அடுப்பாக நெருக்கிவைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக்கட்டியை வைத்த சாரதா ஐயனார் கோயில் இருந்த திசையின்பக்கமாக முகம்திருப்பி கண்மூடி ஒருகணம் வணங்கினாள். பிறகு திரும்பி தீக்குச்சியை உரசி கற்பூரத்தைச் சுடரவிட்டாள். உலர்ந்த மிளார்களை அதைச் சுற்றி அடுக்கி தீயை மூட்டினாள். அப்புறம் பொங்கலுக்கான பானையைத் தூக்கி அதன்மீது வைத்தாள்.
“வாங்க
சார், நாம போயி நம்ம வேலய பாக்கலாம்” எரியும் அடுப்பையே பார்த்தபடி இருந்த கணேசனிடம்
சொன்னார் பம்பைக்காரர். மணிபர்சையும் கைப்பேசியையும் எடுத்து சாரதாவிடம் கொடுத்த கணேசன்
சட்டையையும் பனியனையும் கழற்றி தாழ்வாகப் பிரிந்து சென்ற மரக்கிளையில் மாட்டினான். சாரதாவின் முதுகோடு ஒட்டியபடி தோளுக்கொரு பக்கமாக நின்றுகொண்டு கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருந்த சங்கரியையும்
மாலாவையும் பார்த்தான். இதேபோன்ற பொங்கல் நாள்களில்
அடுப்புக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அம்மாவின் முதுகோடு ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கு
முன்னால் பேசிச் சிரித்த குழந்தைப்பருவச் சித்திரங்கள் நினைவிலிருந்து வெடித்தெழ அவன்
கண்கள் கலங்கின. அடிவயிற்றில் நெருப்பின் அனல் ஒருகணம் பரவி அணைந்ததுபோல இருந்தது.
சிறிதுதொலைவு
நடந்து நிழல் அடர்ந்திருந்த முந்திரி மரத்தடியில் தரைமீது துண்டை விரித்து உட்கார்ந்தான்
கணேசன். பக்கத்தில் வேறொரு மரத்தின்மீது சாய்ந்தபடி பீடி புகைத்துக்கொண்டிருந்த இளைஞனொருவனிடம்
சென்ற பம்பைக்காரர் “செத்த நேரம்கூட அத இழுக்காம இருக்கமுடியாதா ஒன்னால? வந்துட்டாங்க
பாரு. போ, போ போயி சீக்கிரமா வேலய முடி…” என்று சொல்வது கேட்டது.
”இதோ
இதோ” என்று சொன்னபடி இளைஞன் கணேசனை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தான். அவசரமாக பீடித்துண்டை
எறிந்துவிட்டு, பையிலிருந்து ஹால்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்துப் பிரித்து வாயில் போட்டான்.
மரத்தடியில் சுருட்டிவைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு கணேசனின் பக்கமாக வந்தான். அவன்
எதிரில் பையை வைத்துவிட்டு அதிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்தான். வலதுகையைக்
குவித்து துளித்துளியாக ஊற்றி நிரப்பி கணேசனின் தலைமுடியைக் கலைத்து நனைத்தான். நாலைந்துமுறை
செய்தபிறகு அவன் தலைமுழுக்க ஈரமானது. புருவத்தின் ஓரமாக வழிந்த தண்ணீர் இமைக்குழியில்
இறங்கிய கணத்தில் கைவிரலால் தொட்டு உதறினான் கணேசன்.
“ஐனாரப்பன
மனசுல நல்லா நெனசிக்க சார்”
விழிகளை
உயர்த்தி அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயற்சி செய்துவிட்டுக் குனிந்தான் கணேசன்.
