பாரதி புதையல் திரட்டுகளையும் சித்திரபாரதியையும் வழங்கிய பாரதி அறிஞரான ரா.அ.பத்மநாபன் அவர்களின் முயற்சியால் பாரதியாரின் இருபத்துமூன்று கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவிக்கு எழுதிய ஒரேஒரு கடிதத்தைத் தவிர மற்றவை அனைத்தும் பிறருக்கு எழுதியவை. பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் அவருடைய படைப்பாளி என்கிற முகத்தை அறிய உதவுகின்றன. அவருடைய கடிதங்கள் பாரதியார் என்கிற மனிதரைப்பற்றி அறிய உதவுகின்றன.
எல்லா மனிதர்களுக்கும் இருப்பதுபோலவே அவருள்ளும் ஏராளமான கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்திருக்கின்றன. எதிர்பார்த்தது கிட்டாத தருணங்களில் மற்றவர்கள் இயல்பாக வெளிப்படுத்தக்கூடிய சலிப்பும் கசப்பும் தோல்வியுணர்வும் கிஞ்சித்தும் அவரிடம் இல்லை. வாழ்வின் எக்கணத்திலும் கனிவையும் கனவையும் கைவிடாத அபூர்வ மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். சங்கடங்களும் தோல்விகளும் நிறைந்ததாகவே சொந்த வாழ்க்கை அமைந்துபோனாலும் அவற்றால் ஆக்கிரமிக்கப்படமுடியாத ஓர் ஆளுமையாக உயர்ந்து காணப்படுகிறார். 39 வயதுமட்டுமே வாழ்ந்த ஒருவரிடம் வெளிப்பட்டுள்ள இப்பண்புகள் மிகமுக்கியமானவை. கனிவு என்பதை வாழ்வின் சாரமாக புரிந்துகொண்டு வெளிப்படுத்திய அவரை மிக நெருக்கமாக உணரமுடிகிறது. இக்கடிதங்களின் தொகுப்புநூல் அதற்குத் துணையாக இருக்கிறது.
ஒவ்வொரு
கடிதத்தின் முடிவிலும் அக்கடிதம் எழுதப்பட்ட வரலாற்றுப்பின்னணியையும் பத்மநாபன்
எழுதி இணைத்திருப்பதை இந்த நூலின் சிறப்பம்சம் என்று சொல்லவேண்டும். கடிதத்தையும்
இணைப்புக்குறிப்பையும் சேர்த்துப்பார்க்கும்போது பாரதியாரிடம் குடிகொண்டிருந்த
ஆழ்ந்த நம்பிக்கையையும் கனவையும் புரிந்துகொள்ளமுடிகிறது. அதே கணத்தில் அவருக்குத்
தர எதுவுமில்லாத நிலையில் நம் சமூகம் இருந்ததைநினைத்து ஆழ்ந்த சங்கடத்தில்
மூழ்கிவிடுகிறது மனம். சங்கடத்துக்குக் காரணம் அவரவருக்கும் இருந்த உயிர்மீதான
பயம். ஆங்கிலேய அரசை துணிச்சலாக எதிர்த்துநின்று எழுதியும் பேசியும் வருகிற ஒருவரை
ஆதரிப்பது அரசாங்கக்குற்றமாக பார்க்கப்பட்டு தண்டனைக்குத் தாமும்
அகப்பட்டுவிடுவோமோ என்கிற அளவுக்கு பயம் இருந்திருக்கக்கூடும். அவர்களுடைய
பயத்தைப் புரிந்துகொண்டிருந்தாலோ என்னமோ, பாரதியாரும்
எவ்விடத்திலும் அதைப் பெரிய குறையாகப் பார்க்கவில்லை. எழுபது, எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அவற்றைத் தொகுத்துப்
படிக்கும்போது நமக்குத்தான் யாராவது உதவியிருக்கலாமே என்று தோன்றுகிறது.
