Home

Wednesday, 23 March 2022

வீடு - சிறுகதை

 

உறக்கம் கலைந்து கண் விழித்ததுமே வலதுபக்கச் சுவரில் ஒட்டியிருந்த முருகரின் படத்தைப் பார்த்தான் வடிவேலு. மயில் விளையாடும் பாதத்திலிருந்து மணிமுடி வரைக்கும் அவன் பார்வை மெதுவாகப் படர்ந்து உயர்ந்தது. அக்கணத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து ராமாயி பெரியம்மாவை அழைத்துவர வேண்டும் என்பது நினைவிலெழுந்தது.

இருபத்தைந்து வருடங்களாக ஒரு மாத்திரையோ மருந்தோ சாப்பிடாமலேயே காலத்தை ஓட்டிவிட்டவள் மூன்று நாட்களாக ஆஸ்பத்திரியில் இருக்கும்படி நேர்ந்துவிட்டது. தெருவில் யாரோ விற்றுக்கொண்டு சென்ற கொட்டிக்கிழங்கின் மீது  ஆசைப்பட்டு வாங்கிச் சாப்பிட்டதில் வயிறு கெட்டுவிட்டது. நிற்காத வயிற்றுப்போக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்த பிறகுதான் நின்றது.

மெதுவாகத் திரும்பி பக்கத்தில் உறங்கும் பழனியம்மாவைப் பார்த்தான். பெரிய கட்டிலில் போர்வை ஒருபக்கமும் தலையணை ஒரு பக்கமும் விலகிக் கிடக்க அவன் தோளை ஒட்டியபடி சுருண்டு படுத்திருந்தாள். ஒரு செப்புச்சிலையைப்போல அளவான உடற்கட்டு. பெண்பார்க்கச் சென்றிருந்த  நாளில் மயில்கழுத்து நிறத்திலிருந்த புடவையில் டீத்தம்ளர்கள் நிறைந்த தட்டை எடுத்துக்கொண்டு வந்து நின்ற தோற்றத்திலேயே ஒரு மாற்றமும் இல்லாமல் அவள் இன்னும் இருப்பதுபோலத் தோன்றியது. ஒரு புன்னகையோடு வடிவேலு அவளுடைய முகத்தைப் பார்த்தான். நெற்றியில் சுருண்டு மின்விசிறிக் காற்றில் அசையும் மென்கூந்தல் சுருள்கள். அழுத்தமான புருவம். சின்ன மூக்கு. சின்ன உதடுகள். மென்மையான கன்னம்.

அவன் பார்வையை உணர்ந்துவிட்டதைப்போல அவள் விழிகள் மெதுவாகத் திறந்தன. அவன் விழித்திருப்பதைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்து மறுகணம் இயல்பாகி ”எழுந்திருக்கும்போதே என்ன சிரிப்பு?” என்று கேட்டாள். அவன் “ஒன்னுமில்ல” என்றான். அவள் தன் கையை நீட்டி அவன் காதோரமாக படர்ந்திருந்த நரைமுடிகளைத் தொட்டு வருடியபடி “என்ன சிரிப்பு, சொல்லுங்க?” என்று மறுபடியும் கேட்டாள். அவன் அப்போதும் “ஒன்னுமில்ல” என்றபடி தலையை அசைத்தான். பிறகு ஒருக்களித்து அவள் புருவத்தின்மீது கட்டைவிரலால் கோடு இழுத்தபடி மெதுவாக “ஒன்ன பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு  நீ நின்ன கோலம் ஞாபகத்துக்கு வந்தது” என்றான். அவள் புன்னகையோடு அவன் உடம்பை நெருங்கி ஒட்டிக்கொண்டபடி இடுப்பில் கிள்ளினாள். “கெழவா கெழவா, கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க இருக்குது. அத மறந்துட்டு இந்த நெனப்புதான் ஓடுதா மனசுல?” என்றாள். “ஏன் ஓடக்கூடாதா? என்றான் வடிவேலு. “ஓடலாம் ஓடலாம், அதுக்கென்ன கொறச்சல்? ஐயாவுக்கு வாலிபமுறுக்கு அப்படியே இல்ல இருக்குது” என்றபடி எழுந்து தலைமுடியை உதறிக் கட்டியபடி படுக்கையிலிருந்து எழுந்தாள் பழனியம்மா. வடிவேலு அவளை இழுத்து இடுப்பில் ஒரு முத்தமிட்டு அனுப்பிவைத்தான். பிறகு எழுந்து கழிப்பறைக்குள் சென்றான்.

அருகில் மேசைமீது வைத்திருந்த கைப்பேசியின் சத்தம் கேட்டு எழுந்து எடுத்தாள் பழனியம்மா. பெரிய பெண் நந்தினியின் பெயர் ஒளிர்ந்தது. ஆஸ்பத்திரியில் ஆயாவுக்கு துணையாக அவள்தான் இருந்தாள். பெங்களூரிலிருந்து ஒரு வார விடுப்பில் வீட்டுக்கு வந்தவளை ஆஸ்பத்திரி வேலையில் இழுத்துவிடும்படி நேர்ந்துவிட்டது. “என்னடி நந்தினி? ஆயா எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.

“நல்லாதாம்மா இருக்காங்க. ஆனா அப்பா எப்ப வருவாரு எப்ப வருவாருன்னு கேட்டுகிட்டே இருக்காங்கம்மா. சீக்கிரமா அவர வரச்சொல்லுங்க.”

“இதோ கெளம்பிட்டே இருக்காருடி நந்தினி”

“அப்பறமா அவுங்களுக்கு ஈரல் சூப்பும் வறுவலும் வேணுமாம். நாக்கே செத்துபோச்சி நாக்கே செத்துபோச்சின்னு வெடிஞ்சதேலிருந்து நூறு தரம் சொல்லிட்டாங்க. வீட்டுக்கு வரும்போதே தயாரா இருக்கணுமாம்.”

கழிப்பறையிலிருந்து வெளியே வந்த வடிவேலுவிடம் விஷயத்தைச் சொன்னாள். அவன் அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே ”காலம்பூரா கவிச்ச சாப்ட்ட வாயி அப்பிடிதான் இருக்கும். சரிசரி, நீ பால காய்ச்சி டீ போட்டு வை. நான் போயி ஈரல் வாங்கியாறேன்” என்றபடி வெளியே கிளம்பினான்.

