Home

Monday, 12 July 2021

திருநீறு பூசிய முகம் - கட்டுரை

 

இரண்டு ஊர்களுக்கிடையிலான கேபிள் பாதையை நாம் நினைத்த நேரத்தில் தொடங்கிவிட முடியாது. அதற்கு முன்பு செய்துமுடிக்க வேண்டிய சில வேலைகள் உண்டு. பெரும்பாலும் சாலையை ஒட்டியே கேபிள் பாதை அமைவதால், சாலைத்துறையினரை அணுகி வேலையைத் தொடங்குவதற்குரிய அனுமதியைப் பெறவேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, கிராம பஞ்சாயத்து நிர்வாகம் என பல்வேறு வகையான நிர்வாகங்களின் கீழ் சாலை பிரிந்திருக்கும். ஒவ்வொரு நிர்வாகத்தின் எல்லைக்குள் அடங்கிய பாதையின் நீள விவரங்கள் அடங்கிய குறிப்புகளோடு அவர்களை அணுகினால் மட்டுமே அதைப் பெறமுடியும். அதற்குப் பிறகு  வாகனங்களின் தினசரி இயக்கத்துக்கு இசைவாக எரிபொருளை கடனுக்கு வழங்கும் நிலையத்தை முடிவு செய்யவேண்டும். எல்லாவற்றையும் விட பள்ளம் தோண்டுவதற்குத் தேவையான ஊழியர்களைத் திரட்டுவது முக்கியமான வேலை.

ஒவ்வொரு கிராமத்திலும் நாட்டாமை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். அவர்களைப் பார்த்து பள்ளமெடுப்பதற்கு இருபது  பேரோ முப்பது பேரோ வேண்டுமென்று சொன்னால் போதும், அடுத்த நாளிலிருந்து நாம் விரும்பும் இடத்துக்கு அவர்களை அழைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிடுவார். வேலை முடிந்ததும் அவரே மஸ்டர் ரோலில் எல்லோரிடமும் கையெழுத்து வாங்கிக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார். எல்லா .., ஜே..களும் அதைத்தான் செய்துவந்தனர்.

எனக்கு அந்த வழிமுறை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நமக்குத் தேவையானவர்களை நாமே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.  படிப்பை பாதியிலேயே கைவிட்ட அல்லது எந்த வகையிலும் படிப்பைத் தொடரமுடியாத ஆதரவில்லாத இளைஞர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது.  அதை என் வாகன ஒட்டி சஙகரப்பாவுடன் பகிர்ந்துகொண்டேன்.  அக்கம்பக்கமிருக்கும் கிராமங்கள் எல்லாமே அவருக்குப் பழக்கமான இடங்கள்.

பள்ளம் தோண்டற வேலையை கேவலமா நெனைக்காத பையன்கள் நமக்கு வேணும்.உண்மையிலயே உழைக்க ஆர்வம் இருக்கிறவங்களா இருக்கணும். இன்னைக்கு கஷ்டமாதான் இருக்கும். நாலஞ்சி வருஷம் பல்ல கடிச்சிகிட்டு வேலை செஞ்சா, ரெகுலர் ஆளா மெதுவா டிப்பார்ட்மெண்டுக்குள்ள வந்துடலாம்.”

அதைக் கேட்டு சங்கரப்பாவின் கண்கள் விரிந்தன. “சார், உண்மையாவா சொல்றீங்க? அப்படி ஒரு வழி இருக்குதா?” என்றார்.

ஆமாம் சங்கரப்பா, அப்படி ஒரு ரூல் இருக்குது. வருஷத்துக்கு இருநூத்தி நாப்பது நாள் மேனிக்கு மூனு வருஷம் ஒருத்தன் தொடர்ச்சியா வேலை செஞ்சிருந்தா போதும். அவன உள்ள எடுத்துக்கலாம்.”

சார், எங்க பெரியப்பா பசங்க ரெண்டு பேரு இருக்கானுங்க. மூனு தரம் எஸெல்சி எழுதி எழுதி ஃபெயிலாயி ஊட்டுல உக்காந்து திண்ணைய தேச்சிகிட்டிருக்கானுங்க. நீங்கதான் எப்படியாவது ஒரு வழிய காட்டணும்.”

தாராளமா வழிகாட்டலாம் சங்கரப்பா, மண்ணு வேல செய்யறதுக்கு தயங்காத ஆளா இருக்கணும்…”

அதெல்லாம் செய்வானுங்க சார். நாளைக்கே அழச்சிட்டு வரேன்என்றார். ”படிப்புதான் வரலை. மண்ணு வாரியாவது புத்தி வரட்டுமே

அவசரப்படாதீங்க சங்கரப்பா. நமக்கு ரெண்டு ஆளு வேணாம். ஒரு முப்பது பேராவது வேணும்

சங்கரப்பா சில கணங்கள் யோசித்தார். பிறகுஒரு நாலு நாள் டைம் குடுங்க சார். ஆளுங்கள சேத்துடலாம்என்றார்.

