Home

Sunday 4 July 2021

எழுதாத வரலாறு - சர்வோதயத் தொண்டர் க.மு.நடராஜனுக்கு அஞ்சலி


2018ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அதற்குப் பிறகு, அதுவரை படிக்காமல் வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் எடுத்துவைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினேன்.  அந்த வரிசையில் லா.சு.ரங்கராஜனை தொகுப்பாசிரியராகக் கொண்டு மகாத்மா காந்தி படைப்புகள் என்ற பொதுத்தலைப்பில்  வெளிவந்திருந்த ஐந்து தொகுதிகளைப் படித்துமுடித்தேன். காந்தியடிகள் என்னும் மகத்தான ஆளுமையைப் பற்றிய சித்திரங்கள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அவற்றின் வழியாக இந்திய சுதந்திரப் போராட்டக்  காட்சிகளை  என்னால் காணமுடிந்தது. அதன் விளைவாக அவ்வப்போது ஒருசில கட்டுரைகளை எழுதினேன்.

ஒருநாள் தற்செயலாக இணையத்தில் இலங்கையைச் சேர்ந்த இராஜகோபால் என்னும் காந்திய ஆளுமையின் தன்வரலாற்றைப் படித்தேன். காந்தியக்கொள்கையின் மீது கொண்டிருந்த ஈர்ப்பினால் இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில்  கலந்துகொண்டு சிறைக்குச் சென்று வாடிய மகத்தான மனிதர் அவர். அவரைத் தொடர்ந்து காந்தியடிகளின் வழிகாட்டுதலின் பேரில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்ட பல்வேறு ஆளுமைகளைப்பற்றியும் படிக்கத் தொடங்கினேன். பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் பல அரிய நூல்கள் கிடைத்தன. ஏதோ ஒரு கணத்தில் அவர்களைப்பற்றி எழுதுவதை என் கடமையாகக் கருதி  எழுதத் தொடங்கினேன்.

ஒருநாள் என் கோவை நண்பர் கண்ணன் தொலைபேசியில் அழைத்து சர்வோதயம் மலர்கிறது இதழைப்பற்றியும் .மு.நடராஜன் அண்ணாச்சியைப்பற்றியும் சொன்னார். காந்தி ஜெயந்தி தொடர்பாக வரவிருக்கும் இதழில் வெளியிடும் வகையில் ஒரு கட்டுரை எழுதியனுப்ப வேண்டுமென அண்ணாச்சி கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார். அப்போதுதான் நான் அவினாசிலிங்கம் அவர்களுடைய தன்வரலாற்று நூலைப் படித்துமுடித்திருந்தேன். இரண்டுமூன்று நாட்களுக்குள்ளேயே  நான் அவரைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி முடித்துவிட்டேன். அண்ணாச்சியின் மின்னஞ்சல் விவரம் எனக்குத் தெரியாததால் நண்பர் கண்ணனுக்கே அனுப்பிவைத்தேன். அவர் வழியாக கட்டுரை அண்ணாச்சிக்குச் சென்று சேர்ந்துவிட்டது.

அடுத்தநாள் காலையில் அண்ணாச்சி என்னை தொலைபேசியில் அழைத்து அக்கட்டுரையைக் குறித்து நீண்ட நேரம் பேசினார்.  அவினாசிலிங்கம் அவர்களோடு தனக்கிருந்த தொடர்பு பற்றியும் பகிர்ந்துகொண்டார். கட்டுரையைப் படித்ததும் ஓர் ஆவணப்படத்தைப் பார்த்ததுபோல நிறைவாக இருக்கிறதெனச் சொன்னார். எங்கள் தொடர்பும் முதல் உரையாடலும் இப்படித்தான் தொலைபேசி வழியாகவே நிகழ்ந்தது.  அக்டோபர் மாத இதழில் அண்ணாச்சி அக்கட்டுரையை வெளியிட்டார்.

இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு அண்ணாச்சியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.  அவினாசிலிங்கம் பற்றிய கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் பல வாசகர்கள் அலுவலக எண்ணில் அழைத்து பாராட்டு தெரிவிப்பதாகவும் சொன்னார். பெரும்பாலானோர் அவினாசிலிங்கம் அவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள் என்றும் அக்கட்டுரை ஏதோ ஒரு விதத்தில் அனைவரையும் பழைய நினைவுகளின் திசையில் இழுத்துச் சென்றுவிட்டது என்றும் தெரிவித்தார். அனைவருடைய உரையாடல்களிலும் இறந்தகால நினைவேக்கத்தை உணரமுடிந்ததாகத் தெரிவித்தார். 

அன்று, அந்த உரையாடலை முடிக்கும்போது தொடர்ந்து இத்தகு ஆளுமைகளைப்பற்றி எழுதி வெளியிட்டால் மறைந்த ஆளுமைகளின் தியாக வாழ்க்கையைப்பற்றி புதிய தலைமுறையினருக்கு உணர்த்திவிட முடியும் என நம்பிக்கையோடு சொன்னார். நான் அவருடைய ஆலோசனையை அக்கணமே ஏற்றுக்கொண்டு எழுதிக் கொடுப்பதாக வாக்களித்தேன். ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்துக்குள் கட்டுரை கிடைத்துவிட்டால் போதும் என்று அவர் சொன்னார். ஆனால் அந்த மாதத்திலேயே அவருக்கு மூன்று கட்டுரைகளை அனுப்பிவைத்துவிட்டேன். அவை அண்ணாச்சிக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தன.

ஒவ்வொரு வாரமும் அவர் தொலைபேசியில் அழைத்து உரையாடுவார். பெரும்பாலும் அவருடைய பேச்சு புதிதாக அனுப்பிவைத்த கட்டுரையை ஒட்டியதாக  இருக்கும். அல்லது பிரசுரமான கட்டுரையை ஒட்டி வாசகர்களிடமிருந்து வந்த எதிர்வினைகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இருக்கும். பல முறை கடிதத்தையே படித்துக் காட்டுவார். அவர் வழியாக என்னுடைய எண்ணைப் பெற்று பலர் என்னுடன் நேரடியாகவே பேசியதுண்டு.

நான் எழுதிய ஒவ்வொரு ஆளுமையோடும் அவருக்கு தொடர்பு இருந்தது. வினோபா, கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன், ஜே.சி.குமரப்பா, ஜி.இராமச்சந்திரன், ஜெயப்பிரகாஷ் நாராயண், காமராஜர் என பல ஆளுமைகளோடு பழகியவர் அவர். அவர்களைப்பற்றிய கட்டுரைகளை எழுதியபோதெல்லாம் அவர்களுடன் தான் உரையாடிய பொழுதுகளையும் கலந்துகொண்ட போராட்டங்களையும் ஏதோ தேர்த்திருவிழாவுக்குச் சென்று வந்த கதையைச் சொல்வதுபோல சுவாரசியத்துடன் விவரிப்பார். இளம்பருவத்திலேயே கதராடைகளைப்பற்றி காந்தியடிகள் கூறியிருந்த சொற்களைப் படித்துவிட்டு, அந்நிய ஆடைகளைத் துறந்து கதராடைகளை மட்டுமே அணியத் தொடங்கியதாகவும் அவ்வப்போது காந்திகிராமில் நடைபெற்ற கோடைகாலப் பயிற்சிமுகாம்களில் கலந்துகொண்டு நிர்மாணப்பணிகளுக்குரிய பயிற்சிகளைப் பெற்றதாகவும் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறையில் அரசாங்க வேலை கிடைத்தபோதும், அந்த வேலையில் இணையாமல் ராமேஸ்வரத்திலிருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற பூதான யாத்திரையில் சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டார். மாதக்கணக்கில் நீண்ட அந்த யாத்திரை அனுபவம் பிறிதொரு சமயத்தில் தமிழகத்துக்கு வந்த வினோபாவின் பாத யாத்திரையிலும் பங்குகொள்ள வைத்தது. அந்த அளவுக்கு இலட்சியவாதக் கனவுகள் அவர் நெஞ்சில் குடியேறியிருந்தன. தமிழகத்தில் நடைபெற்ற நடைப்பயணத்தில் பல இடங்களில் வினோபாவின் உரையை பொதுமக்களுக்காக தமிழில் மொழிபெயர்த்தவர் அண்ணாச்சி. அந்த நடைபயண அனுபவங்களை அவர் விவரிப்பதைக் கேட்கும்போது அவை ஒவ்வொன்றும் உணர்ச்சிமயமான காட்சியாக நம் கற்பனையில் விரிவடையும். ”இதையெல்லாம் நீங்கள் எழுதக் கூடாதா அண்ணாச்சி?” என்று பல முறை நான் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும்  த்ச் என்று ஒரு சின்ன நாக்குத் தட்டலோடும் சிரிப்பொலியோடும் அண்ணாச்சி அக்கணத்தைக் கடந்துவிடுவார்.

