Home

Monday, 19 July 2021

வெளிச்சத்தைத் தேடும் ஆவல் - கட்டுரை

  

சமீபத்தில் கி.ராஜநாராயணனின் மறைவையொட்டி அவருடைய சிறுகதைகளை ஒருசேர மீண்டும் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் கூட சலிக்காத வகையில் கதைகள் அனைத்துமே கட்டுக்கோப்பாக இருந்தன. தாத்தையா நாயக்கர், அண்ணாரப்பக்கவுண்டர், மொட்டையக்கவுண்டர், பாவய்யா, கோமதி செட்டியார், கோனேரி, பேச்சி, பூமாரி என வகைவகையான மனிதர்களைப்பற்றிய கதைகளைப் படிக்கப்படிக்க ஆச்சரியமாகவே இருந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில், ஒரு பத்து முறையாவது இக்கதைகளை வெவ்வேறு தருணங்களில் படித்திருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுசாகப் பார்ப்பதுபோலவே இருப்பதை உணர்கிறேன். நவீன சிறுகதைகளில் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் பிறழுறவு, துரோகம், வஞ்சம், வன்மம், இருள் ஆகியவற்றைப் படித்ததால் அடைந்த சலிப்பை அந்த மீள்வாசிப்பு முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டது. அந்த மானுடச் சித்திரங்களால் அன்று மனம் நிறைந்துவிட்டது.

கி.ரா.வின் சிறுகதைகளால் மனம் ஏன் நிறைவடைகிறது என்பது முக்கியமானதொரு கேள்வி. தமிழில் இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளை பொதுவாக நாட்டுப்புறச்சாயலைக் கொண்ட கதைகளென்றும் நவீன கதைகளென்றும் இருபெரும் பிரிவாக வகுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  நாட்டுப்புறச்சாயலைக் கொண்ட சிறுகதைகள் ஒரு கோணத்தில் மாமல்லபுரம் சிற்பங்களைப்போன்றவை. அவை அங்கேயே நீடித்து நிற்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும் புதுமையாகவே உள்ளன. நவீன சிறுகதைகள் கால்களை நனைத்துவிட்டு பாதங்களுக்குக் கீழே பள்ளமெழுப்பி தடுமாறவைத்துவிட்டுச் செல்லும் கடலோர அலைகளைப்போன்றவை. அலைகள் நினைவில் நீடிப்பதில்லை. நிலையில்லாதவை. ஆனால் அவை கரையோரம் நிற்கும் கால்களை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. காலடி மண்ணை அரித்துவிட்டு செல்கின்றன.

செஞ்சி தமிழினியனின் சிறுகதைகள் கி.ரா. வழிவந்த நாட்டுப்புறச்சாயலுடன் கூடிய சிறுகதைகளை ஒத்தவையாக உள்ளன. ஒவ்வொரு சிறுகதையிலும் மனிதர்களை அவர் சிற்பங்களென செதுக்கிவைத்திருக்கிறார். கி.ரா.வின் கதைகளைப்போலவே தமிழினியனின் சிறுகதைகளும் மனத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன. பல அபூர்வ மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைப் பார்க்கவைக்கின்றன. அதனாலேயே நிறைவை அளிக்கின்றன.

நாற்று நடும் காட்சியைச் சித்தரிக்கும் மொத நடவு சிறுகதையில் பன்னிரண்டு பெண்கள் நாற்று நடுகிறார்கள். இதுதான் தொகுப்பின் முதல் சிறுகதை. அந்தக் கூட்டத்தில் மலையனூர்க் கிழவி போன்ற வயதானவர்களும் இருக்கிறார்கள். அந்தக் கழனிக்குச் சொந்தமான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வந்த புது மருமகளான ஈஸ்வரியைப்போன்ற இளையவர்களும் இருக்கிறார்கள். வழக்கமாக சனிமூலையில் முதல் நாற்றை ஊன்றி நடும் லட்சுமிக்குப் பதிலாக அன்று ஈஸ்வரி நாற்றை வாங்கி ஆழமாக ஊன்றி நடுகிறாள்.

