Home

Friday 27 November 2015

வாழ்க்கை என்னும் சுமை - கட்டுரை



   ஏரிக்கரைக்குப் போயிருந்தேன்.  வெயில் தகதகக்கும் வெட்டவெளியாக அதன் கோலம் மாறிப்போயிருந்தது. அனல்காற்று மெளனமாக ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையைநோக்கிக் கடந்து சென்றது. பூமியின் பரப்பில் எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் பசுமையைத் தேடித்தேடி ஏரியின் நடுப்பகுதியில் மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.  ஒவ்வொரு கணமும் என் மனம் அமைதியழப்பதை உணர்ந்தேன். அதே தருணத்தில் என் இளமை நினைவுகள் என்னைநோக்கி நீந்திவருவதையும் உணர்ந்தேன். விசித்திரமான அந்தக் கலவைஉணர்வுதான் ஊருக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும் அவசரம்அவசரமாக இந்த ஏரியைநோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறதுபோலும்.

    கடல்போலத் தண்ணிர் தளும்பிக்கொண்டிருந்ததெல்லாம் ஒரு காலம். கரைநெடுக பனைமரங்களும் புளியமரங்களும் அப்போது நின்றிருந்தன. ஏதாவது ஒரு மதகு திறக்கப்பட்டு வெள்ளம்போல தண்ணீர் வெளியேறியபடியே இருக்கும். கரையோரத்து வயல்வெளிகளின் பச்சைப்பரப்பு கண்ணுக்குக் குளுமையாகக் காட்சியளிக்கும். கரும்பும் நெல்லும் பருவத்துக்கேற்றபடி அந்த வயல்வெளிகளில் தலைநிமிர்ந்து ஆடும். திரும்பிய இடங்களில் எல்லாம் மைனாக்களும் குயில்களும் தெரியும். கொக்குகள் வானத்தில் கூட்டம்கூட்டமாகப் பறந்தபடி இருக்கும். இவை எதுவுமே இப்போது இல்லை. ஆக்கிரமிப்பதற்காகவே இருக்கிற சொத்தைப்போல மக்கள் நான்கு திசைகளிலிருந்தும் வளைத்து எடுத்துக்கொண்டதுபோக மிச்சமான இடம்மட்டுமே வறண்டு ஏரி என்கிற பெயரில் வானம்பார்த்துக் கிடக்கிறது. எல்லா இடங்களிலும் மேடுதட்டிப் போய்விட்டது. தென்பெண்ணையிலிருந்து நதிநீர் பாய்ந்துவரும் இணைப்புத்தடம் சில தன்னலக்காரர்களால் சிதைக்கப்பட்டுவிட்டது. கரையெங்கும் எருக்கஞ்செடிகள். புதர்போல மண்டிக்கிடக்கும் முட்செடிகள்.  நடக்கவே முடியாதபடி பாதையெங்கும் மனிதக்கழிவுகள். நடுஏரியில் விரிந்திருக்கும் வேலங்காட்டில் வெட்டியெடுக்கப்பட்ட விறகுகளையோ அல்லது சாணக்கூடையையோ சுமந்தபடி இப்போதும் யாரோ சில பெண்கள் காலில் செருப்புக்கூட இல்லாமல் வேர்க்க விறுவிறுக்க நடந்துவருகிறார்கள். எந்தக் காலத்திலும் மாறாத ஒரு காட்சியாக இது இருக்கிறது. எங்கள் தெரு பெரியம்மாக்களும் சின்னம்மாக்களும் இப்படி நடந்துநடந்து சம்பாதித்துத்தான் குடும்பங்களைக் காப்பாற்றினார்கள். பல யுகங்களாக இந்த நடை தொடர்வதுபோல இருக்கிறது.
