Home

Wednesday, 17 June 2026

சிறுகதை வளர்ச்சியின் தடங்கள்

 

நவீன இலக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா மணிக்கொடி இதழின் இரண்டாவது காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். அவர் எழுதிய வாடிவாசல் நாவல் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கக்கூடிய படைப்பாக உள்ளது. அவர் எழுதிய  சிறுகதைகள் இதுவரை ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒரு படைப்பைப் பல கோணங்களிலிருந்து அணுகி ஆய்வு செய்யும் அலசல் விமர்சன மரபை அவரே தொடங்கிவைத்தார். தெளிவான கோட்பாட்டுப் புரிதலோடு எழுத்து என்னும் சிற்றிதழைத் தொடங்கி பல இன்னல்களுக்கிடையில் பல்லாண்டு காலம் தொடர்ந்து நடத்தி விமர்சனத்துக்கான ஒரு தளத்தை உருவாக்கினார். தமிழில் புதுக்கவிதை உருவாகி நிலைபெற்றதற்கு எழுத்து இதழ் நல்லதொரு தளமாக விளங்கியது.

வாசகர்களுக்காக மாதமொரு புத்தகத்தைத் தயாரித்தளிக்கும் திட்டத்தை, கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவரும் சிறுவாணி வாசகர் மையம் பத்தாம் ஆண்டின் தொடக்கநூலாக சி.சு.செல்லப்பாவின் பதின்மூன்று சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ’வந்தே மாதரம்’ என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாக வெளியிட்டுள்ளது. பல கதைகளில் படிந்திருக்கும் பழைய காலத்தின் சுவடுகளுக்கும் அப்பால், அவற்றின் மையமாக அமைந்திருக்கும் என்றென்றைக்குமான கேள்விகள் அக்கதைகளை முக்கியத்துவம் கொண்டவையாகக் கருதவைக்கின்றன.

‘மூடி இருந்தது’ என்றொரு சிறுகதை. சிறைச்சாலையில் 623 என்னும் எண்ணின் அடையாளத்தோடு அடைபட்டிருக்கும் ஒரு கைதிக்கு அடுத்தநாள் காலையில் விடுதலை என்ற தகவலோடு அக்கதை தொடங்குகிறது. அரசியல் காரணத்துக்காக சிறைத்தண்டனை பெற்றவன் அவன். தண்டனையின் விளைவாக உருவான தனிமையின் காரணமாக, அவனுடைய  சிந்தனையில் கொஞ்சம்கொஞ்சமாக தத்துவச்சாயல் படிந்துவிடுகிறது. ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பின்னணியில் உள்ள பல அம்சங்களை இணைத்தும் பகுத்தும் அவற்றின் பொருளை அறிய முனையும் விருப்பமும் வந்துவிடுகிறது.

முதலில் அவன் அடைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து அவனை வெளியேற்றி அழைத்துச் செல்கிறார் வார்டர். தன்னை வெளியேற்றி மூடிக்கொண்ட சிறைக்கதவுகளைப் பார்த்தபடியே அந்த வார்டரைப் பின்தொடர்ந்து செல்கிறான் அவன். அவனோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருசிலர் அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறார்கள். விடை கொடுக்கிறார்கள். மெல்ல நடந்து, எண்ணற்ற தடுப்புக்கம்பிகளைக் கடந்து, கடைசியாக அந்தக் கூடத்தையும் கடந்து செல்கிறான். அவனுக்கு முன்னால் இன்னொரு கதவு. அதிகாரியின் அறைக்கதவு. அதற்கப்புறம் மற்றொரு கதவு. தொடர்ந்து மற்றொரு கதவு. ஒவ்வொரு கதவும் திறந்து அவனை வெளியேற்ற, அவனுக்கு முன்னால் தெரியும் மூடிய  கதவு அவனைக் கைதியாகவே நினைக்கச் செய்கிறது. இறுதியாக சிறைவாசல் கதவு திறந்து அவனை வெளியேற்றியதும் மறுபடியும் மூடிக்கொள்கிறது.

