பால்கணக்கு எழுதுவது என்னுடைய காலைவேலைகளில் ஒன்று. அது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். ஆனால் அம்மாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. “படிக்கற புள்ளய இதுல இழுத்து உட்டு கெடுக்காதன்னு சொன்னா காதுல ஏறுதா? நாலு எழுத்து படிச்சாதான நல்ல வழிக்கு போவமுடியும்?” என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள். உடனே சத்தமாக அப்பா ”வாய மூடிகிட்டு சாணிய அள்ளுடி போ. ஊரு உலகத்த சுத்தி பாத்தவளாட்டம் புத்தி சொல்லிகினே இருக்காத. எது நல்ல வழி, கெட்டவழின்னு எல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொல்லி அடக்கிவிடுவார். அந்த உரையாடல்கள் எதுவுமே என் காதில் விழவில்லை என்பதுபோல வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றிவிட்டு கணக்கு எழுதுவதில் மூழ்கியிருப்பேன் நான்.
பத்து
பசுக்களும் நான்கு எருமைகளும் பால்வியாபாரத்துக்கான மூலதனம். கூரைபோட்ட பெரிய தொழுவத்துக்குள்
அவை வலம்வந்தன. அம்மாவும் மூன்று அத்தைகளும் ஆயாவும் அதிகாலையிலிருந்து பொழுதுபோவதுவரைக்கும்
அந்தத் தொழுவத்துக்குள் வேலை செய்துகொண்டே இருந்தார்கள். சின்னச்சின்ன வாளிகளில் அவர்கள்
கறந்துகொண்டுவரும் பால் அண்டாவில் நிறைந்தபடி இருக்கும். வேறுவேறு பாத்திரங்களில் பாலை
அளந்து ஊற்றியெடுத்துக்கொண்டு கடைகளுக்கு எடுத்துச் செல்லும் வேலையை ஏழுமலையும் காளிமுத்துவும்
செய்வார்கள்.
ஓட்டல்
கணக்குகளை தனித்தனி நோட்டுகளிலும் வாடிக்கையாளர்களின் கணக்குகளை தனித்தனி பக்கங்களைக்கொண்ட
பெரிய நோட்டிலும் நான் எழுதிவைத்திருப்பேன். அது அப்பாவுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
மாதம் பிறந்ததும் ஒவ்வொரு ஓட்டலுக்கும் சென்று நோட்டுகளைக் காட்டி பணம் வாங்குவார்.
“என்னமா கருத்தா எழுதிவச்சிருக்கான்னு சொல்லிச்சொல்லி ரெட்டியாரே மெச்சிக்கறாருடி”
என்று அம்மாவிடம் அப்பாவே பெருமிதமாகச் சொன்னதைக் கேட்டதாக, அத்தைகள் என்னிடம் பலமுறை
சொன்னதுண்டு. அதைக் கேட்டு உள்ளூர ஆனந்தம் பொங்கினாலும் அம்மாவின் பாராட்டுகளைப் பெறமுடியவில்லை
என்கிற ஏக்கம் என் நெஞ்சமெங்கும் எப்போதும் நிறைந்திருந்தது.
”ரெண்டு சேரு பசும்பாலு ஊத்து மாப்பிள” என்று சொல்லிக்கொண்டே
வந்த குடுமிக்கார மாமா வெண்கலச்செம்பையும் எட்டணா நாணயத்தையும் திண்ணையில் வைத்துவிட்டு
அப்பாவிடம் பேசுவதற்குத் திரும்பினார். மீசையும் தாடியும் இல்லாமல் அவருடைய முகம் பார்ப்பதற்கு
எப்போதுமே வழவழவென்று இருக்கும். தெருக்கூத்தில் பெண்வேஷம் கட்டி ஆடுபவர் மாமா. வெற்றிலையை வாய்க்குள் ஒருபக்கமாக அதக்கிக்கொண்டு முகவாயை தோள்பக்கம்
இடித்து இடித்து அவர் பேசும்போது அச்சுஅசலாக பெண்ணைப்போலவே இருப்பார். “போனவாரம் பூரா
ஆளயே காணமே, எந்த ஊருலடா ஆட்டம்?” என்று கேட்டார் அப்பா. “நான் என்னா பெரிய ஆட்டக்காரனா,
சீமை உட்டு சீமைக்கு போயி ஆட? வெறும் பொம்பளவேஷக்காரந்தான? தோ இங்க இருக்கற காளாப்பட்டுக்குத்தான்
போயிருந்தேன். நாலு நாள் ஆட்டம்” என்று சொல்லிவிட்டு “ரெண்டு வெத்தலபாக்கு இருந்தா
குடுங்க” என்று கைநீட்டினார். ”நல்ல நேரம்னு ஒன்னு வந்துட்டா, சீமைக்கும் போயி ஆடலாம்,
சினிமாவுக்கும் போயி ஆடலாம்டா. மனசமட்டும் தளர உட்டுடாத” என்று சொன்னபடி தூணுக்குப்
பக்கத்தில் வைத்திருந்த பையை இழுத்து, மாமாவின் முன்னால் வைத்தார் அப்பா.
தொழுவத்திலிருந்து
“புடிடி புடிடி அத, திமிருபுடிச்ச அறந்தவாலு ஓடுது பாரு” என்று திடீரென அம்மா போடும்
சத்தம் காதில் விழுந்தது. அதைத் தொடர்ந்து அத்தைகளின் சத்தம். ”ஐயோ, இது என்னாடி அதாகுதம்”
என்ற ஆயாவின் சத்தம். அப்புறம் தொட்டிகள் உடைந்த சத்தம். ”என்னாடி சத்தம் அங்க?” என்றபடி
அவசரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அப்பா தொழுவத்துக்குப் போனார். பால் வாங்கிய
அக்காக்களிடம் சில்லறையை எண்ணிக் கொடுத்துவிட்டு நானும் வேகமாக பின்னாலேயே சென்றேன். அத்தைகளும் அம்மாவும்
ஒருவரை ஒருவர் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்க, பிடியிலிருந்து திமிறி ஓடிய கன்றுக்குட்டி
பசுவின் மடியில் வாய்வைத்து பாலை முட்டிமுட்டிக் குடித்துக்கொண்டிருந்தது. மூங்கில்மேடையில் வைக்கப்பட்டிருந்த புல்கட்டுகள் கீழே சரிந்துகிடந்தன.
சாணிக்கூடைகள் தொழுவத்துக்கு வெளியே உருண்டுபோய் விழுந்திருந்தன. இரண்டு மண்தொட்டிகள்
உடைந்து, அவற்றில் நிரப்பப்பட்டிருந்த கழனித்தண்ணீர் தரையில் வழிந்து ஊறிப் போயிருந்தது.
“சோத்துமாடு சோத்துமாடு, ஒரு கன்னுக்குட்டிய புடிச்சிக்கக்கூடவாடி ஒனக்கு தெரவிசி இல்ல?
வாயமட்டும் வளத்துக்கனா போதுமா?” என்று அம்மாவைத் திட்டிக்கொண்டே ஒரே நொடியில் கன்றுக்குட்டியின்
அருகில் சென்று ஓங்கி முதுகுப்பட்டையில் அடித்து
மடியிலிருந்து விலக்கி இழுத்தார். பிறகு, “போ, பால கற போ, வாய பாத்துகினு நிக்காத”
என்று அத்தையைப் பார்த்து சத்தம் போட்டார். கன்றுக்குட்டியை இழுத்துச் சென்று முளைக்குச்சியில்
கட்டிவிட்டு “மாசத்துக்கு ரெண்டு தொட்டி மாத்திகினே இருந்தா, பால் வேபாரம் நல்லா வெளங்கிரும்
போ” என்று அம்மாவைப் பார்த்து முறைத்துவிட்டுத் திரும்பினார்.
உடைந்துபோய்
அங்கங்கே சிதறிக் கிடந்த தொட்டித் துண்டுகளைப் போய்ப் பார்த்தேன் நான். அதற்குள் வேலியோரத்திலிருந்து
கொக் கொக் என்று சத்தமிட்டபடி கோழிகள் அங்கே வந்துவிட்டன. மண்ணோடு மண்ணாக கலந்துபோயிருந்த
புண்ணாக்குத் துணுக்குகளை கொத்தியெடுத்து விழுங்கின. ”அத்த, பொங்கல் அன்னைக்கு வாங்கி
வந்தமே, அதுதானே இது?” என்று சந்தேகத்தோடு கேட்டேன் நான். மறுகணமே “ஐய, பெரிசா போலீஸ்காரனாட்டம்
வந்து நிக்கறத பாரு, போடா அந்தப் பக்கம்” என்று அம்மா என்னை அடித்துவிடுவதுபோல முறைத்தாள்.
திரும்பி
வந்து திண்ணையில் உட்காரப் போன சமயத்தில், “என்னாடா, பால் ஊத்தப் போன பசங்கள இன்னம்
காணம்? வாத்தியாரு ஊட்டுல அஞ்சி படி பால் ஓணும்ன்னு நேத்தே சொல்லிவச்சிட்டு போனாங்க.
குடுத்தனுப்ப மறந்தே போயிட்டன்” என்று சலித்துக்கொண்டார் அப்பா. ”சீ, வரவர மறதி அதிகமாய்ட்டுது”
என்று தன்னையே வெறுத்தபடி பேசிக்கொண்டார். சில கணங்களுக்குப் பிறகு “டேய், அந்த வாளியில
பெரிய படியால அஞ்சி படி பால எடுத்தும் போயி நீயே ஊத்திட்டு வந்துடு. சீக்கிரமா ஓடுடா.
ஏதோ விசேஷம்னு சொன்னாரு” என்றார். மறு பேச்சே இல்லாமல், வாளியில் பாலை அளந்து ஊற்றி எடுத்துக்கொண்டு வாத்தியார்
வீட்டுக்குப் புறப்பட்டேன்.
