Home

Monday 7 December 2015

மலைமீது கட்டிய வீடு - கட்டுரை



    இரண்டு ஊர்களுக்கிடையே தொலைபேசிக் கேபிள் புதைக்கும்  வேலையில் ஈடுபட்டிருந்தபோது அங்கங்கே வெட்டவெளிப் பிரதேசங்களில் கூடாரமடித்துத் தங்கியிருந்த இளமை நாட்களின் அனுபவங்கள்  ஒருபோதும் மறக்கமுடியாதவை. ஒருமுறை ஹொஸஹள்ளி என்னும் இடத்தில் நாங்கள் முகாமிட்டிருந்தோம். நானும் நண்பர்களும் சகஊழியர்களுமாக ஏழு கூடாரங்கள். சுற்றுவட்டாரத்தில் ஏழெட்டு மைல் நீளத்துக்கு ஒரே வெட்டவெளி. சில இடங்களில் மட்டும் விளைந்தும் விளையாததுமாக சோளவயல்வெளிகள். மழையைமட்டுமே நம்பிப் பயிரிடப்பட்டவை.
    கூடாரங்களுக்கு அருகில் ஒரு சிறிய கோயில் இருந்தது. இரண்டு அறைகள் கொண்டதாகப் பிரிக்கப்பட்டிருந்தது அதன் கருவறை. ஒரு பகுதியில் காலியம்மன் என்ற பெயரால் அழைக்கப்படும் காற்றுத் தெய்வம் குடியிருந்தது. இன்னொரு பகுதியில் சிவலிங்கம் நிறுத்தப்பட்டிருந்தது. காற்றின் போக்கினால்  தன் பயணத்துக்கு எவ்விதமான இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எப்போதாவது அவ்வழியே நடந்துசெல்லும் வழிப்போக்கர்கள் முதல் வாகனங்கள் வரை ஒருகணம் கோயில் வாசலில் நின்று வணங்கிவிட்டுச் செல்வார்கள். அவர்களுக்காக கற்பூர ஆரத்தி எடுத்து  திருநீறு வழங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். மற்ற நேரங்களில் பாரதப் பாடல்களை ஒரு பழைய புத்தகத்தைப் பார்த்து ராகத்தோடு பாடிக்கொண்ருப்பார். பொழுது சாய்ந்ததும் கோயிலைப் பூட்டிக்கொண்டு கிராமத்துக்குத் திரும்பிப் போய்விடுவார். வேலைக்குக் கிளம்பும்போதும் திரும்பி வரும்போதும் அவருக்கு நான் வணக்கம் சொல்வதுண்டு.
    ஒருநாள் மாலையில் வேலையிலிருந்து திரும்பிவரும்போது அவரோடு சாமியார் ஒருவர் நின்றிருந்தார். ஏறத்தாழ நாற்பது வயதிருக்கும். காவி வேட்டி அணிந்திருந்தார். மேலே ஒரு துண்டுமட்டும் இருந்தது. சற்றே மெலிதாகக் காணப்பட்டாலும் அவர் உடலில் உறுதி தெரிந்தது. நான் இருவரையும் வணங்கினேன். சாமியார் புன்னகையோடு சட்டென கையுயர்த்தி "அந்த மல்லிகார்ஜூனன் அருள் உங்களுக்குக் கிடைக்கட்டும்" என்று வாழ்த்தினார்.
    அன்றைய  இரவு கூடாரத்துக்குள் படித்துக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ பாடல் வரிகள் மிதந்துவந்ததைக் கேட்டேன். அந்தக் குரலின் இனிமை என்னை வெளியே இழுத்துவந்தது. பால்மழை பொழிந்ததைப்போல எங்கெங்கும் நிலவின் வெளிச்சம். குரலின் திசையில் நடந்தபோது மரத்தடியில் சாய்ந்தபடி அந்தச் சாமியார் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் பார்வை நிலவில் பதிந்திருந்தது. அங்கே தென்படுகிற யாரோ ஒருவரிடம் முறையிடுவதைப்போன்ற அமைப்போடு ஏற்ற இறக்கத்துடன்  இருந்தன அவ்வரிகள். பல நொடிகள் கழிந்தபிறகுதான் அவர் என்னைக் கவனித்தார்.
