ஆங்கிலேயர் போற்றும் மாபெரும் நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர். அவர் எழுதிய நாடகங்கள் அனைத்தும் மேடையில் நடிக்கப்பட்டனவே தவிர, அவை நூல்வடிவம் பெறவில்லை. அவர் எழுதிய முப்பத்தாறு நாடகங்களில் அவர் உயிரோடு இருந்த காலத்தில் பதினெட்டு நாடகங்கள் மட்டுமே நூல்வடிவம் பெற்றிருந்தன. எஞ்சியவை கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. அவருடைய மறைவுக்குப் பிறகு, அவருடைய நாடகங்களில் நடித்துவந்த ஜான் ஹெமிங்க்ஸ் என்பவரும் ஹென்றி கோண்டெல் என்பவரும் இணைந்து அனைத்து நாடகப் பிரதிகளையும் உள்ளடக்கி FIRST FOLIO என்னும் தலைப்பில் 1623இல் ஒரு தொகைநூலை அச்சிட்டு வெளியிட்டனர். இதுவே ஷேக்ஸ்பியரின் முதல் நாடகத் தொகுப்புநூல். இவை 750 பிரதிகள் மட்டுமே அந்தக் காலத்தில் அச்சிடப்பட்டன. ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் கடந்த நிலையில் அச்சிட்ட பிரதிகளில் தற்சமயத்தில் எஞ்சியிருப்பவை 19 பிரதிகள் மட்டுமே. அவற்றில் நல்ல நிலையில் இருப்பது ஒரே ஒரு பிரதி மட்டுமே. ஒரு மதபோதகரின் நூலகத்தை ஏலத்தில் எடுத்த போது, இன்னொரு மதபோதகரின் கைக்குச் சென்றது அப்பிரதி. அவரே இன்றுவரை அப்பிரதியைப் பாதுகாத்து வருகிறார்.
தமிழ் வாசக உலகத்தினருக்கு அவ்வளவாக தெரிந்திராத இந்த உண்மைத்தகவலை தன்னுடைய கட்டுரையொன்றில் பகிர்ந்துகொள்கிறார் சந்தியா நடராஜன். தன் சொந்த
முயற்சியால் ஏறத்தாழ ஒரு லட்சம் புத்தகத்துக்கும் மேல் சேமித்து பாதுகாத்துவரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் பவளவிழா மலருக்காக அவர் ஒரு கட்டுரை எழுதினார். ஒரு புத்தகத்தைப்
பாதுகாக்கும் தனிநபர் மனநிலையையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் அக்கட்டுரையில் இச்செய்தி இடம்பெற்றிருக்கிறது.
முதல் பதிப்பாக வெளிவரும் ஒரு புத்தகம் என்பது மதிப்புக்குரிய ஓர் ஆவணம். அதை ஒரு
புதையலாக நினைத்து பாதுகாக்கும் புத்தக சேமிப்பாளர்கள் ஒருவகையில் நம் மொழியையும் பண்பாட்டுச் செல்வத்தையும் பாதுகாப்பவர்கள். பண்பாட்டுச் செல்வங்களைப்பற்றிய விழிப்புணர்வு குறைந்த இன்றைய சூழலில் அவர்களுடைய முக்கியத்துவம் சரிவர உணரப்படாமல் போகலாம்.
அவர்களையெல்லாம் உரிய
மதிப்போடும் நன்றியுணர்வோடும் நினைத்துப் பாராட்டும் ஒரு புதிய தலைமுறை எதிர்காலத்தில் தோன்றும் என்பது உறுதி.
நடராஜன் நல்ல வாசகர். பல துறைகளில்
நாட்டமுள்ளவர். நாவல்கள், சிறுகதைகள், வாழ்க்கை
வரலாறுகள், சமூக வரலாறு, புத்தம், சமணம், கிறித்துவம், இஸ்லாமியம், சைவம், வைணவம், அகராதிகள், நகர வரலாறுகள் என அவருடைய ஆர்வம் சார்ந்த களங்கள் மிகப்பெரியவை. ஒரு
துப்பறிவாளனைப்போல யாருடைய கண்களிலும் அகப்படாத சில நுட்பமான கணங்களை ஒரு செய்யுளிலிருந்தும் நவீன கவிதையிலிருந்தும் நாவலிலிருந்தும் அவர் போகிற போக்கில் கண்டடைந்து சொல்லிவிட்டுச் செல்கிறார். அதில் ஒரு தேர்ச்சியைக் காணமுடிகிறது.
சா.கந்தசாமியின்
சாயாவனம் நாவலில் அவர் கண்டடைந்து சொல்லும் நுட்பம் மிகமுக்கியமானது. இதுவரை எந்த விமர்சகரின் வாசிப்புவழியிலும் தென்படாத நுட்பம். புலம்பெயர்வு என்னும்
கோணத்தின் வழியாக அந்த நாவலை அணுகும்போது அவர் அந்த நுட்பத்தைக் கண்டடைகிறார். அந்தக் கண்டுபிடிப்புக்கு ’பதியெழு அறியாப் பழங்குடி தழீஇய பொதுவறு சிறப்பிற் புகார்’ என்னும் சிலப்பதிகார
வரி துணையாக அமைந்திருக்கிறது. எதற்காகவும் ஒருநாளும் ஒருவரும் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய தேவையின்றி, அனைத்தும் கிட்டும் நகரமாக புகார் விரிந்திருக்கிறது என்பதுதான் அவ்வரிகளின் பொருள். காலம் காலமாக
தொடர்ந்துவரும் ஒரு பெருமையை சிதைக்கப்போகிற ஒருவனுடைய கதையைக் கூறுவதற்கு முன்பாக, அந்தப் பெருமையையே
புகாரின் சிறப்பாகப் பட்டியலிடும் இளங்கோவின் கவித்துவத்தை வியக்காமல் இருக்கமுடியாது. கோவலனுக்கு ஏற்பட்ட சங்கடமும் அவமான உணர்ச்சியும் அவனை இரவோடு இரவாக புகாரை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கவைக்கிறது.