    அவர்களோடு ஒருவனாக கூடை சுமந்து நடந்து திரிந்த பள்ளிக்கூட நாட்களில் நான் அவர்களை ஒருபோதும் தனித்து உணர்ந்ததில்லை. வாழ்வதற்கான வழி அது என்றே நினைத்திருந்தேன். படித்து வேலைக்குச் சென்று உலகம் புரியத்தொடங்கிய காலத்தில் அந்த உழைப்பையும் தன்னம்பிக்கையையும் தெய்வமாக வணங்கவேண்டும் என்று தோன்றியதுண்டு. ஏரியை வேடிக்கை பார்ப்பதற்காக நின்றிருக்கும் நேரத்தில் "என்ன தம்பி? எப்படி இருக்க?” என்று நலம்விசாரிக்காமல் நடந்துசெல்லாத பெரியம்மாவோ சின்னம்மாவோ இல்லை. அவர்களில் பலர் அந்த நாட்களில் தம் போகணிகளிலிருந்து ஊற்றிக்கொடுத்த கூழும் நீராகாரமும் என் உடல் ரத்தத்தில் இன்னும் கலந்திருப்பதாகவே தோன்றும். "நல்லா இருக்கேன் சின்னம்மா" என்ற மூன்று வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்குள் என் கண்கள் கசிந்துவிடுவதை என்னால் ஒருபோதும் தவிர்க்க முடிந்ததில்லை. "நீங்க எப்படி இருக்கிங்க?” என்ற என் கேள்விக்கு "இதோ இருக்கனே, இதான் நம்ம பொழப்பு. இந்த வெயிலும் வெறவுக்கட்டயும்தான் நமக்குன்னு எழுதிவச்சிருக்கு. புருஷனாவுது சரியா இருக்கணும், இல்ல புள்ளயாச்சிம் சரியா இருக்கணும். ரெண்டும் கோணல்தான்டி ஒனக்குன்னு அந்த மாரியாத்தா சொல்லிட்டா. இப்படி பொழைக்கறத தவிர வேற வழியில்லை. அஞ்சிக்கும் பத்துக்கும் இப்படி ஓடிஓடி அலயறமேன்னு கஷ்டமெல்லாம் இல்ல தம்பி. ஆனா காலும் கையும் நல்லா இருக்கும்போதே பொட்டுனு போயிடணும், அதான் அந்த ஆத்தாகிட்ட வேண்டிக்கறேன். நாமள்ளாம் கீழ படுத்துட்டா ஒரு நாய்கூட சீண்டாது தம்பி. சரி வரட்டா..." என்று நைந்த சிரிப்போடு அவர்கள் நடந்துசெல்வதைக் காணும்போது மனம் பாரமாகிவிடும்.
    எங்கள் தெரு அம்மாக்கள் பலருடைய கதை இப்படித்தான். ஒருநாள்கூட உட்கார்ந்து ஓய்வெடுப்பதில்லை.  ஏதாவது வேலை வேலை என்று பறந்தபடியே இருப்பார்கள். நாற்று நடுதல், களையெடுத்தல், கதிரறுப்பு என்று எந்த வேலையாக இருந்தாலும் பருவத்துக்குத் தகுந்தபடி கூட்டம்கூட்டமாகச் செல்வார்கள். இந்த வேலைக்கெல்லாம் பொறுப்பாக முன்னின்று தோட்டக்காரரிடம் பேசி, ஆட்கணக்கு, கூலிக்கணக்கு முடிவுசெய்து பணம்வாங்கிப் பிரித்துக்கொடுப்பற்கென்றே ஒரு பெரியம்மா இருப்பார்கள். அவர்தான் எல்லாரையும் அதிகாலையிலேயே எல்லாரையும் வயல்வெளிக்கு வழிநடத்திச் செல்வார். களையெடுப்பில் அதிகாலைக்களை, மாலைக்களை என்று உபரியாகச் சில சமயங்களில் பெரிய நிலத்துக்காரர்கள் அழைப்பதுண்டு. அதிகாலைக்களைக்கு காலை ஐந்துமணிமுதல் எட்டரைமணிவரை நேரம். மாலைக்களைக்கு மாலை நான்குமுதல் சூரியன் விழும்வரையிலான நேரம். இவ்வளவு வேலைகளுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து வாசல் பெருக்கி  சுத்தப்படுத் திவைத்துவிட்டு தண்ணீர்ப்பானைகளை நிரப்பிவிட்டு கடைத்தெருவுக்கு ஓடி அரிசியும் பருப்பும் காய்கறிகளும் வாங்கிவந்து சமைத்துமுடிப்பார்கள்.