நாற்று நடும் வேலை தொடங்குகிறது. ஈஸ்வரி நாற்று நடும் வேகம் அனைவரையும் மலைக்கவைக்கிறது. நாற்று நட்டு முடியும் தருணத்தில் பக்கத்து மெனையில் சற்றே மெதுவாக நாற்றுகளை ஊன்றி வரும் மலையனூர் கிழவியின் மீது அவள் பார்வை பதிகிறது. உடனேஆயா, நீங்க போய் கைகால கழுவுங்க. நாங்க நட்டுட்டு வரோம்என அன்பான குரலில் சொல்லி அனுப்பிவிட்டு அவள் வேலையையும் சேர்த்துச் செய்தபிறகு கரையேறுகிறாள் ஈஸ்வரி. அந்த வேகத்தையும் அன்பையும் பார்த்து மலைத்துப்போகிறாள் கிழவி.  எல்லாவற்றுக்கும் மேலாக அவள் தன்னை ஆயா என்று அழைத்த விதம் அவளுக்குப் பிடித்துவிடுகிறது.  

கழனியிலிருந்து கிராமத்துக்கு திரும்பி நடந்துசெல்லும் வழியில் அவளை நிறுத்தி அவளோடு உரையாடுகிறாள் கிழவி. தன் தம்பியின் மகனைத்தான் அவள் மணந்துகொண்டிருக்கிறாள் என்றும் தன் மகளை சின்ன வயதிலிருந்தே மருமகளே மருமகளே என வாய்நிறைய கொஞ்சிப் பேசிவிட்டு, கடைசியில் திருமணப் பேச்சு வந்தபோது செவ்வாய்தோஷம் இருப்பதாகச் சொல்லி ஒதுக்கிவிட்ட தகவலைப் பகிர்ந்துகொள்கிறாள். அந்தக் கசப்பு இரு குடும்பங்களையுமே பிரித்துவிட்டதாகவும் சொல்கிறாள். அவளைப் பார்த்த முதல் கணத்தில் தன் பெண் வாழ வேண்டிய வாழ்க்கையைத் தட்டிப் பறித்துக்கொண்டவள் என்னும் கசப்பு படர்ந்ததென்றாலும் அவளுடைய பேச்சையும் நடத்தையையும் பார்த்த பிறகு மனம் மாறிவிட்டதென்றும் வெளிப்படையாகவே சொல்லிவிட்டு புதுமணப்பெண்ணை மனமார வாழ்த்தி அனுப்புகிறாள் ஆயா. கடைசிக்கணத்தில் தன் முந்தானை முடிச்சைப் பிரித்து இருபது ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்துவளையல் வாங்கி போட்டுக்கோம்மாஎன்றும் சொல்கிறாள். ”இனிமே என்ன ஆயான்னு சொல்லாத. அம்மான்னு கூப்புடுஎன்று சொல்லி அனுப்பிவைக்கிறாள். தன் மனத்தில் படிந்திருந்த கசப்பையும் இருளையும் அழித்து அன்பால் நிறைத்துக்கொள்கிறாள்.

