”கட்டுரைநோட்டு திருத்தும்போதுலாம் ஏன் உங்க மூஞ்சி பேதிமருந்து குடிச்சமாதிரி மாறுது?” என்று பல ஆண்டுகளுக்குமுன்பாக மாதவி வேடிக்கையாகச் சொன்ன வார்த்தைகள் என் மனத்தில் எதிரொலிக்காத நாளே இல்லை. இப்போதுகூட ஒரு நோட்டை எடுத்துப் பிரிக்கும்போது அந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன. நோட்டைத் திறக்கும்போதே கசப்புகள் முட்டிக்கொண்டு வருகின்றன. கசப்புகளுக்கு ஒருநாளும் இடம் தந்துவிடக்கூடாது என்று எனக்குள் ஆயிரம்முறை சொல்லிக்கொண்டாலும் மூன்றாவது நோட்டைத் திருத்தி முடிப்பதற்குள் வெறுப்பும் சலிப்பும் நெஞ்சில் நிறைந்துவழியத் தொடங்கிவிடுகின்றன. அந்த அளவுக்கு ஒவ்வொரு வாக்கியத்திலும் பிழைகள் மலிந்திருந்தால் என்னதான் செய்யமுடியும்?. ஒவ்வொரு நோட்டும் பிழைகளின் களஞ்சியம்.
போன
வாரம் வகுப்பில் தாயுமானவர் பாட்டொன்றைப் பாடமாக எடுத்தேன். அந்த வாரத்துக்கான கட்டுரைக்கு
அதைத்தான் தலைப்பாகக் கொடுத்திருந்தேன். ஒரு கட்டுரை கூட உருப்படியாக இல்லை. படிக்கப்படிக்க
எனக்குள் வெறுப்பு பொங்கியது. சொந்தமாக எழுதவராவிட்டாலும் பரவாயில்லை, மனப்பாடமாக இருக்கவேண்டிய
செய்யுளைக்கூட யாரும் ஒழுங்காக எழுதவில்லை. ’தூயதான துரிய அறிவெனும்’ என்கிற வரியை
ஒவ்வொருவரும் ’தூயதான தூரிய அறிவெனும்’ என்று எழுதிவைத்திருந்தார்கள். துரியத்துக்கும் தூரியத்துக்கும் வித்தியாசம் தெரியாத
பிறவிகள். கணக்கு, இயற்பியல், வேதியியல், புள்ளியியல், வரலாறு, சூழலியல், பொருளாதாரம்
என குறிவைத்த பாடப்பிரிவுகள் எதுவும் கிடைக்காமல் தண்டமே என்று தமிழ்ப்பிரிவில் வந்து
குவிகிறவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
அந்தப்
பிழையிலிருந்து விலக மறுத்த மனம் ஓர் ஈயைப்போல அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது. எதிர்பாராத
ஒரு கணத்தில் எங்கள் கல்லூரி ஆசிரியர் துரைசாமிப்பிள்ளையின் நினைவு பொங்கியது. எழுத்துப்பிழையை
தாங்கிக்கொள்ளவே முடியாத மகான் அவர். தமிழுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகவே
அதை அவர் நினைப்பார். அப்படிப்பட்ட சமயத்தில் அழுத்தம் திருத்தமான குரலில் அருட்பாவிலிருந்து
ஒரு பாட்டை அவர் பாடிக்காட்டுவார். ஈசனின் தாளை வணங்காத தலையைப் பழிக்கும் பாட்டு அது.
சும்மாட்டுத்தலை, பட்டிமாட்டுத்தலை, பன்றித்தலை, ஆட்டுத்தலை, வெறிநாய்த்தலை, பாம்புத்தலை,
துர்நாற்றத்தலை, புழுத்தலை என அடுக்கிக்கொண்டே போவார். அந்த அடுக்குமொழியால் ஊக்கம்
பெற்று, எங்கள் குற்றத்தை மறந்து சிரித்துவிடுவோம். அதைப் பார்த்ததும் அவருடைய சலிப்பு
பலமடங்காகப் பெருகிவிடும். “சிரிக்கறானுங்க
பாரு, மானம் கெட்ட சிரிப்பு. எல்லாத்தயும் காத்துல பறக்க உட்டுட்டிங்களாடா, மடப்பசங்களா?
வள்ளலார் சொல்லறது ஈஸ்வரனை வணங்காத தலயை மட்டுமில்லைடா, தமிழை ஒழுங்கா எழுதாதவன் தலையும்
இதுமாதிரியான தலைதான்” என்று குமுறுவார். துரைசாமிப்பிள்ளையின் காலம் வேறு. என் காலம்
வேறு. எதையும் வெளிக்காட்டிவிட முடியாது. மனசுக்குள்ளேயே பூட்டிவைத்துக்கொள்ளவேண்டும்.
தொலைக்காட்சியில்
ஏதோ ஒரு வினாடிவினா நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. வட்டமான பெரிய கண்கள் சுழன்றபடி
இருக்க, மயில்கழுத்து நிறத்தில் புடவை கட்டிய ஒரு பெண் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த
நான்கு குழுக்களிடம் மாறிமாறி கேள்விகேட்டாள். ஆர்வமில்லாமல்தான் முதலில் அதைப் பார்த்தேன்.
திருவள்ளுவர் தொடர்பான ஒரு சொல் காதில் விழுந்த பிறகுதான் ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினேன்.
ஒரு தேநீர்க்கோப்பையை எனக்குப் பக்கத்தில் வைத்த மாதவி “என்னங்க இது, கட்டுரை திருத்தணும்ன்னு
சொல்லிட்டு டி.வி.முன்னால உக்காந்துட்டிங்க?” என்று சிரித்தாள். நான் அவளைப் பார்த்து
புன்னகைத்தபடி ‘த்ச்’ என்று நாக்கு சப்புக்கொட்டினேன். “என்ன, கசப்பான பேதிமருந்தா?”
என்று மறுபடியும் அவள் சிரித்தாள். அதைக் கேட்டு எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அதற்குள்
”திருக்குறளின் கடைசி அதிகாரத்தின் பெயர் என்ன?” என்று தொலைக்காட்சிப்பெண் புதியதொரு
கேள்வியை முன்வைப்பது தெரிந்தது. பக்கத்தில் வந்து உட்கார்ந்த மாதவியின் பக்கமாக விழியைத்
திருப்பி புன்னகைத்துவிட்டு, மீண்டும் தொலைக்காட்சித்திரையைக் கவனித்தேன். நிகழ்ச்சிப்பெண்
நான்கு குழுக்களையும் பெயர்சொல்லி அழைத்துமுடித்தாள். ஒரு குழுவுக்கும் அந்தப் பதில்
தெரியவில்லை. பிறகு, தொலைக்காட்சிப் பெண்ணே ”ஊடல் உவகை” என்று பதிலைச் சொல்லிவிட்டுப்
புன்னகைத்தாள்.
அந்த
நேரத்தில் அழைப்புமணி ஒலித்தது. தொலைக்காட்சித் திரையைக் கவனித்தபடியே எழுந்து சென்ற
மாதவி கதவின் வட்ட உட்குமிழி வழியாகப் பார்த்துவிட்டு “இஸ்திரி தம்பி” என்று என்னிடம்
சொன்னபடியே கதவைத் திறந்து “வா’ என்றாள். வெள்ளைவேட்டியில் நேர்த்தியாக கட்டப்பட்டதொரு
துணியடுக்கோடு அவன் உள்ளே வந்தான். என்னைப் பார்த்ததும் ”வணக்கம் சார்” என்று சொல்லிவிட்டு
மேசைமீது துணியடுக்கை வைத்தான்.
அடுக்கைப்
பிரித்து மாதவி ஒவ்வொன்றாகப் பிரித்து எண்ணினாள். பத்து பேண்ட், பத்து சட்டை, இரண்டு
புடவை, இரண்டு சூடிதார். ”சரியா இருக்குது” என்று அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு பணம்
எடுத்துவர அறைக்குள் சென்றாள். வேட்டியை உதறி மடித்துக்கொண்டிருந்தவனின் பார்வை தற்செயலாக
தொலைக்காட்சியில் ஒருகணம் நிலைத்தது. ”ஈகை என்னும் அதிகாரத்தின் முதல் குறள் என்ன?”
என்கிற கேள்வியை தொலைக்காட்சிப்பெண் கேட்டாள். முதல் குழு இரண்டு நொடிகள் அங்குமிங்கும்
பார்வையை உருட்டிவிட்டு உதட்டைப் பிதுக்கியது. இரண்டாவது குழுவும் தோளை உயர்த்தி தலையை
அசைத்தது. மூன்றாவது குழுவில் ஒரு பெண் உதட்டில் விரலால் தட்டியபடி யோசனையில் மூழ்கியிருந்தாள்.
