Home

Monday 12 July 2021

சித்தலிங்கையா : நட்பார்ந்த கைகளும் புன்னகையும்

 

1982இல் கர்நாடகத்தில் ஹொஸபேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்கு காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்திவந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார். அவருக்கு நாடகங்கள் மீது தணியாத ஆர்வமிருந்தது.  ஒருநாள் நான் முன்வரிசையில் இருந்த ஒரு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பின்வரிசை மேசையைச் சுற்றி ஆறேழு இளைஞர்கள் உட்கார்ந்துகொண்டு ஒரு பாட்டின் வரிகளை ஒருமித்த குரலில் பாடிப்பாடி பயிற்சி செய்தார்கள். எல்லோருமே குருஷாந்தப்பாவின் நண்பர்கள்.

தோசையின் சுவையில் நான் முதலில் அந்தப் பாட்டை அவ்வளவாகப் பொருட்படுத்திக் கவனிக்கவில்லை. ஆனால் அந்தப் பாட்டின் வேகமான தாளக்கட்டு என்னை அந்தப் பாடலைக் கவனிக்கத் தூண்டியது. அது நான் கன்னடமொழியைக் கற்றுக்கொண்டிருந்த நேரம். காதில் விழும் ஒவ்வொரு சொல்லையும் என் மனம் குருவியைப்போல எடுத்துவைத்துக்கொள்ளும். அந்தப் பாட்டின் வரிகள் அப்போது என்னால் உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிலேயே இருந்தன. ”எங்கே வந்தது, யாருக்கு வந்தது, நாற்பத்தேழின் சுதந்திரம்?” என்னும் கேள்வி பொட்டில் அறைகிறமாதிரி இருந்தது.

இது என்ன பாட்டு, சினிமா பாட்டா?” என்று குருஷாந்தப்பாவிடம் கேட்டேன். இல்லை என்பது போல விரலசைத்தபடி அவர் எனக்கு அருகில் வந்து உட்கார்ந்தார். “இன்னைக்கு சாயங்காலம் முனிசிபல் ஆபீஸ் கிரவுண்ட்ல குரிகளுன்னு ஒரு நாடகம் இருக்குது. அதுக்குத்தான் பாட்டு ப்ராக்டிஸ் செய்றாங்கஎன்றார்.

அது சரி, இது என்ன சினிமா பாட்டா?” என்று அவரிடம் மீண்டும் கேட்டேன். “இல்ல. இல்ல. அது நம்ம சித்தலிங்கையா எழுதிய பாட்டு. பெரிய தலித் கவிஞர்என்றார்.

தாளம் நல்லா இருக்குது

சாயங்காலம் ஷோவுக்கு வந்து பாருங்க. இன்னும் அருமையா இருக்கும். கேக்கக்கேக்க நாடி நரம்புலாம் முறுக்கேறும்

எந்த மேளதாளமும் இல்லாமல் அப்பாடல் அப்போதே முறுக்கேற்றுவதுபோலத்தான் இருந்தன. தாளக்கருவிகளுடன் அப்பாடலின் தன்மை எப்படி இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. நான் ஆர்வமுடன் கேட்கக்கேட்க குருஷாந்தப்பா கவிஞரைப்பற்றி இன்னும் கூடுதலான தகவல்களைச் சொல்லத் தொடங்கினார். “பெங்களூருல இருக்காரு. தலித் சங்கர்ஷ சமிதியில முக்கியமான புள்ளி. மீட்டிங்க்ல பிரமாதமா பேசுவாரு. அவரு பேச்ச கேக்கறதுக்காகவே நான் ஒருதரம் பெல்லாரிக்கு போயிட்டு வந்தேன்

அன்று இரவு அந்த நாடகத்தைப் பார்ப்பதற்குச் சென்றேன். சமுதாய நாடகக்குழுவினர் தாளக்கருவிகளோடு பாடிய சித்தலிங்கையாவின் பாடல்களைக் கேட்டேன். ஒவ்வொன்றும் மாபெரும் முழக்கமாக இருந்தது. அங்கே கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் ஆழ்ந்த அமைதியோடு அப்பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு பாட்டும் முடியும்போது அவர்கள் எழுப்பிய கைத்தட்டல் ஓசை நீண்ட நேரம் நீடித்தது. பாடகர்களை பார்வையாளர்களும் பார்வையாளர்களை பாடகர்களும் உற்சாகப்படுத்திக்கொண்டனர். சித்தலிங்கையாவின் பெயரும் ஆற்றல் மிக்க அவருடைய கவிதையும் எனக்கு அப்படித்தான் அறிமுகமாகின.

