முதல் உலகப்போரின் முடிவில் 05.06.1918 அன்று பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜும் இந்திய வைசிராயும் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டனர். பிரிட்டன் அரசு ஒருபோதும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்காது என்றும் துருக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் துருக்கியிடமிருந்து கைப்பற்றப்படமாட்டாது என்றும் இஸ்லாமியப் புண்ணியத்தலங்கள் இஸ்லாமியர்கள் நிர்வாகத்தின் கீழேயே தொடர்வதில் எவ்விதமான இடையூறும் இருக்காது என்றும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் போர் முடிவடைந்ததும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் பிரிட்டன் அரசு துருக்கியின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிக்க முனைந்தது. துருக்கியின் ஆசியப்பகுதிகளை பிரிட்டனும் பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டன.
இந்திய இஸ்லாமியர்கள் அந்த
முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட
முகம்மது அலியும் செளகத் அலியும் இணைந்து 1919இல் இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத்
தொடங்கினர். அந்த இயக்கத்துக்கு காந்தியடிகள் தன் ஆதரவைத் தெரிவித்து மேடைகளில் உரையாற்றினார்.
கிலாபத் இயக்கத்தின்போது தமிழ்நாட்டில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் தாம் வகித்துவந்த நகர்மன்ற
கவுன்சிலர்கள் பதவியையும் கெளரவ நீதிபதி பதவியையும் துறந்தனர். ஏறத்தாழ ஐநூறு இஸ்லாமிய இளைஞர்களைக்
கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு தஞ்சையை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கியது.
போர்க்காலத்தில் பிரிட்டன்
அரசு இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் போர் முடிவடைந்த பிறகு மறந்துவிட்டது.
இந்தியாவில் சுயராஜ்ஜியக் கோரிக்கையும் அதற்குரிய போராட்டமும் வலுக்கக்கூடும் என்பதை
உணர்ந்து, அதை எதிர்கொள்வதற்கு தன்னைத் தயாரித்துக்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக
ரெளலட் சட்டத்தை இயற்றியது.
ரெளலட் சட்டத்தை சத்தியாக்ரக
முறையில் எதிர்க்கத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் காந்தியடிகள். சத்தியாக்ரகப்
போராட்டத்தில் பங்கேற்க விழைபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை ‘சத்தியாக்ரகி உறுதிமொழி’
என்று அவரே உருவாக்கி வழங்கினார். 09.03.1919 அன்று, இந்தியாவிலேயே முதல்முதலாக ரெளலட்
சட்டத்தை எதிர்த்து சென்னையில்தான் கண்டனக்கூட்டம் நடைபெற்றது. வ.உ.சி.யும் சத்தியமூர்த்தியும்
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர். உடல்நிலை நலிவுற்றிருந்த போதும், அதைப்
பொருட்படுத்தாமல் 18.03.1919 அன்று சென்னைக்கு வந்த காந்தியடிகள், அன்றே திருவல்லிக்கேணி
கடற்கரைத் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு சத்தியாக்ரகப் போராட்டத்தைப்பற்றி
விரிவாக மக்களிடையே உரையாற்றினார்.
சுற்றுப்பயணத்தின் ஒரு
பகுதியாக 24.03.1919 அன்று காந்தியடிகள் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். வி.பி.மாதவராவ்
தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். சத்யாக்ரக உறுதிமொழி பற்றி
காந்தியடிகள் விரிவாக எடுத்துரைத்தார். உறுதிமொழி எடுத்துக்கொள்பவர்கள் பிறருடைய உயிருக்கோ
உடமைக்கோ எந்த அபாயமும் விளைவிக்கக் கூடாது என்பதை உணரவேண்டும் என்றெல்லாம் சத்தியாகிரகத்தில்
கவனிக்கவேண்டிய அடிப்படையான அம்சங்கள் அனைத்தையும் அவர் விளக்கி உரையாற்றினார். அந்த
நடத்தை விதிகளை ஏற்றுக்கொள்பவர்கள் கையெழுத்து போடுவதற்காக அனைவருக்கும் உறுதிமொழிப்பத்திரங்கள்
வழங்கப்பட்டன. அக்கூட்டத்தில் பெருமளவில் இஸ்லாமியர்களும் ராஜகிரியைச் சேர்ந்த வணிகர்களும்
கலந்துகொண்டனர். அன்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சத்தியாக்ரக உறுதிமொழியில் கையெழுத்திட்டு
நேரிடையாகவே காந்தியடிகளிடம் அளித்தனர். வழக்கறிஞரான யாகூப் ஹசன் என்பவரும் அவர்களில்
ஒருவர். சென்னை மாகாண காங்கிரஸ் குழுவில் அவர்
ஒரு முக்கிய உறுப்பினர். 1916இல் லக்னோவில் கூடிய காங்கிரஸ் மகாசபை கூட்டத்திலும்
1917இல் கல்கத்தாவில் கூடிய கூட்டத்திலும் 1918இல் பம்பாயில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்திலும்
அதே ஆண்டில் டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அனுபவம் உள்ளவர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக
பல இடங்களில் அமைதியான வழியில் கடையடைப்பு நடைபெற்றது. பொதுக்கூட்டங்களும் ஊர்வலங்களும்
நாடெங்கும் தொடர்ச்சியாக நடைபெறத் தொடங்கின. யாகூப் ஹசன் நல்ல பேச்சுவன்மை உள்ளவர்.
