1920இல் டிசம்பர் மாத இறுதியில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகள் முன்வைத்த ஒத்துழையாமைப் போராட்டத் திட்டங்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நீதிமன்றங்களை விலக்கவேண்டும், சட்டமன்றங்களை விலக்கவேண்டும், வெளிநாட்டுத் துணிகளை விலக்கவேண்டும் என்ற மூன்று விலக்குகளும் காந்தியடிகளுடைய தாரக மந்திரங்களாக இருந்தன. 1921 ஆம் ஆண்டு முழுதும் காந்தியடிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஓய்வில்லாமல் பயணம் செய்து மக்களுடைய கவனத்தை ஒத்துழையாமை இயக்கத்தின்பால் ஈர்த்தார். அவருடைய சொற்கள் வன்முறையில் ஈடுபடுவதற்குத் துடித்துக்கொண்டிருந்த மக்களுடைய மனப்பாங்கை மாற்றியது. நாட்டுக்காக தியாகம் செய்யத் தயங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஏதேனும் ஒரு வகையில் நாட்டுக்குத் தொண்டாற்றும் எண்ணத்தை ஊட்டியது.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் 21.09.1921 அன்று
மதுரைக்கு வந்திருந்தார். மறுநாள் காலையில், வழக்கமாக அணியும் ஆடைகளைக் களைந்து இடுப்புவேட்டியோடும்
மேல்துண்டோடும் மதுரையில் மேடையில் நின்று மூன்று விலக்குகளைப்பற்றியும் சுருக்கமாக
மக்களிடையில் உரையாற்றினார். தன் ஆடைமாற்றத்துக்கான காரணங்களையும் தெரிவித்தார். பிறகு,
அங்கிருந்து நெல்லையை நோக்கிப் புறப்பட்டார். இடையில் பல ஊர்களில் வாகனத்தை நிறுத்தி
மக்களைச் சந்தித்தபடி சென்றார்.
23.09.1921 அன்று கைலாசபுரத்தில் ஆற்றங்கரையில் மாலையில் நடைபெற்ற
கூட்டத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டுவந்து அவரை வரவேற்றனர்.
அன்று ஒரு கதர்த்துணியில் அச்சிடப்பட்டிருந்த வரவேற்புரையை திரிகூடசுந்தரம் பிள்ளை
என்னும் தொண்டர் படித்துக் கொடுத்தார். நீதிமன்றத்தை விலக்குவதைவிட ஒருபடி மேலே சென்று
வழக்கறிஞர் தொழிலையே துறந்த அர்ப்பணிப்புணர்வு கொண்ட தொண்டர் அவர். திரிகூடசுந்தரம்
பிள்ளையின் ஈடுபாட்டையும் தியாகத்தையும் அறிந்து, அவரை அந்த மேடையிலேயே காந்தியடிகள்
பாராட்டினார்.
மறுநாள் காலையில் திட்டுவிளை என்கிற ஊரில் திரிகூடசுந்தரம் பிள்ளை
அந்நிய ஆடை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி தொண்டர்களுடன் ஊர்வலம் சென்றார். அந்த
ஊர்வலத்தில் திட்டுவிளைக்கு அருகிலிருந்த பூதப்பாண்டியைச் சேர்ந்த பதினைந்து வயதே நிறைந்த
இளைஞரொருவரும் கலந்துகொண்டு முழக்கமிட்டபடி வந்தார். ஊர்த்திடலில் ஊர்வலம் வந்து நின்றதும்
அந்நியநாட்டு ஆடைகளை விலக்குவது தொடர்பாக திரிகூடசுந்தரம் பிள்ளை உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தன்னோடு கொண்டுவந்திருந்த அந்நிய நாட்டு ஆடைகளை
ஓரிடத்தில் குவித்து தீக்கிரையாக்கினர். அப்போது, தான் அந்நிய நாட்டு ஆடையை அணிந்திருப்பதை
நினைத்து அந்த இளைஞரின் மனம் நாணம் கொண்டது. உடனே தன் ஆடைகளை அங்கேயே கழற்றி கொழுந்துவிட்டு
எரியும் தீயில் வீசினார். அதற்குப் பிறகே அவர் மனம் அமைதியடைந்தது. உடலில் எஞ்சியிருந்த
கோவணத்துடனேயே வீட்டுக்குத் திரும்பினார். அன்றுமுதல் கதராடையைத் தவிர வேறு எந்த ஆடையையும்
அணிவதில்லை என உறுதிபூண்டார். கதர்மீது ஆழ்ந்த பற்று கொண்ட அந்த இளைஞரின் பெயர் சொறிமுத்து
என்கிற ஜீவா என்கிற ஜீவானந்தம்
நாளுக்குநாள் ஜீவாவுடைய கதர் மீது ஈடுபாடு பெருகியது. தன்னோடு
இருக்கும் பலரை அவர் கதரணியத் தூண்டினார். இயற்கையிலேயே அவர் கவிதையுணர்வும் கற்பனை
வளமும் கொண்டிருந்தார். பூதப்பாண்டியில் தங்கப்பன் பிள்ளை என்னும் அஞ்சல்துறை அதிகாரி
தினந்தோறும் சிறுவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டதன்
விளைவாக ஜீவாவுக்கு புதிய கருத்துகள் மீது நாட்டம் பிறந்தது. பேச்சாற்றலும் பாப்புனையும் ஆற்றலும் அவரிடம் இயல்பாகவே
நிறைந்திருந்தன. பெருகும் கதர்ப்பற்றின் விளைவாக கதர்வெண்பா நாற்பது, இராட்டினவெண்பா
நாற்பது என எண்பது வெண்பாக்களை எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ஜீவா.
