Home

Thursday 19 November 2015

பச்சை நிறத்தில் ஒரு பறவை - கட்டுரை



எங்கள் அலுவலக வளாகத்தையொட்டி இருக்கும் பள்ளி விளையாட்டு மைதானம் அளவில் மிகப்பெரியது.  ஒருபக்கம் சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவார்கள். இன்னொரு பக்கத்தில் பெண்களின் பந்துவிளையாட்டு நடக்கும். வேறொரு மூலையில் வலையைக் கட்டி சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிப் பழகுவார்கள். இன்னொரு மூலையில் உடற்பயிற்சி ஆசிரியரின் வழிகாட்டலின்படி சிறுவர்கள் கூடைப்பந்து பழகுவார்கள். எந்த நேரத்தில் போய் நின்றாலும் ஏதாவது ஒரு கூட்டம் ஆடியபடியே இருக்கும்.  மனச்சுமைகளையெல்லாம் மறந்துவிட்டு சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம். சிறிய பிள்ளைகள்  ஆடுவதையும் ஓடுவதையும் துள்ளுவதையும் கைகொட்டிச் சிரிப்பதையும் பார்த்தபடி நின்றிருந்தாலேயே போதும். ஒரு மலரைப்போல மனம் தானாக மலரத் தொடங்கிவிடும். ஒரு கணமாவது நம் குழந்தைப்பருவம் நினைவைக் கடந்துபோகும்.

எப்போதாவது சில நேரங்களில் அந்த மைதானத்துக்குப் போவதுண்டு. என்னைச் தேடிக்கொண்டு வருகிறவர்களைச் சந்திக்க அடையாளமாகச் சொல்வதற்கு அந்த இடம் மிகவும் வசதியானது. மைதானத்தைச் சுற்றியும் நிழல்பரப்பியபடி ஏராளமான மரங்கள் உண்டு. சிறிது தொலைவில் பழச்சாறுக்கடையும் தேநீர்க்கடையும் உண்டு. ஒன்றிரண்டு மணிநேரங்களைத் தாராளமாகப் பேசியபடி கழிக்கலாம்.
    ஒரு நண்பரின் வருகையை எதிர்பார்த்துத்தான் அன்று மைதானத்துக்கு அருகே காத்திருந்தேன். ஓரமாக நிறுத்தப்பட்டிருந்திருந்த ஒரு வாகனத்திலிருந்து திரையிசைப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. இளம்பெண்கள் சிலர் சத்தமாகச் சிரித்தபடி பாதையோரமாக நடந்துசென்றார்கள். மைதானத்தில் சிறுவர்கள் கால்பந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கால்கள் தந்திரமாக பந்தைத் திருப்பித்திருப்பித் திசைமாற்றும் வேகமும் அதை உதைத்துக்கொண்டே தள்ளிச்செல்லும் சாமர்த்தியமும் ஆச்சரியமாக இருந்தன. எல்லாவற்றையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த என் கண்கள் தற்செயலாக மரத்தடியில் புல்வெளிமீது தத்தத்தத்தி நடந்துகொண்டிருந்த ஒரு பறவையின்மீது படிந்தது. சாம்பல்நிறத் தலை. அதன் அளவு கிட்டத்தட்ட ஒரு மைனாவின் தலையைப்போல. பச்சை நிற உடல். ஒரு கிளியைப்போல. சற்றே கருமை படர்ந்த  அடிவயிறு. ஒரு குயிலைப்போல. கூர்மையான மெல்லிய அலகு. அளவான வால். ஆனால் அதன் பெயரைமட்டும் என்னால் சரியாகக் கணிக்கத் தெரியவில்லை.  அதன் வசீகரமான தோற்றத்தைப் பார்த்தபடியே இருக்கவேண்டும்போலத் தோன்றியது. ஒருகணம்கூட அதன்மீது நிலைத்திருந்த பார்வையை விலக்கமுடியவில்லை. அவ்வளவு அழகு.
