Home

Sunday 17 April 2022

கன்று : சிறுகதை

 

 அருணாசலக் கவுண்டரின் வம்சம் உருத்தெரியாமல் சுக்கு நூறாகச் சிதைந்து மண்ணாகிவிட்டது. ஏதோ சாபத்தின் விளைவு என்றுதான் பேச்சு. கையில் ஒரு பிள்ளையும் இடுப்பில் இன்னொரு பிள்ளையுமாய் பிச்சை கேட்டு வந்த யாரோ ஒரு கர்ப்பிணிப் பெண் பசிக்குச் சோறு போடாத கல் வீட்டைப் பார்த்து வயிறெரியமண்ணோடு மண்ணாகப் போகட்டும்என்று சொல்லிவிட்டுப் போனாள்.

நாலு தலைமுறைக்கு முன்னால் நடந்த சங்கதி இது. அதற்கப்புறம் அந்தக் கல்வீடு மெதுமெதுவாகச் சரிந்து சிதைந்தது. அருணாசலக் கவுண்டரின் முதல் தலைமுறை ஊரைச் சுற்றி இருந்த பதினெட்டுக் கிராமங்களிலும் இளம் பெண்களாகப் பார்த்து வைப்பாட்டிகளாக வைத்துக்கொண்டு, வில் வண்டியில் போவதும் வருவதுமாக வாழ்ந்து அவரவர்கள் வாழ்வு வளத்துக்கு வீடு நிலம், தோட்டம் என்றெலலாம் கொடுத்துச் சந்தோஷமாகச் செத்துப் போனது. அடுத்த தலைமுறைக்கு நாட்டில் எந்தத் தென்னை மரத்தில் எப்படிப்பட்ட கள் இருக்கும் என்பது துல்லியமாகத் தெரிந்திருந்தது. அந்த ஞானத்துக்கு அது கொடுத்த விலை ஏரிக்கரையோரம் இருந்த மாந்தோப்பும் பத்துகாணி நிலமும். போதையில் கைநாட்டு வைத்துத் தந்த பத்திரங்களுக்கெல்லாம் தெளிவான சமயங்களில் பதில் சொல்ல வேண்டி இருந்தது. இடையில் கட்டிக்கொண்டு போன பெண் பிள்ளைகளும் கட்டிக்கொள்ள இருந்த பெண் பிள்ளைகளும் உத்வேகம் கொண்டு குழந்தைப்பேறு, மஞ்சள் நீர், சடங்கு, சாஸ்திரம் என்று ஏதேதோ காரணங்களை முன் வைத்து அகப்பட்டதையெல்லாம் சுருட்டிக்கொண்டு போகத் தொடங்கியதால் வீடும் கைமாறிப் போய்விட்டது. மூன்றாம் தலைமுறை சந்நியாசி போலக் கோயில், குளம், சோதிடம் என்று சுற்றித் திரிந்து உயிரை விட்டது. நாலாவது தலைமுறைக்கு எதுவும் மிச்சமில்லை. காட்டிலும் மேட்டிலும் கூலிக்கு வேலை செய்து அலைந்தது. சிங்கப்பூரில் பினாங்கு பக்கத்தில் தோட்டத் தொழிலுக்கு ஆள் எடுக்கிறார்கள் என்கிற சங்கதியைக் கேள்விப்பட்டு கால்நடையாகவே நாகப்பட்டிணம் சென்று கப்பலேறிப் போனது. போன குடும்பத்தைப்பற்றி எந்த விவரமும் இல்லாததால் கவுண்டரின் வம்சத்தை ஊர்க்காரர்கள் சுத்தமாக மறந்து இருபது ஆண்டுகள் உருண்டு விட்டன.

மறந்ததையெல்லாம் ஞாபகப்படுத்துகிற மாதிரி ஒருநாள் அதிகாலையில் வந்தான் தங்கசாமி. கையில் ஒரு பெட்டியும் தோளில் ஒரு பையுமாக ஊர் முகப்பில் இருந்த சத்திரத்தோரம் மகிழமரத்தடியில் வண்டியைவிட்டு இறங்கினான். பக்கத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போனபோது கிணற்றின் மறுபக்கத்தில் தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்த இளம் பெண்ணும் பல் தேய்த்துக் கொண்டிருந்த கிழவரும் ஒரே குரலில் யாருப்பா நீ?” என்று அதட்டியபோது அவன் தன் அடையாளத்தைப் புலப்படுத்தினான். விஷயத்தை அறிந்ததும் ஆனந்த வேகத்தில் பல் குச்சியை எறந்துவிட்டு வந்த கிழவர் அவனை நெஞ்சோடு தழுவிக்கொண்டார். அவர் கண்கள் கலங்குவது தெரிந்தது. “அப்பா... அம்மா....?” என்று கேள்வியோடு இழுத்தாள். “அந்த மண்ணிலேயே போய்ட்டாங்கஎன்றான் தங்கசாமி. பிறகுநீங்க?” என்று குரலை மெல்ல இழுத்தான். “என்னன்னு சொல்றது தம்பி? எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான்என்றார் கிழவர். “சரி சரி பல்ல விளக்கு. ஊட்டுப் பக்கம் போவலாம்என்றார். அப்புறம்...சிவகாமி...கொஞ்சம் தண்ணி எடுத்து தம்பிக்கு ஊத்துஎன்று பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம் சொன்னார். பெட்டியையும் பையையும் மரத்தடியில் வைத்துவிட்டு வேலங்குச்சி ஒடித்துப் பல்லை விளக்கி முகம் கழுவி முடிப்பதற்குள் அரையும் குறையுமாய்க் கதையைக் கேட்டு முடித்தாள் கிழவர். அருகில் இருந்த திரௌபதை அம்மன் கோவில் வாசலில் சற்று நேரம் கண்மூடித் தொழுத பின்னர் தங்கசாமியைக் கூப்பிட்டுக்கொண்டு தெற்குப் பக்கம் நடந்தார்.

அவன் நடக்கத் தொடங்கும்போதுதான் அவனை நன்றாகப் பார்த்தாள் சிவகாமி. நல்ல உயரம். கொழுந்து இலை போன்ற மென்கருப்பு நிறம். கழுத்தில் தங்கச் சங்கிலி. ஊர் இளைஞர்களின் தோற்றத்துக்கு மாறாக நறுவிசியாக வெட்டப்பட்ட முடி, சின்ன மீசை. அமைதியான கண்கள். “வரேன்என்று அவள் பக்கம் திரும்பிக் கையெடுத்துக் கும்பிட்டு நடக்கத் தொடங்கியதும்நல்ல மரியாத தெரிந்த மனுஷன். இந்த புத்தி ஊருல எந்த மடையனுக்கு வரும்என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள்.

