ஆர்.ஷண்முகசுந்தரம் என்னும் நாவலாசிரியர் 1960இல் எழுதி வெளிவந்த நாவல் அறுவடை. கீரனூர் வட்டாரத்தில் பெரிய பண்ணையாராக இருக்கும் சின்னப்ப முதலியாரின் கதைதான் நாவலின் உள்ளடக்கம். பண்ணையார் நல்ல ஊக்கமுள்ள உழைப்பாளி. தொடங்கும் ஒவ்வொரு செயலையும் வெற்றிகரமாக முடிக்கும் வேகம் நிறைந்தவர். சாதாரணமான வேலங்காட்டை மிகக்குறைச்சலான விலைக்கு வாங்கி கிணறு வெட்டி பாசனம் செய்து நான்கே ஆண்டுகளில் பூவும் பிஞ்சுகளும் காய்களுமாக காய்த்துக் குலுங்கும் பருத்தித் தோட்டமாக மாற்றிக்காட்டும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அந்த உழைப்பாளி அடையாளம் அவருடைய ஒரு பக்கம் மட்டுமே. மற்றொரு பக்கத்தில் அவர் பெண்சபலம் நிறைந்தவர். தன் ஒரு பக்க வெற்றியால் இன்னொரு பக்க கேவலங்களைப் பொருட்படுத்தாமல் தன் போக்கில் வாழ்கிறார் அவர்.