திங்கள் கெழம காலையில எட்டு மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்தா போதும். நாம அவுங்களுக்கு ஒரு டெஸ்ட் வைப்போம். அதுல தேறிட்டாங்கன்னா சேத்துக்கலாம்

அது என்ன சார் டெஸ்ட்? அவனுங்களுக்குத்தான் படிப்பே வரலயே. எப்படி எழுதுவானுங்க?” சங்கரப்பா பரிதாபமாக என்னைப் பார்த்தார்.

எழுதற டெஸ்ட்லாம் இல்ல சங்கரப்பா. வேலை செய்ற டெஸ்ட்தான். அவுங்களுக்கு நாம கொடுக்கற வேலையில விருப்பம் இருக்குதான்னு தெரிஞ்சிக்கற டெஸ்ட்.”

சங்கரப்பா குழப்பத்துடன் நின்றார். “வேலைன்னா….?”

ஒவ்வொரு ஜோடி கையிலயும் ஒரு கடப்பாரையையும் மண்வெட்டியையும் கொடுப்பம். ஒவ்வொரு ஜோடியும் அஞ்சு மீட்டர் நீளத்துக்கு அஞ்சடி ஆழத்துக்கு நம்ம கேபிளுக்கு பள்ளம் வெட்டணும். வெட்டி முடிக்கறவங்களுக்கு வேலை நிச்சயம்..”

சங்கரப்பாவின் முகம் மலர்ந்துவிட்டது. ”யாரு உழைப்பாளி, யாரு சோம்பேறின்னு சரியா கண்டுபுடிச்சிடலாம் சார். வெக்கப்படாம வேலை செய்றவன் ஜெயிச்சிடுவான். நல்ல திட்டம்என்றார். திடீரென சந்தேகம் கொண்டவராகமுப்பது பேரும் வேல செய்ற ஆளாவே அமைஞ்சிட்டா, எல்லாரயும் வச்சிக்க முடியுமா சார்?” என்று கேட்டார். நான் முடியும் என்று சொன்னதும் உற்சாகம் கொண்டார்.

ஆனால் என் ..க்கு இந்தத் திட்டம் உற்சாகம் அளிக்கவில்லை. “நீங்க ஏன் இப்படி எப்பவுமே மாத்தி மாத்தி யோசிக்கறீங்க? பசங்களுக்கு ஏதாச்சிம் ஒன்னுன்னா நாமதான அதுக்கு பொறுப்பு. நாளைக்கி டிப்பார்ட்மெண்ட்ல என்கொயரி கின்கொயரினு போட்டு கொடைஞ்சா யாரு பதில் சொல்றது? எதுக்கு இந்த வம்பு?” என்று உற்சாகமில்லாமல் பேசினார். நல்ல வேளையாக, அப்போது எனக்கு அருகில் சங்கரப்பா இருந்தார். அவர் இந்த விஷயத்தில் பல மடங்கு உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் இருந்தார். ..யின் எல்லா சந்தேகங்களுக்கும் அவரே பதில் சொன்னார். கடைசியாக .. “எனக்கு எதுவும் தெரியாது. மஸ்டர் ரோல் கொடுக்கறதும் சம்பளம் கொடுக்கறதும்தான் என் வேலை. மத்தபடி கேபிள் வேலையெல்லாம் சரியா நடக்கணும். அதுக்கு நீங்கதான் பொறுப்புஎன்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்.

திங்கள் கிழமை சோதனை நடந்து முடிந்தது. முப்பதில் இருபது பேர் தேறினார்கள். இருபது பேரின் பெயர்களையும் மஸ்டர் ரோலில் குறித்துக்கொண்டேன். முகாமிலேயே தங்கிக்கொள்ள வசதியாக எல்லோருக்கும் கூடாரங்கள் வழங்கப்பட்டன. விரும்புகிறவர்கள் மட்டும் வீட்டுக்குச் சென்றுவரலாம் என்று சொன்னேன்.

அடுத்த நாளே வேலயைத் தொடங்கிவிட்டோம். .. முகாமுக்குத் திரும்பிச் செல்லவே இல்லை. மாலை வரைக்கும் வேலை நடக்கும் இடத்திலேயே நின்றிருந்தார்.  மாலைக்குள் நூறு மீட்டர் பள்ளம் தயாராகிவிட்டதைப் பார்த்த பிறகுதான் முகாமுக்குத் திரும்பினார். ஆனாலும் அவர் பதற்றம் குறையவில்லை. எத்தனை நாளைக்கு இது தாங்குமோ என் காதுபடவே அவர் முணுமுணுத்தார். இரண்டு வார இடைவெளிக்குள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கேபிள் புதைத்து முடித்ததும்தான் அவருக்குள் நம்பிக்கை பிறந்தது. அடுத்த இரண்டு வாரங்களில் இன்னொரு கிலோமீட்டர் கேபிளும் புதைக்கப்பட்டுவிட்டது. அந்த மாத இறுதியில் இளைஞர்களுக்கு அவரே நேரிடையாக சம்பளத்தைப் பிரித்துக் கொடுத்தார். நான் சாட்சிக் கையெழுத்திட்டேன். ஒவ்வொருவருக்கும் ஒரு நோட்டு போட்டு அவர்கள் பெயரில் அந்த வேலை நாட்களைப் பதிவு செய்து கையெழுத்து வாங்கிக் கொடுத்தேன். “இந்த நோட்டுதான்டா எதிர்காலத்துல உதவக்கூடிய  ஜாதகம். ஜாக்கிரதயா வச்சிக்குங்க