நான்காவது குழு என்னமோ சிங்களமொழியில் கேள்விகேட்டதுபோல புரியாமல் விழித்தது. பணத்துடன்
அறையிலிருந்து வெளிப்பட்ட மாதவி “என்ன தமிழ் சார், அம்மா கேள்விக்கு நீங்களாவது பதில்
சொல்விங்களா?” என்று புன்னகைத்தபடியே வந்து பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் அருகில்
வந்து நின்றாள். அவள் கையில் ரூபாய்த்தாள்கள் இருந்தன. ”என்ன இது மாணவர்களே, எளிய வினாதானே,
தெரியலையா?” என்று ஒவ்வொரு முகமாகப் பார்த்து கேட்டுவிட்டுச் சிரித்தாள் தொலைக்காட்சிப்பெண். அந்தக் குறளைச் சொல்வதற்காக மாதவியின் பக்கம் நான்
திரும்பியபோது, மேசையின் அருகில் நின்றிருந்தவன்
மெளனமாகப் புன்னகைத்தபடி தன் விரல்களால் நெற்றியில் ஒருகணம் அடித்துக்கொள்வதைக் கவனித்தேன்.
அந்தப் புன்னகையின் பொருளை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. “என்ன தம்பி, அந்தக் குறள்
உனக்கு தெரியுமா?” என்று சட்டென்று கேட்டேன். அவன் மெதுவான குரலில், “வறியார்க்கொன்றீவதே
ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து” என்று குறளையே சொல்லிவிட்டான். அக்கணத்தில்
அதே குறளை தொலைக்காட்சிப் பெண்ணும் அறிவித்தாள்.
மாதவி
அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். தொலைக்காட்சிப்பெண் திருக்குறள்சுற்றின் கடைசிக்கேள்வி
என்கிற அறிவிப்போடு ”காயையும் கனியையும் உவமையாகக் கையாண்டு வள்ளுவர் எழுதிய குறள்
எது?” என்று கேட்டாள். அடுத்த கணமே யாரும் கேட்காமலேயே அவன் மடித்த வேட்டியை தன்னிச்சையாக
சுருட்டியபடியே “இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று” என்று முனகினான்.
அந்தக் கேள்விக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழுக்கள் விடை சொல்லவில்லை. “பரவாயில்லையே,
எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கியே. குட். வெரி குட்” என்றபடி நடந்து சென்று அவனிடம் பணத்தைக்
கொடுத்தாள் மாதவி. அவன் பதில் எதுவும் சொல்லாமல் வெட்கத்தோடு பணத்தை வாங்கி பையில்
போட்டுக்கொண்டு கதவருகில் சென்றான்.
நான்
அப்போதுதான் அவனைக் கூர்ந்து கவனித்தேன். மெலிந்திருந்தாலும் உயரமாக இருந்தான். உருண்ட
முகம். அகலமான கண்கள். நீல வண்ணத்தில் கட்டம்போட்ட சட்டை அணிந்திருந்தான். தலைமுடியில்
கருப்புச்சாயம் பூசியிருப்பதை அதன் அடர் கருமையிலிருந்தே புரிந்துகொள்ளமுடிந்தது. கருத்த
மீசையும் ஒன்றிரண்டு வெள்ளைமுடிகள் தெரியும் பத்துபதினைந்து நாள் தாடியும் ஒட்டி மெலிந்திருந்த
அவன் கன்னங்களுக்குப் பொருத்தமாகவே இருந்தன. நாற்பதை ஒட்டிய வயதாக இருக்கக்கூடும் என்று
நினைத்துக்கொண்டேன். அவசரமாக அவனை நிறுத்தி “திருக்குறள மனப்பாடமா சொல்றியே, என்ன படிச்சிருக்க?”
என்று கேட்டேன். அவன் சட்டென்று எச்சரிக்கையடைந்தவனைப்போல “ஐயோ….. அது…. அது நான் சும்மா
சொன்னதுங்க…..” என்று வெளியே செல்ல முயன்றான். ”சினிமா கேள்விங்களுக்கு டக்குடக்குனு
பதில் சொல்றவங்களதான் நான் பார்த்திருக்கேன். திருக்குறள் கேள்விக்கு நீ பதில் சொல்றத
பார்த்தா ஆச்சரியமா இருக்குது, சொல்லு, எதுவரைக்கும் படிச்ச?” என்று மறுபடியும் புன்னகைத்தபடியே
கேட்டேன். “சார், சும்மா ஒரு பழக்கத்துல சொன்னதுதான்
சார். அத போய் பெரிசா எடுத்துக்கிறிங்களே” என்று அசட்டுத்தனமாகச் சிரித்தான்.
வேகமாக
எழுந்து சென்று அவன் முன்னால் நின்று, “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, சம்பந்தமில்லாம
எதயோ சொல்றியே” என்று பேச்சைத் தொடங்கி அவனை நிறுத்தினேன். அவன் ஒருகணம் என்னை நிமிர்ந்து
பார்த்தான். “அதெல்லாம் இப்ப எதுக்கு சார்? நான் படிச்சதயெல்லாம் நானே மறந்துட்டு கெடக்கற
நேரத்துல பழசயெல்லாம் எதுக்கு சார் கெளறணும்?” என்றபடி குனிந்து புருவத்தின் அருகில்
விரலால் தேய்த்துக்கொண்டான். அவன் உதடுகள் ஒருபக்கமாக வளைந்து கோணின. காசி கங்கைக்கரையை
ஒட்டிய பின்னணியில் என் மகளும் மாப்பிள்ளையும் சேர்ந்து நிற்கிற புகைப்படம் தொங்கும்
சுவரைப் பார்ப்பதுபோல பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
மனத்தின்
கதவை இழுத்து தானாக மூடிக்கொள்கிறவனிடம் தொடர்ந்து எப்படி உரையாடுவது என்று சில கணங்கள்
குழம்பியபடியே “சரி, அத விடு, இது என்ன தீபாவளி சட்டையா? ஃபிட்டிங் கச்சிதமா இருக்கே.
தச்சதா, ரெடிமேடா? எங்க எடுத்த?” என்று சட்டென்று பேச்சின் திசையை மாற்றினேன். அவன்
ஒருகணம் எதுவும் புரியாமல் குழப்பத்தோடு என்னைப் பார்த்தான்.
“சொன்னா
நானும் அங்கயே தச்சிக்குவேன், இல்ல எடுத்துக்குவேன். வழக்கமா எனக்கு தைக்கிற ஆள், இதுவரைக்கும்
ஒன்னக்கூட ஒழுங்கா தச்சதில்லை. அதான் கேட்டேன்” என்றேன்.
அவன்
முகம் சட்டென்று மலர்ந்துவிட்டது. “இந்த சட்ட ரொம்ப பழசு சார். பளிச்சினு இருக்கறதால புதுசுன்னு நெனச்சிட்டிங்களா?
போன தீபாவளிக்கு எடுத்தது சார். நேத்துதான் கஞ்சிபோட்டு இஸ்திரி போட்டேன்”
நான்
புன்னகையோடு தலையசைத்தேன். அவன் தொடர்ந்து ”காவேரி நகர்ல ராமலிங்கம்ன்னு ஒரு டைலர்
இருக்காரு சார். அற்புதமான டைலர். சின்ன வயசுலேருந்தே நான் அவருகிட்டதான் தைக்கறேன்.
கண்ணாலயே அளவெடுத்து தச்சிடுவாரு. நீங்க புதுசா துணியெடுக்கும்போது சொல்லுங்க. நான்
ஒங்கள அங்க அழச்சிட்டு போறேன்….” என்றான்.
”ஸ்டேட்
பேங்க் ஏடிஎம் பக்கத்துல இருக்கிற கடைதான நீ சொல்றது?” என்று கேட்டபடி மாதவி அருகில்
வந்தாள்.
“பாருங்க,
மேடம் சரியா சொல்லிட்டாங்க” என்றபடி அவன் என்னைப் பார்த்தான்.
நான்
மெதுவாக “உன் பேரென்ன?” என்று கேட்டேன். அவன் கூச்சத்தோடு “திருவருட்செல்வன் சார்”
என்றான்.
“ஆகா,
என்ன அருமையான தமிழ்ப்பெயர். தேவாரம் பாடிய திருநாவுக்கரசு மாதிரி நீயும் தமிழ்ல எதையாவது
சாதிக்கணும்ன்னு நெனச்சித்தான் உங்க அம்மாஅப்பா இந்த பேர வச்சிருக்காங்க போல….”