பொதுவாக நாமாகக் கேட்காமல் எந்தச் செய்தியையும் யாரிடமும் சொல்லும் பழக்கம் அண்ணாச்சிக்கு இல்லை என்பதையும் கேட்டுவிட்டால் மடைதிறந்த வெள்ளமென நினைவிலிருந்து எல்லாவற்றையும் சொல்லக்கூடியவர் என்பதையும் நான் அன்று புரிந்துகொண்டேன். அதுமட்டுமன்றி, அனுபவங்களைப் பதிவு செய்வதுபற்றி குறிப்பிடும்போதும் அவருடைய உரையாடல் தானாகவே தேங்கி நின்றுவிடும். அதற்குப் பிறகு அவரைப் பேசவைப்பது இயலாத செயல் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அதனால் பல்வேறு தருணங்களில் குறுக்கிடாமல் அவர் சொல்வதை மட்டும் கேட்டபடி இருப்பேன். ஆயினும் ஆவல் மீதூற சிற்சில சமயங்களில் பொங்கியெழும் கேள்வியை என்னால் கட்டுப்படுத்த முடிந்ததில்லை.

2020 ஜனவரியில் எனக்கு விளக்கு விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. அண்ணாச்சிக்கு அந்த அழைப்பிதழை அனுப்பி வைத்திருந்தேன். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என விரும்பினேன். அவருடைய உடல்நிலை அதற்கு அனுமதிக்குமா இல்லையா என்பதைக்கூட நான் யோசிக்கவில்லை. தொலைபேசியில் என் விருப்பத்தைத் தெரிவித்ததும்நீங்க விருது வாங்கறது, எங்க சர்வோதயம் ரைட்டர்ஸ்ல ஒருத்தர் வாங்கறமாதிரி. அந்த சமயத்துல நான் வராம இருப்பேனா, அவசியம் வரேன்என்று சொன்னார். சொன்னதுபோலவே நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே தன் அலுவலகப் பணியாளர்களுடன் வந்திருந்து என்னையும் என் குடும்பத்தாரையும் வாழ்த்தினார். நிகழ்ச்சி முடியும்வரை முன்வரிசையில் அமர்ந்து அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளை மகிழ்ச்சியுடன் கேட்டுவிட்டுச் சென்றார். எண்ணற்ற முறை தொலைபேசியில் பேசியிருந்தாலும் அன்றுதான் அவரை நேரில் கண்டு பேசினேன்.