பழனியம்மா படுக்கையறையிலிருந்து வெளியே வந்து கூடத்தைக் கடந்து சமையலறைக்குச் செல்லும் வழியில் சுவரில் தொங்கிய கல்யாண போட்டாவைப் பார்த்தாள். மார்பளவுப் படம். வடிவேலு தன் ஒன்றுவிட்ட அண்ணன் அண்ணியோடுதான் பெண்பார்க்க வந்திருந்தான். அவளுக்கும் அண்ணன் அண்ணி மட்டுமே இருந்தார்கள். அவளிடம் யாருமே “மாப்பிள்ளை பிடிச்சிருக்குதா?” என்று கேட்கவில்லை. அவளை நெருங்கி வந்த அண்ணி காதோரமாகக் குனிந்து “மாப்பிள்ளக்கு கவுர்ன்மெண்ட் வேலடி. டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல குமாஸ்தாவாம். மாசம் பொறந்தா சொளயா சம்பளம் வந்துடும். கண் கலங்காம பாத்துக்குவான். அதுக்கு மேல என்ன வேணும்?” என்று சொல்லிவிட்டுப் போனாள். அடுத்த கால்மணி நேரத்திலேயே பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து தட்டு மாற்றிக்கொண்டார்கள். அதற்கடுத்த மாதம் மைலம் கோவிலில் கல்யாணமும் நடந்துவிட்டது. எல்லாமே கனவுபோல இருந்தது.

மறு வாரத்திலேயே மதகடிப்பட்டிலிருந்து இந்த வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் வடிவேலு. “போன மாசமே அட்வான்ஸ் குடுத்து வாடகைக்கு எடுத்துட்டன். புடிச்சிருக்குதா?” என்று கேட்டான். அவள் புன்சிரிப்போடு தலையசைத்தாள். வாசலில் சப்போட்டா மரத்தடியில் உட்கார்ந்திருந்த ராமாயி பெரியம்மாவைச் சுட்டிக்காட்டி “அவுங்கதான் ஓனர். ரொம்ப நல்ல அம்மா” என்று ரகசியமாகச் சொன்னான்.  பிறகு அருகில் நெருங்கிச் சென்று அறிமுகம் செய்துவைத்தான்.

தலை நரைத்திருந்த பெரியம்மாவைப் பார்த்ததும் பழனியம்மாவுக்குள் ஏதோ பொங்கியது. பெரியம்மாவின் கண்களில் சுடர்விட்ட கனிவையும் புன்னகையையும் பார்த்ததுமே மனம் கரைந்துவிட்டது. தானாகவே அவள் பெரியம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினாள். ”பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழுடி தாயே” என்றபடி பெரியம்மா தூக்கி நிறுத்தியபோது அவள் கண்களில் நீர் தளும்பியது. “என்னடிம்மா, என்னாச்சி? என்ன?” என்று பெரியம்மா பதறினாள். ஒன்றுமில்லை என்பதுபோல தலையை அசைத்தபடி பழனியம்மாள் சில கணங்கள் அழுதுகொண்டே இருந்தாள். பெரியம்மா அவளை இழுத்து மார்போடு தழுவிக்கொண்டு முதுகுப்பக்கம் தட்டிக்கொடுத்தாள்.

சில கணங்களுக்குப் பிறகு, அவள் முகத்தைத் திருப்பி விழிகளைத் துடைத்துவிட்டு “என்ன? என்னாச்சி?” என்று மறுபடியும் கேட்டாள். “எனக்கும் அம்மா அப்பா இல்ல, அவருக்கும் அம்மா அப்பா இல்ல பெரிம்மா. இந்த புது ஊருல எங்களுக்கு நீங்கதான் தொண” என்று நிறுத்திநிறுத்திச் சொன்னாள். பெரியம்மா அவளை மறுபடியும் தோளோடு அழுத்தி வைத்துக்கொண்டாள். அவளாக பிடியை விலக்கிக்கொண்டு நிமிர்ந்தபோது, “எல்லாருக்கும் அந்த ஆத்தா தொணயிருப்பாடி. நீ ஒரு கவலயும் இல்லாம இரு” என்றாள். பழனியம்மாவின் விழியோரம் மை கரைந்து கறையாகியிருந்தது. பெரியம்மா தன் சுண்டுவிரலால் அதை தொட்டுச் சரிப்படுத்திவிட்டாள்.

அன்று நெத்திலிமீன் போட்டு குழம்பும் வறுவலும் வைத்தாள் பழனியம்மா. பெரியம்மாவையும் சாப்பிட அழைத்துப் பரிமாறினாள். சூடான சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டிச் சாப்பிட்டாள் பெரியம்மா. ஒவ்வொரு உருண்டைக்கும் ஒரு மீன். வறுத்த மீனுக்கு இணையாக இருந்த பொரித்த கறிவேப்பிலைகளை அவள் ருசித்துச் சாப்பிட்டாள்.  மறுசோறு போடப் போனபோது, கையை அசைத்து தடுத்தபடி பழனியம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“என்ன பெரியம்மா சிரிப்பு?” என்று கேட்டாள் பழனியம்மா.

அவளை தன் பக்கத்தில் வருமாறு சொல்லி தன் இடது கையால் அவள் கன்னத்தைத் தொட்டு ஆசையோடு கிள்ளினாள். பிறகு இடறும் குரலைச் செருமி சரிப்படுத்திக்கொண்டபடி “அமிர்தம், அமிர்தமாட்டம் இருக்குது மீன்கொழம்பு. வறுவலுக்கே ஒரு கெளரவம் ஒன் நெத்திலி வறுவல். ஒன் கைப்பக்குவத்துக்கு ரெண்டு கைக்கும் தங்கத்துல வளையல் செஞ்சி போடணும்” என்றாள். மெதுவாக வடிவேலு பக்கம் திரும்பி, “என்ன தம்பி, வாங்கி போடறியா?” என்று கேட்டாள். அவனும் புன்னகைத்தபடி, “அதுக்கென்ன பெரியம்மா, அவளுக்கு வாங்கி போடாம யாருக்கு போடப் போறேன்?” என்று மையமாகச் சொன்னான்.