அவன்
சட்டென்று சிரித்துவிட்டான். “நீங்க நெனைக்கற மாதிரிலாம் ஒன்னுமில்ல சார். எங்க அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் அப்படிலாம் பெரிய லட்சியம் எதுவும் கிடையாது. ரெண்டு பேருமே சரியான சிவாஜி
சினிமா பைத்தியம்ங்க. மூலகுளம் அமராவதி டாக்கீஸ்ல சிவாஜி சினிமா போட்ட காலத்துல ஒருநாள்
உடாம பாத்தவங்க. போன வாரம் டிவியில தேவர் மகன் ஓடும்போது, அதுல சிவாஜி சாவறத பார்த்துட்டு
தேம்பித்தேம்பி அழுதாங்க. அந்த அளவுக்கு ரெண்டும் முத்திப்போன பைத்தியம்ங்க… ”
“அழுதாங்களா?”
நான் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தேன். அவன் முகத்தில் தொடக்கத்தில் இருந்த கலவரம்
முற்றிலும் கரைந்துவிட்டதை அப்போது கவனித்தேன்.
“ஆமா
சார். அந்த காலத்துல அமராவதில ஒரு தரம் திருவருட்செல்வர் படம் போட்டிருந்தாங்களாம்.
அப்ப நான் அம்மா வயித்துக்குள்ள இருந்தனாம். டெலிவரி இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கற
சமயத்துல அந்தப் படம் வந்துட்டுது. அத பாக்காம இருக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்
அம்மா. அடுத்த சுத்துல வரும்போது பாத்துக்கலாம்டின்னு யாராரோ எடுத்துச் சொன்னாங்களாம்.
அம்மா காதுல எதுவும் ஏறவே இல்லை. பாத்தே ஆவணும்ன்னு ஒரு புடிவாதம். அப்பாவுக்கும் வேற
வழி தெரியலை. கடவுள் உட்ட வழின்னு ரெண்டு பேருமா போயிட்டாங்க. ஆம்பள பக்கத்துல அப்பாவ
அனுப்பிவச்சிட்டு, பொம்பள பக்கத்துல அம்மா ஒக்காந்துட்டாங்க. பாதி படத்துல அம்மாவுக்கு
வலி எடுத்துகிச்சி. தாள்திறவாய்ன்னு சிவாஜி பாடற நேரத்துல அம்மாவால தாங்கமுடியலை. வலியில
அழுதுட்டாங்களாம். பக்கத்துல இருந்தவங்க சிவாஜிய பார்த்து அழுவறாங்கன்னு மொதல்ல நெனச்சிட்டாங்களாம்.
அப்பறமாதான் பிரசவ வலின்னு புரிஞ்சிகினு கொட்டாய்லேருந்து வெளிய கூட்டிகினு வந்தாங்களாம்.
அடிச்சிபுடிச்சி அப்பாவும் வெளியே வந்து ரிக்ஷாவுல ஏத்தி ஆஸ்பத்திரிக்கு கூட்டியாந்துட்டாரு.
அப்பதான் நான் பொறந்தனாம். சிவாஜி ஞாபகமா அம்மா எனக்கு திருவருட்செல்வன்னு பேர் வச்சிட்டாங்க……….”
அவன் சிரித்தான்.
“எல்லாரும்
அந்தப் பேருலதான் உன்ன கூப்பிடுவாங்களா?”
“அவளோ
நீளமா யார் சார் கூப்படறாங்க? திரு திருன்னு சுருக்கமாதான் கூப்புடுவாங்க. எங்க அம்மாமட்டும்தான்
முழுசா திருவருட்செல்வான்னு கூப்புடும்…..”
”எங்க
படிச்ச?”
ஒரு
கணம் அவன் திகைத்து நின்றான். பிறகு மெதுவாக ”இங்கதான், ரெட்டியார்பாளையம் பள்ளிக்கூடத்துல….”
“திருக்குறள்ல
எப்படி ஆர்வம் வந்தது?”
“ஆறாங்கிளாஸ்
படிக்கிற சமயத்துல சேதுமாதவன்னு ஒரு தமிழ் சார் புதுசா வந்து சேர்ந்தார். அருமையா பாடம்
நடத்துவாரு. பாடத்தோட எணச்சி எணச்சி ஏகப்பட்ட கதைங்கள சொல்வாரு. அவரு வகுப்பு எடுக்க
வரார்னாவே பசங்களுக்குலாம் கொண்டாட்டமாய்டும். ஏதோ டிரில் கிளாஸ்மாதிரி எங்களுக்கு
அவர் திருக்குறள் சொல்லிக்குடுத்தார்……” சொல்லச்சொல்ல அவன் விழிகள் மின்னின.
”டிரில்
கிளாஸ்மாதிரியா?” ஆச்சரியத்துடன் மாதவி கேட்ட கேள்வி அவனை மேலும் பேசவைத்தது.
“ஆமா
மேடம். பாடம் நடத்தறதுக்கு முன்னாலயே ஏழு ஏழு பேரா பசங்கள பிரிச்சி வரிசையா நிக்க வச்சிருவார்.
முதல் வரிசைக்கு முதல் குறள். ஒவ்வொரு ஆளும் ஒரு வார்த்த சொல்லணும். அகர முதல எழுத்தெல்லாம்
சொல்லணும்ன்னா முதல் ஆள் அகர சொல்லணும். ரெண்டாவது ஆள் முதல சொல்லணும். மூணாவது ஆள்
எழுத்தெல்லாம் சொல்லணும். இப்படியே ஏழு பேர் சேர்ந்து ஏழு வார்த்தைய சொல்லி குறள முடிக்கணும்.”
“ரொம்ப
வித்தியாசமா இருக்கே” நான் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
“ஆமா
சார். எங்க சேது சாரே ரொம்ப வித்தியாசமானவர். நாங்க மெனக்கிட்டு எதயும் மனப்பாடம் செஞ்சதே
இல்ல சார். வகுப்புலயே விளையாட்டுமாதிரி சொல்லிச்சொல்லி எல்லாமே மனப்பாடமாய்டும். எங்க
புத்தகத்துல இருபது திருக்குறள்தான் இருந்திச்சி. ஆனா எனக்கு அப்பவே இருநூறுவரைக்கும்
தெரியும்” அவன் பெருமையோடு என்னைப் பார்த்தான்.
“அது
எப்படி?”
“ஒருதரம்
சார் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வச்சாரு. புத்தகத்துல இருக்கிற இருபது குறளயும்
பார்க்காம சொல்றவங்களுக்கு முழுசா ஒரு திருக்குறள் புத்தகம் பரிசா தரேன்னு சொன்னார்.
சார் கையால புத்தகம் வாங்கற ஆசையில முக்காவாசி பேருக்கும் மேல அன்னைக்கு திருக்குறள்
சொன்னாங்க. எல்லாருக்கும் புத்தகம் கிடைச்சது. வாழ்க்கையில எனக்கு கிடைச்ச முதல் பரிசு.
ஒரு கமர்கட்ட கொஞ்சம்கொஞ்சமா கடிச்சிகடிச்சி சாப்ட்டு சந்தோஷப்படறமாதிரி அந்த புத்தகத்துல
இருக்கிற திருக்குறளயெல்லாம் மனப்பாடமா தெரிஞ்சிக்கணும்ன்னு ஒரு ஆச உண்டாச்சி. ஆனா
அந்த ஆசைக்கு ஒரு வேகம் பொறந்ததுலாம் எம்.கரிகாலனுக்கும் அந்த ஆசை இருக்குதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம்தான்..”
“அது
யார் எம்.கரிகாலன்?”
“அவனும்
எங்க கிளாஸ்தான். இருபது குறள் மனப்பாடத்த முப்பது குறள்னு சார் அதிகமாக்கின சமயத்துல
எனக்கு போட்டியா இருந்த ஒரே ஆள் அவன்தான்…”
“யாரு
ஜெயிச்சாங்க?”
”ரெண்டு
பேருமே முப்பது குறள சொல்லிட்டோம். சார் ஒடனே அம்பது குறள்னு சொன்னார். அதயும் சொன்னோம்.
அறுவது, எழுவது, நூறு, நூத்தி அம்பதுன்னு சார் எரநூறு குறள்வரைக்கும் ஏத்திகினே போனாரு.
நாங்க ரெண்டு பேருமே போட்டிபோட்டு படிச்சோம். ஒவ்வொரு முறை ஜெயிக்கும்போதும் சார் எங்களுக்கு
புதுசுபுதுசா புத்தகம் குடுப்பாரு. எரநூறு குறள் சொல்லும்போது எங்க ரெண்டுபேரயும் ப்ரேயர்
மேடையில ஏத்தி எல்லாருக்கும் முன்னால ஒப்பிக்கவச்சி பாராட்டினாரு சார். ஸ்கூலே அன்னைக்கு
எங்கள ஆன்னு வாய தெறந்து பார்த்திச்சி. ஒரே கைத்தட்டல்.”