    "எதுக்கு நிக்கறிங்க? உக்காருங்க"  தன் எதிர்ப்பக்கத்தில் கைகாட்டினார் சாமியார்.
    "ரொம்ப நல்லா இருக்குது உங்க பாட்டு."
    "நான் பாடறதால என் பாட்டாயிடுமா? இது அக்கமகாதேவி வசனம். காதால கேட்டுகேட்டு மனப்பாடம். எப்பவாவது இப்படி சந்தர்ப்பம் அமஞ்சா பாடறதுண்டு."  புன்னகைத்தபடி சொன்னார் சாமியார்.
    மலைமேலே ஒரு வீட்டைக்கட்டிய பின்னர்
    விலங்குகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா?
    கடற்கரையிலே ஒரு வீட்டைக்கட்டிய பின்னர்
    அலைநுரைகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா?
    சந்தை நடுவே ஒரு வீட்டைக்கட்டிய பின்னர்
    இரைச்சலுக்கு நாணினால்  எப்படி ஐயா?
    அழகு மல்லிகார்ஜூனனே, கேள் ஐயா
    உலகத்தில் பிறந்த பின்னர்
    புகழ்ச்சி இகழ்ச்சி ஏற்பட்டால்
    மனத்தை சினம் தாக்காமல் இருக்கவேண்டும்
    அதுவரை பாடிய பாட்டை இன்னொரு முறை வார்த்தைகளைப் பிரித்துப் பிரித்து எனக்காக நிறுத்திநிறுத்திப் பாடினார். கன்னடச் சொற்களை உள்வாங்கிப் புரிந்துகொள்வதில் எனக்குச் சற்றே  சிரமமிருந்தது. சாமியார் உடனே பாட்டுக்குப் பொருள்சொல்லத் தொடங்கிவிட்டார்.
    ”எதுக்காகவும் அச்சப்படக்கூடாது. இதுதான் என் வழின்னு தீர்மானிச்ச பிறகு முன்வைச்ச காலை பின்வைக்கக் கூடாது. நம் பயணம் ஒன்றுமட்டுமே நமக்கு இலக்காக இருக்கணும். அதத்தான் அந்த அம்மா பாட்டுல சொல்றா. அவளும் அப்படி ஒரு தீர்மானத்தோட வாழ்ந்தவள்தான். அதனாலதான் அவ்வளவு திட்டவட்டமா அவளால சொல்லமுடியுது. அந்த அம்மா  உண்மையிலயே பெரிய மகான்."
    அவர் சொல் ஒவ்வொன்றும் அழுத்தமாக மனத்தில் பதிந்தது. அக்கமகாதேவியைப்பற்றி அவராகவே சொல்லத் தொடங்கினார். "வடக்கிலே மீராவ பத்தி கேள்விப்பட்டிருப்பிங்க இல்லயா? பிருந்தாவனத்து நந்தகோபாலனையே தனக்குப் பிரியமானவனா நெனச்சி வாழ்ந்து மறஞ்சவங்க. அக்கமகாதேவியும் அப்படிப்பட்டவங்க. சின்ன வயசிலயே மல்லிகார்ஜூனன்மேல அவுங்களுக்கு பிரியம் வந்துட்டுது. அது என்னமோ சின்ன வயசுப் பேச்சுன்னு நெனச்சி கெளசிகன்னு ஒரு ராஜகுமாரனுக்கு அவுங்கள கல்யாணம் பண்ணி வைச்சிடறாங்க. ஆனா அவுங்களால சேந்து வாழமுடியலை. எல்லாத்தயும் துறந்து ஒரு துறவியா கல்யாணதேசத்துக்கு கெளம்பிப் போயிடறாங்க.  அப்ப அவுங்க பாடன வசனங்கள்ளாம் கன்னட இலக்கியத்துக்குப் பெரிய சொத்து."
