எத்தன தடவ கேட்டாலும் என் பதில் ஒன்னே ஒன்னுதான் சங்கர். எங்க தற்கொலைக்கு கடன் தொல்லைதான் காரணம். கடன் கொடுத்த பேங்க்காரன் நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்பிட்டே இருக்கறத எவ்வளவு நாள் தாங்க முடியும்? திருப்பிக் கொடுக்க முடியாத சூழல்ல நாங்க இருந்தது அதவிட பெரிய அவமானம். ஒருவாய் தண்ணிகூட அந்த அவமானத்துல உள்ள இறங்கல. அதனாலதான் செத்துரலாம்ன்னு முடிவெடுத்தம்.
ஏன் என்ன மொறச்சி மொறச்சி பாக்கறீங்க சங்கர்? ஏன் என் மேல நம்பிக்கை இல்லயா? அவன் செத்து நான் உயிரோட இருக்கறதுக்குப் பதிலாக நான் செத்து அவன் உயிரோட இருந்தாலும் இப்பிடி கேள்வி கேட்டு மொறச்சிப் பாப்பீங்களா?
ஏதாவது சொல்லுங்க சங்கர். என்ன பேச உட்டுட்டு வாய பாத்திட்டிருந்தா என்ன
அர்த்தம்? இதத்தான் உங்களுக்கு
போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல சொல்லிக் கொடுத்தாங்களா? ஏதாவது காரணம்ன்னு ஒன்னு எழுதி ஃபைல க்ளோஸ் பண்ணிட்டு வீட்டுக்குப் போங்க. ஒரு
நாளைக்காவது நேரத்தோடு போயி பொண்டாட்டி புள்ளைங்ககிட்ட ஆசையா பேசிகிட்டிருங்க...
அப்படியெல்லாம் பாக்காதீங்க சங்கர். ஆறு வருஷமா உங்க கண்ணு, பார்வையில எநத மாற்றமுமில்ல. அன்னிக்குப் பாத்த பி.எஸ்.ஸி. மேத்ஸ் ஸ்டுண்டாவே
இன்னும் ட்ரிம்மா இருக்கிங்க. அதே பார்வை, அதே வெளிச்சம், அதே ஈரம், அன்பா, காதலா, பரிவா, இரக்கமான்னு
தெரிஞ்சிக்க முடியாத அதே ஈர்ப்பு. அதே கொழப்பம், ஆனால் நான் ரொம்ப மாறிட்டேன் சங்கர். பழைய பாட்டனி க்ளாஸ் நிம்மி இல்ல. என்
சுபாவப்படி என்னால இருக்க முடியல சங்கர். யாரும் என்ன இருக்க விடல. எங்க அம்மா, அப்பா, அண்ணனுங்க, முதல் புருஷன், ரெண்டாவது புருஷன்
எல்லாருமே இந்த விஷயத்துல ஒன்னு. ஆளாளுக்குப் புடிச்ச வௌயாட்டுச் சாமானா என்ன
மாத்தி ஆடிட்டே இருக்கத்தான் ஆசப்பட்டாங்க. எனக்குன்னு ஒரு சுபாவம், எனக்குன்னு ஒரு ஆச இருக்கும்ன்னு யாருமே யோசிச்சே பாக்கல. யாராவது
யோசிச்சிருந்தாங்கன்னா உங்கள மாதிரி நானும் பழய நிம்மியாவே இருந்திருப்பேன்.
தாகூர் ஆர்ட்ஸ் காலேஜ் பாட்டனி ஸ்டுடன்ட் நிம்மி....
நீங்க எதுக்கு பெருமூச்சு விடறீங்க சங்கர்? தாகூர் ஆர்ட்ஸ் காலேஜ நெனைச்சிட்டிங்களா? லாஸ்பெட் முக்குல எறங்கி அந்த மேட்டுல நடக்கறது எவ்வளவோ சந்தோஷமா இருக்கு
மில்ல. பொய மேடு, ரெண்டு பக்கமும் வேப்ப
மரங்களும், தைல மரங்களும் மேட்டு
உச்சில நம்ம காலேஜ் பாக்கறது ஒரு கோயிலப் பாக்கறது போல இருக்குமில்ல. முன்னால
வேப்பந் தோப்பு. பின்னால முந்திரித் தோப்பு, குளுகுளுன்னு காத்து. சூடிதாரோட காலம் பூரா அந்த மேட்டுல நடந்துட்டே
இருந்திருக்கலாம்ன்னு ஆசயா இருக்கும் அப்பல்லாம். ஒங்க மேத்ஸ் செட்ல பதினேழு பேரு
எனக்கு லவ் லெட்டர் குடுத்தானுங்க. பாட்டு சத்தத்தோட அந்தப் பசங்கள்ளாம் காவல்
படைமாதிரி பின்னாலேயே வருவானுங்க. அவனுங்க மேல எனக்கு எந்த கோபமும் வந்ததில்லை.
