கதராடைகளை அணியவேண்டிய தேவையைப்பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவும் கதர்ப்பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் நாடு தழுவிய ஒரு நெடும்பயணத்தை மேற்கொண்டார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு பீகார், மத்தியப்பிரதேசம் முழுதும் மூன்றுமாத காலம் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார். பிறகு பம்பாய் வழியாக கர்நாடகத்துக்கு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நிலை குன்றியது. ஏறத்தாழ நான்கு மாத காலம் அவர் கர்நாடகத்திலேயே தங்கியிருக்கவேண்டியிருந்தது.
அதற்குப் பிறகு 24.08.1927 அன்று
தமிழ்நாட்டுக்குப் புறப்பட்டார். வேலூர், ஆரணி, சென்னை, காஞ்சிபுரம்,
சிதம்பரம், மாயவரம், கும்பகோணம்,
தூத்துக்குடி, மதுரை என பல ஊர்களிலும்
மக்களைச் சந்தித்துவிட்டு வரும் வழியில் செப்டம்பர் மாத இறுதியில்
பாளையங்கோட்டைக்கு காந்தியடிகள் வரக்கூடும் என திருநெல்வேலித்தொண்டர்கள்
எதிர்பார்த்திருந்தார்கள். அப்போது அவரைச் சந்திக்கும்
ஆவலோடு பத்தொன்பது வயதான இளைஞரொருவர் காத்திருந்தார். காந்தியடிகளைச்
சந்தித்து வணங்கும்போது நேரிடையாக தன் கையாலேயே கதர்நிதியை அளிக்கவேண்டும்
என்பதற்காகவே வயதில் இளைய சிறுவர்களைக் கொண்ட அணியுடன் தினந்தோறும் ஊர்வலமாகச்
சென்று பொதுமக்களிடமிருந்து சிறுசிறு தொகையாக வசூல் செய்து ஏறத்தாழ
நூற்றியறுபத்தேழு ரூபாயைத் திரட்டியும் வைத்திருந்தார்.
தேசபக்தி அவருடைய நெஞ்சில் எட்டுவயது பருவத்திலேயே
அரும்புவிட்டிருந்தது. கூடியிருப்பவரைக்
கவர்ந்திழுக்கும் அருமையான குரல்வளம் கொண்டிருந்தார் அவர். மேடையில்
நின்று வந்தே மாதரமென்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம் என்று பாரதியார்
பாடலைப் பாடும்போது, அதைக் கேட்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு
நிற்பார்கள். இதற்காகவே காங்கிரஸ்காரரான வக்கீல் சாது கணபதி
பிள்ளை தான் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் அந்தச் சிறுவனை மேடையில் மேசைமீது
ஏற்றி நிற்கவைத்து பாடவைப்பார். நாளடைவில் அந்த ஈடுபாட்டின்
காரணமாக மிக இயல்பான வகையில் தேசபக்தியை நாடிச் சென்றது அவர் மனம்.
ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர்ந்து நாட்டில் அங்குமிங்கும்
உருவான சில கலவரங்களைக் காரணமாகக் காட்டி காந்தியடிகள் கைது செய்யப்பட்டதையொட்டி
ஊரில் அவ்வப்போது நடைபெற்ற கூட்டங்கள் வழியாக காந்தியடிகளைப்பற்றித் தெரிந்துகொண்ட
தகவல்கள் அவர் நெஞ்சில் தேசபக்தியைப் பெருக்கெடுத்தோடச் செய்தன. ஊருக்குள் அவ்வப்போது நடைபெறும்
கூட்டங்களில் சத்தியமூர்த்தி, வேலூர் வி.எம்.உபயதுல்லா சாயபு, கோடையிடி
குப்புசாமி முதலியார், பண்ருட்டி தெய்வநாயகம், எஸ்.என்.சோமயாஜுலு போன்ற
தலைவர்களின் உணர்ச்சியூட்டும் உரைகளைக் கேட்டுக்கேட்டு அந்த இளைஞரின் தேசப்பற்று படிப்படியாக
வளர்ந்தது. இந்தத்
தேசத்துக்காக தானும் ஏதேனும் ஒருவகையில் தொண்டாற்றவேண்டும் என்கிற வேகம் பிறந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக காந்தியடிகள் அலி சகோதரர்களோடு
சேலத்துக்கு வந்திருந்தபோது, அவரைப் பார்த்துவிட்டு வந்த தன்
சகோதரர் சொல்லச்சொல்ல தானும் அவரைச் சந்திக்கவேண்டும் என்ற விருப்பமும் ரகசியமாக
அவருக்குள் வளர்ந்தது. அதனாலேயே காந்தியடிகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தது அவர் மனம்.
பள்ளிப்படிப்பில் அவரால் ஆழ்ந்த கவனம் செலுத்த இயலவில்லை. பள்ளியிறுதித் தேர்வை இருமுறை எழுதியும்
அவருக்கு தோல்வியே கிடைத்தது. சொந்த வாழ்வின் வெற்றிக்குத் தேவையான கல்வியில் நாட்டமின்றி தேசப்பற்றின்
மீது நாட்டம் கொண்டு காந்தியடிகளின் வருகைக்காக காத்திருந்த அந்த இளைஞரின்
வேகத்தைக் கண்டு அவருடைய பெற்றோர் அஞ்சத் தொடங்கினர். எட்டு
பிள்ளைகள் கொண்ட அக்குடும்பத்தில் ஏற்கனவே ஒரு பிள்ளையைப் பறிகொடுத்திருந்த
அப்பெற்றோர் அவரை உடனடியாக வேறு திசையில் திருப்பவேண்டுமென திட்டமிட்டனர். இதனால் காந்தியடிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பேயே அவரிடம் நயமாகப்
பேசி ஒப்புக்கொள்ளவைத்து அவரை பம்பாயில் ரயில்வே துறையில் வேலைபார்த்துவந்த வேறொரு
சகோதரரிடம் அனுப்பிவைத்தனர். பெற்றோரின் சொல்லைத்
தட்டமுடியாத நிலையில், திரட்டிய நன்கொடையை மற்றொரு நண்பரிடம்
ஒப்படைத்துவிட்டு, காந்தியடிகளைப் பார்க்கமுடியாத
ஏமாற்றத்தைச் சுமந்தபடி பம்பாய்க்குப் பயணமானார் அந்த இளைஞர். அவர் பெயர் கிருஷ்ணன்.