அவருடைய மேடைப்பேச்சுக்கு கூட்டத்தில் உள்ளவரை ஈர்க்கும் ஆற்றல் இருந்தது. அவர் உரையாற்றும்
ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பஞ்சாபில் 29.03.1919 அன்று
ஜாலியன் வாலாபாக் திடலில் பெரிய அளவில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. காந்தியடிகளின்
கட்டளைக்கேற்ப சத்தியாக்ரக வழியில் அமைதியாக ஒருங்கிணைந்து தம் எதிர்ப்புணர்வைப் புலப்படுத்தினர்.
அந்தத் தன்னெழுச்சியும் அமைதியான கட்டுப்பாடும் ஆட்சியில் இருப்பவர்களைக் கலக்கத்தில்
ஆழ்த்தியது. சட்ட ஒழுங்கு பிரச்சினை நேராமல்
அமைதியை நிலைநாட்டுவதற்காக, அந்த மாவட்ட நிர்வாகத்தலைமையில் இருந்த அதிகாரி ராணுவத்தளபதியாக
இருந்த ஜெனரல் டயரை அழைத்தார்.
13.04.1919 அன்று வைசாகி
நாள் கொண்டாட்டத்துக்காக ஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்
திரண்டிருந்தனர். நாற்புறமும் மதில்களால் சூழப்பட்ட அந்தத் திடலில் எங்கெங்கும் மனிதர்கள்
நிறைந்திருந்தனர். அவர்களைக் கண்டு மிரட்சியுற்ற ஜெனரல் எவ்விதமான விசாரணையும் செய்யாமல்
முன்னெச்சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான். அத்துப்பாக்கிச் சூட்டில் ஐநூறுக்கும்
மேற்பட்டோர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக நூற்றுக்கும்
மேற்பட்டோர் திடலுக்கு நடுவிலிருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். அப்படுகொலையை
விசாரிப்பதற்காக ஹண்டர் என்பவர் தலைமையில் அமைந்த குழு, ஏறத்தாழ ஓராண்டு கால விசாரணைக்குப்
பிறகு ஜெனரல் டயருக்கு எவ்விதமான தண்டனையையும் பரிந்துரைக்காமல் தன் அறிக்கையை அளித்தது.
ரெளலட் சட்டம், ஜாலியன்
வாலாபாக் படுகொலை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919இல் இயற்றப்பட்ட அரசு
சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருக்கும் குறைவான அதிகாரங்களை ஒட்டி மறுப்பைத்
தெரிவிக்கவும் காந்தியடிகள் 1920இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். மாணவர்கள்
கல்லூரிகளைப் புறக்கணிப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, பொதுமக்கள்
அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணிப்பது என மூன்று
வகையான புறக்கணிப்புகளை காந்தியடிகள் வலியுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்கி நாடெங்கும்
வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வந்த ஏராளமான தொண்டர்கள் தம் பதவியைத் துறந்து நீதிமன்றத்திலிருந்து
வெளியேறினர். சென்னையில் வெற்றிகரமான வகையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த யாகூப் ஹசன்
தன் வேலையை உதறிவிட்டு சுதந்திரத்துக்காகப் போராடும் பொதுவாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினார்.