ஜீவா பள்ளி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில்
எதிர்பாராத விதமாக அவருடைய தாயார் இறந்துவிட்டார். மூத்த மகன் என்ற முறையில் அவரே இறுதிச்சடங்கு
செய்யவேண்டும். அவருடைய குடும்ப வழக்கப்படி அன்று அவர் தலைமழித்துக்கொண்டு உறவினர்கள்
கொண்டுவந்து கொடுக்கும் புதுத்துணியை அணிந்துகொள்ள வேண்டும். அந்த இடத்திலும் ஜீவா தனக்கு கதர்த்துணிகளையே வழங்கவேண்டும்
என்று வற்புறுத்தினார். அது மரபல்ல என அங்கிருந்தோர் அனைவரும் எடுத்துரைத்த போதும்
ஜீவா அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கதராடையைத் தவிர வேறு எந்த ஆடையையும் ஏற்க ஜீவாவுக்கு
விருப்பமில்லை. வேறு வழியில்லாமல் ஜீவாவுக்குப் பதிலாக ஜீவாவின் தம்பி இறுதிச்சடங்குகளைச்
செய்தார். அவருடைய கதர்ப்பற்று நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே சென்றது.
கதர் அணிவதைப்போலவே தீண்டாமை ஒழிப்புக்கொள்கையிலும் ஜீவா உறுதியாக
இருந்தார். மேல்சாதிக்காரர்கள் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடந்து செல்வது
தடுக்கப்பட்டிருந்த காலம் அது. அந்தப் பழைய மரபை உடைக்கும் வேகத்தில் தாழ்த்தப்பட்டோர்
சிலரை ஊர்வலமாக அழைத்துக்கொண்டு மேல்சாதிக்காரர்கள் வசிக்கும் தெருக்கள் வழியாகச் சென்று
பூதப்பாண்டி ஆல்யத்துக்குள் செல்ல முயற்சி செய்தார். அச்செயல் அங்கு வசித்த மேல்சாதிக்காரர்களுக்கு
சீற்றத்தை ஊட்டியது. நேரிடையாக பலமுறை அழைத்து கண்டித்தும் ஜீவா அதைப் பொருட்படுத்தாததால்,
ஊர்க்காரர்கள் ஜீவாவுடைய தந்தையாரைச் சந்தித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜீவாவின்
செய்கையால் மனவருத்தம் கொண்ட அவருடைய தந்தையார் அவரை அழைத்துத் திருத்த முயற்சி செய்தார்.
வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றாலும் செல்வேனே தவிர, ஏற்றுக்கொண்ட கொள்கையைக் கைவிடமுடியாது
என்று தெரிவித்த ஜீவா அந்த இளம்வயதிலேயே பூதப்பாண்டியைவிட்டு வெளியேறினார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில்
சோமநாதர் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தக்கூடாது
என்கிற நடைமுறையை எதிர்த்து நாராயணகுருவின் சீடரும் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவருமான
டி.கே.மாதவன் 30.03.1924 அன்று ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார். அவரும் பிற தொண்டர்களும்
அறவழியில் எதிர்ப்பைத் தெரிவித்தபடி ஊர்வலமாகச் சென்றனர். திருவிதாங்கூர் அரசு அவர்களை
உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தது. அந்தக் கைதைக் கண்டித்து ஒவ்வொரு நாளும்
தெருமுனைக் கூட்டங்களும் ஊர்வலங்களும் வைக்கத்தில் தொடர்ந்து நடைபெற்றன. போராட்டக்காரர்கள்
தங்குவதற்கு ஏதுவாக நாராயண குரு பேளூர் மடத்தில் இடமளித்தார். தமிழ்நாடு காங்கிரஸ்
சார்பில் ராஜாஜி, ஈ.வே.ரா., அய்யாமுத்துக் கவுண்டர், வரதராஜுலு நாயுடு, பெருமாள் நாயுடு
உள்ளிட்ட பல தலைவர்களும் வைக்கம் சென்று போராட்டத்தில் கலந்துகொண்டனர். தீண்டாமை எதிர்ப்பை
கொள்கையாகக் கொண்ட இளைய தொண்டரான ஜீவாவும் உற்சாகத்துடன் வைக்கம் சென்று போராட்டத்தில்
பங்கேற்று சிறைக்குச் சென்றார்.