    புல்வெளியைக் கடந்து அருகில் நின்றிருந்த ஒரு செவ்வரளிச் செடியின் பக்கமாகச் சென்றது. வேரடியில் எதையோ ஒருகணம் கொத்திக் கிளறியது. பிறகு சுழன்று வட்டமடித்து எழுந்து பறந்து தாழ்வான ஒரு கிளையில் அமர்ந்தது. யாரையோ எதிர்பார்ப்பதுபோல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திரும்பிப்திரும்பிப் பார்த்தது. அப்புறம் மெதுவாக அருகிலிருந்த நுணாமரத்தைநோக்கிப் பறந்தது. அதன் சிறகுகளில் உட்புறத்தில் வெண்மை படிந்திருப்பதைக் கண்டேன். அப்படியே பறந்துபோய்விடுமோ என்று என் மனம் சற்றே பதற்றமடைந்தது. வேகவேகமாக அதன் அடையாளங்களை மனத்தில் மறுபடியும் ஒருமுறை உள்வாங்கிக்கொண்டேன். ஆனால் அந்த அச்சத்துக்கு அவசியமே இல்லாதபடி என் பார்வையிலேயே இருக்கும்வண்ணம் ஒரு கிளையில் அமர்ந்தது. பிறகு கிளையின்மீதே தத்தித்தத்தி சிறிது தொலைவுக்கு நடந்தது. ஒருநிமிடம் வானத்தை அண்ணாந்து பார்த்தது. மறுநிமிடம் தரையைக் குனிந்து பார்த்தது. என்ன நினைத்ததோ தெரியவில்லை, செவ்வரளிச்செடியின் பக்கமாக மீண்டும் வந்து உட்கார்ந்தது. என் பார்வைப்பரப்புக்குள் அது வளையவளைய வந்த ஒவ்வொரு மணித்துளியும் ஒருவித பரவசத்தில் திளைத்திருந்தேன். எதிர்பாராத ஒரு தருணத்தில் அது வானைநோக்கி எழுந்து பறந்து பார்வையிலிருந்து மறைந்தது.
    ஆனந்தத்திலிருந்து மீண்டெழுந்த மனத்தில் அதன் பெயர் தொடர்பான கேள்வி மறுபடியும் முளைத்தது. எனக்குத் தெரிந்த பறவைகளின் பெயர்களையெல்லாம் ஒருமுறை வரிசைப்படுத்திப் பார்த்தேன். அந்தப் பட்டியலில் அதன் பெயர் இல்லவே இல்லை. யாரிடம் அதைக் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தெரியமால் குழப்பரூம் தவிப்புமாக நின்றிருந்தேன். குறிப்பிட்ட நேரத்துக்குள் நண்பர் வந்திருந்தாலாவது, அவரைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாமே என்று தோன்றியது.
    வாகனத்தில் திரையிசையைச் சுவைத்துக்கொண்டிருந்தவர் வெளியே நின்றிருப்பதை அப்போதுதான் பார்த்தேன்.  அவரும் அப்பறவையைக் கவனித்திருக்கக்கூடும் என்று தோன்றியது. நானாகவே அவரை நெருங்கிப் பேச்சுகொடுத்தேன்.
    "அந்தப் பறவையின் பெயரென்ன என்று தெரியுமா?"
    அவர் முகத்தில் குழப்பமும் ஆச்சரியமும் படிவதைக் கண்டேன். என் கேள்வியைச் சரியாகக் கேட்டுக்கொள்ளாதவரைப்போல "என்ன கேட்டிங்க? சரியா காதில விழலையே" என்றார்.  "இப்ப பறந்துபோச்சே, அந்தப் பறவையுடைய பெயர் தெரியுமான்னு கேட்டேன்" என்றேன்.
