தன்னலமும் தன்மானமின்மையும்
பாவண்ணன்
கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசக கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து எழுதுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் உள்ளதை உள்ளபடி கூறும் கச்சிதமான காட்சிச்சித்திரங்களின் தொகுப்பாக வெளிவந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்புகள் இயல்புவாத எழுத்துமுறையின் முன்னுதாரணங்களாக விளங்கின. அவருடைய நாவல்களை ஒரு காலகட்டத்தின் ஆவணம் என்று குறிப்பிடலாம். அவருடைய நாவல்களை க.நா.சு. முதல் சுந்தர ராமசாமி வரை பல எழுத்தாளர்கள் முன்னிறுத்திப் பேசியதற்கு இதுவே காரணம்.
ஆர்.ஷண்முகசுந்தரம் சிறந்த எழுத்தாளராக மட்டுமன்றி, சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும்
விளங்கினார். தன் சொந்த முயற்சியால் வங்கமொழியைக் கற்றுக்கொண்டவர் அவர். பதேர் பாஞ்சாலி
உட்பட பல வங்க நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சரத்சந்திரரின் பல நாவல்கள்
ஆர்.ஷண்முகசுந்தரத்தின் மொழிபெயர்ப்பில் வெளிவந்தன.
நாகம்மாள், சட்டி சுட்டது, பனித்துளி போன்ற புகழ்பெற்ற நாவல்களை
எழுதிய ஷண்முகசுந்தரம் ஒரு காரணமும் இன்றி ஏறத்தாழ பத்தாண்டு காலம் எழுத்துலகிலிருந்து
விலகியிருந்தார். க.நா.சு. போன்ற மூத்த படைப்பாளிகளின் சொற்களால் ஊக்கம் பெற்று மீண்டும்
எழுதத் தொடங்கினார். அப்போது அவர் எழுதிய நாவல் அறுவடை.
ஷண்முகசுந்தரம் அறுவடை என்னும் சொல்லை இந்த நாவலில் அதன் நேரடிப்பொருளில்
பயன்படுத்தவில்லை. ஒரு நிலத்தில் உழுது, விதைத்து, பயிர்வளர்த்து, களையெடுத்து, காவல்
காத்து, விளைந்தபிறகு செய்யப்படும் அறுவடையைப்பற்றிய பேச்சுக்கே இந்த நாவலில் இடமில்லை.
அப்படிப்பட்ட காட்சிகளே இந்த நாவலில் இல்லை. இந்த அறுவடை முற்றிலும் வேறு. இது பண அறுவடை.
ஒருவர் சேமித்துவைத்திருக்கும் செல்வத்தை அள்ளிக்கொண்டு போக நினைக்கிற அறுவடை. குற்ற
உணர்ச்சி, நாண உணர்ச்சி, அவமான உணர்ச்சி, நியாய உணர்ச்சி என எதைப்பற்றியும் கவலைப்படாத அறுவடை. அறுவடைக்கான வேட்கை சிலரை தன்னலப்பிறவிகளாக
மாற்றுகிறது. இன்னும் சிலரை தன்மானமற்ற பிறவிகளாகவும் மாற்றுகிறது. நாவலைப் படித்து
முடிக்கும்போது ‘இத்தனை கேவலமானவனா மனிதன்?’ என எழும் கேள்விக்கு விடையில்லை.
கீரனூரைச் சேர்ந்த சின்னப்பமுதலியார் பெரிய பண்ணையார். இளைய
வயதிலேயே திருமணவாழ்வில் ஈடுபட்டு நாற்பது வயதில் மனைவியை இழந்துவிட்டார். அவருக்கு
இரு மகள்கள். ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் நடந்துவிட்டது. அவர்களுக்குப் பிறந்த
பிள்ளைகளும் வாலிப வயதை எட்டிவிட்டனர்.