அன்று மாலை நகரத்துக்குச் சென்று கூடாரங்களுக்கு லாந்தர் விளக்குகளும் மண்ணெண்ணையும் வேறு சில பொருட்களும் வாங்கவேண்டி இருந்தது. நானும் சங்கரப்பாவும் சென்றிருந்தோம். திரும்புவதற்குள் இருட்டிவிட்டது.

முகாமின் மையப்பகுதியில் இளைஞர்களுக்கு அருகில் ஒரு முதியவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும்யாரு சங்கரப்பா அது?” என்று கேட்டேன்.  தெரியலயே சார். புது ஆளா இருக்குது. இருங்க விசாரிக்கறேன்என்றபடி இளைஞர்களை நோக்கி நகர்ந்தார். நானும் பின்னாலேயே சென்றேன். அதற்குள் அவர் எழுந்து நின்று என்னைப் பார்த்துநமஸ்காரா சாகிப்ரேஎன்றார். காவி நிறத்தில் ஒரு வேட்டியையும் சாம்பல் நிறத்தில் ஒரு கதர்ச்சட்டையையும் அணிந்திருந்தார். நரைத்த தலைமுடி. நெற்றி நிறைய திருநீறால் ஆன மூன்று கோடுகள். கழுத்தில் ருத்ராட்சை மாலை அணிந்திருந்தார். ஒவ்வொன்றும் ஒரு நாவல்பழ அளவுக்கு உருண்டிருந்தது.

யாரு நீங்க? என்ன விஷயமா வந்திருக்கிங்க?”

சித்ரதுர்கா பக்கத்து ஆளுங்க நான். லோட் எடுத்துட்டு வந்த லாரில ஏறி வந்தன். அவுங்க இங்க செக் போஸ்ட்ல எறக்கி உட்டுட்டு போயிட்டாங்க. அந்த செக் போஸ்ட் ஆபீசர்தான் உங்கள பாக்கச் சொன்னாரு. எனக்கு ஏதாச்சும் வேலை கொடுத்தா, உங்களுக்கு ரொம்ப புண்ணியமா இருக்கும்.”

எனக்கு அவருக்கு எப்படி பதில் சொல்வதென்றே தெரியவில்லை. “இங்க பாருங்க. உங்க வயசுக்கு இங்க இருக்கற வேலைய செய்யறது ரொம்ப கஷ்டம். பள்ளம் தோண்டறது, மண்ண வாரறது, ட்ரம் தள்ளறது இந்த மாதிரி வேலைங்கதான் இருக்குது. உங்களால அதயெல்லாம் செய்யமுடியாது…” என்று தயக்கத்தோடு சொன்னேன்.

அப்படி ஒரேடியா சொல்லி அனுப்பாதீங்க சார். நானும் இந்த புள்ளைங்களோடு சேந்து வேல செய்றன் சார்.”

நான் மெளனமாக அவரையே பார்த்தபடி இருந்தேன்.

ஒரு ஜோடி ஒரு நாளைக்கு அஞ்சு மீட்டர் வெட்டணும்ன்னு புள்ளைங்க சொன்னாங்க. என் கூட ஜோடியா யார வேணும்ன்னாலும் அனுப்புங்க. அஞ்சு மீட்டர் வெட்டிக் காட்டறன். அப்பதான் உங்களுக்கு நம்பிக்கை வரும்.”

சொன்னா கேளுங்க பெரியவரே, அதெல்லாம் கஷ்டமான வேலை. நீங்க வேற எங்கயாச்சிம் போய் முயற்சி செஞ்சி பாருங்க.”

வயசானவன்னு நெனைச்சிட்டீங்களா சார்? இந்த வேலையெல்லாம் செஞ்சி அனுபவமுள்ள ஆள்தான் சார் நான். கிராமத்துல எனக்கு மூனு சென்ட் பூமி உண்டு. சோளம் வெளையற மண்ணு. அதுல வாய்க்கால் வெட்டறது, கள எடுக்கறதுன்னு காட்டு வேலை  எல்லாத்தயும் செஞ்சி பழக்கம் உள்ளவன்தான் சார்.”

மூனு சென்ட் பூமிய வச்சிகிட்டு இங்க வந்து வேலை செய்யணும்ன்னு ஏன் நெனைக்கறீங்க?”