"இன்னுமாடி முடியலை?” என்று அகங்காரத்தோடு கெட்டவார்த்தை பேசியபடி திண்ணையில் உட்கார்ந்திருக்கிற கணவனின் கூச்சல் ஒருபக்கம். பசிபசியென்று பறந்து அற்பமான ஏதோ ஒரு காரணத்துக்காக தமக்குள் சண்டைபோட்டுக் கொள்கிற பிள்ளைகளின் சத்தம் மறுபக்கம். எரியாத அடுப்பை ஊதிஊதி சுள்ளிகளையும் எருமுட்டைகளையும் உள்ளே தள்ளத்தள்ளி எரியவைப்பதில் பொங்கியெழுந்து சூழ்கிற புகை இன்னொரு பக்கம். ஆடப்போன இடத்தில் யாரிடமோ வளர்த்துவிட்ட வம்புக்காக, பிள்ளைக்கு உரியவர்கள் வீடுதேடி வந்து உதிர்த்துவிட்டுப் போகிற வசைமொழிகள் மற்றொருபக்கம். எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து நின்று சமைத்த சோற்றை தட்டில் போட்டு சாப்பிடவைத்துவிட்டு, தன் வயிற்றில் எரியும் நெருப்பைத் தணிப்பதற்காக மிச்சமிருக்கும் குழம்பை ஊற்றிப் பட்டும்படாமலும் பிசைந்த சோற்றை தட்டில் நிரப்பிக்கொண்டு காற்றாட அவர்கள் வாசலில் வந்து உட்காரும்போது ஊர்க்கொட்டகையில் முதலாட்டம் சினிமா முடிந்து இரண்டாவது ஆட்டம் தொடங்குவதற்கான அடையாளமாக "விநாயகனே, வினை தீர்ப்பவனே" என்றோ அல்லது "மதுரைமலை மாமணியே முருகையா" என்றோ பாடல் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். போதையிறங்காத புருஷன் அல்லது மகன் எங்காவது ஒரு வீட்டிலிருந்து அப்போதுதான் கச்சேரியைத் தொடங்குவார்கள். அந்தவீட்டு அம்மா அவர்களிடம் மன்றாடும் குரல் தெருமுழுக்க ஒலித்தபடி இருக்கும்.
வீடு, தடுப்புச்சுவர், வாசல் என்று தனித்தனியாக இருப்பதெல்லாம் ஏதோ ஒரு ஒப்புக்குத்தான். தனிப்பட்ட உரையாடல் என்பதே எங்கும் இருப்பதில்லை. சந்தோஷம், ஆத்திரம், சண்டை, கோபம், குழைவு, கெஞ்சுதல், அடிதடி எல்லாமே அந்தரங்கமற்ற நிலையில் நிகழும் காட்சிகளாகவே நடக்கும். சம்பந்தப்பட்டவர்கள் குனிந்துகொண்டால் யாருக்குமே தெரியவில்லை அல்லது கேட்கவில்லை என்று பொருளாகிவிடும். எங்கேயோ நிலைகுலைந்து விழுந்துகிடக்கிற புருஷனையோ பிள்ளையையோ தேடிப்போகிற அம்மாவின் நிலைதான் மிகவும் சங்கடமானது. இன்னாரைப் பார்த்தீர்களா? என்று வாயால் கேட்டுவிடவும் முடியாது. அப்படிக் கேட்பதை ஒருவேளை காதுகொடுத்துக் கேட்டுவிடும் கணவனுடைய வசைகளுக்குப் பதில்சொல்வதுபோன்ற சிரமம் உலகில் வேறொன்று இருக்கமுடியாது. விசாரிக்காமலோ அல்லது கேட்காமலோ இருட்டில் தேடிக் கண்டுபிடிக்கவும் முடியாது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வேறு வகையான சிரமம் உண்டு. "செத்துத் தொலஞ்சா நிம்மதின்னு விட்டுட்டியா?” ”என்னப் பாத்தா அவ்வளவு அலட்சியமா இருக்குதா?” என்று எழும் வார்த்தைத்தாக்குதலுக்கு அமைதியடைகிற வகையில் சொல்வதற்கான ஒரு பதிலைக் கடவுளாலும்  கண்டுபிடிக்கமுடியாது. இப்படி வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு கணமும் செத்துச்செத்துப் பிழைக்கிறவர்கள்தான் அந்த அம்மாக்கள்.