எடுத்துக்காட்டுக்கு
ஒரே ஒரு சம்பவத்தைச் சொல்லவேண்டும். தம் புதுச்சேரி வாசத்தை முடித்துக்கொண்டு 20.11.1918 அன்று ஒரு ஜட்கா வண்டியில் புதுவையிலிருந்து கடலூருக்குச்
சென்றுகொண்டிருந்தபோது, பிரிட்டிஷ்
எல்லையில் காவலரால் கைது செய்யப்பட்டு திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில்
சிறைவைக்கப்படுகிறார் பாரதியார். நண்பர்களின் முயற்சியால் 14.12.1918 அன்று விடுதலையாகி, கடையத்துக்குச்
செல்கிறார். கடையத்திலிருந்து நெல்லையப்பப் பிள்ளைக்கு 21.12.08 அன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். சிறையிலிருந்து
வெளிவந்ததுபற்றியெல்லாம் சொல்லிவிட்டு, பிறகு பாஞ்சாலி
சபதம் -இரண்டாம் பாகத்தை வெளியிடுவதைப்பற்றி விவரமாக எழுதுகிறார், புத்தகமாக அச்சடிப்பதற்கு முன்பாக காவல்துறையினரிடம் காட்டி
முன்அனுமதி பெற்றபின்னரே வெளியிடவேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால் அவ்விதமாகவே
அனுமதிபெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்றும் எழுதுகிறார். அதுமட்டுமல்லாமல், பாப்பா பாட்டு முதலான பல நூல்களை ஒழுங்குபடுத்தி
எல்லாவற்றையும் வெளியிடும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். விரிவான ஒரு நூல்
வெளியீட்டுத்திட்டத்தை மனத்தில் வைத்துக்கொண்டு அவரை நேரில் வந்து சந்திக்குமாறு
கேட்டுக்கொள்கிறார். கடிதத்தில் தென்படும் முக்கியக்கனவு இதுதான். ஆனால்
நெல்லையப்பர் கடையத்துக்குச் சென்றதாகவோ அவரைச் சந்தித்ததாகவோ எக்குறிப்பும்
கிடைக்கவில்லை என்கிறார் தொகுப்பாசிரியர்.
1919 ஆம் ஆண்டில்
கடையத்திலிருந்து எட்டயபுரத்துக்குச் செல்கிறார் பாரதியார். கீர்த்தியுடன்
விளங்கும் தம்மை எட்டயபுரம் ஜமீன்தார் பெருமையுடன் வரவேற்றுப் போற்றுவார் என்ற
எதிர்பார்ப்பு பாரதியாருக்கு இருந்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பில் 2.5.1919 அன்று அவருக்கு கவிதைக்கடிதம் ஒன்று எழுதியனுப்புகிறார்.
துரதிருஷ்டவசமாக ஜமீன்தாரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. முதல்நாள் அனுப்பிய
கவிதைக்கடிதத்துக்கு பதில் வராததைக் கண்டு, மறுநாளும்
இன்னொரு கவிதைக்கடிதத்தை எழுதியனுப்புகிறார் பாரதியார். அதற்கும் எந்தப் பதிலும்
வரவில்லை. அவர் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கவில்லை. மூன்று மாத காலம் அதே ஊரில்
தங்கியிருந்தாலும் மௌனத்தையே விடையாகப் பெறவேண்டியிருக்கிறது. பிறகு ஆகஸ்டு
வாக்கில் எட்டயபுரம் மன்னருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். மன்னர் வரலாற்றைச்
சொல்கிற “வம்சமணி தீபிகை” நூலை திருத்தமுற
எழுதுவதற்கு அனுமதி கோரி எழுதுகிறார். மன்னரிடமிருந்தும் மௌனமே பதிலாகக்
கிடைக்கிறது. பிறகு எட்டயபுரத்திலிருந்து கடையத்துக்கு வந்துவிடுகிறார். ஆயினும்
தம் நூல்களை ஆங்கிலநாட்டு நூல்களைப்போல தரமான முறையில் தொகுத்து வெளியிடுகிற
விருப்பம் அவரை உந்தியபடி இருக்கிறது. கானாடு காத்தான் வயி.சு.சண்முக
செட்டியாருக்கு விவரங்களைத் தெரிவித்து உதவி வேண்டி எழுதுகிறார். அவரிடமிருந்தும்
மௌனமே பதிலாக இருக்கிறது. எக்கட்டத்திலும் தம் கனவுகளைக் கைவிடாத பாரதியார்
விரிவான நூல் பிரசுரத்திட்டமொன்றைத் தயாரிக்கிறார். தம் படைப்புகளை 40 தனித்தனி புத்தகங்களாகப் பிரித்து வெளியிடும் எண்ணத்தில்
இருக்கிறார் அவர். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக அத்திட்டத்தை எழுதி நண்பர்களுக்குக்
கடிதங்கள் எழுகிறார். எந்தத் திட்டத்துக்கும் எந்தப் பக்கத்திலிருந்தும் அவர்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கவில்லை. இதுதான் அவலத்தின் உச்சம்.
