Home

Sunday, 4 July 2021

ஒரு பழைய நாவலும் ஒரு புதிய நாவலும் - கட்டுரை

 

ஆர்.ஷண்முகசுந்தரம் என்னும் நாவலாசிரியர் 1960இல் எழுதி வெளிவந்த நாவல் அறுவடை. கீரனூர் வட்டாரத்தில் பெரிய பண்ணையாராக இருக்கும் சின்னப்ப முதலியாரின் கதைதான் நாவலின் உள்ளடக்கம். பண்ணையார் நல்ல ஊக்கமுள்ள உழைப்பாளி. தொடங்கும் ஒவ்வொரு செயலையும் வெற்றிகரமாக முடிக்கும் வேகம் நிறைந்தவர். சாதாரணமான வேலங்காட்டை மிகக்குறைச்சலான  விலைக்கு வாங்கி கிணறு வெட்டி பாசனம் செய்து நான்கே ஆண்டுகளில் பூவும் பிஞ்சுகளும் காய்களுமாக காய்த்துக் குலுங்கும் பருத்தித் தோட்டமாக மாற்றிக்காட்டும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அந்த உழைப்பாளி அடையாளம் அவருடைய ஒரு பக்கம் மட்டுமே. மற்றொரு பக்கத்தில்  அவர் பெண்சபலம் நிறைந்தவர். தன் ஒரு பக்க வெற்றியால் இன்னொரு பக்க கேவலங்களைப் பொருட்படுத்தாமல் தன் போக்கில் வாழ்கிறார் அவர்.

நாவல் அந்தத் தந்திரத்தை அடையாளம் காட்டினாலும் அதன்மீது நிற்கவில்லை. மாறாக, அவர் வழியாக தனக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்துப் பிழைகளையும் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லும் மற்றவர்களின் தந்திரத்தின் மீது நிற்கிறது.

நாற்பது வயதில் முதலியார் தன் மனைவியை இழந்தார். அப்போது அவருக்கு இரு பெண்கள்,  ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள். ஆனால் பெண்துணையை மட்டும் அவரால் உதற முடியவில்லை. அடுத்து வந்த முப்பது ஆண்டுகளில் வெளிப்படையாகவே அவ்வப்போது அவர் பல பெண்களைச் சேர்த்துக்கொள்வதும்  குடும்பம் நடத்துவதும் பிறகு விரட்டுவதும் வாடிக்கையாக நிகழும் செயல்கள். எங்கும் ஒரு சின்ன எதிர்ப்புக்குரல்கூட எழுவதில்லை. கல்யாண வயசில் பேரப்பிள்ளைகள் நடமாடுகிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவருக்கு பொருட்படுத்துவதில்லை. அவராகவே குடும்பத்திலிருந்து விலகி தோட்டத்திலேயே ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு தனியாக வாழ்க்கை நடத்துகிறார்.

அவர் செய்வதை தவறு என சுட்டிக்காட்ட அந்தக் குடும்பத்தில்  ஒருவரும் இல்லை. ஊரிலும் யாருமில்லை. எல்லோருமே அவரைச் சார்ந்து வாழ்பவர்கள். அவருடைய சொத்து மீது எல்லோருக்குமே ஒரு கண் இருக்கிறது. அது தப்பு, இது தப்பு என நெறி சார்ந்து எதையாவது சுட்டிக்காட்டி எதிர்நிலை எடுப்பதன் வழியாக தனக்குச் சேரவேண்டிய பங்கை இழந்துவிடுவோமோ என அஞ்சுகிறார்கள். அதனாலேயே அவர் மீது மதிப்பு கொண்டவர்கள்போல நடிக்கிறார்கள்.

கருப்பண்ண முதலியார் என்றொருவர் அதே ஊரில் இருக்கிறார். அவர் சின்னப்ப முதலியாருக்கு திருமண ஆசையை ஊட்டுகிறார். எழுபது வயசுள்ள ஆளை இளைஞர் என்று நாக்கூசாமல் பொய் சொல்கிறார். அவ்வப்போது ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு வாழ்வதைவிட, நிரந்தரமாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள்ளும் யோசனையை சின்னப்ப முதலியாரின் நெஞ்சில் அவர்தான் முதன்முதலாக தந்திரமாக விதைக்கிறார். வயதை முன்னிட்டு சற்றே தயக்கம் காட்டுபவரை ஏராளமான பொய்க்கதைகளைச் சொல்லி ஒப்புக்கொள்ளவைக்கிறார். பொருத்தமான பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைக்கும் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்து அவருடைய தயக்கத்தைத் தகர்த்தெற்கிறார். அக்கணம் முதல் முதலியாரின் நெஞ்சில் ஆசை நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது.

