Home

Monday, 12 July 2021

செல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்

  

திண்ணை இணைய இதழில் 2002-2003 காலகட்டத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்றொரு தொடரை எழுதிவந்தேன். மொத்தம் நூறு அத்தியாயங்கள். நூறு இதழ்களில் அவை தொடராக வெளிவந்தன. தொடரின் முதல் நாலைந்து அத்தியாயங்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே என்னோடு மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டு ஒரு வாசகர் பாராட்டி எழுதினார். அவர் நண்பர் செல்வராஜ். அவருடைய சொந்த ஊர் சிதம்பரம்.

பிறகு ஒவ்வொரு வாரமும் அத்தியாயம் வெளியான அன்று மாலையில் அல்லது அடுத்த நாளன்று காலையில் அவருடைய மடல்கள் வரத் தொடங்கின.  ஒருமுறை ஒரு கட்டுரையை ஒட்டி அவருக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அவற்றை கடிதமாக எழுதி பதில் பெறுவதைவிட தொலைபேசியில் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டு என்னுடைய தொலைபேசி எண்ணைக் கேட்டு மடலை அனுப்பியிருந்தார். நானும் என்னுடைய தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு அவருக்கு விடை எழுதியிருந்தேன். அன்று இரவு வீட்டுத் தொலைபேசியில் அவர் பேசினார். கனத்த தெளிவான குரல். திருத்தமான பேச்சு. அன்று நான் சொன்ன பதிலை பொறுமையாக கேட்டுக்கொண்டார். பேசி முடிக்கும் சமயத்தில் நான் அவரைப்பற்றி தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவரும் தொலைபேசித் துறையில் சிதம்பரம் நகரில் பணியாற்றுபவர். பேச்சு சட்டென இலக்கியத்தின் திசையிலிருந்து நிர்வாகச்சிக்கலை நோக்கி எப்படியோ நகர்ந்துவிட்டது.

அன்றுமுதல் ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் அழைத்துப் பேசத் தொடங்கினார் செல்வராஜ். எப்போதும் அவர் இரவு ஒன்பது மணிக்குத்தான் அழைப்பது வழக்கம். அந்த நேரத்தில் தொலைபேசி ஒலிக்கத் தொடங்கியதுமேஎழுந்து வாங்க சீக்கிரம். உங்க சிதம்பரத்துக்காருதான்என்று என் மனைவி சொல்வதுண்டு. அந்த அளவுக்கு அவருடைய அழைப்புகள் மிகவும் இயல்பாகிவிட்டன.

அவருக்கு சிறுகதைகள் மீது இருந்த ஆர்வத்தை அப்போது புரிந்துகொண்டேன். .வெ.சு.ஐயர் காலத்துக் கதைகள் தொடங்கி இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்தவர்கள் கதைகள் வரைக்கும் அவர் படித்திருந்தார். மூத்த எழுத்தாளர்களில் அவருக்கு அழகிரிசாமி, கி.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களின் கதைகளை அடிக்கடி நினைவுகூர்ந்து பேசுவார்.  புதிய எழுத்தாளர்களில் அசோக்குமார், சுனில் கிருஷ்ணன், கலைச்செல்வி போன்றோரின் கதைகள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன.

ஒருமுறை அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதையையும் வண்ணதாசனின் நிலை சிறுகதையையும் இணைத்துவைத்துப் பேசிய சொற்கள் இன்னும் என் நினைவில் உள்ளன. ”உலகத்தில் ஆதரவில்லாமல் இருக்கிற ஒரு பிள்ளையை எங்கோ ஒரு அம்மா பார்த்து குளிக்கவைத்து, துணிமணி கொடுத்து சோறு போடுகிறார் என்பது சாதாரணமான விஷயமில்லை. அழகிரிசாமி அதை அழகா காட்டியிருக்காரு. நிலை சிறுகதையில வீட்டு வேலை செய்யற சிறுமியுடைய நிலைமையும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான். அந்தச் சிறுமியால மத்தவங்களப்போல தெருவுக்கு போய் தேர் பார்க்கமுடியலை. அவ்வளவுதான். ஆனா அடைக்கலமா பாதுகாப்பா இருக்க ஒரு வீடு கெடைச்சிருக்கே. அது எவ்ளோ பெரிய விஷயம். அன்பு கெடச்சா நல்லதுதான். சந்தோஷமா இருக்கும்தான். ஆனா அன்பைப்போலவே பாதுகாப்பும் முக்கியமான விஷயம்தானே சார்?” என்று அவர் கேட்டார். அதைக் கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அந்தக் கோணத்தில் அதுவரை ஒருவரும் அவ்விரு கதைகளை ஒப்பிட்டுப் பேசி நான் கேட்டதில்லை.

