Home

Sunday 13 June 2021

நெல்லித் தோப்பு - சிறுகதை

‘‘நெல்லித்தோப்பு கவுண்டர் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். போய்ப் பாருடா’’ என்றார் அப்பா. வெயிலில் ரொம்ப தூரம் நடந்து வந்திருந்தார் அவர். கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தார். நாலைந்து இடங்களில் எனக்காகவே அலைந்தலைந்து வேலை பார்த்துத் தருவதும் அதை நான் இரண்டு மூன்று வாரங்களிலேயே தொலைத்துவிட்டு நிற்பதுமாக மாறிமாறி நடந்து கொண்டிருந்த காலம் அது. என்னைப் பார்த்த பார்வையில் ஒருவித விரோதம். எரிச்சல். நான் பதில் சொல்ல கொஞ்ச நேரம் தாமதித்து விட்டேன். ‘‘துப்பு கெட்ட நாயே. இதான் கடைசி தரம். இனிமே சத்தியமா ஒனக்காக எவன்கிட்டயும் போய் பல்லிளிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன். நீ உருப்பட்டாலும் சரி. எங்கனா உண்டச்சோறு வாங்கித் துன்னாலும் சரி. இதோட கை கழுவிட்டேன். ஒங்கிட்ட மாரடிக்க என்னால ஆவாது’’ என்று கத்தினார்.

கவுண்டரைப் பற்றி என் சிநேகிதர்கள் கதைகதையாய்ச் சொன்னார்கள். அவர் மகா குடிகாரர் என்றான் ஒருவன். குடிப்பதற்காகவே தன் சொத்துகளை ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டிருப்பதாய்ச் சொன்னான் இன்னொருவன். ‘‘புள்ள இல்லாத சொத்துதான. வேற எவனாவது வந்து அழிக்கிறதுக்குப் பதிலா தானே அழிச்சிட்டுப் போய்டலாம்னு நெனச்சிட்டாரு கவுண்டரு’’ என்றான் மற்றவன். ‘‘இவர்கிட்ட போய் என்னடா வேல செய்வ. க்ளாஸ்தான் கழுவணும்’’ என்றான் வேறொருவன். எல்லோரும் உடனே கை கொட்டிச் சிரித்தார்கள். என் கோபம் சட்டென்று உச்சத்திற்குத் தாவியது. உடனே ஒரு கெட்ட வார்த்தையால் அவர்களைத் திட்டிச் சிறுமைப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. கஷ்டப்பட்டு பேச்சின் திசையைத் திருப்பினேன்.

சாயங்காலமே கவுண்டர் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் யாரும் இல்லை. நின்றிருந்தேன். பின்கட்டுத் தொழுவத்தில் இருந்து பசுக்கள் அழைக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்குப் பின் வயதான ஒருவர் வந்தார். நான் ‘‘கவுண்டரு.....’’ என்று இழுத்தேன். ‘‘நெல்லித்தோப்பு ரூம்லதான் இருப்பாரு. போய்ப்பாரு’’ என்றார் அவர். கவுண்டரின் பரம்பரைச் சொத்து நெல்லித்தோப்பு. ஊர்க்கடையில் பெரிய காடு மாதிரி விரிந்த இடம். ஆதிநாளில் இருந்தே அதன் தோற்றம் அப்படித்தான் என்பாள் என் ஆயா. கவுண்டர் தோப்பு நெல்லிக்காய்களுக்கு கடல் கடந்துகூட மதிப்புண்டு. நெல்லிக்காய் கேட்காத நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் வட்டாரத்திலேயே இல்லை. பக்கத்தில் இருந்த பதினெட்டுப் பாளையங்களுக்கும் தாய்ப்பாலைப் போன்றது நெல்லிக்காய் ஊறுகாய். நூற்றாண்டுகளுக்கு முன்பு நாடாண்ட அரசனுக்குப் பக்கபலமாக படை நடத்தும் பரம்பரை இருந்தது. நெருப்புக்கு முன்னால் சத்தியம் செய்து உயிரையும் கொடுத்து மண் காத்த பரம்பரை. அரசனைக் கொல்ல வந்தான் அயல்நாட்டு எதிரி. படையாளிகளின் வீரத்தின் முன் நிற்க முடியாமல் தடுமாறினான். ஏழுநாள் நடந்த போரில் அரண்மனை வாசலைக் கூட நெருங்கமுடியாமல் திண்டாடினார்கள் எதிரிகள். எட்டாம் நாள் காலை போரை வேடிக்கை பார்க்க வந்த அரசனின் இளம் மகனைத் தந்திரமாய்க் கடத்திக்கொண்டு ஓடிவிட்டார்கள். அரசன் அலறினான். துரத்தினார்கள் படையாச்சிகள். காற்றைப் போல ஓடிய கயவர் கூட்டத்தை மடக்கினவன் ஏழுமலைப் படையாச்சி. அம்புக்கும் ஈட்டிக்கும் அஞ்சாமல் முன்னேறி சிறுவனைச் சிறையெடுத்த தீயவனைப் பிடித்தான். வாளை உருவி வயிற்றுக்குள் செருகினான். ஈட்டியை பிடுங்கி இதயத்தில் பாய்ச்சினான். பனங்காயைச் சீவுவதுபோல் பகைவர்களைச் சீவினான். இம்மெனும் முன்னே இருநூறு தலைகள் விழுந்தன. பூமியெங்கும் ரத்தச் சேறு. அவன் ஆத்திரத்தையும் போர்த் திறத்தையும் கண்டு கதிகலங்கிய வீரர்கள் ஆயுதங்களைப் போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். உயிர்ப்பிச்சை கேட்டுக் கை குவித்த அரசனைக் காலால் எத்திவிட்டு கம்பீரமாய்த் திரும்பினான் படையாச்சி. மகனை மீட்டு வந்த ஏழுமலைப் படையாச்சிக்கு யானை ஊர்வலம் நடத்தி மரியாதை செய்தான் அரசன். காடாய்க் கிடந்த நெல்லித் தோப்பையும் தோப்பைச் சுற்றி இருந்த நிலத்தையும் மகிழ்ச்சியின் அடையாளமாய் மானியமாய்த் தந்தான்.