    கரைமீது அதிகநேரம் நிற்க முடியவில்லை. துர்நாற்றம் விரட்டியடிப்பதாக இருந்தது. கரையைவிட்டு கீழே இறங்கி அருகிலிருந்த ரயில்வே ஸ்டேஷனையொட்டி உட்கார்ந்தேன். சிறிது நேரத்தில் கரையிலிருந்து ஆறேழு பேர் தலைச்சுமையோடு இறங்கிவருவதைப் பார்த்தேன். அவர்களில் ஒருவருடைய முகம்மட்டும் தெளிவாக எனக்குத் தெரிந்த முகமாக இருந்தது. லட்சுமி சின்னம்மா. ஊருக்குள் அவரை அழைப்பது கடைக்காரம்மா என்னும் பெயரால். அவருடைய கணவர்தான் முதன்முதலாக எங்கள் தெருவில் பெட்டிக்கடையைத் தொடங்கினார். என் வயதையொத்தவர்களுக்கு தேன்மிட்டாயையும் ஆரஞ்சுமிட்டாயையும் பொறிஉண்டையையும் எள்ளடையையும் முறுக்கையும் அறிமுகப்படுத்திய ஆரம்பகாலக்கடை. கடைவைத்ததால் அவர் கடைக்காரர். அவருடைய மானவியாக இருந்ததால் இவர் கடைக்காரம்மா. கடைக்காரர் இயற்கையெய்தி பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவருக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண்கள். இரண்டு பெண்கள். எல்லாரும் திருமணம் முடிந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள். கடையும் போய்விட்டது. எல்லாம் போனாலும் அந்தப் பெயர்மட்டும் நின்றுவிட்டது. அவர் தலையில் இரண்டாள் சுமக்கக்கூடிய விறகுக்கட்டு இருந்தது. அதைப் பார்க்கப்பார்க்க என் மனம் சங்கடத்தால் நிறைந்தது.
    ”எப்படி இருக்கிங்க?” என்றேன்.
    ”இதோ இருக்கேனே. அப்படித்தான்."
    திடீரென ஒரு பழைய ஞாபகம் மிதந்துவந்தது. மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் . அவருக்கும் அவருடைய மகனுக்கும் இடையே ஏதோ ஒரு மனவிரிசல். இதனாலேயே மோதல்கள். வார்த்தைப் பரிமாற்றங்கள். எதையும் தடுத்து நிறுத்தவோ தட்டிக் கேட்கவோ முடியாத நிலையில் நான் இருந்தேன். ஒருநாள் இரவில் ஏதோ எழுத்துவேலை. முடித்துவிட்டுப் படுக்கப் போகும்போது கிட்டத்தட்ட இரவு பன்னிரண்டைக் கடந்துவிட்டது. அப்பொழுதுதான் ஒரு பழைய பாடலின் வரிகளை யாரோ பாடுவதைக் கேட்டேன். பி.சுசிலா பாடும் சோகப்பாடல்கள். நெஞ்சைப் பிழியும் குரலில் அந்த வரிகள் என் மனத்தைத் தொட்டன. சில நிமிடங்கள் அவற்றை உள்வாங்கி அசைபோட்டேன். யாருடைய குரல் அது என்பதுதான் புரியவில்லை. என் ஐயத்தைப் புரிந்துகொண்ட என் தம்பி லட்சுமி சின்னம்மாதான் பாடுகிறார்கள் என்றும் சமீப காலமாக இப்படி இரவு வேளையில் தனிமையில் பாடுவது அவருக்குப் பழக்கமாகிவிட்டது என்றும் சொன்னான்.