”அதுக்கப்பறம்?”
“ஆறுலேருந்து
ஏழாங்கிளாஸ் வந்துட்டம். தமிழுக்கு வேற சார் வந்துட்டாரு. அவரு சேது சார் மாதிரி கிடையாது.
அவர் உண்டு பாடம் உண்டு. அவ்ளோதான். ஆனா வீட்டுல சும்மா இருக்கிற நேரத்துலலாம் சேது
சார் குடுத்த புத்தகங்களயே திருப்பித்திருப்பி படிச்சிட்டிருந்தேன். பத்தாங்கிளாஸ்
வரைக்கும் விளையாட்டா ஓடிட்டுது. ஆனா வாழ்க்கைங்கறது வெளையாட்டு கெடையாதுன்னு அதுக்கப்புறம்தான்
புரிஞ்சிது.”
அவன்
ஒருகணம் தரையைப் பார்த்து ஆழமாக மூச்சை இழுத்துவிட்டான். “மேல்கொண்டு படிக்க வழியில்லை
சார். அதுக்கேத்தாப்புல மூச்சுக்கு முந்நூறு தரம் போதும் படிச்சது போதும் படிச்சதுன்னு
சத்தம் போட்டுகினே இருந்தாரு அப்பா. அவருக்கு வெரவாதம். அதிக நேரம் நிக்கமுடியாது.
அம்மாவால தனியா தொழில் செய்யமுடியாது. நீ வந்து நில்லுடான்னு சொன்னதுமே சரின்னு வந்துட்டேன்…..”
“ஆரம்பத்துலேருந்து
தள்ளுவண்டியிலதான் கடையா?”
“இல்ல
இல்ல. நான் பள்ளிக்கூடம் படிக்கற சமயத்துல மூலகுளத்துலயே வாடகைக்கு ஒரு எடம் எடுத்துத்தான்
அப்பா கட வச்சிட்டிருந்தாரு. வருஷாவருஷம் வாடகைய ஏத்திகினே இருப்பாரு ஓனரு. திடீர்னு
ஒருநாள் கடய காலி பண்ண சொல்லிட்டாரு. எல்லாத்தயும் இடிச்சி மாத்தி கட்டி அதிக வாடகைக்கு
உட்டுட்டாரு. அந்த அளவுக்கு அப்பாகிட்ட வசதியில்லை. வேற வழி இல்லாம அப்பா தள்ளுவண்டி
வச்சிக்கவேண்டியதா போச்சி. அவர்தான் எனக்கு கொஞ்சம்கொஞ்சமா தொழில கத்துக் குடுத்தாரு.
எந்தத் துணிக்கு எந்த அளவு சூடு இருக்கணும்ங்கற விஷயத்தயெல்லாம் அவர் எனக்கு திருக்குறள்
சொல்லிக்குடுக்கறமாதிரி சொல்லித் தந்தாரு.”
அவன்
என்னைப் பார்த்து புன்னகைத்தான். அவன் கிளம்பிவிடுவான்போல தோன்றியபோது, அவனை அனுப்பிவிடக்
கூடாது என்று மனசுக்குள் நினைத்தேன். தொடர்பில்லாமல்
சட்டென்று “மேற்கொண்டு படிக்க போவலையா?” என்று கேட்டேன்.
“அதுக்குலாம்
எங்க சார் வழி? வெரவாதத்தால அப்பா படற அவஸ்தைய கண்ணால பார்க்கமுடியலை. கோரிமேட்டு ஆஸ்பத்திரியில
அவருக்கு ஆப்பரேஷன் நடந்திச்சி. ஆனா அது முழுசா குணமாவலை. ஆறாறு மாசத்துக்கு ஒரு தரம்
வீங்கிடும். ஐனாரப்பா ஐனாரப்பான்னு ராத்திரிலாம் அனத்திகினே இருப்பாரு. சரி, இதுதான் நமக்கு விதிச்ச வழின்னு தொழில்ல எறங்கிட்டேன்…..”
நான்
அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். மாதவி அவனுக்கு ஒரு தம்ளரில் மோர் கொண்டுவந்து கொடுத்தாள்.
“வேணாம் மேடம்” என்று அவன் கூச்சத்தோடு பின்வாங்கினான். “குடி தம்பி, குடி தம்பி” என்று
அவள் வலியுறுத்தியதும் எடுத்துப் பருகினான்.
“அந்தக்
கரிகாலன் தொடர்ந்து படிச்சானா?” நான் பேச்சை மறுபடியும் தொடங்கினேன்.
“அது
ஒரு கொடுமையான கதை சார். எப்படியோ கஷ்டப்பட்டு ப்ளஸ் டூ முடிச்சான். அதுக்குமேல முடியலை.
அவுங்கப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலி வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோவறதுக்குள்ள உயிர்
பிரிஞ்சிடுச்சி.”
”அட
கடவுளே”
“குடும்ப
பாரம்லாம் அவன் மேலதான். அவனுக்கு பின்னால ரெண்டு தம்பிங்க மூணு தங்கச்சிங்க இருந்தாங்க.
யாரோ அவுங்க சொந்தக்காரங்க கட்சி செல்வாக்குல
அவன அழச்சிம்போயி பெரியார்ல கண்டக்டரா சேத்து உட்டாங்க. பாண்டிச்சேரி வேலூர் ரூட்லதான்
போறான். பஸ் ஸ்டாப்ப தாண்டும்போது பார்த்துட்டான்னா கை காட்டி சிரிக்காம உடமாட்டான்.
ஒருநாள் டிராபிக்ல ஜாமாயி வண்டி இங்கயே நின்னுட்டுது. என்ன பாத்துட்டு எறங்கி ஓடியாந்துட்டான். எங்கூட ஒரு டீ குடிச்சிட்டுதான்
போனான்…”
எனக்கு
என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ”ஆர்வத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாம
ஏன் போவுதோ தெரியலை. கடவுள் கணக்க நம்மால புரிஞ்சிக்கவே முடியலை…..” என்று பொதுவாகச்
சொல்லிவைத்தேன்.
“என்
திருக்குறள் ஆர்வத்தை ஒருநாளும் நான் மறந்ததே இல்லை சார். இஸ்திரி போடறதயே திருக்குறள்
எழுதறதா மாத்திகிட்டேன். எல்லாம் ஒரு புதுமைதான்” என்று குறும்பாகச் சிரித்தான். நான்
புரியாமல் அவனையே பார்த்தேன்.
“ஆமா
சார். இப்ப சட்டைக்கு இஸ்திரி போடறம்ன்னு வச்சிக்குங்க. காலர் மேல பொட்டிய வச்சி தேய்க்கும்போது
கற்க கசடறன்னு மனசுக்குள்ளயே எழுதிடுவேன். அப்பறம் கைப்பக்கம் தேய்க்கும்போது கற்பவை
கற்றபின்னு எழுதிடுவேன். துணிய உதறி திருப்பி போட்டு முதுகுப்பக்கம் அழுத்தி போடும்போது நிற்க அதற்குத்
தகன்னு எழுதிடுவேன். சட்டைக்கு ஒரு குறள். பேண்டுக்கு ரெண்டு குறள். புடவைக்கு ஒரு
அதிகாரம். அதான் என் கணக்கு. இஸ்திரி போடறோம்ன்னே நெனைக்கமாட்டன். தெனம் எரநூறு முந்நூறு
திருக்குற எழுதிப் பாக்கறம்ன்னு நெனச்சிக்குவேன்.”
ஆச்சரியத்துடன்
அவனைப் பார்த்தேன். இருபத்தைந்தாண்டு கல்லூரி வாழ்க்கையில் ஒரு மாணவன்கூட எனக்கு இப்படி
இருந்ததில்லையே என்று ஏக்கமாக இருந்தது.
“எங்க
அம்மாதான் படிக்கற புள்ளய இப்படி கெடுத்துட்டமேன்னு நாலு பேரு முன்னால பேசற சமயத்துல
சொல்லி அழும். அவுங்கள சமாதானப்படுத்தறதுதான் எனக்கு பெரிய வேலையா இருக்கும். அதுக்கு
இந்த திருக்குறள் எப்படியாவது உதவுமான்னு பல தரம் யோசிச்சிட்டேன் சார். த்ச். ஒரு வழியும்
தெரியலை. அதுலதான் ஒரு தோல்வி…..”
அவன்
தன் தாயைப்பற்றி உருக்கமாகச் சொல்லச்சொல்ல நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். பிறகு
பொதுவாக ”அம்மாங்கற உந்துசக்தி மட்டும் இல்லைன்னா இந்த உலகமே பாலைவனமா போயிருக்கும்”
என்றேன்.