மறுநாள் குருஷாந்தப்பா தன்னிடமிருந்த சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதியை என்னிடம் கொடுத்தார். ஹொலெமாதிகர ஹாடு என்னும் புத்தகத்தலைப்பை ஒவ்வொரு எழுத்தாகப் படித்தேன். ”நீங்களே ரெண்டு மூனு கவிதையை படிச்சி காட்டுங்கஎன்று அவரிடமே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் தொகுதியைப் பிரித்து நாலைந்து கவிதைகளை ஏற்ற இறக்கத்தோடு எனக்குப் படித்துக் காட்டினார். ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு சந்தத்திலும் தாள அமைப்பிலும் இருந்தன. அப்படியே மெய்மறந்து கேட்டேன்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவரை பெங்களூரில் சந்தித்தபோது அவர் பாடல்கள் எனக்கு அறிமுகமான விதத்தைச் சொன்னேன். அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கன்னடத்தை யாருடைய உதவியும் இல்லாமல் படிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டதையும்  ஹொலெமாதிகர ஹாடு தொகுதியை மட்டுமன்றி சாவிராரு நதிகளு, கப்பு காடின ஹாடு தொகுதிகளையும் தேடி வாங்கிப் படித்த அனுபவங்களையும் சொன்னேன். ஒருகணம் நாணம் கொண்ட புன்னகையோடு அவர் என்னைப் பார்த்துவிட்டு தலையசைத்துக்கொண்டார் அவர். “ஆரம்பத்துல நானே மேடையில பாடுவேன். அப்புறமா அது கேசட்டா வந்து பட்டி தொட்டியில எல்லாம் போட்டு கேட்டாங்க. அதுக்கப்புறம் ஓவ்வொரு ஊருலயும் ஒரு செட் ஆளுங்க பாடி கேசட் போட்டு பரப்பினாங்க. அந்தப் பாட்டு பத்து வருஷத்துல பல அவதாரம் எடுத்துட்டுதுஎன்றார்.“

பெங்களூருக்கு வந்த பிறகு நான் விரும்பிச் சந்தித்தவர்களில் ஒருவர் மொழிபெயர்ப்பாளரான சரஸ்வதி ராம்னாத். கன்னடத்திலிருந்து  தமிழுக்கு மொழிபெயர்க்கும் முயற்சியில் நான் ஈடுபடுவதற்கு அவரே காரணம். அவருடைய ஒரு தொகைநூலுக்காக நான் கன்னடத்திலிருந்து ஒரு நாடகத்தை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.  அதைத் தொடர்ந்து கன்னடக்கவிதைகளை தமிழில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். சித்தலிங்கையாவின் இரு கவிதைகளை மொழிபெயர்ப்பதற்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அவருடன் உரையாடும்போது அந்த நினைவு வந்துவிட்டது. என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்து மொழிபெயர்ப்பதற்கு அனுமதியை வேண்டினேன். அவர் புன்னகைத்தபடியேஇதோ இப்பவே கொடுக்கறேன்என்றபடி சட்டைப்பையிலிருந்து எதையோ கையைவிட்டு எடுப்பதுபோல எடுத்து என் கையைப்பற்றி உள்ளங்கையை அழுத்தினார். “எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தா நல்லா இருக்குமே சார்என்று இழுத்தேன். ”எழுத்த விட சொல்லுக்கு மதிப்பளிக்கிறவன் நான். இது போதும்என்றார். நான் அதற்குமேல் வலியுறுத்த விரும்பவில்லை. நெகிழ்ச்சியுடன் நன்றி  சொன்னேன். அபூர்வமான அக்கணம் என் மனத்தை நிறைத்துவிட்டது. அவர் விழிகளில் நான் கண்ட நம்பிக்கையும் அன்பும் மெய்சிலிர்க்கவைத்தன.