வைக்கத்திலிருந்து விடுதலை பெற்று திரும்பும் நேரத்தில் நாஞ்சில்
நாட்டில் சுசீந்திரம் என்னும் ஊரில் ஆலயப்பிரவேச போராட்டம் தொடங்கியிருந்தது. குமரி
மாவட்டத்தைச் சேர்ந்த எம்.வி.நாயுடு தலைமையில் அங்கமுத்து, காசிப்பண்டாரம், சிவமுத்துகருப்பப்பிள்ளை,
காந்திராமன், அக்கரை நீலகண்ட பிள்ளை, செய்குதம்பிப் பாவலர் போன்றோர் அப்போராட்டத்தை
முன்னின்று நடத்தினர். அவர்களுடன் இளைஞரான ஜீவாவும் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் முழக்கமிட்டுப்
பாடுவதற்காகவே ‘வழிவிடுவீர் வழிவிடுவீர்’ என்றொரு பாட்டை அவர் எழுதி மற்றவர்களுடன்
இணைந்து பாடிக்கொண்டே நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தப் பாடலின் வரிகளால்
ஊர்வலத்தினர் உற்சாகம் பெற்று உரத்த குரலில் முழக்கமிடத் தொடங்கினர். ஒருநாள் அந்த
முழக்கங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத மேல்சாதிக்காரர்கள் இணைந்து ஊர்வலத்தினரைக் கடுமையாகத்
தாக்கினர். அத்தாக்குதலில் ஜீவா படுகாயமுற்றார். படுத்த படுக்கையாகக் கிடந்து தொடர்சிகிச்சையில்
சிறிது காலம் இருந்த பிறகே அவர் உடல்நலம் தேறியது.
சுசீந்திரம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருவிதாங்கூர் சமஸ்தானப்
பகுதிக்குள் இருக்க ஜீவா விரும்பவில்லை. அச்சமயத்தில் சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயர்
நடத்தி வந்த பரத்வாஜ ஆசிரமத்தில் பிராமண மாணவர்களுக்கு தனியிடத்தில் உணவளிக்கும் வழக்கம்
நடைமுறையில் இருப்பதை எதிர்த்து வரதராஜுலு நாயுடுவும் ஈ.வே.ரா.வும் ஒரு கிளர்ச்சியைத்
தொடங்கியிருந்தனர். அந்தப் போராட்டத்தையே ஒரு காரணமாகக் கொண்டு, ஜீவா ஊரிலிருந்து புறப்பட்டு
சேரன்மாதேவிக்குச் சென்று அக்கிளர்ச்சியில் கலந்துகொண்டார்.
சேரன்மாதேவியில் நடைபெற்ற நிகழ்ச்சி, புதியதொரு ஆசிரமத்தைத்
தானே தொடங்கி நடத்தும் விருப்பத்தை ஜீவாவிடம் உருவாக்கியது. அதற்குத் தேவையான உதவிக்காக
நண்பர்களைச் சந்திப்பதற்காக காரைக்குடிக்குச் சென்றார். காரைக்குடிக்கு அருகில் உள்ள
சிராவயல் என்னும் கிராமத்தில் நண்பரொருவர் தனக்குச் சொந்தமான நிலத்தை வழங்கினார். அங்கே
‘காந்தி ஆசிரமம்’ என்னும் பெயரில் ஜீவா ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார். பூதப்பாண்டி ஆலயப்பிரவேசப்
போராட்டத்தின்போது ஜீவாவால் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட மண்ணடி மாணிக்கம்,
ஜீவாவின் பள்ளித்தோழர் டி.என்.கோபாலன், சி.பி.இளங்கோ போன்றவர்கள் அனைவரும் ஆசிரமத்துக்கு
வந்து ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். சாதி வேறுபாடு இன்றி அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர்.
ஆசிரமத்தில் நூல்நூற்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டு, மாணவமாணவிகள் அனைவருக்கும் அங்கு
நூல்நூற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. வகுப்பு நேரங்களில் தேவாரம், திருவாசகம், திருக்குறள்,
பாரதியார் பாடல்கள் ஆகியவை கற்பிக்கப்பட்டன. ஆசிரமத்துக்கு வந்து படிக்க முடியாதவர்களுக்காக
சேரிப்பகுதிகளில் இரவுநேரப் பள்ளிக்கூடங்களும் நூல் நூற்கும் நிலையங்களும் தொடங்கி
நடத்தப்பட்டன.