    நள்ளிரவுவரை அவர் அக்கமகாதேவியின் பல வசனங்களை எனக்குப் பாடிக்காட்டி பொருள்சொன்னார். உள்ளூர ஒருவித ஆனந்தம் மனத்தின் பொங்கி நிறைவதை உணர்ந்தேன். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு மென்மையான தீண்டலாக இருந்தது. அவர் முகத்தின்மீதே என் பார்வை படிந்திருந்தது. அவர் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்போலத் தோன்றியது. ஆனால் அவர் சட்டென ஒரு கணத்தில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு "இன்னிக்கு இது போதும், போய் படுத்துக்குங்க" என்று சொல்லிவிட்டார். அப்போது அவர் குரலில் வெளிப்பட்ட அழுத்தம் ஆச்சரியமாக இருந்தது.
    விடிந்தபிறகு அவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. குளித்துமுடித்து வேலைக்குச் செல்ல தயாராக இருந்தபோது கிழக்குத் திசையிலிருந்து அவர் வேகவேகமாகத் திரும்பிவருவது தெரிந்தது. அருகில் நெருங்கியதும் வணங்கினேன். அவர் சிரித்துக்கொண்டே மரத்தடியில் உட்கார்ந்தார். கால்களை நீட்டி நீவிவிட்டுக்கொண்டார். தோள்பட்டையிலும் முதுகுத்தண்டிலும் வேர்வை வழிந்திருந்தது. வெகுதொலைவு நடந்துசென்று திரும்பியிருப்பார் என்று தோன்றியது.
    எப்படி பேச்சைத் தொடர்வது என்று குழப்பத்தோடு நின்றிருந்தபோது "ஒரு குடமாவது வாளியாவது கிடைக்குமா?” என்று அவராகவே கேட்டார். இருக்குது. "குடுக்கறேன்" என்றபடி கூடாரத்துக்குத் திரும்பி என்னுடைய வாளியை எடுத்துவந்து கொடுத்தேன்.
    ”இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பாருங்க. நாலஞ்சி மைலு நீளத்துக்கு யூக்கலிப்டஸ் கன்னுங்கள நட்டிருக்காங்க. நட்டதோட நம்ம வேல முடிஞ்சிடுமா? இதுதான் மானாவாரி பூமியாச்சே. கன்னுங்க வளர தண்ணி வேணாமா? ஒவ்வொன்னயும் பாக்கப்பாக்க பாவமா இருக்குது."
    யாரும் சொல்லாமலேயே சாலையோரங்களில் நடப்பட்டிருந்த கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வேலையைத் தன்னுடைய வேலையாக ஆக்கிக்கொண்டார். விடிந்ததிலிருந்து பொழுது சாயும்வரை அவருக்கு இதுவே வேலையாகிப் போனது. அக்கமகாதேவியின் வரிகளை அவர் உதடுகள் தன்னிச்சையாக முணுமுணுத்தபடி இருக்கும். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் படையலாக  விட்டுப்போகும் தேங்காய்களை மட்டுமே அவர் உண்பதைப் பார்த்திருக்கிறேன். உணவுப் பதார்த்தமாக அவர் எதையும் தொட்டதே இல்லை.
யூகலிப்டஸ் கன்றுகளில் பச்சையேறியதும் அவர் முகத்தில் ஒளிபடர்ந்தது. சில சமயங்களில் ஏதாவது ஒரு கன்றின் அருகில் வெகுநேரம் நின்றுவிடுவார். அதன் தண்டுப்பகுதியை நீவிவிடுவார். இளந்தளிர்களை முத்தமிடுவார். என்னுடன் இருந்த மற்றவர்களுக்கு அச்செயல் ஏதோ மனம் பேலித்தவனுடைய செயல்களாகப் படும். யாராலும் செய்யமுடியாத ஒரு செயலை அவர் செய்வதாக நான் நினைத்துக்கொள்வேன். அக்கணத்தில் அவர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வரும்.
    ”சிவபக்தனுடைய மயிர்க்கால்களில் வலியெடுத்தாலும் அந்த வலியைச் சிவன் உடனே உணர்ந்துகொள்வான். சிவபக்தனுடைய மனம் மகிழ்ச்சியில் திளைத்தால் சிவனும் இன்பத்தில் திளைப்பான். சிவபக்தனின்  இன்பம் துன்பம் இரண்டுமே மல்லிகார்ஜூனனைத் தொட்டுவிடும். இத நான் சொன்னதில்ல. அக்கமகாதேவியின் வசனம்."