பம்பாயில் கிருஷ்ணனுக்கு வீடுகட்டுமானப் பொருட்களை விற்பனை
செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சில
நாட்களுக்குள்ளேயே அந்த ஊரில் ஒரு நண்பரையும் அவர் கண்டடைந்தார். அவர் மன்னார்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். ரயில்வே
துறையில் செய்துவந்த வேலையிலிருந்து வெளியேறி காந்தியக் கருத்துகள் மீது கொண்ட
ஈடுபாட்டின் காரணமாக சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று, அங்கு
நிலவிய கட்டுப்பாடுகளுக்குத் தாக்குபிடிக்க முடியாமல் காந்தியடிகளிடம்
தெரிவித்துவிட்டு மீண்டும் பம்பாய்க்கே வந்து சேர்ந்தவர்.
அவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். காந்தியடிகளிடமிருந்து விலகியிருந்தாலும்
நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு சிறிதளவாவது தம்மால் முடிந்த சேவையை தேசத்துக்கு ஆற்றவேண்டும்
என இருவரும் யோசித்து முடிவெடுத்தனர். இருவரும் முதல் மாதச்
சம்பளத்தை வாங்கியதும், அந்த முழுத்தொகைக்கும் கல்பாதேவி
காதி பண்டாரில் கதராடைகளை வாங்கிவந்து அலுவலக நேரம் போக எஞ்சிய நேரங்களில்
தெருத்தெருவாகச் சென்று கூவி விற்கத் தொடங்கினர். சுதந்திரப்
போராட்டத்தில் கதர்ப்பயன்பாடு என்பது மிகமுக்கியமான
செயல்பாடு என உரைத்த காந்தியடிகளின் சொல்லே அவர்களை இயக்கும் விசையாக இருந்தது.
தினமும் ஐம்பது ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை அவர்கள் விற்பனை
செய்தார்கள். அந்த ஆண்டில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்
மதிப்புள்ள கதராடைகளை அவர்கள் விற்றார்கள். இருவரும் அந்த
விவரத்தை மிகவும் ஆர்வத்தோடு காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதித் தெரிவித்தனர்.
இருவரையும் பாராட்டி, காந்தியடிகளும் உடனடியாக
பதில் கடிதம் எழுதியிருந்தார். இரு இளைஞர்களுடைய
உற்சாகத்தையும் அக்கடிதம் பலமடங்கு பெருக்கிவிட்டது.
ஓராண்டுக்குப் பிறகு தன் தந்தையார் படுத்த படுக்கையாக
இருப்பதாக கிருஷ்ணனுக்குச் செய்தி வந்தது. அதனால் அவர்
அலுவலகத்துக்கு விடுப்பெடுத்துக்கொண்டு திருநெல்வேலிக்குத் திரும்பிவந்தார்.
சில நாட்களிலேயே கிருஷ்ணனின் தந்தையார் இயற்கையெய்தினார். சடங்குகள் எல்லாம்
முடிவடைந்ததும் கிருஷ்ணன் மீண்டும் பம்பாய்க்கே திரும்பினார். தன் துயரத்தை மறப்பதற்காக கூடுதலான வேகத்துடன் கதர் விற்பனையில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு நன்கு அறிமுகமான ஸ்ரீபாதசங்கர் என்னும்
நண்பர் கிராம சேவையில் ஆர்வம் கொண்டு, தன் வேலையைத்
துறந்து இராஜாஜி நடத்திவந்த திருச்செங்கோடு ஆசிரமத்துக்குச் சென்று சேர்ந்தார்.
அதைப் பார்த்ததும் கிருஷ்ணனுக்கும் கிராம சேவையில் ஈடுபடவேண்டும் என
ஆர்வம் பிறந்தது. உடனே அவர் தன் விருப்பத்தைத் தெரிவித்து
ஒரு நீண்ட கடிதத்தை இராஜாஜிக்கு எழுதினார். ஒரு வாரத்திலேயே இராஜாஜியிடமிருந்து
அவருக்கு ஒரு பதில் வந்து சேர்ந்தது. அதில் பம்பாயிலேயே டாடா
நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணையர் என்பவரைப் பார்க்கும்படி இராஜாஜி
குறிப்பிட்டிருந்தார். வேலை முடிந்த பிறகு ஒருநாள் மாலை
அவரைச் சென்று சந்தித்தார் கிருஷ்ணன். நீண்ட நேர
உரையாடலுக்குப் பிறகு கிருஷ்ணன் எடுத்திருக்கும் முடிவுக்காக பாராட்டி வாழ்த்தி
அனுப்பிவைத்தார். வீட்டுக்குத் திரும்பிய கிருஷ்ணன் தன்
சகோதரரிடம் வேலையை உதறிவிட்டு கிராமசேவையில் ஈடுபட விரும்பும் தன் திட்டத்தைத்
தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் தன் தாயாருக்கு கடிதம் எழுதி தகவலைத் தெரிவித்தார்.
கிருஷ்ணனின் முடிவும் வேகமும் அவருடைய தாயாருக்கு அச்சத்தை
ஊட்டியது. அதனால் எந்தக் காரணத்துக்காக
திருநெல்வேலியிலிருந்து பம்பாய்க்கு அவரை அனுப்பிவைத்தாரோ, அதே
காரணத்துக்காக எப்படியாவது பம்பாயிலிருந்து திருநெல்வேலிக்கே வரவழைத்துவிடவேண்டும்
என திட்டமிட்டார். தற்செயலாக 1929ஆம்
ஆண்டில் நடைபெற்ற உறவினர் வகையிலான திருமணத்துக்கு பம்பாயிலிருந்து வந்த கிருஷ்ணனை திரும்பச் செல்ல
அனுமதிக்கவில்லை. ஏறத்தாழ 21 மாதங்கள்
மட்டுமே அவருடைய பம்பாய் வாழ்க்கை நீடித்தது.