மலையனூர் கிழவியைப்போலவே பெருந்தன்மையான மற்றொரு பெண்மணி அழகாயி என்கிற அழகி. அறுபத்தேழு வயதானாலும் உழைத்து வாழ்கிறவள் அவள் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிறுகதைக்கும் அழகி என்றுதான் பெயர். தன் சுயமரியாதைக்கு இழுக்கு நேர்ந்ததால் தன் மகனுடைய குடும்பத்திலிருந்து வெளியேறி தனித்து வாழும் மன உறுதி கொண்டவள் அவள். அந்த ஊரில் அவள் செய்யாத வேலையே இல்லை. அதிகாலையில் எழுந்ததும்  சாலையைப் பெருக்கி சுத்தம் செய்கிறாள். கடைத்தெருவின் சின்னதும் பெரிதுமாக அடர்ந்திருக்கும் கடைவாசல்களில் சிதறிக் கிடக்கும் குப்பைளைப் பெருக்கித் தள்ளி சுத்தப்படுத்துகிறாள். குடிப்பழக்கத்தால் உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கிறவனை வழியில் பார்க்க நேர்ந்ததும் நிறுத்தி மனத்தில் உறைக்கிறமாதிரி புத்திமதி சொல்லி அனுப்பிவைக்கிறாள். மகளிர் கல்லூரி கேண்டீனில் பாத்திரங்கள் கழுவும் வேலையைச் செய்கிறாள். கல்லூரி வளாகத்திலும் சுத்தப்படுத்துகிறாள். கழிப்பறைகளிலும் தண்ணீர் விட்டுக் கழுவுகிறாள். கல்லூரியில் இருக்கும்போதே தற்செயலாக விலக்காகிவிடுவதால் மனம்கூசி அஞ்சி ஒதுங்கி நடுங்கும் கிராமத்துப் பெண்களிடம் ஆறுதலாகப் பேசி தேவையான உதவிகளைச் செய்கிறாள். அவசர நேரத்துப் பயன்பாட்டுக்காக நேப்கின்களை வைத்து உதவும்படி கல்லூரி நிர்வாகியைச் சந்தித்து கேட்கவும் அவள் தயக்கம் காட்டுவதில்லை.

அழகிபோலவே உழைத்து உண்ணும் மற்றொரு பெண்மணி       ரிக் ஷாக் கண்ணம்மா. ஒவ்வொரு நாளும் அவள் செய்கிற வேலைகளுக்கும் கணக்கே இல்லை. கடைத்தெருவில் வந்து நிற்கும் பேருந்துகளிலிருந்து பெட்டிகளையும் மூட்டைகளையும் இறக்கி வண்டியில் ஏற்றி சம்பந்தப்பட்ட கடைகளிடம் ஒப்படைப்பது முதல் கந்துவட்டித் தவணையைக் கட்டமுடியாமல்  தவிப்பவளுக்கு உதவுவது வரை நாள்முழுக்க வேலைகளைச் செய்தபடியே இருக்கிறாள்.

அடுத்து, அடுத்து என இருவரும் வேலைகளைத் தேடி ஓடி செய்தபடியே இருக்கிறார்கள். திருப்பம் என்றோ, முடிவு என்றோ சொல்லத்தக்க எதுவும் இக்கதைகளில் இல்லை. ஆனாலும் கதையை வாசித்து முடிக்கும்போது நமக்குத் தெரியாத ஒரு வாழ்க்கையைத் தெரிந்துகொண்ட நிறைவு ஏற்படுகிறது.

செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளியிடம் அறுந்துபோன வாரைத் தைப்பதற்காக ஒருவர் கொடுத்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் நடைபெறும் சம்பவங்களால் அடுக்கப்பட்ட சிறுகதை ராமசாமியும் ஆதிமூலமும். செருப்பின் தையலை கண்ணால் பார்த்ததுமே, அந்தச் செருப்பைத் தைத்தவர்களின் பரம்பரை வழியையும் ஊரையும் சொல்லும் துல்லியம் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடைய உரையாடலில் ஊரையடுத்த இல்லத்தில் தங்கியிருக்கும் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர்களின் கால் குறைகளுக்கு ஏற்றவகையில் செருப்பு தைத்துக் கொடுத்த நிகழ்ச்சி பேச்சுவாக்கில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