ஐயனாருக்குப் பதிலாக அம்மாவின் நினைவுகள் குவிந்தன. ஐயனாரிடம் முறையிடுவதற்கு அம்மாவிடம்
எப்போதும் ஏதாவது சில தேவைகள் இருந்துகொண்டே இருக்கும். ஏழு பெண்குழந்தைகளுக்குப் பிறகு
பிறந்த அவனையும் சேர்த்து, எட்டுப் பிள்ளைகள் இருந்த வீட்டில் யாருக்குக் காய்ச்சல்
வந்தாலும் “ஐனாரப்பா, எம் புள்ளய நல்லபடியா எழுந்து நடமாட வச்சிடுப்பா. வர அமாசைக்கு
ஒனக்கு படையல் வைக்கறேன்” என்று மஞ்சள் துணியில் காசுமுடித்து வைத்து விடுவாள்:. முடியிறக்குதல், பொங்கல்வைத்து சேவல்
பலிகொடுப்பது எல்லாம் தண்ணீர் பட்ட பாடு. “ஒனக்கும் வேலயில்ல, ஒன் ஐனாருக்கும் வேலயில்ல”
என்று அப்பா கிண்டல் செய்யாத நாளே இல்லை. வார்த்தைகளைத்தான் அப்படி இறைத்தாரே தவிர
பொங்கல்வைக்கக் கிளம்புகிற அன்றைக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் கச்சிதமாகச் செய்துவைப்பார்.
போய்வர வாடகைக்கார். சேவல். மாலைகள். பம்பை. தண்ணீர்வாளி. செம்பு. துணிமணிப்பெட்டி.
கூடை. அம்மாவின் மனசைப் படித்தமாதிரி எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒதுங்கிநின்று சிரிப்பார்.
தன்னுடைய மரணம்வரைக்கும் ஒருநாள்கூட அதற்காக அலுத்துக்கொண்டதே இல்லை. அதற்குப் பிறகு,
அந்த பம்பைக்காரரின் தொலைபேசி எண்ணை வாங்கிவைத்துக்கொண்டு அம்மாவே தனக்குத் தேவையான
ஏற்பாடுகளை செய்வித்துக்கொண்டாள். இதயத்தாக்குதலால் மயக்கமாகி விழுந்து மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு போனபோது தன் துக்கத்தை ஆற்றிக்கொள்ளும்
வழி தெரியாமல் அம்மாவுக்காக முதன்முதலாக ஐயனாரிடம் கோரிக்கை வைத்தான் கணேசன்.
படுக்கையிலிருந்து
ஸ்ட்ரெச்சருக்கு மாற்றிய சமயத்தில் அம்மாவின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. அவை ஒரே கணத்தில்
தளும்பிக் குளமாவதைக் கவனித்தான். ஆழ்மனம் தன் கோரிக்கையை ஐயனாரிடம் மீண்டும்மீண்டும்
முன்வைத்தபடி இருக்க, அம்மாவை நெருங்கி அவள் விரல்களைப் பற்றி வருடித் தந்தான்.
உச்சியிலிருந்து
மழிக்கப்பட்ட முடிக்கற்றைகள் கொஞ்சம்கொஞ்சமாக முன்னால் வந்து விழுந்தன.
கும்பல்கும்பலாக
காணிக்கை ஆடுகளோடு ஐயனார் கோயிலைநோக்கி பலரும் நடந்துகொண்டிருந்தார்கள். நடக்க மறுக்கும்
ஆடுகளைப் பின்னால் நின்று தள்ளித்தள்ளி நடக்கவைத்தார்க:ள் சிறுவர்கள். பம்பைகளின் ஒலியால்
முந்திரிக்காடு அதிர்ந்தது.
தலையை
மழித்தபிறகு , காதுமடலோரம் முளைத்திருந்த முடிகளை கத்தியாலேயே மெல்ல வருடி அப்புறப்படுத்திய
பிறகு இளைஞன் “தலய நிமித்து சார்” என்றான். தன் விரலை மீண்டும் தண்ணீரில் நனைத்து மீசைமுடியில்
தடவியபடி “ஒதட்ட மடிச்சிக்க சார்” என்று சொல்லிக்கொண்டே கத்தியை மீசைக்கருகில் எடுத்துச்
சென்றான்.
அம்மாவுக்கு
எழுபத்தைந்து வயது என்று சொன்னால் யாருக்கும் நம்பிக்கை வராது. ஒடிசலான தோற்றம் என்றாலும்
உறுதியாகவே இருந்தது அவள் உடல். கருமையும் நரையும் கலந்த முடியைக் கொண்டையாகப் போட்டிருப்பாள்.