ஒருமுறை சிராவயல் ஆசிரமத்தைச் சேர்ந்த பள்ளிக்கு வ.உ.சிதம்பரம்
பிள்ளை வந்தார். அப்போது நூல்நூற்கும் நேரம். சிறுவர்களும் சிறுமிகளும் நூல்நூற்றுக்கொண்டிருந்தனர்.
ஆண்பிள்ளைகள் கைராட்டினத்தில் நூல் நூற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து வ.உ.சி. சலித்துக்கொண்டார்.
“ஆண்பிள்ளைகளை நூல்நூற்க வைக்கும் இந்த அமைப்பு முட்டாள்தனமானது. வாளேந்த வேண்டிய கைகள்
ராட்டை சுற்றுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று ஜீவாவிடம் முறையிட்டார்.
ராட்டையில் நூல்நூற்பது தேசபக்தியின் அடையாளம் என்றும் உழைப்பில் ஆண்,பெண் பேதமில்லை
என்றும் ஜீவா பொறுமையுடன் வாதாடினார். தற்செயலாக அன்று மாலையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில்
‘பெண்களும் விடுதலையும்’ என்னும் தலைப்பில் ஜீவா உரையாற்ற நேர்ந்தது. அக்கூட்டத்தில்
கலந்துகொண்ட வ.உ.சி.யும் அந்த உரையைக் கேட்டார். அன்றுமுதல் அவர் தன் எண்ணப்போக்கை மாற்றிக்கொண்டார்.
கதர்ப்பிரச்சாரத்துக்காகவும் கதர்நிதி திரட்டுவதற்காகவும் சபர்மதியிலிருந்து
புறப்பட்ட காந்தியடிகள் கர்நாடகப்பயணத்தை முடித்துக்கொண்டு 24.08.1927 அன்று தமிழகத்தின்
எல்லைக்குள் வந்தார். சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருச்சி, குடந்தை, மதுரை என பல
நகரங்கள் வழியாக காரைக்குடிக்கு 26.09.1927 அன்று வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டுப் பயணத்தில் அவரைச் சந்திக்க வந்த பலரும்
கதர் பற்றியோ தீண்டாமை பற்றியோ கேட்கப்பட்ட கேள்விகளைவிட பிராமணர் பிராமணரல்லாதோர்
பிரிவு தொடர்பாகவும் வருணாசிரம தர்மம் தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்விகளே அதிகமாக
இருந்ததைக் கண்டு அவர் வியப்பிலாழ்ந்தார். வேறுபாடுகளை முன்வைத்து யோசிப்பதைவிட, மனிதர்கள்
சத்தியத்தை முன்வைத்து யோசிப்பது மிகமிக முக்கியம் என்பதையே அவரும் ஒவ்வொரு இடத்திலும்
வலியுறுத்திப் பேசினார்.
சிராவயல் ஆசிரமத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்களையும் சில மாணவர்களையும்
அழைத்துக்கொண்டு ஜீவாவும் கும்பலிங்கமும் காந்தியடிகளைச் சந்திக்க காரைக்குடிக்குச்
சென்றிருந்தனர். ஏறத்தாழ அரைமணி நேரம் அச்சந்திப்பு நீடித்தது. ஜீவா நடத்தும் ஆசிரமத்தைப்பற்றி
அறிந்ததும் காந்தியடிகள் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போது ஜீவாவோடு சென்றிருந்த
மாணவர்களுடைய தலைமுடி வளர்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. காந்தியடிகள் அந்த ஆசிரியர்களிடம்
“மாணவர்கள் ஏன் இவ்வளவு முடியை வளர்த்திருக்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜீவா
“இவர்கள் மிகவும் ஏழைகள். உணவுக்குச் செலவழிக்கவே பணமில்லாத சூழலில் முடிவெட்டிக்கொள்ளச்
செலவு செய்யப் பணமில்லை” என்று பதிலளித்தார். உடனே காந்தியடிகள் ஆசிரியர்களைப் பார்த்து
‘ஆசிரியர் என்றால் என்ன பொருள்?” என்று கேட்டார். “கல்வி கற்றுக்கொடுப்பவர்” என்று
ஓர் ஆசிரியர் பதில் சொன்னார். “கல்வியை மட்டும்தானா ஆசிரியர் கற்றுக்கொடுக்க வேண்டும்?
எல்லா வகையிலும் அவர்களுடைய வாழ்க்கை செம்மையாக நடைபெற ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டாமா?”
என்று மற்றொரு கேள்வியைக் கேட்டார் காந்தியடிகள். ”ஆமாம்” என்று ஆசிரியர்கள் சொன்னதும்
“அப்படியானால் இந்த மாணவர்களின் தலைமுடியைக் களைவதையும் ஆசிரியர்களே மேற்கொள்ளக் கூடாதா?”