அடுத்த நாள் காலை கிணற்றுக்குத் தண்ணீர் இறைக்க வந்த சிவகாமி புறம்போக்குத் தோப்பில் புதுசாக முளைத்திருந்த சின்னக் குடிசையை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அக்குடிசைக் குள்ளிருந்து ஒரு குரல்என்றது. தொடர்ந்த புதிய மழலைக் குரல்என்றது. கம்பீரமான பெரிய குரலும் மழலைக் குரலும் மாறி மாறி எழுப்பியஓசை அவளுக்கு அதிசயமாக இருந்தது. கிணற்றடியிலேயே குடத்தை வைத்துவிட்டுத் தயங்கித் தயங்கி புதிய -குடிசைக்குள் சென்றாள். நாலு மூங்கிலும் கீற்றுத் தடுப்பும்தான் குடிசையாகக் காணப்பட்டது. அதற்குள் குரல்கள்காரத்துக்குத் தாவியிருந்தன. அந்த உச்சரிப்பு அவளுக்குச் சிரிப்பு மூட்டுவதாக இருந்தது. அதே சமயத்தில் இனம்புரியாத வேகமும் பரபரப்பும் உடல் முழுக்கப் பரவியது. திரும்பி விடலாமா என்று நினைத்தாள். இருப்பினும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதற்குள் குரல்கள்காரத்துக்குச் சென்றுவிட்டன. முதலில் பெரிய குரல். தொடர்ந்து சின்னக் குரல். ஒன்றுக்கொன்று இசைவாக எழுந்து அடங்கிய வண்ணம் இருந்தன. குடிசையை நெருங்கிக் கீற்றின் இடைவெளியில் கண்களை வைத்துப்பார்த்த போது தங்கசாமி தரையில் தடுக்கு ஒன்றில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. எதிரே ஓர் இளஞ்சிறுவன். அவன் பிஞ்சு விரலைப் பற்றி எதிரே குவிந்திருந்த மணலில் மேலும் கீழுமாக இழுத்துக் கொண்டிருந்தான் தங்கசாமி. விரல்கள் இழுபடஇழுபட வாய்கள் தம் பாட்டுக்கு முணுமுணுத்தபடி இருந்தன. சிவகாமிக்கு ஆச்சரியமாக இருந்தது. இருவரையும் வைத்த கண் வாங்காமல் சிறிது நேரம் பார்த்தாள். மெதுவாகப் பின்வாங்கிச் சென்று ஒரு குடம் தண்ணீரோடு குடிசைக்குள் வந்தாள். நிழலாடுவதைப் பார்த்ததும் நிமிர்ந்த தங்கசாமியிடமரொம்ப நேரமா கத்திக் கத்திப் படிப்பு சொல்லித் தரீங்களே. பாவம். தாகத்துக்கு தண்ணி குடிங்கஎன்றபடி ஒரு சிரிப்பைச் சிந்திவிட்டுத் திரும்பினாள். “நீங்க. நீங்கஎன்று தங்கசாமி ஏதோ தடுமாறிக் கேட்பதற்குள் அவள் வாசலில் இருந்த தும்பைச் செடிகளையெல்லாம் தாண்டி உண்ணிப் புதர்களுக்கருகில் போய்விட்டிருந்தாள்.

யாருடா அது?”

தங்கசாமி முன்னால் இருந்த சிறுவனிடம் கேட்டான்.

சிவகாமி அக்கா. நம்ம தெருதான். கடைசி வீட்டுல இருக்காங்க. சிலோன் மாமா வீடு

என்ன பண்றாங்க-?”

அந்த அக்கா நல்ல அக்கா. எல்லா வீட்டுக்கும் தண்ணி கொண்டு வந்து கொடுப்பாங்க. துணி துவச்சி குடுப்பாங்க. நெல் குத்துவாங்க. எங்க ஊட்டுக்குக் கூட வருவாங்கசிறுவன் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே போனான்.

அடுத்த நாள் புதுசாக இன்னும் ஒரு சிறுவன் வந்து சேர்ந்தான். மறுநாள் மேலும் மூன்று குழந்தைகள் வந்தார்கள். அதிகாலையில் அவர்கள் எழுப்பும் அகர கோஷம் கிணற்றடியைத் தாண்டி தோப்பைத் தாண்டி ஊர்த் தெரு வரைக்கும் 5

பார்க்கிறவர்களிடமெல்லாம் அதைச் சொல்லிச்சொல்லி ஆச்சரியத்தை வௌப்படுத்திக் கொண்டாள். “படிப்பு இல்லாததாலதான் இந்த ஜனங்க புத்தி கெட்டுப் பாழாப் போவுது. அதான் ஆத்தாவே பாத்து இந்த ஆள அனுப்பி வச்சிருக்கா. அவ கண்ணு தொறந்தாத்தான் எல்லாமே நடக்கும்என்று எல்லாப் பெருமைகளையும் அம்மனுக்கு அர்ப்பணித்துவிட்டுக் கண்களை மூடிக் கொண்டது ஒரு பெரிசு.

அகர கோஷத்தைத் தொடர்ந்து தங்கசாமி பிள்ளைகளுக்குப் பாடல்கள் சொல்லிக் கொடுத்தான். ஆத்திச்சூடி கொன்றை வேந்தன. விளையாட்டுப் பாட்டு. மாடு மேய்க்கப் போகும் பிள்ளைகள் தோப்பைக் கடக்கும்போது காதில் விழும் வரிகளை மனத்தில் பதியவைத்துக் கொண்டு திடீர் திடீர் என நினைத்துப் பார்த்துஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்என்று மாட்டின் முகுகில் தாளம் போட்டபடி பாடினார்கள். கள் குடிக்கப் போகிறவர்கள் கூட காதில் விழும்அறஞ்செய விரும்புஎன்ற வரிகளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு சந்தோஷம் பொங்கும் தருணங்களிலெல்லாம்அறம் செய விரும்புஎன்று சொல்லிச் சிரிக்கத் தொடங்கினார்கள். வாடா போடா என்று சொல்லிக் கொள்கிற அளவுக்குஅறம் செய விரும்புமாறிப் போய்விட்டது, ஊர் முழுக்க தங்கசாமியின் பேச்சு அடிபட்டது. “ஊரையே கூட்டி ஆண்ட வம்சம். ஆண்டி மாதிரி பொறம்போக்குல இருக்குது பாருஎன்றார்கள் சிலர். “ஐஸ்வர்யம் இல்லாம போனா என்ன? ஞானத்த அள்ளிக் கொடுத்திருக்கா ஆத்தா. அந்த புள்ளைக்கு அது போதும்என்றார்கள் இன்னும் சிலர். எல்லாப் பிள்ளைகளும் போனபிறகு கல் மூட்டி சொந்தமாகச் சமைத்துக்கொண்டான் தங்கசாமி. அப்புறம் கொஞ்ச நேரம் ஊர் சுற்றல். கொஞ்ச நேரம் ஏரியில். நீச்சல் கொஞ்ச நேரம் திரிதல். காடா விளக்கொளியில் ஏதாவது எழுதுதல். அத்தோடு அவன் பொழுதுகள் கழிந்துவிடும்.

