Home

Sunday, 20 June 2021

கடல் - சிறுகதை

 பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடலைப் பார்த்தபடி நின்றான் முட்டக்கோஸ். அருகில் யாரும் இல்லை. கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாக ஓடிவரும் அலைகள் நெஞ்சில் முட்டிமோதுவதைப்போல இருந்தது. எனக்கு எதுவும் தெரியாது சாரு. நான் சொல்றத நம்பு சாருஎன்று அழுது கெஞ்சக் கெஞ்ச இந்தக் கரையோரமாகத்தான் அடித்து இழுத்துச் சென்றார்கள் போலீஸ்காரர்கள். இடுப்பெலும்பை முறிப்பது போல இடைவிடாது விழுந்த லத்தியடிகள் இன்னும் நினைவில் இருந்தன. அனிச்சையாக பின்புறத்தைத் தடவிக் கொண்டன அவன் கைகள். அன்று கரைநெடுக ஆட்கள் நின்றிருந்தார்கள். அவன் சொற்களை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுடைய சத்தியத்துக்கும் கண்ணீருக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்றும் சக்தி இல்லை. சந்தர்ப்பச் சூழல்கள் அவனையே குற்றவாளியாக சுட்டிக்காட்டின. வயதின் காரணமாக முதலில் சீர்திருத்தப் பள்ளியிலும் பிறகு சிறைச் சாலையிலும் தண்டனைக் காலத்தைக் கழிக்கவேண்டியிருந்தது.

கடல் அப்படியே இருந்தது. கரைமட்டும் வெகுவாக மாறிவிட்டது-. ஏராளமான பாறைகளைக் கொண்டுவந்து கொட்டி ஏரிக்கரைபோல உயர்த்திக் கட்டியிருந்தார்கள். அழகுக்காக அங்கங்கே நட்டு வளர்க்கப்பட்ட குட்டைப் பேரீச்சை மரங்கள் காணப்பட்டன. அப்புறம் குரோட்டன்கள், நிழற்குடைகள், நடைபாதை. அலைகளால் சிதைக்கப்பட்ட மணல்வீடுகளை மனம் சோர்வுறாமல் மீண்டும்மீண்டும் கட்டிக் களித்த மணற்பரப்பு காணாமல் போய்விட்டது. கிளிஞ்சல்களை தேடித்தேடிப் பொறுக்கிக்கொண்டும் நண்டுகளைத் துரத்திக் கொண்டும் ஒரு கூட்டம் முன்பெல்லாம் எப்போதும் விளையாடிபடி இருக்கும். இப்போது எல்லாருமே சிமெண்ட் பெஞ்சுகளில் உட்கார்ந்துகொண்டு சுண்டல் மென்றபடி வேடிக்கை பார்க்கிறார்கள்.

கரையிலிருந்து சிறிது தொலைவுவரை ஏதோ கட்டுமான வேலை நடந்தபடி இருந்தது. ஏகப்பட்ட ஆள் வேலை செய்தார்கள். கிரேன்களின் நிண்ட கைகள் பெரியபெரிய பாறைகளை அள்ளிச்சென்று கடலுக்குள் வீசியவாறிருந்தன. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு வதைபடும் யானையைப் போல உறுமிக் கொந்தளித்தது கடல்.

கரையை ஒட்டி கால்போன போக்கில் நடக்கத் தொடங்கினான். மீன் கூடைகளை சுமந்தபடி நாலு பெண்கள் பேசிக்கொண்டே சென்றார்கள். ஆறேழு சிறுவர்கள் கடலில் குளித்தார்கள். கரையில் நின்றபடி ஒரு நாய் அவர்களை வேடிக்கை பார்த்தது. சுற்றுலா வந்த ஒரு குடும்பம் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தது. கறுப்புக் கண்ணாடி அணிந்த வெளிநாட்டுப் பிரயாணிகள் இரண்டுபேர் கழுத்தில் தொங்கும் புகைப்படக் கருவியோடு இரண்டு பாறைகளில் எதிரும் புதிருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். உயரமான இடத்தில் நின்றபடி ஒரு பெரியவர் தொலைநோக்கியால் கட¬லையே வெகுநேரம் பார்த்தபடி இருந்தார்.

யாரிடமும் நெருங்கி நின்று பேச விருப்பமில்லை. ஏராளமான கசப்புகளை விழுங்கிவிழுங்கி மனமும் கடலைப்போல அமைதியில்லாமல் உறுமிக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் யாரைக் கண்டாலும் அவன்தான் முன்னால் ஓடி நிற்பான். அவன் பார்வையிலிருந்து யாருமே தப்பமுடியாது. யாரை எப்படிச் சொல்லி அழைக்கவேண்டும் என்பதெல்லாம் அவனுக்கு அத்துபடியான விஷயம். பழகிப்பழகி அறிந்து கொண்ட பிரெஞ்சு வார்த்தைககளை பொருத்தமான இடங்களில் பயன்படுத்திவிடுவான். தமிழாகவே இருந்தாலும்கூட அவன் உடல்மொழி பிரயாணிகளுக்கு எல்லாவற்றையும் உணர்த்திவிடும். மிசே, நான் -தூக்கிகிட்டு வரேன்.இங்க குடு மிசே.” “ஸ்விம்மிங்க்கு ரொம்ப நல்ல எடம் காட்டறேன். வந்து பாரு மிசே.” “இயற்கையான கொளம் இங்க பக்கத்துலயே இருக்கு மதாம். நா இட்டும்போறன். வா மதாம்.சொல்லிச்சொல்லிப் பழகிய வாக்கியங்கள் நெஞ்சில் மிதந்துமிதந்து அலைந்தன.

ஆறு வயதில் மரக்காணத்திலிருந்து சின்னம்மாவின் பிரசவத்துக்காக சித்தப்பாவும் சொந்தக்காரர்களும் புதுச்சேரிக்குக் கிளம்பிவந்தார்கள். காலராவில் அம்மாஅப்பாவைப் பறிகொடுத்துவிட்டு நின்றவனை சோறுபோட்டு ஆதரித்தவர் சித்தப்பா. ஆஸ்பத்திரிப் பயணத்தில் அவர்களோடு அவனும் வந்தான். சின்னம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு பாதையோரக் கடையில் இட்லி வாங்கித் தின்றபிறகு பக்கத்தில் இருந்த பூங்காவில் எல்லாரும் படுத்துக்கொண்டார்கள். இரண்டு நாட்கள் ஓடின. பாப்பா பிறந்திருப்பதாகச் சொன்னார் சித்தப்பா. அவர்கள் மட்டும் போய்ப்பார்த்துவிட்டு வந்தார்கள். அவனை உள்ளே அழைத்துச் செல்லவில்லை. இரண்டு நாட்கள் ஓடின. மூன்றாவது நாள் விடிந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்தவர்கள் யாரும் இல்லை. வெகு நேரம் காத்திருந்தும் பயனில்லை. ஆஸ்பத்திரி வாசலிலேயே அழுதுகொண்டு நாள் முழுதும் நின்றிருந்தான். என்ன ஏது என்று யாருமே அவனை விசாரிக்கவில்லை. பசி தாங்க முடியவில்லை. ஓரமாக இருந்த குழாயில் தண்ணீர் அடித்துக் குடித்தான். எங்கே போவது என்று தெரியாமல் ஆஸ்பத்திரியையே நாள் முழுக்க சுற்றிக் சுற்றி வந்தான். கண்ணில் தென்பட்டவர்களிடம் கைநீட்டி பசிக்குதுஎன்றான். சீ, போஎன்று விரட்டினார்கள் அவர்கள்.

