Home

Sunday, 27 March 2022

மரபும் நவீனமும் - வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’

 

வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. ஆண்மகன் என்பவன் போராடப் பிறந்தவன் என்கிற தொனியும் அத்தகைய வீரனைப் பெற்ற தாய் என்கிற பெருமையும் ஒருங்கே வெளிப்படும் பாடல் அது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழல் அப்பாடலில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சாயலில் இன்றைய சூழலை சற்றே மாற்றி எழுதிப் பார்த்திருக்கிறார் வளவ. துரையன். புறநானூற்றில் மகனைப்பற்றிய கேள்விக்கு வீரமரபைச் சேர்ந்த தாய் விடை சொல்கிறாள். வளவ துரையன் கவிதையில் மகளைப்பற்றிய கேள்விக்கு நவீன தாய் அல்லது தந்தை விடைசொல்வதாக உள்ளது.

மகனைப்பற்றிய கேள்வியை அவர் ஏன் தவிர்த்திருக்கிறார் என்கிற கேள்வி சுவாரசியமானது, மகளைப்பற்றிய கேள்வியாக மாற்றிக்கொண்டதால் கவிதைக்கு ஒரு தனி அழகு சேர்ந்துவிடுகிறது. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று சொன்ன புறநானூற்று மகளை ஒரு கணம் நினைத்துப் பார்க்கலாம். பிள்ளை பெற்று வளர்க்கும் ஒரு பாத்திரத்தையே தாய்க்கு அன்றைய சமூகம் வழங்கியிருக்கிறது. லட்சத்தில் ஒரு மகள் அன்று கல்வி கற்றிருக்கலாம். பாடல் எழுதியிருக்கலாம். ஆட்சி புரிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் விதிவிலக்காகவே கருதப்படவேண்டியவர்கள். சமூக மையத்தில் அந்த எண்ணமே இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இரண்டாயிரமாண்டுகளில் படிப்படியாகவே பெண்கள் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதுவும் கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களே அதிகம். கல்வி, பதவி, அரசியல், போராட்டம், அதிகாரம் என எல்லா நிலைகளிலும் இன்று பெண்களின் நிலையில் மாற்றம் உருவாகி நிலைபெற்றுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்கூட, புற உலகில் நிகழும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் இல்லறவாழ்க்கை எனப்படும் பொன்விலங்கை மகளுக்குப் பூட்டிவிடும் ஒரு நவீன தாயின் நெஞ்சில் நிறைந்திருப்பது குற்ற உணர்வா அல்லது பெருமையுணர்வா என்கிற கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது வளவ துரையனின் கவிதை.

 

சிற்றில் நற்றூண் பற்றி

நின்மகள் யாண்டுதியோ என வினவுதி

அவளோ

எங்கேனும் ஊர்வலத்தில்

முழங்கிக்கொண்டிருப்பாள் அல்லது

உண்ணாநோன்புப் பந்தலில்

சொற்சாட்டை வீசிக்கொண்டிருப்பாள் அல்லது

மனித நேயக் காற்றைச்

சுவாசித்துக்கொண்டிருப்பாள் அல்லது

அதிகார ஆட்சிக்கெதிராய்

அறைகூவல் விடுத்துக்கொண்டிருப்பாள்

என்றெல்லாம் சொல்ல ஆசைதான்

ஆனால்

எல்லாம் படித்துத் தெரிந்தவளை

இல்லறத் தொழுவில் மாட்டியதால்

வாழ்க்கைப்புல்லை இப்போது

அசைபோட்டுக்கொண்டிருப்பாளே

 

நவீன தாயின் அவலநிலையைச் சித்தரிக்கும் கவிதையொன்றும் இத்தொகுதியில் உள்ளது. ஒரு பெண், ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு, அக்குழந்தைக்குச் சோறூட்டி, தாலாட்டி உறங்கவைத்து, பேசவைத்து, நடக்கவைத்து, ஓடவைத்து வேடிக்கைபார்த்து, கணந்தோறும் மகிழ்ச்சியில் திளைக்கிறாள். குழந்தை வளரவளர அதைக்கண்டு அவள் அடையும் ஆனந்தமும் வளர்கிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி, ஏதோ ஒரு காரணத்தையொட்டி எங்கோ சென்று, எப்படியோ வாழ, முதியோர் இல்லத்தில் தனிமையில் வாழ நேரிடும்போது,  அதே தாய் துயரில் திளைக்கிறாள். கொடுமையான தனிமை, அவளை பழைய நினைவுகளை அசைபோடவைக்கிறது. அவள் இனிமேல் அந்த நினைவுகளில்மட்டுமே வாழமுடியும். ஒருபுறம், பழைய சித்திரங்களை அசைபோடும்போது மனம் கண்டறியும் இதம். மறுபுறத்தில், ஆதரவின்றி கைவிடப்பட்ட ஒரு முதியவளாக தனிமையில் வாழ நேர்ந்ததை எண்ணும்போது மனம் உணரும் துக்கமும் அவலமும். இரு புள்ளிகளுக்கிடையே அவள் மனம் ஊசலாடியபடியே இருக்கிறது. தட்டு என்கிற இக்கவிதையில் அந்த ஊசலாட்டத்தை உணரலாம்.