“நீங்க
சொல்றது ஆயிரத்துல ஒரு வார்த்தை சார். அதுதான் சார் என் முடிவையும் மாத்திச்சி. தொழிலயும்
உடமுடியாது, அம்மாவயும் திருப்திப்படுத்தணும். ரெண்டயும் ஒன்னா எப்படி செய்யலாம்ன்னு
யோசிக்கற சமயத்துலதான் கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் விளம்பரம் ஒன்னு கண்ணுல பட்டுது. பத்தாங்கிளாஸ்
படிச்சவங்க கூட நேரா டிகிரி படிக்கலாம்ன்னு போட்டிருந்தாங்க. உடனே பி.ஏ. தமிழ் படிக்கலாம்னு
எழுதி போட்டேன். எனக்கு இடம் கிடைச்சது. எங்க அம்மாவுக்கு அத கேட்டு ரொம்ப சந்தோஷம்.
சிவாஜி படத்துக்கு அடுத்து எங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம் நான் படிக்கறதுதான்.
பாடங்கள் போஸ்டல்ல மாசாமாசம் வந்துடும். ராத்திரியில அத நான் கண்முழிச்சி படிக்கறத
பார்த்து அம்மாவுக்கு பெருமையா இருக்கும்”
”டிகிரிய
முடிச்சிட்டியா?”
“எல்லாமே
நல்லபடியா முடிஞ்சிது சார். பி.ஏ.மட்டுமில்ல, பி.எட்.கூட எழுதி முடிச்சிட்டேன்…..”
“அப்ப
வேலைக்கு போவலையா?” மாதவி அவனைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“எம்ப்ளாய்மெண்ட்
எக்சேஞ்ல பதிஞ்சிட்டு கொஞ்ச காலம் காத்திருந்தேன் மேடம். ஒன்னும் நடக்கலை. அப்புறம்
தனியார் ஸ்கூல்ல முயற்சி செஞ்சேன். தமிழ் வாத்தியாரா, வேணாம்பான்னு எல்லாரும் தட்டி
கழிச்சிட்டாங்க. பாண்டிச்சேரியில ஒரு ஏரியா கூட பாக்கியில்லாம எல்லா ஸ்கூல்லயும் ஏறி
எறங்கிட்டேன். மொத்தத்துல நூத்தி பதினாறு ஸ்கூல். எல்லா இடத்துலயும் ஒரே பதில்தான்.
தமிழுக்குலாம் தனியா வாத்தியார் தேவையில்லைன்னு அனுப்பிட்டாங்க. அக்கெளண்ட்ஸ் பார்ப்பிங்களா,
சைன்ஸ் எடுப்பிங்களா, மேத்ஸ் எடுப்பிங்களான்னு எதயாவது ஒரு கேள்வி பேருக்குன்னு கேட்டுட்டு
தள்ளிட்டாங்க.”
மெளனமாக
நான் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“ஒருநாள்
திருபுவனையில ஒரு தனியார் ஸ்கூல்ல தமிழாசிரியர் வேலை காலியா இருக்குதுன்னு கேள்விப்பட்டு,
எல்லா சர்டிபிகேட்ஸயும் எடுத்துகினு போனேன். ஒருமணி நேரம் எங்கிட்ட என்னென்னமோ கேள்வி
கேட்டாங்க. ஒரு க்ளாஸ்ல பாடம் நடத்தச் சொல்லி டெஸ்ட் பண்ணாங்க. கடைசியா ஒங்கள வேலைக்கு
எடுத்துக்கறோம். ஆனா தற்சமயத்துக்கு எங்களால ஆயிரம் ரூபாதான் சம்பளம் தரமுடியும். இப்பதான் வளர்ந்து வர ஸ்கூல் இது. இதுக்குமேல எங்களால
தரமுடியாது. ஒங்களுக்கு விருப்பமிருக்குதுன்னா நாளையிலிருந்தே வேலைக்கு வரலாம்ன்னு
சொன்னாங்க. வேணாம்னு சொல்லிடணும்ன்னுதான் நெனச்சேன். இஸ்திரி கடையில இதைவிட எனக்கு
அதிகமாவே கெடைக்கும். ஆனா நான் வேலைக்கு போவணும்ங்கறது என் அம்மாவுடைய கனவு. அவுங்க
சந்தோஷப்படணும்ங்கறதுக்காகவே சரின்னு சொல்லிட்டு வந்தேன்.”
அவன்
என்னை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்து, கதவையொட்டிய சுவரில் தொங்கியிருந்த ஓவியத்தையே
சில கணங்கள் பார்த்தான். அவன் விழிகள் சற்றே சுருங்குவதையும் அவற்றில் ஒரு சின்ன நிழல்
படிவதையும் பார்க்கமுடிந்தது.
“காலையில
நான் வேலைக்கு கெளம்பறத பார்த்து எங்கம்மாவுக்கு பூரிப்போ பூரிப்பு. காணாதத கண்டுட்ட
மாதிரி ஏன்டி இப்படி பல்ல காட்டிகினு கெடக்கறன்னு அப்பாகூட அவுங்கள பாத்து சத்தம் போட்டாரு.
ஸ்கூல்ல முதல் நாள்லயே பிள்ளைங்கள்ளாம் எனக்கு நெருக்கமாய்ட்டாங்க. பசங்க பேரு மூஞ்சிலாம்
நல்லா பதிஞ்சிட்டுது. என்னாலயும் நாலு பேருக்கு பாடம் எடுக்கமுடியும்ங்கற நம்பிக்கைய
அந்த ஒருநாள் அனுபவம் குடுத்துச்சி. என் வாழ்க்கையில முக்கியமான நாள் அது. நான் ஆசிரியரா
வேலை பார்த்த ஒரே நாள் அது. அதுக்கப்புறம் நான் வேலைக்கே போகலை…..”
அதைக்
கேட்டு நான் திகைத்து நின்றுவிட்டேன். சில கணங்களுக்குப் பிறகுதான் “ஏன்?” என்று கேட்கமுடிந்தது.
“அன்னைக்கு
சாயங்காலம் ஸ்கூல் விட்டு நான் திரும்பறதுக்குள்ள மூலகுளத்துல பெரிய ஆக்சிடெண்ட் நடந்துட்டுது
சார். யாரோ ஒரு எம்.எல்.ஏ.வுடைய பையன் கண்ணுமண்ணு தெரியாம குடிச்சிட்டு போதையில வண்டிய
ஓட்டிகினு வந்து ரோட்டுல ஒரு லாரிமேல மோதி, அதுக்கப்புறம் கரண்ட் கம்பத்துல மோதி, ஸ்டாப்
பக்கத்துல நின்ன மரத்துல மோதி, இஸ்திரி வண்டிமேல மோதி, கடைசியா ஒரு கடைக்குள்ள பூந்துபோயி
நின்னுச்சி. ஏழு பேர் ஸ்பாட்லயே செத்துட்டாங்க. இருபது முப்பது பேருக்குமேல அடி. காயம்.
பஸ் ஸ்டாப்பே ரத்தக் காடாய்டுச்சி. அம்மாவும் அப்பாவும் உயிர் பொழச்சதே புண்ணியம்.
ரெண்டு மாசம் ஆஸ்பத்திரியிலயே வச்சிருந்தாங்க. அப்பாவுக்கு ஒரு கால எடுத்துட்டாங்க.
அம்மாவுக்கு ஒரு கையை வெட்டி எடுத்துட்டாங்க. ஆனா நிக்கறதுக்கோ நடக்கறதுக்கோ அவுங்க
கால்ல தெம்பே இல்ல. ஆளுக்கொரு சக்கரவண்டி வாங்கி குடுத்திருக்கேன். கையாலயே உருட்டிஉருட்டி
வருவாங்க, போவாங்க. அவ்ளோதான். அதுக்குமேல முடியாது…….”
“ஸ்கூல்…?”
“விபத்துக்கு
மறுநாளே அவுங்களுக்கு தகவல தெரியப்படுத்திட்டேன். முடிஞ்சா வேற ஆள பார்த்துக்குங்கன்னு
சொல்லிட்டேன். நாலஞ்சிமாசம் கழிச்சி ஒருநாள் போயி பார்த்து பேசியிருந்துட்டு சர்டிபிகேட்டுங்கள
கேட்டு வாங்கியாந்துட்டேன்.”
“எந்த
வருஷம் நடந்தது இது?”
”தொண்ணத்தெட்டு
நவம்பர்…”
”அதுக்குப்
பிறகு வேற எங்கயும் வேலைக்கு முயற்சி செய்யலையா?”
“அந்த
முயற்சிக்கெல்லாம் அவசியமே இல்லாம போயிட்டுது சார். ரெண்டு பேரயும் நான் கவனிச்சிக்கணும்.