இரவாய் மாறிடும் பகல் ஒரு பாலியல் தொழிலாளியின் குரலில் சொல்லப்படும் சிறுகதை. அந்தத் தொழிலில்தான் எத்தனை எத்தனை சங்கேதங்கள். எதையும் வாய்ப்பேச்சாக சொல்லாமல் செயல்கள் வழியாகவும் சைகைகள் வழியாகவும் உணர்த்தும் தருணங்கள். பேருந்தைவிட்டு இறங்கி வழக்கமாக செல்லும் விடுதிக்கு நடந்துசெல்லும்போதேஇன்றைக்கு சோபா போட்டிருக்குமாஎன்ற கேள்வியோடு நடக்கிறாள் அவள். விடுதியின் படிக்கட்டு திருப்பத்தில் சோபா போட்டிருந்தால், அன்றைக்கு வாடிக்கைக்காரர் வரப்போகிறார் என்று பொருள். போடவில்லை என்றால், அன்று பதிவு இல்லை என்று பொருள். சோபா இருக்கும் தினத்தில் அவளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறையின் சாவியை வாங்கிக்கொண்டு செல்லலாம். இல்லாத தினத்தில் யாரோடும் எந்தப் பேச்சுமில்லாமல் வந்த வழியே திரும்பிவிடவேண்டும். இப்படி பல சுவாரசியமான நுண்தகவல்கள் கதையெங்கும் உள்ளன.

கதையில் இரு இரவுகள் இடம்பெறுகின்றன. முதல்நாள் இரவு வருமானத்துக்கு வழிவகுத்த இரவு. எவ்விதமான புகாருக்கும் கசப்புக்கும் இடமில்லாமல் அந்த இரவு வாடிக்கைக்காரனுடன் கழிந்துவிடுகிறது. அடுத்தநாள் இரவு அவளால் விடுதியை நெருங்கவேமுடியவில்லை. பேருந்து நிலையத்தில் இறங்கும்போதே யாரோ அவளை கைபேசியில் அழைத்து காவல்துறையின் நெருக்கடிகள் குறித்து தகவல் கொடுத்துவிட்டு, வந்த வழியே திரும்பிப் போகுமாறு சொல்கிறார்கள்.

இரவை எப்படி கழிப்பது என புரியாமல் குழம்பும்போது அவளுக்கு திடீரென ஒரு எண்ணம் உதிக்கிறது. அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று எதையாவது சொல்லி ஊசி போட்டுக்கொண்டு அந்த வளாகத்திலேயே படுத்திருந்துவிட்டு அடுத்தநாள் காலையில் ஊருக்குச் செல்ல முடிவெடுக்கிறாள். வளாகத்தில் இடம் கண்டுபிடித்து சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரிக்கும் சமயத்தில் அதே இடத்துக்கு வருகிறாள் ஓர் இளம்பெண். பிரசவமான தன் அக்காவுக்கு துணையாக இரவில் படுத்துக்கொள்ள வந்தவள் அவள். உள்ளே பிளீச்சிங் பவுடர் நாற்றத்தில் உட்கார்ந்து சாப்பிட மனமில்லாமல் வெளியே வளாகத்தைத் தேடி வந்து அமர்கிறாள். “இங்க எதுக்குக்கா படுக்கற? உள்ள வந்து என் கூட படுத்துக்கோ. யாராவது கேட்டா எங்கக்கான்னு சொல்லுறேன்என்று சொல்லி மருத்துவ மனைக்குள் அழைத்துச் சென்று பக்கத்திலேயே பாதுகாப்பாக படுக்கவைத்துக் கொள்கிறாள்.  அக்கணத்தில் அந்த இளம்பெண் பாத்திரத்துக்கு கி.ராஜநாராயணனின் கன்னிமை கதையில் வரும் நாச்சியாரின் சாயல் படிவதை என்னால் உணரமுடிகிறது. மாபெரும் அன்னையாக ஓர் இளம்பெண்ணை தகவமைக்கும் அந்த உணர்வை ராஜநாராயணனைப்போலவே தமிழினியனும் சுட்டிக் காட்டுகிறார். 