திருநெல்வேலியில் ரயில்வே துறையில் மேற்பார்வையாளராக
வேலைபார்த்துவந்த அவருடைய சகோதரர் தன் துறையிலேயே அவருக்கு ஒரு மேஸ்திரி வேலையை வாங்கிக்கொடுத்தார். விளாத்திகுளத்தில் அவர் வேலையில் இணைந்தார்.
ஆயினும் நிர்மாணத்தொண்டராக பணியாற்றும் வேகம் ஒரு கனலென தன்
ஆழ்மனத்தில் பெருகியபடியே இருந்ததை அவரால் நிறுத்திவைக்கமுடியவில்லை. திருநெல்வேலி கதர் வஸ்திராலயத்துக்குச் சென்று தன் சொந்தப் பணத்தில் கதராடைகளை
வாங்கிவந்து, ஓய்வுப்பொழுதில் தெருத்தெருவாகச் சென்று
விற்பனை செய்வதை ஒரு தினசரிக்கடமையாக வைத்துக்கொண்டார்.
ஒருநாள் கதர் வஸ்திராலயத்தில் விமோசனம் என்னும் பத்திரிகையை
வாங்கிவந்து படித்தார். திருச்செங்கோடு
காந்தி ஆசிரமத்திலிருந்து இராஜாஜியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பத்திரிகை அது.
மதுவின் தீமைகளைக் குறித்து அதில் வெளிவந்திருந்த படைப்புகள் அவரை
பெரிதும் கவர்ந்தன. மறுநாளே அந்தப் பத்திரிகைக்கு
ஆண்டுச்சந்தாவாக ஒரு ரூபாயை அனுப்பிவைத்தார். அப்போது
விமோசனம் சார்பாக சந்தா அனுப்பியதற்கு
நன்றி தெரிவித்து ரா.கிருஷ்ணமூர்த்தி என்கிற கல்கி, கிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்
இன்னும் சில சந்தாதாரர்களைச் சேர்த்து ஆதரவு அளிக்கும்படி குறிப்பிட்டிருந்தார்
அவர். உடனே கிருஷ்ணன் ஒரு மாதம் பாடுபட்டு ஊரில் பலரைச்
சந்தித்து எழுபத்தைந்து பேர்களிடம் சந்தாவைச் சேகரித்து அனுப்பிவைத்தார்.
1930இல் ஜனவரி மாதத்தில் திருச்செங்கோடு
ஆசிரமத்திலிருந்து கிருஷ்ணனுக்கு நூலஞ்சலில் முப்பது சுதந்திரப்பிரகடன அட்டைகளை
அனுப்பி, விற்று பணமாக்கித் தரவேண்டுமென்றும் சிறுசிறு
கூட்டங்களைக் கூட்டி மக்களிடையில் அந்தப் பிரகடன வாசகத்தைப் படிக்கவேண்டும்
என்றும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தார். அந்தச் சுதந்திரப்
பிரகடனத்தைப் படித்து ஊக்கம் கொண்ட கிருஷ்ணன் உடனடியாக ஒரு பொதுக்கூட்டத்தைத்
திரட்டினார். அந்தக்
கூட்டத்துக்கு உள்ளூர் காவல்துறையினர் உட்பட பலரும் ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டு
பிரகடனத்தை வாசித்தனர். அவர்களிடம் அட்டைக்கு ஒரு ரூபாய்
வீதம் வசூல் செய்து, அந்தத் தொகையை ஆசிரமத்துக்கு
அனுப்பிவைத்தார் கிருஷ்ணன்.
1930இல் காந்தியடிகள் தண்டி யாத்திரையைத்
தொடங்கினார். அதே மாதத்தில் 14.04.1930 அன்று திருச்சியிலிருந்து தொண்ணூற்றியெட்டு சத்தியாக்கிரகிகளோடு
வேதாரண்யத்தை நோக்கி ஒரு யாத்திரையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தார் இராஜாஜி.
அந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்
பத்திரிகையில் வெளிவந்தது. அப்பட்டியலில் பம்பாயில்
வசித்துவந்த காலத்தில் தன்னோடு சேர்ந்து கதர் விற்பனையில் ஈடுபட்டிருந்த நண்பர்
பாலகிருஷ்ணனின் பெயரையும் வேறு சில நண்பர்களின் பெயர்களையும் பார்த்துவிட்டு,
தானும் அந்தச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ள வேண்டுமென பெரிதும்
விரும்பினார் கிருஷ்ணன். உடனே அவர் மனம்
திருச்செங்கோட்டுக்குப் பறந்துசெல்ல விழைந்தது. தன் விருப்பத்தை அன்றே காந்தி
ஆசிரமத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு கடிதமெழுதித் தெரிவித்தார். ஆனால் சத்தியாகிரகிகளின் பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக
கிருஷ்ணனுக்குத் தெரிவித்தார் கிருஷ்ணமூர்த்தி. இறுதியில்
ஆசிரமத்திலாவது தன்னை சேர்த்துக்கொண்டு சேவையாற்றுவதற்கு தனக்கு ஒரு வாய்ப்பை
நல்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் கிருஷ்ணன். ஆசிரமத்தில் கடைபிடிக்கப்படும்
கடுமையான கட்டுப்பாடுகளைப்பற்றி பட்டியலிட்டுத் தெரிவித்து தன் முடிவை கிருஷ்ணன்
மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டார்.