கட்டுரைகளின் தேவைக்காக மட்டுமன்றி, பொதுவாக நான் படிக்க நினைக்கிற பல காந்திய நூல்களைப்பற்றி அவரிடம் கேட்டதுண்டு. ஒவ்வொரு முறையும்நம்ம நூலகத்துல இருக்கும்னுதான் நெனைக்கறேன். தேடி பார்க்க சொல்றேன்என்பதுதான் அவருடைய பதிலாக இருக்கும். ஆனால் இரண்டே நாளில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடும். “கிடைச்சிட்டுது. ஆபீஸ்ல அனுப்ப சொல்லியிருக்கேன். படிச்சிட்டு திருப்பி அனுப்பிடுங்கஎன்று தெரிவிப்பார். நாலைந்து நாட்களில் நான் அப்புத்தகத்தைப் படித்துவிட்டு தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு விரைவஞ்சலில் திருப்பி அனுப்பிவிட்டு அவருக்கு தகவலும் கொடுத்துவிடுவேன்.

ஒருமுறை அவரிடமிருந்து எனக்கு வந்த புத்தகத்தோடு புதியதொரு புத்தகமும் சேர்ந்து வந்திருந்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் சக்திகுடில். வீ.செல்வராஜ் அவர்களுடைய தன்வரலாறு. வேறு யாருக்கோ அனுப்பப்பட வேண்டிய புத்தகம் எனக்கு வந்துவிட்டதோ என எனக்குள் ஒரு பதற்றம் எழுந்தது. உடனே தொலைபேசியில் அவரை அழைத்து தகவலை தெரிவித்தேன். ”தவறா அனுப்பலை. அந்த புத்தகத்தை உங்களுக்காகத்தான் அனுப்பியிருக்கேன். நீங்க அத அவசியம் படிக்கணும். உங்களுக்கு நிச்சயம் புடிக்கும்என்றார். அவ்வளவு நம்பிக்கையோடு அனுப்பியிருக்கிறாரே என அடுத்தநாளே அந்தப் புத்தகத்தைப் படித்துமுடித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழில் வெளிவந்த முக்கியமான பத்து தன்வரலாற்று நூல்களில் ஒன்றாக அந்தப் புத்தகத்தைச் சொல்லமுடியும். இருபதாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம் என்றே சொல்லமுடியவில்லை. செல்வராஜின் மொழி அந்த அளவுக்கு புதுசாக இருந்தது. அவர் விவரித்திருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் உயிர்ப்புள்ள சித்திரங்களாக இருந்தன. நான் உடனே அண்ணாச்சியை அழைத்து அந்தப் புத்தகத்துக்கு நன்றி சொன்னேன்.

அன்று, அந்த உரையாடலின் முடிவில்இது செல்வராஜுக்கு நூற்றாண்டு சமயம். பெரிய விழாவா கொண்டாடணும்னு ஆசையா இருந்தாலும் எந்த அளவுக்கு நடைமுறையில சாத்தியம்னு தெரியலை. நீங்க இத பத்தி ஒரு கட்டுரை எழுதிக் குடுங்க. நம்ம பத்திரிகையில போடலாம்என்றார். அந்தப் புத்தகத்தைப்பற்றி எனக்கும் எங்காவது எழுதவேண்டும் என்றொரு ஆசை இருந்தது. அந்த வாரத்திலேயே ஒரு கட்டுரையை எழுதி அவருக்கு அனுப்பிவைத்தேன். அவருக்கு அது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது என்பதை அவருடைய உரையாடல் வழியாக உணரமுடிந்தது. “நாங்க ரெண்டுபேரும் அந்த காலத்தில ரொம்ப நெருக்கமா இருந்தோம். எனக்கு அவர் அண்ணன் மாதிரி. ஸ்கூல்லேர்ந்து ரிட்டயரான பிறகு இங்கதான் வேலை செஞ்சாரு. கிராம ராஜ்ஜியம், சர்வோதயத்துல எல்லாம் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்காரு. அந்தக் காலத்துல குமுதம் நடத்திய சிறுகதைப்போட்டியில பரிசுகூட வாங்கியிருக்காரு. ஒற்றைப்பனைன்னு ஒரு சிறுகதைத்தொகுதி கூட போட்டிருக்காரு. தேடி பாக்கறேன். இருந்தா உங்களுக்கு அனுப்பிவைக்கறேன்என்று செல்வராஜைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இறுதியில்நல்லா ஆரோக்கியமாத்தான் இருந்தாரு. ஒருநாள் இங்க நடந்த ஒரு கூட்டத்துல கீதையைப்பற்றி பேசினாரு. பேசும்போதே நெஞ்சுவலி வந்து உயிர் போயிட்டுது. நம்ம கண்ணு முன்னாலயே ஒரு உயிர் போகிறத பார்க்கிற துக்கமும் வேதனையும் ரொம்ப கொடுமைஎன்று மிகவும் துயரத்துடன் குறிப்பிட்டார்.