இன்னொரு ஆளு உதவி இல்லாம அவங்களால எதுவுமே செய்யமுடியாது. இந்த இஸ்திரி வேலையில ஒரு
பிரச்சினையும் இல்ல. ஒரு மணிக்கு ஒரு தரம் குடிசைக்குப் போயி எட்டிப் பார்த்துட்டு
என்ன வேணும் ஏது வேணும்ன்னு கேட்டு செஞ்சிகுடுத்துட்டு வந்துடுவேன். மத்த எடங்களுக்கு
வேலைக்கு போனா, அப்படிலாம் செய்யமுடியுமா?”
“அதுவும்
சரிதான்” என்று எனக்கு நானே சொல்லும்போது எனை அறியாமல் பெருமூச்சு வெளிப்பட்டது. அதே
சமயத்தில் “அது சரியில்லை” என்று சொல்ல என் மனம் துடித்தது. என்ன பேசுவது என்றே புரியவில்லை.
”என்ன
தம்பி இது? சின்னப்புள்ளையாட்டம் பேசறிங்க? ஒரு கல்யாணம் செஞ்சிகிட்டிருந்தா, உங்களுக்கும்
ஒத்தாசயா இருந்திருக்கும். அவுங்களுக்கும் ஒத்தாசயா இருந்திருக்கும், நீங்களும் வேலைக்கு
போயிருக்கலாம், இல்லயா?” என்று மாதவி மென்மையான குரலில் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
”தாய்க்குலம்லாம்
ஒரே மாதிரிதான் சிந்திப்பாங்கபோல” என்று சொல்லிவிட்டு அவன் புன்னகைத்தான். மாதவி அவனை
கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்த்தாள். ”ஒன்னுமில்லிங்க மேடம். எங்க அம்மாவும் இதயேதான்
காலமெல்லாம் சொல்லிகினே இருக்குது. வர ஆளு ஒத்தாசயாவும் இருக்கலாம். உபத்திரவமாவும்
மாறிடலாம். எப்பவும் நமக்கு சாதகமாவே யோசிக்கக்கூடாதுன்னு நெனைக்கற ஆளு நான். பாதகமா
முடிஞ்சிட்டா, அத காலம் பூரா முயற்சி செய்ஞ்சாலும் மாத்தமுடியாதில்லயா மேடம்? சுட்ட
பானை மறுபடியும் களிமண்ணாவுங்களா?” என்றான். சில கணங்கள் கழிந்தபிறகு “மொதமொதல்ல இந்த
கல்யாண யோசனய சொன்ன சமயத்துல, புது நூற்றாண்டு வருஷம் பொறக்கட்டும் பண்ணிக்கறேன்ம்மான்னு
சொல்லிச்சொல்லி சமாளிச்சேன். ரெண்டாயிரத்துக்குப் பிறகு, இன்னும் மூணு வருஷம், இன்னும்
மூணு வருஷம்ன்னு, இதோ இன்னைக்கு வரைக்கும் தள்ளிகினே வந்துட்டேன். எனக்குலாம் எதுக்கு
மேடம் கல்யாணம்? இப்படியே ஓடறவரைக்கும் ஓட்டிறவேண்டிதுதான் மேடம்……” என்றான்.
பேசிப்பேசி
ஒரு முற்றுப்புள்ளியை அடைந்துவிட்டதுபோல உரையாடல் நின்றுவிட்டது. நான் மெல்ல முன்னகர்ந்து
அவன் தோளைத் தொட்டு அழுத்தினேன். மெதுவாக ”திரு” என்று சொன்னேன். அவன் ஆச்சரியத்துடன்
என்னை நிமிர்ந்து பார்த்தான். “திருன்னா செல்வம். அது பணமாதான் இருக்கணும்ம்ன்னு இல்ல.
கல்விச்செல்வம், செவிச்செல்வம், நிம்மதிச்செல்வம்ன்னு ஏராளமான செல்வங்களாவும் இருக்கலாம்”
என்று எதையோ சொல்லத் தொடங்கினேன். ஆனால் அதற்குப் பிறகு பொருத்தமான வார்த்தைகள் எதுவும்
கிடைக்காததால் மெளனமாக அவன் கண்களைமட்டும் நோக்கினேன். கடைசியில் “பார்க்கலாம் சார்”
என்றபடி அவன் கிளம்பிச் சென்றான்.
எனக்கு
அறிமுகமுள்ள ஏதாவது ஒரு பள்ளியில் அவனைச் சேர்த்துவிட வேண்டும் என அக்கணத்திலேயே முடிவுகட்டினேன்.
நேரம் கிட்டும்போதெல்லாம் ஒவ்வொருவராக மாற்றிமாற்றித் தொடர்புகொண்டபடி இருந்தேன். ஒவ்வொரு
நாளும் மாலைப்பொழுதுகளில் இதற்காகவே அலைந்தேன். ஒருவர் மிகவும் நம்பிக்கையோடு பேசத்
தொடங்கி, “யார் சார் அவர்? உங்களுக்கு ரத்தசொந்தமா?” என்று கேட்டார். நான் இல்லை என்று தலையசைத்துவிட்டு உண்மையைச் சொன்னேன்.
அவர் உடனே உதடுகளைப் பிதுக்கிவிட்டார். “சார், உங்க குடும்பத்துக்கோ, உங்க உறவுவகையிலோ
ஏதாவது பிரயோசனமா இருக்கும்ன்னா கண்டிப்பா செய்யறேன். யாரோ ஒரு லாண்டரிக்கார ஆளுக்கு
செய்யறதால எங்களுக்கு என்ன சார் லாபம்?” என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார். இன்னொரு
பள்ளிக்கூடத்தின் முதல்வர் அடங்கிய குரலில் “எங்க சாதி ஆளா?” என்று கேட்டார். கன்னத்தில்
ஓங்கி அறைபட்டமாதிரி இருந்தது. சலிப்புடன் எழுந்து வந்துவிட்டேன். இன்னொருவர், “உங்களுக்கு
நான் கண்டிப்பா செய்றேன் ப்ரபஸர். பதிலுக்கு நீங்க எனக்கு என்ன செய்விங்க? ஒரு சின்ன
வேலை, உங்க தொகுதி எம்.எல்.ஏ.மூலமா ஆகவேண்டியிருக்குது, செஞ்சி தரமுடியுமா?” என்று
கேட்டு அனுப்பிவிட்டார்.
ஏறத்தாழ
ஒரு மாத இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு கதிர்காமத்துக்கு அருகில் ஒரு சின்ன பள்ளியில்
சேர்த்துக்கொள்வதாகச் சொன்னார்கள். ஆறாயிரம் ரூபாய் சம்பளம் தரமுடியும் என்றார்கள்.
அடுத்த வாரம் சான்றிதழ்களோடு வந்து பார்க்கும்படி சொன்னார்கள். அன்று மாலையே நான் திருவை
அழைத்து விவரத்தைச் சொன்னேன். அவன் மிகவும் தயங்கினான். மீண்டும்மீண்டும் அம்மா அப்பா பிரச்சினையையே அவன்
முன்வைத்தான்.
அவன்
அருகில் சென்று “இங்க பாரு திரு. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவணும். உனக்கு வேலைக்கு
போக விருப்பமிருக்குதா இல்லயா, அத சொல்லு?” என்று கேட்டேன். என் கட்டுப்பாட்டை மீறி,
என் வார்த்தைகளில் சற்றே அழுத்தம் அதிகமாக விழுந்துவிட்டது.
அவன்
கண்கள் சற்றே கலங்க, “போவேன் சார்” என்றான். அதற்குமேல் பேச்சு வராமல் நீளமாக பெருமூச்சு
வாங்கினான்.
”பக்கத்துலயே
இருந்து இருந்து பழகிட்டதால உங்க அம்மா அப்பாவால முடியாம போயிடும்ன்னு நீயா நெனச்சி
பயப்படற? அப்படி பயப்படற அளவுக்கு ஒன்னுமே இல்லை திரு. ஒரு வாரத்திலேயே அவுங்களுக்கு
நீ இல்லாத தனிமை பழகிடும். நான் வேணும்ன்னா
ஒங்க அம்மாகிட்ட வந்து பேசட்டுமா?” என்றேன். அவசரமாக அதை மறுத்தான் அவன். பிறகு, “நானே
சொல்றேன் சார்” என்று மெதுவான குரலில் சொல்லிவிட்டு புறப்பட்டான். அவன் செல்வதையே பார்த்திருந்துவிட்டு திரும்பினேன்.