அந்த உரையாடலுக்குப் பிறகு அந்தக் கேள்வி என் நெஞ்சுக்குள் நீண்ட காலத்துக்கு எதிரொலித்தபடியே இருந்தது. கவித்துவமான அந்த வரியை எந்தத் திட்டமிடலும் இல்லாமல் அவர் சட்டென்று சொல்லிவிட்டார். ஒவ்வொரு கதையை ஒட்டியும் அவருடைய ரசனைக்குரிய சில கோணங்கள் உண்டு. அந்தத் தீராப்பசிதான் அவரை மேலும் மேலும் சிறுகதைகளை நோக்கியும் வாசிப்பை நோக்கியும் தள்ளிக்கொண்டே இருந்தது.

நல்ல புத்தகங்கள் பற்றிய விளம்பரங்களையோ மதிப்புரைகளையோ படிக்க நேர்ந்தால், உடனே அதை வாங்கி படித்துவிடுவார். ஏறக்குறைய ஆயிரம் புத்தகங்கள் சேர்த்துவைத்திருப்பதாக ஒருமுறை குறிப்பிட்டார். தமிழில் வெளிவந்த எல்லா இலக்கியப் பத்திரிகைகளையும் அவர் வாங்கி, அவற்றில் வெளிவரும் சிறுகதைகளை உடனுக்குடன் படித்துவிடுவார். என்றாவது ஒரு நாள் ஒரு சிறுகதையைக் குறிப்பிட்டுஇது எனக்கு நல்ல கதையாக எனக்குத் தோன்றுகிறது, என் கருத்து சரிதானா?” என்று கேட்பதுண்டு. ஒருவேளை அது நல்ல கதையாக இருக்கும் நிலையில் இன்னும் ஆழமாக அணுகும் பயிற்சியைப்பற்றி அவருக்கு விரித்துரைப்பேன். அவரும் அதை ஆர்வமுடன் கேட்டுக்கொள்வார். ஒருவேளை அது சாதாரணமான  கதையாக இருந்தால் அதையும் அவரிடம் பக்குவமாக எடுத்துரைப்பேன். நான் குறிப்பிடும் நியாயங்களை அவர் காதுகொடுத்துக் கேட்க தயங்கியதே இல்லை. குறுக்கிட்டுத் தடுத்ததுமில்லை. உரையாடலில் அவர் ஒருநாளும் தன்னை நிறுவிக்கொள்ள அவர் முனைந்ததே இல்லை.

சிறுகதை சார்ந்து நல்ல ரசனை அவரிடம் செயல்பட்டது. ஐம்பதாண்டு சிறுகதைகள்,. நூற்றாண்டுச் சிறுகதைகள், கொங்குச் சிறுகதைகள், தஞ்சைச் சிறுகதைகள், நெல்லைச் சிறுகதைகள் என்பவை போன்ற தொகுப்புகள் வெளிவரும் சமயத்தில் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிப் படித்துவிட்டுப் பேசுவார். அத்தொகுப்புகளை உருவாக்கிய தொகுப்பாசிரியர்களைப்பற்றி மிகுந்த பாராட்டுணர்வுடன் பேசுவார். அவர்கள் குறிப்பிடும் கதைகளை தனியாக ஒரு பட்டியலாக எழுதி வைத்திருப்பதாக ஒருமுறை தொலைபேசியில் சொன்னார். ”எதற்காக அந்தப் பட்டியல்?” என்று கேட்டேன். “இதுவரை தமிழில் வெளிவந்த எல்லாத் தொகைநூல்களையும் தேடிப் படிக்கப் போகிறேன். எந்தச் சிறுகதை அதிமான தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கிறது, எந்தச் சிறுகதையைப்பற்றி மீண்டும் மீண்டும் அனைவரும் சொல்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கப் போகிறேன்என்று ஆர்வத்துடன் சொன்னார். அவர் குரலில் ஒரு தீவிரத்தை என்னால் உணரமுடிந்தது.  அதை ஒரு முக்கியப்பணியாக எடுத்துக்கொண்டு வேலையில் இறங்கிவிடுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.  அப்போது எனக்கு அம்முயற்சி சற்றே அச்சத்தைக் கொடுத்தது. தயக்கத்துடன்இது உங்கள் படிக்கும் நேரத்தைக் குறைத்துவிடும் செல்வராஜ், எனக்கு இது என்னமோ வீண்முயற்சியாகத் தோன்றுகிறதுஎன்றேன்.  படிக்கறதையெல்லாம் விடமாட்டேன். எப்படியோ என் மனத்தில் இப்படி ஒரு எண்ணம் விதையாக விழுந்துவிட்டது. வாசகர்கள் முன் அதிக முறை முன்வைக்கப்பட்ட கதைகளைக் கொண்ட ஒரு பட்டியலை உருவாக்கும் கனவு என்னைத் துரத்துகிறதுஎன்று சொன்னார்.