என்று கேட்டார். தொடர்ந்து “உங்களுக்கெல்லாம் முடிதிருத்தம் செய்வது என்பது இழிவான
வேலை என்கிற எண்ணம் இருக்கிறதுபோலத் தெரிகிறது. நானே இவர்களுக்கு முடி திருத்திவிடுகிறேன்”
என்றபடி அருகில் நின்றிருந்த மகனைப் பார்த்து கத்தரிக்கோல் எடுத்து வரும்படி பணித்தார்.
உடனே ஆசிரியர்கள் அவரைத் தடுத்து “நீங்கள் சொல்ல வருவது எங்களுக்குப் புரிந்துவிட்டது.
நாங்களே செய்கிறோம்” என்று சொன்னார்கள். “சொல்லிக் கொடுப்பவன் மட்டுமல்ல, செயலிலும்
தாம் சொல்வதைச் செய்து காட்டுபவனே நல்லாசிரியன்” என்று கூறிய காந்தியடிகள் அனைவரையும்
வாழ்த்தி அனுப்பினார்.
அடுத்த நாள் காலையிலேயே காந்தியடிகள் சிராவயல் ஆசிரமத்தைப் பார்க்க
ஆவலோடு சென்றார். அங்கு நூல்நூற்பு நிலையத்தில் பிள்ளைகள் அனைவரும் நூல்நூற்பதை மகிழ்ச்சியுடன்
பார்த்து, அவர்களுக்கு ஆசி வழங்கினார். ஆசிரமத்தின் சுகாதார வேலைகளை ஆசிரியர்களும்
மாணவர்களும் பகிர்ந்துகொள்வதையும் பாராட்டினார். தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்பதற்காக
ஜீவா மேற்கொண்டிருந்த பணிகளைக் கண்டு நிறைவை வெளிப்படுத்தினார். பேச்சோடு பேச்சாக “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?”
என்று ஜீவாவிடம் கேட்டார். ஒரு கணமும் தயங்காது ஜீவா “இந்தியாதான் என் சொத்து” என்று
பதில் சொன்னார். அதைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள் “இல்லை, இல்லை. நீங்கள்தான் இந்தியாவின்
சொத்து” என்று தட்டிக் கொடுத்து பாராட்டினார். அப்போது ஜீவா தன் கையால் நூற்ற பத்தாயிரம்
கெஜம் நூலை காந்தியடிகளுக்குப் பரிசாகக் கொடுத்தார்.
இந்தியர்களின் மனப்போக்கு, ஆங்கிலேயர் ஆட்சி, தேசபக்தி, கதராடைக்கான
ஆதரவு என பல அம்சங்களைத் தொட்டு காந்தியடிகளிடம் கேள்விகளைக் கேட்ட ஜீவா அன்றைய காலகட்டத்து
உரையாடலாக இருந்த வருணாசிரம தர்மம் தொடர்பாகவும் கேட்கத் தொடங்கினார். அவருடைய எல்லாக்
கேள்விகளுக்கும் காந்தியடிகள் அமைதியாகப் பதில் சொன்னார். ”கீதையை நம்பும் நீங்கள்
குணத்துக்கும் தர்மத்துக்கும் தக்கபடி நான்கு வர்ணங்களை நான் படைத்திருக்கிறேன் என்ற
கீதையின் வாக்கியத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?” என்று கேட்டார் ஜீவா. ”உண்டு”
என்று பதில் சொன்னார் காந்தியடிகள். “அப்படியானால் சாத்வீகத் தன்மையிலும் நன்னெறி ஒழுக்கத்திலும்
சிறந்தவராக விளங்கும் உங்களை ஒரு பிராமணராகக் கருதலாமா? பிராமணனாகப் பிறந்திருந்தாலும்
தீய ஒழுக்கத்துடன் இருப்பவனை சூத்திரன் என்று சொல்லலாமா?” என்று மீண்டும் கேட்டார்
ஜீவா. “நான் ஒரு நல்ல வைசியன். தீய ஒழுக்கமுடைய பிராமணன் ஒரு கெட்ட பிராமணன். அப்படித்தான்
நாம் கருத வேண்டும்” என்று புன்னகையுடன் பதில் சொன்னார் காந்தியடிகள். ஜீவாவுக்கு அப்பதில்
நிறைவளிக்கவில்லை. எனினும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் காந்தியடிகளை வழியனுப்பி வைத்தார்.
தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்த ஜீவா, தாழ்த்தப்பட்ட வகுப்பைச்
சேர்ந்த பிள்ளைகளுக்கு கெளதமன், மணிவாசகன், மங்கையற்கரசி, கிளிமொழி என்ற பெயர்களைச்
சூட்டினார். அவர்களுக்கு சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லிக்கொடுத்து, மேடைகளில் அவற்றைச்
சொல்லவும் பாடவும் பயிற்சியளித்தார். பல சிற்றூர்களுக்கு நடந்தே சென்று தீண்டாமை ஒழிப்புப்
பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிற்சில ஊர்களில் அவர் மீது சினம்கொண்ட சிலர் எதிர்பாராத
நேரத்தில் அவரைச் சூழ்ந்து பல தருணங்களில் தாக்கினார்கள். அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு
ஜீவா தொடர்ச்சியாக இயங்கினார். ஒருசமயம் காரைக்குடிக்கு அருகில் கோப்பை நாயக்கன் கோவிலில்
தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக்கூடாது என்பதற்கு எதிராக ஜீவா போராட்டத்தைத் தொடங்கினார்.