வழக்கமான காந்திய ஆளுமையைப்பற்றிய கட்டுரையோடு வீ.செல்வராஜின் தன்வரலாறு பற்றிய கட்டுரையையும் சேர்த்து அடுத்த இதழிலேயே வெளியிட்டார் அண்ணாச்சி. அக்கட்டுரையைப் படித்துவிட்டு செல்வராஜின் துணைவியார் ஒருநாள் என்னை அழைத்துப் பேசினார். என் வாழ்வின் மிகமுக்கியமான பொற்கணங்களில் அதுவும் ஒன்று. அந்த மாபெரும் அன்னையின் ஆசி கிடைப்பதற்கு அண்ணாச்சியே காரணம்.

ஒருமுறை சர்வோதயம் தொடருக்காக காரைக்கால் காந்தி என அழைக்கப்படும் அரங்கசாமி நாயக்கர் என்னும் காந்திய ஆளுமையைப்பற்றிய ஒரு கட்டுரையை எழுதி  அனுப்பியிருந்தேன். அதைப் படித்ததும் கட்டுரையில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியைப்பற்றி அண்ணாச்சி பேசினார். காந்தியடிகளை காரைக்காலுக்கு அழைத்துவரும் நாயக்கர், காந்தியடிகள் வழியாகவே அங்கிருக்கும் சத்திரத்தையும் குளத்தையும் சாதிவேறுபாடின்றி அனைவரும் புழங்குமிடங்கள் என அறிவித்து அவற்றைத் திறக்கவைக்கிறார். தொடர்ந்து நேரமின்மையின் காரணமாக  சுரக்குடி என்ற இடத்தில் வெட்டப்பட்டிருந்த கிணற்றை காந்தியடிகளால் திறந்துவைக்கமுடியாமல் போய்விட்டது. அதனால் அரங்கசாமி நாயக்கரே அந்தக் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கிறார். அவர் திறந்துவைத்தபோதும் அந்தக் கிணறு இன்றளவும் காந்தி கிணறு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அந்தக் கிணற்றைப்போல ஆயிரம் கிணறுகள் உருவாக ஏதோ ஒருவகையில் தான் காரணமாக இருந்ததாக அண்ணாச்சி குறிப்பிட்டார்.

நேற்று நல்ல மழை என்று சொல்வதுபோல அவர் அந்தச் செய்தியை சாதாரணமாகச் சொன்னபோதும் அதைக் கேட்டு என் உடல் சிலிர்த்தது. “என்ன சொல்றீங்க, ஆயிரமா?” என்று சத்தமாகக் கேட்டுவிட்டேன். “ஆமாமாம். ஆயிரம்தான்என்று சிரித்தபடியே சொன்னார். தொடர்ந்துஅதெல்லாம் ஒரு காலம்என்றார். “பூமிதானம்னு நெலம் வாங்கி கொடுத்துட்டோம். அதெல்லாம் சரி. அவுங்க எப்படி அந்த இடத்துல விவசாயம் செய்வாங்க? அதயும் யோசிக்கணும் இல்ல. அக்கம்பக்கத்துல எங்கயும் ஏரியும் இல்ல. கொளமும் இல்ல. எதுவோ ஒரு அமைப்பு கிணறு வெட்டற செலவ கொடுக்கறோம்னு சொன்னாங்க. அந்த உதவியால ஆயிரம் கெணறு வெட்டறதுக்கான இடங்கள முடிவு செஞ்சி அந்த வேலையை முடிச்சேன். ஒரு கிணத்து தண்ணிய வச்சி பத்து பதினஞ்சி விவசாயிங்க பாசனம் செஞ்சிக்கலாம். அந்த கிணறுங்களால ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிம்மதியா கஞ்சி குடிச்சாங்கஎன்றார். எனக்கு சொற்களே எழவில்லை. “நீங்க செஞ்சிருக்கிற வேலை ரொம்ப பெரிய சாதனை சார்என்றேன். அவர் வழக்கம்போல நாக்கைத் தட்டி சிரித்தபடியாரோ நிலத்த கொடுத்தாங்க. யாரோ பணத்த கொடுத்து கிணறு வெட்ட வச்சாங்க. இதுல என் பங்கு என்ன இருக்குது. ஒவ்வொன்னும் சரியா நடக்குதான்னு பாத்தேன். அவ்ளோதான். அது பெரிய வேலையா?” என்று அப்பெருமையில் தனக்கு எந்தப் பங்குமில்லை என்பதுபோல சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார்.