ஒரு மூலையில் தள்ளுவண்டிச் சோற்-றுக்கடையைப் பார்த்தான். மீன்குழம்பு வாசனையை உணர்ந்து வயிற்றில் நெருப்பு எரிந்தது. பக்கத்தில் சென்று கைநீட்டி பசிக்குதுஎன்று அழுதான். கடைக்காரன் அவனையே ஒரு நொடி பா£த்தான். பிறகு, “போய் தண்ணி புடிச்சாடா. சோறு தரேன்என்றான். அந்த வார்த்தை உறைந்துகிடந்த ரத்தத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டியது. சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு தவலையைத் -தூக்கிச் சென்று தண்ணீர் நிரப்பி சுமந்துவந்தான். சொன்னபடி ஒரு இலையில் சோற்றை நிரப்பிக் கொடுத்தான் கடைக்காரன். சிறுவன் மிக வேகமாக ஒரு வாய் அள்ளி வைத்தான். புரைக்கேறிவிட்டது. சட்டென கண்கள் கலங்கின. பொறுமையா துன்னுடா பையா, சோறு எங்கயும் பூடாதுஎன்றான் கடைக்காரன். பிளாஸ்டிக் தம்ளரில் தண்ணீர் கழுத்தையும் நெஞ்சையும் நனைத்துத் தேங்கியது. சாப்பிட்டு முடித்தபிறகு மீண்டும் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்தான். இன்னும் கொஞ்சம் சோறு துன்றியாடா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் கடைக்காரன். மறுபடியும் சீக்கிரமாக பசி எடுத்துவிடக்கூடாது என்பதற்காக சரிஎன்று தலையசைத்தான். கடைக்காரன் அள்ளிவைத்ததை மௌனமாகச் சாப்பிட்டான். இலையை எறிந்துவிட்டு கைகழுவிக்கொண்டு அங்கேயே நின்றான். கடைக்காரன் சொல்லாமலேயே எச்சில் தட்டுகளிலிருந்து இலைகளை எடுத்து வீசிவிட்டு கழுவிக்கழுவி அடுக்கினான். தவலையில் தண்ணீர் தீர்ந்ததும் மீண்டும் நடந்து சென்று நிரப்பியெடுத்து வந்தான். வியாபாரத்தை முடித்துக்கொண்டு வண்டியோடு புறப்படும்போது அவனும் தயங்கித்தயங்கி பின்னால் நடந்தான். கடைக்காரன் அவனை சற்று தாமதமாகத்தான் கவனித்தான். நல்லா முட்டக் கோஸ் மாரி இருந்துகினு எதுக்குடா பின்னால வர. அங்க பாரு, அந்த எடத்துல போயி கும்பலோடு சேந்து படுத்துக்கோ. நாளக்கி பாக்கலாம்என்றபடி பத்துபைசா கொடுத்தான். கடைக்காரன் சுட்டிக் காட்டிய கடை படிக்கட்டுகளில் ஒன்றில் சுருண்டு படுத்துக்கொண்டான். கடைக்காரன் கிண்டலாக சொல்லி அழைத்த பெயர் அன்றுமுதல் அவனுடைய பெயராகவே மாறிவிட்டது.

டேய் முட்டக்கோஸ், எப்படிடா இருக்க?” என்று திடீரென எதிரில் வந்து நின்றவனின் முகத்தை உள்வாங்க இயலாமல் ஒரு கணம் குழம்பி நின்றான். அதற்குள் அவனே நான்டா மச்சான், சின்னசாமிஎன்று நெருங்கிவந்து தோளைத் தொட்டான். நினைவின் ஆழத்திலிருந்து அந்த முகத்தை மீட்டெடுத்த முட்டக்கோஸ் அவன் கையைப் பிடித்து அழுத்தினான். வெளியில எப்படா வந்த மச்சான்?” என்று மெதுவாகக் கேட்டான் சின்னசாமி. இன்னிக்குத்தான்டா உட்டானுங்க.என்றபடி தலைகுனிந்தான் முட்டக்கோஸ். ஒரு தரமாச்சிம் எவனாவது வந்து பாத்திங்களாடா என்ன? முட்டக்கோஸ் செத்துட்டான்னு நெனச்சிட்டீங்க இல்ல?” என்றபோது அவன் கண்கள் தளும்பின. தாடைகள் இறுகின. அந்த அளவுக்கெல்லாம் எங்களுக்கு விவரம் தெரியாதுடா மச்சான். அதான் அப்படியே இருந்துட்டம். ஒன்ன எப்பிடிடா மறக்க முடியும்? நீ இல்லாம நம்ம செட்டுக்கே கள இல்லாம பூடிச்சி தெரிமா?” என்றான் சின்னசாமி. பிச்சாண்டி, மாசாணம்லாம் எப்படிடா இருக்கானுங்க?” என்று ஆவலுடன் கேட்டான் முட்டக்கோஸ். ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிகிட்டு செட்டிலாயிட்டானுங்க மச்சான். மார்க்கெட்ல பூங்கோதைன்னு ஒரு மீன்காரப் பொண்ணு. அதத்தான் பிச்சாண்டி கட்டிகினு ரயில்வே ஸ்டேஷன் பக்கமா ஊடு எடுத்து தங்கியிருந்தான். ஒபித்தால் வாசல்ல ரங்கநாயகின்னு ஒரு பொண்ணு இட்லிக்கூட போட்டிருந்திச்சி. அதப் புடிச்சி செட் பண்ணிகிட்டான் மாசாணம். மணிக் கூண்டு பக்கத்துலதான் ஊடுஎன்று உற்சாகமாகப் பதில் சொன்னான்.

உனக்கு?-”

எதுவும் சரியா அமையலைடா மச்சான். தேங்காதிட்டு பொண்ணு ஒன்னு போவும்போதும் வரும்போதும் சிரிச்சிகிட்டே இருக்கும். அதத்தான் வளைக்கலாம்னு நெனச்சன். அதுக்குள்ள வேற எவன்கூடயோ ஓடிப்போயிடுச்சி அது. அப்பறமா நியுடோன் பக்கமா ஒரு பொண்ண பாத்து வச்சிருந்தேன். லோட் அடிக்கப் போவும் போது பாத்து பழக்கமாச்சி. அது கூட அவுங்க அம்மா அப்பா சொன்னாங்கன்னு ஒரு டிரைவர் பையனை கல்யாணம் கட்டிக்கிச்சி. இந்த பொம்பளைங்களே ரொம்ப மோசம்டா மச்சான்.