உள்ளூர் வைதிகர்களுடைய கோபத்துக்கு ஆளாகி கத்திக்குத்துக்குள்ளானார்.
ஆசிரமத்தின் தலைவராக இருந்த கும்பலிங்கம் பிள்ளைக்கு ஜீவாவின்
போக்கு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1929இல் ஆசிரமத்திலிருந்து
ஜீவா வெளியேறி, சிராவயலுக்கு அருகிலேயே நாச்சியாபுரம் என்னும் சிற்றூரில் ’உண்மை விளக்க
நிலையம்’ என்னும் பெயரில் ஓர் ஆசிரமத்தைத் தொடங்கினார். தேச விடுதலைப் போராட்டமும்
மக்கள் சேவையும் இணைந்த கொள்கைத் திட்டங்களை அவர் அங்கு வகுத்துக்கொண்டார்.
1930இல் காந்தியடிகள் மேற்கொண்ட தாண்டி யாத்திரையைத் தொடர்ந்து
தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் தொடங்கியது. ஜீவாவுக்கு
அப்போராட்டத்தில் கலந்துகொள்ள பெருவிருப்பம் இருந்தபோதும், ஆசிரமவேலைச் சுமைகளிலிருந்து
விடுபட்டுச் செல்ல அவரால் முடியவில்லை. 1931இல் உண்மை விளக்க நிலையம் நாச்சியாபுரத்திலிருந்து
கோட்டையூருக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் கோட்டையூர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜீவா
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1925இல் காங்கிரஸிலிருந்து விலகிய ஈ.வே.ரா. தொடங்கிய சுயமரியாதை
இயக்கத்தின் மீதும் ஜீவாவுக்கு ஈடுபாடு இருந்தது. சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரத்தில்
அந்த இயக்கம் காட்டிய தீவிரம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. 1931இல் ஈரோட்டில் நடைபெற்ற
நவஜவான் மாநாட்டில் ஜீவா கலந்துகொண்டார்.
1932இல் சட்டமறுப்பு இயக்கம் தீவிரமடைந்தபோது காரைக்குடியில்
ஜீவா தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. அச்சமயங்களில் நடைபெற்ற ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும்
ஜீவாவின் சொல்வன்மை மக்களை ஆவேசம் கொள்ளவைத்தது. இதைக் கண்டு கலவரமுற்ற அரசு அதிகாரிகள் 07.01.1932 அன்று காரைக்குடி கூட்டத்தில்
ஜீவா உரையாற்றி முடித்ததும் அவரை நெருங்கி மறுநாள் முதலாக எங்கும் செல்லக்கூடாது என்று
தடையுத்தரவு விதித்தனர். ஜீவா அத்தடையை மீறி அடுத்தநாள் கோட்டையூருக்கு பேசுவதற்காகச்
சென்றார். அதிகாரிகள் உத்தரவை மீறிய குற்றத்துக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்துக்கு
அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு அவருக்கு பத்து மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜீவா அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில் பகத்சிங்கின் தோழர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி
போன்றோரும் இருந்தனர். தற்செயலாக அவர்களைச் சந்தித்த ஜீவா அவர்களுடன் அறிமுகம் செய்துகொண்டார்.
அவர்களுடைய சந்திப்பும் தொடர் உரையாடலும் மெல்ல மெல்ல ஜீவாவிடம் பொதுவுடைமைக் கொள்கையின்பால்
ஈர்ப்பை உருவாக்கியது.
தண்டனைக்காலம் முடிந்து விடுதலை பெற்ற சிறிது காலத்திலேயே ஜீவா
மீண்டும் சிறை செல்ல நேர்ந்தது. இந்த முறை அவர் வேறொரு காரணத்துக்காக தண்டனை பெற்றார்.
தனது மரணத்துக்கு முன்பாக சிறையில் இருக்கும்போதே பகத்சிங் எழுதிய ’நான் ஏன் நாத்திகனானேன்?’
என்னும் ஒரு சிறு பிரசுரம் சிறை அதிகாரிகளின் பார்வையிலிருந்து எப்படியோ தப்பி வெளியே
வந்து பிரசுரமாகி அனைவராலும் பரபரப்பாகப் படிக்கப்பட்டது. அதை ஆர்வத்துடன் படித்த ஜீவா,
அப்பிரசுரத்தின் சாரத்தால் ஈர்க்கப்பட்டு உடனடியாக தமிழில் மொழிபெயர்த்தார். அதை ஈ.வே.ரா.