    "சாரி, நான் பாக்கலையே சார்" விசித்திரமான பார்வையை என்மீது படரவிட்டபடி சொன்னார் அவர். மறுகணமே சட்டென்று  வாகனத்துக்குள் ஏறி உட்கார்ந்துகொண்டார். சாதாரணமாக அப்படிப்பட்ட ஒரு எதிர்வினை என் மனச்சமநிலையைக் குலைத்துவிடும். ஆனால் அன்றிருந்த வினோதமான மனநிலையில் அதை ஒரு பொருட்டாகவே நான் எடுத்துக்கொள்ளவில்லை. மனத்துக்குள் விரிந்த பெயர்ப்பட்டியலை இன்னொருமுறை புரட்டியபடி நண்பரின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினேன்.
    கால்மணிநேரத்துக்குப் பிறகு நண்பர் வந்து சேர்ந்தார். மைதானத்தின் விளிம்பைத் தொட்டதுமே வாகனத்திலிருந்து ஒரு கையை உயர்த்தி அசைத்தபடி புன்னகைத்தார். "சாரி சார். பனஷங்கரி ரிங்ரோட்ல பெரிய டிராஃபிக் ஜாம். சென்டிமீட்டர் சென்டிமீட்டரா நகர்ந்துவரவேண்டியதா போயிடுச்சி."
    அவர் எனக்குச் சில புத்தகங்களைக் கொண்டுவந்திருந்தார். நான் சில புத்தகங்களை அவருக்காக வைத்திருந்தேன். பண்டமாற்று முடிந்ததும் நான் அந்தப் பச்சைப்பறவையைப்பற்றி விவரித்தேன். அவர் கண்கள் ஆச்சரியத்தில் அகலமடைந்தன.
    "எங்க பாத்திங்க?"
    "இப்பதான். இங்கதான். இவ்வளவுநேரம் இங்கயேதான் பறந்துட்டிருந்திச்சி. இப்பதான் பறந்துபோச்சி."
    நான் அது அமர்ந்திருந்த இடத்தையும் தாவித்தாவிச் சென்ற இடத்தையும் காட்டினேன்.
    "இன்னும் கொஞ்சநேரம் பாக்கலாம். மறுபடியும் வந்தாலும் வரலாம்."
    வேறு ஏதேதோ விஷயங்களையெல்லாம் பேசிப் பகிர்ந்துகொண்டாலும் மனம்மட்டும் அந்தப் பறவையின்மீதே குவிந்திருந்தது. அரைமணிநேரத்துக்குப் பிறகும் அது பார்வையில் தென்படவே இல்லை. பொழுதும் சரியத் தொடங்கிவிட்டது. அப்பறவையின் உடலமைப்புத் தகவல்களை மறுபடியும் கேட்டுத் தெரிந்துகொண்டார் நண்பர். தன் அம்மாவிடமோ அல்லது சகோதரிகளிடமோ சொல்லித் தகவல் தெரிவிப்பதாகச் சொன்னார். அவர் வாகனத்திலேயே அருகிலிருந்த பேருந்து நிறுத்தம்வரைக்கும் வந்து இறங்கிக்கொண்டேன். பயணம் முழுதும் அந்தப் பறவை என் மனவானில்  சிறகடித்தபடி இருந்தது. அதன் பெயரை அறியாததை நினைத்து சற்றே கூச்சம் படர்ந்தது.
    பறவைகளைப்பற்றிய ஒரு புத்தகத்தை நேஷனல்புக் டிரஸ்ட் மொழிபெயர்த்து வெளியிட்டதும் அதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும் அதைத் தேடியெடுத்துப் பார்த்தேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளின் படங்களும் தகவல்களும் அப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால் என்னை வசீகரித்த பறவைக்குப் பொருந்தும் வகையில் ஒரு தகவலும் இல்லை.
    "வந்ததுலேருந்து என்ன தேடிட்டே இருக்கிங்க?"
    கேள்வியோடு முன்னால் வந்த என் மனைவியிடம் பார்த்ததையெல்லாம் சொல்லி அதன் பெயர் தெரியாமல் தவிக்கிற கதையையும் சொன்னேன்.
    "நீங்க சொல்றதப் பாத்தா மைனாமாதிரிதான் இருக்குது."