 அக்கணத்தை இயல்பாக்கிக் கடக்கும் விதமாக தொகுப்புக்கு வேற யார்யாரயெல்லாம் தேர்ந்தெடுத்திருக்கீங்க?” என்று உரையாடலைத் தொடர்ந்தார் சித்தலிங்கையா. நான் உடனே குவெம்பு, .ரா.பேந்த்ரே, ராமச்சந்திர ஷர்மா, கோபாலகிருஷ்ண அடிக என நினைவிலிருக்கும் சில பெயர்களை அவரிடம் சொன்னேன். ஆறேழு பேர்களின் பெயர்களைச் சொன்னதுமேபோதும், போதும்என்று கைகாட்டினார். தொடர்ந்துஎல்லாருமே கன்னடத்தின் முக்கியமான கவிஞர்கள். உங்க தேர்வு நல்ல தேர்வுங்கறதுக்கு இதுவே சாட்சி. தொகுப்பு நல்லபடியா வரட்டும்என்றார்.

அறைவாசலில் அவரைச் சந்திப்பதற்காக நான்கைந்து பேர் வந்து காத்திருந்தார்கள். அடிக்கடி வந்து எட்டிப் பார்த்துவிட்டு போனார்கள். சித்தலிங்கையா அப்போது கர்நாடக மேலவை உறுப்பினராக இருந்தார்.  அவரைச் சந்திக்க வரும்போதே அதிக நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தோடுதான் வந்திருந்தேன். இருப்பினும் ஆர்வத்தின் காரணமாக பேச்சு நீண்டுகொண்டே சென்றுவிட்டது. ”தொகுப்பு தயாரானதும் கொண்டுவந்து தரேன்என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

நவீன கன்னடக்கவிதைகள் என்ற தலைப்பில் முப்பத்தேழு கவிதைகளை  மொழிபெயர்த்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு அனுப்பிவைத்தேன். அவருடைய கனவு சிற்றிதழ் அக்கவிதைகளோடு 1992ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியானது. என் கைக்கு இதழ்கள் கிடைத்த வாரத்திலேயே  சித்தலிங்கையாவைச் சந்திக்க முயற்சி செய்தேன். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அவருடைய விடுதியறையின் முன்னால் காத்திருந்தேன். அவர் வரவில்லை. நான்காவது நாளில்தான் அவரைச் சந்திக்க முடிந்தது. ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹூப்ளிக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார் அவர். நான் கனவு இதழை அவரிடம் கொடுத்தேன். அவர் கவிதை பிரசுரமாகியிருக்கும் பக்கத்தைப் புரட்டிக் காட்டினேன். “தமிழ்ல எனக்கு அ, ஆ மட்டும்தான் தெரியும். நீங்களே படிச்சி காட்டுங்கஎன்றார் சித்தலிங்கையா. அவருக்கு மாபெரும் புகழைத் தேடித்தந்த என் மக்கள் என்னும் கவிதையை அத்தொகுப்பில் மொழிபெயர்த்திருந்தேன். அதை ஒவ்வொரு வரியாக மெதுவாக படித்துக் காட்டினேன்.

கேக்கறதுக்கு நல்லா இருக்குது. கன்னடத்துல இருக்கறமாதிரியே அதே ஏற்ற இறக்கத்த மொழிபெயர்ப்புலயும் கொண்டு வந்திருக்கீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷம்என்று என் கைகளைப் பற்றி அழுத்தினார் சித்தலிங்கையா. யாரோ ஒருவரை அழைத்து தேநீர் கொண்டுவருமாறு சொன்னார். சிறிது நேரம் என் வேலை, குடும்பம், ஊர், ஆர்வம் தொடர்பாக சில கேள்விகள் கேட்டார். நான் சொன்ன பதில்களை பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவந்த சென்னை பயணத்தைப்பற்றி சிறிது நேரம் சொன்னார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பெரியாரோடு தொடர்பு வைத்திருந்ததைப்பற்றியும் பெங்களூருக்கு அழைத்துவந்து சில நாட்கள் தங்கவைத்து நண்பர்களோடு சேர்ந்து உரையாடிய அனுபவங்களையும் பல பொதுக்கூட்டங்கள் நடத்திய அனுபவங்களையும் சொன்னார்.