காந்தியடிகளின் சொற்களை எப்போதும் தமக்கு இடப்பட்ட கட்டளையாகவே யாகூப் ஹசன் எடுத்துக்கொண்டார்.
12.08.1920 அன்று காந்தியடிகளும்
செளகத் அலியும் சென்னைக்கு வந்தபோது குத்தூஸ் பாட்சா, யாகூப் ஹசன், ராஜாஜி, கஸ்தூரி
ரங்க ஐயங்கார், அப்துல் ஹகீம், வ.வெ.சு.ஐயர், ஆதிநாராயண செட்டியார் போன்றோர் சென்ட்ரல்
ரயில் நிலையத்துக்குச் சென்று வரவேற்று அழைத்துவந்தனர். அன்று மாலை திருவல்லிக்கேணி
கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் காந்தியடிகளும் செளகத் அலியும் உரையாற்றினர்.
காந்தியடிகள் தன் உரையில் உலகில் வன்முறையை அடிப்படையாகக்கொண்ட நீதியைவிட தன்னல மறுப்பை
அடிப்படையாகக்கொண்ட நீதியே மனிதகுலத்துக்கு நன்மை விளைவிக்கும் என்று குறிப்பிட்டார்.
மேலும் “நான் ஆங்கிலத்தின் எதிரியல்ல, நான் பிரிட்டிஷாரின் எதிரியுமல்ல, நான் எந்த
அரசாங்கத்துக்கும் எதிரியல்ல, ஆனால் அசத்தியத்தை எதிர்ப்பவன். அநீதியை எதிர்ப்பவன்,
அரசாங்கம் அநீதி இழைக்கும் வரை என்னை அது தன் எதிரியாகக் கருதலாம். இந்த முயற்சியில்
நான் மரணமடைய நேர்ந்தாலும் அது எனக்குக் கிட்டிய நற்பேறு எனக் கருதிக்கொள்வேன்” என்றும்
குறிப்பிட்டார்.
அடுத்தநாள் 13.08.2020
அன்று காலையில் காந்தியடிகள் தங்கியிருந்த ஹாஜி அப்துல்ரகீம் சாகிப் அவர்களுடைய இல்லத்திலேயே
கிலாபத் இயக்கத்தைப்பற்றியும் பஞ்சாப் படுகொலையைப்பற்றியும் உரையாடுவதற்காக ஓர் அந்தரங்கக்கூட்டம்
நடைபெற்றது. யாகூப் ஹசன், குத்தூஸ் பாஷா, ஜி.ஏ.நடேசன், தி.சே.செள.ராஜன், ஜார்ஜ் ஜோசப்,
சீனிவாச சாஸ்திரி ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்தகொண்டனர். அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு
காந்தியடிகளும் காந்தியடிகள் எழுப்பிய வினாக்களும் அவர்களும் விளக்கமளித்தனர். நாட்டில்
நிலவும் அரசியல் பிரச்சினைகள் சார்ந்து சில தெளிவுகளைப்பெற இந்த உரையாடல்கள் வழிவகுத்தன.
காந்தியடிகளின் ஒத்துழையாமைத்
திட்டத்தை சென்னை மெயில் பத்திரிகை கடுமையாக எதிர்த்து எழுதியிருந்ததை ஒட்டியும் அவர்களிடையில்
உரையாடல் நிகழ்ந்தது. பதினாறு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோரின் அனுமதி இல்லாத
நிலையிலும் கூட, தம் மனசாட்சி அனுமதித்தால் கல்லூரிகளையும் பள்ளிகளையும் புறக்கணித்து
வெளியேறலாம் என காந்தியடிகள் கூறிய சொற்களையொட்டி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஐயங்களை
எழுப்பி விடைகளைப் பெற்றனர். அரசாங்கம் நடத்தும் பள்ளிகளிலிருந்தும் அரசாங்க ஆதரவு
பெற்ற பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் வெளியேறி வரவேண்டும் என்பது மாணவர்களை நேரிடையாக
அரசியலில் ஈடுபடத் தூண்டுவதாக அமையாதா என்று வினவினர். படித்துக்கொண்டே அரசியலில் ஈடுபடுவதுதான்
பிழையே ஒழிய, பள்ளியை விட்டு வெளியேறிய நிலையில் அவர்கள் அரசியலில் ஈடுபடுவது பிழையல்ல
என்று காந்தியடிகள் எடுத்துரைத்தார். மேலும் வெளியேறும் மாணவர்கள் நேரிடையாக அரசியலில்
ஈடுபட வேண்டும் என்பது தன் நோக்கமல்ல என்றும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மேற்கண்ட பள்ளிகளிலிருந்து
திருப்பியழைத்து , முடிந்தால் தேசியப்பள்ளிகளை நிறுவி அவர்களை அங்கு அனுப்பிவைக்க வேண்டும்
என்பதே தன் நோக்கமென்றும் விளக்கமளித்தார். இப்படி விளக்கங்கள் அளிப்பதிலேயே அன்றைய
பொழுது கழிந்தது.
