Home

Sunday 3 September 2017

உருமாற்றத்தின் ரகசியம்- சுகுமாரனின் "அறைவனம்"



பிழைப்புதேடி எங்கள் ஊருக்குள் வருகிறவர்கள் எல்லாம் ஏரிக்கரைக்குப் பக்கத்தில் இருந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் கூடாரமடித்து சில நாட்கள் தங்கிச்செல்வதை என் இளமை நாட்களில் பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த சுவடு தெரியாமல் புறப்பட்டுப் போய்விடுவார்கள்


ஒரு முறை ஒரு கரடியை அழைத்துக்கொண்டு ஒரு பெரியவர் வந்திருந்தார். உடல்முழுதும் முடியடர்ந்த கன்னங்கரேலென்ற  கரடியை சிறுவர்களாகிய நாங்கள் அனைவரும் அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தோம். அது மனிதர்களைப்போல கால்களை ஊன்றி நடப்பதைப் பார்க்க எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. கழுத்தில் கயிறு கட்டப்பட்ட அந்தக் கரடியோடு, ஒரு பெரியவர் ஒவ்வொரு வீட்டுவாசலிலும் நின்று விளையாட்டு காட்டினார். கரடி தன் பெரிய உடலைக் குலுக்கி ஆடுவதைக் கண்டதும் நாங்கள் கைதட்டிச் சிரித்தோம். கரடி எது செய்தாலும் எங்களுக்குச் சிரிப்பாக இருந்தது. அது திரும்பினாலும் சிரிப்பு. நடந்தாலும் சிரிப்பு. வாயைத் திறந்து பற்களைக் காட்டினாலும் சிரிப்பு. பத்துப் பதினைந்து பிள்ளைகள் அந்தக் கரடியின் பின்னாலேயே நாள்முழுக்க அலைந்தோம். பெரியவர் எங்களைப் பார்த்து பல முறை திரும்பிச் சென்றுவிடுமாறு கெஞ்சிக் கேட்டும் நாங்கள் தொடர்வதைக் கைவிடவில்லை.

ஒரு குறும்புக்காரச் சிறுவன் கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு பெரியவர் கவனிக்காத நேரத்தில் கரடியின் முதுகில் குத்தினான். அது திரும்பிப் பார்க்கிற தருணத்தில் சட்டென்று விலகி எங்கோ வேடிக்கை பார்க்கிறவன்போல நடித்தான். எங்களில் பல பேர் தடுத்தும்கூட அவன் தன் குறும்பை நிறுத்தவில்லை. ஐந்தாறு முறை அப்படி நடந்துவிட்டது. ஒரு முறை பெரியவரே பார்த்துவிட்டார். செல்லமாகக் கடிந்துகொண்டார். அவன் அவர் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் கரடியைக் குத்திய ஒரு முறை அது சட்டென திரும்பி அவன் கையைக் கடித்துவிட்டது. சிறுவனின்  பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச்சென்றார்கள். தெருவில் இருந்த மற்றவர்கள் கரடிக்காரரைக் கடிந்துகொண்டார்கள். "சும்மா சும்மா சீண்டிகினே இருந்தா நாம வளர்க்கற ஆடு மாடு நாய்லாம் கடிக்கறமாதிரிதான் கரடியும் கடிச்சிட்டுது..." என்று அவர் சொன்ன பதிலை யாருமே காதுகொடுத்துக் கேட்கவில்லைஅவர் அன்றிரவே ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்.

கரடியின் சீற்றத்தைக் கண்ணால் கண்ட சித்திரம் அப்படியே என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இன்று அச்சித்திரத்தை அசைபோடும்போது அதை நினைவில் காடுள்ள மிருகம் என்று அதை வகைப்படுத்திக்கொள்ள முடிகிறது. மலையாளக்கவிஞர் சச்சிதானந்தன் எழுதிய "நினைவில் காடுள்ள மிருகம்" என்னும் வரியைப் படித்தபிறகு அந்த வரியை அப்படியே மனம் உள்வாங்கிக்கொண்டது. ஒரு மிருகம் எத்தனை ஆண்டுகள் ஊருக்குள் வளர்ந்தாலும் அது காட்டையும் காட்டுவாழ்க்கையையும் மறப்பதில்லை. அதன் நெஞ்சில் எங்கோ ஒரு புள்ளியில் அந்த வாழ்க்கைக்கணம் சுடர்விட்டபடியே இருக்கிறது. கோயில் யானைகளின் சீற்றத்தைப்பற்றிய செய்திகளும் வயல்களுக்குள் புகுந்து மிதித்துத்துவைத்துவிட்டுச் செல்கிற யானைகளைப்பற்றிய செய்திகளும் அடிக்கடி ஊடகங்களில் இப்போது இடம்பெறுவதை நாம் அறிவோம்.