ஒருகணம் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்துவிட்டுகடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டிஆகிய வாசகங்களை அடங்கிய குரலில் அடுத்தடுத்து சொன்னார். அதைத் தொடர்ந்துஅந்த காலத்துல அவரோடு நாங்க ரொம்ப சுவாரசியமா பேசினோம். வயசு வித்தியாசத்தயெல்லாம் அவர் பெரிசா நினைக்கவே இல்ல. ரொம்ப இயல்பா பேசினார்என்று உற்சாகமாக பெரியாரைப்பற்றி விவரித்தார். ஒரு கண இடைவெளிக்குப் பிறகு புருவத்தை உயர்த்திஆனா, ரொம்ப பிடிவாதமான மனிதர். விவாதிக்கும்போது காது கொடுத்து கேட்டுக்குவார். ஆனா தன்னுடைய கருத்தை மாத்திக்கவே மாட்டார். அவர் நெனைக்கறதுதான் அவருக்கு சரிஎன்றார். தொடர்ந்துகடவுளுக்கு மனிதர்கள் தேவையே இல்லை. ஆனா மனிதர்களுக்கு கடவுள் வேணும். வீடு, தோட்டம், மாடு, கன்னு, மரம், செடி மாதிரி கடவுளும் அவனுக்கு வேணும். மனிதனுக்கு கடவுள கொஞ்சணும். பாடணும். அதட்டணும். திட்டணும். அடிக்கணும். கோவிச்சிக்கணும். எல்லாம் செய்யணும். திடீர்னு அவன பாத்து கடவுள் இல்லடான்னு சொன்னா, பாவம், அவன் எங்க போவான்?” என்று புன்னகையுடன் கேட்டார்.

அதற்குள் தேநீர் வந்துவிட்டதால் உரையாடுவதை நிறுத்திக்கொண்டார். அருந்தி முடித்ததும் அவராகவே தொடங்கி  ஆரம்பத்துல நானும் அவர மாதிரிதான் சாமியும் இல்ல பூதமும் இல்லன்னு நெனச்சேன். நாட்டுப்புற தெய்வங்கள்ங்கற தலைப்பில நான் செஞ்ச ஆராய்ச்சிக்காக கர்நாடகம் முழுக்க கிராமம் கிராம்மா போய் மக்கள்ட்ட பேசறபோதுதான் அவுங்க மனசுல கடவுள பத்தி என்ன எண்ணம் வச்சிருக்காங்கன்னு புரிஞ்சிது. அது ஒரு விதமான நட்பு. நாம நெனைக்கறமாதிரி ஒரு ராத்திரியில தூக்கி வீசிட்டு வரக்கூடிய விஷயமில்லைஎன்று சொல்லிவிட்டு நிறுத்தினார். முடிவில்கடவுள்ங்கறது பெரிய சப்ஜெக்ட். ஒரு நாள்ல பேசி முடிக்கிற விஷமில்லை. பார்க்கலாம்என்று சொல்லிவிட்டு எனக்கு விடைகொடுத்தார்.