நீண்ட கடிதப்போக்குவரத்துக்குப் பிறகு இறுதியாக இராஜாஜியின்
அனுமதி கிடைத்துவிட்டது என்றும் ஆசிரமத்துக்கு உடனே கிளம்பிவரலாம் என்று
கிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதினார் கிருஷ்ணமூர்த்தி. உடனே அவர் தன் சகோதரரின்
சம்மதத்தோடு அதுவரை பார்த்துவந்த வேலையிலிருந்து விலகி தாயாரின்
சம்மதத்தையும் பெற்றுக்கொண்டு 23.04.1930 அன்று
திருச்செங்கோட்டை அடைந்தார் கிருஷ்ணன். அச்சமயத்தில்
பெரும்பாலான சத்தியாகிரகிகள் வேதாரண்யம் சத்தியாக்கிரகத்தில் இருந்தனர். மிகக்குறைவான எண்ணிக்கையிலான தொண்டர்களே ஆசிரமத்தில் இருந்தனர். வெளியூர் சென்றிருந்த கிருஷ்ணமூர்த்தி இரு தினங்களுக்குப் பிறகே
ஆசிரமத்துக்குத் திரும்பினார். கிருஷ்ணனை பத்திரிகை
வேலைகளில் தன் உதவியாசிரியராக வைத்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.
ஆசிரமத்திலிருந்து விமோசனம் என்னும் பெயரில்
தமிழ்ப்பத்திரிகையும் PROHIBITION என்னும்
ஆங்கிலப் பத்திரிகையும் வெளிவந்தன. இரண்டு
பத்திரிகைகளுக்கும் இராஜாஜியே ஆசிரியர் என்றபோதும், கிருஷ்ணமூர்த்தியே
அவிரண்டு பத்திரிகைகளையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்
தனக்கு உதவியாளராக கிருஷ்ணனை வைத்துக்கொண்டர். அவர்
திருமணமாகாதவர் என்பதால் அவருக்கு இருபது ரூபாய் சம்பளம் தர முடிவெடுக்கப்பட்டது.
சத்தியாகிரகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் அரசு கைது செய்து
சிறையில் அடைத்தது. சத்தியாகிரகம் வெற்றிபெற வேண்டுமென்ற
நோக்கத்துடன் வெளியூர்களில் கூட்டம் போட்டு உரையாற்றிய கிருஷ்ணமூர்த்தியும் கைதாகி சிறைக்குச்
சென்றார். அச்சுவேலை முடிந்து ஆசிரமத்தை வந்தடைந்த
பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்பிவைக்கும் வேலையில் மூழ்கியிருந்தார் கிருஷ்ணன்.
அனைவரையும் ஈர்க்கும்வண்ணம் காலணா பிரசுரங்களாக பல
சின்னச்சின்ன புத்தகங்களை கிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது எழுதி வெள்யிட்டு வந்தார். சுயராஜ்ஜியம் ஏன், அன்னிய
ஆட்சி வேண்டாம், நாணய மாற்றுவிகிதம் என பல தலைப்புகளில் அவர்
எழுதிய பிரசுரங்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டு அச்சகங்கள்
அவற்றை அச்சிட அஞ்சியதாலும் போதிய நன்கொடைகளைப் பெறுவதில் சிரமமிருந்ததாலும்
பெங்களூரில் இருக்கும் அச்சகம் வழியாக அச்சடித்து எடுத்துவரும் நடைமுறை
கடைபிடிக்கபட்டு வந்தது. அனைவரும் சிறையில் இருந்த
காரணத்தால் அந்த வேலையைச் செய்யும் பொறுப்பை கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டு கையெழுத்து
பிரதிகளோடு பெங்களூருக்குப் புறப்பட்டார். மைசூர் காந்தி
என்றும் பிரும்மச்சாரி என்றும் பட்டப்பெயர்கள் வைத்து அழைக்கப்பெறும் தகடூர்
ராமச்சந்திர ராவ் என்பவர் மல்லேஸ்வரம் பகுதியில் நடத்திவந்த சேவாஸ்ரமத்தில் தங்கிக்கொண்டு அச்சகவேலைக்காகப்
புறப்பட்டார்.
கிருஷ்ணன் பெங்களூருக்குச் சென்றிருந்த சமயத்தில் வழக்கமான
ஏற்பாடுகளில் சில சிக்கல்கள் முளைத்தன. பிரசுரங்கள்
ரகசியமாக அச்சடிக்கப்படும் செய்தி எப்படியோ காவல்துறையை எட்டிவிட்டது. அதனால் அச்சகங்கள் பிரசுர வேலையை பாதியிலேயே நிறுத்துவிட்டன. வேறு வழியின்றி கிருஷ்ணன் காந்தி ஆசிரமத்துக்கே திரும்பிவந்தார். ஆசிரமத்திலும் விமோசனம் பத்திரிகை தொடர்பான வேலை எதுவும் இல்லை. அதனால் ஆசிரம நிர்வாகி கிருஷ்ணனை நூல் கொள்முதல் தொடர்பாக நூல் விற்பனை
மையங்களுக்கு அனுப்பினார். சிறுவயதிலிருந்தே கதராடைகள் அணியும்
வழக்கமுள்ளவர் என்றபோதும் கிருஷ்ணனுக்கு நூல் நூற்பது தொடர்பாகவோ நூல் வகைகள்
தொடர்பாகவோ எந்த அறிமுகமும் இல்லை. அதனால் நூல் விற்பனை
மையத்தில் நூற்போர் கொண்டுவரும் நூலை மதிப்பிடுவதிலும் வகைப்படுத்துவதிலும் அவரால்
திறமையுடன் செயல்பட முடியவில்லை. வேறு வழியின்றி
நிர்வாகியிடம் உண்மையைச் சொல்லிவிட்டு ஆசிரமத்திலிருந்து வெளியேறினார்.
கிருஷ்ணமூர்த்தி சிறைக்குச் செல்வதற்கு முன்பாக மதுரையில்
வசித்துவந்த சுந்தரராமைய்யர் என்னும் காங்கிரஸ் தொண்டரைப்பற்றிப் பகிர்ந்துகொண்ட
தகவலை நினைவுபடுத்திக்கொண்ட கிருஷ்ணன் மதுரைக்கு ஒரு கடிதம் எழுதினார். உடனே தன்னை மதுரைக்கு வந்து சந்திக்கும்படி
அவரிடமிருந்து பதில்கடிதம் வந்தது. அடுத்த நாளே கிருஷ்ணன்
மதுரைக்குச் சென்று சுந்தரராமைய்யரைச் சந்தித்தார்.