நாள் செல்லச் செல்லக் குழந்தைகள் பெருகினார்கள். முதலில் சேர வரும் குழந்தையை நல்ல முகூர்த்தித்தில் மடியில் உட்காரவைத்துக்கொண்டுஎழுத்தைப் போதிப்பான். எல்லாக் குழந்தைகளும் ஓசையை முதலில் மாற்றியே சொல்லும். “க்குஎன்றும்வைஎன்றும் ராகத்தை மாற்றும். தங்கசாமி பொறுமையாக எடுத்துச் சொல்லித் திருத்துவான். வாய் உச்சரிப்பு சரியானதும் மணற்பரப்பில் விரல் பிடித்து எழுத வைப்பான். நாக்கில் அகரமும் ஆகாரமும் படிந்த குழந்தைகள் உட்கார்ந்தாலும் நடந்தாலும் திண்ணையை விட்டு இறங்கி வீட்டுக்கு ஓடினாலும் கூட ஆன சொன்னவண்ணம் அலைந்தார்கள். வரிசையாக வந்து விழும் வார்த்தைகளின் முன்னொட்டமாகவோ பின்னொட்டமாகவோ அஆ இணைந்து கொள்ள தொடங்கிவிட்டன.

சிவகாமிக்குத் தங்கசாமியின் பால் ஒருவித ஈடுபாடு எழுந்தது. யாரும் சொல்லாமலும் கேட்காமலும் அவளே முன்வந்து அக்குடிசையைப் பெருக்கினாள். சாணம் தெளித்து மெழுகிச் சுத்தப்படுத்தினாள். குடத்தில் புதிய நீர் நிரப்பி வைத்தாள். தங்கசாமியின் ஆடைகளைத் துவைத்துத் தரத் தொடங்கினாள். ஊரில் கல்வியறிவின் வாசனையைப் பரப்ப வந்தவன் என்கிற மரியாதையும் யாருமற்றவன் என்கிற பரிவும் பாசமும் அவள் நெஞ்சில் குடிகொண்டன. தானே அவனை ஊரில் முதலில் பார்த்துப் பேசியவள் என்றும் தன்னிடம்தான் அவன் முதலில் தண்ணீர் வாங்கிக் குடித்தான் என்றும் ஊர் முழுக்கப் பறைசாற்றிக்கொண்டாள். நாலு மூலைகளிலும் குழிதோண்டி நட்டாள். “ஜாதிக்கன்னு இது. ஈரம் பட்டாலே போதும். பளிச்சின்னு புடிச்சிடும்என்று கன்றுகளிடம் சொல்வதுபோலச் சொன்னாள். கன்றுகளைச் சுற்றித் தண்ணீர் தேங்க வழி செய்து கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றினாள். காற்றில் நெளியும் இலைகளின் அழகில் கிறங்கி நின்றாள். “இந்த மண்ணுல இது எவ்வளோ நல்லா புடிச்சிருக்குதுன்னு போகப்போகப் பாக்கப் போறீங்கஎன்றாள். இந்த முறை அவனிடமே நேரிடையாக மெதுவாகச் சொன்னாள். தக்க சமயத்துக்காகக் காத்திருந்தது தங்கசாமியிடம் தன் கதையைச் சொன்னாள். சிலோனுக்குப் போன புருஷனிடமிருந்து ஆறு வருஷ காலமாக எந்தத் தகவலும் இலலை என்கிற சங்கதியைச் சொல்லும் போது அவள் குரல் உடைந்து அழத் தொடங்கிவிட்டாள். அவளது துக்கம் அவனுக்கும் வருத்தத்தைத் தந்தது. “ஒரு கடிதம் எழுதிப் பார்க்கலாமேஎன்கிற எண்ணத்தை அவன் முன் வைத்தான். அவளுக்கு அதுவரை அந்த மாதிரி தோன்றவே இல்லையே என்பது வியப்பாக இருந்ததது. “இதுக்குத்தான் படிச்சவங்க வேணும்னு சொல்றது. என்ன அறிவா யோசன சொல்றீங்கஎன்றாள். உடனே ஆர்வமும் படபடப்புமாக ஓடிச் சென்று எப்போதோ ஒரு முறை சிலோனுக்குப் போன கையோடு பணம் அனுப்பியபோது எழுதி அனுப்பியிருந்த துண்டுத் தாளைக் கொண்டு வந்து நீட்டினாள். கசங்கியும் கிழிந்தும் நிறம் மங்கியும் காணப்பட்ட அத் தாளைப் படிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எழுத்துகள் கோணல்மாணலாகவும் வளைவுகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் ஆதிக்கால ஓலைச்சுவடி போல இருந்தது. இயலாமையுடன் அவள் கண்களைப் பார்த்தான். அவற்றில் படிந்திருந்த ஏக்கத்தையும் ஆசையையும் கண்டதும் அவன் மிகுந்த சங்கடத்துக்குள்ளானான். அவளை நிராசைக்குள்ளாக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் முடிந்த மட்டும் துண்டுத்தாளில் கண்ட எழுத்து இதுவாகத்தான் இருக்கும் என்கிற ஊகத்தில் ஒரு முகவரியை உருவாக்கிக் கொண்டான். பிறகு அவள் பக்கம் திரும்பிஎன்னன்னு எழுதணும்?” என்று கேட்டாள். மறுகணமே அவள் கண்கள் குளமாகிவிட்டன. “நட்டாத்துல இப்படி தவிக்கவிட்டு போய்ட்டீயே. வயசுப் பொண்ணு இந்த ஊருல தனியா எப்படி பொழப்பான்னு ஒரு தரமாச்சிம் நெனச்சிப் பாத்தியா? என்னப் புடிக்காமத்தா நீ ஊருப்பக்கம் வரவே இல்லைன்னும் அங்கயே இன்னொருத்திய கட்டிக்கினு இருக்கன்னும் ஜனங்க பேசறத கேக்கும்போது -தூக்கு போட்டுக்னு தொங்கிடலாம்னு தோணுது. இருந்தாலும் மனசு மூலைல ஏதோ ஒரு எண்ணம் என்னைக்காச்சிம் நீ வந்து பாப்பேன்னு. அதனாலதான் இந்த உயிர கையாலே புடிச்சிக்கினுருக்கேன்இதற்குள் அவளுக்கு மூச்சு வாங்கியது மாலைமாலையாய்க் கண்ணீர் வழிந்தது. உடலும் நடுங்கியபடி இருந்தது. வெடித்துக் குமறும் அவளையே பார்த்தபடி சிலையாக நின்றான் தங்கசாமி. அவள் தோளைத் தொட்டு அமைதிப் படுத்த வேண்டும் போல இருந்தது.