பிப்ரவரி மாத இதழில் முத்துநாயகம் என்னும் சர்வோதயத் தொண்டரின் மறைவையொட்டி ஒரு அஞ்சலிக்கட்டுரையை எழுதியிருந்தார். இரண்டுபக்கக் கட்டுரையில்தான் எத்தனை எத்தனை நினைவுகள். பம்பரம்போல சுழன்று பணியாற்றும் முத்துநாயகத்தின் சித்திரத்தையே பார்க்கமுடிந்தது. உடனே அவரை  தொலைபேசியில் அழைத்து அதைப்பற்றி குறிப்பிட்டேன். உரையாடலை முடிக்கும் முன்பாக, “முத்துநாயகம் மாதிரி உங்களுக்கு பழக்கமான ஆட்கள் ஏராளமா இருப்பாங்க. ஞாபகம் வரக்கூடிய ஒவ்வொருத்தவங்கள பத்தியும் இப்படி ரெண்டுரெண்டு பக்கம் எழுதினா ரொம்ப நல்லா இருக்கும்என்றேன். ”அப்படியா சொல்றீங்க, பார்க்கலாம். பார்க்கலாம்என்றபடி வழக்கம்போல சிரித்துக்கொண்டே பேச்சை முடித்துக்கொண்டார் அவர்.

அவினாசிலிங்கம் பற்றிய கட்டுரையில் தொடங்கிய பயணத்தில் ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட காந்திய ஆளுமைகளைப்பற்றி நான் எழுதிவிட்டேன். ஒவ்வொரு கட்டுரையைப்பற்றியும் அண்ணாச்சி சொன்ன சொற்கள் என் காதில் இன்னும் ஒலித்தபடி உள்ளன. அக்கட்டுரைகள் ஏற்கனவே சத்தியத்தின் ஆட்சி, எல்லாம் செயல்கூடும் என இரு தொகுதிகளாக வந்துள்ளன. அத்தலைப்புகளின் கீழே சின்ன எழுத்துகளில் காந்திய ஆளுமைகளின் கதைகள் என்று குறிப்பிட்டிருக்கும். ஒருநாள் உரையாடும்போது அண்ணாச்சிஅதெல்லாம் வாழ்க்கை வரலாறுதானே, நீங்க ஏன் கதைகள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”வரலாறுதான். அதில் சந்தேகமே இல்லை. சில வரலாற்றுத்தகவல்கள் மக்களிடையே புழங்கிப்புழங்கி கதைகளாக மாற்றம் கொள்ளும். அவை கதைகளாக மீண்டும் மீண்டும் பேசப்படுவதாலேயே மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். ராஜாதேசிங்கு கதை, நல்லதங்காள் கதை, காத்தவராயன் கதை என்று சொல்லக்கூடிய மரபு நம்மிடையே ஏற்கனவே இருக்கிறது. கொத்தமங்கலம் சுப்பு தன்னுடைய புத்தகத்துக்கு காந்திமகான் கதைன்னுதானே தலைப்பு வச்சிருக்கார். அந்த எண்ணத்துல வச்சதுதான் அந்தக் குறிப்புஎன்றேன். ”புரியுது, புரியுது. நீங்க சொல்ற காரணம் பொருத்தமாதான் இருக்குதுஎன்றார் அண்ணாச்சி.