எதிர்பார்த்த
உதவிகள் கிடைக்காத தருணங்களே பாரதியாரின் வாழ்வில் ஏராளமானவை என்று சொல்லவேண்டும்.
“கைப்பொருள் அற்றான் கற்பதெவ்வகை? பொருளால் அன்றிக்கல்வியும் வரவில, கல்வியான் அன்றிப் பொருளும் வரவில, முதற்கண் கல்வியே பயிறல் முறைமையாம் அதற்குப் பொருளிலை, ஆதலின் அடியேன் வருந்திதேய நின்பால் வந்தடைந்தனன்” என்று 1897 ஆம் ஆண்டில் 14 வயது சிறுவனாக எட்டயபுரம் ஜமீன்தாருக்கு எழுதிய
கவிதைக்கடித்திலிருந்து 1920 ஆம் ஆண்டில் 38 வயது இளைஞராக -பேரும் புகழும் பெற்ற மாபெரும் படைப்பாளியாக
-அமிர்தம் என்னும் பத்திரிகையைத் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்து அதற்கான பொருளுதவி
வேண்டி நண்பர்களுக்கு எழுதிய கடிதம்வரைக்கும் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.
ஆனால் எந்தத் தருணத்திலும் அவர் யார்மீதும் கசப்பையோ, நிராதரவின் வலியையோ புலப்படுத்தாத மனஉரம் பாரதியாரிடம்
இருந்தது.
உதவிகளுக்காகமட்டுமே
கடிதங்களை எழுதியவராக பாரதியாரை நாம் மதிப்பிட்டுவிடக்கூடாது. திலகருக்கு எழுதிய
ஒரு கடிதமம் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவரான ராம்ஸே மக்டானல்டுக்கு எழுதிய ஒரு
கடிதமும் இத்தொகுப்பில் உள்ள முக்கியமான மற்ற கடிதங்கள்.
1921ல் ஈரோட்டுக்குப்
பக்கத்தில் உள்ள கருங்கல்பாளையம் வாசகசாலையில் மனிதனுக்கு மரணமில்லை என்கிற
தலைப்பில் பாரதியார் உரையாற்றியதாக ஒரு குறிப்பை பத்மநாபன் கொடுத்திருக்கிறார்.
அதுவே அநேகமாக அவர் மேற்கொண்ட இறுதி வெளியூர்ப்பயணமாகவும் இருக்கலாம் என்று
சொல்கிறார். அதற்குப் பிறகே தற்செயலாக பாரதியாரின் மரணம் நிகழ்கிறது. 39 வயதில் இயற்கையெய்திவிட்டாலும் மரணமற்ற மனிதராகவே பாரதியார்
அனைவரின் நெஞ்சிலும் வாழ்ந்துவருகிறார். அவரிடம் குடிகொண்டிருந்த உத்வேகத்துக்கும்
வற்றாத நம்பிக்கைக்கும் கசப்பேயில்லாத குழந்தைமைக்கும் எக்காலத்திலும் மரணமில்லை.
( ரா.அ.பத்மநாபன்
தொகுத்த பாரதியார் கடிதங்கள் புத்தகத்தை முன்வைத்து 28.05.2009 திண்ணை இணைய இதழில் எழுதிய கட்டுரை)