விபூதி வைத்த நெற்றி. காதில் ஒரு தோடு. கழுத்தில்
பட்டையான ஒரு சங்கிலி. வீட்டுவேலை பார்த்து, வீட்டோடு இருந்த கனகாம்பரம் தோட்த்துக்கு
தண்ணீர் விட்டு, கீரைப்பாத்தியில் களையெடுத்து, பன்றிகள் ஊடுருவி அகலமாக்கிவிட்டுப்
போன வேலிக்கு மறைப்பு கட்டி, காற்றில் உலர்ந்த துணிமணிகளின் ஓரம் நீவி மடித்துவைத்து
என ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பாள்.
எந்தக்
குழந்தையாக இருந்தாலும், பார்த்ததுமே அதன் கன்னத்தைத் தொட்டெடுத்த விரல்களை முத்தமிட்டுச்
சிரிக்கும் அம்மாவின் பாணியை நினைத்துக்கொண்டான் கணேசன். “ஒன் வெரலுக்கு நீயே முத்தம்
குடுத்துக்கறியே, என்னம்மா இது?” என்று சின்ன வயதில் ஒருமுறை கேட்டபோது ”ஒனக்கும் ஙொப்பனுக்கும்
நான் என்ன செய்யறன்னு கவனிக்கறதே வேலயா போயிடுச்சி, போடா அந்தண்ட” என்று தள்ளிவிட்டாள்.
“அப்ப என் கன்னத்தயும் கிள்ளி ஒரு முத்தம் குடு” என்று சிணுங்கியபடி மீண்டும் நெருங்கிச்
சென்று நின்றான். “கிட்ட வந்த வெறவுக்கட்டயாலதான் குடுப்பேன். ஒழுங்கா போயி படிக்கற
வேலைய பாரு” என்ற அவள் அதட்டலைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் நின்ற இடத்திலேயே நின்றபடி
அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு மெதுவாக அவளே மனமிரங்கி வந்து, “எதுக்குடா
இப்பிடி ஒட்டாரம் புடிக்கற? அப்பன் புத்தி அப்படியே இருக்குது பாரு” என்று சொல்லிக்கொண்டே
அவன் கன்னத்தைக் கிள்ளியெடுத்து, அந்த விரல்களை
முத்தமிட்டாள்.
“எழுந்துக்க
சார்.”
அந்த
இளைஞன் பின்வாங்கி பாட்டிலில் மிச்சமிருக்கிற தண்ணீரால் தன் கையைச் சுத்தமாக்கிக்கொண்டான்.
சாரதாவிடம் சென்று நூறு ரூபாயை வாங்கி அவனிடம் தந்தான் கணேசன். “கோயில் மொட்ட சார்.
இன்னும் கொஞ்சம் போட்டுக் குடு சார்” என்று கேட்டான் அவன். பம்பைக்காரர் நடுவில் புகுந்து
“போடா போடா…. எல்லாம் சரியாத்தான் குடுத்திருக்குது. எவ்ளோ குடுத்தாலும் வெடியாதுடா
ஒனக்கு……” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
“அப்பா,
ஒனக்கு மொட்ட நல்லாவே இல்ல” என்று சங்கரி சிரித்தாள். “ எதுக்குப்பா மீசய எடுத்த? மீச
இல்லாம ஆபீஸ்க்கு எப்படிப்பா போவ?” என்று கேட்டாள்
மாலா. பதில் சொல்லாமல் இரண்டு பேர் கன்னங்களிலும் கிள்ளி மெதுவாக முத்தமிட்டான் கணேசன்.
அவன் செய்கை அவர்களுக்கு ஆச்சரியமளிப்பதாக இருந்தது.
“குளிச்சிட்டா
மத்த வேலய பாக்கலாம்” நினைவூட்டிய பம்பைக்காரர் பூமாலைகள் கொண்டுவந்த பொட்டலங்களைப்
பிரிக்க உட்கார்ந்தார். பல வருடத்துப் பழக்கம். பொங்கல்வைக்கப் புறப்படுகிற தருணங்களில்
முதலில் அவருக்குத்தான் போன் போட்டுச் சொல்வாள் அம்மா. அவளுடைய நோட்டிலிருந்துதான்
அந்த எண்ணைத் தேடியெடுத்துப் பேசி ஏற்பாடுகளுக்கான தகவலைச் சொல்லியிருந்தான் கணேசன்.