ஒருகணம் மெளனத்துக்குப் பிறகு எல்லாம் என் தலைவிதிஎன்பதுபோல நெற்றியில் ஒரு விரலால் கோட்டை இழுத்தபடி கசப்புடன் புன்னகைத்தார். “பத்து வருஷத்துக்கு முன்னாலயே பொண்டாட்டி செத்துட்டா. நானும் அப்பவே போயிருந்தா நிம்மதியா இருந்திருக்கும். நான் உயிரோட இருக்கறது வரமா, சாபமான்னே தெரியல. மூனு சென்ட் பூமியையும் மூனு புள்ளைங்களுக்கு பிரிச்சி குடுத்தன். ஒருத்தனுக்கும் ஒழுங்கா வேல செஞ்சி வாழ துப்பு இல்ல. தரிசா போட்டுட்டு கூலி வேலைக்கு போறானுங்க. என் வார்த்தைக்கு ஒரு பைசா மதிப்பு கூட இல்ல. திடீர்னு ஒரு நாள் நாம ஏன் இங்க இருக்கணும்ன்னு தோணிச்சி. அப்பவே ஊர விட்டு கெளம்பிட்டேன்.”

அவர் கதையைக் கேட்க எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நான் மெதுவாகஇங்க பாருங்க. நாங்க குடுக்கற மூனு ரூபா சம்பளத்துல  உங்களால என்ன செய்யமுடியும்? வேற எந்த எடமாவது பாருங்க  பெரியவரேஎன்றேன்.

திகைப்புக்கு மாறாக அவர் முகத்தில் மறுபடியும் புன்சிரிப்பையே பார்த்தேன். ”எனக்கு மூனு ரூபாயே பெரிய சம்பளம்தான் சார். தயவுசெஞ்சி என்ன வெளிய போன்னு மட்டும் சொல்லிடாதீங்கஎன்றார்.

எங்க .. வரட்டும் பெரியவரே. அவர்கிட்ட கலந்து பேசிட்டு உங்களுக்கு பதில் சொல்றேன்…”

அன்று இரவு உணவு நேரத்தில் ..யிடம் அந்தப் பேச்சை எடுத்தேன். அவருடைய குரலில் வழக்கமான சலிப்பையே உணரமுடிந்தது. ”நாம என்ன ஆதரவற்றோர் இல்லமா நடத்தறம்? புதுசு புதுசா பிரச்சினய நீங்களே ஏன் இழுத்து போட்டுக்கறீங்க?” என்று கடிந்துகொண்டார். “பாத்தா பாவமா இருக்குது சார். நீங்களும் ஒரு வார்த்த பேசி பாத்துட்டு முடிவ சொல்லுங்கஎன்றேன். “சரி சரிஎன்று தலையசைத்துக்கொண்டார் அவர்.

சாப்பாட்டுக்குப் பிறகு அந்தப் பெரியவரை வரச் சொன்னேன். அவர் வந்து ..க்கு வணக்கம் சொன்னார். பெரியவர் குறிப்பிட்ட கிராமம் அவருக்கு அறிமுகமான இடமாக இருந்தது. அதனால் .. தன்னிச்சையாக உரையாடலை வளர்த்துக்கொண்டே சென்றார். எண்ணற்ற கேள்விகளைக் கேட்டு அவர் சொன்ன பதில்களைக் கேட்டுக்கொண்டார். இறுதியாக ஒரு பெருமூச்சுடன் என்னைப் பார்த்துபத்தோடு பதினொன்னா இருக்கட்டும் விடுங்க. மஸ்டர் ரோல் நெம்பர நான் இருபத்தியொன்னா மாத்திக்கறேன்என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

எங்க ..யே சொல்லிட்டாரு. அப்பறம் என்ன, நிம்மதியா போய் சாப்ட்டு படுங்க பெரியவரேஎன்று அவரை அனுப்பிவைத்தேன். அவர் மகிழ்ச்சியுடன் கைகளைக் குவித்து வணங்கிவிட்டுத் திரும்பினார்.

நான் அப்போதுதான் நினைவு வந்தவனாகஒங்க பேரு?” என்று கேட்டேன். அவர் திரும்பிகங்கய்யா சார். எம்.ஆர்.கங்கய்யாஎன்றார்.

எங்கள் முகாம் பத்து சென்ட் அளவுள்ள ஒரு சதுர நிலம். அதைச் சுற்றி கம்பிவேலி போட்டிருந்தோம். ஒரு பகுதி முழுக்க கேபிள் உருளைகள். மற்றொரு புறம் வாகனங்கள் நிறுத்துமிடம். அவை வருவதற்கும் செல்வதற்கும் தனித்தனி பாதைகள். இடைப்பட்ட இடத்தில் பதினைந்து கூடாரங்கள். கங்கய்யாவின் வயதை உத்தேசித்து முகாம் வாட்ச்மேன் பொறுப்பைக் கொடுத்தேன்.