அவன் முன்னால் உலகம் விரிந்திருக்கிறது. சுதந்திரமாக நடமாட்டத்துக்கு ஏற்ற உலகம். எண் மறைந்து ஒரு பெயரோடு உலவத்தக்க உலகம். ஆனால் அவன் தன்னைச் சுதந்திரமானவனாக உணரவில்லை. அந்தப் பெயரையும் ஒருவித எண் போலவும் கண்ணுக்கெட்டாத வெளியில் மற்றொரு கதவொன்று மூடியிருப்பதைப்போலவும் அவன் மனம் உணர்கிறது. அக்கணம் வரையில் அரசியல் கைதியாக வாழ்ந்தவன், சமூகவாழ்க்கை என்னும் சிறைக்குள் செல்லும் மற்றொரு கைதியாகவே தன்னை உணர்கிறான். 

இக்கதையை வாசித்து முடித்த கணத்தில் ஒரு நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கும் ’உலகமே ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் அதில் நடிகர்கள்’ என்னும் வரிகளை நினைத்துக்கொண்டேன். ‘உலகமே ஒரு பெரிய சிறைக்கூடம். மூடியிருக்கும் அதன் கதவுகள் சிலர் விழிகளுக்குத் தென்படுகின்றன. சிலர் விழிகளுக்குத் தெரிவதில்லை’ என்னும் எண்ணத்தைச் செல்லப்பாவின் சிறுகதை அளிக்கிறது. 

ஒரு நாயை முன்வைத்து செல்லப்பா எழுதியிருக்கும் ‘வெள்ளை’ என்னும் சிறுகதையும் இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க இன்னொரு கதையாகும். ஒரு குடும்பத்தலைவர் தம் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காக, பிறந்து இரு வாரங்களே ஆன ராஜபாளையும் நாய்க்குட்டியை எங்கிருந்தோ கொண்டுவந்து வளர்க்கிறார்.  வெள்ளைவெளேரென்று அக்குட்டி இருந்ததால், அதற்கு வெள்ளை என்று பெயர் சூட்டுகிறார்கள் அக்குடும்பத்தினர்.  அந்த வீட்டின் குழந்தைகள் அக்குட்டியை பலவிதமாகத் துன்புறுத்தி விளையாடுகிறார்கள்.  வெள்ளையும் அதற்கு ஈடுகொடுத்து விளையாடி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. வேளாவேளைக்கு அதற்குரிய சாப்பாடு அதற்கு வழங்கப்பட்டுவிடுவதால் குட்டிநாயும் கவலையின்றி அப்பிள்ளைகளோடு விளையாடிகிறது.

ஆறேழு மாதங்களில் அக்குட்டி வளர்ந்து பெரிய நாயாகிவிடுகிறது. வளர்ச்சிக்குத் தக்க ஆக்ரோஷத்தையும் அது தன்னிச்சையாக வெளிப்படுத்தத் தொடங்குகிறது. குழந்தைகளின் சேட்டை தாங்கமுடியாமல் போகும்போது ஒன்றிரண்டு முறை கடிக்கவும் தொடங்குகிறது. வேட்டை நாயை வீட்டில் வளர்த்தால் இப்படித்தான் ஆகும் என நினைத்து அக்குடும்பத்தினர் அந்த நாயை வீட்டைவிட்டு வெளியே விரட்டிவிடுகின்றனர். தன் நிலைமையைப் புரிந்துகொண்ட நாய் தன் நடமாட்டத்தைத் அத்தெருவுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. இரண்டுமூன்று ஆண்டுகள் ஓடிவிடுகின்றன. அப்போதும் அந்த வெள்ளை நாய் அந்த வீட்டுக்குக் காவலாக, எச்சில் தொட்டியருகில் படுத்துக் கிடக்கிறது.  