    "ஐயோ, மைனா தெரியாதா எனக்கு? மூக்குக்கு மேல மஞ்சளா இருக்கும். கரும்பழுப்பு நிறமும் மஞ்சளும் சேர்ந்ததா உடல் இருக்கும். இது அப்படி இல்லையே? பச்சையாதானே இருந்தது?"
    "ஒருவேளை பச்சை மைனாவோ என்னமோ?"
    "அப்படி ஒரு பெயரையே இதுவரை கேள்விப்படலையே. நீ புதுசா சொல்ற?"
    "புதுப் பறவைக்கு புதுப் பேரு."
    அவளுக்குத் தெரிந்த மேலும் சில பெயர்களையும் தகவல்களோடு பரிசீலித்தோம். ஒன்றும் பொருந்திப் போகாதது ஏமாற்றமாக இருந்தாலும் அதைக் கண்டறியும் சவால் மனத்துக்குப் பிடித்திருந்தது.
    மறுநாள் மதிய உணவுக்கு பிறகு என் அலுவலக நண்பர்கள் சிலரோடு அந்த மைதானத்துக்குச் சென்றேன். பறவையைப்பற்றிய தகவல்களை அவர்களுக்கும் சொல்லிவைத்திருந்தேன். பார்த்த கணத்திலேயே அதன் பெயரைத் தன்னால் சொல்லிவிடமுடியும் என்றும் அந்தக் கவலையை நான் விட்டுவிடவேண்டும் என்றும் பசவராஜ் சொல்லிக்கொண்டே இருந்தான். நாங்கள் அனைவருமே அந்தப் பறவையின் வருகைக்காகக் காத்திருந்தோம்.
    மைதானத்துக்குள் பிள்ளைகள் எழுப்பிய சத்தம் ஒரு பெரிய பறவைக்கூட்டத்தின் இரைச்சலைப்போல இருந்தது. நுணா மரத்தில் ஏராளமான காக்கைகள் வந்து உட்கார்ந்திருந்தன. தாழ்வான ஒரு கிளையில் ஒரு இரட்டைவால் குருவி அமரந் து வேடிக்கை பார்த்தது. இன்னொரு திசையில் ஒரு குருவிக்கூடு தெரிந்தது. சுள்ளிகளின் இடைவெளி வழியாக கூட்டுக்குள் குஞ்சுகள் இருப்பதைக் காணமுடிந்தது. சில கணங்களில் ஏதோ ஒரு திசையிலிருந்து விர்ரென்று பறந்துவந்த தாய்க்குருவி கூட்டுக்குள் இறங்கியது. குஞ்சுகள் கீகீயென்று மாறிமாறி குரல்கள் எழுப்பின. முதல் வாய் உணவை யார் வாங்கிக்கொள்வது என்று போட்டிபோட்டுக்கொள்கிறது போலும் என்று நினைத்துக்கொண்டேன். ஒவ்வொரு குஞ்சின் வாய்க்குள்ளும் அது அவசரமில்லாமல் உணவை நிரப்பியது தாய்க்குருவி. ஒரு மைனா வேகமாக மைதானத்தைப் பறந்து கடந்தது. மற்றபடி வேறு எந்தப் பறவையும் கண்ணில் படவில்லை.
    "எங்கே போச்சி நீ சொன்ன பச்சைப்பறவை?" ஹெக்டேயின் குரலில் சற்றே கேலி கலந்திருப்பதை உணரமுடிந்தது. அவன் உதடுகளில் குறுநகை நெளிந்தது.
    "இங்கதான் பார்த்தேன்."
    "பாத்ததெல்லாம் சரி. ஆனா இன்னும் இங்கயே இருக்கணும்ன்னு ஏதாச்சிம் சட்டம் இருக்குதா என்ன? எங்கயாவது பறந்து போயிருக்கலாம். வேற எதாவது சந்தர்ப்பத்துல வந்து எறங்கனாலும் எறங்கலாம்"  எனக்காகப் பரிந்துபேசுவதுபோல சொன்னான் பசவராஜ். அவன் மனஓட்டத்தை என்னால் சரியாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை.