    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வரிகள் என் நெஞ்சில் நகர்ந்தன.
    ”ஒரு கன்றின் வலியையும் உணரும் நிலையில் நான் இருந்தால்மட்டுமே என் வலியை இன்னொருவனால் உணரமுடியும் அல்லவா? யாருடைய அல்லது எதனுடைய வலிக்காகவும் நான் இரங்கமாட்டேன், ஆனால் எனக்கு வலிக்கும்போதுமட்டும் எல்லாரும் இரங்கவேண்டும் என்பது மிகப்பெரிய தன்னலம் அல்லவா?”
    சொல்லிவிட்டு அவர் சிரித்த சிரிப்பு அடங்க வெகுநேரமானது. பல உண்மைகளை எனக்கு அச்சிரிப்பு உணர்த்தியது.
    இரவுகளில் அவருடன் ஒன்றிரண்டு மணிநேரங்களையாவது கழிப்பது என் வழக்கமானது. அவர் எதைப் பேசினாலும் அந்த உரையாடல் ஏதோ ஒரு வகையில் அக்கமகாதேவியின் வரிகளுக்கான விளக்கமாக மாறிவிடும். ஒருமுறை சாதாரணமாக கிளி, காக்கை, குருவிகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதன் நீட்சியாக உடனே அவர் அக்கமகாதேவியின் வசனத்தைத் தொட்டுவிட்டார்.
    ”அந்த அம்மாவுக்கு எப்ப பாத்தாலும் மல்லிகார்ஜூனனுடைய ஞாபகமாவே இருக்குது. அவரையே மனசு தேடுது. தன்னுடைய மனசு அவர தேடறமாதிரி அவருடைய மனசும் தன்ன தேடிக்கிட்டிருக்கும்னு அவுங்க உறுதியா நெனைக்கறாங்க. மனசு மட்டுமல்ல, அவரே எறங்கிவந்து எடம்தெரியாம எங்கயோ அலஞ்சிகிட்டிருப்பாருன்னு கவலப்படறாங்க. அதனால் வழியில பறக்கற கிளியப் பாத்து கேக்கறாங்க. குயில பாத்து கேக்கறாங்க. அன்னப்பறவைய பாத்து கேக்கறாங்க. தும்பிய பாத்தும் மயில பாத்தும் கூட கேக்கறாங்க. என்னன்னு கேக்கறாங்க தெரியுமா? என்னுடைய மல்லிகார்ஜூனன பாத்திங்களா? எங்கெங்கயோ அலயற கூட்டமாச்சே நீங்க, உங்க கண்ணுல எங்கயாவது தென்பட்டாரா? தயவுசெஞ்சி சொல்லுங்கன்னு கேக்கறாங்க. இவுங்கள தேடி அலயற அலச்சல்ல அவருக்கு எதுவும் ஆகிடக்கூடாதேன்னு துடிக்கறாங்க. மனுஷனுக்காக இருந்தாலும் கடவுளுக்காகா இருந்தாலும் சரி, மனச பறிகொடுத்ததும் நெலைமை எப்படியெல்லாம் மாறுது பாருங்க."
    ஒருநாள் இரவு எதிர்பாராத விதமாக மழை பொழியத்தொடங்கியது. அந்தக் கோடையின் முதல் மழை. வெப்பத்துக்கு மழையின் சாரல் இனிய அனுபவமாக இருந்தது. கண்க¨ள்முடி அந்த இன்பத்தில் மனம் பறிகொடுத்துப் படுத்திருந்தபோது திடீரென சாமியாரின் ஞாபகம் வந்தது. அவர் வழக்கமாக உறங்கும் மரத்தடியின் ஞாபகம் வந்தது. வேகமாக படுக்கையைவிட்டெழுந்து ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு வெளியே ஓடினேன். அவர் மரத்தடியிலேயே ஒடுங்கி உட்கார்ந்திருந்தார். என் மனத்தில் கலவரமும் பதற்றமும் படர்ந்தன. அருகில் ஓடிச் சென்று "வாங்க வாங்க கூடாரத்துக்கு போயிடலாம். அடிக்கற வேகத்த பாத்த மழ ராத்திரிமுழுக்க பெய்யும்போல இருக்குது" என்றேன். அவர் உடல் முழுக்க நனைந்திருந்தது. ஆனால் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத மனநிலையில் "இருக்கட்டும் போங்க. நீங்க போயி படுங்க. எனக்கு இதான் வசதி" என்றார்.