14.08.1920 அன்று காலையில்
ஆம்பூருக்கும் வேலூருக்கும் காந்தியடிகள் சென்றார். ராஜாஜியும் யாகூப் ஹசனும் அவருடன்
சென்றார்கள். ஆம்பூரில் கெளரவ மாஜிஸ்ட்ரேட்டுகளாகச் செயல்பட்டு வந்த பங்கி ஹயாத் பாஷா,
மாலிக் அப்துல் ரகுமான், முகம்மது காசிம், செங்கலப்பா ஆகியோர் தம் பதவிகளிலிருந்து
விலகுவதாக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தவும்
அங்கு நடைபெற்ற வட ஆர்க்காடு மாவட்ட கிலாபத் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அவர்கள் ஆம்பூருக்குச்
சென்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு வேலூருக்குச் சென்றனர். ஹஸ்ராத்
மக்காவில் உள்ள ரயில்வே க்ராஸிங் அருகில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி நின்று
அவர்களை வரவேற்று, பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த கோட்டை மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். காந்தியடிகளின் உரையை யாகூப்
ஹசன் இந்துஸ்தானியிலும் ராஜாஜி தமிழிலும் மொழிபெயர்த்தனர்.
காந்தியடிகளின் வருகையைத்
தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒத்துழையாமைப் போராட்டத்தைக் குறித்து மூன்று
வகையான கருத்துகள் நிலவின. அது அரசாங்கத்தைச் சீர்குலைத்துவிடும் என்றும் காங்கிரஸ்
விதிமுறைகளுக்கு எதிரான போராட்டமென்றும் ஒரு சாரார் கருதினர். சட்டமன்றங்களுக்குச்
செல்வதைத் தடுப்பதில் எவ்விதமான பொருளும் இல்லை என்று இன்னொரு சாரார் கருதினர். காந்தியடிகள்
கூறிய வழியிலேயே ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்று மூன்றாவது சாரார்
கருதினர்.
அதுபோலவே கிலாபத் இயக்கத்துக்கு
காந்தியடிகள் தலைமையேற்பதையொட்டி சென்னை மாகாண காங்கிரஸில் இருந்த இஸ்லாமியர்களிடையிலும்
இரு விதமான கருத்துகள் நிலவின. சாதுல்லா பாஷாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்லாமியர்கள்
கிலாபத் சிக்கல் ஒரு சமயச்சிக்கல் என்றும் காந்தியடிகளை இஸ்லாமிய மதத்தலைவராக ஏற்றுக்கொள்ள
முடியாதென்றும் இந்தச் சிக்கலைத் தீர்க்க இஸ்லாமிய உலேமாக்கள் இணைந்து முடிவெடுப்பதே
சிறந்த வழியென்றும் தெரிவித்தனர். அதுவரை அவருடைய உரையை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த
யாகூப் ஹசன் மத்திய கிலாபத் குழுவினர் ஏற்கனவே உலேமாக்களுடன் உரையாடி முறையான அனுமதியை
பெற்று வந்திருப்பதை நினைவூட்டிப் பேசினார். கிலாபத் போராட்டத்தில் இஸ்லாமியர்களுடன்
காந்தியடிகள் இணைந்திருப்பதை நாடெங்கும் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஏற்கனவே மனப்பூர்வமாக
ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்று முழங்கினார். யாகூப் ஹசனின் உரை குழம்பியிருந்தவர்கள்
நெஞ்சில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது.
