Home

Sunday, 20 June 2021

சித்தலிங்கையா : எளியவர் போற்றிய கலைஞன்

 

சித்தலிங்கையா 1954 ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் மாகடிக்கு அருகில் உள்ள மஞ்சணபெலெ என்னும் ஊரில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய பள்ளிப்படிப்பும் கல்லூரிப்படிப்பும் பெங்களூரில் அமைந்தன. முதுகலைப்படிப்பில் கன்னட மொழியை பாடமாக எடுத்து தங்கப்பதக்கத்துடன் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேறி கன்னட ஆய்வு மையத்தில் இணைந்தார். பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, எண்ணற்ற கள ஆய்வுகளுக்குப் பிறகு நாட்டுப்புறத் தெய்வங்கள் என்னும் தலைப்பில் அவர் எழுதிய ஆய்வேடு இன்றளவும் கன்னட ஆய்வாளர்களிடையில் ஒரு வழிகாட்டி நூலாக விளங்குகிறது.

கல்லூரி மாணவராக இருக்கும்போதே சித்தலிங்கையாவின் கவிதைகள் கர்நாடகத்தில் இலக்கிய மேடைகளிலும் அரசியல் மேடைகளிலும் ஒலிக்கத் தொடங்கின. பேச்சுமொழியில் அமைந்த அவருடைய கவிதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. சித்தலிங்கையாவின் கவிதைகள் ஒற்றைப்புள்ளியில் மையம் கொண்டு வெவ்வேறு வகையான விவரணைகள் வழியாக அந்த மையத்துக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே செல்லும் வகையைச் சேர்ந்தவை. தோற்றத்தில் அவை நாட்டுப்புறப் பாடல்களுக்கு இணையானவை.

கர்நாடகத்தில் எழுபதுகளில் முதல்வர் தேவராஜ் அர்ஸின் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய பஸவலிங்கப்பா  முக்கியமான அமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஒருமுறை அவர் பொதுமேடையில் உரையாற்றும்போது, ஒரு கோணத்தில் கன்னட இலக்கியங்களின் உள்ளடக்கத்தில் சமயப்பார்வையே நிறைந்து சாரமற்ற சக்கையாக பிண்ணாக்கு போல இருக்கிறது என்று குறிப்பிட்டார்.  அவர் பேச்சைக் கண்டிக்கும் வகையில் மாநிலமெங்கும் எதிர்ப்பு பரவியது.

உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாகும் என்கிற சட்டத்தின் காரணமாக, மாநிலமெங்கும் பல தலித்துகள் நிலம் பெற்று கெளரவத்துடன் தலைநிமிர்ந்து வாழ்வதை மெளன சாட்சியாகப் பார்த்து மனம் புழுங்கிய ஒரு சில மேல்சாதியினர் பஸவலிங்கப்பா எதிர்ப்பை ஒரு காரணமாகக் கொண்டு, கன்னட இலக்கியப் பாதுகாப்பு என்கிற பெயரில் தலித்துகளை எதிர்க்க முனைந்தனர். தம் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் தலித்துகளும் ஒன்றிணைய வேண்டிய நெருக்கடி உருவானது.  தலித் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் ஒன்றிணைந்து 1973 ஆம் ஆண்டில் பத்ராவதி நகரில் நடத்திய மாநாட்டில் தலித் சங்கர்ஷ் சமிதி உதயமானது. அதன் உதயத்தில் சித்தலிங்கையாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

சித்தலிங்கையா தான் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்திலேயே நீண்ட காலம் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அவருடைய இலக்கியப்பங்களிப்பை மதித்து மாநில சட்ட மேலவை உறுப்பினராக சேவையாற்றும் வாய்ப்பை கர்நாடக அரசு வழங்கியது.

மூன்று கவிதைத்தொகுதிகளுக்குப் பிறகு ஊரும் சேரியும் என்னும் தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதை கன்னட உரைநடையில் ஒரு சாதனையாகவே கருதப்பட்டது. இருபதாண்டு இடைவெளியில் மூன்று பகுதிகளாக அவருடைய தன்வரலாறு வெளிவந்தது. அவற்றில் இரு பகுதிகளை ஊரும் சேரியும், வாழ்வின் தடங்கள் என்ற தலைப்புகளில்  நான் தமிழில் மொழிபெயர்த்தேன். இப்பகுதிகளில் சித்தலிங்கையா தன்னைப்பற்றிய குறிப்புகளைக் குறைத்துக்கொண்டு தன் நினைவில் பதிந்திருக்கும் பிற மனிதர்களைப்பற்றியும் சமூக நிகழ்ச்சிகளைப்பற்றியும் பதிவு செய்திருக்கிறார். குறும்பும் நகைச்சுவை உணர்வும் கலந்த அவருடைய விவரணை வாசகர்களை ஈர்க்கவல்லவை.

மிகவும் குறைவான வரிகளிலேயே ஒரு தருணத்தை சித்திரமாக நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் எழுத்தாற்றலை சித்தலிங்கையாவிடம் காணலாம். ஒரு காட்சியில் சேரியின் கடைசியில் தன் வீட்டுக்கு அருகிலிருந்த குட்டிச்சுவர் மீது ஏறி நின்று சிறுவர்களோடு சேர்ந்து விளையாடிய நினைவை பதிவு செய்திருக்கிறார் அவர். அடுத்த வரியிலேயே தொலைவில் மாட்டுக்குப் பதிலாக தன் பின்கழுத்தில் நுகத்தடியை சுமந்தபடி ஏர்க்கலப்பையை இழுத்துச் செல்லும் தன் அப்பாவைக் கண்டதாக எழுதிச் செல்கிறார்.