வருத்தங்களை சிரிப்பாக மாற்றிவிட்ட சின்னசாமியைப் பார்க்க விசித்திரமாக இருந்தது. பிறகு மெதுவாக ஸீ வ்யுல இன்னும் வெளிநாட்டுக்காரனுங்க வராங்களா?” என்று ஆவலாகக் கேட்டான்.

ஸி வ்யுவ மாரி நாலு ஓட்டலுங்க வந்திடுச்சி மச்சான் இப்ப. மெரிடீயனு, அட்லாண்டிஸ், சன்ரைஸ் வ்யு, ப்ளூமூன் எல்லாமே அஞ்சாறு மாடிங்க கொண்டது.

ஆளுங்க கெடைக்கறாங்களா?”

முன்னமாதிரியெல்லாம் இப்ப யாருமே வரதில்ல மச்சான். ஓட்டல்காரனுங்களே உள்ளுக்குள்ளேயே ஸ்விம்மிங்பூல் போட்டுட்டானுங்க. நீ போயி ரெண்டு மூணு வருஷத்துலேயே அந்த தொழிலே பூடிச்சி மச்சான். ஆட்டோ ஓட்டறது, டாக்ஸி ஓட்டறது. அதான் இப்ப தொழிலு.

வருமானம் பரவாயில்லயா?”

எதுக்கும் கொறச்சல் இல்ல மச்சான். பணம் இருந்தா, முனியாண்டி விலாஸ்ல அர பிளேட் பிரியாணி. கால் பிளேட் சிக்கன். இல்லன்னா கையேந்தி பவன்ல மூணு முட்ட தோச. கத்தரிக்கா கொழம்பு சோறு. அப்பறம் ஒரு சின்ன கட்டிங். கட ஓரமா கால நீட்டி படுத்தா நிம்மதியா வெடியவெடிய ஒரு -தூக்கம். வாழ்க்க அப்படியே ஓடுது மச்சான். ஒரு பிரச்சனயும் இல்ல.

அந்தக் காலத்தில் வெளிநாட்டுப் பிரயாணிகளை பெரும்பாலும் கடற்கரையில்தான் சந்திக்க வேண்டும். ஓட்டல் வாசலிலிருந்தே மிசே மிசேஎன்றபடி பின்தொடர்ந்தால் கரையை நெருங்கிய பிறகுதான் திரும்பிப் பார்ப்பார்கள். கழுத்தில் ஏகப்பட்ட மணிகளைப் போட்டுக்கொண்டு அரைக்கால் சட்டையும் தொளதொளவென்று மேல்சட்டையுமாகத் திரிவார்கள். பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கடலில் குளிப்பதற்கும் பிறகு நல்ல தண்ணீர் உள்ள ஏரி, குளங்களில் குளிப்பதற்கும் எப்போதும் ஆசை உள்ளவர்கள் அவர்கள். அவர்களுக்குப் பிடித்தமாதிரி சில இடங்கள் கடற்கரையின் சில பகுதிகளில் உண்டு. முட்டிக்கால் அளவே ஆழம் உள்ள நீண்ட கடற்பரப்பும் மணற்பரப்பும் உள்ள இடங்கள் வீராம்பட்டணம் தொடங்கி காளாப்பட்டு வரைக்கும் ஆறேழு இருந்தன. ஒருவர் கிடைத்தால்கூட போதும், ஆட்டோவில் அழைத்துச் சென்று, குளிக்கும் இடத்தைக் காட்டி, திரும்பி வரும் வரை துணிகளுக்குக் காவல் இருந்து, ஆட்டோவிலேயே அழைத்துவந்து விடுவார்கள். ஆட்டோவுக்குக் கொடுத்ததுபோக மிச்சப் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்வார்கள். தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் தட்டு கழுவி நாலு வருஷங்களைக் கழித்தபிறகு தற்செயலாக கடலை வேடிக்கை பார்க்கவந்த இடத்தில் மற்ற பையன்கள் செய்வதைப் பார்த்து தானாகவே தொழில் கற்றுக் கொண்டான். அதற்கப்புறம் ஆறு வருஷங்கள் எந்தக் குறையும் இல்லாமல் பறந்தன.

பிரயாணிகள் பலவிதமானவர்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என மீண்டும் மீண்டும் வந்தபடி இருப்பார்கள். உலகம் சுற்றும் ஆசையில் வருகிறவர்கள். ஏதாவது ஆராய்ச்சியை திட்டமிட்டு வருகிறவர்கள். காலையில் விடுதியை விட்டு வெளியேறும் கணத்திலிருந்து பின்னாலேயே அலைந்து ஆசையூட்டியபடி இருக்கவேண்டும். ஏதாவது ஒரு கணத்தில் யாராவது ஒருவரிடமிருந்து சட்டென ஒரு அழைப்பு வரும். சில சமயங்களில் வெறும் -தூண்டில் தடிகளையும் மீன் உணவுப் பைகளையும் மட்டுமே தூக்கிக்கொண்டு அவர்கள் பின்னால் மணிக்கணக்கில் அலையவேண்டி வரும். சில சமயங்களில் பெட்டிகள் சுமக்கிற மாதிரியும் இருக்கும். வேறு சில சமயங்களில் குளிப்பதற்கான இடங்களைக் காட்டுவதாகவும் இருக்கும். எதுவாக இருந்தாலும் வேலைக்கென்று அழைத்துச் சென்றபிறகு கைநிறைய சில்லறைகளைக் கொடுத்தனுப்புவார்கள்.

நினைவில் ஆயிரம் முகங்கள் மோதிக் குழம்பினாலும் அவற்றுக்கிடையே தனித்துத் தெரியும் ஒரு முகம் ஸ்டெல்லா. வழக்கம் போல ஸீ வ்யு விடுதி வாசலில்தான் அவளை முதலில் பார்த்தான். கையில் சின்னப் பை. உயரத்தை அதிகமாக்கிக் காட்டக்கூடிய காலணிகள். இறுக்கமான ஒரு பச்சை பேண்ட். மஞ்சள் பூப்போட்ட ஒரு வெள்ளைச் சட்டை. கழுத்தில் ஒரேஒரு மெல்லிய சங்கிலி. சங்கிலியின் மையத்தில் சின்னதாக ஒரு தங்கச் சிலுவை. அலையை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். அருகில் சென்று வீராம்பட்டணம் போலாமா மதாம்? குட் ஸ்விம்மிங்க் ஸ்படாட் மதாம்என்றான். காதிலேயே விழாதபடி அவள் நடந்துகொண்டாலும் மனம் தளராமல் பின்னாலேயே சொல்லிக்கொண்டு நின்றான். மெதுவாக அவன் பக்கம் திரும்பி காது கேக்காதா பையா?” என்று பிரெஞ்சில் கேட்டாள். அதன் பொருள்புரியாதவனாக வீராம்பட்டணம் மதாம்என்று சொன்னதையே திரும்பவும் சொன்னான். அவன் சொல்வதைக் கேட்டு அவளுக்குச் சிரிப்பு வந்தது. கண்களில் நீர் கோர்த்துத் தளும்ப வாய்விட்டு வெகுநேரம் சிரித்தாள்.