வேதாரண்யம் சத்தியாகிரகம் நடைபெற்ற சமயத்தில் தமிழகமெங்கும்
பலவேறு இடங்களிலும் சத்தியாகிரம் நடைபெற்று வந்தது. எண்ணற்ற தொண்டர்கள் அதில் பங்கேற்று சிறைபுகுந்தனர். மாவட்டவாரியாக சிறைக்குச் சென்றவர்களைப்பற்றிய தகவல்களைத் திரட்டி ஒரு
பெரும்பட்டியலைத் தயாரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டது.
அந்தப் பொறுப்பை மதுரை சுந்தரராமையர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
கிருஷ்ணனைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, அவரால் அந்த வேலையை செவ்வனே செய்துமுடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததால்
உடனே அந்த வேலையை அவரிடம் ஒப்படைத்தார்.
அன்றே தன் வேலையை உற்சாகத்தோடு தொடங்கினார் கிருஷ்ணன். வேலூரைச் சேர்ந்த சுந்தரவரதன் என்பவரை
தனக்கு உதவியாக வைத்துக்கொண்டார். இருவரும் திருநெல்வேலி
மாவட்டத்தில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கதர் விற்பனை நிலையங்களைத்
தொடர்புகொண்டு அந்தந்த ஊரில் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைசென்றிருக்கும்
தொண்டர்களைப்பற்றிய விவரங்களைத் திரட்டி குறித்துக்கொண்டே தமிழகமெங்கும் பயணம்
செய்தனர்.
பயணத்தின் முடிவில் பட்டியலை இறுதி செய்த சமயத்தில் ஏறத்தாழ
தமிழகத்திலிருந்து மட்டும் நாலாயிரம் சத்தியாகிரகிகள் சிறைக்குச் சென்றிருக்கும்
தகவல் உறுதியாகத் தெரிந்தது. எதிர்காலத்தில்
நாடு சுதந்திரமடைந்ததும் இவர்கள் அனைவரும் கெளரவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்
சுந்தரராமையர்.
இராஜாஜி சிறையிலிருந்து விடுதலைபெற்று சென்னைக்கு வந்தார். சத்தியாகிரகிகளின் பட்டியலை
எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்ற சுந்தரராமையரோடு கிருஷ்ணனும் சென்றார்.
கிருஷ்ணனை அவர் அறிமுகப்படுத்தியதுமே ”கிருஷ்ணமூர்த்தி
குறிப்பிட்ட இளைஞன் நீதானே?” என்று கேட்டார் இராஜாஜி.
கிருஷ்ணன் ஆமாம் என்று தலையசைத்தார். ”பத்திரிகைவேலை முடிந்து
அச்சகத்திலிருந்து வந்துவிட்டதா, சந்தாதாரர்களுக்கு
அனுப்பும் வேலை முடிந்ததா?” என்று தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டார். கிருஷ்ணன்
தயக்கத்துடன் தான் ஆசிரமத்தில் இல்லை என்கிற தகவலைத் தெரிவித்தார்.
உடனே கிருஷ்ணனுக்கு ஒரு பயணச்சீட்டு வாங்கிக்கொடுத்து
திருச்செங்கோட்டுக்கு அனுப்பிவைக்கும்படி சுந்தரராமையரிடம் சொன்னார் இராஜாஜி. வேறு வழியின்றி கிருஷ்ணன் ஆசிரமத்துக்குத்
திரும்பிவந்தார். ஆசிரமம் ஒரு காந்தமென மீண்டும் அவரை உள்ளே
இழுத்து தக்கவைத்துக்கொண்டது. அச்சாகி வந்து சேர்ந்த Prohibition
ஆங்கிலப்பத்திரிகையின் கட்டுகள் பிரிக்கப்படாமலேயே ஆசிரம அறைக்குள்
அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. எழுநூறுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு
முகவரி எழுதி அஞ்சல்தலைகளை ஒட்டி இரண்டுமூன்று நாட்களுக்குள் அனுப்பிவைக்கும்
வேலையில் மூழ்கினார் கிருஷ்ணன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆசிரமத்தில் இருந்த கிருஷ்ணனுக்கு ஊரிலிருந்து ஒரு தந்தி வந்தது. தாயார்க்கு உடல்நலம் சரியில்லை என்றும் உடனே புறப்பட்டு வருமாறும்
அத்தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ’புறப்பட்டு
வந்துகொண்டிருக்கிறேன்’ என்று பதில் தந்தி கொடுத்துவிட்டு
அன்றே அவரும் ஊருக்குப் புறப்பட்டார். வழியில் அடைமழை.
பாதைகள் சரியில்லை. அதனால் கூடுதலான நேரம்
பயணம் செய்யவேண்டியிருந்தது. விளாத்திகுளத்தை நெருங்கிய
சமயத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. எப்படியோ ஒரு பரிசிலில் பயணம் செய்து ஊரை அடைந்தபோது அம்மா இறந்துவிட்ட
செய்தியும் அவருடைய உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது என்னும்
செய்தியும் அவருக்குக் கிடைத்தது. மயானத்துக்கு ஓடிச் சென்று
அவர் அம்மாவின் முகத்தைப் பார்த்த பிறகே அவருடைய உடலுக்கு எரியூட்டப்பட்டது.
காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக சிறையில்
அடைக்கப்பட்டிருந்த சத்தியாகிரகிகள் அனைவரும் விடுதலை பெற்றனர். கள்ளுக்கடைகள் முன்பும் அந்நியத்துணிகளை
விற்பனை செய்யும் கடைகள் முன்பும் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்த அனுமதியும்
கிடைத்தது. சிறைக்குச் சென்றவர்கள் அனைவரும் ஆசிரமத்துக்குத்
திரும்பிவிட்டதால் ஆசிரம வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடந்தன. அந்த ஆண்டில் நல்ல மழை பொழிந்திருந்ததால் ஆசிரமத்துக்குச் சொந்தமான
நிலங்களில் விளைச்சலும் நன்றாக இருந்தது.