அறுவை
சிகிச்சையின்போது எதிர்பாராத விதமாக ரத்த அழுத்தம் உயர்ந்து ஏதோ புதுவகையான சிக்கல்
முளைத்துவிட்டது. மருத்துவர்களுக்கே புரியாத சவால். மூன்று நாள் ஆழ்கவன சிகிச்சைப்
பிரிவிலேயே வைத்திருந்தார்கள். அவள் உடல்முழுக்க குழாய்களைச் செருகியிருந்தார்கள்.
மருந்து, உணவு, காற்று எல்லாமே குழாய்கள்வழியாகவே சென்றன. கண் திறக்காத அம்மாவின் முகம்
ஒரு கற்சிலைபோல இருந்தது. ஆறாவது நாள் காலையில் அவள் உயிர் பிரிந்துவிட்டது. அவள் உடலைப்
பெற்றுக்கொண்டபோது அவன் உடல் துடித்தது. நம்பவே முடியாமல் அவள் முகத்தை மனம்பொங்கப்
பார்த்தபடி நின்றாள். மெதுவாக அவளை நெருங்கி
அவளுடைய விரல்களை எடுத்து தன் விரல்களுடன் வைத்து அழுத்தி வருடித் தந்தான். மனத்தில்
திடீரென வெறுமை கவிந்தது. அடுத்தநாள் அவள் உடல் எரிந்து சாம்பலானது.
உடலைத்
துவட்டிக்கொண்ட பிறகு, புதிய உடைகளை அணிந்தான் கணேசன். அவனை உட்காரவைத்து குழையக்குழைய
சந்தனத்தை வாரி, அவன் தலையில் மெதுவாகத் தடவிவிட்டாள் சாரதா. அதன் குளுமை இதமாக இருந்தது.
”இந்தாங்க,
இத போட்டுக்குங்க” மாலையொன்றை அவனிடம் நீட்டிக்கொண்டே சொன்னார் பம்பைக்காரர்.
தாம்பாளத்தட்டில்
மாவுவிளக்கைப் பிசைந்து உருட்டி வைத்திருந்தாள் சாரதா. நடுவில் குழியாக்கி எண்ணெயை ஊற்றி விளக்குத் திரியை
அதற்குள் வைத்தார் பம்பைக்காரர். பூ, பழம், வெற்றிலை, பாக்கு, வத்தி, குங்குமம், எலுமிச்சம்பழங்கள்
எல்லாவற்றையும் எடுத்து தட்டுநிறையப் பரப்பினார். பிறகு கணேசனை நிமிர்ந்துபார்த்து
பார்வையாலேயே தட்டை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
தட்டைத்
தொட்டபோது அவன் மனம் துடித்தது. அடிவயிற்றிலிருந்து ஒரு துக்கம் பொங்கி நெஞ்சில் மோதியது.
இதேபோல ஒரு தட்டைச் சுமந்து சுடுகாட்டுக்கு நடந்து சென்ற நாளின் நினைவுகள் மிதந்துவந்தன.
தனது உடல் தனக்கே பாரமாக இருப்பதுபோல இருந்தது.
பம்பைக்காரர்
முள்வேலியோரமாக கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய சேவலைத் தூக்கிவந்து சங்கரியிடம் கொடுத்து
வைத்துக்கொள்ளச் சொன்னார். பந்தயத்தில் கிடைத்த வெற்றிக்கோப்பையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொள்வதுபோல
அந்த சேவலை அணைத்துக்கொண்டாள் சங்கரி. சேவலின் தலையை நிமிர்த்தி, ஒரு சின்ன மல்லிகைச்
சரத்தைத் தொங்கவிட்ட பம்பைக்காரர் அதன் நெற்றியில் மஞ்சளைத் தடவி குங்குமப் பொட்டொன்றை
வைத்தார். .
பொங்கல்
பானையை ஒரு கூடைக்குள் வைத்து எடுத்துக்கொண்டாள் சாரதா. கொண்டுவந்த சாமான்களையெல்லாம்
மறக்காமல் தேடியெடுத்து ஒரு பெரிய பைக்குள் நிரப்பி எடுத்துக்கொண்டாள் மாலா. பம்பையொலி
நான்கு பக்கங்களிலும் சிதறி அதிர்ந்தது.