திரும்பிவரும்
வழியில் கோவில் வாசலில் என்னை நிறுத்திய ஒருவர், “இங்க பால்காரரு ஊடு எங்க இருக்குது?”
என்று கேட்டார். நான் அவரை மேலும்கீழும் கூர்மையாகப் பார்த்தேன். அவருடைய கண்களில்
கிண்டலுக்குரிய அடையாளம் எதுவும் இல்லை என்பது தெரிந்தது. அழுக்கான வேட்டி ஒன்றைக்
கட்டியிருந்தார் அவர். திடமான கருத்த உடல். பலகைபோல விரிந்த மார்பில் முடிக்கற்றைகள்
சுருண்டிருந்தன. கருத்த மீசைக்கும் தாடிக்கும் நடுவில் வெற்றிலைக்கறையில் சிவந்து வெடித்த
உதடுகள், ஏதோ பழத்தைக் கீறியதுபோல இருந்தன. முதுகுப்பக்கம் ஒரு பெரிய சாக்குப்பை தொங்கியது. விளக்குக்கம்பத்துக்கு
அடியில் படுத்திருந்த ஒரு நாய் தலையைத் தூக்கி அவரைப் பார்த்து இடைவிடாமல் குரைத்தது.
”அய்” என அதைப் பார்த்து அதட்டிவிட்டு, அவரிடம் ”என் கூட வாங்க” என்று சொன்னேன்.
கொட்டகையை
நெருங்கியதும் அவர் வாசலுக்கு அருகிலேயே நின்றுவிட்டார். சாக்குப்பையை மடித்து காலடியில்
வைத்துவிட்டு, கைகளை மடித்துக் கட்டிக்கொண்டார். சாக்குப்பையைச் சுற்றிச்சுற்றி வந்த
ஒரு கோழியை “ஸ்…ஸ்..போ போ” என்று அடங்கிய குரலில் விரட்டினார் அவர்.
அவரைக்
கண்களால் அளந்தபடி ”யாருடா அது?” என்று என்னிடம் கேட்டார் அப்பா. “தெரிலப்பா, பால்
விக்கறவரு ஊடு எங்கன்னு கேட்டாருப்பா. அதான் கூட்டாந்தன்” என்றேன் நான்.
அப்பா
துண்டால் பின்கழுத்தின் பக்கம் அழுத்தித் துடைத்துக்கொண்டே வாசலுக்குச் சென்று “யாருப்பா
நீ? என்ன வேணும்?” என்று கேட்டார். அப்பா கேட்பதற்கு முன்பாகவே “கும்புடறன் சாமி” என்று
கைகுவித்து வணங்கினார் அவர்.
“சரி
சரி, யாரு நீ? என்ன வேணும்” என்று மறுபடியும் கேட்டார் அப்பா.
“நான்
கல்தொட்டி செய்றவன் சாமி. ஒரேஒரு தரம் செஞ்சி வச்சிட்டா போதும், காலம் பூரா நல்லா ஒழைக்கும்.
பல பண்ணைங்களுக்கு நான்தான் செஞ்சி குடுத்துருக்கேன். நீங்க சரின்னு சொன்னா உங்களுக்கும்
ரெண்டோ மூணோ செஞ்சி குடுத்துடுவன்….” என்று கெஞ்சும் குரலில் சொன்னார் அவர்.
“இங்க
என்னா பெரிய பண்ணையா இருக்குது? வெறும் பத்து பசுங்க, நாலு எருமாடுங்க. அவ்ளோதான்.
ரெண்டு ரூபா மூணு ரூபாவுகுலாம் மண்தொட்டி கெடைக்கற காலத்துல கல்தொட்டிக்கு யாரு செலவு
செய்வா?”
“பெரிய
சாமி வாய்ல அப்படி ஒரு சொல்லு வரக்கூடாது. எல்லாரும் அப்படி இருந்துட்டா எங்களாட்டம்
உள்ள தொழில்காரங்க எப்படி சாமி பொழைக்கமுடியும்?”
“அது
சரி, என்ன நம்பியா எல்லாரும் பொறந்தாங்க?”
“வேட்டி
கிழிஞ்சா வேட்டி மாத்தறம். சட்ட கிழிஞ்சா சட்ட மாத்தறம். மாடுங்க பொழங்கற எடத்துல தொட்டியும்
அதுமாரிதான சாமி. கால் படும். கை படும். மண்தொட்டியா
இருந்தா மாத்திகிட்டே இருக்கணும். கல்தொட்டின்னா கவலயே கெடையாது பாருங்க. காலத்துக்கும்
அப்படியே கெடக்கும்…”
“அததுக்கும்
தகுந்தாப்புல செலவும் இருக்குதுல்ல?”
“இதான்டா
கல்லுன்னு கைகாட்டி உடுங்க சாமி. அது போதும்.
செலவு என்னா செலவு? செஞ்சிகுடுக்கறது என் வேல. மூணுநாளோ, நாலு நாளோ மாட்டுக்கொட்டாய்லயே
இருந்து வேலய முடிச்சிடுவேன். பசிநேரத்துக்கு கூழோ கஞ்சியோ ஊத்துங்க. முடிச்சிட்டு
போவும்போது வெத்தலபாக்கு செலவுக்கு நீங்களா பாத்து இந்தாடான்னு ஏதாச்சிம் குடுத்தா
போதும் சாமி.”
அப்பா
பேசாமல் சிறிது நேரம் இறவாணத்தைப் பார்த்தார். பட்டாளத்துக்கார தாத்தா வந்து ஒரு ரூபாயைக்
கொடுத்துவிட்டு நாலு சேர் பால் வாங்கிக்கொண்டு போனார். ”இதான்டா கடசி வாளி. எல்லா கன்னுகுட்டிங்களயும்
அவுத்து வுட்டாச்சி. இனிமேல பால் கெடயாது” என்றபடி வந்த சின்ன அத்தை அண்டாவுக்குள்
பாலை ஊற்றினாள். திரும்பும்போது “யாருடா அது?” என்று கண்களாலேயே என்னிடம் கேட்டாள். எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுபோல உதடுகளைப் பிதுக்கிவிட்டு
தோள்களைக் குலுக்கினேன்.
”எந்த
ஊரு நீ?” என்று மறுபடியும் பேச்சைத் தொடங்கினார் அப்பா.
“பிச்சேரிப்பக்கம்
வில்லிநூருங்க. சுப்பையா கவுண்டர்னு ஒருத்தருங்க. அவரு பண்ணையிலதாங்க வேல பாத்தேன்.
தொட்டி செய்யறது, மாடுங்கள பாத்துக்கறதுதாங்க தொழிலு. சின்ன புள்ளயிலேருந்து அங்கதாங்க
கெடந்தன்”
“தெரியும்
சொல்லு. எங்க பெரியம்மா நாத்தனாரு வழியில தள்ளித்தள்ளி ஏதோ ஒறவுதான் அவுங்க. அவரு செத்து
மூணு வருஷம் இருக்குமே…….”
“ஆமா
சாமி. பெரிய சாமி போனதக்கப்பறம், எல்லாமே ஏடாகூடமா பூடிச்சி. சின்ன சாமிங்களுக்கு பண்ணை
வச்சிக்கறது, பால் விக்கறதுலாம் புடிக்கவே இல்ல. இது என்னா நாத்தம் புடிச்ச வேலைன்னு
ஒரே அருவருப்பு. எல்லாத்தயும் வித்துட்டு ரெண்டு மூணு பஸ்ங்க வாங்கி வேற ஏபாரத்துக்கு
மாறிட்டாங்க. தொட்டி செய்யறவனுக்கு எந்த வேல குடுக்கறதுன்னு என்ன போவ சொல்லிட்டாங்க………”
“அப்பறம்?”
“ஏம்பலம்
பக்கத்துல ஏகாம்பரக்கவுண்டருன்னு ஒருத்தரு வெள்ளைப்பன்னிங்களமட்டும் ஒரு பண்ணயா வச்சிருந்தாரு.
அங்க போயி தொட்டி செஞ்சி குடுத்தன். என் வேல தெறமய பாத்துட்டு இங்கயே இருந்துக்கடான்னு
சொன்னாரு. தெருத்தெருவா அலயற பொழப்பு மிச்சம்ன்னு நானும் அங்கயே கெடந்துட்டன்…..”
”அந்த
எடத்துல ஏதாச்சிம் பிரச்சினையா?” அப்பாவின் கேள்வியைக் கேட்டுவிட்டு மறுப்பதுபோல அவர் அவசரமாக தலையை அசைத்தார்.
“நாம
ஒன்னு நெனைக்கும்போது தெய்வம் ஒன்னு நெனச்சா, என்னா சாமி செய்யமுடியும்? எல்லாம் அவன்
பண்ற கூத்து சாமி.” அவர் பெருமூச்சு வாங்கினார்.
“என்னாச்சி,
சுருக்கமா சொல்லு.”
“அவருக்கு
ஒரே ஒரு பொண்ணு சாமி. தாயில்லாத பொண்ணு. தங்கமான புண்ணியவதி. எப்ப சோறு போட்டாலும்
நாலு மீன்துண்டு இல்லாம இருக்காது. வேணாம் வேணாம்னு சொன்னாலும் அள்ளி அள்ளி வைக்கும்.
அத கட்டிகுடுத்து பிரான்ஸ்க்கு அனுப்பி வச்சிருந்தாரு கவுண்டரு. அந்த குடும்பத்துல
ஏதோ ஒரு பிரச்சின. அவசரமா கெளம்பி போவறாப்புல ஒரு நெருக்கடியில மாட்டிகினாரு. பன்னிங்களயெல்லாம்
வந்த வெலைக்கு கறிகடைகாரனுங்களுக்கு வித்துட்டு ஒரே வாரத்துல பிரான்ஸ்க்கு போயிட்டாரு…”
“ஒன்
பொழப்புக்கு வழி?”