கங்கய்யா வாட்ச்மேன் வேலையோடு நிறுத்துக்கொள்ளவில்லை. அவராகவே பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். அதிகாலையிலேயே எழுந்து துங்கபத்திரை கால்வாயில் சென்று குளித்துவிட்டு நடந்து வருவார். ஈரத்துணிகளை உலர்த்திவிட்டு புதுத்துணி அணிந்துகொண்டு நெற்றியிலும் மார்பிலும் திருநீறு பூசிக் கொள்வார்.   பிறகு தன் பெட்டிக்குள் ஒட்டி வைத்திருக்கும் சிவலிங்கத்தின் முன் உட்கார்ந்து கண்களை மூடி ஒரு நிமிடம் பூஜை செய்வார். சூரியன் உதயமாகி கீழ்வானம் சிவக்கும் நேரத்துக்குச் சரியாக கூடாரத்தைவிட்டு வெளியே வந்து நின்று சூரியனை வணங்குவார். அக்கணமே அவர் தன்னுடைய வேலைகளைத் தொடங்கிவிடுவார்.

முகாமில் அங்கங்கே முளைத்திருக்கும் புல்லையெல்லாம் முதலில் செதுக்கி சுத்தம் செய்வார். எந்த இடத்திலும்  மேடு பள்ளம் இல்லாதபடி செதுக்கி சமப்படுத்திவைப்பார். ஓரமாக நின்றிருக்கும் எல்லா வாகனங்களையும் சுத்தமாக கழுவித் துடைத்து திருநீறும் குங்குமமும் வைப்பார்.

எங்கள் முகாமிலிருந்து சிறிது தொலைவில் ஒரு குடிநீர்க்குழாய் இருந்தது. இரண்டு கைகளிலும் இரு குடங்களோடு அங்கு சென்று தண்ணீர் பிடித்துவந்து நிரப்புவார். யாரும் சொல்லாமலேயே தன்னால் முடிந்த வேலைகளை அவராகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். மாலை கவிந்ததும் எல்லாக் கூடாரங்களுக்கும் சென்று லாந்தர் விளக்குகளை எடுத்து சிம்னியைத் துடைத்து எண்ணெய் நிரப்பி ஏற்றிவைத்துவிட்டு வருவார். அவர் நடமாடத் தொடங்கிய பிறகு எங்கள் முகாம் ஒளிமயமாகிவிட்டது.

ஒரு வாரத்துக்குப் பிறகு மற்ற இளைஞர்கள் போல அவரும் சமையல் பாத்திரங்களை வாங்கிவந்து வைத்துக்கொண்டு கல் அடுக்கி அடுப்புமூட்டி சோறும் குழம்பும் வைத்துச் சாப்பிடத் தொடங்கினார். இளைஞர்கள் பேரப்பிள்ளைகளுக்கே உரிய உரிமையுடன்இந்தாங்க தாத்தா, எடுத்துக்குங்கஎன்றபடி தம் வீடுகளிலிருந்து கொண்டுவந்த சோளரொட்டிகளையும் ரவாலட்டுகளையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

ஒருநாள் முகாமுக்குள் நுழையும் கம்பித் தடுப்புக்கு அருகில் ஒரு குழியைத் தோண்டி எங்கிருந்தோ கொண்டுவந்த இரு நெல்லிக்கன்றுகளை நட்டார். நாலைந்து கீற்றுகள் மட்டுமே கிளைத்திருந்த கன்றுகளின் நிமிர்ந்த தோற்றம் கண்ணைக் கவர்ந்தது. அப்போதுதான் துங்கபத்திரைக் கால்வாயில் குளித்துவிட்டு திரும்பிய நான் அதைப் பார்த்துவிட்டு சில கணங்கள் நின்றுவிட்டேன்.

இதெல்லாம் எதுக்கு பெரியவரே?”

சும்மா ஆசைக்குதான் சார். நேத்து ஆத்தோரமா பார்த்தேன். இங்க இருந்தா அழகா இருக்குமேன்னு எடுத்தாந்து வச்சேன். ஒரு பத்து நாள் போதும் சார். மண்ணுல வேர் புடிச்சிக்கும். அப்பறம் தானாவே வளந்துடும்

அது சரி பெரியவரே, செடி வைக்கவும் மரம் வைக்கவும் இது என்ன நம்ம வீட்டு இடமா? மூனு மாசம் வேல முடிஞ்சதும் எல்லாத்தயும் கலச்சி எடுத்துகினு வேற எடம் பாத்து போற நாடோடிக் கூட்டம் நாம. நமக்கெதுக்கு இந்த வேலை. சொல்லுங்க. நாம போயிட்ட பிறகு இதுங்கள யாரு காப்பாத்துவா?”

அவர் ஒருகணம் அமைதியாக நெல்லிக்கன்றையே பார்த்துக்கொண்டு நின்றார். பிறகு பெருமூச்சுடன்யாராவது வருவாங்க சார். இந்த கங்கய்யா இல்லைன்னா தண்ணி ஊத்தறதுக்கு இன்னொரு நிங்கய்யா வருவான்என்று சொன்னார்.

ரொம்பதான் நம்பிக்கை உங்களுக்கு.”