எழுந்துபோய் கைகழுவிக்கொண்டு முந்தானையில் துடைத்தபடியே வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள் பெரியம்மா.  “அவன் போடற அன்னிக்கு போடட்டும். இங்க வா நீ. ஒனக்கு நான் இப்பவே போடறேன்” என்று பழனியம்மாவை பக்கத்தில் அழைத்து தன் கையிலிருந்த வளையலைக் கழற்றி பழனியம்மாவின் கையில் போட்டுவிட்டாள். “என்ன இது பெரியம்மா, வேணாம், வேணாம்” என்று திகைப்போடு உதறிய பழனியம்மாவின் சிணுங்கல்களை அவள் பொருட்படுத்தவே இல்லை. ”இனிமேல இது ஒனக்குத்தான். ஒன் கைக்கு ரொம்ப அழகா இருக்குது” என்றபடி வளையலணிந்த அவள் கைகளைத் திருப்பித்திருப்பிப் பார்த்தாள்.

“அது சரி, இவ்ளோ பக்குவமா இந்த கொழம்ப எப்படி வச்ச, அத சொல்லு” என்று கேட்டாள் பெரியம்மா.

“கொழம்ப கூட்டி கொதிக்கும்போது, சாந்து வாட போயி, கொழம்புலேருந்து எண்ணெ தனியா பிரிஞ்சி மெதக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்துல ஆஞ்சி வச்ச மீன போட்டு கொதிக்கவிட்டு, அடுத்த கொதி வரும்போது எறக்கிட்டா போதும். கொழம்பு ருசியா இருக்கும்.”

”இத்தன வருஷமா மீன்கொழம்பு வச்சி சாப்புடறன். இந்த ரகசியம் எனக்கு தெரியாமயே போச்சி” என்று புன்னகைத்தாள் பெரியம்மா. பிறகு மெதுவாக “நான் ஒரு விஷயம் சொல்றேன். கேக்கறியா?” என்று கேட்டாள். “சொல்லு பெரியம்மா” என்றபடி அவள் முகத்தைப் பார்த்தாள் பழனியம்மா.

“இதுவரைக்கும் நான் சாப்ட்ட மீன்கொழம்புலயே இப்படி ஒரு கொழம்ப ஊத்தி நான் சாப்பிட்டதில்ல. இப்படி ஒரு அருமையான கவிச்ச கொழம்ப ருசி பார்த்தபிறகு என்னால வேற எந்த கொழம்பயும் நெனச்சி கூட பார்க்கமுடியாது. அதையெல்லாம் இனிமேல என் கையாலயே தொட மாட்டேன்.”

பழனியம்மாவுக்கு கண்கள் தளும்பியபடி இருந்தன. அவளால் நிற்கவே முடியவில்லை. அவள் பார்வை அவளுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை. குனிவதும் நிமிர்வதுமாகவே இருந்தாள்.

“என் காலம் முடியறவரைக்கும் ஒன் கையாலயே சோறுகொழம்பு சாப்புடணும்ன்னு நெனைக்கறேன், போடுவியா?” என்றாள் பெரியம்மா. பழனியம்மா பெரியம்மாவையும் வடிவேலுவையும் மாறிமாறிப் பார்த்தாள். “நீங்க எங்களுக்கு அம்மா மாதிரி பெரியம்மா. ஒங்களுக்கு சாப்பாடு குடுக்கறதுலாம் ஒரு பெரிய வேலயா?” என்று தழுதழுக்கச் சொன்னாள். வடிவேலுவும் சம்மதம் என்பதற்கு அடையாளமாக தலையசைத்தான். பெரியம்மாவுக்கும் குரல் நெகிழ்ந்துவிட்டது. ”அது போதும் புள்ளைங்களா, அது போதும். அந்த நன்றிக்கடனுக்கு என்னைக்காவது ஒருநாள் இந்த வீட்டயே ஒன் பேருக்கு எழுதி வைப்பேன்” என்று சொன்னாள்.

பாலைக் காயவைத்துவிட்டு பல்துலக்கி முகம் கழுவிக்கொண்டு திரும்பினாள் பழனியம்மா. டீ போட்டு முடிக்கவும் வடிவேலு வரவும் சரியாக இருந்தது. தன் கையில் இருந்த பிளாஸ்டிக் பையை அவளிடம் கொடுத்துவிட்டு டீ கோப்பையை எடுத்துக்கொண்டு கூடத்துக்குச் சென்றான். ஈரலை எடுத்து ஒரு சின்ன குண்டானில் நீர் நிரப்பி ஊறவைத்துவிட்டு தன்னுடைய கோப்பையோடு  சென்று வடிவேலுவுக்கு அருகில் உட்கார்ந்தாள்.

பெரியம்மாவுக்கு மீன்குழம்பில் இருக்கும் ரசனையைப்போல வேறு யாருக்கும் இருக்காது என்ற எண்ணம் ஒரு வரியைப்போல பழனியம்மாவின் நெஞ்சில் நகர்ந்தது.  சங்கரா, வஞ்சிரம், நெத்திலி, இறால் என ஏதாவது ஒரு மீன் குழம்பில் மிதந்தால்தான் அவளுக்கு சாப்பிட்டதுபோல ஒரு திருப்தி வரும். எதுவுமே இல்லாத அன்றைக்கு கானாங்கழுத்தையாவது இருக்க வேண்டும். மீன் இல்லாத தினத்தில் நாலு கருவாடுகளையாவது கழுவி குழம்பில் போட்டால்தான் அவளுக்கு சாப்பிட்ட திருப்தி வரும். காலையில் ஒரு தம்ளர் சூடான கூழ். இரவில் இரண்டு இட்லி. மதியம் ஒரு வேளைதான் சாப்பாடு. அதை மீன் குழம்போடு சாப்பிடுவதுதான் அவள் லட்சியம்.