அழகா ஒரு பொண்ண பாத்தா அவள வசப்படுத்தி ஜெயிக்கணும்ன்னு எல்லாருக்கும் ஒரு ஆச. அழகா இருக்கமே, இவனுங்கள அலய வைக்கணும்ன்னு எனக்குள்ள ஒரு
வேகம். ஒரு விளையாட்டு மாதிரி நடந்திச்சி எல்லாம். ஆனா எப்பவுமே யாருமே எல்ல மீறாம
நின்னதுதான் ஆச்சரியம். அப்பவும் இதேபோலத்தான் நீங்க அழுத்தமா ம்ன்னுதான்
இருந்திங்க.
ஏன் சங்கர் எழுந்திட்டிங்க? வாக்குமூலம் வாங்க வந்த இன்ஸ்பெக்டரா உங்ககிட்ட பேசல நான். என் பேட்ச்மெட்
சங்கரா நெனச்சித்தான் பேசறேன். இந்த ஆறு வருஷத்துல இப்படி பழசயெல்லாம் நெனச்சிப்
பாத்து பேசி பகிர்ந்துக் கறதுக்குகூட எனக்கு ஆளுங்களே இல்லாம போயிட்டாங்கப்பா.
இன்னிக்கு எல்லாமே பொங்கிப்பொங்கி வருது. அருவிபோல அந்த நெனப்புங்க என் மேலயே
விழுந்து வழியுது.
டிகிரி முடிக்கும்போது எனக்கு 21 வயது. அப்பாவும் அம்மாவும் ஒடனே எனக்குக் கல்யாணத்த முடிக்கணும்ன்னு துடிச்சாங்க. இப்ப வேணாம், நா மேல படிக்கறேன்னேன். சிதம்பரம் போயி படிக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசய இருந்திச்சி. அதெல்லாம் கூடவே கூடாதுன்னு அப்பா
தடுத்துட்டாரு. இந்த ஊருலயே இவன் லெட்டர் குடுத்தான், அவன் லெட்டர் குடுத்தான்னு சொல்லுவ, இன்னும் வெளியூருல படிக்கும்போது எவன் எவன் என்னென்ன கொடுப்பானோ? அந்தக் கதையே வேணாம்ன்னு அம்மா சத்தம் போட்டாங்க. என்னனக்கோ வெளையாட்டுத்தனமா
எனக்கு வந்த லவ்லெட்டர் பத்தி அம்மாகிட்ட சொன்ன விஷயத்தை அன்னிக்குன்னு பாத்து
சரியா பத்தவச்சி ஊதிப் பெரிசாக்கிட்டாங்க அம்மா. அடுத்த நாள்ளேருந்து என் மேலயே
எல்லாருக்கும் கண்ணாயிடுச்சி. ஏமாந்த நேரம் பார்த்து எப்படி ஓடிப் போவலாம்ன்னு
நான் சதாகாலமும் திட்டம் போட்டுத் திரியற மாதிரி அவுங்களுக்குள்ளாம் ஒரு நெனப்பு.
அவுங்க கண்காணிப்பு ரொம்ப ஆபாசமா இருந்திச்சி.
திடீர்னு ஒருநாள் ஒரு போட்டாவ காட்டி இவருதான் மாப்பிள்ள பாத்துக்கோன்னு
சொன்னாங்க. மொதல் பார்வையிலேயே எனக்கு புடிக்கல. மாட்டேன்னு சொன்னேன். அப்பாவுக்கு
என்மேல ஒரே கோவம். என்னடி நெனச்சிட்டிருக்க இந்த மாப்பிள்ளய? எப்படி கஷ்டப்பட்டு புடிச்சேன் தெரியுமா? விழுப்புரத்துல டெக்ஸ்டைல்ஸ் பிசினெஸ்ல நெம்பர் ஒன்ஆளு. லட்சாதிபதி.
சொந்தக்கால்ல நிக்கத் தெரியுமான்னு விளையாட்டுக்கு பெத்தவங்க கேட்டத சீரியஸா
எடுத்துகிட்டு இருபது வருஷமா கஷ்டப்பட்டு ஒழைச்சி படிப்படியா முன்னேறி இந்த
நெலைக்கு உசந்திருக்காரு. இவர கட்டிக்க மாட்டேங்கறதுக்கு என்னடி காரணம்? பெரிய மகாராணின்னு நெனப்பா மனசுல. காரு, பங்களான்னு ரொம்பல அந்தஸ்தோட இருக்கான். ஜாதகப் பொருத்தம் அம்சமா இருக்குன்னு
சொல்றாரு ஜோசியரு. இப்பிடி ஒரு அதிர்ஷ்டம் ஒன் வாழ்க்கையில தேடி வருதேன்னு
சந்தோஷப்படறத உட்டு மூஞ்சிய தூக்கிட்டு நிக்காதடின்னாங்க.