சில நிமிடங்குளுக்கப்புறம் கூச்சம் கொண்டவளாகநா ஒரு புத்தி கெட்டவ. படிச்சவங்க ஒங்களுக்குத் தெரியாதா. மொத்தத்துல அது திரும்பி வரணும். அதுதான் முக்கியம். அந்த மாதிரி எழுதுங்கஎன்று கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவள் உதடுகளில் ஒரு புன்னகை ஓடி மறைந்தது.

தங்கசாமி பெட்டியிலிருந்து ஒரு தாளை எடுத்து விறுவிறுவென்று எழுதினான். ஒரு கணம் தன்னையே சிவகாமியாகப் பாவித்துக் கொண்டான். அந்தத் துக்கம். அந்த வேகம். அந்த ஆற்றாமை. எல்லாமே அவனையும் தொற்றிக் கொண்டன. எல்லாமே வார்த்தைகளாக உருமாறி அத்தாளில் பதியத் தொடங்கின. கால் மணிநேரத்துக்குப் பிறகு ஆழ்ந்த நிம்மதியை அவன் மனம் உணர்ந்தது.

படிச்சிக் காட்டட்டுமா?”

ஐயே எதுக்குங்க-? எல்லாம் நீங்க எழுதனா சரியாத்தான் இருக்கும்

புன்னகைத்தபடி ஒருமுறை கடிதத்தை முழுக்கப் படித்துப் பார்த்தான். அதை உறையில் வைத்து மூடி முகவரியை எழுதி ஒட்டினான்.

போவும் போது தபாலாபீஸ்ல போட்டுடுஎன்று சிவகாமியிடம் அக்கடிதத்தை நீட்டினான். அவள் முகத்தில் புருஷனே ஊருக்குத் திரும்பி வந்துவிட்ட நிம்மதி தெரிந்தது.

தங்கசாமிக்கு இரவு முழுக்கத் -தூக்கம் வரவில்லை. கலைந்து கலைந்து சிவகாமியின் முகம் அவன் நெஞ்சில் கூடிக்கொண்டே இருந்தது. களையான கண்கள். இருண்ட முகம். கூரான மூக்கு. சுருள் சுருளான கூந்தல். அப்பாவித்தனமான பேச்சு. இனிய குரல். ஒரு குணம் அவளை நினைப்பது பற்றிக் குற்ற உணர்வு கொண்டான் தங்கசாமி. உறக்கம் கலைந்து எழுந்து குடத்திலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகிய பின்னர் குடிசைக்கு வெளியே வந்தான். இருண்ட வானம் பீதியைக் கொடுப்பதாக இருந்தது. ஈரக் குளிர்க்காற்றில் கூட தன் உடல் வியர்ப்பது ஆச்சரியமாக இருந்தது. தலையை உதறியபடி சிறிது -தூரம் நடந்து போய்விட்டு வந்தான். என்றுமில்லாத அளவுக்குத் தன் மனம் அலைபாயும் காரணத்தைத் தேடுவதில் முயற்சியைச் செலுத்தினான். பினாங்கில் பலவிதமான பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் சிலிர்புறாத மனம் இந்த அபலைப் பெண்ணைப் பார்த்ததும் சிலிர்ப்படைந்தது எப்படி? இது சுரண்டல் எண்ணமா? பரிதாபமா?- யோசனையில் தலைவலி வந்தது தான் மிச்சம். முதல்கோழி கூவிய தருணத்தில் அவன் முற்றிலுமாக ஒடுங்கிப் போனான். வழக்கம் போலக் கிணற்றடிக்குச் சென்று தண்ணீரை முகர்ந்து தலையில் ஊற்றிக் கொண்டதும் எல்லாம் குளிர்ந்து போனது போலிருந்தது. மேலும் மேலும் வாளியால் தண்ணீரை மொண்டு தலைமீது ஊற்றிக் கொண்டான்.

துடைத்துவிட்ட தரையாக பளிச்சென்று மாறியது மனம். காலையில் சளசள சத்தத்துடன் குழந்தைகள் வரத் தொடங்கினார்கள். அவன் முற்றிலும் புதிய ஆளாக மாறினான். அடுத்த சில கணங்களில் அக் குடிசையிலிருந்து அகர கோஷம் முழங்கத் தொடங்கியது.

சிவகாமிக்குத் தங்கசாமி கடிதம் எழுதித் தந்த செய்தி ஊருக்குள் பரவியதும் பலரும் ஆலோசனை கேட்டுத் தங்கசாமியை நெருங்கத் தொடங்கினார்கள். கடிதம் எழுதித் தரும்படிக் கேட்டுக்கொண்டார்கள். தேவைப்படாத சிலர் கூட பொய்க் காரணம் சொல்லி தங்கசாமியிடமிருந்து இரண்டு வரி எழுதி வாங்கிப் போனார்கள். யார் மனமும் நோகாதபடி எல்லோருக்கும் எழுதிக் கொடுத்தனுப்பினான் தங்கசாமி.