கட்டுரை வரிசையில் இடம்பெறத்தக்க ஆளுமைகள் என அவர் அடிக்கடி இருவரைப்பற்றிக் குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் பெங்களூரில் வசித்தவர். பிரம்மச்சாரி என்னும் பட்டப்பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்ட ராமச்சந்திர ராவ். இன்னொருவர் புதுச்சேரியில் சர்வோதயப்பணிகளில் ஈடுபட்டிருந்த எஸ்.ஆர்.எஸ். என்பவர். வினோபாவின் பாதயாத்திரையில் அண்ணாச்சியோடு சேர்ந்து நடந்தவர். இருவரைப்பற்றிய தகவல்களுக்காக பல மாதங்களாக நானும் தொடர்ச்சியாக பல முயற்சிகள் எடுத்துவருகிறேன். இன்றுவரை வெற்றி எட்டாக்கனியாகவே இருக்கிறது. அண்ணாச்சியைப்போலவே இருவருமே எனக்கும் முக்கியமானவர்கள். ராமச்சந்திர ராவ் பெங்களூரில் நான் நன்கறிந்த மல்லேஸ்வரம் பகுதியில் ஆசிரமம்   வைத்து நடத்தியவர். எஸ்.ஆர்.எஸ். எங்கள் கிராமத்துக்கு அருகிலிருக்கும் மற்றொரு கிராமமான சகாதேவன்பேட்டையைச் சேர்ந்தவர். என்னைப்போலவே இளம்வயதில் கிராமத்திலிருந்து புதுச்சேரிக்குக் குடியேறியவர். அண்ணாச்சியின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்னும் எண்ணம் இறக்கிவைக்க முடியாத ஒரு பெரும்பாரமாக மனத்தில் தங்கிவிட்டது.