வேணாம்வேணாம்ன்னு நான் மறுக்க அவுங்க புடிவாதம் அதிகமாயிட்டே போச்சி. பெண்ணு பாக்க வந்த அன்னிக்குத் தான் முழுசா பாத்தேன் அவர. தொப்பயும் தொந்தியுமா
வினுசக்கரவர்த்தி மாதிரி இருந்தாரு. நாப்பது வயது இருக்கும்ன்னு நெனைக்கறேன்.
திரும்பிப் பார்த்து ஓன்னு அம்மாகிட்ட அழுதேன். வயசப் பாக்காதடி, வாழ்க்க பூரா வசதியா வச்சி கண்கலங்காம பாத்துக்குவானான்னு பாருடின்னு பூ
வச்சிவிட வந்தாங்க அவுங்க. அழுவறதா சிரிக்கறதான்னே தெரியல. என் வார்த்தைக்கு எந்த
மதிப்பும் இல்லங்கற மாதிரி ஆயிடுச்சி. அப்பா வயசுள்ள ஒரு ஆளோட வாழ்க்கைய
ஆரம்பிச்சா எப்படி இருக்கும்ன்னு நெனைச்சிப்பாருங்க சங்கர். காசு பணத்த தவிர வேற
எந்த எண்ணமும் இல்லாதவரு அவரு. சதாகாலமும் பிசினெஸ் பிசினெஸ்ன்னு பாம்பே, பூனா, சூரத்னு சுத்திகிட்டே
இருப்பாரு. ரெண்டு மூணு வாரத்துக்கு ஒருதரம் வருவாரு. நிம்மிக்கண்ணு நிம்மிக்கண்ணுன்னு ஒரே கொழயலா
இருப்பாரு. இறுக்கிப் புடிக்கும் போது அவரு தொப்ப குத்தும். அருவருப்பா இருக்கும்.
விடுவிடுன்னு கன்னம், கழுத்து, நெத்தின்னு முத்தம் கொடுத்துகிட்டே அறைக்குள்ள தூக்கிட்டு போயிடுவாரு. பாவம்.
என் கண்ணு பதினஞ்சி நாளா ஏங்கிப் போயிருக்கும்ன்னு மேல உழுவாரு. ஏங்கனது நானா அவரான்னு
ஆண்டவனுக்குத்தான் தெரியும். ரெண்டு நாளு பசமாதிரி ஒட்டிட்டிருப்பாரு. அப்பறம் பொட்டிய
தூக்கிட்டு குஜராத், பெங்களூருன்னு
கௌம்பிடுவாரு.
லட்சம் லட்சமா பணம் இருந்து என்ன பிரயோஜனம் சங்கர்? எங்க அம்மா அப்பா மேல ஒரே ஆத்தரமா பொங்கும். என் மனச புரிஞசிக்காத இவுங்கள
எப்படி என்ன பெத்தவங்கன்னு சொல்லிக்கறது? சடங்கு, சீருன்னு சொல்லிகிட்டு
அப்பப்ப வருவாங்க. எரிச்சல்ல சத்தம் போட்டு அனுப்பிடுவேன். எங்க அப்பாவ கொலையே
செஞ்சிடணும்ன்னு ஆத்தரம் வரும்.
அப்பாவா அவரு? என்ன பாழுங் கெணத்துல
தள்ளன பாவி.
அவரு இல்லாத நேரத்துல செக்புக்ல கையெழுத்து போடறதுக்காக என்ன சிக்னேட்டரியா
போட்டிருந்தாரு. கடையிலிருந்து ஷ்யாம்ன்னு ஒரு மானேஜர் பையன் கையெழுத்துக்காக
அடிக்கடி வருவான். ஒரு வருஷமா அவன்கூட எந்தப் பேச்சு வார்த்தயும் இருந்ததில்ல.
கையெழுத்து வாங்கிட்டு போயிடுவான். திடீர்னு ஒருநாள் நீங்க தப்பா நெனைக்கலைன்னா
ஒன்னு கேக்கலாமான்னான். கேளுன்னு சொன்னேன். தாகூர் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டுன்ட்தான
நீங்கன்னு கேட்டான். ஆமாம்னேன். நைன்டிஃபைவ் பாட்டனி செட்தானேன்னு அடுத்தபடி
கேட்டான். எனக்கு ஒரே ஆச்சரியம். ஒங்களுக்கு எப்படித் தெரியும்ன்னேன். நான்
நைன்டிஃபோர் பிசிக்ஸ் செட். உங்களுக்கு சீனியர். நீங்க பாட்டனியில இருக்கறப்போ
நான்கூட ஒங்களுக்கு லவ்லெட்டர் குடுத்திருக்கேன்னான். எனக்கு சிரிப்புன்னா
சிரிப்பு. அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சேன். கல்யாணமான ஒரு வருஷத்துல
அன்னிக்குத்தான் நான் சிரிச்சேன் சங்கர்.
