தமிழக வரலாறு பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி நாடறிந்த அறிஞர். அவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் படிப்பதைவிட எப்போதும் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதைக் கவனித்தார். அதனால் அவர் அந்த மாணவனைப் பார்த்து “நீ போய் ஓவியக்கல்லூரியில் சேருடா, அதுதான் உனக்கு நல்லது” என்று சொன்னார். அப்போது அந்த மாணவனுக்கு ஓவியக்கல்லூரி இருக்கும் திசை கூட தெரியாது.
அப்போதுதான் அவனுடைய அக்காவுக்கு திருமணம் முடிந்திருந்தது. அக்காவின் கணவரிடம் ஆசிரியர் சொன்னதைத் தெரியப்படுத்தி தன் ஆசையையும் தெரிவித்தான் அம்மாணவன். “அதற்கு முன்னால் நீ நல்லமுறையில் பயிற்சியெடுத்து வரைந்து கற்றுக்கொள்வது முக்கியம்” என்று அவனை அழைத்துச் சென்று நண்பரொருவருடைய போட்டோ ஸ்டுடியோவில் சேர்த்துவிட்டார் அவர். படத்தின் ஷேடுக்கு தக்கவாறு டச் செய்யும் வேலையை அவனுக்குக் கொடுத்தார் அந்த ஸ்டுடியோகாரர். அவன் செய்து கொடுத்த வேலையில் அவருக்கு அவ்வளவாக திருப்தி ஏற்படவில்லை. அங்கிருந்து இன்னொரு ஸ்டுடியோவுக்குப் போனான். அங்கேயும் அதே டச் செய்யும் வேலை. மீண்டும் வேறொரு ஸ்டுடியோவுக்குச் சென்று சேர்ந்தான் அம்மாணவன்.
தற்செயலாக அவனைச் சந்தித்த பாலன் என்னும் மற்றொரு மாணவன் அவன் செல்லும் வழி முறையான வழியல்ல என்றும் ஒரு நல்ல ஓவியரிடம் சேர்ந்து பயிற்சி பெறுவதே சிறந்த வழி என்று சொல்லி புரியவைத்து கோவிந்தராஜு நாயக்கர் என்னும் ஓவியரிடம் அழைத்துச் சென்று சேர்த்துவிட்டான். அவரிடம் அந்த மாணவன் ஓராண்டு காலம் ஓவியம் பயின்றான். பிறகு ஓவியக்கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்தான். அவன் திறமையை பத்து நாட்கள் தொடர்ந்து சோதித்தார்கள். இறுதியில் வெற்றி பெற்று ஓவியக்கல்லூரியில் இணைந்தான் அந்த மாணவன். அப்போது அந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் ராய் செளத்ரி. அந்த மாணவன் பிற்காலத்தில் நவீன கலைச்சூழலை வடிவமைத்த முக்கியமான ஆளுமையான எஸ்.தனபால்.
நான்கு ஆண்டு கால பயிற்சியை முடித்ததும் அதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார் தனபால். ஓவியம், சிற்பம், நடனம் என எல்லாத் துறைகளிலும் ஆற்றல் பெற்றவராக விளங்கினார் அவர். அவர் வடித்த
சிற்பங்கள் கலைச்சூழலில் நல்ல கவனம் பெற்றன. தில்லியிலுள்ள தேசியக்
கலைக் காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற
நாடுகளில் நடைபெற்ற கலைக்கண்காட்சிகளிலும் அவர் கலந்துகொண்டார். சோழமண்டலம் கலைக்கிராமம், தென்னிந்திய ஓவியர் சங்கம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் அவருக்கும் பங்குண்டு. 1977 வரை வேலை செய்த தனபால், ஓவியக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றி
ஓய்வு பெற்றார். இடையில் சில
ஆண்டுகள் கும்பகோணத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ஓவியக்கல்லூரிக்கு முதல்வராகப் பணியாற்றிவிட்டு சென்னைக்குத் திரும்பினார்.
1993இல் ஆனந்தவிகடன் இதழில் அவர் எழுதிய சுயசரிதை தொடராக வெளிவந்தது. அப்போதே இத்தொடர் நூல்வடிவம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் ஏதோ காரணத்தால் அம்முயற்சி ஈடேறவில்லை. 2019இல் தனபாலின் நூற்றாண்டையொட்டி கிருஷ்ணபிரபுவின் முயற்சியால் பழைய பக்கங்கள் கண்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டு வெளியானது. நவீன ஓவியர்கள், சிற்பிகள் குறித்த விரிவான பதிவுகளோ ஆவணங்களோ தமிழில் பெரிய அளவில் வெளியானதில்லை. தனபாலின் சுயசரிதையே இப்பிரிவில் முதல்நூல் என்று நம்புகிறேன்.