நெல்லித்தோப்பைப் பற்றிப் பரம்பரை பரம்பரையாய் ஒரு பெரிய புராணம் போலச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த கதைகள் பல உண்டு. அதில் செங்கேணி அம்மன் கதை மிகவும் பிரசித்தம். புராண காலத்தில் அரசனின் தலைமையில் அயல் நாட்டுக்குக் கிளம்புகிறது ஒரு பெரிய படை போன வீரர்கள் வருவார்கள் என்று காத்து நிற்கிறது பெண்குலம். பருவ காலங்கள்

மாறிமாறி வருகின்றன; போகின்றன. சென்றவர்கள் பற்றி செய்தி இல்லை. அரசி செங்கேணியும் ஊர்ப் பெண்களும் நித்தமும் எதிர்பார்த்து மனம் சோர்கிறார்கள். ஆண்களற்ற தலைநகரை இன்னொரு அயல் தேசத்துப் படை தாக்க வந்துவிடுகிறது.

அரசியே என்று ஓடி வருகிறார்கள் பெண்கள். பெண்களை அழைத்துக் கொண்டு அபயம் வேண்டி வெளியேறுகிறாள் செங்கேணி. அப்பாவிப் பெண்களைத் துரத்துகிறது அரசன் படை. ஆதரவில்லாத நிலையிலும் தாக்கப்பட்டு விடுவோம் என்கிற அச்சத்திலும் அம்மனை நோக்கி மனமுருகப் பிரார்த்திக்கிறாள் செங்கேணி. சக்திஎன்று கூவுகிறாள். அடுத்த நொடி பெண்கள் கூட்டம் நெல்லி மரங்களாகி விடுகின்றன. பெண்கள் மரங்களானதைக் கண்டு பயந்த அரசனும் படையும் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். செங்கேணி அம்மன் மரத்துக்கு இன்றும்கூட பூசை உண்டு. ஒரு புற்றாக மட்டுமே செங்கேணி அம்மன் மரம் அடையாளப்படுத்தப்படுகிறது இப்போது, மண்ணில் துளிர்க்கும் ஒவ்வொரு நெல்லிக்கன்றும் செங்கேணி அம்மன்தான்.