குடும்பத்துடன் இருக்கமுடியாத மனக்கசப்பின் விளைவாக, தோட்டத்திலேயே
ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வாழத் தொடங்குகிறார் முதலியார். சமையல் வேலைக்கு உதவியாக
ஒரு ஆள் மட்டும் இருக்கிறான். முதலியாருக்கு எழுபது வயதாகவிட்டது. ஆயினும் ஒரு பெண்
துணைக்கான ஏக்கம் அவர் மனத்தைவிட்டு அகலவில்லை. அந்த வீட்டின் தனிமை அவருடைய ஏக்கத்தைப் பல மடங்காக
மாற்றிவிடுகிறது.
முதலியார் தன் தோட்டத்துக்கு அருகிலேயே வசிக்கும் தன் நண்பரான
கருப்பண்ண முதலியாரின் உதவியை நாடுகிறார். அவரும் எங்கெங்கோ முயற்சி செய்து அவ்வப்போது
யாராவது ஒரு பெண்ணை அழைத்துவந்து பெரிய முதலியாரிடம் விட்டுவிட்டுச் செல்கிறார். ஆனால் யாரும் அங்கே நிலைத்து நிற்பதில்லை. இரண்டுமூன்று
மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் சொல்லாமல் கொள்ளாமல் அந்தத் தோட்டத்தைவிட்டு வெளியேறிவிடுகிறாள். அடுத்து மீண்டும் முயற்சி செய்து இன்னொரு பெண்ணை
அழைத்துவருகிறார் கருப்பண்ண முதலியார்.
அங்கு வரும் பெண்கள் யாருமே நிரந்தரமாகத் தங்குவதில்லை. அதுதான்
பெரிய முதலியாரின் மனக்குறை. அப்போதுதான் அவருக்குள் ஒரு திருமணத்திட்டம் உதிக்கிறது.
தாலி கட்டி திருமணம் செய்துகொண்டால் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவள் தன்னோடு நிரந்தரமாகத்
தங்கிவிடுவாள் என்பது அவர் நம்பிக்கை. உடனே தன் எண்ணத்தைக் கருப்பண்ண முதலியாரிடம்
தெரிவிக்கிறார். அவரும் அந்தத் திட்டத்துக்கு ஊக்கம் கொடுப்பதுபோல உரையாடுகிறார். எப்படியாவது
சின்னப்ப முதலியாருக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடிப் பேசி முடிவு செய்வதாக வாக்களிக்கிறார்.
பெரிய முதலியாரிடமிருந்து எளிதாக பணத்தைக் கரைக்க அது எளிதான வழி என அவர் மனம் திட்டமிடுகிறது.
வீட்டில் கல்யாண வயதில் அவருக்கு ஒரு பையன் இருக்கிறான். அவனுக்குப்
பெண் தேடுவது முதல் திருமணம் முடிப்பது வரையிலான எல்லா வேலைகளுக்கும் ஏராளமாக பணம்
தேவைப்படுகிறது. அதை, கொஞ்சம் கொஞ்சமாக முதலியாரிடமிருந்தே திரட்டிவிடத் திட்டமிடுகிறது
அவர் மனம். இப்படி முதலியாருக்கு ஏதோ ஒன்றிரண்டு உதவிகளைச் செய்து தமக்குத் தேவையான
தொகையை கொஞ்சம்கொஞ்சமாக அறுவடை செய்துகொள்ளவே நாவலில் இடம்பெறுகிறவர்கள் அனைவரும் நினைக்கிறார்கள்.
சின்னப்ப முதலியார் தம் வாழ்நாளில் சொந்த உழைப்பின் வழியாக முன்னூறு
ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தைச் சேமித்துவைத்திருக்கிறார். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகவும் சேமித்துவைத்திருக்கிறார்.
தமக்குக் கிடைக்கவேண்டிய சட்டபூர்வமான பங்கை அறுவடை செய்வதில் எவ்விதமான ஊறும் வந்துவிடக்
கூடாது என குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்
காத்திருக்கிறார்கள். சட்டபூர்வமான உரிமை என எதுவுமில்லாவிடினும், சின்னப்ப முதலியார்
மனம் குளிரும்படி செய்யும் செயல்களுக்கான பலன்களை அறுவடை செய்வதில் எவ்விதமான ஊறும்
வந்து விடக்கூடாது என சின்னப்பமுதலியாருக்கு நெருக்கமானவர்கள் போல நடிப்பவர்களும் காத்திருக்கிறார்கள்.