கணேசனும்
சாரதாவும் இரண்டு பிள்ளைகளும் சின்னக் குழுவாக முந்திரிக்காட்டில் நீண்ட ஒற்றையடிப்பாதையில்
நடந்தார்கள். எங்கோ ஒரு கிளையிலிருந்து ஒரு குயில் கூவும் சத்தம் கேட்டது. அந்தக் குரல்
கணேசனைச் சிலிர்க்கவைத்தது. ஒருகணம் விழிகளைத் திருப்பி சத்தம் வந்த திசையில் அந்தக் குயிலைத் தேடினான்.
அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவன் எண்ணத்தை உணர்ந்த சங்கரி ஒருகணம் திரும்பி நின்று உற்று உற்றுப் பார்த்து
அந்தக் குயிலைக் கண்டுபிடித்தாள்.
“அப்பா,
அங்க பாரு. அதோ அந்த கெள ரெண்டா பிரியுதே,
அதுக்குக் கீழ பாரு…….”
குயிலின்
இருப்பிடத்தை அவள் துல்லியமாக வரையறுத்துக்
காட்டினாள். அதைக் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினான் கணேசன். ”எங்க சங்கரி?” என்றபடி
அவன் விழிகள் அலைபாய்ந்தன. “அங்க, அங்க பாருப்பா” என்றபடி அவன் கன்னத்தைத் தொட்டு ஒரு
குறிப்பிட்ட கோணத்தில் மரத்தின்பக்கம் திருப்பினாள். அப்போதும் அவனால் அதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
“போப்பா, ஒனக்கு ஒன்னுமே தெரியல…” என்று சிணுங்கியபடி ஒதுங்கினாள் சங்கரி. அந்தக் குயிலின்
அழைப்புமட்டும் நிற்கவே இல்லை. அது காதில் விழவிழ, அது தன் அம்மாவின் அழைப்பு என நம்ப
விரும்பினான் கணேசன்.
தன்
வேண்டுதலைப்பற்றிய விஷயத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் பேச்சோடு பேச்சாக சாரதாவிடம்
சொன்னான் கணேசன். அதைக் கேட்டு ஆச்சரியமாகப் பார்த்தாள் சாரதா.
“இதுலயெல்லாம்
நம்பிக்கயே இல்லைன்னு சொல்விங்க. அப்பறம் எப்படி இந்த மாதிரி?” என்று கேட்டாள்.
“இப்பவுமே
எனக்கு நம்பிக்கை இல்ல சாரதா. என்னமோ அந்த நேரத்துல அப்படி தோணிச்சி. ஏதாச்சிம் நடந்து
பொழச்சி வந்துடமாட்டாங்களான்னு ஒரு நப்பாச. சட்டுனு வாய்ல வந்துட்டுது. வேண்டிகிட்டேன்.”
கணேசன் நாக்கைச் சப்புக்கொட்டியபடி புன்னகைத்தான்.
“சிரிக்கிற
விஷயம் கெடையாதுங்க இது. சாமி விஷயம். காணிக்கைனு
சொல்லிட்டப்பறம் கண்டிப்பா செஞ்சிதான் ஆவணும்…” சுவரில் தொங்கிய காலண்டர் ஓவியத்தைப்
பார்த்தபடி இருந்தவனின் முகத்தை தன் பக்கமாகத் திருப்பி பொறுமையாக எடுத்துச் சொன்னாள்
சாரதா.
“அதான்
நடக்கலயே சாரதா? அப்புறம் எதுக்கு காணிக்கை?” அவன் அப்பாவித்தனமாகக் கேட்டான்.
சாரதா
ஒருகணம் பதில் எதுவும் பேசாமல் அவன் விழிகளையே உற்றுப் பார்த்தாள். பிறகு “ இது என்னங்க
பிசினெஸ் டீலா? நீ ஒன்னு குடுத்தா நான் ஒன்னு குடுக்கறேன்ங்கற மாதிரி பேசறிங்க? இது
வேண்டுதல். நடந்தாலும் சரி, நடக்காட்டாலும் சரி, சொன்னபடி செய்யறதுதான் குடும்பத்துக்கு
நல்லது….” என்று கவலையோடு சொன்னாள். அதையே தொடர்ந்து பல நாட்களாக எடுத்துச் சொல்லி
சம்மதிக்கவைக்க முயற்சி செய்தாள்.