”சரி, நான் கெளம்பறேன்” என்று புறப்பட்டுச் சென்றான் வடிவேலு. காலி கோப்பைகளை தொட்டியில் போட்டுவிட்டு, ஊறவைத்த ஈரலை நன்றாக அலசிக் கழுவினாள் பழனியம்மா. நாலைந்து முறை தண்ணீர் மாற்றி கழுவிய பின்னர் ஒரு பாதி ஈரலை ஒதுக்கிவைத்துவிட்டு, எஞ்சியதை சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கினாள். இஞ்சித்துண்டொன்றை எடுத்து தோல் சீவி சுத்தம் செய்தாள். பிறகு பூண்டை உரித்து இரண்டையும் சேர்த்து சப்பாத்திக்கட்டையால் தட்டி கூழாக நசுக்கிவைத்தாள். மிளகு, சோம்பு, சீரகம் மூன்றையும் சேர்த்து பொடியாக்கிய பிறகு சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கினாள். ஒரே ஒரு தக்காளியையும் பச்சைமிளகாயையும் கழுவி எடுத்து சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டிச் சேர்த்தாள். பிறகு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் ஈரலைத் தவிர மற்றதையெல்லாம் போட்டு சில நிமிடங்கள் கரண்டியால் புரட்டிப்புரட்டி வதக்கினாள். பக்குவமாக வதங்கிய பிறகு ஈரல்துண்டுகளையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கினாள். அப்புறம் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டு வேகவைத்தாள். இரண்டு விசிலுக்குப் பிறகு இறக்கி கொத்துமல்லியை உருவித் தூவி மூடிவைத்தாள்.

சூப்பின் மீதிருந்த கவனத்தில் கைப்பேசி மணியடித்ததை முதலில் அவள் கவனிக்கவே இல்லை. நீண்ட மணிச்சத்தத்துக்குப் பிறகுதான் அவள் மனம் அதை உள்வாங்கியது. வடிவேலாக இருக்கக்கூடுமோ என எண்ணி வேகமாக எடுத்து பெயரைக்கூட பார்க்காமல் “சொல்லுங்க, ஆஸ்பத்திரிக்கு போயிட்டீங்களா?” என்று அவசரமாகக் கேட்டாள். மறுமுனையில் “ஐயோ அம்மா, கோயம்புத்தூருலேருந்து நான் ரஞ்சினி பேசறேன்மா” என்றபிறகுதான் அவள் சுயநினைவுக்குத் திரும்பினாள். ஒரே கணத்தில் இயல்பான நிலைக்குத் திரும்பி “சொல்லுடி, எப்படி இருக்கற? என்ன சாப்ட்ட? ஆபீஸ்க்கு போயிட்டியா?” என்று அடுத்தடுத்து கேட்டாள். “தோச சாப்ட்டம்மா. ஆபீஸ்க்கு வந்துட்டேன். நாளைக்கி வரேன்னு சொன்னன் இல்லியா? வரமுடியாது போல. ஆபீஸ்ல அவசரமா ஒரு மீட்டிங் வச்சிட்டாங்க. அத சொல்லலாம்ன்னுதான் கூப்ட்டேன். கோச்சிக்காதம்மா” என்றாள் அவள். “ஆயாகிட்ட வேற நீ வரன்னு சொல்லிட்டனேடி” என்றதும் “அடுத்த வாரம் கண்டிப்பா வரேன்னு சொல்லும்மா” என்று சொல்லிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டாள்.

எஞ்சியிருந்த ஈரலை மீண்டும் சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி நாலைந்து முறை தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவியெடுத்தாள். அப்படியே அள்ளியெடுத்து அடுப்பிலிருந்த பாத்திரத்தில் போட்டு இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்தாள். ஊறவைத்திருந்த மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய் நான்கையும் எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி கூழாக்கி உருட்டியெடுத்தாள். நொடிக்கொரு தரம் ஈரல் வெந்துவிட்டதா என கண்காணித்தபடியே வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் சின்னதாக நறுக்கி முடித்தாள். ஈரல் பாத்திரத்தில் தண்ணீர் சுண்டப்போகிற சமயத்தில் அடுப்பை நிறுத்தினாள். மிளகுச்சாந்தையும் ஒரு கரண்டி உப்புத்தூளையும் மட்டும் ஈரலில் போட்டு கிளறி மூடிவைத்தாள்.

மணியைப் பார்த்தாள். எட்டரை. வீட்டைப் பெருக்கிவிட்டு அவசரமாக குளித்து முடித்து அம்மனுக்கு விளக்கேற்றி விழுந்து கும்பிட்ட பிறகு மீண்டும் சமையலறைக்குள் திரும்பினாள். அடுப்பில் ஒருபக்கம் இட்லி ஊற்றிவிட்டு, இன்னொரு பக்கத்தில் வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டையையும் கறிவேப்பிலையையும் போட்டு தாளித்தாள். வாசனை வரத் தொடங்கியதும் வெங்காயத்துண்டுகளையும் மிளகாய்த்துண்டுகளையும் போட்டு வதக்கினாள். பொன்போல சிவக்கத் தொடங்கிய நேரத்தில் இஞ்சியையும் பூண்டையும் நசுக்கிக் கலந்தாள். பிறகு ஈரல் கலவையை வாணலியில் கொட்டி மஞ்சள் தூளைப் போட்டு அரை தம்ளர் தண்ணீரையும் ஊற்றினாள். அடுப்புத் தீயைக் குறைத்துவிட்டு தண்ணீர் வற்றும்வரை மெதுவாகக் கிளறிவிட்டு பாத்திரத்தை மூடிவிட்டு அடுப்பை அணைத்தாள்.