தெரிந்தும் தெரியாமலும் செல்வத்தைப் பங்கிட்டுக் கொள்வதைத்தான் ஷண்முகசுந்தரம் அறுவடை
என்று குறிப்பிடுகிறார்.
கருப்பண்ண முதலியாரைப்போலவே சின்னப்ப முதலியாரின் தோட்டத்துக்கு
நெருக்கமாக வசிக்கும் இன்னொருவன் நாச்சிமுத்து. முதலியார் கள்ளுக்கடை வியாபாரம் செய்துவந்த
காலத்தில் பன்னிரண்டு வயதுப் பையனாக அவரிடம் வேலைக்கு வந்து சேர்ந்தவன் அவன். சிப்பந்தியாக
இருந்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு கடையின் நிர்வாகியாக உயர்ந்தவன். மாதம் மூன்று ரூபாய்
சம்பளம் கொடுத்த காலத்திலிருந்து நூறு ரூபாய் சம்பளம் என வாங்கிய காலம் வரைக்கும் முதலியாருக்கு
விசுவாசம் மிக்கவனாக வாழ்ந்தவன். அவனுடைய திருமண வாழ்க்கையும் நிலைக்கவில்லை. ஒரு பெண்ணைப்
பெற்றெடுத்துவிட்டு அவன் மனைவி மறைந்துவிட்டாள். வீட்டோடு வந்திருக்கும் விதவையான அக்காவின்
பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, அடுத்தடுத்த ஊர்களில் நிகழும் சந்தைகளுக்குச் சென்று
சீட்டாடி பொழுதுபோக்குகிறான் நாச்சிமுத்து.
சின்னப்ப முதலியாரின் திருமண ஆசையில் தொடங்கும் நாவல் படிப்படியாக
அது எப்படி செயல்வடிவம் எடுத்தது என விவரித்தபடி செல்கிறது. கதையில் நிகழும் அடுத்தடுத்த மாற்றங்கள் பணத்துக்காகவும்
வசதிக்காகவும் மனிதன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் புள்ளியை வாசகர்களுக்கு அடையாளம்
காட்டியபடி செல்கின்றன. சுயநலத்துக்காக மனிதர்கள் நடிக்கிற நடிப்பும் பேசுகிற பேச்சும்
ஒருவித ஒவ்வாமையை அளிக்கின்றன. இறுதிக்கணத்தில் மனிதன் என்பவன் இவ்வளவுதான் என்ற எண்ணம்
எழும் தருணத்தில் ஒருவித இயலாமையில் மனம் துவண்டுவிடுகிறது.
சின்னப்ப முதலியாருக்குப் பெண் கொடுக்க வெளியூரில் ஒரு பெண்
காத்திருக்கிறது என்றொரு தகவலைக் கொண்டு வருகிறார் கருப்பண்ண முதலியார். அவர்கள் கேட்கும்
நகையை வாங்க ஒன்றுக்கு இரண்டாகப் பணம் வாங்கிக்கொண்டு செல்கிறார். தன் மகனுக்குப் பேசி
முடிவு செய்யும் பெண்ணுக்கு நகைசெய்ய அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். சந்தையின்
தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த நாச்சிமுத்துவுக்கு பணத்தாசையையும் பொன்னாசையையும் காட்டி,
அவனுடைய மகள் தேவானையை சின்னப்ப முதலியாருக்குப் பேசி முடிக்கிறான்.