புத்தக வடிவில் வெளியிட்டார். அதை அறிந்த ஆங்கில அரசு அதைக் குற்றத்துக்குரிய நடவடிக்கையாகக்
கருதியது. மொழிபெயர்த்த குற்றத்துக்காக ஜீவாவுக்கும் வெளியிட்ட குற்றத்துக்காக ஈ.வே.ரா.வுக்கும்
சிறைத்தண்டனை கிடைத்தது. ஜீவாவை நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு நடக்கவைத்து அழைத்துச்
சென்றபோது, சர்க்கஸிலிருந்து தப்பி ஓடிய ஒரு விலங்கை சங்கிலியால் பிணைத்து நாற்புறமும்
எச்சரிக்கையாக இழுத்துப் பிடித்தபடி கூண்டுக்கு நடத்திச் செல்வதுபோல காவல்துறையினர்
இழுத்துச் சென்றனர். அதைக் கண்ணுற்ற கோவை மக்கள் கண்ணீர் உகுத்தனர்.
சிறையிலிருந்து விடுதலை
பெற்றதும் நண்பர்களுடன் இணைந்து சுயமரியாதை சமதர்மக் கட்சி என்ற பெயரில் ஒரு புதிய
கட்சியை ஜீவா தொடங்கினார். தமிழகமெங்கும் பயணம் செய்து தன் கட்சியின் கொள்கைகளை விளக்கிப்
பேசினார். அப்போது இடதுசாரிச்சிந்தனை கொண்ட காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியினருடன் ஜீவாவுக்கு
தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் மேற்கொண்ட தொடர் உரையாடல் வழியாக அரசியல் களத்தைப்பற்றிய
மேலும் சில தெளிவுகள் ஜீவாவுக்குக் கிடைத்தன. அதன் விளைவாக அவர் தன்னுடைய கட்சியைக்
கலைத்துவிட்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து தொண்டாற்றத் தொடங்கினார்.
1935இல் பம்பாயில் நடைபெற்ற அச்சுத்தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொள்ளச்
சென்றார் ஜீவா. அங்கிருந்து திரும்பிய பிறகு ஜீவா சென்னை மாநில தொழிற்சங்க காங்கிரஸில்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்டத்திலும் ரய்ல்வே
ஊழியர் போராட்டத்திலும் ஊக்கமுடன் பங்கேற்றார். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்
சங்கம் வளர ஜீவா துணைநின்றார். மதுரை நகரத்தையே உறையவைத்த பசுமலை மகாலட்சுமி மில் வேலை
நிறுத்தத்திலும் ஜீவா பங்கேற்று சிறைக்குச் சென்றார். தொழிலாளி வர்க்கத்துக்கு வழிகாட்டவும்
சோஷலிசக் கருத்துகளை மக்களிடையில் கொண்டுசெல்வதற்கும் 06.11.1937 அன்று ஜனசக்தி என்னும்
பெயரில் ஒரு வார இதழைத் தொடங்கினார். ”காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா என் தோழனே பசையற்றுப் போனோமடா” என்று ஜீவா எழுதிய பாடல் அப்போதுதான்
வெளிவந்தது.
1937இல் சென்னை மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில் மகத்தான வெற்றி
பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரைச்
சட்டம் ஒழிக்கப்படும் என தேர்தல் காலத்தில் காங்கிரஸ் வாக்கு கொடுத்திருந்தது. ராஜாஜி
தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படி ஜீவா குரல்கொடுத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டங்களிலும் அதைப் பற்றி தொடர்ந்து வாதாடினார். கிட்டத்தட்ட
இரண்டாண்டுகள் முடிய இருந்த நிலை வரைக்கும் கூட குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும்
இல்லை. ஒருமுறை மதுரை மாவட்டத்துக்கு முதல்வர் என்கிற நிலையில் வருகை புரிந்திருந்தார்.
அப்போது ஜீவா மக்களைத் திரட்டி ஒரு பெரிய ஊர்வலமாகச் சென்று அவரைச் சந்தித்து கோரிக்கையைக்
கொடுத்தார். அதையொட்டி சட்டசபையில் விவாதம் நடைபெற்றதே ஒழிய, அச்சட்டம் நீக்கப்படவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஓமந்தூரார் முதல்வராக பொறுப்பேற்றிருந்த தருணத்தில் காவல்துறை
அமைச்சராக இருந்த பி.சுப்பராயன் மூலம் மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டு 05.06.1947 அன்றுதான்
குற்றப்பரம்பரைச் சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.
1939இல் இரண்டாம் உலகப்போரில் தன்னிச்சையாக இந்தியாவை இணைத்ததற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடெங்கும் பல மாகாணங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த
காங்கிரஸ் பதவி விலகியது. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர்கள் சிறையில்
அடைக்கப்பட்டனர். ஜீவாவும் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.