பாண்டிச்சேரியில் அத்த ஊட்டுல தங்கி படிச்சிட்டிருந்தேன் மேடம். டிகிரி
முடிச்சதும் இங்க வரவேண்டியதா போச்சி. அம்மா அப்பா தம்பி தங்கச்சிங்கள்ளாம்
வழுதுரெட்டில இருக்காங்க. குடும்ப நெலைமை சரியில்ல. படிச்ச படிப்புக்குத் தகுந்த
வேலைக்குத்தான் போவேன்னு ஒக்காந்திருந்தா பட்டினி தான் கெடந்திருக்கணும். தெரிஞ்சவரு ஒருத்தரு மூலமா ஐயாகிட்ட மேனேஜரா சேந்தேன். ஐயா ரொம்ப நல்ல
டைப் மேடம். தங்கமான மனசுன்னான். அந்த நிமிஷமே அவன எனக்கு ரொம்ப புடிச்சிப்
போச்சி. அதுக்கப்புறம் அவரு இல்லாத நாளுங்கள்ள எங்க ஊட்டுலதான் இருப்பான் அவன்.
மேடம் மேடம்ன்னு கூப்படறத நிறுத்திட்டு ஒழுங்கா நிம்மின்னு கூப்புடுப்பான்னேன்
ஒருநாளு அவங்கிட்ட. அவனுக்கு கன்னம் மூஞ்சிலொம் செவுந்துடிச்சி. நா எப்பிடி
எப்பிடின்னு இழுத்தான். அதெல்லாம் அப்பிடித்தான் ஒழுங்கா கூப்புடுன்னேன்.
மறுபடியும் நீங்க வாங்க போங்கன்னு இழுத்தான். நா நேரிடையா விஷயத்துக்கு
வந்துட்டேன். இங்க பாரு. நீ எனக்கு லவ் லெட்டர் குடுத்தது உண்மையா பொய்யான்னு
கேட்டேன். உண்மைதான்னு சொன்னான். என் மேல வச்சிருந்த லவ் இன்னும் இருக்குதான்னு
கேட்டேன். மென்னு முழுங்கிட்டு இருக்குதுன்னு தலய குனிஞ்சிகிட்டான். அப்படின்னா
என்ன நிம்மின்னே கூப்புடுன்னேன். தயக்கத்தோட நிம்மி மேடம் நிம்மின்னு பெனாத்தனான்.
பிறகு நிதானமா நிம்மின்னான். சந்தோஷத்துல ஓடிப்போயி அவனுக்கு ஒரு முத்தம்
குடுத்தேன். ஆச ஆசயா ஒரு குரல் கூப்புட்டா, மனசுக்குள்ள எவ்வளவோ உற்சாகமா இருக்கும்ன்னு அன்னிக்குத்தான் புரிஞ்சது.
அப்பவே வாழ்ந்தா இவன் கூடத்தான் வாழணும்ன்னு முடிவெடுத்துட்டேன். பாக்கறதும் பழகறதுமா ஆறேழு மாசம் ஓடிப் போச்சி.
ஒருதரம் இவரு ஊருலேந்து வந்தபோது குற்றாலம் போலாமான்னு கேட்டேன். என்ன
திடீர்னு குற்றால ஆசைன்னாரு. டிவில காட்டனாங்க. நல்லா இருந்திச்சி.
பாக்கலாமேன்னேன். சரின்னு டாட்டா சுமோல கௌம்பிட்டோம். அவரே வண்டிய ஓட்டிட்டு
வந்தாரு.
பொங்கிப்பொங்கி வழியற அருவியயே பாத்து மலச்சி நின்னுட்டேன் நான். கண்ணாடியில
என்னயே பாத்துக்கற மாதிரி இருந்தது. அந்த ஆவேசமும் வேகமும் மூர்க்கமும் காலம் பூரா
பாத்துக்கிட்டே நிக்கலாம் போல இருந்தது. அச்சு அசலா எல்லாமும் எனக்குள்ள
பொங்கிட்டிருக்கிற மாதிரியே இருந்தது. சாரல்ல ரொம்ப நேரம் நிக்க முடியாதுடி, சளிபுடிச்சிக்கும்னு நடுங்கனாரு இவரு. எனக்குப் பாவமாவும் இருந்தச்சி.
கடுப்பாவும் இருந்திச்சி. அப்படியே அந்த அருவியில தள்ளி விட்டுடலாம்னும் தோணிச்சி.