சில நாட்கள் கண்மறைவாகத் திரிந்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவருகிறான்
நாச்சிமுத்து. சீட்டாட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாக மகளிடம் பொய்
சொல்கிறான். ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து சின்னப்ப முதலியார் தன்னை மீட்டு
அழைத்துவந்ததாகவும் சொல்கிறான். அவர் செய்த
உதவிக்குக் கைம்மாறாக அவரையே திருமணம் செய்துகொண்டு தன் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்
என்றும் பெற்ற பெண்ணிடமே பொய் நாடகம் நடித்து சம்மதத்தைப் பெறுகிறான். பணம் படுத்தும்
பாடு.
அந்தப் பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தவன் சுப்பிரமணியன்.
முதலியாரின் பேரன். காதலிக்கு நேர்ந்த துயரம் அவனைக் கிஞ்சித்தும் பாதிக்கவில்லை. காதலிக்காகப்
பரிந்து பேசி தாத்தாவைப் பகைத்துக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. காதலைவிட, அவனுக்குத்
தனக்குக் கிடைக்கவேண்டிய பங்குதான் அவனுக்கு முக்கியமாக இருக்கிறது. மாமனாரை அதுவரை
வெறுத்துப் பேசிவந்த மருமகளும் மகனும் கூட திருமண வீட்டுக்கு வந்து சடங்குகளில் உற்சாகமாகக்
கலந்துகொள்கிறார்கள். புருஷன் வீட்டில் வாழப் போன பெண்கள் கூட புத்தாடை கட்டிக்கொண்டு
அப்பாவின் திருமணத்தில் பங்கேற்க வந்திருக்கிறார்கள்.
உறவுக்காரர்கள், ஊர்க்காரர்கள் என அங்கிருந்த அனைவருக்குமே,
அத்திருமணம் ஒரு பொருந்தாத்திருமணம் என்று தெரிகிறது. ஆனால் அதை எதிர்த்து ஒருவர் கூட
குரல் கொடுப்பதில்லை. எல்லோரும் அட்சதை தூவி வாழ்த்திவிட்டு, விருந்துக்குச் செல்லக்
காத்திருக்கிறார்கள். மணமேடை அலங்காரம் முடிந்து, மாப்பிள்ளையை அழைத்து வந்து அமரவைக்கும்படி
குரல் ஒலிக்கிறது. புதுவேட்டி புதுசட்டை என மாப்பிள்ளைக் கோலத்தோடு சாய்வுநாற்காலியில்
அமர்ந்திருந்த சின்னப்ப முதலியாரை அழைத்துச் செல்ல அனைவரும் மேளதாளத்தோடு நெருங்கி
வருகிறார்கள். ஆனால் முதலியாரின் உடலில் எந்த அசைவும் தென்படவில்லை என்பதை அவர்கள்
தாமதமாகவே உணர்கிறார்கள். உட்கார்ந்த நிலையில் அவருடைய உயிர் பறந்துவிடுகிறது. தேவானை
என்ன ஆனாளோ என்கிற பதற்றத்தில் அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அவள் ஒப்பனை செய்துகொண்டிருந்த
அறையின் கதவைத் தட்டுகிறார்கள். கதவு உட்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது. கதவை உடைத்துக்கொண்டு
உள்ளே செல்கிறார்கள். மணக்கோலத்தில் அவள் உத்திரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு பிணமாகத்
தொங்குகிறாள்.
அந்த மரணத்துக்குப் பின் நடந்ததென்ன என்பதையெல்லாம் ஷண்முகசுந்தரம்
எழுதவில்லை. அந்தத் தகவல்கள் எதுவும் நாவலின் கட்டமைப்புக்குத் தேவையில்லை. ஒவ்வொருவருடைய
தன்னலத்தையும் தோலுரித்துக் காட்டிய பிறகு, சொல்வதற்கு எதுவுமில்லை.
இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் எவ்விதமான
கூச்சமுமின்றி பொய் சொல்கிறது. அதைப்பற்றிய எந்த மனத்தயக்கமும் ஒருவரிடமும் இல்லை. ஒரு வாசகனாக, எல்லோருடைய பொய்களையும் என்னால் மன்னித்துவிடமுடியும்.