    ”உடம்புக்கு எதாவது வந்துடப் போவுது, வாங்க" நான் சற்றே வலியுறுத்தும் குரலில் சொன்னேன்.
    ”சொன்னா கேளுங்க, நீங்க போயி படுங்க. எனக்கு இதான் வசதி" என்று என் கண்களைப் பார்த்துச் சொன்னார். தொடர்ந்து வற்புறுத்தும் துணிவில்லாமல் சில கணங்கள் மழையில் நனைந்தபடி நின்றிருந்தேன். அவர் உடல்மீது பட்டு வழியும் தண்ணீர் வெள்ளத்தைப் பார்த்தேன். எதுவும் பேசவில்லை. மெளனமாகத் திரும்பிவிட்டேன்.
    விடிந்தபோது மழை விட்டிருந்தது. சாமியார் எங்கோ கிளம்பிப் போய்விட்டிருந்தார். மாலையில்தான் பார்க்கமுடிந்தது. அவர் முகத்தில் அதே புன்சிரிப்பு. அதே உற்சாகம்.  
ராத்திரி கூடாரத்துக்கு வந்திருக்கலாமே, எதுக்கு அவ்வளவு புடிவாதமா மறுத்திங்கன்னு தெரியலை" தயக்கத்துடன் கேட்டேன். அவர் என் கண்களைப் பார்த்தபடி தன் வழக்கமான புன்சிரிப்பை உதிர்த்தார். "எனக்கு ஒன்னும் ஆகாது தம்பி, எனக்குத் துணையா மல்லிகார்ஜூனன் இருக்கான்" என்றபடி நகர்ந்துவிட்டார்.
    அன்று இரவும் மழை பொழிந்தது. துளித்துளியாகத் தொடங்கியதுமே முன்னெச்சரிக்கையோடு சாமியார் சாய்ந்திருக்கும் மரத்தடிக்கு ஓடினேன். அவர் அப்போதும் அங்கேயெ இருந்தார். என்னைப் பார்த்ததும் சிரித்தார். என்னைப் பேசக்கூட அனுமதிக்காதபடி கைச்சைகையாலும் சிரிப்பாலும் போகுமாறு சொன்னார். நான் சோர்வோடு திரும்பும்படி நேர்ந்தது.
    மறுநாள் காலை அவரைப் பார்க்கமுடியவில்லை. சாயங்காலமும் பார்க்கமுடியவில்லை. அவருக்குக் கொடுத்திருந்த வாளி கூடாரத்துக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே அவர்  அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டார் என்பது புரிந்துவிட்டது. ஒருவித துக்கம் பாரமாக எழுந்து மனத்தை அழுத்தியது. இரவில் நான்கைந்து முறை எழுந்து அந்த மரத்தடிக்குச் சென்று மீண்டும்மீண்டும் பார்த்தேன். காணவில்லை. சருகும் சுள்ளிகளும் பரவிக்கிடந்த அந்த இடத்தில், அவர் கால்நீட்டி உட்கார்ந்திருந்த வேர்ப்பரப்பில் வெறுமை மட்டுமே படர்ந்திருந்தது. ஒன்றிரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்களும் முகாமை மாற்ற வேண்டிதாயிற்று. அப்போது அந்த வெறுமையை இன்னும் அழுத்தமாக உணர்ந்தேன்.
    அவரை வற்புறுத்தியதுதான் அவரது வெளியேற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடுமோ என்ற குற்ற உணர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மழை என்னைத் தடுமாறவைப்பதுபோல அவரையும் தடுமாறவைத்துவிடும் என்று நினைத்தது பிழையோ என்று தோன்றியது. "மலைமீது வீடு கட்டிய பின்னர் விலங்குக்கு அஞ்சினால் எப்படி ஐயா?” என்ற அவருடைய குரல் நெஞ்சில் ஒலிப்பதைப்போல இருந்தது.