தனபாலின் அனுபவக்குறிப்புகள் மனத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன. ஒருநாள் வகுப்பறையில் கரும்பலகையில் தொங்கவிடப்பட்ட ஓவியத்தைப் பார்த்து மாணவர்கள் வரைந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக வந்த முதல்வர் ராய் செளத்ரி அதைப் பார்த்து மாடல்களை வரவழைத்து ஓவியம் தீட்ட பயிற்சி கொடுக்குமாறு ஆசிரியரிடம் சொல்கிறார். கல்லூரியில் அதற்கெல்லாம் நிதி ஆதாரம் இல்லை என்று ஆசிரியர் தெரிவிக்கிறார். “அதனாலென்ன, மாணவர்களில் ஒருசில
மாடல்களாக நிற்க பிறர் வரையலாமே” என்று தூண்டிவிடுகிறார்
முதல்வர். தொடர்ந்து “நாமே
மாடல்களாக நிற்போம், மாணவர்கள் வரையட்டும்” என்று சொன்னதோடு மட்டுமன்றி தானே முதலில் மாடலாக நிற்கத் தொடங்குகிறார். அசைவையும் நடமாட்டத்தையும் வரைவதுதான் முக்கியமான பயிற்சி என்பதை தனபால் அக்கணத்தில் புரிந்துகொள்கிறார். அன்றுமுதல் நேரம் கிட்டும்போதெல்லாம் மூர் மார்க்கெட்டுக்கும் விலங்குக்காட்சிச்சாலைக்கும் சென்று கண்ணில் தென்படும் காட்சிகளை வரையத் தொடங்குகிறார்.
பெங்களூரில் ஓவியம் தீட்டுவதற்குப் பொருத்தமாக நல்ல நல்ல காட்சிகளைப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நான்கு நண்பர்களாக சேர்ந்து சென்னையிலிருந்து பெங்களூர் வரைக்கும் மிதிவண்டியிலேயே சென்ற அனுபவத்தை தனபால் அழகான சொல்லோவியமாகவே தீட்டி வைத்திருக்கிறார். போய்ச்சேர நான்கு நாட்கள். ஊரைச் சுற்றி
வேடிக்கை பார்க்க நான்கு நாட்கள். திரும்பி வர
நான்கு நாட்கள் என தொடர்ச்சியாக அனைவரும் மிதிவண்டியிலேயே சுற்றியிருக்கிறார்கள்.
மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உற்சவத்தைப்பற்றிய ஒரு குறிப்பில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் சித்திரகூடத்தைப்பற்றி வியந்து எழுதியிருக்கிறார் தனபால். பெயருக்கேற்ற வகையில்
உண்மையிலேயே அது சித்திரங்களின் கூடம். உள்ளே ஒரிஜினல்
தஞ்சாவூர் பெயிண்டிங்கில் சிவபுராணக்காட்சிகள் ஓவியங்களாக தீட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தும் நூறு, நூற்றைம்பது ஆண்டுகள்
பழமையானவை. பக்தி அடிப்படையில்
அமைந்த சைவ வழி ஓவியங்களை ஆதரித்து வாங்கி வைத்திருக்கிறார்கள். இப்போது அவை உள்ளனவா என்று தெரியவில்லை. ஆனால் ஒருகாலத்தில் இருந்தன என்பதற்கு தனபாலின் சுயசரிதை சாட்சியாக உள்ளது.
1945இல் தனபாலுடைய திருமணம் நடைபெற்றது. தந்தை இல்லாத நிலையில் தனபாலுக்கு ராய் செளத்ரியே திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தார். அது அரிசிக்கட்டுப்பாடுச் சட்டம் நடைமுறையில் இருந்த காலம். பொது இடத்தில் பத்து
பேருடைய தேவைக்கு மேல் சமைக்கக்கூடாது என்பது சட்டம். அரிசியை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு எடுத்துச்
செல்ல முடியாது. கண்காணிக்கும் அதிகாரிகள்
ஊரை வலவந்தபடியே இருந்தார்கள். அப்படி ஒரு காலம். திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு
எப்படி விருந்து வைப்பது என்று புரியாமல் குழம்பிய தனபாலுக்கு சிதம்பரம் முதலியார் என்னும் நண்பர் துணையாக நின்றார். தன் வீட்டிலிருந்து
அரிசி மூட்டைகளை எடுத்துவந்து கொடுத்து சமைக்கச் செய்தார். சோதனைக்கு வந்த
அதிகாரிகளை அவரே எதிர்கொண்டு தக்க பதில்களைச் சொல்லி விருந்து சாப்பிடவைத்து அனுப்பினார்.