நான் முதலில் அவர் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே அவர் அம்முயற்சியில் தீவிரமாக இறங்கினார். முதலில் அவர் வாழ்ந்த சிதம்பரம் நூலகத்துக்குச் சென்று, அங்கிருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைக் கொண்ட தொகுதிகளை எடுத்துவைத்துக்கொண்டு குறிப்புகளை எழுதிக்கொள்ளத் தொடங்கினார். பிறகு அங்கே இல்லாத தொகுதிகளை வெளியிட்டவர்கள் யார் என்கிற விவரங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை பணம் கொடுத்து வாங்கத் தொடங்கினார். சந்தையில் கிட்டாத புத்தகங்களை நகலெடுத்து பாதுகாக்கத் தொடங்கினார். சாகித்ய அகாதெமி, நேஷனல் புக் டிரஸ்டு வெளியிட்ட புத்தகங்கள் அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. நண்பர், அவருக்கு நண்பர் என ஒருவர் தொட்டு ஒருவரென பல பேரைத் தொடர்புகொண்டு புத்தகங்களைச் சேர்த்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெங்களூரில் கிடைத்த சில தொகுதிகளையும் என்னிடம் இருந்த சில தொகுதிகளையும் நகலெடுத்து அவருக்கு அனுப்பிவைத்தேன்.

கதைக்கோவை என்ற பெயரில் தொடக்க காலத்தில் வந்த தொகுதிகள், பின்பு கதையரங்கம் என்ற பெயரில் வந்த தொகுதிகள் என இடைவிடாமல் புத்தகங்களைத் தேடிக்கொண்டே இருந்தார் செல்வராஜ். அவருடைய தீவிரம் இறுதிவரை ஓயவே இல்லை. ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் குன்றாத தீவிரத்துடன் தேடித்தேடி ஏறத்தாழ நூற்றைம்பது தொகைநூல்களைச் சேர்த்துவிட்டார். முதலில் ஒவ்வொரு புத்தகத்திலும் அடங்கியுள்ள கதைகளின் பட்டியல், அதைத்தொடர்ந்து, எண்ணிக்கையில் அதிக முறை இடம்பெற்ற கதைகளின் முதல் பட்டியல், இரண்டாவது பட்டியல் என மாற்றி மாற்றித் தயாரித்துக்கொண்டே இருந்தார். வேறுவேறு கோணங்களில் விதவிதமான பட்டியலைத் தயாரிக்கும் கனவு அவரைத் துரத்தியபடியே இருந்தது. ஒரு முழு ஆண்டையே இதற்காகச் செலவிட்டார். இறுதியாக அவற்றை உள்ளடக்கிய ஒரு தகவல் கையேட்டை உருவாக்கிய பிறகு, அதன் வழியாக 150 சிறந்த சிறுகதைகள் என்றொரு பட்டியலைத் தயாரித்து எனக்கு அனுப்பினார்.

எனக்கு அது மலைப்பாக இருந்தது. அவருடைய பன்னிரண்டு ஆண்டு கால உழைப்பையும் கனவையும் கலைக்க எனக்கு மனம் வரவில்லை. ”இப்படி செய்வதற்குப் பதிலாக இந்தத் தகவல் கையேட்டிலிருந்து நீங்கள் வாசித்த அளவில் உங்களுக்குப் பிடித்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் போடுங்கள் செல்வராஜ். அது குறைந்தபட்சம் உங்கள் மனத்துக்கு நெருக்கமாக இருக்கும். உங்கள் ரசனை சார்ந்த தொகுதி என்ற அடையாளமாவது இருக்கும். யாரோ ஒருவர் மனத்துக்கு நெருக்கமானதை நீங்கள் ஏன் எடுத்துவைத்துக்கொண்டு தொகுக்கவேண்டும்என்று ஆலோசனையாகச் சொன்னேன்.

நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளாமலேயே ஆண்டுக்கணக்காய் பழகும் ஒரு நண்பரிடம் வேறு விதமாக எனக்கு பேசத் தெரியவில்லை. அவரோ புன்னகைத்தபடியேஇப்படி ஒரு பட்டியல் இருந்தா என்ன தப்பு சார்? ரிலீஸ் செஞ்சி பாக்கறேன் சார். என்ன மாதிரி எதிர்வினை வருதுன்னு பார்க்கலாம். நான் என்ன புத்தகமா போடப் போறேன். பட்டியலத்தானே வெளியிடப்போறேன்என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.  ஒரு வார இடைவெளியிலேயே அந்தப் பட்டியலை அவர் வெளியிட்டார்.

அப்பட்டியலை முன்னிட்டு அவருக்கு உற்சாகமூட்டும் எதிர்வினைகளே வந்தன என்று அவரே பிறகு சொன்னார். நான் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். எந்த மூலையிலிருந்தாவது அவரை நோக்கி தாக்குதல் கணை வந்துவிடுமோ என்றுதான் நான் அச்சம் கொண்டிருந்தேன். அப்படி எதுவும் நேரவில்லை, எல்லாம் இயல்பாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அமைதியடைந்தேன். தேவையில்லாமல் வீணாக நான் அஞ்சிவிட்டேனோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

வளவ துரையனைப் பாராட்டும் விதமாக கடலூரில் ஒரு பெரிய விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நான் கடலூருக்குச் சென்றிருந்தேன். செல்வராஜும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். அன்றுதான் அவரை நான் நேருக்கு நேர் பார்த்தேன். உயர்ந்த தோற்றம். நரைத்திருந்த தலைமுடியை அழகாக படிப்படியாக வாரியிருந்தார். ஒரு விவசாயிக்கே உரிய உடற்கட்டும் நிறமும் கொண்டிருந்தார். என் கைகளைப் பற்றி அழுத்திக் குலுக்கிய விதத்தில் அவருடைய அன்பை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. .நா.சு. மொழிபெயர்ப்பில் வெளிவந்திருந்த கடல்முத்து என்னும் புத்தகத்தைப்பற்றி  பேச்சுவாக்கில் எப்போதோ ஒருமுறை அவரிடம் சொல்லிவைத்திருந்தேன். அன்று அவர் அதை எனக்காக எங்கிருந்தோ தேடியெடுத்து அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். அது எனக்கு பெரிய புதையலே கிடைத்ததுபோல இருந்தது. என்னால்தான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. என் எழுத்து மேசை மீது வைத்திருந்த அப்புத்தகத்தை யாரோ நண்பரொருவர் எடுத்துச் சென்றுவிட்டார். அது என் கைக்கு திரும்பி வரவே இல்லை. இப்போது நினைக்கும்போது அந்த இழப்பை பெரிய வேதனையுடன் உணர்கிறேன்.

அந்த விழாவுக்குப் பிறகும் அவர் எனக்காக சில அரிய புத்தகங்களை தேடி வாங்கி அனுப்பினார். ஒருமுறை கி.ரா.வைச் சந்திக்கச் சென்றிருந்தபோது அவர் மங்கல இசை மன்னர்கள் என்னும் புத்தகத்தைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். தமிழகமெங்கும் வாழ்ந்த நாகசுரக்கலைஞர்களைப்பற்றிய விரிவான ஆவணம். அவர் சொன்ன தகவல்களால் உந்தப்பட்டு நானும் அதைப் படிக்க விருப்பம் கொண்டேன். ஆனால் அது புத்தகச்சந்தையில் எங்கும் கிடைக்கவில்லை. சிதம்பரத்தில் உள்ள புத்தகக்கடையில் இருப்பதைப் பார்த்ததாக சென்னையைச் சேர்ந்த ஒரு புத்தகக்கடைக்காரர் தெரிவித்தார். நான் உடனே அத்தகவலை செல்வராஜிடம் சொன்னேன். பத்து நாட்களுக்குள் அந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைக்கும்படி செய்துவிட்டார் செல்வராஜ். வேறொரு தருணத்தில் பெரும்புள்ளிகள் என்னும் புத்தகம் கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தபோது, அதை சிதம்பரம் நூலகத்திலிருந்து எடுத்து நகலெடுத்து அனுப்பிவைத்திருந்தார்.