நெல்லித்தோப்புக்குள் புகுந்து அம்மன் மரத்தைத் தாண்டி அறைவாசலை அடைந்தபோது வாசலில் நாய்க்குக் கறித்துண்டு போட்டுக்கொண்டிருந்தான் ஒருவன். ‘‘கவுண்டர் இருக்காரா?’’ என்று நிதானமான குரலில் கேட்டேன். இருப்பதாய்த் தலையசைத்துவிட்டு எலும்பைக் கடிக்கும் நாயின் வாயையே கவனிக்கத் தொடங்கினான் அவன். மெதுவாகக் கதவருகில் நின்றேன். புஷ்பக விமானம் போன்ற தேக்குக் கட்டில். மெத்தையில் கவுண்டர் உட்காந்திருந்தார். நெடிதோங்கிய உருவம். தளர்ச்சி தெரியாத உடற்கட்டு. மார்பில் மண்டிய ரோமக் காட்டின் வெண்ணிறம்தான் வயதைக் காட்டியது. அவர் முன்னால் மதுக்கோப்பை. தட்டு நிறைய கறித்துண்டுகள். ஜன்னல் வழியே தெரியும் வானத்தையும் நெல்லி மரத்தையும் பார்த்தபடி பருகிக்கொண்டிருந்தார். வெகு நேரத்திற்குப் பின்புதான் என்னைப் பார்த்தார். புருவத்தை உயர்த்தி, ‘‘என்னடா?’’ என்றார். எனக்கு ஒரு கணம் உடல் நடுங்கியது. வயிற்றில் நரம்புகள் சுருண்டன. கும்பிட்டேன். ‘‘அப்பா அனுப்ச்சாருங்க’’ என்றேன்.

‘‘சீனிவாசன் புள்ளைதான நீ... அதான் மூஞ்சில எழுதி ஒட்டியிருக்குதே.. சரி... சரி... இன்னைலேர்ந்து நம்ம ஊட்லியே இருந்துக்க.’’

திரும்பி நடந்தேன். திடுமென ‘‘டேய்’’ என்று கூப்பிட்டு நிறுத்தினார். அவசரமாய் அவரை நோக்கி ஓடினேன்.

‘‘இங்கிலீஷ் படிச்சிச் சொல்வியாடா?’’ என்று கேட்டார். ‘‘ம்ங்க’’ என்றேன் நான். ‘‘சரி சரி போ’’ என்று அனுப்பிவிட்டார்.

அவர் கதை ஊருக்கெல்லாம் தெரிந்ததுதான். பரம்பரைப் பெருமை, புகழ் எல்லாம் பெரிய கவுண்டரோடு போய்விட்டது. சின்னவருக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. ஆனந்தம். அது ஒன்று தான் லட்சியம். மது, பெண், குதிரை எதன் வழியாக வந்தாலும் சரிதான். அதற்காக எதைச் செய்யவும் தயாராக இருந்தார். அவர் மனைவி அவரோடு வாழவில்லை. ஏழெட்டு வருஷ வாழ்க்கையில் கசந்துபோய் வெளியேறிவிட்டாள். பிள்ளைப் பாக்கியம் இல்லை. ஜாதக தோஷம் என்றான் ஜோசியன். சகவாசதோஷம் என்றாள் வெளியேறிய மனைவி. ‘‘நான் அனுபவிக்கப்ப பொறந்தவண்டா’’ என்று சிரித்தார் கவுண்டர். தோப்பும் வயலும் கொடுத்த வருமானம் ஆகாசம்பட்டு, வழுதாவூர், திருக்கனூரில் இருந்த வைப்பாட்டிகள் வீட்டுக்குப் படியளக்கவே சரியாக இருந்தது. சொந்தச் செலவுக்குச் சொத்துகளை விற்கத் தொடங்கினார். காணி நிலங்களெல்லாம் காசாயின. கம்பெனிக்காரரின் வசமாகிப்போன நிலங்கள் பொட்டல் காடாகிப் பொசுங்கிக் கிடந்தன. ‘‘என்னமோ கணக்கு பண்றான் கம்பெனிக்காரன். காசு வந்தா போதும்ன்னு வித்துட்டே இருந்தா நாளைக்கி என்னாவும்ன்னு தெரியல’’ என்று சொல்லி ஆற்றிக் கொள்ளாத பெண்களே இல்லை. களையெடுக்கவும் நாற்று நடவும் வேறு ஊர்களுக்கு வேலை தேடிப்போனார்கள் அவர்கள்.

‘‘அந்த நெல்லித்தோப்பு செங்கேணி அம்மன்தான் கவுண்டரு கண்ணத் தொறக்கணும்’’ என்று சொல்லிச் சலித்துக் கொள்ளாத மூதாட்டிகளே ஊரில் இல்லை.