பிறகு பெயரை விசாரித்தாள். சொன்னான். க்வா?” என்றபடி மீண்டும் சிரித்தாள்.

முட்டக்கோஸ் முட்டக்கோஸ்அவன் மறுபடியும் சொன்னான். அவள் சிரிப்பதைப் பார்த்து அவனுக்கும் சிரிப்பு வந்தது.

படிக்கலையா பையா?” பாதி சைகையாலும் பாதி வார்த்தையாலும் கேட்டாள் அவள். இல்லஉதட்டைப் பிதுக்கியபடி அவன் தலையசைத்தான்.

அம்மா அப்பா என்ன பண்றாங்க?”

யாரும் இல்லமறுபடியும் உதட்டைப் பிதுக்கினான்.

அவள் ஒரு கணம் முறைத்தாள். பொய் சொல்றியா?” என்று கேட்டாள்.

இல்ல மதாம். கடவுள் சத்தியமா யாரும் இல்ல.

என்ன வேல செய்ற?”

இந்த வேலைதான் மதாம். கைடு

என்னென்ன இடம் தெரியும் ஒனக்கு?”

சுண்ணாம்பாறு தெரியும் மதாம். அப்பறம் உஷ்டேரி. மணக்குள விநாயகர் கோயில். அரவிந்தர் ஆசிரமம். டியுப்ளே சிலை. ரோமன் ரோலண்ட் லைப்ரரி.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாளே தவிர, அன்று எந்த இடத்துக்கும் வரவில்லை அவள். வேறு வேலைகள் இருப்பதாகச் சொல்லிவிட்டு போய்விட்டாள். போகும்போது கைப் பையிலிருந்து பெரிய சாக்லெட்டுகள் எடுத்துக் கொடுத்தாள்.

மறுநாள் விடுதி வாசலில் நின்றிருந்தவளை அடையாளம் கண்டு ஓடிப்போய் போன்சூர் மதாம்என்று வணக்கம் சொன்னான். அவள் அருகே ஒரு இளைஞன் நின்றிருந்தான். மார்ஷல்.....என்று அவனை அழைத்தாள் அவள். முட்டக்கோஸை சுட்டிக்காட்டி பிரெஞ்சில் எதையோ சொன்னாள். பிறகு, “சரி, ஸ்விம்மிங் போவலாம்என்று முட்டக்கோஸைப் பார்த்துச் சிரித்தாள்.

அவன் ஓடிச்சென்று ஆட்டோவை அழைத்து வந்தான். ஸ்டெல்லாவும் மார்ஷலும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். முட்டக்கோஸ் வண்டியோட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டான். கால் மணிநேரப் பணத்துக்குப் பிறகு அந்த இடத்தை அடைந்தார்கள். வண்டியிலிருந்து மணற்பரப்பில் கால் வைத்ததுமே இருவருமே உற்சாகம் பொங்கக் குதித்தார்கள். அலையாத்தி மரங்களும் சவுக்கைகளும் அடர்ந்து ஒரு தோப்பு போல காணப்பட்டது. வாவ், வாவ் என்று ஆச்சரியத்தில் இரண்டு நொடிக்கு ஒரு முறை சொல்லிக்கொண்டு வந்தாள் ஸ்டெல்லா. அந்த இடத்தை ஏதோ உலக அதிசயத்தைப் பார்ப்பதுபோல கண்கள் விரியப் பார்த்தார்கள். அதிக ஆர்ப்பாட்டமில்லாத அலைகள். ஆழமில்லாத பரப்பு. நேரம் போவது தெரியாமல் இருவரும் நீந்திக் களித்தார்கள். மதிய வேளையில்தான் இருவரும் கரையேறினார்கள். ஆட்டோ ஏறி விடுதிக்குத் திரும்பினார்கள். வண்டியிலிருந்து இறங்கும் சமயத்தில் பாதுகாப்புக்காக டி.வி.எஸ்.ஸில் போய்க் கொண்டிருந்த ஏட்டு சுப்பையா சட்டென நிறுத்திவிட்டு நெருங்கி வந்தார்.

என்ன மதாம்? எதாச்சிம் ப்ராப்ளெமா?” என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் இருந்த முட்டக்கோஸ் முதுகில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான். ஸ்டெல்லா அதிர்ச்சியடைந்தவளாக, “நோ நோஎன்று சத்தம் போட்டுச் சொல்லி தடுத்தாள்.

சின்னப் பசங்கள நம்பாத மதாம். அசந்தா கழுத்த அறுத்துட்டு ஓடற பசங்க. அப்பறமா அதக் காணம் இதக் காணம்னு எங்ககிட்டதான் வரணும். முட்டிக்கு முட்டி இவனுங்கள தட்டிகினே இருக்கணும். இல்லன்னா துளுத்துருவானுங்கதோள்பட்டையில் ஒரு அடிகொடுத்து தள்ளினார். பிறகு ஆட்டோ பக்கமாகத் திரும்பி, “நீ எதுக்குடா இங்க டிராபிக்ல நிறுத்திகினு வேடிக்க பாக்கற வேமானி. நீங்கள்ளாம் ஒரு தரம் சொன்னா திருந்த மாட்டீங்களாடா? சோத்தத்தான் துன்றிங்களா? வேற எதயாச்சிம் துன்றிங்களாடா?” என்று சத்தம் போட்டார். மெதுவான குரலில் கைகளைக் கட்டிக் கொண்டு பார்ட்டிய எறக்கி உட்டன் சார்என்று பணிவோடு பதில் சொன்னான் ஆட்டோக்காரன்.

ஒழுங்கா ஜாக்கிரதயா இருக்கணும் தெரிதா? இந்த சுப்பையா இருக்கறவரிக்கும் குட்டிங்கள கூட்டிக் குடுத்து பொழச்சிக்கலாம்னு மட்டும் பகல் கனவு, காணாதிங்கடா. வெட்டி துண்டு போட்டுட்டுதான் மறுவேல செய்வன். புரிதா?” எச்சரிக்கை கொடுத்துவிட்டு வண்டியில் பறந்தார் சுப்பையா. சில நிமிடங்களுக்குப் பிறகு, “ஏன் அந்த ஆள் உன்ன இப்படி மிரட்டறான்?” என்னு முட்டக்கோஸைப் பார்த்துக் கேட்டாள் ஸ்டெல்லா.

அவரு அதிகாரி, நான் அனாத. அதான் மதாம் காரணம்.

மிரட்டறதுக்கும் அடிக்கறதுக்கும் ஒரு காரணம் வேணாமா?”

அது ஒன்னும் பெரிய விஷயமே இல்ல மதாம். அவுங்களுக்கு சாதகமாக எப்படி வேணும்னாலும் ஒரு கதய உருவாக்கிக்கலாம். திருடாதவன திருடனாக்கலாம். நிரபராதிய கொலகாரனாக்கலாம். அரசாங்கம் அவுங்க பேச்சததான் கேக்கும் மதாம்.

நீ இந்த ஒரு வேலதான் செய்வியா?”