மிருகம்மட்டுமல்ல, பறவைகளும் தன்னோடு வனத்தையும் வானத்தையும் தன் இறகுகளில் சுமந்துகொண்டு திரியும் உயிரினங்களாகும். அதன் குரலில் கலந்திருக்கும் இசையில் காட்டின் இசையும் கலந்தே ஒலிக்கிறது. ஒரு குயிலின் சத்தத்தைக் கேட்ட கணத்திலேயே அது அமர்ந்திருக்கும் மரத்தின் தோற்றமும் மரத்தின் வழியாக ஒரு தோப்பின் தோற்றமும் தோப்பின் வழியாக ஒரு காட்டின் தோற்றமும் நம் கற்பனையில் தாமாக விரிவுபெற்றுவிடுகின்றன.

மாவோயிஸ்டுகளின் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் சீற்றத்துடன் கையை ஓங்கிக் கல்லெறியும் புகைப்படம் ஒன்று கடந்த வாரத்தில் எல்லாச் செய்தித்தாள்களிலும் வெளியாகியிருந்ததை எல்லாரும் பார்த்திருக்கக்கூடும். அதைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட என் நண்பர் "பாக்கறதுக்குத்தான் போலீசு. ஆனா கற்காலத்து ஆளாட்டம் நடந்துகிறான் பாரு...." என்று கசப்புடன் சொன்னார். அந்த வார்த்தைகள் சட்டென அவரிடமிருந்து வெளிப்பட்டிருந்தாலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு அதில் உண்மை பொதிந்திருந்தது. கல்லெறிந்தும் பாறையைத் தூக்கி வீசியும் பாறையில் மோதியும் மனிதர்களைக் கொல்லும் ஆதியுகத்துப் பழக்கம் நம் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. ஆடை, மொழி, பல மாடிகளைக் கொண்ட அடுக்குக்குடியிருப்பு என நாகரிகம் இன்று வளர்ந்திருந்தாலும் நம் நினைவில் அந்தக் காடு அப்படியே உறைந்திருக்கிறது.

கடைசியில் நாம் வந்தடையும் கருத்து இதுதான். விலங்கினங்களும் பறவையினங்களும் மனிதர்களும் தம் உருவத்தாலும் நடத்தை முறையினாலும் வாழும் இடத்தாலும் பல விதங்களில் வேறுபட்டிருக்கலாம். ஆனால் எல்லாருமே தம் ஆழ்மனத்தில் வனத்தையும் வனவாழ்வையும் கொண்டவர்கள். பல நூற்றாண்டு இடைவெளிகள் அவர்களிடையே பலவிதமான நாகரிங்களையும் மாற்றங்களையும் போதித்திருந்தாலும் அடிப்படையில் எல்லாருமே நினைவில் காடுள்ள உயிர்கள். ஓர் அறை வனமாகவும் ஒரு துளி நீர் நதியாகவும் ஒரே ஒரு சின்ன கல் இமயமலையாகவும் உருமாறும் ரகசியம் இதுதான்.

அறைவனம் என்னும் அழகான சொல்லாட்சியை தன் கவிதையில் பயன்படுத்துகிறார் சுகுமாரன். அறைக்குள் நம் மனம் வனத்தை உணரும்போது அறைவனம் காட்சியளிக்கிறது. அபூர்வமான ஒரு பறவை தற்செயலான ஒரு தருணத்தில் அறைக்குள் நுழைந்துவிடுகிறது. பறவையின் நுழைவைத் தொடர்ந்து நிகழும் மாற்றங்கள் தொகுக்கப்படுகின்றனபறவையின் இருப்பு, மானசிகமாக வானத்தையும் வனத்தையும் அதற்குப் பின்னணியாக நம் மனம் வரைந்து பார்த்துக்கொள்கிறது. ராமனின் பாதம்பட்டு சாபம்நீங்கி தன் சுயஉருவம் எய்திய அகலிகைபோல, பறவையின் பாதம் பட்டதும் அறையில் உள்ள ஒவ்வொரு பொருளும் தன் சுயஉருவத்தை அடைகிறது. புத்தகங்களின் தாள்கள் மக்கி மரங்களாகவும் மரங்கள் மக்கி தோப்பாகவும் தோப்பு விரிவடைந்து வனமாகவும் மாற்றமடைகின்றனபானைக்குள் சேமித்துவைக்கப்பட்டிருந்த தண்ணீர் அருவியாகவும் காட்டாறாகவும் பொங்கி உருமாற்றமடைகின்றன. சுவர்கள் கரைந்து காற்றுவெளியாகவும் கூரை உதிர்ந்து வானமாகவும் மாற்றமெய்துகின்றனஒவ்வொரு பொருளும் தன் பூர்வ வடிவத்தை அடையத் தொடங்கிய கணத்தில் முழுக்கமுழுக்க அடர்ந்த ஒரு வனமாக அறை உருமாறிவிடுகிறது. வனமாக உருமாறும் அறை மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அறையாக உருமாறிய வனம் பறவைக்கு மகிழ்ச்சியை அளிக்குமா, அளிக்காதா தெரியவில்லை. சில கணங்களுக்குப் பிறகு அறையைவிட்டு வெளியேறிவிடுகிறது. அதன் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அதுவரை திரண்டு உருவான வனமும் அதைப் பின்தொடர்ந்து சென்றுவிடுகிறது. ஆதி வடிவங்கள் சட்டென மாறிவிட, தன் நிரந்தர வடிவத்துக்கத் திரும்பியதும் அறை உறையத்தொடங்குகிறது.

