்டுது. வந்துட்டன். ஏதோ இத்தினி வருஷம் காத்துல காகிதம் பறக்கிறமாதிரி ஓடிடுச்சி. இன்னம் கொறக்காலத்தயும் இப்படியே ஓட்டிடலாம்...”

அந்தப் பொண்ணப்பத்தி எதயுமே நெனைக்க மாட்டீங்களா...”

நெனச்சி என்ன ஆவப்போவுது அண்ணி? போட்ட வெத ஒன்னு. மொளச்ச செடி ஒன்னுங்கிற மாதிரி வாழ ஆரம்பிச்ச நேரம். நா ஒரு மாதிரி நெனைச்சன். அது ஒரு மாதிரி நடந்திருச்சி. நல்ல நேரமோ கெட்ட நேரமோ ஒடஞ்ச பானைக்கி கொசவன குத்தம் சொல்றதா சூள வச்சவனக் குத்தம் சொல்றதா? எல்லாம் தலயெழுத்து...”

மறுபடி சேந்து வாழணும்னு தலைல எழுதி இருந்தா...”

மடக்கிமடக்கிக் கேட்டா இன்னான்னு பதில் சொல்றது அண்ணி, காஞ்சி போன எல கெளையிலியா ஒட்டும்? சுமுகமா இல்லாத நெலமைக்கு ஒறவு கெட்டப்பறம்தான் நா வெலகிக்னன். ஊசிஊசியா வார்த்தய தாங்கறதுக்கு இனியும் நெஞ்சுல தைரியம் கிடையாது அண்ணி, ஆவாத கதய எதுக்கு அண்ணி மறுபடியும் மறுபடியும் திரும்பிப் பேசிக்கினு...”

இந்த மாதிரி நூறு தடவை சம்பாஷணை நடந்துவிட்டது. ஒவ்வொரு தரமும் பலவீனமான குரலுடன் தனது நிலையைச் சொன்னான் பார்த்தசாரதி. கண்ணாயிரத்துக்கு பார்த்தசாரதி சொல்வது ஒரு சமயம் சரி என்பது போலவும் ஒரு சமயம் சரியில்லை என்கிற மாதிரியும் தோன்றியது. ஆனாலும் அவன் மனசு நோக எதையும் சொல்லிவிடக்கூடாது என்று அமைதியானான்.

**

பார்த்தசாரதியின் தினசரி வாழ்வு மிக எளிமையாய் இருந்தது. காலையில் குளத்துக்குப் போய்க் குளித்து வருதல். இருக்கிற வேலையைச் செய்தல். சாயங்காலம் கொஞ்ச நேரம் வெளியே சுற்றுதல். இரவு சாப்பாட்டுக்குப்பின் வேப்பமரத்துக்கு முன்னால் இருந்த மாரியம்மன் கோயில் திண்ணைக்கு வந்து படுத்தல் என்று ஆரவாரம் இல்லாமல் முடிகிற விதமாய் இருந்தது.

ஒரு நாள் காலை சூரியன் எழுந்த பிறகும் பார்த்தசாரதி தூங்கிக் கொண்டிருந்தான். நீராகாரம் குடித்து கண்ணாயிரம் குடிசையை விட்டு எழுந்து வந்தபோது அவனது தூக்கம்தான் கண்ணில் பட்டது. ஏதாவது அலுப்பாய் இருக்கலாம் என்கிற உத்தேசத்தில் வெளிவிவகாரங்களை முடிக்கக் கொல்லைப்பக்கம் போனான். போய் ஒரு மணி நேரம் கழித்து வந்தபோதும் அவன் அங்கேயே படுத்திருந்தான். உள்ளே மனைவியைக் கூப்பிட்டுக் கேட்டான்.

ராத்திரி ஒடம்புக்கு ஏதாச்சும் சரியில்லன்னு பார்த்தசாரதி சொன்னானா?”

இல்லியே.”

இந்நேரத்துக்கு குளிச்சி முடிச்சி வந்துர்ற ஆளு இன்னம் தூங்கறானே. இரு போய்ப் பாத்துட்டு வரன்.”

வந்தான். கோயில் மேடை ஏறி அவனைத் தொட்டு எழுப்பினான்.

பார்த்தசாரதி...”

உலுக்கினான்.

பார்த்தசாரதி...”

வேகமாக உலுக்கினான். உலுக்கலில் கை சரிந்து கீழே தொங்கியது. அந்தத் தொங்கல் ஒரு கலவரத்தையும் அச்சத்தையும் மனசுக்குள் உண்டாக்க, கலக்கத்துடன் முகத்தை அசைத்தான். முக அசைவில் உயிர்ப்பு இல்லை. நெஞ்சில் கை வைத்துப் பார்த்தான். துடிப்பு இல்லை. மூச்சு நின்றிருந்தது. துணுக்குற்று மனைவியைச் சத்தம் போட்டு அழைத்துப் புலம்பினான்.

அலுப்பா தூங்கறான்னு நெனச்சனே. ஐயோ! செத்துக் கெடக்கறானே...”

(கணையாழி -1988)