Home

Sunday, 25 July 2021

இரண்டு தளங்கள் - முன்னுரை

  

போக்கிடம் நாவல் 1976இல் இலக்கியச்சிந்தனை அமைப்பின் விருதுக்குரிய நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதன்முதலாக வெளிவந்தது. 1984இல் என் திருமணத்துக்கு வந்திருந்த இலக்கிய நண்பரொருவர் அந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். அப்போதுதான் அதை முதன்முதலாகப் படித்தேன். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாகப் படித்தேன்.

இப்போது 2021 பிறந்துவிட்டது. நாவல் வெளிவந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த முன்னுரையை எழுதுவதற்காக இப்போது மீண்டும் படித்தேன். நாற்பத்தைந்து ஆண்டு பழமை இந்த நாவலில் கொஞ்சமும் தெரியவில்லை. இந்த ஆண்டில் முதன்முதலாக வெளிவரும் நாவலைப்போல புதிய படைப்பென்றே தோன்றியது.

போக்கிடம் நாவலின் பேசுபொருளான இடப்பெயர்வே, அதன் இளமைக்கும் புதுமைக்கும் காரணம் என இப்போது புரிகிறது. மானுடகுலம் உருவான காலத்திலிருந்தே இடப்பெயர்வுகளும் உருவாகிவிட்ட சூழலில், இடம்பெயர்தல் தொடர்பான ஒரு படைப்பு ஒருபோதும் தன் இளமையை இழப்பதில்லை. காலம்தோறும் வாழ்வதற்கான வழிகளைத் தேடி, அமைதியைத் தேடி, பாதுகாப்பைத் தேடி, வெற்றியைத் தேடி, சுதந்திரத்தைத் தேடி மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். இது ஒரு கோணம். இன்னொரு கோணத்தில் அணைகள் கட்டுவதற்காகவும் சாலைகள் போடுவதற்காகவும் ஆலைகள் எழுப்புவதற்காகவும் சுரங்கம் வெட்டுவதற்காகவும் அரசே அங்கங்கே வாழும் மக்களை இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தை நோக்கிச் செல்லச் செய்கிறது. நாகரிகம் தொடங்கியபோதே இப்படிப்பட்ட இடப்பெயர்வுகளும் தொடங்கிவிட்டன.

ஆசிரியர் பயிற்சி முடித்த சுகவனம் என்னும் இளைஞன் சேலத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய டேனிஷ்பேட்டை என்னும் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் வேலை கிடைக்கிறது. அவனுக்கு தானாக அமைந்தது அந்தப் போக்கிடம். அந்தப் போக்கிடத்துக்கு வந்து, அங்கு தன்னைப் பொருத்திக்கொள்கிறான் அவன். சிறிது காலத்துக்குப் பிறகு பழைய டேனிஷ்பேட்டையிலிருந்து புதிய டேனிஷ்பேட்டைக்கு பள்ளிக்கூடம் இடமாற்றம் செய்யப்படும்போது அவனும் அந்த இடத்துக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறான். எதிர்காலத்தில் அங்கிருந்து பொம்மிடிக்கோ அல்லது வேறு ஏதேனும் ஊருக்கோ மாற்றல் கிடைத்தாலும் அவன் அங்கு சென்று தன்னைப் பொருத்திக்கொள்வான். அது அவனுக்கான போக்கிடத்தின் செல்திசை.

டேனிஷ்பேட்டையை ஒட்டிய மலைத்தொடர் பகுதிகளில் மாக்னசைட் கிடைப்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியதால் அரசாங்கம் அங்கே சுரங்கம் வெட்டும் வேலையைத் தொடங்குகிறது. எங்கோ தொலைவில் புதிய டேனிஷ்பேட்டை உருவாகிறது. சுரங்கம் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. அதைப் பயன்படுத்திக்கொள்வதற்காக அந்த இடத்தையே தன் போக்கிடமாகக் கொள்கிறார்கள் சிலர். அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடாகக் கிட்டிய பணத்தை வாங்கிக்கொண்டு ஊரில் எஞ்சியிருப்பவர்களும் அங்கே செல்கிறார்கள். அது அவர்களின் போக்கிடம்.

அங்கு செல்ல விருப்பமின்றி, கிடைத்த பணத்தை நல்ல விவசாய நிலத்தை வாங்கி முதலீடு செய்வதற்காகவும் வளமான எதிர்காலத்துக்காகவும் வேறு ஊர்களுக்கு சிலர் புறப்பட்டுச் செல்கிறார்கள். அது மற்றொரு போக்கிடம்.

தந்தையையும் பிடிக்காமல் பிறந்த ஊரையும் பிடிக்காமல் சென்னைக்குச் சென்று படித்து, நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காததால் அரசுத்தேர்வு எழுதி வெற்றி பெற்று புதிய டேனிஷ்பேட்டையில் கிடைத்த வேலையில் இணைவதற்காக வந்து சேர்கிறான் தீர்த்தகிரி. எங்கோ சென்று எப்படி எப்படியோ வாழ நினைத்தவனுக்கு வாழ்க்கை அந்த இடத்தையே அவனுக்குரிய  போக்கிடமாக வைத்திருக்கிறது.