இரண்டு வாரம் கழித்து சிவகாமி நாலைந்து மாம்பழங்களை மடியில் கட்டிக் கொண்டு தங்கசாமியின் குடிசைக்கு வந்தாள். குடத்துக்குப் பக்கத்தில் இருந்த மாடத்தில் மாம்பழங்களை வைத்தாள். வாசலில் அவள் நட்டு வைத்திருந்த செடியில் புதிய தளிர் விட்டிருப்பதைக் கண்டு மிகவும் உவகை கொண்டாள். மின்னும் தளிர்நிறத்தில் மனம் பறிகொடுத்து ஒரு கணம் நின்றாள். “நான் அன்னைக்கே சொல்லல, நல்லா புடிச்சிக்கும்னு. எவ்வளவு அழகா குருத்தெல விட்டிருக்கு பாருங்கஎன்றாள். பிறகு மெல்ல குரலைத் தாழ்த்திஅங்கேர்ந்து ஒரு பதிலும் காணங்களேஎன்றாள்.

தங்கசாமிக்கு அவள் முகத்தில் கவிந்த இருளைக் காணச் சகிக்கவில்லை. உடனேஇன்னொரு கடிதம் எழுதிப் பார்க்கலாமா?” என்று கேட்டான். அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாதவளாகக் குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். “சரி சரி இதுக்கெல்லாம் கவலப்படக் கூடாது. அங்க நெலம எப்படி இருக்குதோ. நாமேள இன்னொன்னு எழுதிப் பாக்கலாமேஎன்றான். அறைக்குள் சென்று தாளை எடுத்து வந்து எழுதத் தொடங்கினான். இந்த முறை அவள் எதுவுமே சொல்லவில்லை. சோகமான முகத்துடன் அவன் முன் உட்கார்ந்திருந்தாள். அவள் விரல்கள் மாங்கன்றின் தளிர்களைத் தடவித்தடவி தந்த வண்ணம் இருந்தன. அவளாகவே தன்னை நினைத்துக்கொண்டான் தங்கசாமி. பிரிவு. வேதனை. நிராசை ஒவ்வொரு சொல்லும் நெஞ்சிலிருந்து புறப்பட்டு வந்தது. துக்கத்தின் கனத்தைச் சொற்களில் ஏற்றிப் புனைந்தான். ஆவேசம் வந்தது போல பத்துப் பதினைந்து நிமிஷம் தொடர்ந்து எழுதினான். எழுதி முடித்துப் புள்ளி வைத்த பிறகுதான் நிமிர்ந்தான். அவன் மனம் நிம்மதியை உணர்ந்தது. மடித்து ஒட்டி முகவரி எழுதி அவளிடம தந்துபோய் போட்டுடுஎன்றான்.

தங்கசாமி -தூணோரம் சாய்ந்து உட்கார்ந்தான். எதிரே வாசலில் மாங்கன்றின் அருகில் சிவகாமி உட்கார்ந்திருந்தாள். தங்கசாமி அவள் முகத்தைப் பார்த்தான். துக்கம் விலகாத முகம் மேகங்களுக்குப் பின்னால் மறைந்த நிலவைப்போல ஒளியற்றுக் கிடந்தது. அந்த நிலையில் அவளைப் பார்க்கும்போது அவன் மனத்தில் ஒருவித தவிப்பு பொங்கியது. அந்தத் தவிப்பை அவளிடம் சொல்லலாமா? அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்? ஆசையாகவா? அனைத்தையும் சகஜமாகப் பகிர்ந்து கொள்ளும் அவள் மனத்தில் என்ன விதமான உணர்வு இருக்கும்? அவள் சொல்வாளா அதை?

அன்று இரவும் -தூக்கமின்றித் தவித்தான் தங்கசாமி. யோசனைகளின் அழுத்தத்தில் தனக்குப் பைத்தியம்தான் பிடிக்கப் போகிறதென்று நினைத்தான். தன் கன்னத்தில் தானே ஓங்கி அறைந்துகொண்டான். மூளையில் இடி விழுந்ததைப் போல இருந்தது. படுத்தான். வெகு நேரத்துக்கப்புறம் எப்போது -தூங்கினோம் என்று தெரியாமலேயே -தூக்கத்தில் ஆழ்ந்தபோது கனவு வந்தது. கனவில் அவன் ஒரு குருவியாக இருந்தான். அருகில் சிவகாமி இன்னொரு குருவியாக இருந்தாள். அவள்நாகப்பா நாகப்பாஎன்று வானில் எழுந்து பறந்து போனாள். பின்னாலேயேசிவகாமி சிவகாமிஎன்று அவன் பறந்து சென்றாள். நீண்ட வெளியில் முடிவுற்றுத் தொடர்ந்தது அந்தப் பயணம். கனவு கலைந்து எழுந்தபோது அவன் உடல் கொதிப்பதைப்போல இருந்தது. தலைக்குள் நெருப்புத் துண்டொன்று எரிந்தது. அடித் தொண்டை வறள எச்சிலைக் கூட்டி விழுங்கினான். ஒரு கணமும் தாமதிக்காமல் எழுந்து வெளியே வந்தபோது பொழுது புலரத்தொடங்கியிருந்தது. கோழியின் கூவலைப் பொருட்படுத்தாமல் படுத்துக்கிடந்ததை எண்ணித் தன் மீதே கோபமும் கொண்டான். வேக வேகமாய்க் கிணற்றிடிக்குச் சென்று வாளி வாளியாகத் தண்ணீரை முகர்ந்து தலைமீது ஊற்றிக் கொண்டான். அதற்கப்புறம்தான் அவன் மனம் அடங்கியது. பிறகு பிள்ளைகள் வந்தபிறகு அட்சர கோஷங்களை எழுப்பியதும் அவனுக்குள் இருக்கும் உலகம் திறந்துகொண்டது. ஒருமித்த அந்தக் கோஷம் அவன் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைத்தது.

சாயங்காலம் சிவகாமியை மறுபடியும் பார்க்க நேர்ந்தபோது அவன் சமநிலை குலைந்து பொடிப்பொடியானது. மெல்ல மெல்ல மன அழுத்தமும் பதற்றமும் கூடியது. தன் அழைப்பிலும் பேச்சிலும் ஆசை வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சினான். அதனால் பேசாமல் இருக்க முயன்றான். முகத்தில் இறுக்கத்தை வரவழைத்துக்கொண்டான். அவன் கோலத்தைக் கண்டு வருத்தத்தில் இன்னும் நெருங்கிவந்துஎன்ன தலை வலிக்குதா?- காய்ச்சலா? கஷாயம் வச்சித் தரட்டுமா, கோயில்லேர்ந்து விபூதி கொண்டு வரட்டுமா-” என்று வாய் ஓயாமல் அடுக்கிக் கொண்டே போனபோதும் கள்ளம் கபடின்றி நெற்றியைத் தொட்டுச் சூடு பார்த்தபோதும் அவன் உடைந்துவிட்டான். ஆனாலும் அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிப்படவில்லை. ஏமாற்றத்தையும் பரிதாபத்தையும் புலப்படுத்தியபடி அன்று மாலை சிவகாமி விடைபெற்றுக் கொண்டாள்.