அடுத்து, அக்குடும்பத்தினர் ஒரு மலைநாயை வாங்கிவந்து பொன்ராசு என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். அது வளர்ந்து பெரிதாகிறது. கழுத்தில் கட்டோடு அந்த வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதில் அதற்கு விருப்பமில்லை. எப்போதோ ஒருமுறை கழுத்துக்கட்டு இல்லாத சமயத்தில் விட்டைவிட்டு வெளியே ஓடிவிடுகிறது. எச்சில் தொட்டிக்கருகில் படுத்திருக்கும் வெள்ளை நாய் ஏன் அது ஓடுகிறது என்று புரியாமலேயே ஏதோ ஓர் உள்ளுணர்வின் வேகத்தில் அதைத் துரத்திக்கொண்டு ஓடுகிறது. கட்டிப்போடுவது பிடிக்காமல் தப்பித்து வெகுதொலைவு ஓடிய பொன்ராசு நாய் ஒரு கோம்பை நாயிடம் சிக்கிக்கொள்கிறது.  பின்தொடர்ந்து சென்ற வெள்ளை நாய் அதனுடன் சண்டையிட்டு விரட்டிவிட்டு மலைநாயைக் காப்பாற்றுகிறது. திரும்பிவந்த மலைநாய் வீட்டுக்குள் சென்று சுருண்டு படுத்துக்கொள்ள வெள்ளைநாய் வழக்கம்போல எச்சில்தொட்டிக்கருகே சுருண்டு படுத்துக்கொள்கிறது. தம் புதிய நாயைக் காப்பாற்றி அழைத்துவந்த பழைய நாயை ஒரு கணம் பரிவோடு பார்க்கின்றனர் வீட்டினர். எல்லாமே ஒரு கணம்தான். அதற்குப் பிறகு பழையபடி எரிச்சலையும் வெறுப்பையும் கொட்டுகின்றனர்.

வெள்ளை நாயின் உடலிலிருந்து எழும் வீச்சத்தையும் தளர்ந்த அதன் தோற்றத்தையும் சகித்துக்கொள்ளமுடியாத வீட்டினர் அதை விரட்டியடிக்க எவ்வளவோ முயற்சி செய்கின்றனர். ஆயினும் ஏதோ ஒரு நன்றியுணர்ச்சியால் ஆட்பட்டுவிட்ட அந்த நாய் அங்கிருந்து நகர மறுக்கிறது. தம் முயற்சி பலிக்காததால், அவர்கள்  அதை விரட்டியடிக்க ஓர் ஆளை அழைத்துவருகிறார்கள். அவனுடைய மிரட்டல் உருட்டலுக்குக் கூட அந்த நாய் பணியவில்லை. அதைப் பார்த்து வெறுப்பு கொண்ட அந்த ஆள் அந்த நாயின் கால்களைப்பற்றி தரதரவென தெருவில் இழுத்துச் செல்லத் தொடங்குகிறான்.

தன்னை வளர்த்தவர்கள் என்கிற எண்ணம் ஒரு நாயிடம் குடிகொண்டிருக்கும்போது, தான் வளர்த்த நாய் என்கிற எண்ணம் மனிதர்களிடம் ஏன் இருப்பதில்லை என்கிற கேள்விக்கு அந்தக் காலத்திலும் விடையில்லை. இந்தக் காலத்திலும் விடையில்லை. பிற மனிதர்களோடு அல்லது பிற உயிர்களோடு பழகும் விதத்தில் மனிதனிடம் ஏதோ  ஒரு கணக்கு உருவாகிவிடுகிறது. அந்தக் கணக்கு இல்லாமல் அவனால் வாழ முடிவதில்லை. ஒரு வேலியாக அவன் உருவாக்கிக்கொள்ளும் அக்கணக்கை பல சமயங்களில் அவனாலேயே   கடந்துசெல்ல முடியாமல் போய்விடுவது துரதிருஷ்டவசமானது.