கூத்துக்கலைஞனான சின்னக்காளி மற்றவர்களைப்போல புதிய டேனிஷ்பேட்டைக்கும் செல்லாமல் மற்ற இடங்களுக்கும் செல்லமுடியாமல் குடும்பத்தை இழந்து மனம் பேதலித்த நிலையில் பழைய டேனிஷ்பேட்டையிலேயே கெங்கம்மாள் கோவிலைச் சுற்றிச்சுற்றி கந்தலாடையுடன் போக்கிடமின்றி அலைகிறான். எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் போக்கிடங்கள் அமைந்துவிட, போக்கிடம் அமையாத அந்தப் பித்தன் அதே பழைய தெருக்களில் அலைந்தபடி கண்ணில் தென்பட்டவர்களிடமெல்லாம் கையேந்தித் திரிகிறான்.

பழைய டேனிஷ்பேட்டையில் உண்மையிலேயே போக்கிடமின்றி இருப்பவள் கணவனை இழந்து சிறுவயதுப் பிள்ளையோடு ஒண்டிக்கட்டையாக வாழும் பேச்சி மட்டுமே. இருபதை ஒட்டிய வயதிலேயே கைம்பெண்ணாக அந்த ஊரில் ஆட்டுக்குட்டியோடு சுற்றிவருகிறாள் அவள். வயதில் மூத்தவரான பஞ்சாயத்துபோர்டு தலைவர் மாரிமுத்துக்கவுண்டருக்கும் பேச்சிக்கும் உள்ள தொடர்பு ஊருக்கே தெரிந்த ரகசியம் என்றபோதும் அவள் வழியாக கிடைக்கும் உடல்சுகம்தான் அவருக்கு பெரிதாகத் தெரிகிறதே தவிர அவளுக்கு அடைக்கலமாகவோ போக்கிடமாகவோ தன் வாழ்வில் இடம்கொடுக்க அவருக்கு மனமில்லை. இருபதை ஒட்டிய வயதிலேயே இருக்கும் சுகவனத்துக்கும் பேச்சிக்கும் இடையில் ஏற்படும் உறவுகூட ஒருவரோடொருவர் இளமையைப் பகிர்ந்துகொள்கிற உறவாக மட்டுமே சுருங்கிவிடுகிறதே தவிர, பேச்சிக்கான போக்கிடத்தை சுட்டிக்காட்டும் ஆர்வமோ முனைப்போ சுகவனத்திடமும் இல்லை. அவள் தொடர்பான ரகசியத்தை அறிந்தவன் என்கிற வகையில் அதையே ஒரு சாக்காக வைத்து அவளுடன் உறவாடத் துடிக்கிற வேகம் மட்டுமே சுப்புரியிடம் இருக்கிறது. அதைத் தாண்டி பேச்சிக்கு ஒரு துணையாக நிற்கும் நேர்மை அவனிடமும் இல்லை.  தற்செயலாக அந்த ஊருக்கு தார்ச்சாலை அமைக்க ரோட் ரோலர் டிரைவராக வரும் பீர் முகம்மது அந்த ஊரிலிருந்தே அவளை அழைத்துக்கொண்டு புதியதொரு போக்கிடத்தை நோக்கி அழைத்துச் செல்கிறான். தாரில் சிக்கி எழுந்திருக்க முடியாமல் விழுந்து கிடக்கும் பேச்சியின் ஆட்டுக்குட்டியை ஆதரவுடன் எடுக்கும் பீர் முகம்மது மண்ணெண்ணெய் ஊற்றித் துடைத்து தாரின் பிசுபிசுப்பை நீக்கி மீட்டெடுத்துக் கொடுக்கும் காட்சி அற்புதமானது. ஆட்டுக்குட்டியை விடுவிக்கும் அக்கணத்திலேயே களங்கச்சேற்றிலிருந்து பேச்சியை அவன் விடுவிக்க இருக்கும் எதிர்காலக் காட்சியையும் இணைத்து உணர்ந்துகொள்ளமுடிகிறது.

இப்படி ஆறேழு போக்கிடங்களின் கதைகளுடைய தொகுப்புதான் விட்டல்ராவின் நாவல். மானுடம் காலம்தோறும் சந்தித்துக்கொண்டே இருக்கும் துயரத்தையும் தவிர்க்கமுடியாமையையும் கொண்ட ஒரு மேல்தளம். எதார்த்தத்தின் தகவல்களால் அது நிறைந்திருக்கிறது. தன்னிச்சையாக ஊற்றெடுக்கும் காமத்தாலும் காதலாலும் கருணையாலும் ஒருவருக்கொருவர் போக்கிடமாக ஆணும் பெண்ணும் தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் மற்றொரு தளம். இரண்டு தளங்களையும் ஊடுபாவாகக் கொண்டு விட்டல்ராவ் பின்னியிருக்கும் நாவல் போக்கிடம்.