நான் நெனச்சி என்ன சார் ஆகப் போவுது? அந்த ஆண்டவன் நெனைக்கணும். அவன் கணக்கு என்னன்னு யாருக்கு தெரியும்? இதுங்க பொழைக்கணும்ங்கறது அவனுடைய கணக்கா இருந்தா, பொழைக்கும். இல்லைனு சொன்னா, இந்த மண்ணோடு மண்ணா போய் சேரும்.”

நல்லா பேசறீங்க

நெல்லிக்கன்னு மகாலட்சுமியுடைய மரம் சார். நம்ம வாசல்ல நெல்லிக்கன்னு இருந்தா, மகாலட்சுமியே நமக்கு காவல் காக்கற வேலைய செய்றாங்கறது ஒரு நம்பிக்கை.”

அப்படியா? ஒரு கதையும் நான் அப்படி படிச்சதில்லையே. நீங்க சொல்றது புதுசா இருக்குது.”

எங்க ஊரு கோயில்ல அரிகதை சொல்ல வர்ற பெரியவரு அடிக்கடி அந்தக் கதைய சொல்வாரு. கதை முடியற நேரத்துல, அதனால ஏழைபாழைங்களே, உங்க வீட்டு வாசல்ல நெல்லிமரம் வச்சி வளத்துட்டு வாங்க. தனபலம், தானியபலம், ஆரோக்கியபலம் எல்லாம் வந்து சேரும்னு சொல்லி முடிப்பாரு.”

தெரிஞ்ச கதையா, தெரியாத கதையா, புரியலை. என்ன கதை, சொல்லுங்க. நானும் ஒரு தரம் கேக்கறேன்.”

சின்ன கதைதான் சார். ஒரு காலத்துல குபேரன் பிரம்மாவ நெனச்சி தவம் இருந்தானாம். அவன் தவத்த மெச்சி நேருல காட்சியளித்த பிரும்மா பொன்னும் மணியும் கொட்டற புஷ்பக விமானத்தை பரிசா கொடுத்துட்டு போனாராம். ஆனா குபேரனுக்கு அத வச்சி காப்பாத்திக்கற தெறமை  இல்லை. அவர் மேல படையெடுத்து வந்த ராவணன் அந்த புஷ்பக விமானத்தை தூக்கிட்டு போயிட்டாராம். குபேரனுக்கு ஒரே துக்கம். அவரு சோகத்துல கொழம்பி போய் உட்கார்ந்திருந்த சமயத்துல சுக்கிரன் வந்து குபேரன்கிட்ட இருந்த செல்வத்தையெல்லாம் வாரி எடுத்துகிட்டு போயிட்டாராம்.”

ஐயோ பாவமே. புராணத்துலயும் இப்படியும் பறிகொடுக்கற ஆள் இருக்காரா?”

எல்லாத்தயும் பறிகொடுத்த குபேரன் நேரா கைலாசத்துக்கு போய் சிவபெருமான பாத்து அழுதாராம். எதையும் பாதுகாப்பா வச்சி காப்பாத்திக்க தெரியாத ஆளா இருக்கான, இவன என்ன செய்யறதுன்னு கொஞ்ச நேரம் சிவன் யோசிச்சாராம். அதுக்கப்புறம் குபேரன பாத்து நீ உன் ஊருக்கு போய் ஒரு நெல்லி வனத்த உண்டாக்கு. நெல்லிமரம்ங்கறது மகாலட்சுமி இருக்கப்பட்ட இடம். அந்த வனத்த நீ காப்பாத்தி வரவரைக்கும் மகாலட்சுமியும் உன் கூடவே இருப்பா. போய் வான்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாரு. சிவபெருமான் சொன்ன வார்த்தைப்படியே  அளகாபுரிக்கு வந்து ஒரு நெல்லித்தோப்ப உருவாக்கி வளத்து வந்தாரு குபேரன். தோப்பு வளரவளர அவருகிட்ட செல்வம் வந்து குவிஞ்சிகிட்டே இருந்தது. இழந்து போன செல்வத்த விட பத்து மடங்கு இருபது மடங்கு புது செல்வம் அவருகிட்ட வந்து சேர்ந்திச்சாம்.”

நான் அதுவரை கேட்காத அந்தக் கதை எனக்குப் புதுமையாக இருந்தது. ”அப்ப நம்ம கேம்ப்புக்கு செல்வம் சேரப் போவுதுன்னு சொல்றீங்கஎன்று சிரித்தேன். கங்கய்யாவும் சிரித்தார்.