குளிக்கலாமான்னு கேட்டேன். சாரலே தாங்கல, நீ. குளிக்கலாமான்னு கேக்கறயே. குளிச்சா என் கத அவ்வளவுதான். பேசாம நான்
பாத்ரூம்லியே குளிச்சிக்கறேன்னு சிரிச்சாரு. எனக்கு அழுவறதா சிரிக்கறதான்னே
தெரியல. சரி நீங்க போங்க, நா அப்பறமா வரேன்னு சொன்னேன். பத்தரம் பத்தரம்னு ஆயிரம் தரம் சொல்லிட்டு
போயிட்டாரு அவரு.
நான் மறுபடியும் அருவியயே கொட்டகொட்ட பாத்துட்டிந்தேன். உடம்பே பத்தி எரியற
மாதிரி இருந்தது. திடீரன்னு ஷ்யாம் ஞாபகம் வந்துச்சி. அவனோடு சேந்து அந்த அருவியில
குளிக்கணும்ன்னு ஆச வந்தது.
நேரமாக நேரமாக அந்த ஆச கட்டுக்கடங்காம போயிட்டே இருந்தது. என்னால தாங்கவே முடியல.
நேரா ஒரு எஸ்டிடி பூத்துக்கு போயி அவனோட டெலிபோன்ல பேசனேன். உடனே ஒரு டாக்ஸி
புடிச்சி வந்து சேருன்னேன். எதுக்கு எதுக்குன்னு தெணறனான். மொதலல வா ராஜா, உனக்கு ஒரு பரிசு தரப்போறேன்னேன். லாட்ஜ் விலாசம் சொல்லி அதுக்குப் பக்கத்து
லாட்ஜ்ல தங்கிக்க சொன்னேன். அதுக்கப்புறம் நாளைக்கி காலைலல இங்க இருப்பான்ங்கற நெனப்போட
அருவியில குளிச்சேன். ஆனந்தமா இருந்தது. ரெண்டு மணி நேரம் கழிச்சித்தான் வெளியே
வந்தேன்.
மறுநாள் காலையிலேயே அவரு ஊட்டுகுத் திரும்பிப் போவலாமான்னு கேட்டாரு. இன்னும்
ரெண்டு நாள் இருக்கலாமேன்னு இழுத்தேன். சரின்னு டிபன் வரவழச்சி சாப்புட்டுட்டு
பிபி மாத்திரய போட்டுகிட்டு து£ங்கப் போயிட்டாரு. நான் மாத்துத் துணியோட வெளிய வந்ததேன். ஷ்யாம்
நின்னுட்டிருந்தான். அவனப் பார்த்ததும் ஒரே ஆனந்தமா இருந்தது. ஆர்ட்ஸ் காலேஜ்
பொண்ணா மாறிட்ட மாதிரி இருந்தது.
அருவிக்கரையில நின்னு அவன் பேசனதயெல்லாம் கேட்டிட்டிருந்தேன். அவன் தேனருவிக்கு
போவலாமான்னு கேட்டான். நீ எங்க கூப்புட்டாலும் வரேன். நீதான் என் வாழ்க்கைன்னேன்.
ரெண்டு பேருமா மலையேறனோம். அவன் கைய புடிச்சிகிட்டும் தோள்ள சாஞ்சிகிட்டும்
எநனச்சா நடக்கறதும் நெனச்சா ஒக்காந்துக்கறதுமா போயிட்டே இருந்தோம். நடுநடுவுல
சின்னச்சின்ன அருவிங்க. ஆபத்தில்லாத அருவிங்க. பாத்த எடத்துல எல்லாம் குளிக்கறதும்
பேசறதும் அப்பப்ப நடக்கறதுமா இருந்தோம். ஒரு திருப்பத்துல தேனருவிய காட்டனான்
அவன். அது ஒரு பெரிய தரிசனம்ங்க சங்கர். ஆன்னு வாய பொளந்துட்டு நின்னுட்டேன்.
நிம்மி நிம்மின்னு அவன் என்ன உலுக்கனப்பறம்தான் சுய உணர்வு வந்தது-. திரும்பி அவன
அப்படியே கட்டிப் புடிச்சிகிட்டேன். மாறிமாறி முத்தம் குடுத்துகிட்டோம். அப்படியே
பக்கத்துல பாறைக்கு நடந்துபோனோம். நான் எப்பவுமே அனுபவிக்காத சந்தோஷத்த அங்க
அனுபவிச்சேன். பிறகு குளியல், நீச்சல்னு ஒரே ஆட்டமா பொழுது போக்கனோம். மெதுவா கீழ எறங்கி வந்தோம். அறைக்குள்ள
அவரு அமைதியா தூங்கிட்டிருந்தாரு. பாத்தப்போ ஒரு நிமிஷம் பாவமா இருந்தது. அப்புறம்
அதப்பத்தியெல்லாம் யோசிக்கக்கூடாதுன்னு நானே கட்டுபடுத்திக்கிட்டேன். அடுத்த
நாளும் ஷ்யாமோட குளிக்கக் கௌம்பிட்டேன். அதே தேனருவி. அதே தரிசனம், அதே சந்தோஷம்.