இளமைக்காலத்தில் சிதம்பரம் தொலைபேசி நிலையத்தில்தான் அவர் தன் பணியைத் தொடங்கினார் என்றபோதும், சில ஆண்டுகளுக்குப் பிறகு கோவாவுக்கு இளநிலை பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நகரில் பணிபுரியச் சென்றுவிட்டார். அங்கு பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து மாற்றல் பெற்று சிதம்பரத்துக்குத் திரும்பினார்.

கோவா பணிக்காலத்தில் தான் மேற்கொண்ட கோவாபெங்களூர்சிதம்பரம் பயணத்தைப்போன்ற சிறந்த பயண அனுபவம் அதற்குப் பின் வாழ்க்கையில் அமையவே இல்லை என்று குறிப்பிட்டார். ஆறு மாதத்துக்கு ஒருமுறை அவருடைய விடுப்புக்கணக்கில் பதினைந்துநாள் சேர்ந்ததுமே அந்த விடுப்புக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டு ஊருக்குப் புறப்படுவதை வழக்கமாக வைத்திருந்ததாகச் சொன்னார். கோவாபெங்களூர் பயணம் ஓர் இனிமையான கனவைப் போன்றது என அவர் பலமுறை மகிழ்ச்சியுடன் சொன்னதுண்டு. கர்நாடக வனப்பகுதி அவருடைய மனத்தைக் கவர்ந்துவிட்டது. பல மணி நேரங்கள் நீடிக்கக்கூடிய அந்தப் பயணத்தில் காட்டை வேடிக்கை பார்த்தபடி வரும் அனுபவத்தை மனம் சிலிர்க்கும்படி சொன்னார். காலையில் பெங்களூருக்கு வந்து இறங்கியதும் சிதம்பரத்துக்கு அன்று இரவு புறப்படும் வண்டிக்கு பயணச்சீட்டு வாங்கிவிட்டு பகல்முழுதும் பெங்களூரைச் சுற்றிப்பார்ப்பதுதான் தன் வழக்கம் என்று விவரித்தார். “எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கப் பார்க்க அலுக்காத ஊர் பெங்களூர்என்பது அவர் அடிக்கடி சொல்லும் வாசகம். ”நான் இதுவரைக்கும் லால்பாக ஒரு பத்து தரமாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் எனக்கு புதுசா பார்க்கறது மாதிரியே இருக்கும்என்று தன் அனுபவத்தைக் குறிப்பிட்டார்.

அவருடைய கோவாபெங்களூர் அனுபவங்களை சின்னச்சின்ன கட்டுரைகளாக எழுத முயற்சி செய்யும்படி பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதைப்பற்றிய ஊக்கமே அவரிடம் தென்பட்டதில்லை. சற்றே முயற்சி செய்திருந்தால் அவருக்கு அது சாத்தியமாகியிருக்கும்.  நீங்கள் என்னிடம் இப்போது சொல்வதையே எழுதிவைக்கலாமேஎன்று அடிக்கடி சொல்லி தூண்டிவிடப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதுவும் நனவாகவில்லை.

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு எங்கள் துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பல மூத்த அதிகாரிகளும் பல கடைநிலை ஊழியர்களும் ஓய்வு பெற்று சென்றுவிட்டனர். துறைசார்ந்த பணிச்சுமை அதிகரித்துவிட்டது. ஒவ்வொருவரும் இருவருடைய அல்லது மூவருடைய வேலைகளைச் சுமக்கவேண்டியிருந்தது. பராமரிப்புச் செலவுக்கு போதுமான பணவரவு இல்லை. பல தொலைபேசி நிலையங்களுக்கு மின்சாரக்கட்டணம் கூட செலுத்த முடியாத நிலை உருவானது. கோட்டங்களாகவும் துணைக்கோட்டங்களாகவும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து விரிந்து சென்று மிகச்சிறப்பான முறையில் இயங்கிவந்த ஒரு துறை மையப்படுத்தலின் விளைவாக பெரும் சரிவைக் கண்டது. ஆயிரம் ரூபாய்த் தேவையைக்கூட தில்லியிலிருந்து வந்தால்தான் நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்ற நிலை உருவானது. இதனால் நடுநிலை அதிகாரிகளின் நிலை மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியது.