மாதவி என்னைப் பார்த்து “ஏங்க, அவனுக்கு அப்படி ஒரு நெருக்கடி குடுக்கறிங்க?” என்று
கேட்டாள். “ஒனக்கு தெரியாது மாதவி, அந்த மாதிரி ஒரு நெருக்கடி இல்லைன்னா அவன் எந்த
முடிவயும் எடுக்கமாட்டான்” என்றேன். அவள் எதுவும் பேசாமல் என்னைப் பார்த்தபடியே தன்
அறைக்குள் சென்றுவிட்டாள். பேசாத அவள் முகம் அன்றைய மாலைநடை முழுக்க என்னை உறுத்தியபடியே
இருந்தது. ஏரியைச் சுற்றி நடந்தபோது, கேள்விக்குறி படர்ந்த அந்த முகம் விலக்கவிலக்க
முன்னால் வந்து நின்றது. இருள் கவிந்த பாதையில் திரும்பி வரும்போது, ஒருவேளை நான் செய்வது
பிழையோ என்கிற சந்தேகம் முளைத்து என்னை ஆட்டிப்படைத்தது. அக்கணமே ஒருவித அமைதியின்மை
எனக்குள் புகுந்தது.
வீட்டுக்குத்
திரும்பும் முன்பாக, சட்டென்று மனம்மாறி, திருவின் இஸ்திரி வண்டி நிற்கிற நிறுத்தத்துக்கு
அருகில் சென்றேன். அங்கே திருவைக் காணவில்லை. வண்டியும் இல்லை. பக்கத்தில் இருந்த கடையில்
விசாரித்தேன். “இருட்டனதுமே கெளம்பிப் போயிடுச்சே அந்தத் தம்பி. ஏதாச்சிம் அவசரமா துணி
குடுத்திருக்கியா சார்?” என்றார் கடைக்காரர். பிறகு அவராகவே “அந்தப் பக்கம்தான் சார்
ஊடு. நேரா போயி வேப்பமரத்த தாண்டி திரும்பி நடந்தா நெறயா குடிசைங்க தெரியும் சார்.
தள்ளுவண்டி நிக்கற எடத்துல விசாரிச்சி பாரு சார்” என்று வழி சொன்னார். அவர் சொன்ன அடையாளங்களை
வைத்துக்கொண்டு நடந்துபோய் திருவின் குடிசையைக் கண்டுபிடித்துவிட்டேன். வாசலில் நின்று “திரு திரு” என்று அழைத்து முடிப்பதற்குள்
அக்கம்பக்கமிருந்த ஆறேழு குடிசைகளிலிருந்து பல தலைகள் எட்டிப் பார்த்துவிட்டு மறைந்தன.
சில கணங்களுக்குப் பிறகு வெளியே வந்த திரு ஆச்சரியத்தில் ஒன்றும் தோன்றாதவனாக “என்ன
சார், என்ன சார்?” என்றான்.
நான்
நேரிடையாக விஷயத்தைத் தொட்டேன். “நான் சொன்ன விஷயத்த அம்மா அப்பாகிட்ட கேட்டியா?” என்றேன்.
அதே கணத்தில் குடிசைக்குள்ளிருந்து “திருவருட்செல்வா..…..” என்று அழைக்கும் குரல் கேட்டது.
“அம்மா” என்றபடி திரு உள்ளே நுழைந்தான். நானும் அவன் பின்னாலேயே சென்றேன். ”யாருப்பா?”
என்றார் அவர். சுவரோரமாக அவர் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு
கட்டிலில் திருவின் அப்பா படுத்திருந்தார். நான் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
நான் செய்திருக்கும் ஏற்பாட்டைப்பற்றியும் திருவின் தயக்கத்தைப்பற்றியும் விளக்கிச்
சொன்னேன். “பச்சை மண்ணு சாமி அவன், அவனுக்கு என்ன தெரியும்? அவன் படிச்சி வேலைக்கு
போயி பெரிய ஆளாவனும்கறதுதான் என் ஆதிகாலத்து கனவு சாமி. அவன எப்படியாவது கைதூக்கி உடுங்க
சாமி. ஒங்களுக்கு புண்ணியமா போவும்” என்றார்
திருவின் அம்மா. பிறகு திருவின் பக்கம் திரும்பி, “என்ன தம்பி இது? நீ என்னடா வெளியூருக்கா
போற? காலையில போயி சாயங்காலமா வந்துடப் போற? இதுல எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லப்பா?
ஐயா சொல்ற எடத்துக்கு போயி வேலையை ஏத்துக்கப்பா” என்றார். திரு எதுவும் பேசாமல் என்னைப்
பார்த்தான். நான் அவர்களை வணங்கிவிட்டு வெளியே வந்தேன். திருவும் என்னைப் பின்தொடர்ந்துவந்தான்.
”வரவேணாம்ன்னுதான் நெனச்சேன். என்னமோ தெரியலை, வாக்கிங்க்லேருந்து திரும்பிவரும்போது
மனசு போபோன்னு தள்ளி உட்டுட்டுது” என்றேன். அவன் புன்னகைத்தபடி தலைகுனிந்தான். “சரி,
காலையில சர்டிபிகேட்ஸ எடுத்துகினு வீட்டுக்கு வந்துடு. காலேஜ் போவற வழியில நானே ஒன்ன
அங்க சேர்த்துட்டு போறேன், சரியா?” என்றேன். அவன் தலையசைத்தான்.
சரியான
காரணம் என்னவென்று தெரியவில்லை. ஏதோ குழப்பத்தில் அன்று இரவு உணவுக்குப் பிறகு நானும்
மாதவியும் பேசிக்கொண்டே இருந்தோம். உதவி செய்வதற்கான வழியிருந்தும், வாரம்தோறும் வீட்டுக்கு
வந்து செல்கிற ஒரு ஆளைப்பற்றி பத்து ஆண்டுகள் எதுவுமே கேட்காமல் இருந்துவிட்டோமே என்கிற
குற்ற உணர்வைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் பேசிப்பேசி எங்களையே கரைத்துக்கொண்டிருந்தோம்.
நள்ளிரவைத் தாண்டிய வேளையில்தான் உறங்கத் தொடங்கினோம். உறக்கத்தில் ஒரு நீண்ட கனவு.
ஒரே அலறல். அழுகை. ஓலம். குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை பல வயதினர் எழுப்பும் குரல்கள்
இணைந்து வானத்தையே பிளப்பதுபோல எழுந்ததைக் கேட்டேன். ஒரு முகம் கூட தெரியவில்லை. வெறும்
குரல்கள் மட்டுமே ஒலித்தன. ”என்ன கெட்ட கனவு இது” என்றபடி ஒருகணம் விழித்து, இருள்சூழ்ந்த
அறையைப் பார்வையால் துழாவிவிட்டு மீண்டும் தலையணையில் சாய்ந்து கண்களை மூடியபோது மறுபடியும்
அக்குரல்களைக் கேட்டேன். மிக அருகில் அவை ஒலித்தன. அது கனவல்ல, உண்மையான குரல்கள் என்பது
புரிய சில கணங்கள் கடந்தன. அக்குரல்கள் சாலைக்கு மறுபுறத்திலிருந்து வருவதை உணரமுடிந்தது.
நான் அவசரமாக மாதவியை எழுப்பி அந்தக் குரல்களைக் கேட்கும்படி சொன்னேன். அவளும் அதைக்
கேட்டுவிட்டு ”ஆமாங்க, என்னமோ சத்தம் கேக்குதே” என்றபடி, அவசரமாக எழுந்துபோய் கதவைத்
திறந்தாள். அலறும் குரல்கள் வீச்சோடு உள்ளே நுழைந்தன. நானும் வேகமாக எழுந்து மாதவியைப் பின்பற்றினேன். சாலைக்கு
மறுபக்கம் வீடுகள் தீப்பற்றி எரிவது தெரிந்தது. ஒரு சின்ன மரத்தின் உயரத்துக்கு நெருப்பின்
தழல்கள் எழுந்து அலைந்தன. ஒரே கணத்தில் என்னால் அந்த இடத்தை உணரமுடிந்தது. திரு வசிக்கும்
குடிசைப்பகுதி அது.
நானும்
மாதவியும் வீட்டைப் பூட்டிவிட்டு கீழே இறங்கி ஓடினோம். தெருமுழுக்க ஆட்கள் கூடியிருந்தார்கள்.
தெருவைக் கடந்து நாங்கள் பேருந்து நிறுத்தத்தின் பக்கமாகச் சென்றோம். அப்போதே நெருப்பின்
அனல் வீசியது. சடசடவென மூங்கில்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. அழுகுரல்களையும் அலறல்களையும்
கேட்டு உடல் நடுங்கியது. குதித்துக்குதித்தாடும் மிருகத்தைப்போல நெருப்பு அலைந்தது.
ஒரே புகைமண்டலம். ஒரு நீண்ட மனித வளையம் உருவாகி,
யாரையும் அதைக் கடந்துசெல்ல அனுமதிக்காமல் தடுத்தது. என்னையறியாமல் என் வாய் திரு திரு
என்று முனகியது. மாதவியின் விழிகள் கலங்க, ஓரத்தில் கண்ணீர்த்துளி திரண்டு நின்றது.
