Home

Monday, 19 July 2021

தீரா வேட்கை - கட்டுரை

  

இன்றைய கவிதைப் படிமங்கள் இருவகையான சித்திரங்களை வாசகர்களுக்கு அளிக்கின்றன. ஒன்று துயரத்தின் சித்திரம். இன்னொன்று புன்னகையின் சித்திரம். இரண்டுமே மானுட வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத அம்சங்கள். இவையிரண்டும் மாறிமாறி நிகழ்ந்து வாழ்க்கையை ஒரு மாறாத புதிராகவே இந்த மண்ணில் நிலைநிறுத்துகின்றன. ஒவ்வொரு கவிஞனின் நெடும்பயணமும் அந்தப் புதிருக்கான விடையைத் தேடும் முயற்சிகளே. கதிர்பாரதியின் கவிதைகளை அத்தகு நெடும்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நவீன கவிஞனின் கையேட்டுக்குறிப்புகள் என்று சொல்லலாம்.

கதிர்பாரதியின் புதிய கவிதைத்தொகுதி உயர்திணைப்பறவை என்னும் தலைப்பில் இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுடன் ஒரு தொகைநூலின் தோற்றத்துடன் வெளிவந்துள்ளது. காட்சிகளாக உறைந்திருக்கும் எண்ணற்ற கணங்கள் இத்தொகுதியில் நிறைந்திருக்கின்றன. அவற்றை வாசிப்பது அரிதான ஓவியங்களைக் கொண்ட ஒரு கண்காட்சிக்கூடத்தைச் சுற்றி வருவதுபோல உள்ளது.

கோட்டோவியங்களாக தீட்டப்பட்டிருக்கும் அம்மாவைப்பற்றிய சித்திரங்களில் படிந்திருக்கும் துயரத்தின் சாயல் அமைதியிழக்க வைக்கிறது. ஒரு சித்திரத்தில் பேச்சு வராத பிள்ளைக்காக நாக்கில் அலகு குத்தி காவடி தூக்கி நடக்கிறாள் அம்மா. இன்னொரு சித்திரத்தில் ஒற்றை ஆளாக துணிச்சலாக ஆற்றைக் கடந்து செல்கிறாள் அம்மா. மற்றொரு சித்திரத்தில் காலமெல்லாம் தன் சொந்தத் தோற்றத்தைப்பற்றிய அக்கறையே இல்லாமல் கொண்டதே கோலமெனத் திரிந்தாலும் தன் தாய்வீட்டுக்குச் செல்லும் முன்பு அவள் முன்னால் திருத்தமாக தன்னைக் காட்டிக்கொள்வதற்காக வேகவேகமாக முகம் திருத்தி கண்களுக்கு மை தீட்டிக் கொள்கிறாள் அம்மா. வேறொரு சித்திரத்தில் பேயை விரட்டியடிப்பதற்காக மிளாரால் ஓங்கியடிக்கும் பூசாரியைப் பார்த்து சிரிக்கிறாள் அம்மா. பிறிதொரு சித்திரத்தில் ஏர்வாடி தர்காவில் விட்டுவிட்டு வருவதற்காக சங்கிலி பிணைத்து அழைத்துச் செல்லப்படும்போது, அருகிலிருக்கும் மகனுடைய தலையைத் தடவிக்கொடுக்கும் அம்மா. வேறொரு சித்திரத்தில் சாரையும் நாகமும் பிணையல் போடும் வைக்கோல்போர்த் தோட்ட சீமைக்கருவேல மரத்தடியில் ஓரிரவு முழுதும் அழுதபடி அமர்ந்திருக்கும் அம்மா. இப்படி ஏராளமான சித்திரங்கள். ஒவ்வொரு சித்திரமும் அம்மாவின் வாழ்வு ஏன் இப்படி மாறியது என்னும் கேள்வியை எழுப்பியபடி இருக்கிறது. அதற்குப் பொருத்தமான விடையை அறியமுடியாத தவிப்பால், இதுவோ அதுவோ என மேலும் மேலும் கேள்விகளையே பெருக்கிக்கொள்கிறது.