இரண்டு நாள் கழிந்து பெங்களூர்க்குப் புறப்பட்டார் கவுண்டர். டிரைவருக்குப் பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொண்டேன் நான். பின்புற இருக்கையில் கைகளை இருபுறமும் விரித்தபடி சாய்ந்துவந்தார் கவுண்டர். எனது முதல் கார் பயணம் அது. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நாலணா கொடுத்து டவுன் பஸ்ஸில் போகக்கூட வக்கில்லாத என்னை அதிர்ஷ்டக்காற்று மெத்தென்ற வாகன இருக்கையில் உட்கார்த்திவைத்துவிட்டது. கவுண்டரை மனசார ஏற்றுக்கொண்டேன். க்ளாஸ் கழுவுகிறவன்என்று என்மீது வந்து விழும் கேலிப் பேச்சுகளைப் பற்றி இனி கவலையில்லை. என்னை வாழ வைத்த தெய்வம் அவர். அவர் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்யக் காத்திருந்தேன் நான். இனி கவுண்டருக்கு எல்லாம் நான் தான் என்கிற எண்ணம் பெரிய போதையாக இருந்தது.

ஆறு மணி நேரத்தில் பெங்களூர் சேர்ந்துவிட்டோம். பெரிய லாட்ஜ் அது. அதன் பிரம்மாண்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அன்று இரவை அங்கு தான் கழித்தோம். எனக்கும் டிரைவர்க்கும் தனியாகக் கீழே படுக்கைகள் கொண்டுவந்து போட்டார்கள். மறுநாள் காலையில் குதிரைப் பந்தய மைதானத்திற்கு நேராகச் சென்றோம். ஜே ஜே என்று நிறையக் கூட்டம். வெளியே பல சிறுவர்கள் கையடக்கமாய்ச் சில புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். கவுண்டர் ஒரு புத்தகம் வாங்கச் சொன்னார். வாங்கினேன். எனக்கு அது எதற்கு என்று புரியவில்லை. கலந்து கொள்ளப்போகும் குதிரைகளின் வரலாறு அப்புத்தகத்தைப் பார்த்தால் தெரியும் என்றார் அவர். ‘‘இதப் படிக்கத்தான் ஒனக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்டேன்’’ என மேலும் சொன்னார்.

நான் முதல் பக்கத்தைப் பிரித்து வில்லியம்ஸ்என்றேன். உடனே கவுண்டர் பரவசமானார். ‘‘குதிரைன்னா அது குதிரை. பம்பாய் சரக்கு. மூணு மாசத்துக்கு முன்னால சொளயா ஆறு லட்சம் அடிச்சிட்டுப் போனான் ஒருத்தன்’’ என்றார். படிக்கப்படிக்க எனக்கு விஷயம் புரியத் தொடங்கியது. குதிரை பிறந்த தேதி. அதன் பூர்வீகம். அது கலந்து கொண்ட போட்டிகள். அது ஓடிய மைதானங்கள். வெற்றி விவரம் எல்லாம் அந்தப் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தன. நான் ஒவ்வொரு பக்கமாய்ப் படித்து ஒவ்வொரு குதிரையைப் பற்றியும் சொன்னேன். சிறிது நேரம் கண்ணை மூடி யோசித்தார் கவுண்டர். பிறகு சூட்கேஸைத் திறந்தார். பத்தாயிரம் ரூபாயை எடுத்து நீட்டினார்.

அப்புறம் ஒரு தாளை நீட்டி எழுதச் சொன்னார். அவர் வாய் மாற்றி மாற்றிக் குதிரைகளின் பெயர்களை உச்சரித்தன. நான் வரிசையாய் எழுதிக் கொண்டே வந்தேன். மூடிய கண்ணைத் திறந்து அந்த வரிசையில் டிக்கட் வாங்கி வா என்றார்.

அரைமணி நேரம் ஆன பிறகு பந்தயம் ஆரம்பித்தது. முதல் சுற்றில் கவுண்டர் பணம் கட்டிய குதிரை வந்துவிட்டது. எனக்கு எல்லாக் குதிரைகளும் ஒரே மாதிரியாகவே இருந்தன. ஓட்டுகிறவன் முதுகில் எண்கள் மட்டும் இல்லை என்றால் மிகவும் குழம்பி இருப்பேன். கவுண்டர் பதற்றத்தின் உச்சியில் இருந்தார். கவுண்டர் குறித்த எண்களின்படியே ஒவ்வொரு சுற்றிலும் குதிரை சென்று கொண்டிருந்தது. மூன்று சுற்றுகள் கச்சிதமாய்க் கணிக்கப்பட்டிருந்தன. கவுண்டரின் திறமையை எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. ஆனால் நாலாவது சுற்று காலை வாரிவிட்டது. அதற்கப்புறம் எல்லாம் சரிவுதான். கவுண்டர் வெறி கொண்டவர்போல ஆனார். மைதானம் அடுத்த சுற்றுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது. அவர் இன்னொரு பத்தாயிரம் ரூபாய்க் கட்டை எடுத்து நீட்டினார். இம்முறை வேறு எண்களின் கலவையைச் சொன்னார். அதே வரிசையில் நான் சீட்டுகள் வாங்கி வந்தேன். துரதிருஷ்டம் எங்களைத் தள்ளிவிட்டது. இந்த முறையும் தோல்வி தான். கவுண்டர் கோபமாக எழுந்துவிட்டார். அங்கும் இங்கும் சிறிது நேரம் உலாத்தினார். மூன்றாம் சுற்றுக்கு மைதானம் தயாராகிக்கொண்டிருந்தது. கவுண்டர் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் தந்து டிக்கட் வாங்கி வரச் சொன்னார். பணம் அதிகம் கட்டும் போதெல்லாம் வராத குதிரைகள் குறைவாகக் கட்டும் போது சரியாக ஓடி வந்தன. கவுண்டர் சந்தோஷத்தில் சலித்துக் கொண்டார். பந்தயத்தில் நானும் உற்சாகம் காட்ட ஆரம்பித்தேன். நாலாவது சுற்றுக்கு கவுண்டர் முழு பத்தாயிரத்தையும் கொடுத்து டிக்கட் வாங்கி வரச் சொன்னார். அந்த எண்ணம் சரி என்றே என் உள்மனமும் சொன்னது. நடந்தது என்னமோ வேறு. ஒன்று கூட கவுண்டரின் கணக்குப்படி வரவில்லை. எல்லாமே பிசகிவிட்டது. துண்டை உதறிக்கொண்டு எழுந்துவிட்டார் கவுண்டர். மௌனமாகப் பின் தொடர்ந்தோம் நாங்கள்.

ஊருக்குத் திரும்பியதும் ஜனங்களிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் அதைக்கேட்டு மலைக்கப் போகிறார்கள் என்பது என் எண்ணமாக இருந்தது. மாறாக அவர்கள் ஆற்றாமையில் சலித்துக்கொண்டார்கள்.

‘‘குதிரை மேலே கட்டித் தோக்கறதுக்குப் பதிலா ஏதாவது பள்ளிக்கூடம் ஆஸ்பத்திரின்னு கட்டனாலாவது ஏழை பாழைங்க பொழைச்சிக்கும். போற வழிக்கும் புண்ணியமா போவும். கழுதைக்கு ஆவற மாதிரி வயசானாலும் கவுண்டனுக்கு புத்திபோவற போக்க பாத்தியா?’’

‘‘புண்ணியமாவது கிண்ணியமாவது. நீ வேற ஆத்தமாட்டாமப் பொலம்பாத. பொண்டாட்டி சாவுக்கே எட்டிப்போய்ப் பார்க்காத ஆளு அவரு. இப்ப ஏழைங்களப் பத்திதான் அக்கறயா நெனைக்கப் போறாராக்கும்’’

‘‘நம்ம மண்ணு, நம்ம காடு, நம்ம ஜனங்கன்னு நெஞ்சில ஒரு ஒட்டுதல் இருக்கறவனுக்குத்தான் மனசுல அக்கற இருக்கும். பொம்பளயா பொறந்தவ எல்லாம் பொண்டாட்டின்னு அலையற ஆளுக்கு அக்கறயாவது மண்ணாவது?’’

‘‘என்னமோ இவர நம்பித்தான் உலகத்துல பொறந்த மாதிரி பேசறியே. ஆண்டவன் கொடுத்த கையும் காலும் இருக்கும் போது நமக்கென்ன கவல...’’

‘‘ஏழுமல படையாச்சி பரம்பர இவனோட முடியணும்னு தலையெழுத்து இருந்தா யாரால என்ன செய்ய முடியும். எல்லாம் விதியோட வெளையாட்டு.’’