அதற்குப் பிறகு நான் அவருடைய அறைக்குச் செல்லவில்லை. அவர் அப்போது கன்னடத்துறையில் பல பொறுப்புகளை வகித்துவந்தார். பல அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்தார். அவருடைய நேரத்தை நம் சந்திப்பால் வீணாக்கிவிடக் கூடாது என்று நானாகவே நிறுத்திக்கொண்டேன். அவ்வப்போது சில இலக்கிய நிகழ்ச்சிகளில்  மட்டும் சந்தித்து வணக்கம் சொல்வேன். சிற்சில சமயங்களில்ஒருதரம் அறைக்கு வாங்க. பேசிட்டு இருக்கலாம்என்று அவராகவே சொன்னதுண்டு. ஆனால் என் தனிப்பட்ட தயக்கத்தின் காரணமாக நானாகவே என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு சித்தலிங்கையாவைச் சந்திக்கவேண்டிய ஒரு தருணம் தானாகவே வந்தது. யு.ஆர்.அனந்தமூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட ருஜுவாது என்னும் இதழில் என் இளமைக்காலம் என்னும் தலைப்பில் அவர் தன் தன்வரலாற்றின் ஒரு பகுதியை எழுதியிருந்தார் அவர். மிகவும் ஆர்வமூட்டிய அப்பகுதியைப் படித்ததுமே அதை மொழிபெயர்க்க நினைத்தேன். அந்தத் தகவலை அவரிடம் தெரிவித்து அனுமதியைப் பெறவேண்டுமென்ற  முடிவோடு அவரைச் சந்திக்கச் சென்றேன். “வாங்க வாங்க, உங்கள பார்த்து எவ்வளவு காலமாச்சிஎன்றபடி புன்னகையுடன் வரவேற்றார். ”ருஜுவாதுல உங்க கட்டுரைய படிச்சேன்என்று பையில் வைத்திருந்த இதழை எடுத்துக் காட்டிகட்டுரை ரொம்ப சிறப்பா இருக்குது. சீக்கிரமா முழு புத்தகமாவே நீங்க இத எழுதணும்என்றேன். ”எனக்கும் அந்த எண்ணம் இருக்குது. எங்கனா கண்காணா தேசத்துக்கு ரெண்டு மூனு மாசம் போய் தங்கனாதான் எழுத முடியும் போல இருக்குதுஎன்றார் அவர். சில கணங்களுக்குப் பிறகு மொழிபெயர்ப்பதற்கான அனுமதியைப்பற்றிய பேச்சை எடுத்தேன். நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவர் கையை வளைத்து பக்கத்திலிருந்து எதையோ அள்ளியெடுப்பதுபோல எடுத்து என் கையில் வைத்தார். “இதோ கொடுத்துட்டேன், வச்சிக்குங்கஎன்றார். நான் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக்கொண்டேன். அடுத்த மாதமே அந்தக் கட்டுரை அப்போது சுபமங்களா இதழில் வெளிவந்தது. நான் இரண்டு பிரதிகளை வாங்கிச் சென்று அவருக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.

அடுத்து சில ஆண்டுகளில் அந்தப் பகுதியை உள்ளடக்கிய முழு நூலும் வெளியாகி கன்னட இலக்கியப்பரப்பில் உரைநடையிலும் அவருக்கொரு தனித்துவமான இடத்தை தேடிக் கொடுத்தது. அதை மொழிபெயர்ப்பதற்கும் விருப்பத்தை அவரிடம் தெரிவிப்பதற்காகச் சென்றபோது, வழக்கம்போல அருகிலிருக்கும் எதையோ எடுத்து என்னிடம் ஒப்படைப்பதுபோல என் கையை அவர் பற்றிக்கொண்டு கண்களைச் சிமிட்டி புன்னகையுடன்தாராளமா செய்யுங்கஎன்னும் பொருளில் தலையை அசைத்தார். ஊரும் சேரியும் என்னும் தலைப்பில் நான் அவருடைய தன்வரலாற்றை மொழிபெயர்த்தேன்.  நண்பர் ரவிக்குமாரின் உதவியால் அந்தப் புத்தகம் கோவையைச் சேர்ந்த விடியல் பதிப்பகம் வெளியிட்டது.

அடுத்து இருபதாண்டுகளுக்குப் பிறகுதான் அவர் அப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியை எழுதி வெளியிட்டார். அப்போது பணியிட மாற்றலால் நான் நகரத்தின் வேறொரு பகுதியான ஜெயநகரில் வேலை செய்துவந்தேன்.  அதனால் அவரை தொலைபேசியில் அழைத்து புத்தகத்தைப் படித்த செய்தியைத் தெரிவித்துவிட்டு, அவரைச் சந்திக்கும் விருப்பத்தைச் சொன்னேன். ”நீங்க எப்போ வரப்போறீங்கன்னு  நானும் எதிர்பார்த்துட்டிருந்தேன்என்று அவர் சிரித்தார். தொடர்ந்து அனுமதிக்காக பார்க்கணும்னு அவசியமில்லை. என் அனுமதி எப்பவுமே உங்களுக்கு உண்டு. இதோ கொடுத்துட்டேன்னு நெனச்சிக்குங்கஎன்றார். அவர் நம்பிக்கை எனக்கு நெகிழ்ச்சியை அளித்தது. “உங்கள பார்க்கணும் சார்என்றேன் நான். அவர் உடனேநீங்க என்னைப் பார்ப்பதற்காக அலையத் தேவையில்லை. நாளைக்கு உங்க ஆபீஸ்க்கு பக்கத்துல ஜெயதேவா ஆஸ்பத்திரிக்கு ஒரு செக்கப்புக்காக காலையில எட்டரை மணிக்கு வரேன். நீங்க அங்க வந்தீங்கன்னா பாக்கலாம்என்றார்.  மருத்துவமனை என்றதுமே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ”உடம்புக்கு என்ன சார்?” என்று பதற்றத்துடன் கேட்டேன். “பெரிசா ஒன்னுமில்ல. ரொட்டீன் செக்கப். அவ்ளோதான்என்றார்.