“சாமானுங்கள
வாரி ஒரு சாக்குல போட்டு மூட்ட கட்டிகினு தெருதெருவா போவறதுதான் வழின்னு கெளம்பிட்டங்க.
ஊருல அம்மாவும் தங்கச்சியும் இருக்காங்க. தங்கச்சி அவ்வளவா மூள வளர்ச்சி இல்லாத பொண்ணு.
எப்படியோ அவுங்க வவுத்த அவுங்க கழுவிகிறாங்க. அவுங்க பாரத்த இதுவரிக்கும் நான் சொமந்தது
கெடயாது. என் பாரமும் அவுங்களுக்கு வேணாம்ன்னுதான் சாக்குமூட்டயோட கெளம்பிட்டன். வேல
கெடைக்கற எடத்துல ஒரு வாரமோ பத்துநாளோ இருக்கறது, அப்பறமா கெளம்பறது… அப்பிடியே நம்ம
வண்டி ஓடுது சாமி….”
அப்பா
அவரையே ஏற இறங்க பார்த்தார். பிறகு என்னிடம் “அம்மா எங்க இருக்காள்னு பாத்துட்டு வா,
ஓடு” என்றார். உடனே நான் தொழுவத்துக்குப் பறந்தேன். அங்கே அம்மா இல்லை. அத்தைகள் ஆளுக்கொரு
பக்கம் தொழுவத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். ”அத்த, அம்மாவ பார்த்திங்களா?” என்று
கேட்டேன். “தோடா, முந்தானயில முடிச்சி போட்டு வச்சிருக்கேன். அவுத்து வுடட்டா?” என்று
பெரிய அத்தை சிரித்தாள். “இங்க வாடா, சுண்ணாம்பு டப்பியில மூடிவச்சிருக்கன்” என்றாள்
சின்ன அத்தை. உதடுகளைக் கோணலாக்கி அவர்களுக்கு அழகு காட்டியபடி வெளியே வந்தேன். அம்மா
குளிக்கிற கொட்டகையிலிருந்து சாமி அறையின் பக்கம் போவதைப் பார்த்தேன். உடனே திரும்பி
வந்து அப்பாவிடம் சொன்னேன். ஆயா பின்னாலேயே வந்து எட்டிப் பார்த்தாள். உடனே ஆயாவை அப்பா
கூப்பிட்டார். “நல்ல நேரத்துக்கு வந்த. இங்கயே உக்காந்து அண்டாவ பார்த்துக்கோ. தோ வரேன்”
என்று உட்காரவைத்துவிட்டு என்னிடம் “அவன வேலிப்பக்கமா தோட்டத்துக்கு கூட்டியாடா” என்று
சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போனார்.
அவரை
முதன்முதலாக நிமிர்ந்து பார்த்து சிரித்தேன் நான். அவர் குனிந்து சாக்குமூட்டையை எடுத்துக்கொண்டார்.
”இந்த பக்கமா பார்த்து மெதுவா வாங்க. பொதாருங்களும்
முள்ளுங்களுமா கெடக்கும்” என்றபடி நான் அவரை வேலிப்பக்கமாக அழைத்துச் சென்றேன். வேலியில்
படர்ந்திருந்த ஒரு கொடியைப் பார்த்துவிட்டு முகமலர்ச்சியோடு “ஆகா, தம்பியாரு இங்க இருக்காரா?”
என்றபடி ஒருகணம் நின்றுவிட்டார் அவர். அதன் இலையைக் கிள்ளியதும் சொட்டுச்சொட்டாக பால்
இறங்கியது. இதில் என்ன அதிசயம் என்பதுபோல அவரை நான் நோக்கினேன். “சின்ன சாமி, இதும்
பேரு உத்தாமணி. இதும் பால தொட்டு வச்சா பழுக்காத கட்டிங்க கூட பழுத்து ஒடஞ்சிரும்”
என்று சொல்லிக்கொண்டே அந்த இலையை கீழே வீசினார்.
“பால்கணக்குலாம்
சின்ன சாமிதான் எழுதறதுதானா?” என்று அவர் திடீரென கேட்டதும் ஆச்சரியத்தில் திரும்பிப்
பார்த்தேன். “ஒங்களுக்கு எப்பிடி தெரியும்?” என்று நம்பமுடியாமல் அவரிடம் கேட்டேன்.
”நோட்டும் கையுமா சின்ன சாமி ஒக்காந்திருந்தத பார்த்தன்” என்றார் அவர்.
“ஓ….”
பெருமிதத்தோடு அவரை ஒருகணம் பார்த்துவிட்டு நடந்தேன்.
“ஒரு
நேரத்துக்கு அம்பது அறுபது படி கெடைக்குமா சின்னசாமி” அவர் மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்.
“ம்ஹூம்.
நாப்பது அம்பதுதான் கெடைக்கும்.”
“சாயங்காலத்துல?”
“இல்ல,
சாயங்கால நேரத்துல நாங்க கறக்கறதில்ல…….”
கத்தாழைப்புதர்களையும்
காட்டாமணக்குச் செடிகளையும் கடந்து மூங்கில்படலைத் தள்ளிக்கொண்டு தோட்டத்துக்குள் நுழைந்தோம்.
“தோ
வரான் பாரு. இவன்தான்” என்று அம்மாவிடம் அப்பா சொல்வது எங்கள் காதில் விழுந்தது. அம்மா
அவரை ஒருகணம் திரும்பிப் பார்த்தார். ஈரத்தலையில் துண்டைச் சுற்றிக்கொண்டிருந்த அம்மாவிடமிருந்து
சந்திரிகா சோப்புமணம் வீசியது. நெற்றியில் குங்குமமும் திருநீறும் வைத்திருந்தார்.
அம்மாவிடம்
”எத்தன தொட்டிங்க வாங்கி வச்சாலும் ஒன்னுகூட ஒழுங்கா இல்ல. மாடு முட்டிட்டுது கன்னு
முட்டிட்டுதுன்னு மாசத்துக்கு ரெண்டு தொட்டி ஒடையுது. கல்தொட்டின்னா கவல இல்ல. ஒடயாம
இருக்கும். நல்ல நேரம் பார்த்துதான் அவனும் வந்திருக்கான். என்னா சொல்ற?” என்று கேட்டார்.
அவருக்கு பதில் சொல்லாமல், தொட்டி செய்பவரைப் பார்த்து, ”கல்தொட்டின்னா உள்பக்கத்துல
பொக்கபொக்கயா இருக்குமே, புண்ணாக்க போட்டு கரைக்கும்போது, கழுவ கொள்ள கஷ்டமா இருக்காதா?”
என்று சந்தேகமாகக் கேட்டார்.
“மழமழன்னு
பளிங்காட்டமா நான் பண்ணிக்குடுக்கறேம்மா. ஒரு சின்ன பொருக்குகூட இருக்காது. அந்த அளவுக்கு
வேலய சுத்தமா செய்வம்மா” என்று அவர் பணிவுடன் அம்மாவிடம் சொன்னார்.
“நம்ம
கையில குத்தனாகூட பரவாயில்லை. வாயில்லாத ஜீவன்ங்க, தொட்டிக்குள்ள வாய வைக்கும்போது
மூக்குல குத்தி, நாக்குல குத்தி ரணமாயிடக்கூடாதில்லயா, அதுக்காக சொல்றேன்……”
“அதுபோல
நடக்க வாய்ப்பே இல்லாதபடி செஞ்சி குடுக்கவேண்டிது என் பொறுப்பும்மா…..”
அம்மா
திரும்பி அப்பாவைப் பார்த்து “சரி, செய்யச் சொல்லுங்க” என்றார். அடுத்த கணம், “கூலி
பேசிட்டிங்களா?” என்று கேட்டார். “செஞ்சி முடிக்கறவரைக்கும் வேளாவேளைக்கி கஞ்சி ஊத்துங்க.
கெளம்பி போவும்போது வெத்தலபாக்குக்கு காசி குடுங்க, போதும்ன்னு சொல்றான். நீயும் வேணும்ன்னா
ஒரு வார்த்த கேட்டுப் பாரு” என்றார் அப்பா. அம்மா நம்ப முடியாதவளாக அவர் பக்கம் திரும்பிப்
பார்த்தார். “ஆமாங்கம்மா. எல்லாம் பெரிய சாமி
சொல்றாப்புலதாங்கம்மா. நீங்க மொதல்ல கல்ல காட்டினிங்கன்னா, வேலைய ஆரம்பிச்சிடுவேன்”
என்றார் அவர்.
அப்போதுதான்
நினைவு வந்ததுபோல அம்மாவும் அப்பாவை ஏறிட்டுப் பார்த்தார். ”என்ன பார்த்தா, நான் என்னா
கடைக்கு போயி கல்ல வாங்கியாரவா போறேன்? தோ, தோட்டத்துல கெடக்குதே, அந்தக் கல்லுங்களதான்
எடுக்கணும்” என்றார் அவர். “ஐயோ, அது துணி தொவைக்கிற கல்லுங்களாச்சே” என்று உடனே அம்மா
பதறினார். தொழுவத்திலிருந்தபடி உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அத்தை சட்டென்று வெளியே
வந்து எட்டிப் பார்த்தார். அப்பா ”அதுக்கு ஏன் இந்த சத்தம் போடற? ஒரே நேரத்துல நாலு
கல்லுங்கல்லுலயுமா தொவைக்க போறீங்க? ரெண்ட நீங்க வச்சிக்கிங்க. ரெண்டுல தொட்டி செய்யட்டும். என்னைக்காவது வண்டிக்காரன்
கெடச்சான்னா, இன்னம் ரெண்டோ மூணோ கல்லுங்கள கொண்டாந்து எறக்கிக்கனா போச்சி” என்று பொதுவாகச்
சொல்லிவிட்டு அம்மாவின் முகத்தைப் பார்த்தார். அம்மா ஒருகணம் யோசித்தபிறகு “சரி, உங்க
விருப்பப்படியே ஆவட்டும்” என்று முடித்தார். “அப்பறம் என்ன, போ போய் வேலய தொடங்கு”
என்று தொட்டிக்காரரிடம் சொல்லிவிட்டு அப்பா வாசலுக்குப் போனார்.