துணைக்கோட்ட பொறியாளராக இருந்த செல்வராஜ் அந்த நெருக்கடியில் சிக்கித் தவித்தார். அந்த நிலையில் கோட்டப் பொறியாளராக அவருக்கு கடலூரில் பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு பொறி என்று புரிந்தாலும் கூட பதவியில் அது ஒரு கூடுதல் மதிப்பு என்ற நிலையில் அதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் காலையில் சிதம்பரத்திலிருந்து புறப்பட்டு கடலூருக்கு வந்து, இரவில் ஊருக்குத் திரும்பிச் செல்லும் வாழ்க்கைமுறை அவரை வெகுவிரைவில் சோர்வை நோக்கி தள்ளிவிட்டது. அவர் மனத்தளவில் தாங்கிக்கொள்ள தயாராக இருந்த சோர்வுச்சுமையைவிட அதிக அளவில் அவர் சோர்வுக்குள்ளானார். அந்தப் பணிகளில் தொடர்ச்சியாக மனநிறைவுடன் செயலாற்றுவது இயலாத செயல் என்பதை அவர் வெகுவிரைவில் புரிந்துகொண்டார். ஆனால் புலிவாலைப் பிடித்த கதையாகிவிட்டது அவருடைய நிலை. ஒருமுறை எடுத்த முடிவிலிருந்து அவரால் பின்வாங்க முடியவில்லை. அந்த நேரத்திலும் அவருடைய வாசிப்புப்பழக்கமே அவருக்கு ஆறுதலாக இருப்பதாகத் தெரிவித்தார். கடுமையான மனநெருக்கடிகளுக்கு நடுவிலும் பல புதிய தொகுதிகளை வரவழைத்துப் படித்தார். என்னுடைய ஒன்றிரண்டு புதிய சிறுகதைத் தொகுதிகளை முன்வைத்து திண்ணை இணைய இதழில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். முன்பு தன் பயண அனுபவத்தை கட்டுரைகளாக எழுத மனமில்லாதவர் சில சிறுகதைகளை எழுதி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

இன்னும் இரண்டாண்டுகள் பணியில் தொடர்ந்திருக்க முடியும் என்ற நிலையில் அவர் 31.01.2020 அன்று விருப்ப ஓய்வு பெற்று பணியிலிருந்து வெளியேறினார். இந்தியா முழுதும் அவரைப்போன்ற இடைநிலை அதிகாரிகளும் ஊழியர்களுமாக  எண்பத்தைந்தாயிரம் பேர் துறையைவிட்டு அன்று ஓய்வுபெற்றனர்.

ஒரு நூறு புத்தகமாவது படிக்காம கெடக்கு சார், இனிமே நிம்மதியா படிக்க போறேன்என்று செல்வராஜ் தெரிவித்தார். சொன்னதுபோலவே படிக்கவும் செய்தார். மாதத்துக்கு இரண்டு மூன்றுமுறை தொலைபேசியில் அழைத்து படித்த அந்தப் புத்தகங்களைப்பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார். “இப்போதுதான் நேரமிருக்கிறதே செல்வராஜ், உங்கள் எண்ணங்களை கட்டுரையாக எழுதலாமேஎன்று கேட்டுக்கொண்ட போதெல்லாம்நான் எழுதி யாரு சார் படிக்க போறாங்க, விடுங்கஎன்று ஒரு சிரிப்போடு அந்த உரையாடலை திசைதிருப்பிவிடுவார். படிப்பது, நூலகத்துக்குச் செல்வது, நண்பர்களைச் சந்திப்பது, வீட்டில் சில வேலைகளுக்கு உதவி செய்வது என தன் தினசரி அலுவல்களை முறைப்படுத்திக்கொண்டு அழகாக அந்த வழியிலேயே வாழ்ந்துவந்தார்.