போன மாதம் நான் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் என்னும் தொண்டரைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அவருடைய புகைப்படத்துடன் அனுப்பியிருந்தேன். மறுநாள் நான் எதிர்பார்த்ததுபோலவே அவரிடமிருந்து அழைப்பு வந்தது. வழக்கம்போல உற்சாகம் ததும்பும் அவருடைய குரலில் மெலிதான பரவசத்தின் சாயலை என்னால் உணரமுடிந்தது. காரணம் எதுவாக இருக்குமென யோசித்தபடியே உரையாடும் சமயத்தில் அவரே அந்தக் காரணத்தை வெளிப்படுத்திவிட்டார். ”கிருஷ்ணனை எப்படி தெரியும் உங்களுக்கு? அந்தக் காலத்தில் என்னுடைய நண்பர் அவர். உங்க கட்டுரையில அவர அப்படியே என் கண்ணு முன்னால கொண்டுவந்து நிறுத்திட்டீங்கஎன்று பரவசத்துடன் சொன்னார். தொடர்ந்து அற்புதமான மனிதர் அவர். நீங்க வச்சிருக்கிற தலைப்பு ரொம்ப ரொம்ப பொருத்தம். உண்மையிலயே அவர் ரொம்ப தன்னடக்கமான மனிதர். அவர மாதிரி மனிதர்களைப் பார்க்கறது ரொம்ப அபூர்வம்என்று சொல்லிக்கொண்டே சென்றார். ”நான் அவுங்க வீட்டுக்கெல்லாம் போயிருக்கேன். திருச்செங்கோடு பக்கம் போனா, அவர பார்க்காம நான் வரமாட்டேன். அவரோடு சேர்ந்து பல முறை சாப்பிட்டிருக்கேன்என்று பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டார். ”ஒருதரம் குடிசைத்தொழில் மாதிரி காகிதம் செய்யற தொழில காந்தி ஆசிரமத்திலேருந்து எப்படியோ விளையாட்டா கத்துட்டு வந்துட்டாரு. இங்க இருக்கிற எல்லாருக்கும் அவரு அந்த தொழில சொல்லிக் கொடுத்தாரு. அதனால எத்தனை குடும்பங்கள் பொழைச்சாங்க தெரியுமா? தங்கமான மனிதர். தங்கமான மனிதர்என்று நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நான் அக்கட்டுரைக்கான தகவல்களை அடைந்த விதத்தை  சுருக்கமாக எடுத்துச் சொன்னேன். கிருஷ்ணன் தன் இறுதிக்காலத்தில் தன் வாழ்க்கைவரலாற்றை ஒரு பெரிய குறிப்பேட்டில் முடியும்போதெல்லாம் எழுதிவைத்தார். சிறுகச்சிறுக அந்தக் குறிப்பேட்டில் முக்கால் பங்குக்கும் மேல் நிறைந்துவிட்டது. ஏதோ ஒரு கட்டத்தில்  உடல்நிலை குன்றிய சமயத்தில்தான் அந்த எழுத்துவேலையை அவர் நிறுத்தினார். அதற்குப் பிறகு அதைத் தொடர்வதற்கான வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கவில்லை. அவர் இயற்கையெய்திவிட்டார். அவருடைய நூற்றாண்டு நெருங்கிய சமயத்தில் அந்தக் குறிப்பேடு அவர் பிள்ளைகள் பார்வையில் தென்பட்டதும், அவர்கள் அப்பிரதியை இணையத்தில் பதிவு செய்தனர்.  ஆற்றாமை தொனிக்கும் குரலில்அன்னைக்கு அவர் எழுதி வச்சதனாலதான் இதயெல்லாம் தெரிஞ்சிக்க முடிஞ்சது. இல்லைன்னா எல்லாமே அவரோடேயே போயிருக்கும், இல்லையா சார்?” என்றேன் நான்.  அதன் தொடர்ச்சியாக என் கட்டுப்பாட்டை மீறிஇப்ப நினைச்சா கூட நீங்க  உங்க அனுபவங்கள எழுதிவைக்கலாம் சார். ஒரு ஆறு மாசம். தினசரி ரெண்டுமணி நேரம் உக்காந்தீங்கன்னா முடிச்சிடலாம்என்று சொன்னேன். அவர் வழக்கம்போல நாக்கைத் தட்டி சிரித்தார். பிறகுநீங்க எழுத்தாளர் இல்லயா, நல்லா யோசனை சொல்றீங்க. பார்க்கலாம் பார்க்கலாம்என்றார். அன்றைய உரையாடலைத் தொடர்ந்து அவர் தன் இறந்தகாலத்தைப்பற்றி யோசித்து அசைபோட்டாரா, எழுதத் தொடங்கினாரா என்பதைப்பற்றி எதுவுமே தெரியவில்லை.

மூன்று வாரங்களுக்கு முன்புதான் அந்த உரையாடல் நிகழ்ந்தது. இனி உரையாடலுக்கு வழியே இல்லாதபடி அவர் இயற்கையோடு கலந்துவிட்டார். எழுதாத அவருடைய வரலாறு அவர் நினைவுகளிலேயே தங்கிவிட்டது. அண்ணாச்சிக்கு அஞ்சலிகள்.

 

(மதுரை காந்தி நினைவகத்தின் செயலாளராகவும் காந்தி நினைவு நிதி அமைப்பின் தலைவராகவும் சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய .மு.நடராஜன் அவர்கள் 24.05.2021 அன்று நள்ளிரவு இயற்கையெய்தினார். அவருக்காக எழுதப்பட்ட அஞ்சலிக்கட்டுரை ஜூன் மாத சர்வோதயம் மலர்கிறது இதழில் வெளியானது)