ஆசிரமத்தை அடுத்திருந்த கிராமங்களைச் சேர்ந்த
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூற்போர்களும் நானூறு நெசவாளர்களும் கதர் தொடர்பான
பணிகளால் பயனடைந்தனர். சாயம் தோத்தல்,
அச்சிடுதல், சலவை செய்தல் போன்ற தொழில்களில்
ஈடுபட்டிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்றன.
வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் சென்ற
காந்தியடிகள் ஏமாற்றத்துடன் திரும்பிவந்தார். அவர் பம்பாய்
துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறங்குவதற்கு முன்பாகவே நாடெங்கும் பல தலைவர்கள்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியடிகள்
அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார். உடனே அவரும் கைது செய்யப்பட்டார். அதுவரை
துணிக்கடைகள் முன்பும் கள்ளுக்கடைகள் முன்பும் மறியல் செய்ய அனுமதித்திருந்த அரசு,
அதை மீறி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்களையெல்லாம்
கைது செய்து சிறையில் அடைத்தது. வேதாரண்யம்
உப்புசத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்குச் செல்லவேண்டும் என ஏற்கனவே
விரும்பியிருந்த கிருஷ்ணன் இந்தத் தருணத்தை தனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாகக்
கருதினார். அக்கணமே ஆசிரமத்திலிருந்து வெளியேறி நாமக்கல்லுக்குச்
சென்றார். வெ.இராமலிங்கம் பிள்ளை,
என்.நாகராஜ ஐயங்கார், முகம்மது
உஸ்மான் போன்ற முன்னணித்தலைவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறைக்குச்
சென்றிருந்த தருணம் அது. வெளியே இயக்கம் சற்றே சுணக்கம் கண்டிருந்தது.
இரண்டாவது நிலையிலிருந்த பல தலைவர்களையும் ஒன்றாகத்
திரட்டிய கிருஷ்ணன் அவர்களிடையே பேசி உற்சாகமூட்டினார். அனைவரும் இணைந்து தெருக்களில் ஊர்வலமாகச்
சென்று கடைத்தெருவில் அந்நியத்துணிகள் விற்கும் கடையின் முன்னால் 15.02.1932
அன்று சத்தியாகிரகம் செய்வதென அன்று முடிவெடுக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக போராட்ட தினத்துக்கு முந்தைய தினம் காவல்துறை அதிகாரி
சத்தியாகிரகிகளின் வீடுகளுக்குச் சென்று போராட்டம் செய்யவேண்டாமென்று
கேட்டுக்கொண்டார். இனி போராட வருபவர்களை கைது செய்யவேண்டாம்
என்றும் அடித்துத் துரத்தவேண்டுமென்றும் மேலிடத்திலிருந்து கட்டளை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து
போராட்டத்தைக் கைவிடும்படி சொன்னார். யாரையும் அடிப்பதற்கு
தன் மனம் இடம்கொடுக்கவில்லை என்று தயக்கத்துடன் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனாலும் ஒருமனதாக எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கக்கூடாது எனக் கருதிய
கிருஷ்ணனும் போராட்டக்குழுவினரும் ஏற்கனவே குறிப்பிட்டபடி அடுத்த நாள்
தெருவெங்கும் ஊர்வலமாகச் சென்று சந்தையில் துணிக்கடையின் முன்னால் அறவழியில்
மறியல் செய்தனர்.
காவல்துறை அதிகாரி தன் படையுடன் சத்தியாகிரகிகளை
நெருங்கிவந்து அனைவரையும் கலைந்துசெல்லும்படி முதலில் உத்தரவிட்டார். அவர் கட்டளைக்கு ஒருவரும் கட்டுப்படாததால்
அடிப்பதற்கு உத்தரவிட்டார். உடனே பிரம்புடன் தயாராக இருந்த
காவலர்கள் சத்தியாகிரகிகளை மிருகத்தனமாக அடித்துத் தாக்கினர். எல்லோரும் அச்சமில்லை அச்சமில்லை என பாரதியார் பாடலைப் பாடியபடி அந்த
அடிகளையெல்லாம் தாங்கிக்கொண்டனர். ஏறத்தாழ கால்மணி நேரம்
இடைவிடாமல் தாக்கிய காவலர்கள் சிறிது நேரம் அடிப்பதை நிறுத்தி ஓய்வெடுத்தனர்.
மீண்டும் அதிகாரி அனைவரையும் கலைந்துசெல்லும்படி உத்தரவிட்டார்.
சத்தியாகிரகிகள் கலைந்துசெல்ல மறுத்தனர். உடனே
அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நிகழ்த்தினர் காவலர். அவர்கள்
அடிவாங்குவதைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் காவல்துறையின் மீது சினம்கொண்டனர்.
”நீங்கள் அடிவாங்குவதை எங்களால்
பார்க்கமுடியவில்லை. இவர்கள் வெறும் முப்பது நாற்பது
பேர்தானே. நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள். நாங்கள் இவர்களை அடித்தே கொன்றுவிடுகிறோம்” என்று மக்கள்
கொதித்தெழுந்தார்கள். அப்போதும் பொறுமை இழக்காத கிருஷ்ணனும்
மற்றவர்களும் அவர்களைப் பார்த்து கையெடுத்து வணங்கியபடி ”இது
சத்தியாகிரகம், நீங்கள் வன்முறையில் இறங்கினால் காந்தியடிகள்
மிகவும் வேதனைப்படுவார். நாம் அனைவரும் அமைதியாக
இருந்தால்தான் சத்தியாகிரகம் வெற்றி பெறும்” என்று எடுத்துரைத்தனர்.