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மதாம், கொஞ்ச நாள் சுண்டல் வித்திருக்கேன். அப்புறம் ஐஸ்கிரீம் வித்திருக்கேன். இந்த சங்காத்தமே வேணாமின்னு கொஞ்ச நாள் மீன் புடிக்கறவங்களோட சுத்தனேன். மார்க்கெட்ல மீன் லோடு ஏத்தனன். எங்க போனாலும் மோப்பம் புடிச்சிகின்னு இவனுங்களும் அங்க வந்துருவானுங்க மதாம். அவனுங்கிட்டேருந்து தப்பிக்கவே முடியாது. அதனால்தான் இங்கேயே மறுபடியும் வந்துட்டேன்.

எனக்கு புரியலையே முட்டக்கோஸ்.

இதுல புரிஞ்சிக்கறதுக்கு என்ன இருக்குது மதாம்? ஒங்களமாரி இங்க வரவங்க பேனா, பென்சில், வாட்சி, கடுக்கன், மோதரம்னு எதாச்சிம் குடுத்துட்டு வோவாங்க. அத வச்சிகிட்டு நாங்க என்ன செய்யறது மதாம்? யாருக்காச்சம் வித்தா நாலு காசு கெடைக்கும்ன்னு கடத்தெருவுல விக்கலாம்ன்னு போனாம்னா அங்க வந்து புடிச்சிக்குவானுங்க மதாம். எங்க திருடன, யார்கிட்ட திருடனனன்னு அடி ஒதை பின்னி எடுத்துருவானுங்க. அந்த நேரம் கேஸ் எதுவும் இல்லாம அலையற நெலைமையில இருந்தானுங்கன்னா, இதான் சாக்குன்னு இழுத்தும்போயி உள்ள வச்சிருவானுங்க.

அதிர்ச்சியோடு அவனையே உற்றுப் பார்த்தாள் ஸ்டெல்லா. பிறகு, மெதுவாக நீ உள்ள போயிருக்கியா முட்டக்கோஸ்?” என்று கேட்டாள்.

ரெண்டு தரம் போயிருக்கேன் மதாம். எல்லாம் அந்த சுப்பையா ஏட்டு வேலைதான். திருட்டுக்கேஸ். சந்தேகக் கேஸ்னு புடிச்சிப் போட்டுட்டான். மானம் கெட்ட பொழப்பு மதாம். சங்கடமாக அவனைப் பார்த்தாள் ஸ்டெல்லா. கிறிஸ்துவயே சிலுவ இழுக்கவச்ச உலகம்தானே இதுஎன்று முணுமுணுத்துக்கொண்டாள்.

அந்த முறை இரண்டு வாரங்கள் தங்கியிருந்தாள் ஸ்டெல்லா. ஓரிரு நாட்கள் தவிர அநேகமாக எல்லா நாட்களிலும் ஏதாவது ஒன்றிரண்டு மணிநேரங்கள் அலையாத்தி மரங்களுக்கிடையே நீளும் குளியல் கடலுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டாள். மணிக்கணக்கில் அவளும் மார்ஷலும் அங்கே நீந்திக் களித்தார்கள்.

அடுத்த ஆண்டு பயணத்தின்போது அவனை அடையாளம் கண்டுபிடித்து பேர் சொல்லி அழைத்தாள். அவனுக்காக வாங்கி வந்ததாகச் சொல்லி ஒரு சட்டையும் பேண்டும் கொடுத்தாள். ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றான் முட்டக்கோஸ். மார்ஷல் அவனுக்கு சாக்லெட் கொடுத்தான். அந்த முறை சுண்ணாம்பாறும் கடலும் கலக்கக்கூடிய கழிமுகத்துக்கு அழைத்துச் சென்றான். அருகிலேயே திரும்பும் வழியில் ஒரு கிராமத்துக் குளத்துக்கும் போனார்கள். இரண்டு இடங்களும் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டன.

மூன்றாவது பயணத்தில் ஸ்டெல்லா தனியாக காணப்பட்டாள். எங்கும் செல்ல உற்சாகம் காட்டதவளாக கரையில் வந்து உட்கார்ந்து கடலையே வெகுநேரம் வேடிக்கை பார்ததபடி இருந்தாள். முட்டக்கோஸின் எந்த அழைப்பும் அவளை ஈர்க்கவில்லை.

மார்ஷல் ஏன் வரலை மதாம்?”

முட்டக்கோஸின் கேள்வி அவளை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. சிரித்துக்கொண்டே நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்என்று பதில் சொன்னாள். அவன் புரியாமல் நிமிர்ந்து பார்த்தபோது, இரண்டு ஆட்காட்டி விரல்களையும் பெருக்கல் குறிபோல வைத்துக் காட்டி அவன் போயிட்டான்என்றாள். அவள் நிலையைப் பார்க்க அவனுக்கு சற்றே சங்கடமாக இருந்தது.

ஒருநாள் சாயங்காலம் வண்டியில் திரும்பும்போது ஸ்டெல்லா அவனைப் பார்த்துச்சொன்னாள்.

ரெண்டு பேருமா சேந்து பாரீஸ்ல்ல ஒரு ஸ்கூல் நடத்தலாம்னு திட்டம் வச்சிருந்தம். அம்மா அப்பா இல்லாதவங்களயும் ஆதரவு இல்லாதவங்களயும் தங்க வச்சி பாத்துக்கற மாதிரி நெனச்சிருந்தம். பல இடங்களில் உதவி கேட்டிருந்தம். எல்லாம் திரண்டு வர நேரத்துல அவன் கைவிட்டுப் போயிட்டான். ஆனா ஸ்கூல் முயற்சிய நான் கைவிடமாட்டன். கண்டிப்பா நடத்துவேன். இப்ப திரும்பி போனா இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு அதான் வேலயா இருக்கும்.

அதையெல்லாம் தன்னிடம் ஏன் சொல்கிறாள் என்று புரியாமல் குழப்பத்துடன் பார்த்தான் முட்டக்கோஸ். உரையாடலின் முடிவில் அவள் நீ பாரீஸ் வரியா முட்டக்கோஸ்?” என்று கேட்டபோது நம்பிக்கை வராமல், பாதி குழப்பம், பாதி புன்னகையோடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

ஸ்டெல்லா கண்கள் மின்ன உண்மையாகவே மறுபடியும் கேட்டாள். சொல்லு முட்டக்கோஸ், நீ பிரான்ஸ்க்கு வரியா?”

வரேன் மதாம்தயக்கத்துடன் பதில் சொன்னான் முட்டக் கோஸ். நீ அங்கயே தங்கிப் படிச்சிக்கலாம். அது மட்டுமில்ல. எனக்கும் எல்லா வேலயிலயும் ஒத்தாச செய்யலாம்.

செய்றேன் மாதம்போதையேறியவனைப் போல பதில் சொன்னான் முட்டக்கோஸ்.

அம்மா அப்பா யாருமே இல்லன்னு சொன்ன இல்ல. பாஸ்போர்ட் எடுக்கணும்னா அதெல்லாம் கேப்பாங்களே. என்ன செய்யலாம்? சரி, விடு. இந்த ஊரு ஏஜென்டுகளுக்கு இதெல்லாம் பழக்கமான விஷயங்களாத் தான் இருக்கும். கூடுதலா கொஞ்சம் பாத்துபோட்டு குடுங்கன்னு பல்ல இளிப்பாங்க. எவ்வளவு வேணும்னாலும் குடுத்துடலாம். பிரச்சன இல்ல.