அன்று இரவும் உறக்கமின்றிப் புரண்டான் தங்கசாமி. இனம் புரியாத இந்த உணர்வுக்கு அவள் மேல் தன்னையறியாமல் எழுந்து படிந்துவிட்ட ஆசைதான் காரணமென்றும் அந்த ஆசையை விட்டொழிப்பது இயலாத காரியமென்றும் அவனுக்குப் புரிந்துவிட்டது. அறிவுக்கு ஒவ்வாத ஒன்றை மனம் ஒப்புக் கொண்டது. அந்த ஆசையில் திளைத்திருக்க ஒவ்வொரு கணமும் தன் மனம் விழைவதை உணர்ந்தான் அவன். மனத்தன் கட்டுப்படுத்தும் விருப்பம் மெல்ல மெல்லக் குறைந்து வலுவிழப்பதையும் ஒரு வெள்ளம் போல ஆசை பெருகிப் பாய்ந்து தன்னை அடித்துச் செல்வதையும் உணர்ந்தான். “சிவகாமிஇருள்வெளியில் மறுபடியும் அழைத்தான். உடல் உருகிக் குழைந்தது. தொடர்ந்து நிம்மதியாக உறங்கினான்.

விடிந்தது. அவன் ஆத்திச் சூடியை நடத்திக் கொண்டிருந்த சமயம் சிவகாமி வந்தாள். அவளைக் கண்டதும் இத்தனை நாட்களாக எழுந்த பதற்றம் எழாதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மாறாக ஒரு கள்ளச் சிரிப்பும் சந்தோஷமும் நெஞ்சில் அடியில் அரும்புவதை உணர்ந்தான். குறும்புப் பார்வையுடன் எதிரில் காற்றில் நெளியும் கன்றுகளைப் பார்த்தான். சிவகாமியின் உருவம் அவற்றில் தெரிந்தது.

இரண்டு வாரம் கழித்துநம்ம கடுதாசிக்கு எந்த பதிலுமே இல்லயே என்ன செய்யலாம்-?” என்றாள் சிவகாமி. “இன்னொன்னு எழுதினா போச்சி. அதுக்கு ஏன் கவலப்படற-?” என்று உடனடியாக ஆறுதல் சொன்னான் தங்கசாமி. அவனைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறோமோ என்ற கவலையில் இருந்தாள் அவள். அவளுக்காக எதையாவது செய்து கொண்டிருப்பதன் வாயிலாக தன் மனத்தில் பசியுடன் இருக்கும் ஆசையைத் தணிக்க முடியும் என்று நம்பினான் தங்கசாமி. உடனே எழுத உட்கார்ந்தான். வரிகள் தாமாகக் கூடிக் கொண்டன. இந்தமுறை முன்புபோலப் புலம்பல் இல்லை. ஆசையின் வெளிப்பாடு.

ஆசையின் கோரிக்கை இளமையின் விழைவு. அவனுக்கு அக்கடிதம் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. “போவும்போது போட்டுடுஎன்று ஒட்டி அவளிடம் நீட்டினான்.

தங்கசாமியின் மனத்தில் புது வெள்ளம் போல ஆசை வளர்ந்துக் கொண்டே இருந்தது. அல்லும் பகலும் அவள் சிந்தனையாகவே இருந்தான். தவறுதலாகச் சில பிள்ளைகளைக் கூடசிவகாமிஎன்று கூப்பிட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான். அடுத்தடுத்து சிவகாமிக்கென்று எழுத இருக்கிற கடிதங்களுக்கான வரிகளைப் புனைவதிலும் அவற்றை மனப்பாடம் செய்வதிலும் அவன் மனம் ஈடுபடத் தொடங்கிவிட்டது-. பத்தி பதினைந்து கடிதங்களுக்கான சங்கதிகளை அவன் மனம் எப்போதும் அவளுக்காகச் சுமந்து கொண்டு இருந்தது., அவள் வராமல் இருந்தால்தான் அவள் மீதான ஆசை அருவியில் தொடர்ந்து நனைந்து கொண்டிருக்க முடியும் என்று எண்ணுவான். உடனே அவள் வரவே கூடாது கடவுளே என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்வான். அடுத்த கணமே அது எவ்வளவு மடத்தனம் என்ற எண்ணமெழும். தான் எவ்வளவு -தூரத்துக்கு அற்பமாக சிந்திக்கிறோம் என்று தோன்றியது. ஒரு புழுவைப்போல தன்னை அருவருப்பாக உணர்வான். எல்லாமே ஒரு சில கணங்கள் வரைக்கும்தான். அதற்கப்புறம் சிவகாமியின் சிரித்த முகம் மனத்திலெழும். கூடவே ஆசையின் குடைவிரியும்.

நாட்கள் மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் உருள உருள தங்கசாமியின் திண்ணைப்பள்ளியின் பெருமை அடுத்தடுத்து ஊர்களுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. பலரும் தம் பிள்ளைகளைக் கொண்டுவந்து சேர்த்தார்கள். அங்கேயே தங்கி அவனுக்குச் சேவை செய்து கல்வியறிவு பெறட்டும் என்கிற உத்தேசத்துடன் சிலர் தம் பிள்ளைகளை விட்டுச் சென்றார்கள். அவன் அந்த ஊருக்கே அறிவூட்ட வந்தவன் என்றும் அவனால் குழந்தைகளின் பேச்சிலும் நடத்தையிலும் அறிவுத் திறமையிலும் வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும் பேசிக் கொண்டார்கள். அவன் மடியில் உட்கார்ந்துஹரிநமோத்து சிந்தம்பயிலத் தொடங்கும் குழந்தையின் நாவில் சரஸ்வதி நடம் புரிவது நிச்சயம் என்று நம்பிக்கை பரவியது. அவன் குடிசையின் உருவம் கல் கட்டிடமாக மாறியது. ஊரார்கள் மாற்றிக் கொடுத்தார்கள். அங்கிருந்து அல்லும் பகலும் எழும் அட்சரகோஷமும் பாடல்களின் கோஷமும் அந்த ஊருக்கே பெருமையைக் கொண்டு தரும் என்று நம்பினார்கள் அவர்கள். சிவகாமியின் கன்றுகள் முட்டிக்கால் உயரத்துக்கு வளர்ந்து காற்றில்  அசைந்தபடி அவள் நினைவுகளை அவனுக்குச் சதாகாலமும் தந்து கொண்டிருந்தன.