இதே ஆண்டில் திருநெல்வேலியில்
சென்னை மாகாண காங்கிரஸ் அரசியல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்
எஸ்.சீனிவாச ஐயங்கார். அவர் அதுவரை சென்னை மாகாணத்தில் அட்வகேட் ஜெனரலாகப் பணிபுரிந்து
வந்தார்., காந்தியடிகளின் புறக்கணிப்புச் சொற்களுக்குக் கட்டுப்பட்டு தன் பதவியைத்
துறந்து காங்கிரஸ் இயக்கத்துடன் மனமுவந்து தன்னை இணைத்துக்கொண்டார். காந்தியடிகள் மீது
மதிப்புகொண்டவர் என்றபோதும், ஆங்கில அரசை முற்றிலுமாக எதிர்த்து பகைத்துக்கொள்ளத் தேவையில்லை
என்னும் எண்ணம் மட்டும் அவரிடம் இருந்தது. அதனால் தீர்மானங்களை நிறைவேற்றும் தருணத்தில்
அரசாங்கத்தை எதிர்க்கும் தீர்மானத்துக்குப் பதிலாக, அரசியல் சீர்திருத்தங்கள் தேவை
என்னும் அம்சத்தை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினால் போதும் என அவர் முடிவெடுத்திருந்தார்.
மேலும் கிலாபத் இயக்கம் இஸ்லாமியர்கள் தொடர்பான பிரச்சினை என்றும் எக்காரணத்தை முன்னிட்டும்
அதையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் இணைத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதும் அவர் நிலைபாடாக
இருந்தது. அவரைப்போலவே அன்னிபெசன்ட், சத்தியமூர்த்தி, ராமசாமி ஐயர், சேலம் விஜயராகவாச்சாரி
போன்றோரும் அந்த நிலைபாட்டுக்கு ஆதரவாகக் குரலெழுப்பினர்.
ஆனால் மாநாட்டில் கலந்துகொண்ட
இராஜாஜி அந்த நிலைபாட்டுக்கு எதிராகக் குரல்கொடுத்தார். காந்தியடிகள் வகுத்தளித்த திட்டங்களை
ஒருபோதும் மாற்றக்கூடாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ராஜாஜி, அரசு எதிர்ப்பு
நிலைபாட்டைப் பதிவு செய்யும் தீர்மாமனத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.
ஆனால் அரங்கில் அவருக்கு ஆதரவாக குரலெழுப்ப போதுமான உறுப்பினர்கள் இல்லை. அம்மாநாட்டுக்கு
யாகூப் ஹசனும் வந்திருந்தார். கிலாபத் இயக்கத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் இணைந்து
செயல்படுத்துவது நல்ல விளைவையே தரும் என்பதில் அவருக்கு நேர்மறையான நம்பிக்கை இருந்தது.
அந்த முயற்சி நாட்டில் மதநல்லிணக்கத்துக்கும் சுதந்திரத்துக்கும் வழிவகுக்கும் என்பதில்
அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் தொடர்ச்சியாக இரவென்றும் பகலென்றும்
பாராமல் திருநெல்வேலி, பேட்டை, மேலப்பாளையம் போன்ற இடங்களுக்குச் சென்று காந்தியடிகளின்
கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய எண்ணற்ற இளைஞர்களைத் திரட்டி மாநாட்டுக்கு அழைத்து
வந்துவிட்டார், இறுதியில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது ராஜாஜி கொண்டுவந்த தீர்மானம்
வெற்றி பெற்றது.
அதே ஆண்டில் நாக்பூரில்
நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் தமிழகப் பிரதிநிதியாகச் சென்ற குழுவில் யாகூப்
ஹசனும் இடம் பெற்றிருந்தார். அக்குழுவில் இடம்பெற்றிருந்த மற்ற ஆளுமைகள் ராஜாஜி, சுப்பராயன்,
சத்தியமூர்த்தி, டி.பிரகாசம் ஆகியோர். அகில இந்திய காங்கிரஸிலும் சென்னை மாகாண காங்கிரஸிலும்
யாகூப் ஹசன் எப்போதும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று தனித்தன்மையுடன் திகழ்ந்தார்.