ஏஜென்ட்?”

அதபத்தி கவல வேணாம். அத நான் பாத்துக்கறேன். நீ கண்டிப்பா வருவ இல்ல? எல்லாம் தயாரானப்பறம் வரமாட்டான்னு சொல்லமாட்டியே?”

இல்ல மதாம்”. அவள் நம்பிக்கையை முழு அளவில் பெறுவது முக்கியம் என்று நினைத்தான்.

மொதல்ல நல்லதா போட்டோ எடுக்கணும்.

சரி மதாம்.

காலையில குளிச்சிட்டு தயாரா வந்துரு. ஏஜென்ட்ட பாத்து பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்யலாம்.

வண்டியை விட்டு இறங்கும்போது ஸ்டெல்லா கைநிறைய சில்லறைகளை அள்ளி அவளிடம் தந்தாள். இவ்வளவு பெரிய மனத்துடன் தன்னோடு அழைத்துச் செல்லவே தயாராக இருப்பவளிடம் பணத்தை எப்படி வாங்குவது என்று கூச்சத்தோடு தலையசைத்தான். ஆனாலும் அவன் தலைமுடியில் கையை வைத்து செல்லமாக அசைத்துவிட்டு அவன் சட்டைப்பைக்குள் சில்லறைகளைப் போட்டாள். பிறகு கைப்பையோடு விடுதியை நோக்கிச் சென்றாள்.

வாழ்க்கையில் முக்கியமான ஒரு மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிற ஆனந்தத்தில் அவன் மனம் திளைத்தது. கூட்டாளிகள் எல்லாரையும் சந்தித்து நடந்ததையெல்லாம் விவரித்தான். மனம் நிலைகொள்ளாமல் சிறகடித்துப் பறந்தபடி இருந்தது.

நினைவுகளைக் கலைத்துவிட்டு சின்னச்சாமியிடம் அதுக்கப்பறம் ஸ்டெல்லாவ பாத்தியா நீ? ஏதாச்சிம் கேட்டாங்களா?” என்று மெதுவான குரலில் கேட்டான் முட்டக்கோஸ்.

கேட்டாங்க மச்சான்என்று இழுத்தான் சின்னசாமி. என்னடா சொன்ன?” என்று பதறினான் முட்டக்கோஸ். ஒன்னுமே சொல்லலை முட்டக்கோஸ். எதுவுமே தெரியாதுன்னு சொல்லிட்டம்டாஎன்றான். ஏமாற்றத்தில் தலைகுனிந்தான் முட்டக்கோஸ். கண்களில் நீர் தளும்பி நின்றது. சிறிது நேரம் மௌனம். தெரிஞ்சிருந்தா ஒருவேள வெளிய எடுக்கறதுக்கு கண்டிப்பா முயற்சி செஞ்சிருப்பாங்கஎன்றான். துடிக்கும் உதடுகளைக் கடித்துக் கொண்டான்.

அதுக்கப்பறம் எத்தன நாளு இருந்தாங்க?”

ஒரு பத்து நாளாச்சிம் இருக்கும் மச்சான். அப்பறமா போயிட்டாங்க.

சிறிது நேரம் மௌனம்.

அடுத்த சீசனுக்கு வந்தாங்களா?”

வந்தாங்கன்னுதான் நெனைக்கறேன். சரியா ஞாபகம் இல்ல முட்டக்கோஸ்.

சரி விடுபெருமூச்சோடு முட்டக்கோஸ் வானத்தை அண்ணாந்து பார்த்தான். மேங்கள் வேகவேகமான நகர்ந்து கொண்டிருந்தன. காற்றின் வேகம் அதிகமாக இருந்த- அலைகள் வேகவேகமாக உருண்டு சுழன்று கரையில் மோதின.

அன்று ஸ்டெல்லாவை விடுதிக்கு அனுப்பிவிட்டு கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்தபோது பொழுது சரிந்த நேரத்தில் ஒரு வெளிநாட்டு இளம்பெண் ஸ்விம்மிங் கடலைப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

தொணைக்கு யாராச்சிம் இருக்காங்களா மதாம்?”

இல்ல. தனியாத்தான்அவள் சிரித்தபோது தெத்துப்பல் தெரிந்தது. கன்னத்தில் அழகான குழி. காற்றில் பறக்கும் காதோர முடியை விரல்களால் சுழற்றிச்சுழற்றி ஒதுக்கினாள்.

ரொம்ப டயமாயிடுச்சே மதாம். ஆட்டோ டபிள் ரேட் கேப்பாங்க.

ஓ.கே.

எனக்குத் தனியா தந்துரணும்.

சரிப்பா.

வண்டி அமர்த்திக்கொண்டு கிளம்பும்போதே இருள் கவிந்துவிட்டது. காளாப்பட்டைத் தொட்டபோது கிட்டத்தட்ட எட்டு மணி. வண்டியிலிருந்து இறங்கி சவுக்கத் தோப்பைக் கடந்து கடற்கரையை நோக்கி நடந்தார்கள். காற்று சில்லென்று இதமாக வீசியது. நல்ல நிலா வெளிச்சத்தில் கடல் வசீகரமாக இருந்தது.

இந்த மரத்துக்கு பேர் என்ன?”

சவுக்கை.

சவுக்கை? இதுல எதாச்சிம் பழம் கெடைக்குமா?”

அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்கவில்லை. அப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. விறகு, விறகு கெடைக்கும். அடுப்பு எரிக்கலாம். வீடு கட்டலாம். பந்தல் போடலாம்சொற்களாலும் சைகைகளாலும் முடிந்தவரை புரியவைக்க முயற்சி செய்தான். புரிந்ததுபோல அவள் கண்கள் விரிந்தன. கடல் நெருங்கியதும். நா இங்கயே இருக்கேன். நீங்க போய் குளிச்சிட்டு சீக்கிரமா வாங்கஎன்று சுட்டிக்காட்டிவிட்டு உட்கார்ந்துகொண்டான். அவள் ஒரு குதிரைக்குட்டி போல துள்ளித்துள்ளி ஓடினாள். சீக்கிரமா வந்துருங்க மதாம். ரொம்ப லேட்டாக்கிடாதிங்கஎன்று பின்னாலிருந்து சத்தம் கொடுத்தான் அவன் ஓடிய வேகத்தில் ஒரே நொடியில் கரையில் துணிகளைக் களைந்து விட்டு தண்ணீருக்குள் பாய்ந்தாள் அவள். திசைகளை மாற்றி மாற்றி நீந்திச் சுழன்றாள். அவளைப் பார்த்தபடி மெய் மறந்து உட்காந்திருந்தான் முட்டக்கோஸ். பளிச்சிடும் அவள் இளமையை முதலில் அவன் மனம் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. மெல்லமெல்ல அவள் அழகும் உடல் திரட்சியும் அவனுக்குள் பதிந்தன. வழிகாட்டி அனுபவத்தில் உடலுறுப்புகளை மறைக்க விரும்பாமல் சுதந்திரமாக குளிக்கும் பல பெண்களைப் பார்த்ததுண்டு. தொழில் நேர்மை காரணமாக வேறு விதமாக ஒருபோதும் பார்த்ததில்லை. அவ்வப்போது சீறியெழும் காட்டுத்தனமான எண்ணங்களை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவள்மீது பதித்த கண்களை கொஞ்சம் கூட விலக்கிக்கொள்ள இயலவில்லை. உறுப்புகளின் அசைவுகள் அவனைப் பைத்தியமாக்கின. மெல்ல எழுந்து சென்று நீரில் இறங்கி அவளுக்கு இணையாக நீந்தினான். ஒரு மீனைப்போல பாய்ந்து நெருங்கிவரும் அவளை ஆவலோடு தழுவினான். அவளது ஈர உடலெங்கும் முத்தங்களைப் பதித்தான். கடைந்தெடுத்த சிற்பத்தைப் போலிருந்த அவள் கழுத்தில் பதித்த உதடுகளை அவனால் விலக்கிக்கொள்ளவே இயலவில்லை. அவள் மார்பைநோக்கி அவன் முகம் தானாகச் சரிந்தது. ஓரிரு நொடிகளில் எல்லாமே கற்பனையில் நிகழ்ந்து முடிய, அவளையே மௌனமாக வைத்தகண் விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு நிமிடம் தன் செய்கைகளுக்காக முதன் முதலாக வெட்கம் கொண்டு கவனத்தைத் திருப்பி வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கத் தொடங்கினான். அப்படியே மல்லாந்து மணற்பரப்பில் படுத்து வானத்தை உற்று நோக்கினான்.

அரைமணிக்குப் பிறகு அவள் நெருங்கிவந்து நின்றாள். நிலா வெளிச்சத்தில் அவளுடைய கன்னத்தில் ஒட்டியிருந்த நீர்த்துளிகள் வைரத்தைப்போல மின்னின. அழகான உதடுகளை மீண்டும் மீண்டும் நாக்கால் தடவி ஈரப்படுத்தியபடி இருந்தாள். ப்யூட்டிபுல் ப்ளேஸ் முட்டக்கோஸ்என்றாள். ஈறு தெரிய சிரித்தபடி நடந்தான்.

நாளைக்கும் இங்க குளிக்க வரலாமா முட்டக்கோஸ்?” குழந்தைத்தனமான குரலோடு கேட்டாள் அவள்.

பகல்ல வரலாம் மதாம். ராத்திரியில வேணாம்சிரித்துக் கொண்டே தோப்பைக் கடந்தான். என்னென்னமோ சொன்னபடி பின்னாலேயே நடந்துவந்தாள் அவள்.

வண்டிக்குள் உட்கார்ந்த பிறகு அவள் ஆனந்தத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டாள். பிரெஞ்சு மொழியில் வேகவேகமாக எதைஎதையோ சொன்னாள். டிரைவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முட்டக்கோஸை பக்கத்தில் வந்து உட்காருமாறு சொல்லி பாசமழை பொழிந்தாள். இந்தமாதிரி இடங்கள் இன்னும் எங்கெங்கே இருக்கின்றன என்றும் தினமும் ஒன்றாக நாளை முதல் எல்லா இடங்களுக்கும் அவனே அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவன் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். விடுதி வாசல்வரை சொன்னதையே திரும்பத்திரும்ப பித்துப்பிடித்தவளைப் போல சொல்லிக்கொண்டே வந்தாள்.

அடுத்தநாள் காலையில் ஸ்டெல்லாவின் பார்வையில் படவேண்டுமே என்று விடுதியின் வாசலில் நின்றிருந்தபோது தலைமுடியை கொத்தாகப் பிடித்து நீ எல்லாத்துக்கும் துணிஞ்ச கட்டடா. கொல செய்ற அளவுக்குப் போயிட்டியா?” என்றபடி எலும்பு உடைகிறமாதிரி லத்தியால் அடித்தார் ஏட்டு சுப்பையா. எனக்கு எதுவும் தெரியாது சாரு, நான் சொல்றத நம்பு சாருஎன்று கூறியபடி தடுக்கத் தடுக்க அவன் கைவிரல்களிலேயே அடிகள் விழுந்தன. அவன் கூச்சலைக் கேட்டு கரையோரமாக நின்றிருந்தவர்கள் எல்லாரும் திரும்பி வேடிக்கை பார்த்தார்கள். ஐயோ, என்ன உட்டுடு சாரு, எனக்கு உண்மையாவே எதுவும் தெரியாது சாருஎன்று தொடர்ந்து கூச்சலிட்டான் முட்டக்கோஸ். தரதரவென அவனை இழுத்துச் சென்று சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்குள் நெட்டித்தள்ளி ஏற்றினார் சுப்பையா. நெருங்கி வந்தவர்களைப் பார்த்து சத்தம் போட்டார். என்னய்யா பாக்கிறிங்க? இங்க என்ன அவுத்துப் போட்டுட்டா ஆடறாங்க? போங்கய்யா, போயி வேலைய பாருங்கய்யாஎன்று உறுமினார்.

ஸ்டேஷனுக்குள் சென்றபிறகு, “இவன்தானா அது? மொளச்சி மூணு எல உடறதுக்குள்ளே இந்த அளவுக்கு வேல காட்ட ஆரம்பிச்சிட்டானா?” என்றபடி அங்கிருந்த காவலர்களும் நெருங்கி அறைந்தார்கள். அதுவரைக்கும் எதற்காக அடிக்கிறார்கள் என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரைப் பிரக்ஞையோடு தரையில் விழுந்து கிடந்த நிலையில்தான் முதல்நாள் இரவு கடற்குளியலுக்கு வந்த பிரெஞ்சு இளம்பெண் சவுக்கைத் தோப்பில் கொல்லப்பட்டு கிடக்கும் செய்தியை அவர்கள் உரையாடல்களிலிருந்து தெரிந்து கொண்டான். வலியில் அவனால் முனகக்கூட முடியவில்லை. கண்களில் நீர் வழிந்தபடி இருந்தது. இந்த வயசிலயே பொம்பள சுகம் கேட்குதாடா ஒனக்கு? மாட்ட காயடிக்கற மாரி உன்னயெல்லாம் இப்பவே காயடிச்சி உடணும்டா மவனே. அப்பதான்டா திருந்துவஎன்று காலால் எட்டி உதைத்தான் ஒரு போலீஸ்காரன்.

நாலைந்து நாட்கள் ஏகப்பட்ட விசாரணை நடந்தது. தனக்கும் அந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான் முட்டக்கோஸ். ஆனால் அவன் பேச்சை யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை.