தன்
உடலில் சுறுசுறுப்பு படர்ந்தவராக, பூவரசமரத்தின் நிழலில் கிடந்த பெரிய கற்களுக்கு அருகில்
சென்றார் தொட்டிக்காரர். பார்வையாலேயே அவற்றை ஒருகணம் அளந்துவிட்டு, கற்களுக்குப் பக்கத்தில்
சாக்குமூட்டையை இறக்கிவைத்தார். பிறகு அம்மாவின் பக்கம் திரும்பி, “ஏதாச்சிம் பழய கஞ்சி
இருந்தா கொண்டாங்கம்மா. வெஷமாட்டம் பசி ஏறுது” என்று கும்பிட்டார். அம்மா என்னிடம்
“அந்த ஆளுகிட்ட வாழமரத்த காட்டுடா. ஒரு எலய நறுக்கிட்டு வந்து உக்காரச் சொல்லு” என்று
சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
“அண்ணி,
இன்னும் நானும் அக்காவும் சாப்புடல. எல்லாத்தயும் அள்ளி போட்டுடாதிங்க” என்று தொழுவத்திலிருந்து
நடு அத்தை குரல்கொடுத்தாள்.
தொட்டிக்காரர்
இலையை நறுக்கிக்கொண்டு வந்ததும் நான் தண்ணீர் ஊற்றினேன். அவர் அதை துப்புரவாகக் கழுவி
உதறினார். பிறகு கைகாலையும் கழுவிக்கொண்டு வந்து மரத்தடியில் உட்கார்ந்தார். மெதுவாக
இலையின் நடுநரம்பை அழுத்தி தரையோடு படியும்படி செய்தார்.
குண்டானில்
சோறு எடுத்துவந்த அம்மா, அதை அப்படியே அந்த இலையில் அள்ளிவைத்து, கருவாட்டுக்குழம்பை
ஊற்றினார். குழம்பின் மணத்தால் நாக்கில் எச்சில் சுரந்தது.
“வாலக்
கருவாடுங்களா?” என்று மூக்கு விடைக்க கேட்டார் அவர். ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தபடி
அம்மா வீட்டுக்குள் போனார். குழம்பையும் சோற்றையும் நன்றாக கலந்து பிசைந்து அள்ளிஅள்ளிச்
சாப்பிட்டார். அதைப் பார்த்த பிறகுதான் எனக்குப் பசியின் நினைவு வந்தது. அதைத் தொடர்ந்து
பள்ளிக்கூடத்தின் நினைவும் வந்துவிட்டது.
சட்டென்று
திரும்பி குளியல் மறைப்புக்குள் ஓடினேன். அவசரமாக தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு
குளித்துமுடித்தேன். எனது வேகத்தைப் பார்த்து,
அத்தையால் ஆச்சரியத்தை அடக்கிக்கொள்ளவே முடியவில்லை. “என்னடா இன்னைக்கு, கூடுதலா நாலஞ்சி
கைகால் மொளைச்சிடுச்சா? இந்த சுறுசுறுப்புலாம் ஒன் உடம்புல இத்தன காலம் எங்கடா இருந்திச்சி?”
என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“சும்மா
இரு அத்த, நேரமாய்ட்டுது. கடசி பெல் அடிச்சாச்சின்னா அந்த சட்டாம்புள்ள கதவ இழுத்து
சாத்திருவாரு. அப்பறம் பெரம்படி வாங்கிகினுதான் உள்ள போவணும்”
“அப்ப
தம்பிக்கு இன்னைக்கு கேரண்டியா பெரம்படி உண்டுன்னு சொல்லு.”
“அதுக்குள்ள
நான் ஓடி போயிருவேன்….”
“ஊட்டுப்பாடம்லாம்
எழுதி வச்சிட்டியா?” என்று மறுபடியும் ஆரம்பித்தாள் அத்தை.
அம்மா
உள்ளிருந்து வந்தபடி “அவன்கூட வெளயாட நேரம்காலம் கெடயாதாடி ஒனக்கு? உடுடி அவன” என்றாள்.
குண்டானில் கொண்டுவந்திருந்த சோற்றை மீண்டும் தொட்டிக்காரரின் இலையில் கவிழ்த்துவிட்டு
குழம்பை ஊற்றினாள்.
நான்
உடைமாற்றிக்கொண்டு வருவதற்குள் அவர் சாப்பிட்டு முடித்திருந்தார். ஒரு கல்லை உருட்டிவந்து
மண்ணில்லாமல் கழுவி சுத்தம் செய்துவிட்டு சாக்குப்பையை கவிழ்த்தார். பலவேறு அளவுகளிலும்
உயரங்களிலுமாக ஏராளமான வெட்டிரும்புகள். சுத்திகள். கம்பிகள். மட்டப்பலகைகள். ஒரு பலகையோடு
திரும்பியவர் என்னைப் பார்த்து “சின்ன சாமி, படிக்க கெளம்பியாச்சா?” என்று கேட்டார்.
உடனே ”ஆமாம்” என்று தலையசைத்தபடியே, “அது என்ன?” என்று விசாரித்தேன்.
“இதுவா,
சிவபெருமான் சூலம், முருகரு வேலு, ராமரு வில்லுமாதிரி இது நம்ம ஆயுதம். அளக்கற ஆயுதம்.
எல்லாத்துக்கும் அளவு முக்கியமில்லயா?” என்று சிரித்தார் அவர். பிறகு, “எத்தனாவது கிளாஸ்ல
படிப்பு? என்று கேட்டார். நான் பெருமையாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு “அஞ்சாவது” என்றபடி
ஐந்து விரல்களையும் காட்டினேன். அதற்குள் அம்மா பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கேட்டது.
”சாயங்காலமா பாக்கலாம்” என்று சைகையாலேயே அவரிடம் சொல்லிவிட்டு திரும்பினேன். தட்டில்
வைத்த சோற்றை வேகவேகமாக தின்றுமுடித்து கையைக் கழுவினேன். ஆணியில் மாட்டியிருந்த பையை
எடுத்துக்கொண்டு ”அம்மா வரேன், ஆயா வரேன், அத்த வரேன்” என்று ராகமிழுத்தபடியே வெளியே
ஓடினேன்.
பள்ளிக்கூடத்தில்
எந்தப் பாடமும் மனத்தில் பதியவில்லை. வாய்ப்பாட்டு எண்களை வாய்தான் சொன்னதே தவிர எண்ணம்
முழுக்க கல்தொட்டி கற்பனைகளிலேயே மூழ்கியிருந்தன. வகுப்புகள் முடிந்து ஆசிரியர்கள்
மாறிமாறி வந்தார்கள். கரும்பலகையில் எழுதினார்கள். கதை சொன்னார்கள். சிரித்தார்கள்.
விஞ்ஞான வகுப்பில் ஊமத்தம் பூவின் படத்தை ஒரு பையன் வரைந்து பாகங்களின் பெயர்களையெல்லாம்
எழுதிவிட்டு உட்கார்ந்ததும் ஆசிரியர் அந்தப் படத்தைக் காட்டி பாடம் நடத்தினார். ஒன்றைக்கூட
நான் கவனிக்கவில்லை. சாப்பாட்டு நேரத்தில் கூட யாரோடும் சேராமலும் விளையாடப் போகாமலும்
தனிமையில் கனவுகளில் திளைத்திருந்தேன்.
மாலையில்
பள்ளிக்கூடம் விட்டதும் ஒரே ஓட்டமாக ஓடி வந்து வீட்டை அடைந்த பிறகுதான் மூச்சு வாங்கினேன்.
ஆணியில் பையை மாட்டிவிட்டு தோட்டத்தை அடைந்தேன். கல் ஒரு பெரிய செவ்வகப் பெட்டியைப்போல
தொட்டிக்காரர் முன்னால் காணப்பட்டது. கல்லிலிருந்து அகற்றப்பட்ட சின்னச்சின்ன துணுக்குகள்
அவரைச் சுற்றிக் குவிந்திருந்தன.
“ஒரு
பொட்டிமாரி பண்ணிட்டிங்களே….” என்றேன்.
“ஆ…
சின்ன சாமியா? படிச்சிட்டு வந்தாச்சா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் தலையாட்டிச்
சிரித்தேன். “தொட்டிய எப்ப செஞ்சி முடிப்பீங்க?”
”இப்ப பொட்டியா இருக்குதில்ல, இது தொட்டியா மாறும்போது வேல முடிஞ்சிடும்” என்று
தாடியைத் தடவிக்கொண்டே சிரித்தார் அவர்.
“எங்க
அத்தைகிட்ட இதேபோல ஒரு பெரிய மரப்பொட்டி இருக்குது. தீபாவளி பொங்கலுக்கு எடுக்கற பொடவ
துணிமணிங்களயெல்லாம் அதுக்குள்ளதான் வச்சிருப்பாங்க” என்று உடனுக்குடன் நினைவுக்கு
வந்ததை அவரிடம் சொன்னேன் நான். ”அப்பிடியா?” என ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டார் அவர்.
”தெறக்கும்போது கற்பூர வாசன அடிக்கும்” என்றேன் நான்.
சில
கணங்களுக்குப் பிறகு “சின்ன சாமிக்கு ஆம்பள வாத்தியாரா? பொம்பள வாத்தியாரா? யாரு பாடம்
எடுப்பாங்க?” என்று கேட்டார். பிறகு, என் முகத்தை ஒருதரம் திரும்பிப் பார்த்துவிட்டு
வெட்டிரும்பால் கல்லின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த பொருக்குகளை தட்டி எடுக்கத்
தொடங்கினார்.