பொதுவுடைமைக் கட்சித் தலைவரான ஜீவாவின் தலைமறைவு வாழ்க்கையில் அவர் தங்கியிருந்த இடங்களில் தனபாலின் வீடும் ஒன்று என்பதை இச்சுயசரிதை வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. அவர் வீட்டில்
இருந்த சமயத்தில் மோகன் குமாரமங்கலம் இரவு நேரத்தில் அவரைத் தேடி வந்து சந்தித்துவிட்டுச் சென்றதையும் நடிகர் எம்.ஆர்.ராதாவை அழைத்து வரச் செய்து சந்தித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரதிதாசன் சிற்பத்தை உருவாக்கியவர் தனபால். அவரைப்பற்றி தனபால்
குறிப்பிடும் ஒரு செய்தி சுவாரசியமானது. அவர் சென்னைக்கு வரும்போது அவர் எழும்பூர் ரயில்நிலையத்துக்கு எதிரே பிருந்தாவன் ஓட்டல் என்னும் விடுதியில் தங்குவது வழக்கம். அந்த விடுதி
ஒரு பிராமணருக்குச் சொந்தமானது. இருவரும் நல்ல நண்பர்கள். ஒருமுறை அவர்
அந்த விடுதியில் தங்கியிருந்தபோது அங்கிருந்த பணியாளர் வழியாக விடுதி முதலாளியின் மகனுக்கு முதலாவது பிறந்தநாள் விழா என்னும் செய்தியையும் அக்காரணத்தால் முதலாளி விடுதிக்கு வரவில்லை என்பதையும்
அறிந்துகொண்டார். உடனே பழங்களும் இனிப்பும் வாங்கிவரச் செய்து ஒரு கூடையில் போட்டு சட்டென ஒரு தாளை எடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை ஒன்றை தன் கைப்பட எழுதி அதையும் கூடைக்குள் வைத்து முதலாளியிடம் சேர்த்துவிட்டு வருமாறு அந்தப் பணியாளையே அனுப்பிவைத்தார் பாரதிதாசன். எப்போதோ ஒருசில முறை மட்டுமே பார்க்கும் வாய்ப்புள்ளவர்கள் என்றபோதும் அவர்களை மதித்து அன்பு பாராட்டிய பாரதிதாசனின் குணத்தை நேரில் கண்ட சாட்சியாக விளங்குகிறார் தனபால்.
பெரியார், ராதாகிருஷ்ணன், காமராஜர், திரு.வி.க, காந்தி, நேரு போன்ற மாபெரும் ஆளுமைகளின் சிற்பங்களையும் தனபாலே உருவாக்கினார். அந்த அனுபவங்களையும் தனபால் சுவைபட எழுதியிருக்கிறார். சிற்பத்துக்காக திரு.வி.க.வை தனபால் அணுகும் நேரத்தில் அவருடைய கண்பார்வை மங்கிவிடுகிறது. ஆயினும் தனபாலின் வேண்டுகோளுக்கிணங்கி தன் நவசக்தி அலுவலகத்திலேயே ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் அமர்ந்திருக்கிறார். சிற்பம் இறுதிவடிவத்தை அடைந்ததும், அதைப் பார்த்தோர் அனைவரும் பாராட்டிப் பேசும்போது, அவரை அருகில் அழைத்த திரு.வி.க. “தனபால், சிலை
நன்றாக உள்ளதாக அனைவரும் சொல்லும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் எனக்குத்தான்
அதைப் பார்க்க கொடுத்துவைக்கவில்லை” என்று நெகிழ்ச்சியோடு சொன்னதாக தனபால் குறிப்பிடுகிறார். அவர் பார்க்காத அவர் சிலையை இன்றளவும் உலகம் பார்த்தபடி இருக்கிறது.