ஹார்ன் சத்தம் கேட்டதுமே பழனியம்மா வாசலுக்கு ஓடினாள். வடிவேலுவின் வண்டிக்குப் பின்னால் ஒரு ஆட்டோவிலிருந்து நந்தினியும் பெரியம்மாவும் இறங்கினார்கள். அதற்குள் படியிறங்கி ஆட்டோவுக்கு அருகில் சென்றுவிட்டாள் பழனியம்மா. “வா பெரிம்மா, எப்பிடி இருக்கிங்க?” என்று கேட்டபடி கைகளைப் பற்றிக்கொண்டாள். பதில் சொல்ல வாய் திறந்தவள் வாசலைத் தாண்டி வந்த ஈரல் மணத்தை இழுத்து ஒருகணம்  அனுபவித்தபடி சிரித்தாள். “அப்பாடி, இந்த வாசனை உள்ள போனதுக்கு அப்பறம்தான்டி ஒடம்புல ரத்தம் ஓடறமாதிரி இருக்குது. இனிமேல போன தெம்புலாம் வந்துரும்” என்றபடி பழனியம்மாவின் கையைப் பற்றி அழுத்தினாள். பழனியம்மா வடிவேலுவின் பக்கம் திரும்பி, “கவிச்சைலாம் சாப்புடலாமான்னு டாக்டர்கிட்ட கேட்டிங்களா?” என்று கேட்டாள். “நான் கேக்கறதுக்கு முன்னால பெரிம்மாவே கேட்டுட்டாங்க” என்று சிரித்தான் அவன். பிறகு, “சாப்புடலாமாம். ஒரு பிரச்சினையும் இல்ல” என்றான்.

உள்ளே சென்று கூடத்தில் அமர வைத்ததும் ஒரு பெரிய கோப்பையில் ஈரல் சூப்பை ஊற்றிக்கொண்டு வந்து பெரியம்மாவிடம் கொடுத்தாள். வடிவேலுவுக்கும் நந்தினிக்கும் சின்ன கோப்பைகளில் கொடுத்தாள்.  ரசனையோடு சூப்பை பருகி முடித்ததும் ”இந்த நிமிஷம் நான் ஒரு முடிவை எடுத்துட்டேன் பழனிம்மா” என்றாள்.

எல்லோரும் பெரியம்மாவின் பக்கம் திரும்பினார்கள்.

”இந்த ஊட்ட பழனிம்மா பேருல எழுதி வைக்க போறேன்” என்றபடி காலியான கோப்பையை மேசைமீது வைத்தாள் பெரியம்மா.

“ஐயோ பெரிம்மா, ஒங்களுக்கு இதே வேலயா போச்சி. நீங்க ஊட்டயும் எழுதிவைக்க வேணாம், தோட்டத்தயும் எழுதிவைக்கவேணாம். சந்தோஷமா ஆரோக்கியமா இருங்க. அது போதும்” என்று சொன்னபடி பெரியம்மாவின் தோளை அழுத்தினாள் பழனியம்மா.

“நான் ஒன்னும் வேடிக்கைக்கோ விளையாட்டுக்கோ சொல்லலை. உண்மையாவே சொல்றேன்”. பெரியம்மாவின் குரலில் உறுதி தெரிந்தது. 

பழனியம்மா மெளனமாக அவள் கண்களைப் பார்த்தாள். “இன்னைக்கே, இப்பவே எழுதிவைக்க போறேன்” என்று தீர்மானமாகச் சொன்னாள். “பெரிம்மா, சொல்றத கேளுங்க பெரிம்மா” என்று பழனியம்மா பதற்றமுடன் கெஞ்சியதை பெரியம்மா பொருட்படுத்தவே இல்லை. மெதுவாக எழுந்து தன் வீட்டுக்குச் சென்று பெட்டியிலிருந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். வடிவேலுவிடம் அதைக் கொடுத்து, “நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்கு தெரியாது. இன்னைக்கே இத தானபத்திரம் எழுதி பதிஞ்சாவணும். யாராவது பத்திரம் எழுதற ஆள புடிச்சி ஏற்பாடு செய், போ” என்றாள். வடிவேலுவுக்கு எதுவும் புரியவில்லை. “இதெல்லாம்…. இப்ப….. எதுக்கு பெரிம்மா?” என்று இழுத்தான். “என்கிட்ட யாரும் கேள்வி கேக்கக்கூடாது. நான் சொல்றத செய்ங்க, அது போதும்” என்று அவனை ஒரே பதிலில் அடக்கினாள். “இப்படி திடுதிப்புனு செய்வாங்களான்னே தெரியலை பெரிம்மா. நிதானமா இன்னும் ரெண்டு வாரம் கழிச்சி செஞ்சிக்கலாமே” என்று இழுத்தான் வடிவேலு. “இப்படி தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டுதான்டா இருபத்தஞ்சி வருஷம் ஓடிட்டுது. இனிமேலயும் தள்ளமுடியாது. ஒத்தைக்கு ரெட்டையா பணம் கொடுத்தா இந்த உலகத்துல எத வேணும்னாலும் செய்வாங்க. நீ போய் ஏற்பாடு செய், போ” என்று சொன்னாள். அவன் மீண்டும் தயக்கத்துடன் நிற்பதைப் பார்த்ததும் “இப்ப நீ போறியா, இல்ல நானே போவட்டுமா? எனக்கு என்ன பத்திரம் பதியற ஆபீஸ் எங்க இருக்குதுன்னு தெரியாதுன்னு நெனச்சிட்டியா?” என்று கேட்டாள். அக்கணம் எல்லா யோசனைகளையும் உதறிவிட்டு “சரி” என்றபடி பத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினான் வடிவேலு.

நந்தினிக்கு தட்டில் இட்லி வைத்து கொடுத்துவிட்டு பெரியம்மாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள் பழனியம்மா.  மனத்தில் இருப்பதை உணர்த்த பொருத்தமான ஒரு சொல் கிடைக்காமல் உள்ளூர தடுமாறினாள். பிறகு மெதுவாக வார்த்தைகளைக் கோர்த்து “மூணு நாளு ஆஸ்பத்திரில இருந்ததுல ரொம்ப பயந்துட்டிங்கன்னு தோணுது பெரிம்மா” என்றாள்.

“ஆமாமாம். பயம்தான்டி. நான் ஒன்னும் அத மறைக்கலை. தெடமா கல்லுமாதிரிதான இருக்கறம், ஒன்னும் ஆவாதுன்னு இருந்த நெனப்ப ஒரே ஒரு கொட்டிக் கெழங்கு கவுத்துடலையா? இப்பதான் தெரியுது நாம எப்ப வேணும்ன்னாலும் கவுந்துடற கப்பல்ன்னு…..”

“இப்பதான் கொணமாயி வந்துட்டிங்களே, அப்பறம் என்ன பெரிம்மா?”