“தமிழு,
ஆங்கிலம், சரித்திரம், பூகோளத்துக்குலாம் ஆம்பள வாத்தியாரு வருவாங்க. மத்ததுக்கு பொம்பள வாத்தியாரு வருவாங்க”
”நான்
ஒரு கணக்கு சொல்றேன். சின்ன சாமியால பதில் சொல்லமுடியுமா?”
நான்
உற்சாகமாக “ம். சொல்லுங்க” என்றேன்.
“காலரிக்கா
காசுக்கு நாலரிக்கா வாழக்கா. காசுக்கு எத்தன வாழக்கா? சொல்லுங்க”
அது
ஏதோ பாட்டுமாதிரி ஒலித்ததே தவிர கணக்குமாதிரியே தெரியவில்லை. தொட்டிக்காரர் கிண்டல்
செய்கிறாரோ என்று சந்தேகமாக இருந்தது. “ஒன்னும் புரியலையே, இன்னொரு தரம் சொல்லுங்க”
என்று கேட்டேன். அவர் கோணலாகச் சிரித்துவிட்டு, சொன்னதையே மீண்டும் சொன்னார்.
“இது
கணக்கு ஒன்னுமில்ல, என்னமோ கூத்துப் பாட்டுமாதிரி இருக்குது” என்று எழுந்தேன். “சின்னசாமிக்கு
சந்தேகம்ன்னா, நான் சொன்னத நாளைக்கு உங்க வாத்தியாருகிட்ட கேட்டுப் பார்த்துட்டு தெரிஞ்சிக்கலாமே….”
என்று அவரும் வேலையை நிறுத்திவிட்டு கல்துணுக்கையெல்லாம் அள்ளியெடுத்துச் சென்று மதிலோரமாகப்
போட்டார். சாமான்களையெல்லாம் எடுத்து சாக்குப்பைக்குள் போட்டுக் கட்டி, அதையும் ஓரமாக
வைத்தார். “சாமி கணக்குக்கு பதில் என்னான்னு யோசிச்சிகினே போயி படிக்கட்டும். நான்
இப்பிடியே ஒரு நட நடந்து சுத்திட்டு வரேன்” என்று வேலியின் பக்கமாகச் சென்றார். நாலடி
தூரம் நடந்தபிறகு நின்று ”ஏரி எந்தப் பக்கம்” என்று கேட்டார்.
“தெருவுக்கு
போயி சோத்துக்கை பக்கம் நடக்கணும்”
“சரி
சரி” என்று தலையாட்டியபடி நடந்துபோனார் அவர். வாயில் நுழையாத அவர் கணக்கை ஞாபகத்துக்குக்
கொண்டுவர முயற்சி செய்தபடி கல்மீது உட்கார்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. “என்னாடா,
புத்தருக்கு ஞானம் பொறந்ததுமாதிரி, ஏதாச்சிம் ஒனக்கும் பொறக்கப் போவுதாடா?” என்ற குரலாலும்
மேலே வந்து விழுந்த தண்ணீர்த்துளிகளின் ஈரத்தாலும் திரும்பியபோது சின்ன அத்தை, உடையாத
மண்தொட்டியில் கரைக்கப்பட்ட பிண்ணாக்கும் தீவனமும் கலந்த தண்ணீரை பசுவைக் குடிக்கவைத்தபடி நின்றிருப்பதைப் பார்த்தேன்.
“காலரிக்காவுக்கும் நாலரிக்காவுக்கும் கணக்கு சரியாய்டுச்சாடா?” என்று மறுபடியும் கேலி
செய்தாள் அவள். “அத்த, இன்னொரு தரம் கிண்டல் பண்ணிங்கன்னா, மேல உழுந்து கடிச்சிடுவேன்”
என்று அவளுக்கு அழகு காட்டிவிட்டு உள்ளே சென்றேன். தொட்டிக்காரர் சொன்ன கணக்கை ஆயா,
பெரிய அத்தை, நடு அத்தை, அம்மா எல்லோரிடமும் சொல்லி பதில் சொல்லும்படி கேட்டேன். யாருக்கும்
அதன் பதில் தெரியவில்லை. “ஏதோ கூத்துப்பாட்டாட்டம் இருக்குதுடா, நாளைக்கி குடுமிக்கார
மாமா பால் வாங்க வருவாரில்ல, அப்ப அவருகிட்டயே கேளு” என்று சொன்னாள் பெரிய அத்தை. சிம்னிகளை
சாம்பல் போட்டு துடைத்து மண்ணெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வைத்தாள் நடு அத்தை. ”ஒங்க
அப்பா வந்தாருன்னா, அவருகிட்டயே கேளுடா” என்றாள் ஆயா. “அவுரா? நல்லா பதில் சொல்லுவாரே?
இருவது ரூபாய்க்கி சில்லற குடுத்தா அத நாப்பது தரம் எண்ணி எண்ணிப் பாக்கறவரு அவரு.
உன் கணக்குக்கு பதில் சொல்லிட்டுதான் மறுவேல பார்ப்பாரு” என்று சிரிக்காமல் சொன்னாள்
அம்மா. அடுப்பிலிருந்த சோற்றுப்பானையை மெதுவாக இறக்கி, வடிதட்டு வைத்து, அகலமான வாயுள்ள
பானைக்குள் தண்ணீர் இறங்கும்படி சாய்மானமாக வைத்துவிட்டு நிமிர்ந்தபிறகுதான் அவள் உதடுகளில்
சிரிப்பு படர்ந்தது.
அப்பா
வந்து கைகாலைக் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். அம்மா கொண்டுவந்த தட்டிலிருந்த
சாப்பாட்டைப் பிசைந்து சாப்பிடத் தொடங்கினார். அத்தை என் பக்கம் கண்ணைக் காட்டியதும்,
யாருக்கும் பதில் தெரியாத கணக்கை அவரிடம் சொல்லி பதில் தெரியுமா என்று கேட்டேன். ஒருகணம் சோறு பிசைவதை நிறுத்திவிட்டு, “நீதான் கணக்குல
புலியாச்சே. யோசிச்சி கண்டுபுடி” என்றார். மறுபடியும் ஏதோ சொல்ல முனைந்தபோது, “சாப்புடற
நேரத்துல எதுக்குடா தொணதொணன்னு பேசிகினே இருக்கற? காலாகாலத்துல சாப்புட்டுட்டு படுக்கற
வேலய பாரு. போ” என்று கடுமையான குரலில் சொன்னார்.
தட்டிலேயே
கைகழுவிவிட்டு, ஏப்பம் விட்டபடி எழுந்துபோய் வாசலில் இருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்தார்
அவர். அம்மா எழுந்துபோய் வெற்றிலைப்பையையும் ஒரு செம்பு தண்ணீரையும் அவர் அருகில் வைத்துவிட்டுத்
திரும்பினாள்.
குசுகுசுவென
அடங்கிய குரலில் கணக்குக்கான பதிலை விவாதித்தபடி தட்டில் சோறு போட்டு சாப்பிட்டோம்.
சரியான பதிலை கண்டுபிடிக்கவே முடியவில்லை. பாத்திரங்களைக் கழுவி வைக்கும் நேரத்தில்
தொழுவத்துக்குப் பின்புறம் தொட்டிக்காரர் வந்து நின்றார். மெதுவாகச் செருமியபடி “அம்மா”
என்று அவர் குரல்கொடுத்தார். “இப்பிடி வெளிச்சம் இருக்கற பக்கமா வந்து உக்காரு” என்றபடி
அம்மா எழுந்தார். தொழுவத்துக்கு நேராக அவர் வந்து உட்கார்ந்ததும் இறவாணத்தில் செருகியிருந்த
ஒரு இலையை எடுத்து அவர் முன் பிரித்து வைத்தார். குண்டானிலிருந்த சோற்றை அதில் அள்ளிஅள்ளி
வைத்தார். அதன்மீது வெண்டைக்காய் குழம்பை ஊற்றினாள். பலாக்கொட்டை பொரியலையும் கருணைக்கிழங்கு
பொரியலையும் அள்ளி சோற்றுக்குன்றுக்கு அருகில் வைத்தாள். அவர் எல்லாவற்றையும் ஒன்றாக
கூட்டிப் பிசைந்து சாப்பிட்டார். நான் கதவுக்குப் பின்னால் நிற்பதைப் பார்த்ததும்
“சின்ன சாமி இன்னமா தூங்கலை? படிக்கற புள்ள இம்மா நேரம் முழிச்சிருக்கலாமா?” என்று
சிரிப்பதை என்னால் பார்க்கமுடிந்தது. “என்னமோ வாழைக்கா கணக்கு சொன்னியாமே, அதுக்கு
பதில் தெரிஞ்சாதான் அவனுக்கு தூக்கம் வரும்” என்று எனக்குப் பதிலாக அம்மா சொன்னாள்.
“ஐயையோ, எனக்கும் பதில் தெரியாது சாமி. பழைய பண்ணையில அத யாரோ சொல்லும்போது கேட்டதோட
சரி. கல்லுல கொத்தனமாதிரி அப்பிடியே நெஞ்சில உழுந்து நின்னுட்டுது” என்றார். இரண்டுமுறை
மறுசோறு வாங்கி சாப்பிட்டுவிட்டு, இலையைச் சுருட்டி எடுத்தபடி எழுந்துபோய் குப்பைத்
தொட்டிக்குள் போட்டுவிட்டு கைகழுவினார்.
“எங்க
படுத்துக்குவே?” என்று கேட்டாள் அம்மா.
“அந்த
மரத்தடியில படுத்துக்கறேங்க” மதிலோரமாக இருந்த கீற்றுக்கட்டிலிருந்து நான்கு கீற்றுகளை
எடுத்துச் சென்று ஒன்றுமீது ஒன்றாக விரித்துவிட்டு வந்தார் அவர்.