நாங்கள் அந்த முகாமில் ஆறு மாதங்கள் இருந்தோம். அந்த ஆறு மாதங்களுக்குள் கங்கய்யா அந்த பத்து சென்ட் சதுர நிலத்தில் வேலிப்பகுதியெங்கும் ஏராளமான கன்றுகளைக் கொண்டுவந்து நட்டு நீரூற்றினார். முன்னூறுக்கும் மேற்பட்ட கன்றுகள். பெரும்பாலும் வேப்பங்கன்றுகள். முருங்கைக்கன்றுகள். மற்றவை கறிவேப்பிலை. துளசி. கொத்துமல்லி. கத்தரி. வெண்டை. மிளகாய்ச்செடி போன்றவை. அந்த முன்னூறு செடிகளுக்கும் ஒவ்வொரு நாளும் குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து குவளையால் ஊற்றினார். எல்லாச் செடிகளுமே பிழைத்துக்கொண்டன. நாங்கள் அந்த முகாமைவிட்டு வெளியேறும்போது ஒவ்வொரு செடியும் அரை அடி, ஒரு அடி உயரத்துக்கு தளிர்விட்டு காற்றிலாடின.

அங்கிருந்து முனிராபாத் சென்றோம். பிறகு கினிகெரெ, ஹொசஹள்ளி, கொப்பல் என்று சென்றுகொண்டே இருந்தோம். அந்தப் பாதைத்தடம் முடிந்ததும் மற்ற தடங்களுக்காக லக்குண்டி, கதக், ஹுப்ளி, சித்ரதுர்கா, தாவணகெரெ என சென்றுகொண்டே இருந்தோம். நான்கு ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் மூன்று அல்லது நான்கு மாதங்கள். எல்லா முகாம்களிலும் சுற்றுப்புறத் தூய்மையும் பாதுகாப்பும் கங்கய்யா பொறுப்பில் இருந்தன. கங்கய்யா தன்னுடைய ஈடுபாட்டின் காரணமாக ஒவ்வொரு முகாமையும் ஒரு சின்ன நந்தவனமாகவே மாற்றினார். விட்டுப் பிரியும்போது எனக்குத்தான் மனவருத்தமாக இருக்குமே தவிர, அவர் அதைப்பற்றி கவலைப்படமாட்டார். “வளர நெனைக்கணும்ங்கற செடிக்கு யாராவது வந்து தண்ணி ஊத்துவாங்க சார்என்று ஒவ்வொருமுறையும் சிரித்து மழுப்பிவிடுவார்.

புது இடத்துக்கு வந்த பிறகு பழைய இடத்துக்குப் போயி நீங்க உருவாக்கின நந்தவனத்த பாக்கணும்னு என்னைக்காவது ஒருநாள் உங்களுக்குத் தோணியிருக்குதா? என்று ஒருநாள் பேச்சுவாக்கில் கேட்டேன். அதற்கு அவர் உதட்டைப் பிதுக்கிதோணியதில்லை சார்என்றேன். ஏன் என்று கேட்டேன். “வைக்கறதுதான் என் வேலை. காப்பாத்தறதும் கைவிடறதும் கடவுள் வேலைஎன்று சிரித்துக்கொண்டே சொன்னார் அவர்.

நாங்கள் தங்கியிருந்த ஒவ்வொரு முகாமிலும் கங்கய்யா ஒரு நந்தவனத்தை உருவாக்கினார். அவருக்குள் வாழ்ந்த விவசாயிக்கு அந்த வேலை ஒரு வடிகால் என நினைத்துக்கொண்டேன். தினமும் நாற்பது ஐம்பது குடம் தண்ணீர் சுமந்துவந்து நூறு இருநூறு செடிகளுக்கு ஊற்றினால்தான் அவருக்குத் தூக்கமே வரும்.

எதிர்பாராத வகையில் அலுவலக விதிகள் மாறின. வட இந்தியாவில் எங்கோ ஓரிடத்தில் ஆட்களையே எடுக்காமல் மஸ்டர் ரோல் கொடுத்து பணம் பட்டுவாடா செய்து கணக்கெழுதுவதாக எழுந்த புகார்களை அடுத்து தீவிர விசாரணைகள் துறைக்குள் நிகழ்ந்தன. அதன் விளைவாக, உடனடியாக மஸ்டர் ரோல் முறை ரத்து செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு மஸ்டர் ரோல் ஊழியராக வேலை செய்து ஆண்டுக்கு 240 நாட்கள் வேலை செய்திருந்த அனைவரும் நிரந்தர ஊழியர்களாக நியமனம் பெற்றனர். என்னோடு எல்லா முகாம்களுக்கும் மாறிமாறி வந்து வேலை செய்த இருபது இளைஞர்களும் அக்கணமே நிரந்தரப் பணியாளர்களாக மாறினர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் ..க்கு மாலை போட்டு மலர்ச்செண்டு கொடுத்து மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். கண்கள் தளும்ப ஒரு கணம் என்னைத் திரும்பிப் பார்த்த .. தன் அன்பளிப்பாக அனைவருக்கும் ஓர் இனிப்புப்பொட்டலம் வாங்கிக் கொடுத்தார்.