சத்தியாகிரகிகளின் மெளனத்தைக் கண்டு வெகுண்டெழுந்த அதிகாரி மீண்டும்
தாக்குவதற்கு உத்தரவிட்டார். மறுபடியும் பத்துநிமிட நேரம்
அடிமழை தொடர்ந்தது. கடைசியில் தரையில் விழுந்திருந்தவர்களை
அப்படியே விட்டுவிட்டு காவலர்கள் கலைந்து சென்றனர். மக்கள்
அடிபட்ட சத்தியாகிரகிகளை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு உரிய மருத்துவம் பெற்று அனைவரும் வீட்டுக்குத் திரும்பினர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு காவல்துறை அதிகாரி கிருஷ்ணன்
தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தார். போராட்டத்தைக்
கைவிடும்படி மிரட்டினார். உடல்நிலை சரியான பிறகு மீண்டும்
எங்கள் மறியல் போராட்டம் தொடரும் என்று உறுதியான குரலில் சொன்னார் கிருஷ்ணன்.
அதைக் கேட்டு வெறுப்போடு வெளியேறினார் காவல் அதிகாரி. அன்று மாலையிலேயே அனைவரும் காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு கைது செய்து
சிறையில் அடைக்கப்பட்டனர், மறுநாள் நீதிமன்றத்துக்கு
அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கை விசாரித்த
நீதிபதி அனைவருக்கும் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். கிருஷ்ணனும் மற்றவர்களும் முதலில் திருச்செங்கோடு சிறையிலும் பிறகு கோவை
சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
ஓராண்டு தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகு கிருஷ்ணனும்
மற்றவர்களும் விடுதலையடைந்தனர். நெல்லையிலும்
மதுரையிலும் வசித்துவந்த உறவினர்கள் வீட்டில் சில நாட்கள் கழித்துவிட்டு அடுத்த
மாதமே மீண்டும் திருச்செங்கோடு ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார் கிருஷ்ணன். வழக்கம்போல கிராமங்களுக்குச் சென்று நூற்போர்களைச் சந்தித்து நூல்
சேகரிப்பதும் அவர்களுக்கு பஞ்சு வழங்குவதுமான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
சிறையிலிருந்து விடுதலையான இராஜாஜியும் பிற தொண்டர்களும் அடுத்தடுத்து
ஆசிரமத்துக்குத் திரும்பினர்.
ஆறேழு மாதங்கள் தொண்டர்கள் அனைவரும் நிர்மாணப்பணிகளில்
ஊக்கமுடன் செயல்பட்டனர். தமிழகமெங்கும்
காவல்துறையினரின் அடக்குமுறை அதிகமாக நிலவியது. தேசிய
இயக்கத்தில் சற்றே தொய்வு ஏற்படுவதைக் கவனித்த இராஜாஜி, அதற்கு
மீண்டும் விசையேற்றுவதற்காக ஒரு சத்தியாகிரக யாத்திரையைத் தொடங்குவதற்கு
காந்தியடிகளிடம் யோசனை கேட்டு கடிதமெழுதினார். அதற்கு
காந்தியடிகளும் சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பினார்.
1933ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்
தொடங்கியதிலிருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஜி.ராமச்சந்திரன், கோவை சுப்ரி, மதுரை
வி.கிருஷ்ணசாமி, சேலம் சுப்பாராவ் என
பல தலைவர்களும் ஆசிரமத்துக்கு வரத்தொடங்கினர். கோவை
அய்யாமுத்துவின் மனைவி கோவிந்தம்மாள், திருப்பூர்
சுந்தரத்தின் தாயார் லட்சுமியம்மாள் என பல பெண்மணிகளும் வந்து சேர்ந்தனர். வேதாரண்யம் யாத்திரையில் இணைந்துகொள்ள நினைத்தும் தனக்கு அனுமதி கிட்டாத வருத்தத்தைப்
போக்கிக்கொள்ளும் விதமாக கிருஷ்ணன் இந்தப் புதிய யாத்திரையில் உற்சாகத்தோடு
சேர்ந்துகொண்டார்.
07.08.1933 அன்று அதிகாலை இராஜாஜியின்
தலைமையில் ஊர்வலம் தொடங்கியது. காலையில் தேசியக்கொடியோடு
அனைவரும் வந்தே மாதரம், அல்லா ஹூ அக்பர், மகாத்மா காந்திஜிக்கு ஜே என உற்சாகமாக முழங்கியபடியும் கத்தியின்றி
ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற வழிநடைப்பாட்டைப் பாடியபடியும் நடந்தனர்.
திருச்செங்கோட்டிலிருந்து சித்தளந்தூர், கந்தம்பாளையம்,
பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், நாமக்கல், ராசிபுரம்
வழியாக பதினைந்து நாட்கள் நடந்து சேலம் சென்றடைய வேண்டும் என அவர்கள்
திட்டமிட்டிருந்தனர்.
ஊர் எல்லையில் பாதயாத்திரைக்குழுவை வழியனுப்புவதற்காக
நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து காத்திருந்தனர். ஆசிரமத்தில் ஏற்கனவே கையால்
எழுதி தயாரித்திருந்த துண்டுப்பிரசுரங்களை கிருஷ்ணன் அங்கிருந்தோர் அனைவருக்கும்
விநியோகித்தார். ”சுயராஜ்ஜியம் எமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம். அந்நிய ஆட்சியை அகற்றும்வரை
நாங்கள் தொடர்ந்து காந்தியடிகளின் அகிம்சை வழியில் தொடர்ந்து சத்தியாகிரகம்
செய்வோம். எவ்விதமான தியாகத்துக்கும் நாங்கள் தயாராகவே
வந்துள்ளோம். பொதுமக்களே, அரசு
ஊழியர்களே, எந்த விதத்திலும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டாம்
என்றும் ஆங்கிலேயர்கள் தாமாகவே இந்த நாட்டைவிட்டு வெளியேறும் வகையில் செயல்படவேண்டுமென்றும்
கேட்டுக்கொள்கிறோம்” என்று தெளிவாக எழுதி சத்தியாகிரகிகள்
அனைவரும் அதில் கையெழுத்திட்டிருந்தார்கள். பிரசுரங்களை
விநியோகித்த பிறகு அனைவரும் மீண்டும் வந்தே மாதரம் முழக்கத்தோடு ஊர்வலத்தைத்
தொடங்கினர். சிறிது தொலைவு நடந்து வேலூர்ச்சாலையை அடைந்தபோது
காவல்துறை அதிகாரிகள் குறுக்கே புகுந்து
ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தினர். அனைவரையும் கைது செய்து
நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர்களுக்கு
ஆறுமாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்றிரவே
அனைவரும் கோவைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு ஆசிரமப்பணியிலேயே
முழுமூச்சுடன் ஈடுபட்டார் கிருஷ்ணன். தினந்தோறும்
நூற்கத் தொடங்கி நூல்நூற்கும் பயிற்சியில் நன்கு தேர்ச்சிபெற்றார். கதர்ப்பணிகள் அவருக்கு மிகவும் மனநிறைவளித்தன. அவரைச்
சுற்றி ஆசிரமத்திலும் இந்திய அரசியலிலும் எண்ணற்ற மாற்றங்கள் உருவாகின. தன் எளிய வாழ்க்கையிலேயே மனநிறைவைக் கண்ட கிருஷ்ணனுக்கு ஆசிரம வாழ்க்கை
உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொடுத்தது. மூத்த சகோதரர்கள்
தொடர்ந்து வற்புறுத்தியதால் தன் முப்பதாவது வயதில் அவர் எவ்விதமான சடங்குகளுக்கும்
இடமின்றி எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார்.