லாந்தர்
விளக்குடன் தொழுவத்துக்குள் சென்ற அம்மா மாடுகளையெல்லாம் ஒருமுறை பார்த்திவிட்டு வீட்டுக்குள்
போய்விட்டார்.
வழக்கமாக
அத்தை சொல்லும் கதைகளில் என் கவனத்தைக் குவிக்கவே அன்று இரவு முடியவில்லை. மனம் முழுக்க
அந்தக் கல்தொட்டியின் கற்பனைகளிலேயே நிறைந்திருந்தது. “என்னாடா, ஊங்கொட்டாமயே கத கேக்கற?
தூக்கம் வந்துட்டுதா? என்று கேட்டபடி என்னை உலுக்கினாள் அத்தை. அதற்குப் பிறகுதான்
எனக்கு சுய உணர்வு திரும்பியது. ”என்னா அத்த?” என்றேன். “ஒன்னுமில்ல, தூங்கு” என்று
சொல்லிவிட்டு அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
எப்போது
தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிவிட்டு, கண்திறந்தபோது விடிந்திருந்தது. தொழுவத்தில்
மாடுகளின் சத்தம். கன்றுகள் இடையிடையே அம்மா என்று அழைக்கும் குரல்கள் ஒலித்தன. “இரு..இரு..
அடங்கு… அடங்கு.. வரேன்” என அத்தைகள் அதட்டுக் குரல்களும் கேட்டன. “கொஞ்ச நேரம்தான்டி
மீனாச்சி” என்று பசுவிடம் பேசும் அம்மாவின் குரலும் கேட்டது. சட்டென்று எழுந்து தோட்டத்தின்
பின்கட்டுக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு திரும்பியபோது மரத்தடியில் கல்தொட்டியின்
செவ்வகக் கோலம் தெரிந்தது. தொட்டிக்காரர் இல்லை. நான் வேகவேகமாகச் சென்று முகம் கழுவிக்கொண்டு
திரும்பும்போது தொழுவத்திலிருந்து அத்தை என்னைப் பார்த்துச் சிரித்தாள். சுட்டுவிரலால்
பாலைத் தொட்டு என்னை நோக்கி விசிறினாள். சிரித்தபடியே நான் கணக்கு நோட்டுகளோடு திண்ணையின்
பக்கம் போனேன்.
வியாபாரம்
முடிந்தபிறகு, குளிப்பதற்காக பின்கட்டுக்குத் திரும்பிய சமயத்தில் தொட்டிக்காரர் வேலையை
ஆரம்பித்துவிட்டார். வெட்டிரும்பு புள்ளிபுள்ளியாக கல்மீது நகர்ந்துகொண்டிருந்தது.
சுத்தியலின் ஓசை ஒரு கனமான ராகம்போல ஒலித்தது.
”தொட்டி
செய்றதுக்கு எங்க கத்துக்கினிங்க?” நான் அவர் அருகில் சென்று கேட்டேன். அவசரமாக அவர்
“இந்த பக்கமா வந்துரு சின்ன சாமி. பிசிறுங்க கண்ணுல பட்டுரும்” என்று சொல்லி நான் நகர்ந்ததும்,
கறைபடிந்த பற்கள் தெரிய சிரித்தபடி என்னைப் பார்த்தார். பிறகு “இதுக்குலாம் பள்ளிக்கூடமா
இருக்குது? எங்க பாட்டன் பூட்டன் காலத்துலேருந்து இதுதான் எங்க தொழிலு. எங்க தாத்தாகிட்டேருந்து
எங்க அப்பாரு கத்துக்கிட்டாரு. அவருகிட்டேருந்து நான் கத்துகிட்டன்: என்றார்.
“ஒங்ககிட்டேருந்து
யாரு கத்துக்குவாங்க?”
“இந்த
தொழிலே வேணாம் சாமி, இத மெனக்கிட்டு யாரும் கத்துக்கவும் வேணாம். இது என்னோடயே முடிஞ்சி
போவட்டும்…….”
“ஏன்,
ஒங்களுக்கு புள்ள இல்லயா?”
“பொண்டாட்டியே
இல்ல, புள்ளைக்கு நா எங்க போவறது சாமி?”
சின்ன
வெட்டிரும்பை வைத்துவிட்டு, அளவில் சற்றே பெரிய வெட்டிரும்பை எடுத்தார் அவர். கல்லின்
ஒரு மூலையில் வைத்து மெதுவாக அடித்தார். பிறகு அதை ஒரு நேர்க்கோடாக இழுத்துக்கொண்டே
போனார்.
”கல்ல
வெட்டிவெட்டி, தொட்டிய உண்டாக்கறது உண்மையிலயே பெரிய வித்தைதான்” என்று மீண்டும் பேச்சைத்
தொடங்கினேன் நான்.
“கல்லுலேருந்து
சாமி செல செய்றது, ஆம்பள செல செய்யறது, பொம்பள செல செய்யறது, யானை சிங்கம் செல செய்யறது,
கல்ல கொடஞ்சி மண்டபம் செய்யறதுலாம்தான் பெரிய வித்தை. அம்மி, உரலு, தொட்டி செய்யறதுலாம்
சின்ன வித்தைதான் சாமி……..” ஒருகணம் பேச்சை நிறுத்தி என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு
மறுபடியும் தொடர்ந்தார். ”ஆனா, கல்ல தொட்டு எது செஞ்சாலும் சரி, மனசுக்குள்ள குளுகுளுன்னு
காத்து அடிக்கறமாரி இருக்கும். மழ பெய்யறமாரி இருக்கும். எதுவுமே செய்யலைன்னா என்னமோ
புழுங்கிப்புழுங்கி இறுக்கறமாரி இருக்கும்……”
பல்லிமிட்டாய்கள்போல
சின்னச்சின்ன பிசிறுகள் கல்லைச் சுற்றி சிதறியிருப்பதைப் பார்த்தேன். கைநிறைய அவற்றை
அள்ளிச் சென்று கூட்டுக்காரர்களிடம் காண்பிக்கவேண்டும் என்று தோன்றியது.
“கல்லுல
ஒரு உருவத்த செய்யறமே, அது சின்ன மனுஷன பெரிய மனுஷனா மாத்தறதுமாரி. வெட்டவெட்ட உழுந்துகினே
இருக்குதுங்களே இந்த பிசிறுங்க, இதுங்கள்ளம் என்னா தெரிமா? புடிவாதம்ங்கற பிசிறு, ஆத்தரம்ங்கற
பிசிறு. திமிருங்கற பிசிறு. பொறாமைங்கற பிசிறு. அகங்காரம்ங்கற பிசிறு. அடங்காப்பிடாரிங்கற
பிசிறு. பேராசைங்கற பிசிறு. ஒவ்வொன்னயும் எடுத்துப்போட எடுத்துப்போட சின்ன மனுஷன் தானா
பெரிய மனுஷனாய்டுவான்………”
அவர்
சொன்னது எதுவுமே என் மூளையில் பதியவில்லை. ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் “ஆமா….. ஆமா”
என்று தலையாட்டினேன்.
“டேய்,….
அம்மா கூப்புடறது காதுல உழலியா? சீக்கிரம் ஓடு, இல்லன்னா ஒன் முதுவுல தொட்டி கட்டிருவாங்க……”
என அத்தை போட்ட சத்தம் என்னை இந்த உலகத்துக்கு இழுத்துவந்தது. “தோ வந்துட்டேம்மா…”
என பதில்குரல் கொடுத்துவிட்டு குளிக்கிற மறைப்புக்குள் புகுந்துவிட்டேன்.
நாலாவது
நாள் சாயங்காலத்துக்குள் முழுத்தொட்டியும் தயாராகிவிட்டது. பள்ளிக்கூடம் விட்டு போன
சமயத்தில் அம்மாவும் அப்பாவும் தொட்டியைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கு
மண்தொட்டியைப்போலவே இருந்தது கல்தொட்டி. அதே போன்ற விளிம்புகள். அதேபோன்ற வளைவுகள்.
அதே போன்ற ஆழம்.
விரலால்
உட்பக்கத்தைத் தொட்டு தடவிப் பார்த்த அம்மா ஆச்சரியத்தோடு “வழவழன்னு இருக்குது” என்றார்.
“மாடு
முட்டிடுமோ கன்னுக்குட்டி முட்டிடுமோன்னு பயந்துபயந்து செத்ததுக்கு ஒரு வெடிவுகாலம்
பொறந்துடுச்சி இன்னிக்கு…….” என்று நிம்மதியாக மூச்சுவிட்டாள் பெரிய அத்தை.
“பொக்கபொர
எதுவுமே இல்லயே. மாட்டுமுதுவ தடவிகுடுக்கறமாரியே இருக்குது…..” ஆயா தொட்டிக்குள் கையால்
தடவிப் பார்த்துவிட்டு சொன்னாள் ஆயா.
அவர்களுக்கு
நடுவே புகுந்து நானும் தொட்டியைத் தொட்டுப் பார்த்தேன். என் முழு கையையும் உள்ளே விட்டுத்தான்
தொட்டியின் அடிப்பகுதியைத் தொடமுடிந்தது. “சின்ன கெணறுமாதிரி இருக்குதும்மா” என்றபடி
அம்மாவுடன் ஒட்டிக்கொண்டேன்.
“கழுவறது,
தண்ணி மாத்தறதுலாம் கஷ்டமா இருக்காதா?” என்று கேட்டாள் சின்ன அத்தை. “இருக்காதும்மா”
என்றபடி முன்னால் வந்த தொட்டிக்காரர் தொட்டி அடிவிளிம்புமூலையைச் சுட்டிக் காட்டினார்.
”இங்க ஒரு தண்டு இருக்குதும்மா. இத இழுத்தா தெறந்துக்கும். மறுபடியும் போட்டுட்டா மூடிக்கும்”
என சொல்லிக்கொண்டே செய்துகாட்டினார். கல் என்றே சொல்லமுடியாதபடி பருத்த குச்சிபோலவே
இருந்தது அது.