விடுதலை பெற்றதும் ஜீவா மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். அதைக் கண்டு
சீற்றம் கொண்ட ஆங்கிலேய அரசு அவரை சென்னை மாகாணத்தைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. அதனால்
அவர் காரைக்காலுக்குச் சென்றார். அங்கே ஆட்சிப் பொறுப்பிலிருந்த பிரெஞ்சு அரசும் அவரை
அங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டதால் பம்பாய்க்குச் சென்றுவிட்டார்.
பம்பாயில் வசித்துவந்த தமிழறிந்த தாழ்த்தப்பாட்டோர் நலன்களுக்காக
ஜீவா பாடுபட்டார். மேலும் பொதுமக்களிடையில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.
அதையறிந்த அதிகாரிகள் அவரைத் தேடி வந்து கைது செய்து பைக்குல்லா சிறையில் சில நாட்கள்
வைத்திருந்துவிட்டு வேலூர் சிறைக்கு மாற்றினார்கள். தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை
பெற்ற ஜீவாவை உடனடியாக பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வெளியேற்றி தென் திருவிதாங்கூரில்
அவருடைய சொந்த ஊரான பூதப்பாண்டிக்கு நாடு கடத்தியது அரசு. வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது,
திருவிதாங்கூர் எல்லைக்குள் எங்கும் பேசக்கூடாது என நிபந்தனைகளை அரசு விதித்தது.
06.02.1942 அன்று காந்தியடிகளின் பிறந்தநாள். அன்று அவரால் காந்தியடிகளை
நினைக்காமலோ, அவரைப்பற்றி பத்து பேருடன் பேசாமலோ இருக்கமுடியவில்லை. அதனால் தன் வீட்டின்
கொல்லைப்புறத்தில் ஜீவா தன் நண்பர்களை மட்டும் அழைத்து, தனிப்பட்ட முறையில் காந்தி
ஜெயந்தியைக் கொண்டாடினார். அதை எப்படியோ தெரிந்துகொண்ட அதிகாரிகள் அவரைத் தேடி வந்து
கைது செய்து ஆறு மாத காலம் திருவனந்தபுரம் சிறையில் அடைத்துவிட்டது. விடுதலை பெற்ற
பிறகும் அவர் கிராமத்திலேயே காலம் கழித்தார்.
1942இல் ஜீவா மீது விதிக்கப்பட்டிருந்த தடை சென்னை மாகாண அரசு
05.10.1945 அன்று விலக்கிக்கொண்ட பிறகே, அவர் மீண்டும் சென்னைக்கு வந்தார். அந்த நேரத்தில்
பம்பாயில் நடைபெற்ற கப்பற்படை எழுச்சியை ஒட்டி தொழிற்சங்கங்கள் மீதும் கம்யூனிஸ்டுகள்
மீதும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. பலர் மீது பொய்வழக்குகளைச்
சுமத்தி சிறையில் அடைத்தது. அதனால் ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.சீனிவாசராவ், சி.எஸ்.சுப்பிரமணியம்
போன்றவர்கள் தலைமறைவாகச் சென்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே அவர்கள் அனைவரும்
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை முன்னிட்டு
நிறுத்தப்பட்டிருந்த ஜனசக்தி, அத்தடை விலக்கப்பட்ட பிறகே வெளிவரத் தொடங்கியது.
1952 முதல் ஜனசக்தி நாளேடாக மலர்ந்தது. ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளையும் ஆசிரியவுரைகளையும்
ஜீவா அதில் தினமும் எழுதினார். ”நானோர் தொழிலாளி ஒரு நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும்
வழியில்லை” போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களை ஜீவா எழுதினார். 1959 முதல் வெளிவந்த தாமரை
இலக்கியப்படைப்புகளுக்கான களமாக விளங்கியது.
ஜீவாவுக்கு இரு கனவுகள் இருந்தன. சோவியத் ருஷ்யாவின் அமைப்பைப்பற்றி
மேடைதோறும் முழங்கி முழங்கி அந்த நாட்டை நேரில் காணும் ஆவலை அவர் வளர்த்துக்கொண்டார்.
1962இல் மாஸ்கோவில் நடைபெற்ற உலக சமாதானக் கவுன்சிலின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட
போது அக்கனவு நிறைவேறியது. இளைய தலைமுறையினருக்கு தேசபக்தியையும் அரசியலறிவையும் சமதர்ம
நெறிகளையும் ஒருங்கே அறிமுகப்படுத்தும் வகையில் சென்னை மாநகரில் ஓர் ஆசிரமத்தை உருவாக்கவேண்டும்
என்பது ஜீவாவின் மற்றொரு கனவாக இருந்தது. அந்த ஆசிரமக்கனவு ஜீவாவின் நிறைவேறாத கனவாகவே
போய்விட்டது.
( கிராம
ராஜ்ஜியம், மார்ச் 2022 )