1940இல் வார்தாவில் இயங்கிவந்த காந்தி ஆசிரமத்துக்கு கிருஷ்ணன் ஒருமுறை சென்று வந்தார். அங்கிருந்த மகன்வாடி
கிராமோத்யோக் வித்யாலயாவில் கையினால் காகிதம் செய்யும் முறையில்
பயிற்சி எடுத்துக்கொண்டு திரும்பினார். அக்காலத்தில்
அது ஒரு புதுமையான முயற்சி. முக்கியமானதொரு கைத்தொழில். திருச்செங்கோடு
திரும்பி இங்கிருந்த தொண்டர்கள் பலருக்கும் கையினால் காகிதம் செய்யும் முறையைப்
பயிற்றுவித்தார். அது
எல்லோருக்கும் பொருளீட்டித்
தரும் ஒரு கைத்தொழிலாக வளர்ந்தது.
ஆசிரமத்தின் சார்பாக திருச்செங்கோட்டில் காதி பண்டார் எனும் கதர்க்கடை இயங்கிவந்தது. அதன் நிர்வாகியாக பழனிச்சாமி பண்டாரம் என்பவர் இருந்தார். அவர் 1945இல் காலமான போது கிருஷ்ணன் அந்தக் கதர்க்கடையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அன்று முதல் ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகள் அந்தப் பணியில் நீடித்தார். அந்தக் கடையே இப்போது சேலத்தில் ‘ராஜாஜி காதி பவன்’ என்று பெயர்மாற்றம்
பெற்று நடைபெற்றுவருகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு மாறத் தொடங்கிய அரசியல் சூழலில் தன்னுடன் நெருக்கமாக பழகிவந்த பலரும் பல்வேறு நிலைகளில் உயர்ந்து வெவ்வேறு பதவிகளில் சென்று அமர்ந்தபோதும் அவற்றின் மீது எவ்விதமான ஆர்வமும் நாட்டமும் காட்டாமல், அந்தப்
பரபரப்பிலிருந்து விலகி ஆசிரமப்பணிகளிலேயே மூழ்கியிருந்தார் கிருஷ்ணன். காந்தி ஆசிரமம்
அவருடைய இன்னொரு அடையாளமாகவே மாறிவிட்டது. அனைவரும் அவரை காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் என்றே அழைக்கத் தொடங்கினர். 1970இல் அவர் ஆசிரமத்திலிருந்து ஓய்வு பெறுவதுவரை கீதையின் வழியில் உழைப்பின் பலன்மீது பற்றற்றவராகவே வாழ்ந்தார். காந்தியக்கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த கிருஷ்ணன், உயிர்வாழ்ந்த கடைசிக்கணம்
வரை தீண்டாமையை விலக்கி, அனைவரோடும் சகோதர
உணர்வுடன் பழகி, கதராடை அணிந்து
எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார்.
1953இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருந்த காமராசர் சேலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது பத்து வயது நிறைந்த தன் மகனுக்கு காமராசரைக் காட்டுவதற்காக அந்தக் கூட்டத்துக்கு அழைத்துச் சென்று ஓரமாக நின்றிருந்தார் கிருஷ்ணன். மேடைக்குச் சென்ற
காமராசர் கூட்டத்தில் ஒருவராக நின்றிருந்த கிருஷ்ணனை சட்டென அடையாளம் கண்டுகொண்டு அக்கணமே மேடையிலிருந்து அவரை நெருங்கிவந்து நலம் விசாரித்துப் பேசிவிட்டுச் சென்றார். ஒரு மாநிலத்தின்
முதல்வரே நெருங்கிவந்து நலம் விசாரிக்கும் அளவுக்கு தன் தந்தை பெரிய ஆளுமையா என நம்பமுடியாமல் வியப்பிலாழ்ந்தார் அவர் மகன். ஏதோ பரிந்துரைக்காக
வந்திருப்பதாக யாரும் தன்னை நினைத்துவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுணர்வும் தன்மான உணர்வும் அவரை எப்போதும் ஆளுமைகளிடமிருந்து விலக்கியே வைத்திருந்தன. தன்னைப்பற்றியோ தன் தியாகத்தைப்பற்றியோ எங்கும் எச்சூழலிலும் முன்வைத்துக்கொள்ளாத பெருந்தன்மையும் தன்னடக்கமும் கிருஷ்ணனிடம் நிரந்தரமாகக் குடிகொண்டிருந்தன. தன்னடக்கத்தின் சிகரமாகவே வாழ்ந்து மறைந்தார் கிருஷ்ணன்.
(கிராம ராஜ்ஜியம் – ஜூன் 2021 இதழில் வெளியான கட்டுரை )