கொரானாவின் விளைவாக தனிமை நாட்கள் தொடங்கியதை ஒட்டி வெளியே செல்லமுடியவில்லை என்னும் மனக்குறையைத் தவிர வேறெந்த பிரச்சினையும் இல்லை என்றுதான் தொடக்கத்தில் சொல்லி வந்தார் செல்வராஜ். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய புத்தகம் படிப்பதாகத் தெரிவித்தார். பிள்ளைகள் வீட்டிலேயே முடங்கியிருப்பதைப் பார்க்கப்பார்க்க சங்கடமாக இருப்பதாக ஒருநாள் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். “பள்ளிக்கூடமோ கல்லூரியோ வெறும் படிக்கிற இடம் மட்டுமல்ல சார். அது பிள்ளைகள் ஒருத்தரோடு ஒருத்தர் பேசி பழகிக்கிற இடம். ஆசைப்பட்டபடி அங்க இங்க அலையற இடம். கொஞ்ச நேரமாவது விருப்பம்போல ஆடலாம், பாடலாம், ஓடலாம். அதெல்லாம் இல்லாம பிள்ளைகளை பொம்மை மாதிரி வீட்டிலேயே கிடப்பதைப் பார்க்க சங்கடமா இருக்குதுஎன்றார். “உலகமே வேறொரு மாற்று வழி தெரியாமல் தவிக்கிறபோது, நம்மால் என்ன செய்துவிட முடியும் செல்வராஜ்? உங்களைப்போலவே அவர்களுக்கு படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்துங்கள் செல்வராஜ். குறைந்தபட்சம் அவர்களுக்குள் ஒரு கற்பனையைத் தூண்ட அது உதவும்என்று நான் சொன்னபோதுஅப்படித்தான் செஞ்சிட்டிருக்கேன். ஆனாலும் பசங்களுக்கு படிக்கிறதவிட டிவி பாக்கறதிலதான் ஆர்வம் அதிகமா இருக்குது, என்ன செய்றதுன்னே புரியலைஎன்றார்.

போன மாதம் என்னுடையநான் கண்ட பெங்களூருபுத்தகத்தை முன்வைத்து திண்ணை இணைய இதழில் ரவி ரத்தினசபாபதி எழுதியிருந்த கட்டுரையைப் படித்துவிட்டு செல்வராஜ் தொலைபேசியில் அழைத்தார். ”இந்தப் புத்தகம் வந்ததைப்பற்றி ஏன் என்னிடம் சொல்லவே இல்லை?” என்று கேட்டு வருத்தப்பட்டார். “ஒரு வார்த்த சொல்லியிருந்தா நானும் உடனே வாங்கிப் படிச்சிருப்பேனே. யார் இந்த ரவி? ரொம்ப நல்லா எழுதியிருக்கார்என்று சொன்னார். “அவரும் நம்ம பிஎஸ்என்எல்காரர்தான். மாயவரத்துக்காரர். இப்போ சென்னையில இருக்காருஎன்றேன். ”இப்ப லாக்டவுன் நேரத்துல புத்தகத்த எப்படி வாங்கறது? எல்லாரும்தான் கடையை மூடி வச்சிருப்பாங்களேஎன்று சொல்லி ஆதங்கப்பட்டார்.  பிறகுசரி, எப்படியாவது வாங்கி படிச்சிட்டு உங்ககிட்ட பேசறேன்என்று உரையாடலை முடித்துக்கொண்டார்.

அவருடன் பேசி ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கும். அதற்குப் பிறகு அவர் அழைக்கவில்லை. புத்தகத்தைப் படித்தபிறகு அழைக்கக்கூடும் என்று நான் நினைத்திருந்தேன். வெளியுலகத்தில் நடமாட வழியில்லாமல் வீட்டிலேயே அடைந்துகிடக்கும் காலமென்பதால் அவருக்கு புத்தகத்தை அனுப்ப இயலாமல் ஒருவித குற்ற உணர்ச்சியால் நானும் அவரை அழைக்காமலேயே இருந்துவிட்டேன். அவர் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் இருந்த செய்தி எதுவுமே எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

24.06.2021 அன்று இரவு நான் உறங்கச் செல்லும் தருணத்தில் ஒரு புத்தகம் கீழே நழுவி விழும் ஓசையுடன் என் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ’கடலூரில் எனக்கு அதிகாரியாக பணியாற்றிய செல்வராஜ் மறைந்துவிட்டார்என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில கணங்களுக்கு செயலிழந்து திகைத்து நின்றுவிட்டேன். படித்துவிட்டு உரையாடுகிறேன் என்று சொன்ன செல்வராஜ் இனி படிப்பதற்கோ, உரையாடுவதற்கோ வழியில்லாதபடி இந்த உலகத்தைவிட்டே போய்விட்டார். அவருடைய எதிர்பாராத மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. நண்பர் செல்வராஜுக்கு என் அஞ்சலி.

 

(திண்ணை – 27.06.2021 இணைய இதழில் வெளியான கட்டுரை )