ஊருக்கு வந்த பிறகு மறுபடியும் அவர் பாம்பே பெங்களூர்னு கௌம்பிட்டாரு. ஷ்யாம்
வீட்டுக்கு வந்து நெறய நேரம் தங்கறத பாத்துட்டு வீட்டுல சந்தேகம் வர
ஆரம்பிச்சிட்டுது. ஆனா யாரும் வாயத் தெறந்து கேக்கல. கேட்டிருந்தாங்கன்னா ஆமா, அதுக்கென்ன இப்பன்னு கேட்டிருப்பேன்.
ஆறு மாசத்துக்குப் பிறகு ஒரு நாளு பெங்களூருலேருந்து டெலிபோன் கால் வந்தது.
அவரு தங்கியிருந்த லாட்ஜ் மேனேஜர் பேசனார். திடீர்னு நெஞ்சுவலி வந்ததாவும்
ஆஸ்பத்தியில் சேத்துக்கறதாவும் சொன்னாரு. எல்லாரும் கார் வச்சிட்டு போனோம்.
அவருடைய அம்மா அப்பா அண்ணன் தம்பிங்க எல்லாரும் வந்திருந்தாங்க. ஆஸ்பத்திரில
பேச்சு மூச்சில்லாம கெடந்தாரு இவரு. இதயத்துக்கு ரத்தம் கொண்டு போகற குழாய்ல
அடைப்பு இருக்குதுன்னாங்க. உடனடியா பைபாஸ் சர்ஜரி பண்ணணும்ன்னாங்க. சரின்னு சொன்னோம். எல்லாம் நல்லபடி முடிஞ்சி ஊட்டுக்கு கூப்ட்டு வர
மூணு வாரம் ஆயிடுச்சி.
டிஸ்சார்ஜ் செய்யும்போதே கட்டாயமா ஆறுமாசம் படுத்த படுக்கையா ஓய்வெடுக்கணும், சாப்பாட்டுல
கட்டுப்பாடா இருக்கணும்ன்னு கிளிப்புள்ளைக்கு
சொல்றமாதிரி சொல்லி அனுப்பனாங்க. ஆனா இவரு கேககல. அடுத்த வாரமே அது வேணும் இது வேணும்ன்னு கேட்டு
நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாரு. குடுக்கலன்னா ஒரே சத்தம். நாக்குக்கு ருசியா
சாப்புட்டு செத்துப் போறேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. இருபது நாள்ள மறுபடி
அட்டாக். ஜிப்மருக்குத்தான் கொண்டு வந்தோம். ஆனா பிரயோஜனம் இல்ல. உயிர்
போயிடுச்சி.
ஐயோ பொண்ணே இப்படி ஆயிடுச்சே உன் தலயெழுத்துன்னு ஓடி வந்தாங்க அம்மாவும்
அப்பாவும். ஆக்கனதே நீங்கதான்னு வெரட்டிட்டேன். பேசாம மாமனாரு ஊட்டோடு
இருந்திட்டேன். அதனால அவுங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல.
மாமனார்கிட்ட ஒருநாளு பக்குவா ஷ்யாம் பத்தி சென்னேன். அவன கல்யாணம் பண்ணிக்கப்
போறேன்னு சொன்னேன். நீ எடுத்த முடிவுதான் சரி. என் புள்ளயால உன் வாழ்வு
பாழாகக்கூடாது. அவனோடு சந்தோஷமா இருன்னாரு. அடுத்த நாளே எனக்குன்னு சொத்துல உள்ள
பங்க தனியா பிரிச்சி குடுத்து ஷ்யாம கூட்புட்டு பேசனாரு. அப்பறமா கோயில்ல வச்சி
ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாரு.
ஒரு வருஷம் எந்தப் பிரச்சினையும் இல்ல. நல்லா சந்தோஷமா இருந்தோம். வண்டி வச்சி
மறுபடி குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர்னு போய் வந்தம். தன்னுடைய தம்பி தங்கச்சிங்களுக்கு நான்
வச்சிருந்த பணத்துலேயே நல்ல எடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சான். ஒருநாள் திடீர்னு
வந்து டெக்ஸ்டைல்ஸ் பிசினெஸ் புடிக்கலை. மெட்ராஸ் போயி ஸாப்ட்வேர் கம்பெனி ஒன்னு
ஆரம்பிக்கலாம்னு பாக்கறேன்னான். அதுல நல்லா லாபம் கெடைக்கும்ன்னு ரொம்ப துடிப்பா
இருந்தான். யு.எஸ். கம்பெனி ஒன்னும் பணம் போடத் தயாரா இருக்குதுன்னு சொன்னான்.