சிவகாமி பேச வரும்போதெல்லாம் ரத்த நாளங்களில் ஏதோ ஒரு விதாமான இசை எழுந்து பரவுவதை உணர்ந்தான் தங்கசாமி. உள்ளுக்குள் உதடு குவித்துசிவகாமி, சிவகாமிஎன்று ஆயிரம் முறை அழைத்துப் பார்த்துக் கொள்வான். அவள்கடுதாசிஎன்று தொடங்குவதற்குள் அவன் தாளை எடுத்துக் கொண்டு எழுத உட்கார்ந்துவிடுவான்.

ஒரு வாரம் கடந்தபிறகு ஒருநாள் காலையில் வழக்கமாய் வரும் நேரத்துக்குச் சிவகாமி வரவில்லை. அவள் இதோ வரக்கூடும் இதோ வரக்கூடும் என்று காத்திருந்தான் தங்கசாமி. நேரம் மெல்லமெல்ல கடந்தபடி இருந்தது. இருப்பினும் அவளைக் காணவில்லை. எவ்வளவோ பெரிய காற்று மழையிலும் -கூட தவறியதில்லை அவள். உடலுக்குச் -சுகக்கேடாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. அமைதி இழக்கத் தொடங்கினான். கடுமையான முயற்சியின் பயனாக அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருந்தான். பள்ளியை நோக்கி வரும் ஒவ்வொரு உருவத்தையும் கூர்ந்து பார்த்தான். கால் கொலுசின் ஓசைக்காக அவன் காதுகள் கூர்மையாகக் காத்திருந்தன. கடைத்தெருப்பக்கம் போயிருந்த மாணவனொருவன் ஓடிவந்துசிவகாமி அக்கா வீட்டுக்குச் சிலோன் மாமா திரும்பி வந்துட்டாருஎன்ற செய்தியைக் கொண்டு வந்தான்.

என்னடா?-” என்றான் ஒரு கணம் குழப்பமும் அதிர்ச்சியுமாக.

அச்சிறுவன் சொன்னதையே திரும்பிச் சொன்னான். அவனால் அச்செய்தியை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. மறுகணமே சமாளித்துக் கொண்டுஅப்படியா? நல்லதுஎன்றான். அவன் பார்வை அருகில் இருந்த மாங்கன்றின் மேல் பதிந்து கிடந்தது.

நண்பகலுக்கப்புறம் செய்தியைச் சொல்ல சிவகாமியே ஓடி வந்துவிட்டாள். முகம் கொள்ளாத சிரிப்பு. அகன்ற கண்களின் ஆனந்தம் மிதந்தபடி இருந்தது. அவள் நிறமே மாறியிருந்தது.

அது வந்துட்டுதுங்க. எல்லாம் ஒங்கள மாதிரி பெரியவங்க செஞ்ச ஒத்தாசைதாங்கஅருகிலிருந்த சிறுவனொருவனை இழுத்து அவனது தோள்களில் கையை அழுத்தியபடி பேசினாள் சிவகாமி. நிதானமாக அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் தங்கசாமி.

அது ஊரிலேயே இல்லைங்களாம். இங்கேர்ந்து போனதுமே ஏதோ தோட்டத் தகராறில் ஜெயில்ல போட்டுட்டாங்களாம். எட்டு வருஷமாம். வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்குது அதுக்கு. ஜெயில்ல அடி வாங்கி ஒரு கையும் காலும் உழுந்து போயிடுச்சி. இடுப்ப இழுத்துஇழுத்து நவுறுத பாக்கறதுக்கே மனசுக்கு இம்சையாக இருக்குது. காலங்காத்தாலே வாசல்ல வந்து சிவகாமின்னு கூப்டப்போ ஒரு நிமிஷம் உயிரே உண்டு இல்லன்னு ஆயிடுச்சி. சிங்கம்மாதிரி கம்பீரமா ஊரவிட்டுப் போன மனுஷன் இப்படி அரயும் கொறயுமா கொண்டாந்து போட்டிருக்கா ஆத்தா.. என்ன செய்யறதுன்னு புரியல. என்னமோ இந்த அளவுக்காவது எம்மேல கருண இருந்ததே. அதுவே பெருசுதான்”.

அச்சிறுவனின் தலையில் விரல்களை அளையவிட்டபடியும் அவன் தலைமுடியை நீவிவிட்டபடியும் அருகிலிருந்து மரக்கன்றுகளைப் பார்த்தபடியும் நிறுத்திநிறுத்திச் சொல்லி முடித்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. இருப்பினும் அதில் அமைதியும் திருப்தியும் தெரிந்தன. அப்போதுதான் தங்கசாமி எதையும் பேசவில்லை என்பதை அவளே உணர்ந்தாள்.

என்னங்க நா பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க எதுவுமே சொல்லாமகொள்ளாம இருக்கீங்களேஎன்று கேட்டாள்.

தங்கசாமி அவளைப் பரிவோடு பார்த்தான். அவனுக்கு உடல் நடுங்குவதைப் போல இருந்தது. மெதுவான குரலில்ரொம்ப சந்தோஷம் சிவகாமி. நீ செஞ்ச புண்ணியம் வீண் போவல எல்லாத்துக்கும் ஒன் நல்ல மனசுதான் காரணம்என்றான்.

நீங்க ஒருதரம் வந்து பாக்கணும். ஆதரவா நாலு வார்த்த சொல்லணும். ஒங்கள மாதிரி படிச்சவங்க சொன்னா அதுக்கு தைரியம் வரும்என்று தன் கோரிக்கையை முன் வைத்தாள் சிவகாமி. அவன் தலையை மட்டும் அசைத்தபடி சிரித்தான். அதயே கூட இங்க கூட்டாந்துருவேன். ஆனா அது நவுந்து வரதப் பாத்தா கொடுமையா இருக்குது. அதான்என்று தொடர்ந்தாள்.