ஒரு கவிதையின் இறுதியில் இடம்பெற்றிருக்கும் நீயும் பார்த்திருந்தாய்தானே நிலவேஎன்னும் வரி மகனுக்கும் அம்மாவுக்கும் நடுவில் நிலவை ஒரு சாட்சியாக கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. மகன் மண்ணில் நின்று பார்த்த சாட்சி. நிலவு விண்ணில் நின்று பார்த்த சாட்சி. எனக்குத் தெரியாத விடை உனக்குத் தெரிகிறதா என அவன் கேட்கவில்லை. அந்த வரியைப் படிக்கும் நமக்குத்தான் அப்படி கேட்கத் தோன்றுகிறது.

மகனுடைய துயரச்சுமையைக் காலம் மெல்ல மெல்ல கரைத்துவிடுகிறது. பிறகு அம்மாவைப்பற்றிய இனிய நினைவுகள் மிதந்து வருகின்றன. அம்மாவின் புன்னகையும் அம்மாவின் அன்பும் இனிய நினைவுகளாக மாறுகின்றன. அம்மாவை நினைவூட்டும் அனைத்தும் அவனுக்கு அமுதமாக மாறிவிடுகின்றன.

 

அம்மாவின் வெளிர்நீலச் சேலையை

ஒருமுறை சொப்பனத்தில் கண்டேன்

நதிபோல அது நெளிந்து கொண்டிருந்தது

மீன்குஞ்சுபோல அதில் நீந்தினேன்

 

என்னும் சித்திரம் அவன் எண்ணத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் படரத் தொடங்கியிருக்கும் இனிமையையும் உணர்த்துகின்றன. துயரத்துக்கும் புன்னகைக்கும் இடையிலான கவிதைப்பயணம் ஒரு பேரனுபவமாக உள்ளது.

புன்னகைக்க வைக்கும் கவிதைகளில் ஒன்று வீடுபோல் ஒரு வீடு. கதிர்பாரதி இக்கவிதையில் ஒரு வீட்டின் சமையலறையை நடமாடும் பாத்திரமாக மாற்றியிருக்கிறார். சமையலறை ஒருநாள் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறது. வீதியில் நடந்து சென்று எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் உண்ணத் தொடங்குகிறது. முன்பு எப்போதும் இப்படி நடந்துகொண்டதில்லை.  அதன் நடத்தை திடீரென இப்படி மாறிவிடுகிறது. வழியில் நின்ற வேப்பமரத்தைச் சாப்பிடுகிறது. மரத்தடி வேரோடு ஊர்ந்துவந்த ஓணானைப் பிடித்துச் சாப்பிடுகிறது. மரத்தைச் சுற்றிப் பறந்த தட்டான்பூச்சியைக்கூட அது விட்டுவைக்கவில்லை. ஒரு சுற்று சுற்றி வந்த பிறகு ஒரு திருப்பத்தில் தன்னுடைய வீட்டின் முன்னாலேயே வந்து நிற்கிறது. தன்னுடைய வீடு என்ற அடையாளம் புரிந்ததும் மெதுவாக ஒரு பூனை மாதிரி உள்ளே நுழைந்து தனக்குரிய இடத்தில் படுத்துக்கொள்கிறது. தனக்கு வழங்கப்பட்ட ஒரு தம்ளர் பாலை சப்புக்கொட்டி அருந்துகிறது. உயிர்ப்பு மிக்க ஒரு சின்ன சித்திரம். இதில் வீடு என்பது என்ன, சமையலறை என்பது என்ன, அது ஆணைக் குறிக்கும் படிமமா, பெண்ணைக் குறிக்கும் படிமமா என்ற ஆராய்ச்சியையெல்லாம் விட்டுவிடலாம். ஒரு வீட்டின் ஒரு பகுதி திடீரென காணாமற்போய் பேயாட்டம் போட்டுவிட்டு நல்ல பிள்ளை மாதிரி மீண்டும் வீட்டுக்குத் திரும்பி ஒடுங்கி தனக்குரிய இடத்தில் பொருந்திக்கொள்கிறது என்பது எவ்வளவு சுவையான கற்பனை. கணநேர விடுதலையின் கட்டற்ற கொண்டாட்டத்தின் சித்திரத்தை அக்கற்பனை நமக்கு வழங்குகிறது. முதலில் திகைக்கவைத்தாலும், பிறகு நினைத்து நினைத்து புன்னகைக்கும் அனுபவமாக மாறிவிடுகிறது.