 

தெருவில் ஓடும்

பேருந்து காட்டி

 

வாயொழுகி வாலாட்டும்

சொறிநாய்க்குப் போட்டு

 

வரமறுக்கும் காக்கையை

வாவென்றழைத்து

 

கைப்பிடிச் சுவரில்

காலாட்ட வைத்து

 

செம்பருத்திப் பூவைச்

சேர்த்துப் பிடித்துவைத்து

 

அடுத்த வீட்டுக் குழந்தையை

கையடிக்க ஓங்கிப்

பூச்சாண்டியாய் மாறி

பூனைபோல் கத்தி

 

சோறூட்டியதெல்லாம்

முதியோர் இல்லத்தில்

தட்டேந்தும்போது

முன்னால் வருகிறது.

 

’மறைவாய்’ என்னும் கவிதையில் ஒரு சுடுகாட்டுச் சித்திரம் இடம்பெறுகிறது. எரியும் பிணத்துக்கு அருகில் நடைபெறும் சம்பவங்களை ஒரு பொதுப்பார்வையாளனைப்போல எங்கோ ஒரு மரப்பொந்தில் அமர்ந்து பார்க்கும் ஆந்தையின் கண் வழியாக முன்வைக்கிறது கவிதை. மரணத்தைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சிப்புன்னகை புரியும் ஒருவர். துயரம் கொள்ளும் ஒருவர். சொத்து தராததால் தூற்றிப் பேசும் ஒருவர். தனக்குரிய கூலி கிடைக்கவில்லையே என வாதாடிச் சண்டையிடும் சுடுகாட்டுத் தொழிலாளிகள் சிலர். மாறுபட்ட உணர்வுடைய மனிதர்களின் நடவடிக்கைகளைத் தொகுத்துச் சித்தரிப்பதன் வழியாக கவிதை ஒரு பிரகாசமான உண்மையை உணர்த்திச் செல்கிறது. காலம்காலமாக இந்த மண்ணில் தழைத்துவரும் தத்துவங்கள் வாழும் முறைமைகள்பற்றியும் வாழ்க்கையின் பெருமைகள்பற்றியும் பேசிப்பேசி ஒரு மரபை வளர்த்துவந்திருக்கின்றன. வாழ்க்கை அன்புமயமானது. வாழ்க்கையில் அறம் மேலானது. அந்த நீதியுணர்வுதான் மானுடத்தை இவ்வளவுதூரம் அழைத்துவந்திருக்கிறது. எதார்த்தத்தில் அன்பையும் அறத்தையும் துரோகமும் கள்ளத்தனமும் சீண்டிச்சீண்டிப் பார்க்கின்றன. ஓயாத இந்த முரண்களில் நசுங்கிநசுங்கி வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒருபோதும் துரோகங்களால் வெல்லப்பட முடியாத ஒன்றாகவே மனித வாழ்வு இன்றுவரைக்கும் இருந்துவந்திருக்கிறது. அதே சமயத்தில் மறைவாய் நிகழும் போரும் ஓய்வின்றி நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது. மரபுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான இந்த முரண்களை அலசி அசைபோடுவதற்கான பொருத்தமான இடம், சுடுகாட்டைத் தவிர வேறென்ன இருக்கமுடியும். வாழ்ந்தவனைப்பற்றிய மதிப்பீடுகள் வெளிப்படும் இடம் அது. ஆந்தை ஒரு பொது ஆளாக அதை வேடிக்கைபார்ப்பதுபோல கவிதை காட்டிச் சென்றாலும், அந்த ஆந்தை நம் மனமே என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆந்தையாக வேடிக்கை பார்த்தபடி அது ஒரு நாடகம் நிகழ்த்துகிறது. நம் மனம் மரபைநோக்கித் திரும்பப்போகிறதா, எதார்த்தத்தை நோக்கித் திரும்பப்போகிறதா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

ஒரு கவிதையில் குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டில் வீசப்படும் செல்லாத நாணயத்தின் குரூரத்தைச் சித்தரிக்கும் வளவ.துரையன், மற்றொரு கவிதையில் நம்பிக்கையோடு உணவைத் தேடிவரும் நாயையும் பூனையையும் கிளியையும் காகத்தையும் சித்தரிக்கிறார். ஒருபுறம் நம்பிக்கையின் சித்திரம். மறுபுறம் குரூரத்தின் சித்திரம். மனதின் ஓயாத போராட்டமே வாழ்க்கையாகும்போது படைப்புகளின் மாறுபட்ட காட்சிகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன. வளவ.துரையன் மரபுப்பாடல்களிலிருந்து மெல்லமெல்ல நவீன கவிதைகளைநோக்கி நகர்ந்துவந்தவர். நவீனச் சிறுகதை, நவீன கவிதை என அவர் எழுத்துலகம் இன்று முழுக்கமுழுக்க நவீனத்தில் காலூன்றியிருக்கிறார். ஆயினும், அவரையறியாமல், அவர் ஆழ்மனம் மரபையும் நவீனத்தையும் மாறிமாறித் தொட்டு அசையும் பெண்டுலம்போல இயங்கியபடி இருக்கிறது.

 

( ஒரு சிறு தூறல் – கவிதைகள். வளவ. துரையன். தாரிணி பதிப்பகம். சென்னை – 20. விலை. ரூ100 )

 

( திண்ணை – இணைய இதழ் - 02.11.2014 )