ஆனால், நாச்சிமுத்து ஒரு தந்தையாக தன் மகளிடம் சொல்லும் பொய்யை ஒருபோதும் என்னால் மன்னிக்கமுடியாது.
காவலர்களிடம் அவன் சிக்கிவிட்டதாகச் சொல்வதும் பொய். சிறையில் இருந்ததாகச் சொல்வதும்
பொய். ஆயிரம் ரூபாய் கொடுத்து முதலியார் மீட்டு வந்ததாகச் சொல்வதும் பொய். தனக்கு ஒரு நன்றிக்கடன் இருப்பதாகச் சொல்லி அழுவதும்
பொய். அந்த அளவுக்கு பணம் அவன் கண்களை மறைத்துவிடுகிறது.
இவ்வளவு பொய்களைச் சொல்லித்தான் இருபது வயது மட்டுமே நிறைந்த
தன் இளம்மகளிடம் எழுபது வயதான ஒருவனுக்குத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் பெறுகிறான்
நாச்சிமுத்து. அந்த இளங்குருத்து தன் தந்தையின் சொல்லை உண்மையென நம்பி அத்திருமணத்துக்கு
இசைவளிக்கிறாள். ஆயினும் ஏதோ ஒரு கணத்தில் அந்தப் பிழையை அவள் உள்ளுணர்வு நுட்பமாக
உணர்ந்துகொண்டதால், தன் உயிரைத் தானே போக்கிக்கொண்டு விடுதலையடைகிறாள்.
சுயநல நோக்கு ஒரு மனிதனை எந்த அளவுக்குக் கீழ்மை கொண்டவனாகத்
தகவமைக்கும் என்பது முக்கியமான கேள்வி. அந்தக் கேள்விக்கு ஒரு விடையாகத்தான் ஷண்முகசுந்தரம்
அறுவடையை நமக்கு அளித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
இந்தக் கேள்வியை ஒட்டி யோசிக்கும்போது, பள்ளிப்பருவத்தில் நான்
படித்த ஒரு தேவதைக்கதை நினைவுக்கு வருகிறது. ஒரு நாட்டை ஓர் அரசர் ஆட்சி செய்துவந்தார்.
அவர் பெரிய சுயநலக்காரர். தன்னுடைய மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயங்காதவர். பிறர் அனைவரும் தன்னைத் திருப்திப்படுத்தும் வகையில்
நடந்துகொள்ள வேண்டும், தனக்குத் திருப்தியளிக்கும் வகையில் பேசவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும்
அவருக்கு இருந்தது. எதிர்பார்த்தபடி நடந்துகொள்ளவில்லை
என்றால் அவர்களைத் தண்டிக்கவும் அரண்மனையைவிட்டு வெளியேற்றவும் அந்த அரசர் தயங்குவதில்லை.
அரண்மனையில் பணிபுரிகிற அமைச்சர் முதல் ஏவலாளர்கள் வரை அனைவரும்
அரசருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயலாற்றுவதையே தன் கடமையென நினைத்து நடந்துவந்தனர்.
நியாய உணர்ச்சியைவிட தினசரி வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதே முக்கியம் என்கிற எண்ணத்தில்
அவர்கள் மூழ்கியிருந்தனர்.
ஒருநாள் இரண்டு நாடோடிகள் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். அந்த
ஊர் சத்திரத்தில் இரண்டு நாட்கள் தங்கி, ஊரையெல்லாம் சுற்றிப் பார்த்தனர். அரசரைப்பற்றிய
செய்திகளையும் தெரிந்துகொண்டனர். இப்படிப்பட்ட அரசருக்கு நல்ல புத்தி வரும் வகையில்
ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர்.
அடுத்த நாள் காலையிலேயே அரண்மனைக்குச் சென்று அரசரைச் சந்தித்தனர்.