புன்னகையையும் துயரத்தையும் ஒருங்கே கொண்ட கவிதை கொக்கிப்பூ.

சிதம்பரம் டைலர் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட்

வேலையில் படுநேர்த்தி

ஜாக்கெட் வடிவமைப்பில் கைநிபுணர்

அவர் கிழித்துத் தைத்த கோடுகள் தாண்டி

ஊரின் பெண்களுக்கு

அளவுகள் துளியும் வழியாது

கொக்கிகள் மடங்கி

முழங்காலில் உட்காரும் துல்லியம்

பிரில்கள் உருவாக்கி பஃப் கைகள் தைப்பார்

பிறகு அவை

கைகள் அல்ல கைமலர்கள்

தையல்கள் அந்தரங்கம் பேசும்

கட்டைவிரல் நகப்பூவால்

பிசிறுகள் நீக்கி

ஜாக்கெட் முதுகு நீவியபடி சொன்னார்….

முனைகள் பொருந்தாமல் காஜா பிசிறிய

ஜாக்கெட் ஒன்றுண்டு என்னிடம்

அது அவர்

உச்சி வகுந்து பிச்சிப்பூ வைத்த கிளியான கதை

உலகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் கண்ணாலேயே அளவு பார்த்து பொருத்தமாக தைத்துக் கொடுக்கும் கலைஞன், சொந்த மனைவிக்கு பொருத்தத்தைக் கணிப்பதில் பிழை செய்துவிட்டதற்கு யாரால் விளக்கம் தரமுடியும். காலப்பிழையால் கணக்கு பிழையானதா? அல்லது கணக்குப் பிழையால் காலப்பிழை நேர்ந்துவிட்டதா? விடை எதுவாக இருந்தாலும், ஏற்கனவே இழந்துவிட்டவன் வாழ்வில் அதற்கு எந்தப் பொருளுமில்லை.

புன்னகைக்கவைக்கும் இன்னொரு கவிதை.

 

அப்படித்தான்

ஓடி வா…. ஓடிவாஎன

முன்னால் ஓடுகிறது

முயல்

வந்துவிட்டேன்வந்துவிட்டேன்என

பின்னால் ஓடித் திணறுகிறது

எறும்பு

இதுவோ

யானை வலசைப்பாதை

 

யானை நடந்த பாதையில் ஓடிப் பழகிய முயல் எறும்பையும் அழைத்துவந்து அந்தப் பாதையில் ஓடவைப்பது நல்ல கற்பனை. ஒவ்வொன்றின் மீதும் ஒவ்வொரு பொருளையேற்றி முடிவே இல்லாமல் ஆய்வு செய்துகொண்டு செல்லலாம். அந்த ஆய்வைவிட, யானையும் முயலும் எறும்பும் ஒரே பாதையில் ஓடும் கற்பனை அருமையாக உள்ளது. உருவங்கள் வேறுபட்டாலும், உள்ளிருந்து இயக்கும் உயிரின் விசை எல்லா உயிரினங்களிலும் ஒன்றாகவே உள்ளது.

 

பிரித்து எழுதுகஎழுதுகிறாள்

நான்காம் வகுப்பு மகள்

வேகவேகமாக…..

கொடைத்திறம் = கொடை + திறம்

சிலம்பாட்டம் = சிலம்பு +ஆட்டம்

மற்போர்= மல்+போர்

தற்காப்பு = தன் +காப்பு

மக்கட்பண்பு = மக்கள்

……………………………………………………………………………………..

……………………………………………………………….

அவள் வேகம் முன்பு

பூமி வந்தால்கூடப் பிரித்துவிடுவாள்

பூ+ மி

 

ஒழுங்கு மாறாமல் செய்யும் செயலில் நிகழும் ஒரு சிறு பிசகைக் கண்டு உருவாகும் புன்னகை மிக அழகானது.

 

குழந்தையின் பென்சில்

அதில் இருந்து

ஒரு கிளி பறக்கிறது

இதுவரை

எந்த மரத்திலும் உட்காராத

அதிசயக்கிளி

அதே பென்சிலில் இருந்து

ஒரு கிளை முளைக்கிறது

இதுவரை

எந்த மரத்திலும் முளைக்காத

அதிசயக்கிளை

அதிசயக்கிளியே, வா

வந்து

அதிசயக்கிளையில் உட்கார்

 

ஒவ்வொரு வரியிலும் குழந்தைமை நிறைந்த இக்கவிதையில் நிறைந்திருக்கும் புன்னகைக்கு அளவே இல்லை.