ஏழெட்டு
மாதங்கள் கடந்துபோன நிலையில் ஒருநாள் சாரதா தூங்கும்போது கெட்டகெட்ட கனவுகள் வந்துகொண்டே
இருப்பதாகவும் சாமிக்கு செலுத்தவேண்டிய காணிக்கையைச் செலுத்தாமல் பாக்கிவைத்திருப்பதால்தான்
இப்படியெல்லாம் தோன்றுவதாகச் சொல்லி அழுதாள். “ரெண்டு பொட்ட புள்ளைங்க வச்சிருக்கம்.
ஆளுமொகம் தெரியாத ஊருல ஏதாச்சிம் திடீர்னு ஒன்னு கடக்க ஒன்னு ஆச்சினா என்ன செய்ய முடியும்? என்று அடிக்கடி புலம்பத் தொடங்கினாள். இனிமேல் தவிர்க்கமுடியாது
என்று தோன்றிய ஒரு கட்டத்தில்தான் அவள் விருப்பத்துக்கு இசைந்து போனான் கணேசன். அக்காமார்களுக்கெல்லாம்
தகவல் சொல்லி ஒருங்கிணைக்கும் அளவுக்கு நேரமும் விடுப்பும் இல்லாததால் சட்டென்று தன்
குடும்பத்தோடு மட்டும் கிளம்பும்படி நேர்ந்தது.
“தட்ட
பூசாரிகிட்ட குடுங்க….” தோளை இடித்து சாரதா சொன்னபிறகுதான் சுய உணர்வுக்கு வந்தான்
கணேசன். இடைவிடாமல் ஒலித்தபடி பின்தொடர்ந்து வந்த குயிலின் குரலைக் கேட்டு அவன் மனம்
குலுங்கியது.
பிள்ளையார்
முன்னால் தட்டைவைத்துவிட்டு தேங்காயை உடைத்தார் பூசாரி. எலுமிச்சைகளை அரிந்து குங்குமத்தை
அப்பி தேங்காயைச் சுற்றிவைத்தார். பிறகு கற்பூரம் ஏற்றி பூசை செய்தார். தட்டோடு வெளியே
வந்து எல்லோருடைய நெற்றியிலும் குங்குமத்தைப் பூசிவிட்டார். பிறகு சேவலின் நெற்றியிலும்
குங்குமத்தைத் தேய்த்தார். தட்சணையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து எல்லோரும் கிளம்பினார்கள்.
வேறொரு
பாதையில் அவர்கள் நடை தொடர்ந்தது. பம்பைக்காரர் முழங்கியபடி முன்னால் நடந்தார்.
கணேசன்
தனக்குள் அழுகை திடீரென குமுறிக்கொண்டு வருவதைப்போல உணர்ந்தான். நெஞ்சம் விம்மியது.
அம்மாவின் முகம் தன் நெஞ்சில் விரிவடைந்தபடி செல்வதுபோல இருந்தது. அந்தக் கண்கள். அந்தக்
கன்னம். விபூதிக்கீற்று பொலியும் அவள் நெற்றி. அம்மா என்று அவன் ஆழ்மனம் கூவியது. பைத்தியம்
பிடித்ததுபோல இருந்தது.
குயிலோசை
அந்தப் பாதையிலும் கேட்டது. தலையைத் தயக்கத்தோடு திருப்பி அதைப் பார்க்க முயற்சி செய்தான்.
“அப்பா, இது வேற குயிலு. அங்க இருக்குது பாரு” என்று திசையைக் காட்டினாள் சங்கரி. அந்தச்
சொற்கள் அவன் நெஞ்சில் உறைக்கவே இல்லை. அந்த ஓசை ஓர் அருவியாகப் பொங்கி அவன் நரம்புகளில்
நுழைந்து வழிவதுபோல உணர்ந்தான்.