இடைவிடாத மணியோசையுடன் தீயணைப்புவண்டி வந்து நின்று மனித வளையத்தைக் கடந்து சென்றது.
நாலைந்து
மணிநேர போராட்டத்துக்குப் பிறகுதான் தீ அணைந்தது.
ஒரு குடிசை பாக்கியில்லாமல் எல்லாமே சாம்பலாகி சேறும் சகதியுமாக போய்விட்டது.
தீயணைப்பு வீரர்கள் தற்காலிகமாக அமைத்த சுழல்விளக்கின் வெளிச்சத்தில்தான் அப்பகுதிக்குள்
மக்கள் கடந்துசென்றார்கள். மரணமடைந்தவர்கள் வீட்டில் எழுந்த ஓலம் மனத்தைக் கரைத்தது.
திருதிரு என்று மனம் கூவியபடியே இருந்தது. சின்ன தெரு என்பதால் ஆட்களைத் தள்ளிக்கொண்டு
செல்ல இயலவில்லை. விடிந்த பிறகுதான் மெல்ல உள்ளே நுழைந்தேன். தீயணைப்பு வீரர்களும்
தேவைப்பட்டவர்களுக்கு ஓடியோடி உதவிகள் செய்தபடி இருந்தார்கள். ஒரு குழு சடலங்களை ஒவ்வொன்றாக
அகற்றி ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிக்கொண்டு வந்தது. இன்னொரு குழு காயமடைந்து மயங்கிக்கிடந்தவர்களைத்
தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றினார்கள். பல உடல்கள் கருகி சதைகள் உருகி அடையாளமே
தெரியாமல் காணப்பட்டன. எதை வைத்து கண்டுபிடிப்பது என்று புரியாமல் சுற்றியிருந்த உறவினர்கள்
ஓவென்று அழுதபடி இருந்தார்கள். காலற்ற, கையற்ற நிலையில் கருகிய உடல்களை பார்த்த கணத்திலேயே
அவை திருவின் பெற்றோர்கள் என்பதைக் கண்டுபிடிக்கமுடிந்தது. கருகிய மரக்கட்டைகள்போல
அவ்வுடல்கள் காணப்பட்டன. அக்கணத்திலேயே என் உடல் குளிர்ந்து உறைந்தது.
மருத்துவமனையில்
திருவின் மயக்கம் தெளிய இரண்டு நாட்கள் பிடித்தன. சுயநினைவு வந்ததுமே அவன் விழிகள்
தன் பெற்றோர்களைத் தேடின. அப்போது அவனுக்கு அருகில் நான்தான் நின்றிருந்தேன். அவர்கள்
மறைந்த செய்தியை அவனிடம் மெதுவாகச் சொன்னேன். அவன் யாரையும் பார்க்காமல் தலையைக் குனிந்து
விம்மிவிம்மி அழத் தொடங்கினான். அவன் அழுது முடியட்டும் என்று காத்திருந்து ஆறுதல்
சொன்னேன். சவக்கிடங்கிலிருந்து அவர்கள் உடல்களைப் பெற்று இறுதிக்கடன்களை அவன் செய்துமுடித்தான். அவன் தோளிலும் முதுகிலும் தீயில் தோல் கருகி சதையில்
ஆழமான புண்கள் இருந்தன. எங்கோ மோதியதில் தொடையில்
மூன்று இடங்களில் தோல் கிழிந்திருந்தது. நீளமாக தையல் போட்டிருந்தார்கள். மூன்று வாரத்துக்கும்
மேல் அவன் மருத்துவமனையிலேயே இருக்கும்படி நேர்ந்தது. அங்கிருந்து நேராக வீட்டுக்கே அவனை அழைத்து வந்துவிட்டேன். இடைப்பட்ட
காலத்தில் ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் குடிசைகளை இழந்தவர்களுக்கெல்லாம் வீடு கட்டிக் கொடுத்ததில்
அவனுக்கும் ஒரு வீடு கிடைத்தது. அதற்குப் பிறகுதான் அவன் அங்கே இடம் மாறினான்.
அவன்
சமநிலைக்குத் திரும்பி புண்களெல்லாம் ஆறும்வரையில் எதிர்காலத்திட்டத்தைப் பற்றி எதுவும்
பேசவேண்டாம் என்று எண்ணி ஒரு பத்துநாள் அமைதியாகவே இருந்தேன். அவனுக்கும் அப்படி ஒரு
எண்ணம் இருந்திருக்கும்போல. பத்தாவது நாள் மாலை வீட்டுக்கு வந்து “சார், ஒரு விஷயம்
சொல்லணும்” என்றான். ”சொல் திரு” என்றேன் நான். உணவுமேசையின்மீது ஒரு கோலநோட்டைப் பிரித்துவைத்துக்கொண்டு
இன்னொரு நோட்டில் அதைப்போலவே போட்டுப் பார்க்கும் பயிற்சியில் இருந்த மாதவியும் அவன்
பக்கமாகத் திரும்பினாள்.
“புதுசா
ஒரு தள்ளுவண்டி வேணும் சார். நீங்க ஏதாவது ஏற்பாடு செஞ்சா தொழில் செய்ய ஆரம்பிச்சிடலாம்…..”
சில
கணங்கள் அவனையும் மாலதியையும் மாறிமாறிப் பார்த்தேன். “தாராளமா ஏற்பாடு செஞ்சிடலாம்
திரு. அது ஒன்னும் கஷ்டமில்லை. ஆனா நீ ஒரு ஆசிரியரா வேலைக்குப் போவறதுதான் நல்லதுன்னு
எனக்கு தோணுது….” என்று மெதுவாகச் சொன்னேன்.
“அதான்
இருந்த சர்டிபிகேட்ஸ்லாம் நெருப்புல போயிடுச்சே சார். இனிமேல யாருகிட்ட போயி என்னன்னு
கேக்கறது….?” உதடுகளில் கசப்பான புன்னகை படர, அவன் நம்பிக்கை இல்லாமல் பேசியதைக் கேட்க
வருத்தமாக இருந்தது.
“அந்தக்
கவல உனக்கு வேணாம் திரு. எப்படியாவது அதுக்கு ஒரு டூப்ளிகேட் வாங்க முயற்சி செய்யலாம்.
அதுக்கு முன்னால சர்டிபிகேட்ஸயே பார்க்காம ஒனக்கு ஆசிரியர் வேலை குடுத்தா, பார்க்க
சம்மதம்தானா?” நான் அவன் கண்களை நேருக்குநேர் பார்த்துக் கேட்டேன். ஒருகணம் அவன் கண்கள்
தரையைப் பார்த்துவிட்டு என்னைநோக்கித் திரும்பின.
“அந்தமாதிரி
யார் சார் குடுக்கறாங்க?”
“யாரா
இருந்தா என்ன திரு? குடுத்தா செய்வியா? அதச் சொல்லு” என் குரல் கறாராக ஒலிப்பதுபோல
மாறிவிடவே, ”என்னங்க” என்றபடி மாதவி என் தோளைத் தொட்டாள். “இரு” என்று சைகையாலேயே அவளுக்கு
உணர்த்திவிட்டு அவனையே நான் பார்த்தேன். சில கணங்கள் அமைதியாக வீட்டின் மூலையில் இருந்த
அன்னபூரணேஸ்வரி சிற்பத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். பிறகு மெதுவாக “சரி சார்’
என்றான்.
“வில்லினூருல
என் ஃப்ரண்ட் ஒருத்தரு டுட்டோரியல் நடத்தறாரு. ஒன்னபத்தி எல்லா விஷயங்களயும் அவருகிட்ட
சொல்லிட்டேன். சந்தோஷமா சேத்துக்கறேன்னு சொல்லிட்டார்…..”
அவன்
எங்கள் இருவரையும் மாறிமாறி ஒருகணம் பார்த்தான். பிறகு “உண்மையாவா சார்?” என்று நம்பமுடியாதவன்போல
கேட்டான். உண்மைதான் என்பதுபோல தலையசைத்தேன் நான். பிறகு மேசைமீது இருந்த வண்டிச்சாவியை
எடுத்துக்கொண்டு “சரி, வா போவலாம்” என்று அழைத்தேன். அவன் தடுமாறி “சார் இப்பவேவா?”
என்று இழுத்தான். “இந்த நிமிஷமே கெளம்பு. இனிமேல ஒரு நிமிஷம் கூட வீணாக்கக்கூடாது”
என்றபடி கதவைத் திறந்துகொண்டு வெளியே நடந்தேன். கண்கலங்க மாதவியைப் பார்த்து வணங்கிக்கொண்டே
திருவும் எனக்குப் பக்கத்தில் வந்தான்.
(2014)