அவசியமா வரேன் சிவகாமிஎன்று அவசரமாகச் சொன்னாள் தங்கசாமி. அவள் கரைந்து அழுதுவிடுவாளோ என்று பயமாக இருந்தது.

உங்களோட எல்லாப் புள்ளங்களையும் கூட்டாரணும். அப்பத்தான் நமக்கு இவ்வளவு பேரான்னு அதுக்கு ஒரு தைரியம் கெடைக்கும்என்றாள். கூடவே அருகில் இருந்த பிள்ளைகள் பக்கம் திரும்பிபுள்ளைங்களா, நீங்க எல்லாரும் வீட்டுக்கு வரணும் தெரியுதாஎன்று அழைப்பு விடுத்தாள். “சரிங்கக்காஎன்று ஒரே குரலில் சங்கீதம் எழுப்பினார்கள் அவர்கள். “என் தங்கக் கட்டிங்கஎன்றபடி அவர்கள் பக்கம் வெறும் கைகளை நீட்டி மடக்கித் தலையில் வைத்து நெட்டி முறித்தாள். அப்புறம் மடமடவென்று பள்ளி வேலைகளை முடித்து வீட்டுக்குச் சென்றாள்.

சாயங்காலங்களில் வெறுமையாய் ஆளற்றிருந்த வாசலை வெறித்தபடி வெகுநேரம் உட்காந்திருந்தான் தங்கசாமி. சுற்றிலும் கிடக்கும் பொடிக்கற்களைப் பொறுக்கித் தள்ளி வீசியபடி நேரத்தைக் கழித்தான் அவன். மனத்தில் குருவிசிவகாமி சிவகாமிஎன்று கூவியபடி பறந்து கொண்டே இருந்தது. சிவகாமிக் குருவி தன் ஜோடிக் குருவியோடு தரையில் இறங்கிய பிறகும் கூட பழக்கத்தின் காரணமாக அக்குருவி சிவகாமியின் பெயரைச் சொல்லியவண்ணம் பறந்தபடியே இருந்தது. “இறங்கு இறங்குஎன்று அக்குருவிக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்தான் அவன். ஆனால் தடையற்ற வானில் சிவகாமியின் பெயரைச் சொல்லிப் பறந்தபடி இருந்தது அது. “இறங்கு இறங்குஎன்று அக்குருவிக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்தான் அவன். இறுதியில் உதடு குவித்து வெறும் வெளியைப் பார்த்து அவனும்சிவகாமிஎன்றான். மறுமுறையும்சிவகாமிஎன்று அழைத்தான். அடுத்த கணம்தான் தான் செய்ததென்ன எனபதை அவன் மனம் உணர்ந்தது. துணுக்குற்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு எழுந்து ஏரிக்கரையின் பக்கம் நடக்கத் தொடங்கினான்.

மறுநாள் பிள்ளைகள்அக்கா வீட்டுக்குப் போவலாமா?” என்றார்கள். அவன்நாளைக்கு பார்க்கலாம்என்று இழுத்தான். அடுத்த நாளும் அதே வேளையில் பிள்ளைகள்அக்கா வீட்டுக்கு போவலாமா? என்றார்கள். அப்போதும் பயணத்தைத் தள்ளிப் போட்டான். நாளை நாளை என்று நாட்கள் கடந்தபடி இருந்தன. இடையிடையே சிவகாமியும் வந்து ஞாபகப்படுத்தியபடி இருந்தாள். “உங்களயே எதிர்பார்த்துட்டிருந்திச்சி அது. உங்கள பாக்கணும்னு அதுக்கு ரொம்ப ஆசை. நாமலே போவலாமான்னு எங்கூடவே கௌம்பிச்சி. நான்தான் நிறுத்தி வச்சிட்டேன்என்று நாளுக்கொரு தகவலைச் சொன்னாள்.

ஒரு வழியாக சிவகாமி வீட்டுக்குப் புறப்படும் நாள் முடிவானது. பிள்ளைகள் எல்லாருக்கும் மகிழ்ச்சி., கும்பலாய் ஒரு படை போலத் தெருவில் செல்வது பற்றி அவர்களுக்கு ஏகப்பட்ட கனவுகள் இருந்தன. சிவகாமி அக்காவுக்காக அவர்கள் பைகளில் சின்னச்சின்னப் பரிசுப் பொருட்கள் இருந்தன. தங்கசாமியின் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதில் போட்டா போட்டி இருந்தது. தானே அவனை அழைத்து வந்து வாசலில் நிறுத்தியதாகச் சிவகாமி அக்கார்வின் முன் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி பெருமையடித்துக்கொள்ள ஒவ்வொரு குழதையுமே போட்டி போட்டது. தங்கசாமியும் புத்தாடை அணிந்துகொண்டு தயாரானான். வாசலைத் தாண்டும்போது டஅம் மாங்கன்றுகள் கண்ணில் பட்டன. வாசல்படல் வரைல பிள்ளைகளை அழைத்துச் சென்றவன் சற்றே வயதில் பெரியவனாக இருந்த பையனொருவனை அழைத்து குழந்தைளைக் கூப்பிட்டு சென்று திருப்பி அழைத்துவரும் பொறுப்பைத் தந்தான். பிள்ளைகள் அதிர்ச்சியில் பேச்சற்று நின்றார்கள். “என்ன ஆச்சு, ஏன்?” என்று ஒரு குட்டிக் குழந்தை கேட்டது. அவன் பதிலைப் பொருட்படுத்தாமல்நீங்களும் வாங்க. நீங்க வந்தாத்தான் நல்லா இருக்கும்என்று கெஞ்சியது. அவன் எல்லாக் குழந்தைகளையும் கையை உயர்த்தி அடக்கினான்.

மாங்கன்னுக நல்லா உயரமா வளந்துடுசில்ல. யாரும் இல்லாத நேரத்துல ஆடுமாடுங்க வந்துட்டா வீணாப் போய்டுமில்லையா? ஒரு வேலி போட்டுறன். நீங்கள்ளாம் போய்ட்டு வாங்க. அக்காவ கேட்டதா சொல்லுங்கஅவன் அவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தான். குழந்தைகள் ஒருவர் தோளை ஒருவர் தொட்டுப் பிடித்தபடி சங்கிலி போல நீளமாகச் சென்றார்கள். பார்வையிலிருந்து மறைகிற வரைக்கும் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வாசலுக்குத் திரும்பிய தங்கசாமி மாங்கன்றுகளின் அருகில் உட்கார்ந்து கொண்டான்.

(ஆரண்யம் - 1999)