புகார் இருந்த அதே காவிரிப்படுகையிலிருந்து பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே அவமான உணர்ச்சியாலும் சங்கடத்தாலும் ஊரைவிட்டு கைக்குழந்தையோடு வெளியேறி கொழும்புக்குச் செல்கிறாள் காவிரி என்னும் பெண்மணி. சென்ற இடத்தில்
அவள் மரணத்தைத் தழுவிவிட, அக்குழந்தை சில
ஆண்டுகள் கிறித்துவனாகவும் மேலும் சில ஆண்டுகள் முருகபக்தனாகவும் வாழ்கிறது. பிறகு சிதம்பரம் என்னும் இளைஞனாக வளர்ந்து கால்நூற்றாண்டுக்குப் பிறகு சாயாவனத்துக்குத் திரும்பி வருகிறான். சூழியல் நாவலாக
இதுவரை கருதப்பட்டு வந்த ஒரு நாவலில் அடங்கியிருக்கும் புலப்பெயர்வை ஒரு முக்கியமான கோணமாக சுட்டிக்காட்டுகிறார் நடராஜன். இந்தப் பார்வை
நாவலின் மீது ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.
முன்முடிவில்லாத நடராஜனுடைய வாசிப்பு முறையே இப்படி சில நுட்பங்களைக் கண்டடைய காரணம். பாரதியின் பெரிய
கடவுள் யார் என்னும் தலைப்புக்கட்டுரை மிகமுக்கியமான ஒரு பதிவு. ’மனதிலுறுதி வேண்டும்’ என்று தொடங்கும்
பாரதியாரின் பாடலை அனைவரும் படித்திருப்போம். அவர் தாம் வேண்டுவனவற்றை முன்வைக்கும் அடுக்கின் இறுதியாக பெரிய கடவுள் காக்கவேண்டும் என்று
குறிப்பிடுகிறார். சக்தியென்றும் காளியென்றும் அம்மனென்றும் தன் பிற தோத்திரப்பாடல்களில் வெளிப்படையாகவே குறிப்பிடும் பாரதியார் பெரிய கடவுள் என பொதுவாக இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
மாபெரும் ஆற்றல் உள்ளவரே பெரிய கடவுள் என நினைத்து ஒரு பொதுவாசகர் இவ்வரியை எளிதாக கடந்துவிடுவார். அப்படித் தோன்றுவதுதான் இயற்கை. ஆனால் நடராஜனின்
கண்கள் அந்தச் சொல்லையே ஒரு துருப்புச்சீட்டாக வைத்துக்கொண்டு ஒரு ஆய்வை மேற்கொள்கின்றன. அந்த சுவாரசியமான ஆய்வுதான் இந்தக் கட்டுரை. பாரதியார் தன்னுடைய
மற்ற பாடல்களிலும் உரைநடைகளிலும் பெரிய கடவுள் என எங்கெங்கெல்லாம் குறிப்பிடுகிறார் என்பதையும் யாரைக் குறித்து அவர் அச்சொல்லைப் பயன்படுத்துகிறார் என்பதையும் தொகுத்து ஒரு தர்க்கத்தின் அடிப்படையில்
இறுதியாக ஒரு விடையைக் கண்டடைகிறார். பிரும்மமே
பெரிய கடவுள்.
ஒரு கணக்குப்புதிரை விடுவிக்கும் வேகத்தோடும் தர்க்கத்தோடும் நடராஜன் அந்த விடையைக் கண்டடைந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். சந்திரிகை என்னும் பெயரின் மீது பாரதியாருக்கு உள்ள ஈடுபாட்டை முன்வைத்து அவர் எழுதியிருக்கும் கட்டுரையும் அவருடைய வாசிப்புத்திறனுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வாசிக்கும்போது ஒரு வாசகரின் மனத்தில் நிகழும் இத்தகு எண்ணப்பயணமும் அது வழங்கும் அனுபவமும் எப்போதும் மிகமுக்கியமானவை.
தொடை அகராதியைத் தேடிச் சென்று எதுகை அகராதியைக் கண்டுபிடிப்பதும், அதற்குப் பிறகு அதை எழுதிய அப்பாய் செட்டியாரின் வாரிசுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதும் அவர்களில் ஒரு வாரிசு தான் லாட்டரிகளில் ஆய்வு செய்து பக்கம்பக்கமாக எழுதிவைத்திருப்பதைக் காட்டி அவற்றைப் புத்தகமாக்கமுடியுமா என்று கேட்பதும் (மீள்பதிவுக்காக ஒரு பயணம்) ஒரு புனைகதைக்காட்சிகள் போல அமைந்துள்ளன.
வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக நடராஜன் எழுதிய பன்னிரண்டு கட்டுரைகள் அடங்கிய இத்தொகுதி, ஒரு வாசகர்
இலக்கியத்திலிருந்து பெறுவது என்ன என அவ்வப்போது எழுந்தடங்கும் கேள்விக்கு பொருத்தமான விடையை அளிக்கிறது.
( புக்டே இணையதளத்தில்
20.07.2021 அன்று வெளியான புத்தக அறிமுகக் கட்டுரை )