“பதிலுக்கு பதில் பேசிகினே போவறதுல ஒரு அர்த்தமும் கெடயாது பழனிம்மா….” தொடர்ந்து பேசமுடியாமல் சொற்களை தொண்டைக்கடியிலேயே தேக்கி நிறுத்தினாள்.  சில கணங்கள் வீட்டு மூலையையும் கூடத்திலிருந்த மேசை நாற்காலிகளையும் உற்றுப் பார்த்தபடி இருந்தாள். ஜன்னலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தொட்டிச்செடியின் நிழல் வீட்டுக்குள் விழுந்து ஆடியது.

“ஊரு உலகத்துல யாராவது உன்ன குத்தம் சொல்லி பேசிடக்கூடாதுன்னுதான் பயமா இருக்குது பெரிம்மா” தயங்கித்தயங்கிச் சொன்னாள் பழனியம்மா.

“என்ன குத்தம் சொல்ல எந்த கழுதைக்குடி தைரியம் வரும்? இது எல்லாமே என் புருஷன் சம்பாதிச்ச சொத்து. என் பேர்ல எழுதி வச்ச சொத்து. என் விருப்பப்படி எழுதி வைக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்குது” பெரியம்மாவின் குரலில் வெளிப்பட்ட உறுதி ஆச்சரியமாக இருந்தது.

பழனியம்மா சுவரோரமாக இருந்த மீன்தொட்டிக்கு அருகில் சென்றாள். சீட்டுக்கட்டுபோல இறகுகளை அசைத்து அசைத்து நீந்தும் தங்கமீன்களை சில கணங்கள் பார்த்தபடி நின்றாள். கீழ்த்தட்டில் இருந்த உணவுப்பெட்டியைத் திறந்து கரண்டியால் எடுத்து தொட்டிக்குள் போட்டாள். மற்ற மூலைகளில் இருந்த மீன்கள் எல்லாம் அந்த உணவை நோக்கி ஓடிவந்தன.

வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் வடிவேலு. “எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். நல்ல வேள. பதிவு ஒன்னும் இன்னைக்கு அதிகமில்ல. செஞ்சிரலாம்ன்னு பத்திரம் எழுதறவரு சொன்னாரு. வெயில் தாழ மூணுமணிக்கு மேல வந்தா போதும். எல்லாத்தயும் தயார் செஞ்சி வைக்கறன்னு சொன்னாரு” என்று சொன்னபடி மேசை மீதிருந்த பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்தான். பழனியம்மா அவனுக்கு அவசரமாக தட்டில் இட்லி வைத்துக் கொடுத்தாள். அமைதியாக அவன் அதைச் சாப்பிட்டான்.

”ஆபீஸ்க்கு போவணுமா?” என்று கேட்டாள் பழனியம்மா. “இல்லம்மா, காலையிலயே லீவ் சொல்லிட்டன்” என்றான் வடிவேலு. பெரியம்மாவுக்கு அருகில் உட்கார்ந்திருப்பதில் சங்கடமாக இருந்தது. மெதுவாக எழுந்து, “இன்னைக்கு எனக்கும் நந்தினிக்கும் க்ளீனிங் வேல” என்றபடி அவளையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான். பழனியம்மா சமையலுக்கான வேலையைத் தொடங்கினாள்.

அறையிலிருந்து பொருட்களையெல்லாம் வெளியே கொண்டுவந்து போர்வையால் மூடிவைத்துவிட்டு, அறைக்குள் ஒட்டடை அடித்து மின்விசிறியைத் துடைத்து, தரையைக் கழுவி உலரவைத்தார்கள். பிறகு, மீண்டும் பொருட்களை ஒவ்வொன்றாக உள்ளே எடுத்துச் சென்று ஒழுங்குபடுத்தினார்கள். கைப்பேசியில் பாட்டு கேட்டபடி உதவி செய்தாள் நந்தினி. ஒவ்வொரு அறைக்கும் ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. மதியம் இரண்டு மணிக்கு மேல்தான் அவன் குளிக்கச் சென்றான்.

சலவைச் சட்டையை அணிந்தபடி அவன் கூடத்துக்கு வந்த தருணத்தில் அவனுக்கு கைப்பேசியில் அழைப்பு வந்தது. எண்ணைப் பார்த்ததுமே “பத்திரம் எழுதறவருதான் கூப்புடறாரு” என்றபடி எடுத்துப் பேசினான். தொடர்ந்து “சரிங்க” ‘சரிங்க” என்று ஒற்றைச் சொற்களாலேயே பதில் சொன்னான். உரையாடல் முடிந்ததும் பெரியம்மாவைப் பார்த்து, “எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாராம் பெரிம்மா. மூணு மணிக்கு வரச் சொல்லியிருக்காரு” என்றான்.

எல்லோருக்கும் சாப்பாடு கொண்டு வந்தாள் பழனியம்மா. சூடான சோற்றுடன் எல்லோரும் ஈரல் வறுவலைப் பிசைந்து சாப்பிட்டார்கள்.

கை கழுவி முடித்ததும் “நம்ம வண்டியிலயே ஒவ்வொருத்தவங்களா போயிடலாம். மொதல்ல நீங்க வாங்க பெரிம்மா” என்றான். அவள் எழுந்து வடிவேலுவின் பின்னால் நடக்கத் தொடங்கிய சமயத்தில் எதையோ சொல்ல வாயெடுத்த பழனியம்மா பெரியம்மாவின் முகத்தைப் பார்த்து வார்த்தைகளை விழுங்கிவிட்டாள். அவள் தத்தளிப்பதைக் கண்டு திரும்பிய பெரியம்மா “இனிமேல நீ ஒரு வார்த்த பேசக்கூடாது, புரியுதா?” என்று அதட்டி அடக்கினாள்.

“தொணைக்கு யாருமே இல்லாத ஊருல எங்களுக்கு  ஆதரவே நீங்க இருக்கறதே பெரிய விஷயம். எந்த ஜென்மத்துல நாங்க செஞ்ச புண்ணியமோ, எங்களுக்கு நீங்க கெடச்சிருக்கிங்க. சொத்துலாம் எதுக்கு பெரிம்மா?”