எங்கள் முகாமிலேயே தனித்துவிடப்பட்ட ஒரே மனிதர் நந்தவனம் கங்கய்யா மட்டுமே. அவர் எங்களிடம் வேலைக்குச் சேரும்போதே அறுபதை நெருங்கிய வயதில் இருந்தார். இனிமேல் மஸ்டர் ரோலே இல்லை என்கிற சூழலில் அவரை தொடர்ந்து வேலைக்கு வைத்திருக்கவும் வழியில்லை. வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தப்புள்ளிகள் வழியாக தீர்மானிக்கப்பட்டு ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கும் வழிமுறை செயல்பாட்டுக்கு வந்துவிட்டதால் அவரை என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினேன். அவருக்கு என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்கிற எண்ணம் குற்ற உணர்ச்சியாகப் பெருகி என்னை வதைத்தது.

அந்த மாத இறுதியில் சம்பளம் கொடுக்கும்போது எங்கள் முகாம் சார்பில் அவருக்கு ஒரு சின்ன விருந்து கொடுத்தோம். எங்கள் .. அவருக்கு ஒரு வேட்டி சட்டை எடுத்துக்கொடுத்தார். நான் அவருக்கு ஒரு கம்பளியை அன்பளிப்பாகக் கொடுத்தேன். இளைஞர்கள் அவருக்கு ஒரு கைப்பெட்டியை பரிசாக அளித்தார்கள். ஆளுக்குக் கொஞ்சம் தொகையென ஐநூறு ரூபாயைத் திரட்டி ஒரு தட்டில் தாம்பூலத்தோடு வைத்துக் கொடுத்தோம்.

அன்று இரவு உணவுக்குப் பிறகு அவருக்கு அருகில் சென்றுநான் ஒரு விஷயம் சொல்றேன். நீங்க தயவுசெஞ்சி தப்பா எடுத்துக்க வேணாம். இத்தன வருஷத்துல நீங்க லீவும் எடுத்ததில்ல.  ஒருநாளும் ஊருக்கும் போனதில்ல. எல்லாத்தயும் மறந்துட்டு நீங்க இப்பவாச்சிம் ஊருக்கு போவணும். ஒரு புது மனுஷனா குடும்பத்தோடு சேந்து வாழணும்என்றேன். அவர் புன்னகையோடு திரும்பி கைகுவித்து வணங்கினார். விளக்குவெளிச்சத்தில் அவர் நெற்றியில் திருநீற்றுக்கோடுகள் மின்னின.

அதற்குப் பிறகு ஆறாண்டுகள் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலுமாக பல தடங்களில் பணிபுரிந்தேன். இறுதியாக பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன். இருபதாண்டுகளுக்குப் பிறகு துங்கபத்திரையையும் ஹம்பியையும் காட்டுவதற்காக என் மனைவியோடும் மகனோடும் ஹோஸ்பெட் சென்றிருந்தேன்.

அணைக்கட்டில் நின்றபடி வெள்ளிக்குழம்பென பரவியோடும் தண்ணீர்ப்பரப்பில் சூரியன் ஒரு சிவந்த பழமென மறைவதைப் பார்ப்பது தவறவிடக்கூடாத அனுபவம் என்பதால் அதை என் மகனை அழைத்துச் சென்று காட்டினேன். பிறகு உரையாடியபடி திரும்பி இறங்கிவந்து காரில் ஏறி விடுதிக்குத் திரும்பினோம். ஒரு திருப்பத்தில் அது எங்கள் பழைய கேபிள் வழித்தடம் என்பதையும் நாங்கள் முகாமிட்டிருந்த நான்கு செண்ட் இடம் நெருங்குகிறது என்பதையும் உணர்ந்தேன்.

வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நாங்கள் இறங்கி நடக்கத் தொடங்கினோம். ஒவ்வொரு இடமாக என் மகனிடம் விவரித்துக்கொண்டே நடந்தபோது தொலைவில் துங்கபத்திரைக்க்கால்வாய் மதிலும் செக்போஸ்ட் கட்டிடமும் தெரிந்தது. ”அதோ அங்கேதான்என்றபடி வேகமாக அந்தக் கட்டடத்துக்குப் பின்னால் சென்று நின்றேன்.

வெற்றிடம் என எதுவுமே அங்கு இல்லை. அந்த நாலு செண்ட் நிலம் இருந்த இடம் தெரியாமலேயே போய்விட்டது. பெரியபெரிய நான்கு மாடி அடுக்ககங்கள் அங்கே நின்றிருந்தன. அவற்றின் விளக்கு அலங்காரம் கண்ணைப் பறித்தது.

பெருமூச்சோடு திரும்பியபோது ஒரு மூலையில் இரு நெல்லிமரங்கள் காற்றிலசைவதைப் பார்த்தேன். விளக்குவெளிச்சத்தில் கூர்மையான நெல்லி இலைகள் பச்சைநிறச் சிறகுகளின் அடுக்குபோல நீண்டிருந்தன. அக்கணமே பழைய நினைவுகள் அனைத்தும் பொங்கியெழுந்தன. ”அதுதான் அதுதான்என அவனிடம் எல்லாக் கதையையும் சொன்னேன். கங்கய்யாவின் திருநீறு பூசிய முகம் என் நினைவில் ஒருகணம் மின்னி மறைந்தது.

(பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2021 இதழில் வெளிவந்தது.)