நடைமுறையில் ஆண்பெண் உறவு என்பது இவ்வளவுதான். இந்த அளவுக்குத்தான் அதன் வெற்றியின் எல்லை விரிந்திருக்கும். எல்லாமே வெளிப்படையானதுதான். காமத்துக்கு எந்த அளவுக்கு ஒருவரை நோக்கி இன்னொருவரை காந்தமென இழுக்கும் ஆற்றலுண்டோ, அதே அளவுக்கு  தயக்கம், அச்சம், சாதி மத வேறுபாடு, அந்தஸ்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் என எல்லாவற்றுக்கும் ஒன்றாகச் சேர்ந்து பின்வாங்கவைக்கும் ஆற்றலுண்டு. அந்தக் கம்பிவலையைக் கடந்து செல்வதற்கு பெரும்பாலும் முடிவதில்லை. அபூர்வமாக ஓரிருவர் அந்தப்பக்கம் கடந்து சென்றுவிடுவார்கள். அவர்கள் தம் போக்கிடங்களை தாமே கண்டடைகிறார்கள். பேச்சியைப்போல. பீர்முகம்மதுவைப்போல.

கடந்துசெல்லாதவர்கள் அந்த உறவை ஒரு கெட்ட கனவாக நினைத்து அடங்கி வேறொன்றில் மூழ்கி மறக்க முயற்சி செய்கிறார்கள். மாரிமுத்துக்கவுண்டரைப்போல. நல்ல கனவாக நினைப்பவர்கள் அதற்கான ஏக்கத்தை நெஞ்சிலேயே பூட்டிவைத்துக்கொள்கிறார்கள். அவ்வப்போது வருடிப் பார்த்து கண்ணீர் விடவும் செய்வார்கள். சுகவனத்தைப்போல.

டிரைவர் பீர்முகம்மது தன்னோடு மிக இயல்பாக ஒட்டிக்கொண்டுவிட்ட பையப்பனை அழைத்துக்கொண்டு காட்டைச் சுற்றிக்காட்டும் காட்சி அற்புதமானது. காட்டைப்பற்றி இருவரும் தமக்குத் தெரிந்த தகவல்களைப் பேசிப் பகிர்ந்துகொள்கிறார்கள். காட்டிலிருந்து திரும்பும்போது உசிலமரத்திலிருந்து பொன்வண்டைப் பிடித்து வத்திப்பெட்டியில் அடைத்து எடுத்துவருகிறான் பையப்பன்.

இன்னொரு காட்சியில் பேச்சியைச் சந்திக்க வருகிறார் கவுண்டர். அன்று இரவு வீட்டுக்கு வருவதாகவும் விளக்கை அணைத்துவிட்டு காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டுச் செல்கிறார். அப்போது வீட்டு மாடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வத்திப்பெட்டியிலிருந்து வெளியேற முட்டிமுட்டி மோதியபடியே இருக்கிறது பொன்வண்டு.

அன்று இரவுதான் பேச்சியும் பீர்முகம்மதுவும் சிறுவன் பையப்பனோடு வெளியேறிவிடுகிறார்கள். மறுநாள் காலையில் பேச்சியின் வீட்டுக்கு வரும் கவுண்டர் கதவைத் திறந்து வெறுமை சூழ்ந்த வீட்டை ஒருவித சோர்வோடும் இயலாமையோடும் சுற்றிப் பார்க்கிறார். தீப்பெட்டியை உள்ளிருந்தபடியே முட்டி வழியேற்படுத்திவிட்ட வண்டு அப்போது அவர் கண்முன்னாலேயே பறந்து வெளியே செல்கிறது.

பேச்சியின் வெளியேற்றம் அந்தக் காட்சி வழியாகவே உணர்த்தப்பட்டுவிடுகிறது. ராஜமாணிக்கத்தின் வெளியேற்றத்தை, மற்ற மனிதர்களின் வெளியேற்றத்தையெல்லாம் தனித்தனி காட்சிகளாகக் காட்டும் விட்டல்ராவ் பேச்சியின் வெளியேற்றத்தை சுதந்திரமாகப் பறந்து வெளியேறும் வண்டை முன்னிலைப்படுத்தி உணர்த்திவிடுகிறார். அது அவருடைய எழுத்தாளுமைக்குச் சான்றாக உள்ளது.

இப்படி முன்னிலைப்படுத்திப் பேச துண்டுதுண்டான காட்சிகள் ஏராளமாக இந்த நாவலில் உள்ளன. நாவலைப் படிக்கும்போது வாசகர்கள்  அவற்றை உணராலம்.

எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு என் வணக்கம். இந்த நாவலின் முக்கியத்துவம் கருதி மறுபதிப்பாகக் கொண்டுவரும் சிறுவாணி வாசகர் மையத்துக்கு வாழ்த்துகள்.

 

( சிறுவாணி வாசகர் மையம் வழியாக மறுபதிப்பாக வெளிவந்துள்ள எழுத்தாளர் விட்டல்ராவின் ‘போக்கிடம்’ நாவலுக்கு எழுதிய முன்னுரை )