மறுநாளே
அடுத்த தொட்டி செய்யும் வேலை தொடங்கிவிட்டது. பால் வியாபாரத்திலும் பள்ளிக்கூடத்திலும்
செலவழிக்கிற நேரத்தைத் தவிர மிச்சமிருக்கும் பொழுதுகளிலெல்லாம் தொட்டிக்கு அருகிலேயே
உட்கார்ந்திருந்தேன். ஒரு நாட்டியக்காரியின் கால்கள்போல வெட்டிரும்பின் கூர்மை கல்பரப்பில் நிகழ்த்திய அசைவுகள் கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது. தொட்டிக்காரரிடம் பேச்சும் பாட்டும் பொங்கிப்பொங்கி வந்தன. ”இது
அகங்காரச் சிரிப்பு, இது ஆனந்தச் சிரிப்பு, இது வஞ்சகச் சிரிப்பு, இது சங்கீதச் சிரிப்பு”
என்று சொல்லிவிட்டு விதம்விதமாக சிரித்துக் காட்டினார்.
பேச்சோடு
பேச்சாக ஒருநாள் தொட்டிக்காரர் என்னைப் பார்த்து “சின்ன சாமிக்கும் ஒரு தொட்டி செஞ்சி
தரட்டுமா?” என்று கேட்டார். எனக்கு சிரிப்பு வந்தது. “நான் என்னா கன்னுக்குட்டியா?
எனக்கு எதுக்கு தொட்டி?” என்று கேட்டேன்.
“குடிக்கற
தொட்டி இல்ல சாமி. குளிக்கற தொட்டி. குளிக்கிற தொட்டி” அவர் இரண்டுதரம் அழுத்தி அழுத்திச்
சொன்னார்.
“குளிக்கிறதுக்கு
தொட்டியா?” நம்பமுடியாமல் நான் அவரைப் பார்த்தேன்.
“வெள்ளக்காரனுங்கள்ளாம்
அப்பிடித்தான் குளிப்பானுங்க சின்ன சாமி. தொட்டிக்குள்ள தண்ணிய ஊத்தி வச்சிட்டு, உள்ள
எறங்கி உக்காந்துக்குவானுங்க. ஏரியில கொளத்துல இருக்கறாப்புல சில்லுனு இருக்கும்…….”
அவர்
வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை,. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கூடவே அப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்குமோ பிடிக்காதோ என்று அச்சமாகவும் இருந்தது. ”வேணாம் வேணாம். அப்பா
திட்டுவாரு…..” என்றேன்.
“நான்
என்ன ரகசியமாவா செய்யப் போறேன். அவர்கிட்ட சொல்லிட்டுதான் செய்வன். அதுல உக்காந்து
குளிக்கும்போது சின்னசாமி இந்த கருப்பன நெனச்சிக்கணும். அதான் என் ஆச” தொட்டிக்காரரின்
விழிநுனிகள் ஒருகணம் என்மீது படிந்து விலகின.
அசையும்
அவர் விரல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு மெதுவாக “அதுக்குலாம் பெரிய கல்லு
வேணுமே, எங்க கெடைக்கும்?” என்று கேட்டேன்.
“கெடைக்கும்
சின்னசாமி. அதலபாதாளத்துல இருந்தாலும் நான் கொண்டாந்திருவன்……. “
தொட்டியின்
வேலையை முடித்த அன்று வெளியே போய்விட்டு பொழுது இருட்டும் சமயத்தில்தான் திரும்பி வந்தார்.
அவருக்குப் பின்னால் ஒரு மாட்டுவண்டி நின்றது. வண்டிக்குள் பெரிய அளவில் ஒரு கல் இருந்தது.
ஏரிக்குள் ஆழங்கால் மதகுக்குப் பக்கத்தில் கிடைத்ததாகச் சொன்னார் அவர். “சொன்ன வேலைய
உட்டுட்டு சொல்லாத வேலயயெல்லாம் எதுக்கு செய்யற?” என்று அப்பா சலித்துக்கொண்டார். தடுத்து
நிறுத்தவில்லையே என்கிற அளவில் நிம்மதியாக இருந்தது.
வேலை
தொடங்கிய ஐந்தாறு நாட்களுக்குள்ளேயே குளியல் தொட்டியின் உருவம் பிடிபடத் தொடங்கியது.
தினம்தினமும் கனவுகள் மாறிமாறி வந்தன. நீர் நிறைந்த தொட்டிக்குள் உட்கார்ந்து குளிப்பதுபோல.
பாட்டு பாடுவதுபோல. தூங்குவதுபோல. பின்கட்டுக்குச் செல்ல நேரும் தருணங்களில் தொட்டியைத் தொட்டுப் பார்க்கும் ஆவலை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ளவே
முடியவில்லை.
தொட்டிக்காரரின்
பக்கத்தில் உட்கார்ந்து பேசத் தொடங்கினால் பொழுதுபோவதே தெரிவதில்லை. ஆரம்பத்தில் அவருக்கு
முன்னால் செல்ல தயக்கம் காட்டிய அத்தைகள்கூட, தயக்கத்தைத் துறந்து மிக இயல்பாகப் பேசத்
தொடங்கிவிட்டார்கள். அம்மா வேலைகளில் மூழ்கியிருக்கும் நேரங்களில் அத்தையே அவருக்கு
சோறு எடுத்துச் சென்று தயக்கமில்லாமல் போட்டுவிட்டுத் திரும்ப ஆரம்பித்தாள். சின்ன
அத்தையின் விடுகதைப் பைத்தியத்துக்கு சரியான போட்டி ஆளாக இருந்தார் தொட்டிக்காரர்.
அவர் போட்ட விடுகதையை ஒருநாளும் அத்தை விடுவித்ததே இல்லை.
இரண்டு
வாரமுடிவில் முழுத்தொட்டியும் தயாராகிவிட்டது. அரண்மனைகளிலும் கோவில்களிலும் அந்தக்
காலத்தில் இருந்த ரகசியப் பெட்டிபோல இருந்தது.
“கூழு
தொழாவி ஊத்தனா, நூறு எரநூறு பேரு குடிக்கலாம்……”
“சாமான்
அறைக்குள்ள வச்சிட்டா, தவிடு புண்ணாக்கு தீவனம்லாம் போட்டு வச்சிக்க வசதியா இருக்கும்……”
அத்தைகளின்
கேலிப்பேச்சைக் கேட்டு நான் அவர்களிடம் சண்டைக்குப் போனேன். ஆயா நடுவில் புகுந்து விலக்கிவிட்டார்.
உள்பக்கமும்
வெளிப்பக்கமும் எந்தப் பிசிறும் இல்லாதபடி வழவழப்பாக்குவதற்கு தொட்டிக்காரர் இரண்டு
நாட்கள் எடுத்துக்கொண்டார். அன்று சாயங்காலம் நான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய
சமயத்தில் “வாங்க சின்னசாமி, வாங்க” என்று புன்னகையோடு வரவேற்றார். என் தோளில் இருந்த
பையை வாங்கிக்கொண்ட அத்தைகள் சிரிப்பு பொங்க “போங்க சின்ன சாமி, போங்க” என்று பிடித்துத்
தள்ளினார்கள். கூச்சமும் மகிழ்ச்சியுமாக நான் தொட்டிக்குள் இறங்கி உட்கார்ந்தேன். என்
கழுத்து உயரத்துக்கு அளவெடுத்து வெட்டிவைத்தமாதிரி இருந்தது தொட்டி.
அத்தை
வேகவேகமாகச் சென்று ஆறேழு குடங்கள் தண்ணீரை எடுத்துவந்து தொட்டியில் ஊற்றினாள். அக்கணம்
கப்பலில் போவதுபோல, வானத்தில் பறப்பதுபோல, எப்படிஎப்படியோ கற்பனைகள் மனத்தில் மூண்டன.
அத்தை இன்னுமொரு குடம் தண்ணீரை எடுத்துவந்து மறுபடியும் என்மீது ஊற்றினாள். ஆயா, அம்மா,
அத்தை, தொட்டிக்காரர் எல்லோருமே ஓவென்று சிரித்தார்கள். ஆனந்தத்தில் “அச்சம் என்பது
மடமையடா, அஞ்சாமை திராவிட உரிமையடா” என்று கையை உயர்த்தி கத்த ஆரம்பித்தேன். அதைக்
கேட்டு எல்லோரும் மீண்டும் சிரித்தார்கள்.
“என்னா
ஒரே கூத்து இங்க? கோயிலு வாசல்வரிக்கும் கேக்குது ஒங்க சிரிப்பு சத்தம்……” என்றபடி
திடுதிப்பென்று அப்பா வந்து நின்றார். அந்தத் தருணத்தில் அவரை யாருமே எதிர்பார்க்கவில்லை.
அவர் குரலைக் கேட்டதும் சட்டென்று எல்லாம் அடங்கியது. கலவரத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.
பின்வாசலைக் கடந்து தொழுவத்தின் இறவாணத்தைப் பிடித்தபடி நின்றிருந்தார் அவர். வழக்கமாக
அவர் வருகையை அவருடைய செருப்புச் சத்தத்தை வைத்துக் கண்டுபிடித்துவிடும் அம்மா எல்லோரையும்
வழக்கமாக எச்சரித்துவிடுவார். அந்தப் பயிற்சியில் அவருக்கு பல வருஷத் தேர்ச்சி இருந்தது.
எப்படி அந்தச் சத்தத்தைக் கவனிக்கத் தவறினோம் என யோசித்துத் தடுமாறுவதை அவர் முகம்
காட்டியது. மெதுவாக அங்கிருந்து விலகி, வேலியோரம் அடர்ந்திருந்த கனகாம்பரச் செடிகளிலிருந்து
பூக்களைப் பறித்து மடியில் போட்டுக்கொள்ளத் தொடங்கினார். அங்கிருந்த பானைகளில் ஆளுக்கொன்றை
எடுத்துக்கொண்டு மூன்று அத்தைகளும் தொழுவத்துக்குள் சென்றார்கள். பக்கத்தில் இருந்த
தென்னைமரத்தைச் சுற்றி நீர் ஓட்டத்துக்காக வெட்டப்பட்டிருந்த வட்டமான பள்ளத்தில் படிந்துபோயிருந்த
வண்டலையெல்லாம் களைக்கொட்டால் இழுத்து ஒதுக்கி ஒழுங்குபடுத்த ஆரம்பித்துவிட்டார் ஆயா.
அம்பாரமாக சிதறிக் கிடந்த பிசிறுக் கற்களையெல்லாம் ஒரு கூடையில் வாரிச் சென்று ஓரமாகக்
கொட்டும் வேலையில் மூழ்கினார் தொட்டிக்காரர். தொட்டியைவிட்டு அவசரமாக எழுந்துவிட்டாலும்
எங்கேயும் போகத் தோன்றாமல் ஈரம் சொட்டச்சொட்ட தொட்டிக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தேன்
நான். சில கணங்கள் அங்கேயே நின்று எல்லாவற்றையும் பார்த்த பிறகு வெளியே போனார் அப்பா.
மறுநாள்
காலையில் வியாபார நேரம் முழுதும் என் மனம் குளியல் தொட்டியிலேயே பதிந்திருந்தது. நாலு சேர் பாலை எட்டு சேர் பாலென்றும் எட்டு சேர்
பாலை நாலு சேரென்றும் கணக்கெழுதுகிற அளவுக்கு என் எண்ணங்கள் திசைதிரும்பியிருந்தன.
அப்பா பார்க்காத நேரத்தில், கணக்குகளைத் திருத்தி எழுதினேன். அண்டாவில் மிச்சமிருந்த
பத்து சேர் பாலையும் மிதிவண்டியில் வந்து இறங்கிய பஞ்சாயத்துபோர்டு ஆளொருவர் வாங்கிக்கொண்டு
சென்றார். நான் நோட்டுகளை அப்பாவிடம் ஒப்படைத்தேன். பிறகு, வெற்று அண்டாவை கழுவுவதற்காக
ஓரமாக எடுத்துவைத்துவிட்டு, குளிப்பதற்காக பின்கட்டுக்கு ஓடினேன். போகும்போதே பொத்தான்களை
விடுவித்து சட்டையைக் கழற்றி வேலியோரம் போட்டேன்.
அத்தை
ஏற்கனவே எனக்காக குளியல்தொட்டியில் தண்ணீரை
நிரப்பி வைத்திருந்தாள். ”வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி….” என்கிற எங்கள் மனப்பாடச்
செய்யுள் தன்னிச்சையாக என் நெஞ்சில் மிதந்துவந்தது. அந்த வரிகளையே உல்லாசமாக முணுமுணுத்தபடி
தொட்டிக்குள் இறங்கி கால்நீட்டி உட்கார்ந்துகொண்டேன். மரத்தடியில் தொட்டிக்காரருக்கு
சோறுபோடும் அம்மாவைப் பார்த்தேன். இலையில் குவிந்திருந்த சோற்றுக்குவியலைப் பார்த்தேன்.
“ம்..ம்..” என்று என்னைப் பார்த்து புன்னகையாலேயே உற்சாகப்படுத்திய தொட்டிக்காரரைப்
பார்த்தேன். தலையை அண்ணாந்து சூரியனையும் பார்த்தேன்.
காற்றில் பறந்துபோகும் வேட்டிபோல தெரிந்த மேகங்களையும் பார்த்தேன். தென்னைமரத்தில்
காய்த்துத் தொங்கும் குலைகளைப் பார்த்தேன். பப்பாளி மரத்தில் தொங்கும் பழங்களைப் பார்த்தேன்.
எல்லாமே என் கண்களுக்குப் புதுசாகத் தெரிந்தது.
“பள்ளிக்கூடம்
கெளம்பற யோசனயே இல்லயா?” அம்மாவின் அதட்டலைக் கேட்ட பிறகுதான் அரைமனசோடு எழுந்து கீழே
இறங்கினேன். உடம்பைத் துவட்டிக்கொண்டு துணிமாற்றிக்கொண்டு தட்டில் வைக்கப்பட்டிருந்த
ஆப்பத்தைச் சாப்பிடத் தொடங்கிய சமயத்தில் அம்மாவை அழைத்த அப்பா, “சாப்ட்டு முடிஞ்சதும்
தொட்டிக்காரன இங்க வரச்சொல்லு….” என்று சொல்வது என் காதில் விழுந்தது. பசி அப்படியே
அடங்கிவிட்டதுபோல இருந்தது எனக்கு. ”ஒரு நிமிஷம், சொல்றத கேட்டுகினு போ. சலவையிலேருந்து
மூட்ட வந்துதே, அதுலேருந்து ரெண்டு வேட்டி துண்டுங்கள எடுத்துனு வா” என்று மறுபடியும்
அப்பாவின் குரல் கேட்டது. திண்ணை தெரிகிறமாதிரி
உட்கார்ந்தபடி, தட்டிலிருந்த ஆப்பங்களில் ஒன்றைமட்டும் விருப்பமில்லாமல் சாப்பிடத்
தொடங்கினேன்.
தொட்டிக்காரர்
வேலியைச் சுற்றிக்கொண்டு போய் திண்ணைக்குப் பக்கத்தில் நிற்பதைப் பார்க்கமுடிந்தது.
அவரைப் பார்த்து “சோறு சாப்ட்டியா?” என்று கேட்டார். ”ம் சாமி’ என்று தலையாட்டினார்
தொட்டிக்காரர். பின்கழுத்தில் வேர்வையைத் துடைத்துக்கொள்வதுபோல வெகுநேரம் துண்டைப்
போட்டு இழுத்துக்கொண்டே இருந்தார் அப்பா. திடீரென ஒரு கணத்தில் தொண்டையைச் செருமியபடி
“யாரோ சொல்லியனுப்பனாப்புல எங்களுக்கு தேவைப்பட்ட நேரத்துக்கு நீ வந்தத நெனச்சா ஆச்சரியமா
இருக்குது” என்று புன்னகைத்தார். தொட்டிக்காரர் அப்பாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். ”நீ பெரிய தொழில்காரன்தான். கையில சரஸ்வதிய வச்சிருக்கவனுக்குத்தான்
இதெல்லாம் வரும். அடுத்த தரம் எப்பனா இந்தப்
பக்கம் வந்தா ஒரு எட்டு எட்டி பார்த்துட்டு போ” என்று ஒருவழியாகச் சொல்லி முடித்தார்
அப்பா.
“கல்லு
இருக்குது. இன்னொரு தொட்டியும் செஞ்சிடலாம்…..” தொட்டிக்காரர் இழுத்தார். “வேணாம் வேணாம்,
செஞ்சதே போதும், உடு” என்று அவசரமாக மறுத்தார் அப்பா. அத்துடன் பேச்சு அங்கேயே தேங்கி
நின்றுவிட்டது.
“இன்னம்
என்ன செய்ற?” என்று அறைப்பக்கம் பார்த்து அம்மாவை அழைத்தார் அப்பா. சில கணங்களில் வேட்டி
துண்டு வெற்றிலை பாக்கோடு அம்மா திண்ணைக்குச் சென்றாள். அதை வாங்கி தொட்டிக்காரரிடம்
கொடுத்தார். அவர் குனிந்து வணங்கிவிட்டு அதை வாங்கிக்கொண்டார். அவர் முகத்தில் எந்தப்
பிரகாசமும் இல்லை. “இந்தா இதயும் வச்சிக்கோ” என்று சட்டைப் பையிலிருந்து நான்கு ஐந்து
ரூபாய்களை எடுத்துக்கொடுத்தார்.
‘வேணாம்
சாமி, இதுவே போதுங்க……” என்றார் தொட்டிக்காரர். அவர் குரல் நடுங்கியது.
“சொல்றத
கேளு. வச்சிக்க. காசி பணம் ஒதவறமாரி பங்காளிங்ககூட ஒதவமாட்டானுங்க…. வர லச்சுமிய வேணாம்ன்னு
சொல்லாத, இந்தா……”
தொட்டிக்காரர்
தயக்கத்தோடு அதை வாங்கி வைத்துக்கொண்டார். பிறகு, வேலிப்பக்கமாக மறுபடியும் தொட்டிக்காரர்
தோட்டத்துக்குச் சென்று, தன் தொழிலுக்குரிய சாமான்களையெல்லாம் வாரி சாக்குப்பைக்குள்
அள்ளிப் போட்டார். பிறகு சுருட்டி முதுகுப்பக்கமாக போட்டுக்கொண்டு ஒரே நிமிஷத்தில் திண்ணைக்கு வந்துவிட்டார்.
“வரங்க சாமி” என்று அப்பாவிடம் சொன்னபோது, அவர் “ம்…ம்” என்று தலையசைத்துக்கொண்டார்.
திரும்பி அம்மாவிடமும் “வரங்கம்மா” என்று குனிந்து கும்பிட்டுவிட்டு தெருவில் இறங்கிவிட்டார்.
அவர் கண்கள் என்னைத் தேடி திரும்பிப் பார்க்கக்கூடும் என்று ஆசையோடு காத்திருந்தேன்.
ஆனால், அவர் திரும்பிப் பார்க்காமலேயே போய்க்கொண்டிருந்தார். கோவில் மதில் தாண்டுகிறவரைக்கும்
அவர் முதுகு தெரிந்தது. அந்தத் திருப்பத்தில் அவர் மறைந்துபோனார். மனபாரத்தோடு நான்
திரும்பியபோது, அத்தைகளும் ஆயாவும் சுவரோரமாக கல்போல உறைந்துநின்று பார்த்துக்கொண்டிருப்பதைப்
பார்த்தேன்.
( உயிர்மை - 2014 )