“இவ ஒருத்தி கூறு கெட்டவ.  சொன்னதயே திருப்பித்திருப்பி சொல்லுவா. ஊட்ட தூக்கி நீ என்ன தலமேலயா சொமக்கப் போற? நா சொல்ற எடத்துல கையெழுத்து போடு. அது போதும். கெளம்புடி”

பெரியம்மாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான் வடிவேலு. பழனியம்மாவுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. முந்தானையால் கண்களைத் துடைக்கத்துடைக்க கண்ணீர் பெருகியபடியே இருந்தது. “அம்மா…. ஆயா இவ்ளோ தூரம் எடுத்துச் சொல்றத புரிஞ்சிக்குங்கம்மா….” என்று இதமான குரலில் சொன்னபடி நெருங்கி வந்த நந்தினி அவள் தோளில் கைவைத்து அழுத்தினாள். சில கணங்களுக்குப் பிறகு அவள் அழுகை நின்றது. குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து தலைப்பின்னலை அவிழ்த்து சரிப்படுத்திக்கொண்டாள். அலமாரியிலிருந்து ஒரு புடவையைக் கொண்டு வந்து கொடுத்த நந்தினி “இத கட்டிகினு போம்மா” என்று சொன்னாள். பதில் எதுவும் சொல்லாமல் நிமிர்ந்து பார்த்த பழனியம்மாவிடம் “ப்ளீஸ்மா” என்று கண்களாலேயே கெஞ்சினாள். மெளனமாக அந்தப் புடவையை வாங்கி மாற்றிக்கொள்வதற்கும் திரும்பிவந்துவிட்ட வடிவேலு ஹார்ன் அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

பத்திர அலுவலகத்தில் யாரையும் பார்க்காமல் பெரியம்மாவுக்குப் பக்கத்தில் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள் பழனியம்மா. சில நிமிடங்களுக்குப் பிறகுதான் பதிவாளர் உள்ளே அழைத்தார்.

பத்திரத்தை நிதானமாகப் படித்துமுடித்த பிறகு பெரியம்மாவைப் பார்த்து கனிவான குரலில் “ராமாயிங்கறது நீங்கதானாம்மா?” என்று கேட்டார். “ஆமாங்கய்யா” என்று அவள் தலையை அசைத்தாள். “நீங்க சுயபுத்தியோடுதான் உங்களுக்கு சொந்தமான வீட்டை பழனியம்மாங்கறவங்களுக்கு எழுதி வைக்கிறிங்களா?” என்று கேட்டார்.

”ஆமாங்கய்யா” என்றாள் பெரியம்மா.

“ரத்த சம்பந்தமான உறவு யாராவது உங்களுக்கு இருக்காங்களாம்மா?” இருந்தா அவுங்க சாட்சி போடணும்…”

“எங்க ஊட்டுக்காரருக்கு மாட்டுத்தரகு வேல ஐயா. அவர் சொந்தமா சம்பாதிச்சி வாங்கி எனக்கு எழுதி வச்ச சொத்து இது. சந்தையில ஒரு கலவரத்துல மாடுமுட்டி செத்துட்டாரு. எனக்கு சொந்தப் புள்ளயோ வளர்ப்புப்புள்ளயோ யாரும் கெடயாது. என் கொடி வழியாவோ அவரு கொடி வழியாவோ எங்களுக்கு ரத்த உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்ல. எனக்கு இந்த உலகத்துல இருக்கற ஒரே உறவு இந்த பழனிம்மாவும் இவ புருஷன் வடிவேலுவும்தான்…..”

திடமான குரலில் பெரியம்மா சொன்னதை பொறுமையாகக் கேட்ட பதிவாளர், “சரி, இங்க கையெழுத்து போடுங்கம்மா” என்று இடங்களைக் காட்டினார். பெரியம்மா ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு எழுத்தாக தன் பெயரை எழுதினாள். அடுத்து பழனியம்மாவின் பக்கம் திரும்பிய பதிவாளர் “நீங்கதானம்மா பழனியம்மா?” என்று கேட்டார். ”ஆமாங்க” என்று அவள் அடங்கிய குரலில் சொன்னதும் “நீங்க இங்க கையெழுத்து போடுங்கம்மா” என்று சுட்டிக் காட்டினார். அதைத் தொடர்ந்து வடிவேலுவும் கையெழுத்து போட்டான். பிறகு வாசலில் நின்றிருந்த இரு சாட்சிகள் உள்ளே வந்து கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றார்கள். “சரி, பத்து நாள் கழிச்சி வந்து பத்திரத்த வாங்கிக்கங்க” என்று பதிவேட்டை மூடினார் பதிவாளர். அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு எல்லோரும் வெளியே வந்தார்கள். பின்னால் வந்த பத்திர எழுத்தரிடம் ”ரொம்ப நன்றி சார். இவுங்கள வீட்டுல விட்டுட்டு வந்து உங்கள பாக்கறேன்” என்று வணங்கி விடைபெற்றுக்கொண்டு வந்தான்.

“நான் பெரிம்மாவ வீட்டுல விட்டுட்டு வரேன். நீ அதோ அந்த கோயில் பக்கமா நெழல்ல இரு” என்று சொன்னபடி வடிவேலு பெரியம்மாவை முதலில் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றான். நாலைந்து கட்டிடடங்கள் தாண்டி அரசமரத்தடியில் இருந்த திரெளபதி அம்மன் கோயில் பக்கமாகச் சென்றாள் பழனியம்மா. கோயில் முன்னால் பெரிய திண்ணையைக் கொண்ட மண்டபம் இருந்தது. ஆறேழு காக்கைகள் அதன் கூரையில் ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டுமடிப்பில் எதையோ கொத்திக்கொத்தித் தின்றன.