மற்றொரு நல்ல சிறுகதை அறுபது. ஒரு தம்பதியினருக்கு அறுபது வயது நிறைவடைவதை ஒட்டிய ஒரு கொண்டாட்டம் நிகழவிருக்கிறது. முதலில் அவருக்கு அதில் விருப்பமே இல்லை. காலில் விழுந்து ஆசி பெற ஒரு பேரக்குழந்தை இல்லாத தமக்கு இந்தக் கொண்டாட்டம் எதற்கு என அவர் சலித்துக்கொள்கிறார். ஆயினும் வெளியூரில் வசிக்கும் மகனுடைய வேண்டுகோளுக்காக இசைவைத் தெரிவிக்கிறார்.

வெளியூர் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வீட்டு வாசலில் விளையாடுகிறார்கள். வாசலையொட்டி அவர் முல்லைக்கொடிக்கு நீர் வார்த்தபடி அவர்களை வேடிக்கை பார்க்கிறார் அவர். வளர்க்கத் தொடங்கி பல ஆண்டுகளானாலும் மொட்டு விடாத அக்கொடியை அவர் ஒரு குழந்தையைப்போலவே கவனித்துக்கொள்கிறார். எதிர்பாராத விதமாக விழா நாள் காலையில் கொடியில் மொட்டு விட்டிருப்பதைப் பார்த்து அவர் மனம் பூரிக்கிறது.

இரண்டுநாள் முன்பாகவே வந்துவிடுவதாகத் தெரிவித்த அவருடைய மகனும் மருமகளும் குறிப்பிட்ட நாளில் வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. அந்த ஏமாற்றத்தின் காரணமாக, இந்தக் கொண்டாட்டமே எதற்கு என அவருக்குத் தோன்றத் தொடங்குகிறது. ஒருவழியாக விழா அன்று அதிகாலையில் அவர்கள் வந்து சேர்கிறார்கள். புறப்படும் சமயத்தில் மனைவிக்குச் சற்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் மருத்துவரிடம் சென்றபோது அவர் பல சோதனைகளுக்குப் பிறகு கருவுற்றிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியதாகவும் அதனாலேயே தாமதமாகப் புறப்பட்டு வர நேர்ந்ததாகவும் தெரிவிக்கிறான் மகன். மலராத கொடி மலர்ந்ததும் மருமகள் கருவுற்றிருக்கும் செய்தியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததை நினைத்து மகிழ்ச்சியில் திளைக்கிறார் அவர்.

எழுதப்பட்டு ஏறத்தாழ எழுபது, எண்பது ஆண்டுகள் கடந்துபோயிருந்தாலும் இன்றும் ரசித்துப் படிக்கத்தக்க அளவிலும் தளர்வில்லாத கட்டமைப்போடும் அமைந்திருக்கும் செல்லப்பாவின் கதைகளே இத்தொகுதியில் அடங்கியுள்ளன. ஒருவகையில் தமிழ்ச்சிறுகதை வளர்ச்சி பெற்றுவந்த தடங்களை நம்மால் இக்கதைகளில் பார்க்கமுடிகிறது. சிறுவாணி வாசகர் மையம் இத்தொகுதியைச் சிறப்பான முறையில் கொண்டுவந்துள்ளது. இவற்றைப் படிக்கும் வாசகர்களுக்கு செல்லப்பாவுடைய பிற சிறுகதைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வம் பிறக்கும் என்பது உறுதி.

 

(வந்தே மாதரம். சி.சு.செல்லப்பா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள். சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 214- எஸ்டீம் டீலக்ஸ், ரைட் ஹவுஸ், முல்லை நகர், பி.என்.புதூர், கோவை – 641041.)

 

(புக் டுடே – இணையதளம் – 11.06.2026)