தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும் அழவும் செய்கிற மனிதன் எழுத்துகளின் வழியாக உருப்பெற்று எழும் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டு சிரிக்கவும் அழவும் தூண்டப்படுகிறான். மானுட குலத்தின் துக்கத்துக்கும் ஆனந்தத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள நுட்பமான உறவை மனிதன் புரிந்துகொள்கிறான். ஒரு படைப்பை மனதார வாசித்த பிறகு மானுட குலத்தின் துக்கம் அவனுடைய துக்கமாகவும் மானுட குலத்தின் ஆனந்தம் அவனுடைய ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது.
தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு வித்தை காட்டி பணம் சம்பாதிக்கும் சிறுவனொருவனைப்பற்றிய சிறுகதையைக் கார்க்கி எழுதியிருக்கிறார். பத்து வயதில் குடும்ப பாரத்தைத் தாங்குவதற்காக எங்கோ இருக்கும் கல்கத்தா நகருக்கு வீட்டுவேலை செய்வதற்காக ரயில்பயணம் செய்யும் சிறுமியின் கதையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். இரண்டு கதைகளையும் வாசிக்கும்போது நம் நெஞ்சம் கரைந்துவிடுகிறது. ஓர் இலக்கிய அனுபவம் நம்மீது செலுத்தும் ஆளுமைக்கு இந்த அடிப்படை உண்மைதான் அடையாளம். உலகம் முழுதும் இப்படிப்பட்ட எண்ணற்ற ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்துவதை ஒரு கடமையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒரு வாசகனுடைய கோணத்தில் இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தல்ஸ்தோய், செகாவ், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, புஷ்கின், வான்கோ, ஹெமிங்வே, பெசோ, ஜார்ஜ் ஆர்வெல், வெர்ஜினியா வுல்·ப் என உலகெங்கும் கொண்டாடப்படுகிற ஆளுமைகளை
எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆளுமைகளின்
சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகள், அவர்களுடைய
வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்கள், எழுத்தில்
அவர்கள் அடைந்த வெற்றிகள் என்பவற்றை முதல் பகுதியாகவும் அவர்களுடைய மிகச்சிறந்த
ஆக்கங்களைப்பற்றிய அறிமுகம் என்பதை இரண்டாவது பகுதியாகவும் ஒவ்வொரு கட்டுரையும்
அமைந்துள்ளது.
நூலில் முதல் கட்டுரையாக இடம்பெற்றுள்ள “அஸ்தபோல் ரயில் நிலையம்” உணர்ச்சிமயமான
ஒரு கட்டுரை. தல்ஸ்தோயின் இறுதிக் காலத்தில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே
மனவருத்தம் உருவாகிக் கசப்பில் முடிவடைந்த காலகட்டம் அது. தன் படைப்புகளின்
பதிப்புரிமையை நாட்டுக்குச் சொந்தமாக அறிவிக்கவும் தன் நிலங்களை விவசாயிகளுக்குப்
பகிர்ந்தளிக்கவும் ஓர் உயில் எழுதிவைக்க விரும்புகிறார் தல்ஸ்தோய். ஆனால்
தல்ஸ்தோயின் மனைவிக்கு அதில் உடன்பாடில்லை. விவாதத்தால் மனம் உடைந்துபோன தல்ஸ்தோய்
வீட்டைவிட்டு வெளியேறுகிறார். பயணத்தின் நடுவில் உடல்நலக் கோளாறின் காரணமாக அவர்
இறங்கிய நிலையத்தின் பெயர்தான் அஸ்தபோல் ரயில்நிலையம். அங்குள்ள ஓய்வறையில் அவர்
தங்கவைக்கப்படுகிறார். செய்தியைக் கேள்விப்பட்டு மக்கள் அனைவரும் அவரைப்
பார்ப்பதற்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் திரண்டுவருகிறார்கள். தன் சொற்களை
ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக மனைவிமீது மனவருத்தம் கொண்டு பிரிந்துவருகிற
தல்ஸ்தோய், மரணப்படுக்கையில் தன்னைக் காணவருகிற தன் பெண்ணைப் பார்த்து
அவர் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிற தருணம் விசித்திரமானது.
மனத்தின் மாறுபட்ட விசித்திரமான நிலைகளை தன் படைப்புகள்வழியாக கண்டறிந்துசொன்ன
தல்ஸ்தோயின் மனமும் விசித்திரச் செயல்பாடுகளிலிருந்து விலகிநிற்க இயலவில்லை.
துரதிருஷ்டவசமாக அந்த இடத்தில் அவருடைய உயிர் பிரிந்துவிடுகிறது. இச்சம்பவத்தை ஒரு
சிறுகதைக்கே உரிய நுட்பத்தோடும் விவரணைகளோடும் எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
செகாவின் “நாய்க்காரச் சீமாட்டி” சிறுகதையின்
அனுபவத்தை எஸ்.ராமகிருஷ்ணன் முன்வைத்திருக்கும் விதம் மிகவும் நுட்பமாக உள்ளது.