காமராஜர் சிலை உருவாக்கத்தின்போது நடைபெற்ற நிகழ்ச்சியை பட்டும் படாமல் மேலோட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் கட்சி அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களின் இரட்டைக்குணத்தால் தனபால் அடைந்த கசப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது. காமராஜர் தன்
குருவாக நினைக்கும் நித்யானந்த அடிகள் வழியாக செய்தியைத் தெரிவித்து அவரை சிலையாக வடிக்க அனுமதியைப் பெறுகிறார் தனபால். காமராஜர் முழு
அளவில் தனபாலுக்கு ஒத்துழைப்பை அளிக்கிறார். தனபால் சிற்பவேலையைப் பார்க்கும் அதே சமயத்தில் அவரை ஓவியமாக தீட்டும் வேலையை நிறைவேற்றுகிறார் பணிக்கர். தினமும் ஒன்றிரண்டு
மணி நேரமென மூன்று வார கால தொடர் உழைப்பின் காரணமாக சிற்பவேலையும் ஓவிய வேலையும் நிறைவடைகின்றன.
அப்போது சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்த பி.எஸ்.செட்டியார் ஒருநாள் கவுன்சிலர் மீட்டிங்கில் மாநகராட்சி கட்டடத்தில் காமராஜர்
சிலையை அமைக்க விரும்புவதாக தெரிவிக்கிறார். அவர் எக்கட்சியின் சார்பாகவும் நிற்காமல் சுயேச்சையாக நின்று தேர்தலில் வென்றவர். அதைக் கேட்டு
மற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் குற்ற உணர்வு கொள்கிறார்கள். அதனால் செட்டியாரிடம் அனைவரும் சேர்ந்து நிறுவுவதுபோல அறிவித்தால் எதிர்காலத்தில் தர்மசங்கடம் நேராமல் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர். ‘தனபால் சிலையைத் தர சம்மதித்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை’ என்று சொல்லிவிடுகிறார்
செட்டியார். தனபாலும் அவர்கள் கோரிக்கைக்கு இசைவளித்து சிலையை பணமே வாங்கிக்கொள்ளாமல் கொடுத்துவிடுகிறார். அது மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்படுகிறது.
அவர்கள் சிலையை எடுத்துச் செல்லும் தருணத்தில் எதிர்காலத்தில்
முழு உருவச்சிலையை செய்யும் திட்டமொன்றும் இருக்கிறது என்றும் அப்போது அதை உருவாக்கும் வாய்ப்பை அவருக்கே கொடுப்பதாகவும் கட்சி கவுன்சிலர்கள் அவருக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே முழு உருவச்சிலை திட்டம் உருவானபோது ஒருவரும் அவரை அணுகவில்லை. மாறாக கொட்டேஷன் கேட்டு பத்து பேருக்கு வழக்கமாக அனுப்பும் கடிதத்தின் நகல் மட்டுமே வருகிறது. கலையை மதிக்கத்
தெரியாதவர்களோடு இணைந்து பணியாற்ற அவருக்கும் விருப்பமில்லாததால், அந்த நிகழ்ச்சியை அந்தப் புள்ளியிலேயே மறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார் தனபால்.
காந்தியை சிலையாக வடித்ததைப்பற்றி தனபால் எழுதியிருக்கும் குறிப்புகள் ஒரு படைப்புக்கணம் எப்படி ஒரு படைப்பாளியில் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. காந்தியை சிலையாக வடிக்க தனபால் நினைக்கும் சமயத்தில் காந்தி மறைந்துவிட்டார். நேருறப் பார்க்காத ஒரு மனிதரை சிலையாக எப்படி வடிப்பது என்று குழம்புகிறார் தனபால். ஏராளமான காந்தியின்
புகைப்படங்களை கண்முன்னால் வைத்துக்கொண்டு தினமும் பல மணி நேரம் அவற்றையே மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் தனபால். நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதும் கூட படத்தை
கையில் வைத்துக்கொண்டு சாலையையும் படத்தையும் மாறிமாறிப் பார்த்தபடி நடக்கிறார். பகல், இரவு எல்லா
நேரங்களிலும் அந்த நினைவிலேயே அவர் மூழ்கியிருக்கிறார்.