1921இல் கேரள பிரதேச காங்கிரஸ்
தொடங்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் ஒத்தப்பாலம் என்னும் ஊரில் பாரதப்புழை நதிக்கரையில்
நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட யாகூப் ஹசன் மக்களுக்கு சுதந்திர உணர்ச்சியூட்டும் வகையில்
உரையாற்றினார். நிகழ்ச்சி முடிவடைந்ததுமே, அரசுக்கு விரோதமாக மக்களைத் தூண்டியதாகக்
குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவருக்கு
ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தைச் சேர்ந்த
மலபார் பகுதியில் திருங்காடி என்ற இடத்தில் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கிலாபத் ஊழியர்கள்
சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகளின் அடக்குமுறைகளை எதிர்த்து அங்கு
வாழ்ந்த மாப்பிள்ளைகள் குரல்கொடுத்தனர். அரசுக்கு எதிராகத் திரண்டெழுந்த அவர்களை திசைதிருப்பும்
முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக எழுந்த அவர்களுடைய
குரல்களை, அங்கிருந்த இந்து மதத்தினருக்கு எதிரானதாக திசைதிருப்பிவிட்டது. ஒரு பெரிய
மதக்கலவரத்துக்கே அது வழிவகுத்துவிட்டது.
மத ஒற்றுமையை நிலைநாட்டும்
பொருட்டு தமிழ்மாகாணக் காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜாஜியும் சிறைத்தண்டனைக்குப் பிறகு
விடுதலை பெற்று சென்னைக்குத் திரும்பியிருந்த யாகூப் ஹசனும் சென்னையிலிருந்து உடனடியாக மலபாருக்குப் புறப்பட்டுச்
சென்றனர். ஆனால் ராஜாஜி மலபார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். யாகூப் ஹசன் மட்டும் எப்படியோ அரசின் கண்காணிப்பிலிருந்து
தப்பித்து மலபாருக்குள் சென்று இரு தரப்பினரிடையிலும் மாறி மாறி உரையாடி மத ஒற்றுமைக்காக பாடுபட்டார். ஏற்கனவே
அங்கே இரு தரப்பினரையும் சேர்த்து பேச்சுவார்த்தை நிகழ்த்திக்கொண்டிருந்த மாதவன்
நாயருடன் யாகூப் ஹசனும் இணைந்து செயல்பட்டார்.
இரு வகுப்பினரும் இணைந்து
வாழும் ஒவ்வொரு ஊருக்கும் மாதவன் நாயரும் யாகூப் ஹசனும் நேரிடையாகச் சென்று மக்களைச்
சந்தித்து அமைதிக்குத் திரும்ப பாடுபட்டனர். ஆனால் எதிர்பாராத வகையில் 07.11.1921 அன்று
கள்ளிக்கோட்டையில் அவ்விருவரையும் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச்
சென்றது. இருவருக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் கண்ணனூர்
சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளிக்கோட்டை நிகழ்ச்சியை
மையக்கருத்தாகக் கொண்டு மதுரகவி பாஸ்கரதாஸ் யாகூப் ஹசன் மீது ஒரு பாடலை இயற்றினார்.
சென்னை கிலாஃபத்தின் நேசன்
–
யாகூப் ஹசன் சேட்
ஜெகமதில் இந்தியர் சுகமுற
நம்பிய………………….(சென்னை)
திருக்கரங்குவித்து அனுதினமதகுரு
துருக்கி மன்னரின் பெயர்
முழங்கிட வரு……(சென்னை)
சிரமத்துடன் ஒத்துழையா
விரதக்
கிரமத்தினை விட்டு அகலா
வரதச்…………………….(சென்னை)
சித்தத் துணிவோடு மெத்தப்
பிரபல
சத்தியக் கிரகவி ருத்திப்
புரவல……………………………..(சென்னை)
சேரப்பதி கள்ளிக்கோட்டையில்
நம்மோர்
தீரப்பட சிறையேற்ற அருள்
பெம்மான்……………(சென்னை)
ஒவ்வொரு மேடையிலும் பாடப்பட்டு,
இப்பாடல் வெகுவிரைவில் மக்களிடையில் பரவியது.
ஆங்கில அரசின் பிழையான
அணுகுமுறையால் மலபார் பகுதியே சுடுகாடாக மாறியது. பொக்காத்தூரில் அறுநூறுக்கும் மேற்பட்ட
மாப்பிள்ளைமார்களும் பட்டாம்பியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாப்பிள்ளைமார்களும் இராணுவத்தாராலும்
போலீசாராலும் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாப்பிள்ளைமார்கள் காற்றோட்டமில்லாத, எல்லாப்புறங்களிலும் மூடுண்ட
கூட்ஸ் ரயிலில் அடைத்து திரூரிலிருந்து கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றது. வெப்பமும்
தாகமும் வாட்ட பெட்டிக்குள் இருந்து அவர்கள் எழுப்பிய குரலை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.