 

சுடுகாட்டுப்பூக்கள்

நடுவே

ஒரு தேனியைப் பார்த்தேன்

தேன் எடுக்க வந்தேன்என்றது

அதன் காலில்

தேன் மகரந்தங்கள்

 

சுடுகாட்டில் பூத்த பூ என்பதால், அந்தப் பூவில் தேன் இல்லை என்று எப்படி சொல்லமுடியும்? மனிதனுக்குத்தான் சுடுகாடு, தோட்டம், நல்ல இடம், கெட்ட இடம் என எண்ணற்ற வேறுபாடுகள் கண்ணில் பட்டு பாடாய்ப் படுத்துகின்றன. மரம்செடிகொடிகள் எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லை. தேனீக்களும் பறவைகளும் கூட வேறுபாட்டைப் பார்ப்பதில்லை. அவை வாழும் உலகம் வேறுபாடுகளைக் கடந்ததொரு உலகம்.

 

இடி விழுந்து

தலை கருகிய புளியமரம்

பார்த்தபோது,

தலையில்

மண்ணெண்ணெய் ஊற்றி

நெருப்பு வைத்துக்கொண்ட

கதை சொன்னாள்

எலிசபெத் பெரியம்மா

சிரித்தபடி

 

மழைக்காலத்தில் இடி இடிப்பதும் அதனால் மரம் பொசுங்குவதும் இயற்கை. ஆயிரம் மரங்களில் ஒரு மரம் அந்த இடியால் கரிந்துபோகிறது. ஆனால் மனிதர்கள் அப்படி பொசுங்குவதில்லை. அது இயற்கையுமில்லை. அது முற்றிலும் இயற்கைக்கு மாறானது. மனிதர்களின் சதியும் சூழ்ச்சிகளும் விமர்சனங்களுமே அத்தகு மரணங்களுக்குக் காரணங்கள். அந்தத் துயரத்தையும் புன்னகைத்தபடி நினைவுகூரும் வகையில் மனிதர்கள் வெகுவேகமாக துயரத்தைக் கடந்துவந்து விடுகிறார்கள்.

கிருஷ்ண நிழல் இன்னொரு முக்கியமான கவிதை. மகாபாரதத்தின் தொடக்கத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் வில்வித்தை பயிற்சி தரும் துரோணர் இலக்கைச் சுட்டிக்காட்டி அங்கே தெரிவது என்ன என எல்லோரிடமும் கேட்கும் ஒரு கேள்வி மிகமுக்கியமானது. அனைவருக்கும் இலக்கு அங்குள்ள எல்லாவற்றோடும் இணைந்த ஒன்றாகத் தெரியும்போது, அர்ஜுனனுக்கு இலக்கு மட்டுமே தெரிகிறது. இது ஒரு தருணம். குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கவிருக்கும் தருணத்தில் அர்ஜுனன்    மனம் சோர்ந்து போர் செய்ய மறுக்கிறான். அப்போது அவனுக்கு கிருஷ்ணன் செய்யும் உபதேசம் துணிவைக் கொடுக்கிறது. இது மற்றொரு தருணம். இந்த இரு தருணங்களையும் கலைத்தும் இணைத்தும் ஒரு மாய நாடகத்தை தன் கவிதையில் நிகழ்த்துகிறார் கதிர்பாரதி.

 

கிருஷ்ணர்

அர்ஜுனனக்குச் சொல்லவே முடியாத

கீதோபதேசம் கீழ்வருவன

 

அதோ

மரம் தெரிகிறதா?’

தெரிகிறது

அதன் பசும் வனப்பும்

மரத்தில் இருக்கும் பூ தெரிகிறதா?’

தெரிகிறது,

அதன் மஞ்சள் நிறமும்

பூவுக்குள் இருக்கும்

காய் மற்றும் கனி தெரிகின்றனவா?’

தெரிகின்றன

அவற்றின் துவரப்பும்

மற்றும் இனிப்பும்

கனிக்குள் இருக்கும் விதை தெரிகிறதா?’