மறைமுகமாக தன் இறகுகளிடையே வனத்தைச் சுமந்திருக்கும் பறவை தன் தங்குமிடங்களில் எல்லாம் அல்லது தான் புகுந்துவரும் இடஙெfகளிலெல்லாம் தன் வனத்தின் வண்ணத்தைத் தௌiத்துவிட்டு பறந்துசெல்வதை ஒரு படிமமாகப் பார்க்க கவிதையில் இடமிருப்பதாகத் தோன்றுகிறதுஎடுத்துக்காட்டாக, தன் குரலால் இசைமழையைப் பொழிகிற ஒரு நண்பனின் வரவு  அறையையே இசையால் நிரப்பிவிட்டுச் செல்லும். தன் அழகால் வசீகரிக்கிற ஓர் இளம்பெண்ணின் வரவு அந்த அறைக்கு ஒரு புத்தெழுச்சியையும் எழிலையும் வழங்கிவிட்டுச் செல்லும். இன்னும் இப்படிச் சொல்வதற்கு வழியிருக்கிறது.

*
அறைவனம்

சுகுமாரன்

பிறகு விசாரித்தபோது தெரியவந்தது
அது கானகப்பறவையாம்
அடிக்கடி தென்படாதாம்
அபூர்வமாம்

எப்படியோ
அறைக்குள் வந்து சிறகு விரித்தது

அலமாரியில் தொற்றி
அது யோசித்தபோது
புத்தகங்கள் மக்கி மரங்கள் தழைத்தன

நீர்ப்பானை மேல் அமர்ந்து
சிறகு உலர்த்தியபோது
ஊற்றுப் பெருகி காட்டாறு புரண்டது

ஜன்னல் திட்டில் இறங்கி
தத்தியபோது
சுவர்கள் கரைந்து காற்றுவெளி படர்ந்தது

நேர்க்கோடாய் எம்பிக்
கொத்தியபோது
கூரையுதிர்ந்து வானம் விரிந்தது

அறையைப் பறவை
அந்நியமாய் உணர்ந்ததோ
பறவையை அறை
ஆக்கிரமிப்பதாய் நினைத்ததோ?

என்னவோ நடந்த ஏதோ நொடியில்
வந்த வழியே பறந்தது பறவை

திரும்பிய வழியே திரும்பிப் போனது
அதுவரை அறைக்குள்
வாழ்ந்த கானகம்

*
எழுபதுகளின் இறுதியிலிருந்து தொடர்ச்சியாக ஊக்கமுடன் எழுதிவரும் கவிஞர் சுகுமாரன். எண்பதுகளின் நடுப்பகுதியில் வெளிவந்த இவருடைய முதல்தொகுதியான "கோடைகாலக் குறிப்புகள்" அவரை முக்கியமான கவிஞராக அடையாளப்படுத்தியது. கவிதைகளில் சுகுமாரன் கையாண்ட புதிய முறையிலான சொல்லாட்சியும் வசீகரமான படிமங்களும் வாசகர்களை ஈர்க்கும்வண்ணம் அமைந்திருந்தன. அதைத்தொடர்ந்து கடந்த இருபதாண்டுகளில் பயணிகளின் சங்கீதங்கள், சிலைகளின் காலம், வாழ்நிலம் எனப் பல தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து மிகச்சிறந்த படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கிலம் வழியாக சுகுமாரன் மொழிபெயர்த்த பாப்லோ நெருதா கவிதைகளின் தொகுதியும் தேர்ந்தெடுக்கப்பட்ட மலையாளப் பெண்கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய "பெண்வழிகள்" தொகுதியும் குறிப்பிடத்தக்க முயற்சிகள்.
*