தொடக்கத்துல இருபது லட்சம் பேங்க் பேலன்ஸ் காட்டனாத்தான் க்ளியரன்ஸ்
கெடைக்கும்ன்னு என்னென்னமோ சொன்னான். என்னோட ஷ்யாம்தானேன்னு என் கணக்குல இருந்த
பணத்தயெல்லாம் அவன் பெயருக்கு மாத்திக்குடுத்தேன். மேற்கொண்டு பேங்க்லயே
கடனுக்கும் ஏற்பாடு செஞ்சேன். ஆசை மயக்கத்துல நான் செஞ்ச அந்த தப்புத்தான் பின்னால
நடந்த எல்லாக் குழப்பங்களுக்கும் காரணமா போயிடுச்சி.
கம்பெனி தொடக்க விழாவுக்கு நானும் போயிருந்தேன். தடபுடலா இருந்தது எல்லாம்.
ஒரே வருஷத்துல எங்க போவப் போறேன். பாத்துக்கிட்டே இருன்னான். ஆனா அவன் நெனைச்ச
மாதிரி பிசினெஸ் பிக்கப் ஆவல. போட்ட பணத்தயே எடுக்க முடியல.
உலகம் பூராவுமே ஸாப்ட்வேர் பிசினெஸ் டல்லாயிடுச்சின்னாங்க. எல்லாம் கொஞ்ச நாள்ள
சரியாயிடும்ன்னு சொன்னேன். ஊருக்கு சரியா வரதில்ல. தொடர்ச்சியா மெட்ராஸ்லயே தங்க
ஆரம்பிச்சான். என்ன காரணம்ன்னு கேட்டா ஏதேதோ பொய் சொன்னான். உள் மனசுக்குள்ள
என்னமோ ஒடைஞ்ச மாதிரி ஆயிடுச்சி. மெதுவா விசாரிச்சேன். கம்பெனியில வசந்தான்னு ஒரு
பொண்ணோட அவனுக்கு தொடர்பு இருக்கறது தெரிஞ்சிது. என்னால நம்பவும் முடியல. நம்பாம
இருக்கவும் முடியல. உடம்பும் மனசும் பத்தி எரியற மாதிரி இருந்தது. சட்டுன்னு
மெட்ராஸ் போயி அவன் கம்பெனியில எறங்கனேன். அவனுக்கு தூக்கி வாரி போட்ட மாதிரி
ஆயிடுச்சி. அந்தப் பொண்ணும் அப்ப அவங்கூடத்தான்
இருந்தா. ரெண்டு பேரும் கள்ளமுழி முழிச்சாங்க. ரெண்டு பேரு மூஞ்சப் பார்ததுமே
திருட்டுப்பூனைங்கன்னு தெரிஞ்சிப் போச்சி. என்னால அந்த அதிர்ச்சிய தாங்கிக்கவே
முடியல.
அன்னிக்கு என் பின்னாலயே வந்துட்டான் ஷ்யாம். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு
நேரிடையாகவே கேட்டேன் அவங்கிட்ட. அப்படில்லாம் ஒன்னுமில்ல நிம்மின்னு ஆயிரம்
சத்தியம் பண்ணான். அப்பத்தான் வாங்கன கடனுக்கு தவண கூட கட்டலன்னு பேங்க்லேருந்து
நோட்டீஸ் வந்தது. ஏற்கனவே ரெண்டு நோட்டீஸ் வந்திருக்குது போல. நான் பாக்கல.
எல்லாத்தயும் மறச்சிட்டிருக்கான். அது மூணாவது நோட்டீஸ். பத்து நாளா எங்கயும்
போவல. எங்கிட்டயே ரொம்ப பாசமா இருந்தான்.
அன்னிய தபால்ல டெலிபோன் பில் வந்தது. வழக்கமா அதயெல்லாம் நான் பாக்கறதே இல்ல.
சும்மா படிக்கலாமேன்னு கால் சம்மரிய பொரட்டனேன். அதிர்ச்சியா இருந்தது. ஷ்யாம்
என்னோட தங்கியிருந்த எல்லா நாளுங்கள்ளயும் நடுராத்திரி ஒருமணிக்கு மேல் ஒரே
நம்பருக்கு அவன் கால் பேசி யிருக்கான்னு தெரிஞ்சிது. எனக்கு அடிவயிறே பத்தி
எரிஞ்சிது. அது வசந்தாவோட ரெசிடென்ஸ் நெம்பர். நான் சுக்கு நூறா ஒடைஞ்சி
போயிட்டேன். இப்பிடிப்பட்ட ராஸ்கல என்ன செய்யலாம்ன்னு சொல்லு. எனக்கு வாழவே
புடிக்கலை.