ஊரைச் சுற்றிப் பார்க்க வரும் சீமாட்டியின் திட்டம் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து
சுற்றவேண்டும் என்பதுதான். தற்செயலாக ஒரு சம்பவத்தால் அது சாத்தியமற்றுப் போகிறது.
அந்தத் திட்டத்தைக் கைவிடவும் சீமாட்டிக்கு மனமில்லை. தனிமையில் புறப்பட்டு
விடுகிறாள். தனிமைக்கு ஒரு துணையாகத்தான் ஒரு நாயை அழைத்து வருகிறாள். தோளில்
ஒருவர் ஒரு பாரத்தைச் சுமப்பதுபோல தனிமையை ஒரு பாரமாக கையோடு பற்றி இழுத்துவருகிறாள்
அந்தச் சீமாட்டி. நாயை ஒரு படிமமாக உள்வாங்கி உரைக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின்
சொற்கள் அக்கதையின் அனுபவத்தைக் கவித்துவம் நிறைந்ததாக மாற்றுகின்றன.
கைவிடப்படுதலும்
நிராகரிப்புமே மனித வேதனைகளில் முக்கியமானது என்கிற செகாவின் குறிப்பை ஓரிடத்தில்
எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். செகாவின் கதைகள் இவ்விரண்டு
உணர்ச்சிகளையே தொடர்ந்து வலியுறுத்துகின்றன. பனியில் நனையும் குதிரையைப் பார்த்து
மனம்கலங்கி அவசரமாக வீதியில் இறங்கிய செகாவும் பனியில் நனைகிறார். இருவர்மீதும்
பனி கொட்டுகிறது. குதிரை அவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. செகாவ் ஆழ்ந்த
துயரத்துக்கு ஆளாகிறார். இந்தச் சம்பவத்தை விவரித்துச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணன்
இறுதியில் கண்டுணர்ந்து எழுதிய வரிகள் மிகவும் முக்கியமானவை. “எப்போதும் செகாவ் பனியில் நனைகிறார் என்ற படிமம் என்னை
வசீகரிக்கிறது. அது வெறும் குதிரையின் மீதான பரிதாபம் மட்டுமல்ல. மொழியற்ற துயரின்
மீதான எழுத்தாளனின் அக்கறையான செயல்பாடு அதுவே” என்பவை
எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகள். இந்த வரிகளின் அடிப்படையில் இந்த நூலின் தலைப்பு
இன்னும் கூடுதலான வெளிச்சத்தில் சுடர்விடுவதைப் பார்க்கலாம்.
தஸ்தாவெஸ்கியின்
வெண்ணிற இரவுகள், தல்ஸ்தோயின்
நடனத்துக்குப் பிறகு கார்க்கியின் கிழவி இஸெர்கில் பாஸி அலியேவாவின் மண்கட்டியைக்
காற்று அடித்துப் போகாது ஆகிய எல்லாப் படைப்புகளும் நிராசையின் வலிகளை
முன்வைக்கின்றன. நிலப் பின்னணிகளோடும் காட்சிகளோடும் இவற்றை இணைத்துப்
புரிந்துகொள்ளும்போது உருவாகும் பரவசத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் எஸ்.ராமகிருஷ்ணன்
பகிர்ந்துகொள்கிறார்.
மண்கட்டியை காற்று அடித்துப் போகாது நாவலைப்பற்றி
எழுதும்போது, அந்த நாவலுக்கு அலியேவா எழுதியுள்ள முன்னுரை சிறப்பு
மிகுந்த பகுதியாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஓர் இளம்பெண் எழுத்தாளராக மாறிய
நுட்பமான கணம் அந்த முன்னுரையில் முன்வைக்கப்பட்டிருப்பதுதான் காரணம். ஒரு காட்சி
மனத்தில் உருவாக்கும் பரவசத்துக்கும் அதன் வழியே மனம் மேற்கொள்ளும் பயணத்துக்கும்
எல்லையே இல்லை. அலியேவா அப்போது இளம்பெண். வயதான கிழவிக்கு ஊசியில்
நூல்கோர்த்துக்கொடுத்து பொழுதின் அலுப்பைப் போக்கிக்கொள்கிறாள். பேச்சுவாக்கில்
ஒருநாள் கிழவி அவளுக்கு அழகின் ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கிறாள். உராஸ்
பண்டிகையன்று விடிகாலையில் புல்வெளியில் காணப்படும் பனித்துளிகளைச் சேகரித்து
முகம் கழுவிக்கொண்டால் ஒருபெண் அழகியாகிவிடுவாள் என்பதுதான் அந்த ரகசியம்.