காசி நகரத்து நெசவாளர்கள் என தம்மை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டனர். நல்ல கலைவேலைப்பாடோடும்
உயர்ந்த தரத்தோடும் அரசருக்குப் பொருந்தும் விதத்தில் ஆடை தயாரித்துக் கொடுக்க தமக்கு
ஒரு வாய்ப்பை அளிக்கவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டனர்.
அவர்களுடைய பணிவு அரசரை மகிழ்ச்சியடையச் செய்தது. ”எவ்வளவு காலம்
ஆகும்?” என்று அரசர் அவர்களிடம் கேட்டார். “ஒரு ரெண்டுமாத காலத்தில் முடித்துவிடலாம்”
என்று அவர்கள் பதில் சொன்னார்கள். உடனே அவர்களுடைய திட்டத்துக்கு அரசர் சம்மதம் கொடுத்துவிட்டார்.
அவர்கள் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
நாடோடிகள் புதிய அறையில் தறியைப் பொருத்தி உண்மையிலேயே துணியை
நெய்வதுபோல நடித்தனர். நாள்முழுவதும் ஒலிக்கும் தறிச்சத்தத்தைக் கேட்டு, அனைவரும் புத்தாடை
தயாராவதாக நினைத்துக்கொண்டனர்.
ஒரு வாரத்துக்குப் பிறகு நெசவு வேலை எதுவரை நடந்திருக்கிறது
என்பதை அறிந்துகொள்ள அமைச்சர் அவர்களுடைய அறைக்கு வந்தார். தறிச்சத்தம் கேட்கிறதே தவிர, தறியில் எதுவுமே இல்லை.
அதைப் பார்த்து அமைச்சர் திகைத்து நின்றார். புத்திசாலிகளின் பார்வைக்கு மட்டுமே தாம்
நெய்யும் ஆடை தெரியும் என்றும் முட்டாள்களால் பார்க்கமுடியாது என்றும் அவர்கள் சொன்னார்கள்.
ஏதோ ஏமாற்றுவேலை நடக்கிறது என்று சொல்லிவிட்டு முட்டாள் பட்டம் வாங்குவதா அல்லது துணி
அழகாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு புத்திசாலி பட்டம் வாங்குவதா என்று அமைச்சர் ஒரு
கணம் யோசித்தார். அடுத்த கணமே புன்னகை ததும்பும் முகத்தோடு “ஆகா, அற்புதம். நல்ல கலை
வேலைப்பாடு. நம் அரசருக்குப் பொருத்தமான ஆடை. நான் இப்போதே அரசரிடம் சென்று தெரிவிக்கிறேன்”
என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினார்.
இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர்
அவர்களுடைய அறைக்குள் வந்து பார்ப்பதும், தம்மைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்காக
“அருமையாக இருக்கிறது, அழகாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டுச் செல்வதுமாக நடந்தது.
குறிப்பிட்ட ஒரு நாளில் நெசவாளர்கள் அரசரைச் சந்தித்து ஆடை தயாராகிவிட்டது
என்று தெரிவித்தார்கள். அரசர் அவர்களிருவரையும் மனம் திறந்து பாராட்டினார். ”இந்த ஆடையில்
ஒரு சிறப்பம்சம் இருக்கிறது அரசரே. இது புத்திசாலிகளின் பார்வைக்கு மட்டுமே அதன் அழகும்
கலைவேலைப்பாடும் தெரியும். முட்டாள்களின் பார்வைக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்கள்
நெசவாளர்கள். “அரண்மனைக்குள் அனைவரும் அதைப்பற்றி பேசுவதைக் கேட்டேன்” என்று தன் மகிழ்ச்சியைத்
தெரிவிக்கிறார் அரசர்.