காந்தியை ஒரு வடிவமாக மனத்தில் நிலைநிறுத்திக்கொள்ள இந்தப் பயிற்சி உதவியதாக தனபால் குறிப்பிடுகிறார். ஏறத்தாழ மூன்று மாத காலம் இந்தப் பயிற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். காந்தியின் ஏதேனும் ஒரு வெளிப்பாடு தன் மனத்தில் ஊடுருவிச் சென்று தன்னைத் தூண்ட வேண்டும் எனபதற்காக அவர் காத்திருக்கிறார். ஒருநாள் அவர் எதிர்பார்த்த கணம் நிகழ்கிறது. காந்தி பிரார்த்தனையில் மூழ்கியிருக்கும் கோலம் அவர் மனத்தின் கலைக்கதவைத் திறந்துவிடுகிறது. அடுத்த கணமே சிலை வேலையை அவர் தொடங்கிவிடுகிறார். இடைவிடாத ஒரு மாத உழைப்புக்குப் பிறகு உருவான அந்தக் காந்தி சிலை அனைவருடைய பாராட்டுகளையும் பெறுகிறது. காந்தியடிகளின் சிலை வடிக்கப்பட்ட
செய்தியை அறிந்து காமராஜர் அவருடைய வீட்டுக்கே வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார். காந்தியடிகளின் மகன் தேவதாஸ் காந்தியும் ராஜாஜியும் நேரில் வந்து சிலையைப் பார்த்துவிட்டு கண்கள் கலங்கியதாக குறிப்பிடுகிறார் தனபால். காந்தியின் உருவத்தை
நீர்வண்ண ஓவியமாகவும் தீட்டி முடிக்கிறார் தனபால். அந்த ஓவியத்தை
ராஜ்பவனில் வைப்பதற்காக ராஜாஜி வாங்கிச் செல்கிறார்.
தனபாலிடம் பயின்ற பல மாணவர்களை பிற்காலத்தில் பெரிய ஓவியர்களாக வாழ்ந்து புகழ்பெற்றனர். எல்.முனுசாமி, சந்தானராஜ், கே.ராமானுஜம், ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, ஆர்.பி.பாஸ்கரன், மருது, விஸ்வம், வீர.சந்தானம் போன்றோர் உள்ளிட்ட அந்த மாணவர்கள் வரிசை மிகவும் நீண்டது.
சென்னைக்கு
வெளியே உள்ள ஊர்களிலிருந்து வந்து பயிற்சி பெறும் பல மாணவர்களுக்கு சென்னையில் தங்கும் வசதியில்லாத அந்தக் காலச் சூழலில் தன் வீட்டிலேயே தங்கவைத்து வளர்த்தவர் தனபால். அவருடைய தாய்மையுணர்வைப்பற்றி
எல்லாக் கலைஞர்களுமே போற்றிப் பேசியிருக்கிறார்கள். 1966ஆம் ஆண்டில் சோழமண்டலம் உருவாகிக்கொண்டிருந்த நேரத்தில், பேருந்து வசதியோ
உணவுக்கடைகளோ தேநீர்க்கடைகளோ எதுவுமே அங்கு உருவாகவில்லை. அப்போது அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த கலைஞர்களுக்கு தன் வீட்டிலிருந்து உணவு எடுத்துக்கொண்டு தினமும் மிதிவண்டியில் இருபது கிலோமீட்டர் தொலைவு சென்று வழங்கினார் தனபால்.
தனபால் பணிவான மாணவர். அன்பான ஆசிரியர். பணி ஓய்வுக்குப் பிறகும் கூட தன்னைத் தேடிவரும் பலருக்கு வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து ஓவியப்பயிற்சியை அளித்துவந்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த பாணி உருவாகும்போது, அதை அடையாளம் கண்டு அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களை அத்திசையில் மேலும் பயணிக்கத் தூண்டியவரும் அவரே. அவர் தன்
பாணியை ஒருபோதும் தன் மாணவர்களிடம் திணிக்காமல் பலவேறு பாணிகள் உருவாக அவர் துணையாக இருந்தார். மாபெரும் இலட்சியவாதியான
அவருடைய வாழ்க்கையே ஒரு கலை இயக்கமாக அமைந்திருந்தது. அதற்கு
அவரே எழுதிய இந்தச் சுயசரிதை ஒரு சாட்சி. அது காலத்தால்
அழிந்துபோகாமல் கால்நூற்றாண்டுக்குப் பிறகு புத்தகமாக பதிப்பித்திருக்கும் கிருஷ்ண பிரபுவுக்கு தமிழ்வாசக உலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
(ஒரு சிற்பியின் சுயசரிதை - எஸ்.தனபால், பதிப்பாசிரியர் –கிருஷ்ணபிரபு, சிறுவாணி வாசகர் மையம், கோவை, காலச்சுவடு, நாகர்கோவில். விலை. ரூ.180)
(23.06.2021
புக்டே இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரை)