வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப்பற்றியும் சில அரிய தருணங்களைப்பற்றியும் சிற்சில சித்திரங்களை அனுபவக்கதைகளாக எழுதினேன். கதைக்கட்டுரைகள் அல்லது கட்டுரைக்கதைகள் என்று இவற்றைச் சொல்லலாம். ஏற்கனவே இந்தக் கட்டமைப்பில் தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், ஒட்டகம் கேட்ட இசை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுதியைக் கருதலாம்.
இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு
கட்டுரையையும் எழுதிமுடித்த கையோடு என் அன்புக்குரிய எழுத்தாளரும் நண்பருமான வண்ணதாசனுக்கு
அனுப்பிவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவரும் சிரத்தையாகப் படித்துவிட்டு தம் எண்ணங்களை மின்னஞ்சலில் எழுதி அனுப்புவார்.
முதல்நாள் இரவில் அனுப்பும் கட்டுரைகளுக்கு மறுநாள் காலையிலேயே பதில்
வந்துவிடும். அந்த இடைவெளியில் என் மனைவி அமுதாவும் நண்பர்கள்
பழனி, கே.பி.,நாகராஜன்,
ஜெயஸ்ரீ ஆகியோரும் கட்டுரைகளைப் படித்துவிட்டு உரையாடுவார்கள். அந்த உரையாடல் ஏதோ ஒரு கணத்தில் பழைய
கால அனுபவங்களை அசைபோடவைக்கும் தருணங்களாக மாறுவதை சற்றே தாமதமாகத்தான் நான் உணர்ந்துகொண்டேன்.
நீண்ட காலமாக மூடியே வைத்திருந்த
பெட்டியைத் திறந்து பழைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தொடர்பான நிகழ்ச்சிகளில் மனம்
மூழ்குவதுபோல
இக்கட்டுரைகள் ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்த்துகின்றன.
ஒருபோதும் சுமையாக இல்லாத நினைவேக்கம் இது. வருத்தமும்
துயரமும் இல்லாதது. சில அரிய மனிதர்களின் சித்திரங்கள் மட்டுமே
இவற்றில் உள்ளன. ஒருமுறை ஜெய்ப்பூரைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தபோது,
ஒரு வழிகாட்டி ஓர் அரண்மனையைச் சுட்டிக் காட்டி அதில் முன்னூறுக்கும்
மேற்பட்ட அறைகள் இருப்பதாகச் சொன்னார்.
ஓங்கிய அதன் பிரும்மாண்டமான தோற்றத்தைப் பார்த்தபோது அவர் சொற்களின்
மீது நம்பிக்கை பிறந்தது. மனிதமனமும் அப்படிப்பட்ட ஓர் அரண்மனைதான்.
ஏராளமான அறைகளைக் கொண்ட விசித்திரமான அரண்மனை. ஒவ்வொரு அறையிலும் யாரோ ஒருவர் குடியிருக்கிறார். இக்கட்டுரைகள்
தொகுதியாக வெளிவரும் இத்தருணத்தில் நண்பர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
இக்கட்டுரைகளை எழுதிய தருணங்களில்
என்னுடைய நண்பர் ஸ்ரீவத்சனை அடிக்கடி நினைத்துக்கொண்டேன். அவரும் ஓர் அரிய மனிதரே. அவரைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதமுடியும். அவரோடு
சில நாட்கள் மாலைநடை சென்றிருக்கிறேன். என்னைப் போலவே தோளில்
பையைத் தொங்கவிட்டிருப்பார். அந்தப் பை நிறைய பிஸ்கட் பாக்கெட்டுகளும்
சின்னச்சின்ன ரஸ்க் பாக்கட்டுகளும் டைரிமில்க் சாக்லெட்டுகளும் இருக்கும். நடக்கும்போதே அவர் கண்கள் எல்லாப் பக்கங்களிலும் சுழன்றபடி இருக்கும்.
பாதையோரங்களிலும் சிக்னல் கம்பங்களுக்கு அருகிலும் பேருந்து நிறுத்தங்களுக்கு
அருகிலும் நின்றபடி கடந்துசெல்லும் முகங்களை நோக்கி யாசிக்கும் சிறுவர்களையும் சிறுமிகளையும்
முதியோர்களையும் பார்த்துவிட்டால் உடனடியாக அவர் பேச்சு நின்றுவிடும். ‘கொஞ்சம் இருங்க’ என்றபடி விலகி ஓடி அவர்களுக்கு அருகில்
சென்று நிற்பார். பையிலிருப்பதை எடுத்துக் கொடுத்துவிட்டு ஒன்றிரண்டு
கணங்கள் நின்று அவர்களோடு உரையாடிய பிறகு திரும்பி வந்து, நிறுத்திவிட்டுச்
சென்ற பேச்சைத் தொடர்வார். கடந்த இருபதாண்டுகளில் அந்தப் போக்கிலிருந்து
ஒருசிறிதும் அவர் விலகவில்லை. அரிய மனிதரான நண்பர் ஸ்ரீவத்சனுக்கு
இக்கட்டுரைத் தொகுதியை அன்புடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இக்கட்டுரைகளை சிறுவாணி வாசகர்
மையத்துக்காகவே எழுதினேன். இத்தொகுப்பின் சில கட்டுரைகள் உயிரெழுத்து, புரவி, பேசும் புதிய சக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. அவ்விதழாசிரியர்களுக்கு என் நன்றி. சிறுவாணி வாசகர் மையத்தின் நண்பர்கள் பிரகாஷ், சுபாஷிணி
இருவருக்கும் என் அன்பும் நன்றியும். நான்காவது ஆண்டினை நிறைவு செய்யவிருக்கும் வாசகர் மையத்தை மேலும் மேலும் வளர்கவென வாழ்த்துகிறேன். என் மனைவி அமுதாவின் துணையே என் எல்லா எழுத்து முயற்சிகளுக்கும்
அடித்தளம். அவருக்கு என் மனம்கனிந்த
அன்பு.