அடுத்தநாள் நெசவாளர்கள் புத்தாடையை ஒரு தட்டில் வைத்து ஏந்தி
வருவதுபோல ஒரு தட்டை ஏந்தி வந்தனர். அந்தத் தட்டில் எதுவுமே இல்லை. ஆயினும் முட்டாள்
பட்டம் தம்மைத் தேடி வந்துவிடக் கூடாது என்பதால் அவையில் இருந்தவர்கள் அனைவரும் “ஆகா, அற்புதம், அழகு”
என்று விதம்விதமாக வர்ணித்து மகிழ்ந்தனர். சிலர் சற்றே முன்னகர்ந்து அந்த ஆடையைத் தொட்டுப்
பார்ப்பதுபோல தொட்டுப் பார்த்து மென்மையாக இருப்பதாகவும் சொன்னார்கள்.
நெசவாளர்கள் அரசரைத் தனியறைக்கு அழைத்துச் சென்று அவருடைய பழைய
ஆடைகளை விலக்கிவிட்டு, அந்தப் புத்தாடையை அணிவிப்பதுபோல
பாவனை செய்தனர். பிறகு ஒரு கணம் விலகிவந்து வெவ்வேறு கோணங்களில் அவரை நின்று பார்த்து
“அருமை. அற்புதம். புத்தாடை உங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்திவிட்டது” என்று சொல்லிவிட்டு
அரசரை சபைக்கு அழைத்து வந்தனர். அனைவரும் எழுந்து நின்று அரசரின் புத்தாடை அற்புதமான
வேலைப்பாடோடு இருப்பதாகப் பாராட்டி கைதட்டினர்.
நெசவாளர்கள் அரசரை ஒரு தேரில் நிற்கவைத்து நகர்வலம் அழைத்துச்
சென்றார்கள். அதற்கிடையில் ‘புத்திசாலி, முட்டாள்’ விவகாரம் நகரமெங்கும் பரவிவிட்டது.
அதனால் ஊர்வலத்தில் அரசரைப் பார்த்த ஒவ்வொருவரும் தண்டனைக்கு அஞ்சி “அற்புதமான ஆடை”,
”அரசருக்குப் பொருத்தமாக இருக்கிறது” என்றெல்லாம் பாராட்டி மகிழ்ந்தனர்.
இரண்டுமூன்று தெருக்களைக் கடந்த பிறகு ஒரு திருப்பத்தில் ஒரு
மரத்தடியில் புளியம்பழம் பொறுக்கிக்கொண்டிருந்த
ஒரு விளையாட்டுச் சிறுவன் வாழ்த்து முழக்கத்தோடு தன்னைக் கடந்துசெல்லும் ஊர்வலத்தை
ஒருகணம் திரும்பிப் பார்த்தான். அரசர் துணியில்லாத அம்மணக்கோலத்தில் நெஞ்சை நிமிர்த்தியபடி
தேரில் நின்று கையசைப்பதைப் பார்த்து அச்சிறுவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. உடனே
கைதட்டி சிரித்தான். “ஐயையோ, ராஜா உடம்புல துணியே இல்லை. ராஜா உடம்புல துணியே இல்லை”
என்று சொல்லிக்கொண்டே துள்ளித்துள்ளி ஓடினான்.
அவனுடைய சொற்கள் அரசர் உட்பட ஊர்வலத்தில் இருந்தவர்கள் அனைவருடைய
காதிலும் விழுந்தது. ஆயினும் முட்டாள் பட்டத்துக்கு அஞ்சி தம் காதில் எதுவுமே விழவில்லை
என்பதுபோல அந்த ஊர்வலம் அந்த இடத்தைக் கடந்துபோனது.
அந்த நாட்டுப்புறக் கதையில் அரசர் நிர்வாணக்கோலத்தில் இருக்கிறார்
என்பதை வாய்திறந்து சொல்ல ஒரே ஒரு சிறுவனாவது இடம்பெற்றிருந்தான். ஆனால் அறுவடை நாவலில்
சின்னப்ப முதலியார் திருமணத்தை ஏற்பாடு செய்கிற, அதில் கலந்துகொண்டு வாழ்த்த வந்திருக்கிற
கூட்டத்தினரின் சுயநலத்தைச் சுட்டிக்காட்ட ஒருவரும் இல்லை என்பது மிகப்பெரிய துரதிருஷ்டம்.