அழகியாகும் ஆசையை மனத்தில் தேக்கிவைத்துக் காத்திருந்து பண்டிகை நாளன்று
அதிகாலையில் எழுந்து ஓடுகிறாள் அவள். பூக்கள் எங்கும் பனித்துளிகள். ஒரு நீலமலரின்
முன்னால் மண்டியிட்டு பனித்துளிகளைச் சேகரக்கிறாள். அப்போது அருகில் ஒரு செடி
வளைந்து கிடப்பதைக் காண்கிறாள். அதை அழுத்திக்கொண்டிருந்த கல்லைப் புரட்டிவிட்டு
அதை விடுவிக்க விரும்புகிறாள். கல்லைப் புரட்டித் தள்ளியதும் அந்த இடத்திலிருந்து
ஒரு நீரூற்று பொங்கி வழிகிறது. ஆச்சரியம் ததும்ப அந்த ஊற்றைக் கவனித்தபடியே
இருக்கிறாள். பண்டிகை நாளில் புது ஊற்றைக் காண்பது பேரதிருஷ்டம் என்பது ஒரு
நம்பிக்கை. அது தனக்கு வாய்த்திருக்கிறது என்று தன்னை மறந்து அதில் லயித்துப்
போகிறாள். தெய்வத்தின் முன் முறையிடுவதுபோல தன் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி
வேண்டிக்கொள்கிறாள். துக்கமும் ஆனந்தமும் கடந்த மனநிலையில் அவள் தன்னைத்தானே புதிய
பிறவியாக உணர்கிறாள். வீட்டுக்கு வந்தவுடன் அவளது மனத்தில் சொற்கள் தாமாகவே
சுரக்கின்றன. அவள் முதன்முறையாக ஒரு கவிதையை எழுதுகிறாள். ஒரு கல் புரண்டு அதன்
அடியிலிருந்து நீரூற்று பொங்குவதுபோல மனத்தில் இருந்த தடை விலகி அவளுக்குள்
கனவுகளும் சொற்களும் பீறிடுகிற அற்புதம் உண்டாகிறது. இருபது தொகுதிகள் அடங்கும்
அளவுக்கு அவள் கவிதைகளை எழுதுகிறாள். படைப்பைப் போலவே ஒரு படைப்பாளி உருவான விதம்
பரவசம் மிகுந்ததாக உள்ளது. இந்த அற்புதக் கணத்துக்கு முக்கியத்துவம் தந்து
வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்காக எஸ்.ராமகிருஷ்ணனைப் பாராட்டவேண்டும்.
மல்பா தஹான்
எழுதிய எண்ணும் மனிதன் நாவலைப்பற்றிய அறிமுகக்கட்டுரை இந்த நூலின் முக்கியப்பகுதி
என்றே சொல்லவேண்டும். கணிதத்தை சுவையான கதையாக மாற்றியிருக்கும் ஆசிரியரைப்
பாரட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் அந்த நாவலில் வாசித்த மனஎழுச்சியூட்டும் சில வரிகளைக்
குறிப்பிடுகிறார். நேர்மை என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள் நேர்க்கோடு என்பதைப்
புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம். அதனுடைய பக்கங்கள்
திறந்திருக்கும் சொர்க்கம். கடவுளின் இந்த நூலகத்தை அழிக்கவோ திருடவோ
முயற்சிசெய்வது அசிங்கமான குற்றம் ஆகியவை முக்கியமான சில வரிகள்.
விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களின் மொழியாக்கம்வழியாக தமிழ்ச்சூழலுக்கு
ஏற்கனவே அறிமுகமானவர் ஜார்ஜ் ஆர்வெல். அந்த நாவல்களைக் காட்டிலும் முக்கியமான
இரண்டு கட்டுரைகளை விரிவாக முன்வைத்து அவர் இந்த நூலில் அறிமுகம் செய்யப்படுகிறார்.
ஆட்சி நடைமுறைகளைப் பகடி செய்கிறவராக நம் மனத்தில் பதிந்துபோயிருக்கும் ஆர்வெல்
படிமத்தை எஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்புகள் மாற்றி புதிதாக ஒரு படிமத்தை
வார்த்தெடுத்துக் கொடுக்கின்றன. இந்தப் படிமம் அவரை நமக்கு இன்னும் நெருக்கமானவராக
உணரவைக்கிறது. ஆர்வெலின் கட்டுரைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை இது
உருவாக்குகிறது.
தன் எழுத்துகள்
வழியே ஒரு படைப்பாளி ஒரு வாசகனுடைய நெஞ்சில் சிறிது வெளிச்சம் படியும்படி
செய்கிறான். அந்த வெளிச்சத்தைத் துணையாகப் பற்றிக்கொண்டு வாசகன் இன்னும் இன்னும்
என வெளிச்சத்தைத் தேடிப் பயணப்படுகிறான். பயணங்கள் தொடரத்தொடர நெஞ்சில் இருட்டின்
அடர்த்தி மங்கிக்கொண்டே போகிறது. வாசகர்களுக்குத் துணையாக எஸ்.ராமகிருஷ்ணன்
ஆற்றியிருக்கும் பங்கு குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ராமகிருஷ்ணன்
எழுதிய ’செகாவின்மீது பனி பெய்கிறது’ கட்டுரைத்தொகுதியை
முன்வைத்து 10.10.2010 திண்ணை இணைய இதழில் எழுதிய கட்டுரை. )