சின்னப்ப முதலியாரின் திருமணத்தின் மீது கருப்பண்ண முதலியார் காட்டும் ஈடுபாட்டுக்கும் சுறுசுறுப்புக்கும் காரணம் பற்றோ, பாசமோ அல்ல. அற்பத் தன்னலமே அதற்கும் காரணம். திருமண முயற்சி என்கிற பெயரில் அவ்வப்போது தன் செலவுக்குப் பணம் வாங்கிக்கொள்வது ஒரு திட்டம். முதலியாரின் திருமணத்துக்கு நகை எடுக்கச் செல்லும்போதும் துணிமணிகள் எடுக்கச் செல்லும்போதும் எதிர்காலத்தில் தன் பிள்ளையின் திருமணத்துக்குத் தேவையான நகைகள், துணிமணிகள், பலசரக்குச் சாமான்கள் எல்லாவற்றையும் ரகசியமாக வாங்கி வைத்துக்கொள்வது என்பது இன்னொரு திட்டம். வறுமைச்சூழலைப் பயன்படுத்தி தனக்குப் பழக்கமான நண்பனின் குடும்பத்தை தன் வலையில் வீழ்த்தவும் அவர் தயங்கவில்லை. அந்த நண்பன் நாச்சிமுத்துவோ பணத்துக்காக தன் சொந்த மகளான தேவானையிடம் நாடகமாடி பொய்சொல்லி திருமணத்துக்கு உடன்பட வைக்கிறான்.

எழுபது வயதுள்ள முதலியாருக்கும் இருபதும் நிறையாத தேவானைக்கும் திருமணத்தை நிச்சயித்துவிடுகிறார்கள்.  இந்தப் பொருந்தாத் திருமணம் ஏன் நடக்கிறது என்று அங்குள்ள ஒருவரும் வாய்திறந்து கேட்கவில்லை. முதலியாரின் பிள்ளைகள் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை.  அவர்களுக்குள் நிகழும் உரையாடலில் கூட அதைப்பற்றி பேசுவதில்லை.  ஒவ்வொருவரும் புத்தாடைகளை அணிந்துகொண்டு திருமண வேலைகளைக் கவனிக்கிறார்கள். அந்தப் பெண்ணை மனமாரக் காதலித்த முதலியாரின் பேரன் கூட அந்தச் சதித்திட்டத்துக்கு எதிராக வாய் திறப்பதில்லை. அவள் தன் தாத்தாவுக்கு மனைவியாக வருவது ஏதோ ஒரு வகையில் தனக்கும் தோதாகவே இருக்குமென்று தப்புக்கணக்கு போடுகிறான் அவன். அந்தப் பெண்ணின் கண்ணீரைப்பற்றி ஒருவரும் கவலைப்படவில்லை. இன்று அவசரப்பட்டு வாயைத் திறந்து எதையாவது பேசி, நாளைக்கு கிடைக்கவிருக்கிற சொத்துப்பங்கை ஏன் இழக்கவேண்டும் என எல்லோருடைய மனத்திலும் ஒரு கணக்கு ஓடுகிறது, அதுவே அனைவரையும் உண்மையை நேருக்கு நேர் பார்க்கவிடாமல் செய்கிறது.  ஒரு பிழையை பிழை என சொல்லும் நேர்மையை இழந்தவர்களாக ஒவ்வொருவரும் நிற்கிறார்கள். பணத்திலும் சொத்திலும் கிடைக்கக்கூடிய பங்கு பற்றித்தான் ஒவ்வொருவரும் அக்கறை கொண்டிருக்கிறார்களே தவிர, நெறி சார்ந்தும் உண்மை சார்ந்தும் ஒருவருக்கும் அக்கறை இல்லை. சொத்து மீது கொண்ட ஆர்வம் அனைவருடைய கண்களையும் மறைக்கிறது.

அறுவடை என்பது பொதுவாக விதைத்து, பாடுபட்டு, வளர்த்து, காத்திருந்து காலத்தால் கனிந்துவரும் விளைச்சலை அறுத்துக் குவிக்கும் செயலைக் குறிப்பதற்கு பயன்படுத்தும் சொல்லாகும். ஆனால் ஆர்.ஷண்முகசுந்தரம் அந்தப் பொருளில் அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை. மாறாக, தக்க தருணத்துக்குக் காத்திருந்து எடுத்துச் செல்லவிருக்கிற சொத்துப்பங்கை அடையாளப்படுத்தும் சொல்லாக பயன்படுத்துகிறார். விதைக்காமலேயே அறுத்துச் செல்லும் அறுவடை. பாடுபடாமலேயே பெறும் பலன். அந்த அறுவடைக்கு எந்தக் குறையும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொருவரும் அமைதி காக்கிறார்கள். நூற்றுக்கு நூறு சதவீதம் தவறு என்று தெரிந்தபோதும் தடுத்துப் பேச சொல்லில்லாமல் பார்த்தும் பார்க்காதமாதிரி அமைதி காக்கிறார்கள்.

தாலி கட்டுவதற்கு இன்னும் சில நொடிகளே பாக்கியிருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக மணமகனான சின்னப்ப முதலியார் இறந்துவிடுகிறார். அவர் தன் வாழ்நாள் முழுதும் தேடிவைத்த சொத்து முழுமையும் அதுவரை அவரைச் சுற்றி வாழ்ந்தர்கள் முன்னிலையில் அறுவடைக்காகக் காத்திருக்கிறது. அனைவராலும் வஞ்சிக்கப்பட்டு மணக்கோலம் பூண்டு மணமேடைக்கு வந்துவிட்ட அந்தக் கன்னிப்பெண் தேவானை இன்னொரு பக்கம் காத்திருக்கிறாள். இந்தச் சிக்கல்களைத் தீர்க்க எப்படிப்பட்ட முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் எடுக்கப்போகிற முடிவைவிட, அதுவரை ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் எடுத்த முடிவுகளையே பிரதானமாக அடையாளப்படுத்துகிறது நாவல். மனிதர்களின் அவசரங்களுக்குப் பின்னணியாக இருக்கும் ரகசியமான தன்னலத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. சின்னப்ப முதலியாரின் மகள்கள் கூட தன் தந்தையின் விவேகமற்ற செயலால் பாதிக்கப்படும் பெண்ணின் எதிர்காலம் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. பெண்ணாக இருந்தும் மற்றொரு பெண்ணின்  துன்பம் பற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. தன்னலம் அவர்களுடைய கண்களை மறைத்துவிடுகிறது.

அறுவடை வெளிவந்து நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு 2017இல் வெளிவந்த நாவல் காச்சர்கோச்சர். இதன் மூல ஆசிரியர் கன்னட எழுத்தாளரான விவேக் ஷான்பாக். தமிழில் மொழிபெயர்த்தவர் கே.நல்லதம்பி. தன்னலத்தையே மூச்சாகக் கொண்ட மற்றொரு குடும்பத்தின் சித்திரத்தை இந்த நாவல் முன்வைத்திருக்கிறது.

காச்சர்கோச்சர் என்பது பொதுப்புழக்கத்தில் உள்ள சொல்லல்ல. மனைவியோடு தனித்திருக்கும் கணவன், பிரிக்கமுடியாத பாவாடை நாடாவின் முடிச்சைக் கண்டு பேச்சுப்போக்கில் உருவாக்கிய ஒரு சொல். சிடுக்கு என்பது அதன் பொருள். ஒருவகையில் நாவலின் பேசுபொருளே இப்படிப்பட்ட சிடுக்குகள்தான்.

இளைஞனொருவனின் மனைவி அவன் மீது கோபம் கொண்டு திடீரென அவனைவிட்டு வெளியேறிவிடுகிறாள். அவர்களிருவருக்கும் இடையில் உருவான சிடுக்கை விடுவித்து, அவளை எப்படி அமைதிப்படுத்தி வரவழைப்பது என்று புரியாமல் ஒரு காபி கிளப்பில் குழப்பத்துடன் அமர்ந்து யோசனையில் மூழ்குகிறான் அந்த இளைஞன். தனக்கும் தன் மனைவிக்கும் இடையிலான சிடுக்கைப்பற்றி யோசிக்கத் தொடங்கியவன் தன் குடும்பத்தில் அடுக்கடுக்காக விழுந்து கிடக்கும் ஏராளமான சிடுக்குகளை யோசித்துப் பார்க்கிறான். ஒவ்வொரு சிடுக்குக்கும் பின்னால் ஒரு கதை. எந்தச் சிடுக்கையும் நேர்செய்ய முயற்சி செய்யாமல் மீண்டும் மீண்டும் சிடுக்குகளை உருவாக்கியபடியே அவர்கள் வாழ்க்கை அத்தனை ஆண்டுகளையும் கடந்துவந்திருப்பதை திகைப்புடன் நினைத்துக்கொள்கிறான்.

அவர்களுடைய குடும்பம் கீழ் நடுத்தரப்பிரிவைச் சேர்ந்த ஒன்று. அந்த வீட்டின் சுவரோரமாக எறும்புகள் எப்போதும் சாரைசாரையாகச் சென்றுகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையிலிருந்து விலகி ஓடிவரும் எறும்புகள் திசைதெரியாமல் அலைந்து மனிதர்கள் கண்ணில் பட்டு நசுக்குண்டு உயிரை விடுகின்றன. அவன் அம்மாவுக்கு எறும்புகளைத் தேடித்தேடிக் கொல்வது ஒரு வேலையாகவே இருக்கிறது.

எறும்புகளின் சித்திரம் மிகக்குறைவான வரிகளில் வந்து போனாலும், நாவலின் அமைப்பைப் புரிந்துகொள்ள அச்சித்திரம் மிகவும் உதவியாக உள்ளது. எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கிக்கொள்ளும் எறும்புக்கூட்டம் சட்டென ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு ஒரு பந்தாகத் திரண்டு அந்த ஓட்டத்தில் தரை தென்படும் வரை பிழைத்திருக்கும்.  பிறகு வரிசையில் சென்று பிழைத்துக்கொள்ளும். ஒட்டிக்கொண்டிருக்கும் வாழ்க்கையிலும் சரி, வரிசையில் செல்லும் வாழ்க்கையிலும் சரி கூட்டமாக இருப்பது அதற்கு ஒரு பாதுகாப்பு.

எறும்புகளை அவ்விதமாக சித்தரிப்பதே, மனிதர்கள் அவ்விதமாக வாழமுடியுமா, அப்படியே வாழ நேர்ந்தாலும் அந்த வாழ்க்கை பெருமைக்குரிய வாழ்க்கையாக இருக்குமா, எறும்பையும் மனிதனையும் வேறுபடுத்தும் பகுத்தறிவுக்கு வாழ்க்கையில் இருக்கும் பங்கு என்ன என்பதுபோன்ற பல கேள்விகளை எழுப்பி நாம் விடை தேடவேண்டும் என்பதற்காக என்று தோன்றுகிறது.

குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய அப்பா முதுகெலும்பில்லாத தன் விட்டேத்தியான குணத்தால் சோறு கிடைக்குமிடமே சொர்க்கமென அமைந்துவிட்ட வாழ்க்கையில் அமிழ்ந்து கிடக்கிறார். தினசரி செலவுகளுக்குப் பணம் கிடைத்தால் போதும், அது வந்த வழியைப்பற்றிய யோசனைக்கு ஒருபோதும் இடம்தராதவளாக இருக்கிறாள் அம்மா. இயற்கையாக அமைந்துவிட்ட சோம்பல் குணத்தால் திருமணமான பின்னும் புகுந்த வீட்டுக்குச் செல்லாமல் அம்மாவோடு சேர்ந்து வாழும் அக்கா. அந்தக் குடும்பத்தையே தன் வருமானத்தால் தாங்கி நிற்கிறது சித்தப்பா பாத்திரம். அவர் நடத்தும் நிறுவனத்தில்தான் வருமானத்துக்காக அந்த இளைஞனும் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறான். எல்லோருக்குமாக அந்தச் சித்தப்பா சம்பாதித்துக் கொடுக்கிறார். அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் எறும்புகளைப்போல ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு ஆண்டுக்கணக்கில் வாழ்கிறார்கள். அந்தச் சித்தப்பா தவறான வழிகளில் பணமீட்டுகிறார் என்று தெரிந்த போதும் ஒட்டுண்ணி வாழ்க்கைக்குப் பழகிவிட்ட அவர்களில் ஒருவரும் அதைத் தட்டிக் கேட்பதில்லை. கண்டும் காணாததுபோல இருக்கிறார்கள்.

வெங்கடாசலம் சித்தப்பா மறைமுகமாக ஒரு பெண்ணோடு தொடர்புகொண்டிருக்கிறார். அந்த உறவைப்பற்றிய உண்மை தெரிந்தும் கூட அக்குடும்பத்தினர் அவரிடம் எதையும் விசாரிப்பதில்லை. அதைப்பற்றிய பேச்சையே எடுப்பதில்லை. அவர் கட்டிய புதிய வீடு, அதன் வசதிகள் போன்றவற்றிலேயே திளைத்திருக்கிறார்கள். அவர் கைவிட்டு வந்த பெண் திடீரென ஒருநாள் வீட்டு வாசலேறி வந்து அவரைப் பார்க்க விரும்பும்போது அவர் வீட்டில் இல்லை என்று பொய்யுரைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. விவாதம் நீண்டு செல்லும்போது இரக்கமே இல்லாமல் அவளை குடும்பமே சேர்ந்து வெளியேற்றுகிறது. அக்கா தன் கணவனை அடிப்பதற்கு ஆட்களை ஏவுகிறாள். இரவு நேரத்தில் சுதந்திரமாக வெளியே சென்று தங்கிவிட்டு வருகிறாள். எல்லாவற்றுக்கும் சித்தப்பா உதவி செய்கிறார். அப்பாவோ அம்மாவோ ஒருவரும் அதைப்பற்றி கேள்வி கேட்பதில்லை.

ஆனால் அந்த இளைஞனின் புதுமனைவியாக அந்த வீட்டுக்குக் குடிவந்த இளம்பெண் அனிதா அக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவர்களுடைய செயல்களைக் கண்டிக்கிறாள். அவள் கேள்வி அச்சூழலில் ஒருவித ஒவ்வாமையை அளிக்கிறது. அவர்களுடைய தன்னலப்போக்குகளை தினந்தினமும் பார்த்தபடி தொடர்ந்து அங்கு வாழ அவளால் முடியவில்லை. அதனால் அக்குடும்பத்திலிருந்தே விரைவில் வெளியேறிவிடுகிறாள்.

தன்னலத்தின் ஆற்றல் எத்தகையது என்பதை அவர்களுடைய குடும்பக்காட்சிகள் அழகாகச் சித்தரிக்கின்றன. பிழைகளையும் கோணல்களையும் முதலில் அவர்கள் மனம் சகித்துக்கொள்கிறது. பிறகு கண்டும் காணாமல் இருக்க பழகிவிடுகிறது. அடுத்து, ’அதனால் என்னஎன்னும் எண்ணம் மேல்ழுகிறது. தொடர்ந்துஉலகத்தில் இல்லாததா இங்கு நடந்துவிட்டதுஎன்று தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொள்கிறது. இறுதியில் அதில் ஒன்றும் பிழையே இல்லை என்ற நிலைபாட்டுக்கு வந்து சேர்கிறது. மதிப்பீடுகளில் ஏற்படும் பிறழ்வு அவர்களுடைய வாழ்க்கையின் செல்திசையையே மாற்றிவிடுகிறது. குற்ற உணர்ச்சி என்பதே யாருக்கும் இல்லாத நிலை ஏற்படுகிறது.

வேறு வழியில்லாமல் பணமீட்டுபவனைச் சார்ந்திருக்கும் ஒரு அமைப்பாக மாறி நிற்கிறது குடும்பம். ஒட்டுண்ணி வாழ்க்கையில் கிட்டும் சுகம் மெல்ல மெல்ல குடும்ப உறுப்பினர்களின் மனத்தில் முதலில் ஒரு திரிபை உருவாக்கி, பிறகு கொஞ்சம்கொஞ்சமாக அதையே இயல்பான ஒன்றாக நிலைத்து நிற்கவைத்துவிடுகிறது. அதுவே தன்னலத்தின் உச்சம். திரிபே இயல்பான பிறகு ஒட்டுண்ணி வாழ்க்கையே உத்தமமான வாழ்க்கையாக மாறிவிடுகிறது. திருமணத்தின் வழியாக தனக்குக் கிடைத்த புதுவாழ்க்கையை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதவேண்டிய அக்கா எதிர்பாராத விதமாக பழகிவிட்ட  ஒட்டுண்ணி வாழ்க்கைக்கே மீண்டும் வந்து அந்தச் சேற்றில் அமிழ்ந்துகொள்கிறாள். திரிபே இயல்பாக மாறியதன் விளைவு அது. மீண்டும் திரிபுநிலையிலேயே திளைத்திருக்க நினைக்கிறது.

சித்தப்பாவுக்கும் இதே நிலைமைதான். அவருக்கு நல்ல நிலையான வருமானம் இருக்கிறது. அவருக்கு அதிர்ஷ்டவசமாக நல்ல காதலி கிடைக்கிறாள். அவர் நினைத்திருந்தால் அவரால் அவளோடு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு எங்கோ தனியாக அமைதியாக வாழ்ந்திருக்கமுடியும். அவருக்கு காலமே ஒரு நல்ல வாய்ப்பை அப்படி அமைத்துக்கொடுக்கிறது. ஆனால் சிறிதுகாலம் மட்டுமே அவளோடு ரகசியவாழ்க்கையை வாழ்ந்துவிட்டு அவரும் மீண்டும் அந்தக் குடும்பத்தை நோக்கித் திரும்பிவந்து அவர்களிடையே மறைந்துகொள்வது புரியாத புதிர். அவராலும் அந்தத் திரிபிலிருந்து மீண்டும் வரமுடியவில்லை. ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு உருண்டுருண்டு செல்லும் எறும்புப்பந்துபோல அக்குடும்பம் உருண்டுகொண்டே இருக்கிறது. உயிர்த்திருக்கிறோம் என்னும் எண்ணமே அவர்களுக்கு நிறைவை அளிக்கிறது. அதற்கு மேல் மதிப்பீடு, உயர்வு, மேன்மை போன்றவற்றைப்பற்றி எந்த யோசனையும் இல்லை.

முழுக்க முழுக்க தன்னலங்களால் நிறைந்த  மனிதர்களைக் கொண்ட குடும்ப அமைப்பின் ஒற்றுமையை வெவ்வேறு நாவல்களில் தற்செயலாக உணர்ந்தபோது புதிராக இருந்தது. அறுவடையில் தேவானையும் காச்சர் கோச்சரில் அனிதாவும் மட்டுமே அந்தத் தன்னலத்தைக் கண்டு அருவருப்பால் முகம் சுளிக்கிறார்கள். தன் அருவருப்பை வெளிப்படுத்த தேவானைக்கு வாய்ப்பே இல்லை. தந்தையின் பாசத்துக்குக் கட்டுப்பட்டு அமைதியாக நின்றுவிடுகிறாள். ஆனால் அனிதா துணிவு மிக்கவள். கல்வி கற்றவள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசும் ஆற்றலும் முனைப்பும் உள்ளவள். அதனால் கண்ணால் கண்ட கணத்திலேயே அருவருப்பை வெளிப்படுத்துகிறாள். தன் தரப்புக்கு இடமில்லை என்று உணர்ந்த கணமே புகுந்த வீட்டிலிருந்து வெளியேறவும் அவள் தயங்கவில்லை. அவற்றை அவள் தன் உரிமைகளாக நினைக்கிறாள். அருவருப்பை வெளிப்படுத்துவதற்கும் வெளியேறுவதற்குமான உரிமை. அந்த எண்ணமே அவளைச் செயல்படத் தூண்டுகின்றன. தேவானை, அனிதாவாக மாற்றமுற அறுபது ஆண்டு கால இடைவெளி தேவைப்பட்டிருக்கிறது. ஒருவேளை புற உலக எதார்த்த வாழ்க்கையில் இது முன்னமேகூட நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு தெளிவாக இலக்கியப்பரப்பில் நிகழ்வதற்கு அறுபது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை முதன்முதலாக காச்சர் கோச்சர் பதிவு செய்து தொடங்கிவைத்திருக்கிறது.

 

(உங்கள் நூலகம் – மே, ஜுன் 2021 இதழில் வெளிவந்த கட்டுரை )