இன்னொரு காட்சியில் ஓர் ஐயர் வீட்டுப் பின்கட்டைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அங்கே ஐயர் வீட்டுப் பெண்மணி வீட்டில் எஞ்சிய உணவுப்பொருட்களை வரிசையில் காத்துநிற்கும் தலித்துகளுக்கு வழங்குகிறார். வரிசையில் கடைசியில் நின்றிருந்த தனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதே வரிசையில் முதலில் நின்று வாங்கிவந்த அப்பாவையும் அம்மாவையும் பார்த்து மகிழ்ச்சியடைந்ததாக சித்தலிங்கையா போகிற போக்கில் பதிவு செய்துவிட்டுப் போகிறார்.

மற்றொரு காட்சியில் பள்ளிப்பருவத்தில் நண்பனாக இருந்த ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவரைப்பற்றி சித்தரிக்கிறார் சித்தலிங்கையா. அந்த மாணவர் தன் வீட்டுக்கு அவரையும் அடிக்கடி அழைத்துச் செல்கிறார். அவர் பெற்றோர் அதைப்பற்றி எதுவும் சொல்வதில்லை. தன் மகனுக்குக் கொடுப்பதுபோலவே அவருக்கும் சிற்றுண்டி கொடுத்து உபசரிக்கிறார்கள். சாப்பிட்ட பிறகு நண்பன் சாப்பிட்ட தட்டை மட்டும் வீட்டுக்குள் எடுத்துச் செல்லும் பெற்றோர் அவர் சாப்பிட்ட தட்டை வீட்டுக்கு வெளியே வைப்பதை பலமுறை பார்த்ததாக குறிப்பிடுகிறார் சித்தலிங்கையா. அதைக் கண்டு தன் மனம் துயருற்றது என்ற அளவில் நிறுத்திக்கொள்கிறார். அந்த மாணவருடன் கொண்ட நட்பும் நீண்ட காலம் நீடித்ததாகச் சொல்கிறார். கசப்புக்கும் வெறுப்புக்கும் பகைமைக்கும் ஒருபோதும் இடமளிக்காத சித்தலிங்கையாவின் சமநிலைப்பார்வை மிகமுக்கியமானது.

எந்த இடத்திலும் சித்தலிங்கையாவிடம் புகார் சொல்லும் தொனியோ, அரற்றலோ ஆவேசமோ இல்லை. மாறாக, துயரமும் கசப்பும் நிறைந்த தருணங்களை நகைச்சுவை உணர்வோடு  இயல்பான முறையில் கடந்து செல்கிறார் அவர். இந்தத் தன்னம்பிக்கையும் சமநிலையும் சித்தலிங்கையாவின் மிகப்பெரிய வலிமையாகும்.

அடிங்கடா, ஒதைங்கடாஎன்று நேரடியாகவே தொடங்கும் ஒரு பாட்டை சித்தலிங்கையா தொடக்க காலத்தில் எழுதியிருக்கிறார். அந்த ஆவேசத்தையும் சீற்றத்தையும் கிண்டல், பகடி, நகைச்சுவை வழியாக கடந்துவரும் ஆற்றலை தன் இலக்கியப்பயணத்தின் வழியாக ஈட்டிக்கொண்டார். அது இலக்கியம் வழியாக அவர் பெற்ற அருங்கொடை.

ஆவேசம் என்பது எதிர்த்தரப்பில் இருப்பவர்களிடமும் மிக எளிதாக ஆவேசத்தைத் தூண்டும், உடனுக்குடன் எதிர்வினையாற்ற வைக்கும். ஆனால் ஆவேசம் கடந்த குறும்பார்ந்த புன்னகை எதிர்த்தரப்பில் உருவாக்கும் நிலைகுலைவும் செயலின்மையும் மிகமுக்கியமானவை. சிற்சில தருணங்களில் அவை எதிர்த்தரப்பினரையும் சிந்திப்பவர்களாகவும் மனமாற்றம் விழைபவர்களாகவும் உருவாக்கலாம். அப்படிப்பட்ட தருணங்களில் மனத்தில் பெருகும் தன்னம்பிக்கை மலையைவிட உயர்ந்தது. சித்தலிங்கையா தான் அடைந்த தெளிவையும் புரிதலையும் தன் சுயசரிதையில் சித்தரித்திருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் முன்வைத்திருக்கிறார்.

சித்தலிங்கையாவின் சுயசரிதை அரசியல் தளத்தைச் சேர்ந்தவர்களும் படைப்பாளிகளும் எளியவர்களும் மாறிமாறி இடம்பெறும் குறிப்புகளால் நிறைந்தது. ஒருவர் பார்வை வழியாக மற்றொருவர் விரிந்துவிரிந்து ஒரு வரலாறு உருவாகும் கணத்தை இச்சுயசரிதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அந்த எளியவர்களின் வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்திய இலக்கியப்பரப்பில் சித்தலிங்கையாவின் சுயசரிதைக்கு முக்கியமானதொரு இடம் திரண்டு வரவேண்டும். அதுவே இந்த மண்ணைவிட்டு மறைந்த அக்கலைஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

19.06.2021 அன்று இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்த அஞ்சலிக்கட்டுரை)