மூன்று மாதகாலம் அந்த வழக்கு நடந்தது. குற்றவாளி என்று நீதிமன்றம் அவன் மீது முத்திரை குத்தி தண்டனையைக் கொடுத்தது. வயதை முன்னிட்டு அவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

ஒன்ன புடிச்சிம்போன அன்னிக்கு எங்களயெல்லாம் உருளயன்பேட்ட போலீஸ் ஸ்டேஷன்ல வச்சி அடிஅடின்னு பின்னிட்டாங்கடா மச்சான். அன்னிக்கு ரொம்ப அசிங்கமா பேசனான்டா அந்த போலீஸ்காரன். எந்த எடத்துல, எவன் வந்து கூப்ட்டாலும் எதுக்கும் சாட்சியாவோ கீட்சியாவோ வரவேகூடாதுன்னு மெரட்டனான்டா. மீறி எந்த நாயாவது வந்திச்சின்னா, கடற்கர பக்கமா ஒருத்தவன்கூட நடமாட மாட்டிங்க. ஒரு நாளைக்கு ஒரு பொணம் ஒதுங்கி கெடக்கற மாதிரி பண்ணிருவன்னு சொன்னான்டாஎன்றான் சின்னசாமி. அதைக்கேட்டபோது அக்கணம் வரை நண்பர்கள் மீதிருந்த வெறுப்பு கரைந்துபோவதை உணர்ந்தான் முட்டக்கோஸ்.

அந்த ஆட்டோக்காரன் எதுக்குடா பொய் சொன்னான்? எங்கள திரும்பி கொண்டாந்து உட்டதே அவன்தான்டா.

புள்ள குட்டிக்காரன் மச்சான் அவன். ஸ்டேஷன்ல வச்சி அவனையும் அடிஅடின்னு தொவட்டி எடுத்துட்டானுங்கடா. அவனுங்க ஏற்கனவே எழுதிவச்சி பேப்பர்ல கையெழுத்த வாங்கிட்டு உட்டுட்டானுங்க. அதோட இந்த ஊரவிட்டே ஓடிட்டான்டா அவன்.

பொங்கிப் பொங்கி புரண்டுவரும் கடலையே வெறித்துப் பார்த்தான் முட்டக்கோஸ். ஒரு கணம் வேகம். மறுகணமே முரட்டுப் பாய்ச்சல். அதற்கடுத்த கணமே பதுங்கிப் பின்வாங்கும் அடக்கம். பசிகொண்ட மிருகத்தைப் போல ஓய்வில்லாமல் ஓவென்று இரைச்சலிட்டபடி இருந்தது.

எதிர்காலம் எப்படின்னு ஏதாச்சிம் யோசன பண்ணி வச்சிருக்கியா மச்சான்?” தோளைத் தொட்டுக் கேட்டான் சின்னசாமி. மௌனமாக நிமிர்ந்து பார்த்தான் முட்டக்கோஸ். சில நிமிடங்களுக்குப் பிறகு சின்னசாமியே மெதுவாக ஃபாஸ்ட் புட்தான் இப்ப நல்ல ஓட்டம் மச்சான். -நூடுல்ஸ், கோபி மஞ்சுரி, போன்டா, பஜ்ஜின்னு கடற்கரையோரமா போட்டா ஒரு ரெண்டு மணிநேரத்துல பறந்து போயிரும்டா மச்சான் என்றான்.

செய்யலாம்டா, ஆனா அதுக்கு பணம் வேணாமா?”அவன் முகத்தில் ஏகப்பட்ட கேள்வியின் கோடுகள்.

சவாரியில மிச்சம் புடிச்ச பணம் எங்கிட்ட கொஞ்சம் இருக்குது மச்சான். கருவாட்டுக்கட கண்ணம்மாகிட்டதான் குடுத்து வச்சிக்கன். இன்னும் வேணும்னா மாசாணத்துகிட்டயும் பிச்சாண்டிகிட்டயும் கொஞ்சம் பொரட்டிக்கலாம். மொதல்ல ஒரு வண்டிய வாடகைக்கு எடுத்துக்குவம். மத்தத அப்பறம் பாத்துக்கலாம். ஆறேழு மாசத்துல நல்லா பிக்கப்பாயிடுச்சின்னா புதுசாவே வண்டி போட்டுரலாம் மச்சான்.முட்டக்கோஸ்க்கு அந்தப் பதில் திருப்தியாக இருந்தது. பேசிக்கொண்டே இன்னும் கொஞ்ச -தூரம் நடந்தார்கள். மெதுவாக கடலை நெருங்கி கால்களை அலைதழுவ நின்றார்கள். தண்ணீரின் ஈரம் கால்களில் பரவியபோது முட்டக்கோஸின் நெஞ்சு ஒருமுறை குமுறி அடங்கியது. பாதத்துக்கு அடியே வளைந்துவளைந்து ஒரு கணம் பூவாய்ப் பூத்து மணலில் புதைந்துபோகும் நுரைகளை கண்ணிமைக்காமல் பார்த்தான். பிறகு, வாகனத்தில் கூட்டமாகப் பறக்கும் காக்கைகளை மெதுவாக நிமிர்ந்து பார்த்தான். மேகத்தின் வெண்மை வசீகரமாகக் காணப்பட்டது.

பாவிப்பசங்க வௌங்கமாட்டானுங்க மச்சான்வெறுப்பு விம்மி வெடிக்க அடங்கிய குரலில் சொன்னான் சின்னசாமி. என்னடா?” என்று கேட்டான் முட்டக்கோஸ்.

சொல்ல வேணாம்னுதான்டா நெனச்சேன். ஆனா மனசு கேக்கலைடா மச்சான்குமுறலோடு சின்னசாமியின் வார்த்தைகள் வெளிப்பட்டன.

என்ன விஷயம்டா? சொல்லுமறுபடியும் கேட்டான் முட்டக்கோஸ்.

அதிகாரம் கையில் இருக்குதுங்கிற திமிருல உலகத்துக்கு தெரியாம மூடி மறச்சிடலாம்னு நெனைச்சிட்டானுங்கடா. எவனுக்கும் நல்ல சாவு வராதுடா. குளிக்கணும்ங்கற ஆசையில அந்த பொண்ணு ராத்திரியில மறுபடியும் தனியா போயிருக்குதுடா. ஏட்டும் இன்னும் மூணு போலீஸ்காரனுங்களும் அத கவனிச்சிட்டானுங்க. பின்னாலியே போயி சவுக்கத் தோப்புல மடக்கிட்டானுங்க. சத்தம் கேக்காத அளவுக்கு வாய்ல துணிய அடச்சிட்டு கைகால்ங்கள கட்டிப் போட்டுட்டு மாறிமாறி கெடுத்துட்டானுங்கடா நாய்ங்க. அந்த அதிர்ச்சியில அப்பிடியே அந்தப் பொண்ணு செத்துடிச்சி. செஞ்சசெல்லாம் அவனுங்க. கடைசியில பழிய உன்மேல போட்டுட்டானுங்கடாநேருக்கு நேர் பார்த்துச் சொல்ல மனசில்லாமல் கடலைப் பார்த்தவாறு சொன்னான் சின்னசாமி. அவன் குரல் துயரத்தில் கம்மியது. பதில் எதுவும் சொல்லாமல் ஆழ்ந்து பெருமூச்சு விட்டபடி முட்டக்கோசும் கடலைப் பார்த்தான்.

(வார்த்தை - 2008)