வாரம் ஒருநாள் நாங்கள் பெங்களூர் சென்றோம். என் பயண உற்சாகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவர் ஜெயித்த பந்தயங்கள். குறைவு. தோற்ற பந்தயங்கள்தான் அதிகம். ஆனால் வெற்றியின் கனவு பலமான காந்த சக்தியைப் போல இழுத்தது. ஒரு பெரிய தொகையை வென்றதும் நிறுத்திவிட முடிவு செய்திருப்பதாய்த்தான் அவர் சொல்வார். சிறுகச்சிறுக அவர் இழக்கும் தொகைகள் அவர் கனவு காணும் பெருந்தொகையைவிட அதிகம். அதைச் சொல்ல நான் பயந்தேன். என்ன இருந்தாலும் நான் வேலைக்காரன். ‘‘சீ போடா நாயே. ஒன்ன எல்லாம் வய்க்கற எடத்துல வய்க்கணும்’’ என்று சொல்லி இறக்கிவிட்டால் சோற்றுக்கும் துணிக்கும் என் அப்பாவிடம் ஈனப்பேச்சு வாங்க வேண்டிவரும்.

காணிகள் கை மாறி முடிந்ததும் சடராமன் கோயில் தெருவில் இருந்த வீட்டை விலை கட்டினார் கவுண்டர். சொன்ன விலைக்குக் கம்பெனிக்காரன் எடுத்துக் கொண்டான். மறுதினமே பெங்களூர் புறப்பாடு. விட்டதையெல்லாம் எடுத்துவிட்டுத்தான் மறுவேலை என்று கர்ஜித்தார். பகலில் பந்தயம். இரவில் குடி. தோல்விகள் அவருக்கு வெறியையூட்டியன. ஏதேதோ உளறினார். எல்லாம் குதிரைகளின் பெயர்கள்.

பத்துநாள் ஆட்டத்தில் கொண்டு வந்திருந்த மூணரை லட்ச ரூபாய் கரைந்துவிட்டது. போதை தெளியாமல் கிடந்த கவுண்டரைக் கைத்தாங்கலாய் நானும் டிரைவரும் அழைத்து வந்து கீழே வண்டியில் உட்கார வைத்தோம். அறைக்கணக்கை முடித்துக்கொண்டு திரும்பிவிட்டோம். தன் இழப்பை முதன்முதலாக உணர்ந்தவர்போல கவுண்டர் மனம் உடைந்தார். இரண்டு நாள் மதுவைக்கூடத் தொடவில்லை.

மூன்றாம் நாள் காலையில் செங்கேணி அம்மன் மரத்தின் முன்னால் நின்று தொழுதார் கவுண்டர். தங்கச் சங்கிலி புரளும் மார்பு மண்ணில் படிய விழுந்து வணங்கினார் விழுந்தவர் வெகு நேரம் எழுந்திருக்கவில்லை மெல்ல எழுந்து துண்டால் மார்பைத் துடைத்தார். அவர் கண்கள் தளும்பி இருந்தன. சுற்றி இருந்த நெல்லி மரங்களையெல்லாம் புதுசாய்ப் பார்ப்பதுபோலப் பார்த்தார். அந்த வாரம் அம்மனுக்குப் பூசை. புற்றுக்கு மஞ்சள் பூசிக் குங்குமம் இடப்பட்டது. ஊர்க்காரர்களுக்கு விருந்துச் சாப்படும் போடப்பட்டது. கவுண்டர் போக்கு விசித்திரமாக இருந்தது. அவர் மனதில் என்ன ஓடுகிறது என்பதை யாராலும் படித்துணர முடியவில்லை.

அன்று இரவு கம்பெனிக்காரன் வந்தான். நெல்லித்தோப்பு அறைக்குள் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வெளியே அனுப்பப்பட்டுவிட்டோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பின் கவுண்டரின் குரல் உயர்ந்து கேட்டது. ‘‘வெறும் மண்ணு இல்ல இது. எங்க வம்சம். எங்க பரம்பர. எங்க உயிரு. பேக்டரிக்கு எடம் வேணும்னா போய் கவுர்மெண்ட்கிட்ட கேளு, எதுக்கு எங்கிட்ட வர?’’ எனக்கு எதுவும் புரியவில்லை. குழம்பினேன். சிறிது நேரத்துக்குள் கம்பெனிக்காரன் வெளியேறினான். அவன் முகத்தில் அவமானம் அப்பி இருந்தது.