தெரிகிறது.

அதன் மழைத்துளி வடிவமும்

விதைக்குள் இருக்கும் மரம் தெரிகிறதா?’

தெரிகிறது, அதன் மடி நிழலும்

அம்பறாத்தூணியை கழற்றி

ஓரமாக வைத்துவிட்டு வா

அந்த மரத்தின் கீழ்

சிறிது நேரம்

உட்கார்ந்துவிட்டு வருவோம்.

 

அனைவரையும் கொல்லும் மன உறுதியை ஊட்டிய கிருஷ்ணனாக அல்லாமல் கதிர்பாரதி உருவாக்கிய கிருஷ்ணன் யுத்தத்திலிருந்து விலகி வாழும் வழியைச் சொல்கிறான். அமைதியை நாடிச் செல்லும் வழியைச் சுட்டிக்காட்டுகிறான். சண்டை செய்வதைவிட அமைதியே அவனுக்கு முக்கியமாக இருக்கிறது. பகை வேண்டாம், நட்பு வேண்டும் என்பதே அவன் எண்ணமாக இருக்கிறது.

கிருஷ்ணன் சுட்டிக் காட்டியதாலேயே அந்த நிழலுக்கு கிருஷ்ண நிழல் என்று பெயர் சூட்டுகிறார் கதிர்பாரதி. இன்றைய காலகட்டத்தில் கொல் என்று யாரும் சொல்லாமலேயே ஒருவரைக் கொல்கிறார்கள். அந்த அளவு கொலைவெறி ஏறிக் கிடக்கிறது. கொல்லாதே என்றும் பகை வேண்டாம் என்றும் அமைதி வேண்டும் என்றும் சொல்லத்தான் ஆளே இல்லை. அந்த உபதேசம்தான் இன்றைய தேவை. அக்குறையை  கதிர்பாரதி இக்கவிதையில் தீர்த்துவைக்கிறார். கொல் என்று சொல்லும் கிருஷ்ணனைவிட கொல்லாதே, அமைதியாக இருக்கலாம், வா என்று உபதேசிக்கும் கிருஷ்ணனே இன்றைய தேவை.

 

மலைப்பாம்பு

தன் இரையைத் தேடுகிறது

தீரா வேட்கையோடு

எறும்பும் அப்படித்தான்

தேடுகிறது

 

கதிர்பாரதியின் இவ்வரிகள் ஒரு பெரிய ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறது. மலைப்பாம்புக்கு உள்ள பசியையும் எறும்புக்கு உள்ள பசியையும் அது வேறுவேறாகப் பார்க்கவில்லை. பாம்பு பெரிய உயிர் என்பதால் அதன் பசி தீவிரமானது என்றோ, எறும்பு சின்னஞ்சிறிய உயிரென்பதால் அதன் பசி பொருட்படுத்தத் தேவையற்றது என்றோ பொருள் இல்லை. பசித்துன்பம் இரண்டுக்கும் ஒரே விதமானதுதான். பசிதணிக்கும் உணவுக்கான தேடலின் தீவிரமும் இரண்டுக்கும் ஒரே விதமானதுதான். தீவிரம் கொண்டவர்களின் தேடலே உணவை விரைவில் கண்டடைய வைக்கிறது.

வயிற்றுப்பசிக்கான தேடலில் மட்டுமன்றி, மனப்பசிக்கான தேடலிலும் தீவிரமும் தீரா வேட்கையும் கொண்டவர்களே கண்டடைகிறார்கள். தீரா வேட்கை கொண்ட படைப்பாளிகளும் வாசகர்களும் இலக்கிய உலகில் என்றென்றும் நிறைந்திருக்கிறார்கள். கதிர்பாரதியிடம் நிறைந்திருக்கும் தீரா வேட்கையின் விளைவே 226 பக்கங்கள் கொண்ட இந்தக் கவிதைத்தொகுதி.

 

(உயர்திணைப்பறவைகவிதைகள். கதிர்பாரதி, இன்சொல் வெளியீடு, 25- மோதிலால் தெரு, தியாகராய நகர், சென்னை – 17 . விலை. ரூ.260)

 

(உயிரெழுத்து – ஜூலை 2021 இதழில் வெளியான கட்டுரை)