புத்தகத்தின் தலைப்புக்கதையான மொடாக்குடியன் பிணவறையைக் களமாகக் கொண்ட சிறுகதை. அங்கு கடைநிலை ஊழியராக பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. ஒரு சரக்குக்கூடத்தை நிர்வகிப்பதுபோல ஒரு பிணக்கிடங்கை நிர்வகிப்பது எளிதான வேலையில்லை. நாள் முழுதும் உயிரற்ற உடல்களை வாங்கி வைக்கவும் எடுத்துக் கொடுக்கவும் தேவையான மன உறுதி ஒருவரிடமும் இருப்பதில்லை. இல்லாத மன உறுதியை வரவழைத்துக்கொள்ள அவர்கள் மதுவின் போதையை நாடிச் செல்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த மது அவர்கள் வாழ்க்கையையே அழித்துவிடுகிறது. அரசாங்க வேலை, மாதம் பிறந்தால் சம்பளம் வாங்கலாம் என்பதுபோன்ற எண்ணங்களால் தூண்டப்பட்டுதான் ஒருவர் அந்த வேலைக்கு வருகிறார். ஆனால் அந்த வேலையைச் செய்யத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவர் வேறு எந்த வேலைக்கும் தகுதியற்ற மொடாக்குடியராக மாறி உடலையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு அற்பாயுளிலேயே மறைந்து போகிறார். அந்த வேலையின் தன்மை தெரிந்தும், அது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்று தெரிந்தும் கூட, ஒருவர் மறைவுக்குப் பிறகு இன்னொருவர் வந்து நிற்கிறார். .  

அதுதான் வாழ்வின் நகைமுரண். ஆபத்து என தெரிந்தும் குழியில் இறங்குபவர்களே இங்கு மிகுதி. ஏதோ தச்சுவேலை, தையல் வேலை, இயந்திரங்களில் பழுதுபார்க்கும் வேலையை பக்கத்திலேயே உட்கார்ந்து சொல்லிக் கொடுப்பதுபோல, ஒருவர் பிணவறை மேலாண்மை பற்றி ஒவ்வொரு நுண் தகவலையும் தன் தம்பி மகனுக்குக் கற்பிக்கிறார். தன் மகன் என அவனை அடையாளம் காட்டிவிட்டு வாரிசுரிமையின் அடிப்படையில் அந்த வேலையை அவனுக்கு வழங்குவதற்கும் வகைசெய்துவிட்டு அவர் மறைந்துபோகிறார். அவரிடமிருந்து அவன் தொழிலைக் கற்றுக் கொண்டாலும், அச்சூழலில் வாழும் வேறொருவர் அவனுக்கு மதுப்பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார். யாரும் எதிர்பாராது நேர்ந்த அந்தத் துணைவிளைவை உணர்த்திவிட்டு கதை முடிகிறது. தீமை மீது மனிதர்களுக்கு இருக்கும் தீராத வேட்கை மாபெரும் புதிர். அந்தப் புதிரை நோக்கி அழைத்துச் செல்கிறது தமிழினியனின் சிறுகதை.

இந்தப் புதிருக்கான விடை ஒருவராலும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. இப்படிப்பட்ட கதைகள் மீண்டும் மீண்டும் புதுப்புது கோணங்களில் எழுதப்படும்போது, ஏதேனும் ஒரு தருணத்தில் விடையின் வெளிச்சத்தை நாம் ஓரளவு கண்டடையக் கூடும்.  பல சமயங்களில் எதார்த்த வாழ்க்கையில் நாம் தொட்டறிய முடியாத பல புள்ளிகளைத் தீண்டிப் பார்க்க கற்பனைக்கதைகளே உறுதுணையாக உள்ளன. அந்த வெளிச்சத்தைத் தேடும் ஆவலை தமிழினியனின் ஒவ்வொரு முயற்சியிலும் உணரமுடிகிறது.

 

(மொடாக்குடியன். செஞ்சி தமிழினியன். விதைநெல், 1, பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி – 604202. விலை. ரூ150)

(29.05.2021 புக்டே இணைய தளத்தில் வெளியான கட்டுரை)