ஒன்றையடுத்து ஒன்றாக பல பாடல்களை அவர் பாடியபடி இருந்தார். மறுநாள் காலையில் அவரைச் சந்திக்கும்போது அதைப்பற்றி கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பார்த்த கணத்தில் ஏதோ ஒரு தயக்கம் என்னைத் தடுத்துவிட்டது. அதற்கிடையில் அவர் என்னிடம் ஓர் உதவியை நாடினார். அவர் சார்பாக அவருடைய மகனிடம் நான் பேசி சில உதவிகளைப் பெற்றுத்தரவேண்டும் என்று கோரினார். எனக்குச் சங்கடமாக இருந்தது. மனக்கசப்பு நிறைந்த இருவரிடையே பேசி நல்லுறவை மறுபடியும் உருவாக்குவதில் ஏற்கனவே நாலைந்து சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் மோசமான அனுபவத்துக்கும் பேச்சுக்கும் ஆளானதெல்லாம் அப்போது ஞாபகம் வந்து என்னைத் தடுத்தது. நான் பொறுமையாக என் தயக்கத்தை அவரிடம் எடுத்துரைத்தேன். அவருடைய மகனிடம் எதிர்பார்க்கும் உதவிகளை நானே செய்வதாகவும் சொன்னேன். ஆனால் அவருக்கு அந்த ஏற்பாட்டில் அந்த அளவுக்குத் திருப்தி இல்லை. மனக்குறையுடன் எழுந்துபோய்விட்டார்.
    ஞாபகத்தை அசைபோட்டபடி  நான் ஒருகணம் பேசாமல் தலைகுனிந்தேன். அவர் கால்களில் நிறமிழந்து நைந்துபோன காலணிகள் இருந்தன. நரம்பின் முறுக்குகள் பாதங்களில் தெரிந்தன. புழுதி அப்பியிருந்தது. நிமிர்ந்தபோது அவர் நெற்றியிலிருந்து வேர்வை ஆறாக ஓடிவந்து இறங்கி கழுத்து, கன்னத்தையெல்லாம் நனைத்துக் கொண்டிருந்தது. முதுமை படிந்து சுருங்கத் தொடங்கிவிட்ட முகம். கன்னத்தில் ஏதோ ஒரு முள் கீறி ரத்த அடையாளம் தெரியும்படி கிழித்துவிட்டிருந்தது. தலைவகிடின் இருபுறமும் நரையோடிய முடிக்கற்றை. "என்ன பொங்கலுக்கா?" என்று அவராகவே மெளனத்தை உடைத்துப் பேச்சைத் தொடங்கினார். நான் "ஆமாம்" என்றபடி தலையை அசைத்தேன்.
    ”பாப்பா, புள்ளையெல்லாம் வந்திருக்காங்களா?”
    ”வந்திருக்காங்க. வீட்டுலதான் இருக்காங்க."
    ”சரி, அப்பறமா வந்து பாக்கறேன்" என்று சிரித்துக்கொண்டே நடக்கத் தொடங்கிவிட்டார்.
    அன்று அதற்கப்புறம் அவரை நான் சந்திக்கவில்லை. நான் வீட்டில் இல்லாத தருணத்தில் வந்து எல்லாரையும் பார்த்துப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.   ஒரு நடை நடந்துபோய்ப் பார்த்துவிட்டுத் திரும்புகிற து¡ரம்தான் என்றாலும் ஏதோ சோம்பலில் நானும் சென்று பார்க்கவில்லை. விடுமுறை முடிந்து குடும்பத்தோடு திரும்பிவிட்டோம்.