அடுத்த வாரம் விடியும் வேளையில் நான்கு கார்கள் வந்து வீட்டு முன் நின்றன. கவுண்டரின் காரைக் கழுவிக் கொண்டிருந்தேன், நான். கார்களில் இருந்து இறங்கியவர்கள் பார்வை தோப்பையே சுற்றிச்சுற்றி மேய்ந்தது. அவர்கள் உடனேயே கவுண்டரைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நான் தைரியமாக ‘‘அவர் தூங்குகிறார்’’ என்றேன். அவர்கள் உடனேயே தாம் காத்திருப்பதாய்ச் சொல்லி வாசலில் உட்கார்ந்துவிட்டார்கள். அவர்கள் மிக வேகமாகத் தமக்குள் பேசிக்கொண்ட ஆங்கிலத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

எட்டு மணிக்குத்தான் எழுந்துவந்தார் கவுண்டர். திரண்டிருந்தவர்களைப் பார்த்ததும் அவருக்குள் ஒரு கூச்சம். கையமர்த்திக் காப்பிக்குச் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்று திரும்பினார். பேச்சு தொடங்கியது. முதல்முறை அவமானப்பட்டுப் போனவன் எடுத்துக் கொடுக்க இன்னொருவன் பேச்சை ஆரம்பித்தான். பெரிய பெரிய வரைபடங்களை எடுத்து கவுண்டர் முன் வைத்து விளக்கத் தொடங்கினார்கள். கையோடு கொண்டு வந்த கம்ப்யூட்டரை இயக்கி ஏதேதோ படங்களைப் போட்டுக் காட்டினார்கள். கவுண்டர் எதற்கும் மசியவில்லை. சிரிப்பு மாறாமல் எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டார். ‘‘நீங்கள் எதிர்பார்ப்பதைவிட இரண்டு மடங்கு தருகிறோம்’’ என்றான் ஒருவன். கவுண்டர் அவனை வெறுப்பதைப்போல முறைத்தார். உடனே கோட்டு அணிந்திருந்த மற்றவன் கவுண்டரைச் சமாதானப்படுத்தினான். சிநேகிதனைப் போல தோளில் கைபோட்டுத் தனியே அழைத்துச் சென்று கிசுகிசுத்தான். முகம் மெல்லமெல்ல மலர்ந்தது. உடனே அவர் பரபரப்பானார். அவன் சொன்னதுக்கெல்லாம் தலையசைத்தார். அரைமணி நேரத்தில் கவுண்டரையும் ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரி பக்கம் கார்கள் பறந்தன.

குழப்பத்தோடு நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். கவுண்டர் மாற்றத்திற்குத் திடீர் காரணம் புரியவில்லை. சுற்றி இருப்பவர்கள் ஏதேதோ சொன்னார்கள். ‘‘எவளையாவது, ஏற்பாடு பண்ணி இருப்பானுங்க. அதான் கவுண்டர் படிஞ்சிட்டாரு.’’ என் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. அவர்கள் வார்த்தைகளைப் பொய்யாக்குவதுபோல கவுண்டர் வந்து நிற்க வேண்டும் என உள்ளூர விரும்பினேன். அவர் வரக்கூடும் என்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தேன். வரவில்லை. ஒரு வாரம் அவர் இருப்புபற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.

அடுத்த நாள் நண்பகல் வேளையில் கவுண்டர் வந்து இறங்கினார். புதுக்கோலம். பேண்ட், சட்டை, டை ஏழெட்டு பெட்டிகள். அடுக்குகள் எல்லாவற்றையும் உள்ளே எடுத்துக் கொண்டு போய் வைக்குமாறு சொன்னார். நான் ஐயாஎனத் தயங்கி இழுத்ததைக் கண்டு அவருக்கு வெறியே வந்துவிட்டது. அசிங்கமான சொல்லால் திட்டினார். நான் தலைகுனிந்து கொண்டேன். டிரைவர் எனக்கு ஒத்தாசையாக வந்தான். அவரை இறக்கிய வண்டி புறப்பட்டுவிட்டது.