அடுத்தநாள் குறிப்பிட்ட நேரத்தில் பழங்கள் அடங்கிய பையோடு மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். வணக்கம் சொன்ன என் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் சில கணங்கள் வைத்துக்கொண்டார். சற்றே வாடிய களை அவர் முகத்தில் படிந்திருந்தது. நான் பழப்பையை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கி தனக்குத் துணையாக அருகில் நின்றிருந்த இளைஞரொருவரிடம் கொடுத்துவிட்டுஇதயெல்லாம் கண்ணால மட்டுமே பார்க்கக்கூடிய காலம் இப்ப. சாப்பிட முடியாதுஎன்று சொன்னார். “என்ன சார்?” என்று கேட்டேன். “வேற என்ன? சர்க்கரைதான். ரெண்டுநாளா முன்னூறுக்கு மேல போயிட்டுது. அப்பப்ப மயக்கம் வருது. அதான் செக்கப்புக்கு வந்தேன்என்று சொன்னார் அவர். பேச்சோடு பேச்சாக தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரைக்கும் எழுதிய எல்லாக்கவிதைகளையும் தொகுத்து ஒரு பெரும்தொகுதியாக கொண்டுவர நினைத்திருப்பதாக தெரிவித்தார்.

2017இல் சித்தலிங்கையாவின் தன்வரலாற்றின் இரண்டாவது பகுதியான வாழ்வின் தடங்கள் வெளிவந்தது. புத்தகப் பிரதிகளை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். புத்தக ஆக்கமும் தரமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. மிகவும் உற்சாகத்துடன் பல முறை திருப்பித்திருப்பி பார்த்து மகிழ்ந்தார். பின்னட்டைக் குறிப்பில் இருக்கும் வாசகத்தை ஒருமுறை என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். பிறகுநல்லா இருக்குதுஎன்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார். “முதல் பகுதியுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை சாகித்ய அகாதெமி புத்தகமா போட்டிருக்குது, பார்த்தீங்களா?” என்று கேட்டார். நான்பார்க்கலை சார்என்றதும்அவசியம் பாருங்க, ராமகிருஷ்ணான்னு ஒரு  நண்பர்தான் ட்ரான்ஸ்லேட் செஞ்சிருக்காருஎன்றார்.

அவருடைய தன்வரலாற்றின் மூன்றாவது பகுதி வெளிவந்த செய்தியை பத்திரிகையில் படித்துத் தெரிந்துகொண்டேன். ஆனால் மிகவும் தாமதமாகவே கடைக்குச் சென்று வாங்கிவந்து வீட்டில் எங்கோ இடம் மாற்றி வைத்துவிட்டு மறந்துபோனேன். பிறகு வீடு மாறி வந்து புத்தகங்களை அடுக்கிய சமயத்தில் புதிய புத்தகங்களோடு பழைய புத்தகங்களும் சேர்ந்துகொள்ள, என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சரி, கிடைத்த சமயத்தில் படித்துக்கொள்ளலாம் என்று நானும் சலிப்புடன் விட்டுவிட்டேன்.