நேரா அறைக்குள்ள போயி தூக்க மாத்திர டப்பிய எடுத்தேன். இருபது இருபத்த மஞ்சி
இருக்கும். கைக்கு கெடைச்சத கொட்டி எடுத்து தூள்தூளாக நசுக்கனேன். அவ்வளவு தூளயும்
பால்ல கலந்து குடிச்சிட்டு செத்துப் போவணும்ன்னு நெனைச்சேன். வாழறதுல இனிமே அர்த்தமே இல்லன்னு தோணிச்சி. அப்பதான் வேற
ஒரு யோசனயும் வந்தது. தப்பு பண்ணது அவன். ஆசைக்கு துரோகம் பண்ணது அவன். என் மனச
புரிஞ்சிக்காம இன்னொருத்திய தேடிப் போனது அவன். எல்லா விதங்களிலும் மொதல்ல சாவ
வேண்டியது அவன்தானே தவிர நான் ஏன் சாவணும்ன்னு தோணிச்சி.
அப்பத்தான் அவன் கிட்சனுக்குள்ள வந்தான். என்ன நிம்மி பால் கலக்கறியா எனக்கும்
ஒரு க்ளாஸ் குடுன்னான். டக்குன்னு மாத்திர கலந்த பால எடுத்து நீட்டிட்டேன். அவனும்
சிரிச்சிகிட்டே வாங்கி கடகடன்னு குடிச்சிட்டு போயிட்டான் பாவி. குபீர்னு ஒரு
துக்கம் பொங்கிடுச்சி எனக்குள்ள. அழுக அழுகயா வந்தது. எவ்வளவு பெரிய கொலகாரி
நான்னு வெக்கமா இருந்தது. இவ்வளவு கேவலமானவளா நான்னு என்மேலயே ஒரு கோபம். இனிமே
எந்த மூஞ்சிய வச்சிட்டு உலகக்துல நடமாடறதுன்னு ஒரு அவமான உணர்ச்சி. என்னுடைய
அன்புக்கு அவன் உண்மையா இல்லைன்னு அவனை கொல்ல பாக்கறேனே, செத்துபோன அவருடைய காதலுக்கு நானும் உண்மையா இருந்ததே இல்லயேன்னு ஒரு குற்ற
உணர்ச்சி பொங்கிவர துடிச்சிட்டேன். வேகமாக டப்பிய கவுத்து பாத்தேன். ரெண்டே ரெண்டு
மாத்திரதான் கெடந்தது. நம்ம உயிருக்கு இது போதும்ன்னு நெனச்சி தூளாக்கி பால்ல
கலந்துட்டேன். ஊரு உலகத்துக்கு இது வேற மாதிரி தெரிஞ்சிரக் கூடாதுன்னுதான்
ஸாப்ட்வேர் பிசினெஸ் சரிவு, கடன் தொல்லை, முதலீடு நஷ்டம்ன்னு
கடிதம் எழுதி வச்சிட்டு அந்தப் பால குடிச்சேன். அதுக்குள்ள அவன் தூங்கிட்டான்.
அவன் மார்மேலயே தலவச்சி நானும் படுத்துட்டேன்.
திடீர்னு அந்த குற்றால அருவி ஞாபகம் வந்தது. வெள்ளமா கொட்டற அருவி. ஆவேசமும்
வேகமுமா யாராலயும் தடுக்க முடியாத ஒன்னா பொங்கிப் பாயற அருவி. அது நான்தான்
நான்தான்னு மறுபடியும் மறுபடியும் மனசுக்குள்ள நெனைச்சிட்டிருக்கும்போதே சுய
உணர்வு போயிடுச்சி.
என் மனசுல இருக்கறதயெல்லாம் சொல்லியாச்சிங்க சங்கர். இதுக்கு மேல ஒண்ணுமில்ல. எல்லாத்தயுமே வாக்குமூலமா எடுத்துகிட்டாலும் சரி, கூடப்படிச்ச சிநேகிதி மனப்பாரத்த எறக்கி வைக்க சொன்னதுன்னு நெனைச்சி
எடுத்துக்காம விடறதும் சரி, உங்க இஷ்டம சங்கர். ஆனா எனக்குன்னு காலம் எஞ்சியிருந்தா, ஒரே ஒரு காரியம் செய்யணும்ன்னு ஆசயா இருக்குது. அந்த ஆச என்னன்னு கேக்கறீங்களா? நாம படிச்ச தாகூர் ஆர்ட்ஸ் காலேஜ் அளவுக்கு இல்லன்னாலும் சின்ன அளவுல ஒரு
ஆசிரமம் நடத்தணும். பத்து பதினஞ்சி
அனாதை புள்ளைங்கள அதுல வளக்கணும். அன்புன்னா என்ன. அதை மதிக்கறதுன்னா என்ன, அதை, நம்பறதுன்னா என்னன்னு
அவுங்களுக்கு சொல்லித் தரணுங்கறதுதான் அந்த ஆசை சங்கர்.
(பிரசுரமாகாதது - 2002)