அந்தப் பயணத்தை மீண்டும் இப்போது நினைத்துப் பார்ப்பதற்குக் காரணம் இருக்கிறது. காலையில் ஊரிலிருந்து தொலைபேசியில் அழைத்த தம்பி லட்சுமி சின்னம்மாவின் மரணச்செய்தியை அறிவித்தான். எதிர்பாராத மரணம். உடல்நிலை குன்றியிருந்த இளைய மகனுக்கு மருத்துவம் செய்வதற்காக மழையில் நள்ளிரவைக் கடந்த வேளையில் வாடகைவண்டியை அமர்த்திக்கொண்டு புதுச்சேரிக்குச் சென்றிருக்கிறார். மருத்துவமனையை நெருங்கும் முன்னால் எதிரில் வேகமாக வந்த லாரி மோதி வண்டியில் பயணம் செய்தவர்கள் அனைவரையுமே மரணம் அள்ளிக்கொண்டு போய்விட்டது.
    அன்று முழுக்க அவருடைய உருவம் மீண்டும்மீண்டும் மனத்தில் எழுந்தபடி இருந்தது. அவர் வாய்திறந்து கேட்ட உதவியைச் செய்ய இயலாமல் போனதில் அவர் மனத்தில் வருத்தம் படிந்திருக்குமோ என்ற குற்ற உணர்ச்சி வாட்டியது. வழக்கமாக தேநீர் இடைவேளையில் சந்திக்கும் என் நண்பரிடம் சின்னம்மாவின் கதையை முழுக்கச் சொல்லி என் சந்தேகத்தையும் முன்வைத்தேன். அவர் "கண்டிப்பா இருக்காது" என்றார். சில கணங்களுக்குப் பிறகு "பொதுவா உழைப்பை நம்பியிருக்கிறவங்க மத்தவங்கமேல வருத்தப்படுவதில்லை. அவுங்க தைரியம், உறுதி, வேகம்லாம் அதுக்கு இடம்கொடுப்பதில்லை" என்றார். எனக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது.
    ”பெண்களுடைய துயரத்துக்கு நம் நாட்டில் ஒரு முடிவே கிடையாதா?” என்று கேட்டேன்.
    ”ஒரு கணவனாகவும் சரி, ஒரு மகனாகவும் சரி, தன்னால் மற்றவர்கள் படுகிற முடிவற்ற வதைகளிலும் அவமானங்களிலும்தான் தன் கெளரவம் அடங்கியிருப்பதாக நினைத்துச் செயல்படுகிற ஆண்கள் இருக்கும்வரை எப்படி முடிவு வரும்?” என்று இன்னொரு கேள்வியையே பதிலாகச் சொன்னார் அவர்.
    ”மாபெரும் சக்தியின் ஒரு  துளியாக ஒரு பெண் ஒருவனுக்குக் கிடைக்கிறாள். அந்தச் சக்தியை அறிவதற்கு முன்னதாகவே அதை உடனடியாக அச்சுறுத்தி, அடிமைப்படுத்தி, வதைக்கிற புத்தி வந்துவிடுகிறது ஆணுக்கு. பிறகு ஒவ்வொரு கணமும் அவன் மனம் விதவிதமான சித்தரவதை முறைகளைமட்டுமே வெறிபிடித்தமாதிரி யோசிக்கிறது. ஆண்களின் அகங்காரத்தால் காலம்காலமாகத் தொடர்கிற பெண்கள் துயரம் ஒரு மாபெரும் தொடர்கதையாகப் போய்விட்டது."
    சின்னம்மாவின் சித்திரம் மறுபடியும் மனத்தில் எழுந்தது. விறகுக்கட்டோடு வெயிலில் வேர்க்க விறுவிறுக்க ஏரிக்கரையின் சரிவில் இறங்கிவரும் தோற்றம்.