சங்கரியின்
கையிலிருந்த சேவலை வாங்கிச் சென்று வீரனின் முன்னால் பலிபீடத்தின் அருகில் நின்றிருந்தவரிடம்
கொடுத்தார் பம்பைக்காரர். அவருடைய கையிலிருந்த கூரான அரிவாளால் வெட்டுப்பட்ட சேவல்
தலை ஒருபக்கம் உடல் ஒருபக்கமாக விழுந்தது.
வெட்டவெளியில்
ஒரு மரத்தின் உயரத்துக்கு கம்பீரமாக வடிக்கப்பட்டிருந்த ஐயனார் முன் வந்து நின்றார்கள்.
பூரணி, பொற்கலையோடு ஐயனார் செவ்வாடைக் கோலத்தில் உட்கார்ந்திருந்தார். அருகில் வெள்ளைக்குதிரைகளை
வீரன் பிடித்திருந்தான்.
பூசாரியிடம்
பொங்கல்கூடையைக் கொடுத்தாள் சாரதா. ஊர்விவரமும் பேர்விவரமும் சொன்னாள். உடனே பூசாரி,
“படயாச்சிம்மா குடும்பமா? சரிசரி, அம்மா வரலையா?” என்று கேட்டாள். சாரதாவுக்கு துக்கம்
தொண்டையை அடைத்தது. “அம்மா தவறிட்டாங்க…” என்று முணகினாள். “தங்கமான மகராசியாச்சே.
ம். நம்ம கையில என்ன இருக்குது தாயி. எல்லாம் அவன் எழுதற எழுத்து” என்றபடி ஓங்கிய குரலில்
பாடத் தொடங்கினார். பம்பையொலியும் அதற்கிணையாக உச்சத்துக்குச் சென்றது. கூடையிலிருந்த
மாலைகளை ஒவ்வொன்றாக எடுத்து ஐயனாருக்கும் பூரணி பொற்கலைக்கும் அணிவித்தார். தட்டுக்குள்
தேடிப் பார்த்துவிட்டு “சாராயம் வைக்கலியா?” என்று கேட்டார் பூசாரி. பம்பைக்காரர் தலையைச்
சொரிவதைப் பார்த்துவிட்டு “சரி சரி தட்டுல பத்து ரூபா போடு” என்று கட்டளையிட்டுவிட்டு
பாட்டைத் தொடர்ந்தார். சாரதா அவசரமாக பத்து ரூபாய்த்தாளை எடுத்து தட்டில் வைத்தாள்.
பூசை
முடிந்து வெளியே வந்ததும் கூடையோடும் தட்டோடும் மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். எடையற்ற
இறகுபோல தன்னை உணர்ந்தான் கணேசன். அவன் மனம் கரைந்து உருகியிருந்தது. தன் அம்மாவின்
இருப்பை அந்த இடத்தில் அவனால் உணரமுடிந்தது. மறுகணமே அந்த எண்ணம் உண்மைதானா என்ற கேள்வி
முளைத்துக் குழப்பி அலைக்கழித்தது.
சூரியன்
இன்னும் உச்சியிலேயே இருந்தது. வெளிச்சத்தில் கண்கள் கூசின.
தனக்கு
மிகவும் பழக்கமான இடத்தில் இருப்பதுபோல நினைத்தான் கணேசன். பால்ய காலத்தில் ஓடிவிளையாடிய
இடம். அம்மாவின் கையைப் பிடித்து நடந்த இடம்.
அம்மாவின் மடியில் உட்கார்ந்திருந்த இடம். அம்மா முத்தங்களாகப் பொழிந்த இடம்.
எதிர்பாராத
கணத்தில் வெப்பத்தின் கடுமை குறைந்து குளுமையைச் சுமந்துவந்து மோதியது காற்று.
”மழ
வந்தாலும் வரும்மா. மேற்குப் பக்கமா கருகருன்னு மேகம் கட்டுது பாருங்க. சீக்கிரமா நடங்க….”
பம்பைக்காரர் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் சொன்னார்.