போன ஆண்டு கொரானா கால வீடடங்கு சமயத்தில் வீட்டு நூலகத்தை ஒழுங்கு செய்தபோதுதான் அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. சித்தலிங்கையாவையே நேரில் பார்த்ததுபோல இருந்தது. படித்து முடிக்க மேலும் ஒரு வார காலமானது. அவரை அழைத்து மூன்றாவது பகுதியைப் படித்துமுடித்த தகவலைச் சொன்னேன். அதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். “நீங்க பேசுவீங்கன்னு ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டே இருந்தேன். நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டார். தொடர்ந்து அவராகவேநேருல பார்த்துத்தான் பர்மிஷன் வாங்கணும்ங்கற ஃபார்மாலிட்டிலாம் வேண்டாம். உங்களுக்கு எப்பவுமே ஓப்பன் செக்தான். சீக்கிரமே செஞ்சி முடிங்க. புத்தகம் வரட்டும். பார்ப்போம்என்று அடுக்கிக்கொண்டே போனார். அன்று அவருடைய பேச்சு என்னைத் திணறவைத்துவிட்டது. “சிட்டிக்கு போறது ரொம்ப கொறைஞ்சிட்டுது. யாரயும் பார்க்கமுடியலை. நீங்களும் எச்சரிக்கையா இருங்கஎன்று சொல்லிவிட்டு முடித்துக்கொண்டார்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அவர் பேசியதை ஒவ்வொரு  சொல்லாக மனத்தில் மீண்டும் மீண்டும் திரட்டிக்கொண்டு யோசித்தேன். அவருடைய ஆவலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஒருசில ஆண்டுகளாகவே என் மனம் மொழிபெயர்ப்பிலிருந்து விலகிவிட்டது. என் சொந்த எழுத்து முயற்சிகளிலேயே கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தேன். இந்த நேரத்தில் இவர் இப்படிச் சொல்லிவிட்டாரே என நினைத்தபோது சங்கடமாக இருந்தது.

தேடிய சமயத்தில் கண்ணில் தென்படாத புத்தகம், திடீரென அறைக்குள் நுழைகிற ஒவ்வொரு தருணத்திலும் கண்ணில் தென்படத் தொடங்கியது. புத்தகத்தை எடுத்து ஒருசில பக்கங்களைப் புரட்டிவிட்டு, பெருமூச்சுடன் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பத் தொடங்கினேன். அப்போதெல்லாம் உலகம் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு, என்றாவது ஒருநாள் அவரைச் சந்தித்து என் நிலைமையைப்பற்றி எடுத்துரைக்கலாம் என என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டேன்.

11.06.2021 அன்று நண்பர் திருஞானசம்பந்தம் தொலைபேசியில் அழைத்து சித்தலிங்கையா மறைந்துவிட்ட தகவலை தொலைக்காட்சியில் அறிவிப்பதாகச் சொன்னார். ஒருகணம் நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். என்னால் அதை நம்பமுடியவில்லை. எல்லாமே நான் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்துவிட்டதே என அதிர்ச்சியாக இருந்தது. திருஞானசம்பந்தத்தின் திருமணத்துக்கு சித்தலிங்கையாவின் புத்தகங்களைத்தான் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தேன். சித்தலிங்கையாவைப் பார்த்ததில்லை என்றபோதும் சித்தலிங்கையாவின் எழுத்துகளைப் படித்து அவருடன் மானசிகமான ஒரு நெருக்கத்தை அவர் வளர்த்துவைத்திருந்தார். கொரானா முடிவடைந்ததும் சித்தலிங்கையாவைப் பார்க்கச் செல்லும்போது அவரையும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தவேண்டுமென நினைத்திருந்தேன். இனிமேல் அவருக்கு எப்படி அறிமுகப்படுத்த முடியும் என்று திகைத்து நின்றுவிட்டேன்.

முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெயராக மட்டுமே அறிமுகமான காலத்திலேயே என் மனம் கவர்ந்தவர் சித்தலிங்கையா.  அவருடைய அறிமுகமும் நட்பும் தாமாகவே நிகழ்ந்த அற்புதங்கள். தன் ஆற்றலாலும் அறிவாலும் கன்னட இலக்கியப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு பேராளுமையாக அவர் உயர்ந்து நின்றார். அவருடைய தன்வரலாற்று நூல்கள் வழியாக தமிழ்ச்சூழலிலும் அவர் மிகுதியான எண்ணிக்கையில் வாசகர்களைப் பெற்றிருந்தார். ஒருவரையொருவர் நேரில் சந்தித்து அளவளாவ இயலாத நோய்ச்சூழலில் அவரை மரணம் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டது. ‘இதோ கொடுத்துவிட்டேன், எடுத்துக்கொள்ளுங்கள்என ஒவ்வொரு முறையும் என் கைகளை அழுத்திய நட்பார்ந்த கைகளும் புன்னகையும் இனி இல்லை என்கிற துயரம் நெஞ்சை அழுத்துகிறது. சித்தலிங்கையாவுக்கு அஞ்சலிகள்.

(காலச்சுவடு - ஜூலை 2021 இதழில் இடம்பெற்ற அஞ்சலிக்கட்டுரை )