இரண்டு நாள்களுக்குப்பின் பெங்களூர் புறப்பட வேண்டியதாக இருந்தது. எதையும் எடுத்துச் சொல்லும் நிலையில் இல்லை நான். சொன்னதைச் செய்யும் கிளிப் பிள்ளையானேன். நேராகக் குதிரைப் பந்தய மைதானம் சென்றோம். நான் எந்த விஷயத்திலும் உற்சாகம் காட்டவில்லை. வாங்குஎன்றால் வாங்கினேன். கட்டு என்றால் கட்டினேன். என் ஸ்தானம் எனக்கு உணர்த்தப்பட்ட பிறகு நான் அத்து மீறக்கூடாது என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். வழக்கம் போல கவுண்டர் மோசமாகத் தோற்றார். தோல்வியின் பாரதத்தை ஈடுகட்ட இரவு முழுக்கக் குடித்தார். நானும் டிரைவரும் அவரோடு அன்று பங்கேற்கவில்லை. வெளியே போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பினோம்.

எட்டாவது நாள் கவுண்டர் ஊருக்குத் திரும்பலாம் என்றார். பெட்டி முழுக்கக் கரைந்துவிட்டது. நான் அப்போதுதான் அவர் கழுத்தில் செயின் இல்லாததைக் கவனித்தேன். அறை வாடகையை அடைக்க அதுதான் உதவி இருக்கிறது என்று பின்னால் தெரிந்தது. வழியில் எதுவும் பேசவில்லை. தொடர்ந்து புகைத்துக் கொண்டே வந்தார். தோற்றுத் தொலைத்த பிறகுதான் அடக்கம் வரும்போலும் என்று தோன்றியது. இரவில் தொடங்கிய பயணம். பளபளவென்று விடிகிற வேளையில் ஊருக்குத் திரும்பினோம்.

வழக்கமாய் வளைவில் திரும்பியதுமே தென்படும் நெல்லித்தோப்பு கண்ணுக்குத் தெரியவில்லை. ஒருகணம் நம் ஊரா இது என்று சந்தேகம் வந்தது. மெல்லிய வலி இதயத்தில் தைத்தது. கண் எட்டிய தூரம் வரை காடாகத் தெரியும் நெல்லித்தோப்பு தரைமட்டமாகிக் கிடந்தது. தோப்பில் முக்கால் பகுதி மரங்கள் வீழ்த்தப்பட்டு அப்புறப்படுத்திப்பட்டிருந்தன. எங்கள் முன்னாலேயே மரங்கள் அறுக்கப்பட்டு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ராட்சச ஜெனரேட்டர் உறுமிக் கொண்டிருந்தது. தோப்பு தோப்பு என்று மனம் கூவியது. செங்கேணி அம்மன் மரம் ஞாபகம் வந்து கண்களால் துழாவினேன். மஞ்சள் மேடு தரைமட்டமாகி இருந்தது.

கார் நின்றது. கவுண்டர் கதவைத் திறந்துகொண்டு இறங்கினார். அவர் கண்களிலும் அதிர்ச்சி படர்ந்திருந்தது. அவரைக் கண்டதும் ஜெனரேட்டர் அருகில் இருந்தவன் ஓடிவந்தான். குனிந்து கவுண்டரை வணங்கிவிட்டுச் சிரித்தான். கவுண்டர் தோப்புஎன்று குழறினார். ‘‘நம்ம தோப்புதாங்க. எல்லாத்துக்கும் ஊசிபோட்டு காய வச்சிட்டம். இருபத்து நாலு மணி நேரத்துல எல்லாம் காஞ்சி கருவாடாய்டுச்சி. அறுத்து எடுத்திட்டிருக்கோம். இன்னும் கொஞ்சம் தான். இன்னிக்குள்ள முடிச்சிரலாம். வர ஞாயித்துக்கெழம அடிக்கல் நாட்டுவிழா. சி.எம். வராரு. நீங்கதான் தலைவரா இருக்கணும்னு கேட்டுக்கச் சொன்னங்க கம்பெனிக்காரங்க. நோட்டீஸ்கூட அடிச்சாச்சிங்க’’ என்று பையில் இருந்த அழைப்பிதழை நீட்டிவிட்டு வேலை இருக்குங்க அப்புறம் பார்க்கலாம்’’ என்று சிரித்துக்கொண்டே ஓடிப்போய் மிஷினுக்குப் பக்கத்தில் நின்று கொண்டான். மரம் அறுபடும் கரகரப்புச் சத்தம் தொடர்ந்து கேட்டபடியே இருந்தது.

தினமணி பொங்கல் மலர் (1997)