அம்மாவின்
மூச்சுக்காற்று தன்மீது மோதியதுபோல உணர்ந்தான் கணேசன். தன் குரலோடும் மூச்சோடும் அம்மா அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறாள்
என்று தோன்றியது. நாலைந்து காணி சதுரப் பரப்பளவுகூட இல்லாத அந்த முந்திரித் தோப்புக்கிடையே
அம்மாக்களும், அம்மாக்களின் அம்மாக்களும், அவர்களுடைய அம்மாக்களுமாக காலம் காலமாக காத்துக்கொண்டிருக்கிறார்களோ
என நினைத்தான். ஒருகணம் அவன் உடல் சிலிர்த்தது.
அவர்களைப்
பார்த்ததும் கார் டிக்கியைத் திறந்தான் டிரைவர். கூடையையும் தட்டையும் பையையும் வாங்கி
கச்சிதமாக அடுக்கி மூடினான். பையிலிருந்து பணத்தை எடுத்து பம்பைக்காரருக்குக் கொடுத்தாள்
சாரதா.
“அடிக்கடி
வந்து போங்கம்மா. எங்க இருந்தாலும் குலதெய்வத்த மறக்காதிங்கம்மா. குலதெய்வம் கூட இருந்தா
பெத்த அம்மாவே கூட இருக்கறமாதிரி” பம்பைக்காரர் வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றார். கணேசன்
தன் பிரக்ஞையிலிருந்து மீளாதவனாகவே வணங்கி
விடைகொடுத்தான்.
கூட்டம்கூட்டமாக
அந்தப் பாதையில் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். காரின் முன்கதவைத் திறந்து
சங்கரியும் மாலாவும் உட்கார்ந்தார்கள்.
கார்
நிறுத்தப்பட்டிருந்த மரக்கிளையிலிருந்து ஒருகணம் குயில் கூவும் சத்தம் கேட்டது.
”அப்பாவ
இன்னும் குயிலு தேடிகிட்டே இருக்குது” பிள்ளைகளின் கேலிக்குரலைக் கேட்டு பின்னிருக்கையில்
ஏறிய கணேசன் புன்னகைத்தான். அதற்குள் குயிலின் இடத்தைக் கண்டுபிடித்துவிட்ட சங்கரி,
“அப்பா, அங்க பாரு, அங்க பாரு” என்று விரல்நீட்டிக் காட்டினாள். அவனும் தன் முயற்சியைக்
கைவிடாமல் ஜன்னல் வழியாக உற்று உற்றுப் பார்த்தான். அவன் பார்வைக்கு அது புலப்படவே
இல்லை. உதட்டைப் பிதுக்கி தலையை அசைத்தான். அந்த ஓசையைமட்டும் உள்வாங்கி நிரப்பிக்கொண்டே
இருந்தது அவன் நெஞ்சம்.
“பாரும்மா…
அப்பா ரொம்பதான் நடிக்கறாரு….” நம்ப முடியாத சங்கரி சிணுங்கியபடி சாரதாவிடம் புகார்
சொன்னாள். “போதும் விடுங்கடி அவர. பாவம்டி அவரு. அந்த மாதிரிலாம் நடிக்கத் தெரியாத
ஆளுடி அவரு. அவர போயி அப்படி சொல்லலாமா?” என்று அவனுக்காகப் பரிந்துபேசி அவர்களை அடக்கினாள்
அவள். அவள் முகத்தில் கலகலப்பும் பரவசமும் திடீரெனப் பெருகியதுபோல இருந்தது. அவளையே
கண்கொட்டாமல் பார்த்தான் கணேசன். ”என்ன பாக்கறிங்க?
நான் சொல்றது உண்மதான?” என்றபடி ஒருகணம் அவன் கன்னத்தைக் கிள்ளி தன் உதட்டருகே கொண்டுசென்று
முத்தமிட்டாள்.
உடல்சிலிர்க்க
ஒருகணம் உறைந்து, மறுகணமே உள்புறமாக நகர்ந்து இடமொதுக்கிக் கொடுத்தான் கணேசன். புடவையைக்
கவனமாகத் தாங்கிப் பிடித்தபடி குனிந்து இருக்கையில் அமர்ந்த பிறகு கதவை மூடிய சாரதா,
கார் கிளம்பியதற்கப்புறம் அவன் கையைப் பற்றியெடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டாள்.
(ஆனந்த விகடன் – 2012)