“அக்கா, இந்த கொழந்தய செத்த புடிச்சிக்கிறிங்களா?” என்ற குரல் கேட்டு பழனியம்மாவின் கவனம் கலைந்தது. இடுப்பில் கைக்குழந்தையோடும் தலைமீது ஒரு கூடையோடும் ஒருத்தி நின்றிருந்தாள். வெயிலில் வெகுதொலைவு நடந்துவந்ததுபோல அவள் முகத்தில் களைப்பு தெரிந்தது. பழனியம்மாவின் முகத்தில் சட்டென்று ஒரு புன்னகை தோன்றியது. கைநீட்டி அந்தக் குழந்தையை அப்படியே அவள் இடுப்பிலிருந்து எடுத்துக்கொண்டாள். “இந்த பொடவ இடுப்புலயே நிக்கமாட்டுதுக்கா. இழுத்துகினு இழுத்துகினு எறங்கிடுது” என்று மெதுவான குரலில் கூச்சத்தோடு சொன்னபடி கூடையை திண்ணைமீது ஒரே நொடியில் இறக்கிவைத்துவிட்டு கொசுவத்தை பிரித்து உதறினாள். லாவகமாக மடித்து புடவையை சரிசெய்துவிட்டு கூடையைத் தூக்கி தலைமீது வைத்துக்கொண்டாள். வளைந்த இடுப்பில் குழந்தையை வைத்தாள் பழனியம்மா. ‘இங்கதான்ங்க்கா நாலு தெரு தள்ளி ஊடு. கேவுருமாவு அரைக்கறதுக்காக வந்தன்” என்று சிரிப்போடு விடைபெற்றுக்கொண்டாள் அவள். ”பெரிம்மாவுக்கு டாட்டா காட்டுடி செல்லம்” என்று அவள் குழந்தையிடம் சொல்ல, அது சிரித்துக்கொண்டே சதைமடிந்த கையை உயர்த்தி அசைத்தது.

குழந்தைக்கு கையசைத்துவிட்டு மண்டபத்தின் பக்கம் திரும்பினாள் பழனியம்மா. மண்டபத்திலிருந்து கருவறை நோக்கிச் செல்லும் வழியில் சிறிய பீடமொன்று காணப்பட்டது. அதன் நடுவே உயர்ந்து நின்ற சூலத்தின் விரல்களில் ஏராளமான நிறத்தில் கயிறுகளும் உலர்ந்த மாலைகளும் தொங்கின. அவள் நடந்து சென்று சூலத்தின் அருகில் நின்றாள். சாத்தப்பட்ட கம்பிக்கதவுகளுக்குப் பின்னால் கருவறையின் முன் எரியும் விளக்கு தெரிந்தது. மஞ்சள் நிற புடவையில் அம்மனின் முகத்தில் கனிவு பொங்கி வழிந்தது. அம்மனின் முகத்தைப் பார்த்ததும் அவள் உடைந்து அழத் தொடங்கினாள். கண்ணீர் விட்டு, தேம்பி, அழுகையை நிறுத்த சில நிமிடங்கள் பிடித்தன. முந்தானையால் முகத்தை அழுத்தமாகத் துடைத்துக்கொண்டு அம்மனை மறுபடியும் பார்த்தாள்:.

மண்டபத்து வாசலில் ஹார்ன் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது வடிவேலு நின்றிருந்தான். பெருமூச்சு வாங்கியபடி மெதுவாக அவன் அருகில் சென்றாள். அவன் அடங்கிய குரலில் “இப்ப எதுக்கு நீ கண்ண கசக்கிகிட்டு இருக்கிற? அந்த பெரியம்மா தானாவே ஒனக்குன்னு எழுதி குடுக்கும்போது, நீ எதுக்கு குற்ற உணர்ச்சியோடு நெனைக்கணும்?” என்று கேட்டான்.

“ஊரு வாயி மென்னு துப்பிடுமேன்னு…..”

அவன் மெதுவாக பழனியம்மாவின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்தினான். பிறகு “ஒரு விஷயம் சொல்றேன். புரிஞ்சிக்க பழனிம்மா?” என்றான். என்ன என்பதுபோல அவன் முகத்தைப் பார்த்தாள் பழனியம்மா.

“அந்த ஊட்டுக்கு ஒன்ன யாரு சொந்தக்காரியா நெனச்சிக்க சொல்றது? காபந்து பண்ணி வச்சிக்கப் போவற ஒரு ஆளுன்னு நெனச்சிக்கோ. இந்த கையில இன்னைக்கு வாங்கினத எதிர்காலத்துல உனக்கு நல்லவங்கன்னு தோணுற ஆளுகிட்ட கைமாத்தி உடறவரிக்கும் வச்சிக்கற ஆளு. அப்பிடி நெனச்சிக்கிறதுல உனக்கு என்ன கஷ்டம்?” என்றாள்.

அந்தக் கேள்வி அவளை ஒருகணம் யோசிக்க வைத்தது. பிறகு மெதுவாக “ஒரு கஷ்டமும் இல்ல” என்று தலையசைத்தாள். தன் மனபாரம் அக்கணத்தில் சட்டென்று கரைந்துபோவதை அவள் ஆச்சரியத்தோடு உணர்ந்தாள்.

“உங்களுக்கோ பிள்ளைங்களுக்கோ இது இருந்துட்டு போவட்டும்ன்னு எப்பவாவது ஒரு நெனப்பு வருமா?” என்று மெதுவாகக் கேட்டாள் பழனியம்மா. அதைக் கேட்டு அவன் ஒரு கணம் சிரித்தான். பிறகு “என்ன பழனிம்மா? இதுதான் என்ன நீ புரிஞ்சிகிட்ட அழகா? வீடு, நிலம், சொத்துன்னு எந்த நாட்டமும் இதுவரைக்கும் எனக்கு இருந்ததும் கெடயாது.  இனிமேல இருக்கப்போவறதும் கெடயாது. நீயும் புள்ளைங்களும்தான் நான் கடசிவரைக்கும் ஆசப்படற ஒரே சொத்து” என்று சொன்னபோது அவன் முகம் சிவப்பதை அவள் பார்த்தாள்.

அடுத்து எதையோ கேட்க, அவள் நாக்கு பரபரத்தது. ஆனாலும் அது நெஞ்சைவிட்டு எழவில்லை. காற்றில் அலைந்து    புரளும் முடிச்சுருளை ஒதுக்கியபடி வண்டியில் ஏறி வடிவேலுவுக்குப் பின்னால் உட்கார்ந்தாள்

                                             ( தூறல் – 2015)