ஏறத்தாழ 111 மைல் பயணத்துக்குப் பின் போத்தனூரில் ரயில் நின்றது. கதவுகள் திறக்கப்பட்டபோது
பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிணமாக விழுந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லும் வழியில் இறந்தனர். எஞ்சியிருந்தவர்கள் நினைவு திரும்பாமலேயே இரு நாட்களில்
உயிரிழந்தனர்.
அடுத்தடுத்த சிறைவாசங்கள்
யாகூப் ஹசனின் உடல்நிலையை பெரிதும் சிதைத்துவிட்டது. பழைய நிலைக்குத் திரும்ப அவருக்கு
சிறிது காலம் தேவைப்பட்டது. மனத்தளவிலும் அவர் சோர்வுற்றவராகவே நடமாடினார். அந்த நிலையிலும்
15.11.1924 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மீண்டும் உடல்நலப் பிரச்சினைகள் எழுந்ததால் பொது வாழ்விலிருந்து ஒதுங்கியிருக்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல உடல்நிலை
இயல்புநிலைக்குத் திரும்பிய சமயத்தில் அவரோடு இருந்தவர்கள் அவரை முஸ்லீம் லீக் இயக்கத்தின்பால்
அழைத்துச் சென்றனர். ஆயினும் சில ஆண்டுகள் மட்டுமே யாகூப் ஹசன் அந்த அணியில் செயல்பட்டார்.
தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டு பழகியிருந்த யாகூப் ஹசனால், அதை
விட்டு விலகியிருப்பது சாத்தியப்படவில்லை. மதத்தைவிட நாட்டுநலத்தைப் பெரிதெனக் கருதிய தலைமுறையைச்
சேர்ந்தவர் அவர். வாழ்நாள் முழுதும் அத்தகு மனநிலையிலேயே வாழ்ந்த அவரால், அந்தக் கருத்துநிலையிலிருந்து
விலகி நிற்க இயலவில்லை. அதனால் அவர் மீண்டும் காங்கிரஸ் இயக்கத்துக்கே திரும்பினார்.
இந்தியாவில் அரசியல் சீர்திருத்தம்
ஏற்படவும் இந்தியர்களுக்கு சுயாட்சி வழங்கவும் ஆங்கிலேய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றியது.
அதுவரை நடைமுறையில் இருந்த இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு,
நிதி போன்ற முக்கியமான துறைகளைத் தவிர ஏனைய நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கப்பட்ட
இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு இச்சட்டம் வழிவகுத்தது. இந்தப் புதிய ஆட்சிமுறையை அனைவரும் மாநில சுயாட்சி
என்று அழைத்தனர். இச்சட்டத்தின் அடிப்படையில் 1937இல் மத்திய நாடாளுமன்றத்துக்கும்
மாகாண சட்டமன்றங்களுக்கும் முதல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்னை மாகாண சட்டமன்றத்தில்
அசம்ப்ளி என்று அழைக்கப்பட்ட கீழவை, கவுன்சில் என்று அழைக்கப்பட்ட மேலவை என இரு அவைகள்
இருந்தன. கீழவையில் 215 இடங்களில் 159 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் மகத்தான வெற்றி
பெற்றது. அத்தேர்தலில் போட்டியிட யாகூப் ஹசனுக்கு
காங்கிரஸ் வாய்ப்பளித்தது. யாகூப் ஹசன் அதிக அளவில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ராஜாஜியின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் யாகூப் ஹசன் பொதுப்பணித்துறை அமைச்சராகப்
பணியாற்றினார்.
1939இல் இரண்டாம் உலகப்போர்
மூண்டது. அப்போரில் இந்தியர்களின் ஒப்புதலைப் பெறாமலேயே ஆங்கிலேய அரசு இந்தியாவை இணைத்துவிட்டது.
அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. பொறுப்பிலிருந்து
விலகிய பின்னர் யாகூப் ஹசன் சில வாரங்கள் மட்டுமே உயிர்வாழ்ந்தார். 1940இல் எதிர்பாராத
விதமாக அவர் மறைந்தார்.
( சர்வோதயம் மலர்கிறது – மார்ச் 2022 )