    "நான் பொய்சொன்னமாதிரி நீங்க எல்லாருமே நினைக்கறிங்க போல..." என் குரல் என்னையறியாமலேயே உடைவதைப்போல இருந்தது.
    "அடடா, நீ பொய்சொல்றன்னு இப்ப யாருப்பா சொன்னது? சரியா கவனிக்கலையோ என்னமோன்னு ஒரு சின்ன சந்தேகம்."
    "சரியாதான் கவனிச்சேன். நான் சொன்னதெல்லாம் உண்மைதான். நீங்களே ஒருதரம் கண்ணால பாத்துட்டீங்கன்னா நம்புவிங்க."
    "ஒருவேளை, வேற நாட்டுப் பறவையா இருக்குமோன்னு தோணுது...." ஹெக்டேயின் குரல் சந்தேகத்தோடு ஒலித்தது. "ரங்கனத்திட்டுக்குப் போற பறவை அப்படியே காலாற கொஞ்ச நேரம் நம்ம கவிஞருக்கு காட்சி கொடுத்திட்டு போயிருக்கும்..."
    "வலசை போவதுன்னு சொல்வாங்களே, அதுபோலவா?"
    "இருக்கலாம். அப்படி ஒரு பறவையை எங்க கிராமத்துலயும் சரி, இங்க நகரத்துலயும் சரி இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை. நிச்சயமா வேற நாட்டுப் பறவையாதான் இருக்கும்."
    கிட்டத்தட்ட அரைமணிநேரத்துக்கும் மேலாக நாங்கள் அங்கே நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். இடைவேளை முடிந்து வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு அடையாளமாக மணியடிப்பது கேட்டது. பிள்ளைகள் அனைவரும் வேகவேகமாகக் குதித்தபடி ஓடினார்கள். ஒரே கணத்தில் மைதானத்தில் வெறுமை சூழ்ந்தது. ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும் நான் எல்லா மரங்களின் கிளைகள்மீதும் பார்வையைச் சுழலவிட்டேன். மேற்குப் பக்கமாக ஒரு கழுகு வட்டமடித்தபடி இருந்தது. அதைத்தவிர வேறு எந்தப் பறவையும் கண்களில் தென்படவே இல்லை. பேசிக்கொண்டே மறுபடியும் அலுவலகத்துக்குத் திரும்பினோம்.
    மறுநாளும் அந்தப் பக்கமாகச் சென்று மறுபடியும் மரத்தடியில் நின்றோம்.  எதேதோ விஷயங்களைத் தொட்டு எங்கள் உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் மனம்மட்டும் அந்தப் பறவையின்மீதே குவிந்திருந்தது. எந்த இடத்திலும் அதன்முகம் தென்படவில்லை. அதைத் தேடி அலைந்த என் பார்வையில் வேறு இரண்டு குருவிகள் விழுந்தன.
எங்கள் அருகே இருந்த து¡ங்குமூஞ்சி மரத்தடியில் வேர்களின் புடைப்புகளிடையே அந்த இரண்டு குருவிகளும் உல்லாசமாக ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. வேரின் இடுக்கிலிருந்து எழுந்த ஒரு குருவி மரத்தையே ஒரு வட்டமடித்துவிட்டு மறுபடியும் வேருக்கருகே வந்து இறங்கி திரும்பிப் பார்த்தது. மறுகணமே அந்த இன்னொரு குருவியும் வெளியே வந்து வானத்தின் வேறு திசையில் வட்டமடித்துவிட்டு வேரடிக்கு மறுபடியும் வந்து நின்று தலையைச் சாய்த்து இணைக்குருவியைப் பார்த்தது. முதல் குருவி நான்குநான்கு அடிகளாகத் தாவித்தாவி பக்கத்து மரத்தருகே போனது. இரண்டாவது குருவியும் தாவித்தாவிச் சென்று அதன் அருகில் நின்று இறகுகளை விரித்து அடித்துக்கொண்டது. கீச்கீச்சென்று எதையோ சொன்னதுபோல இருந்தது. அதைக்கேட்டு முதல் குருவி தயங்கித்தயங்கி  இரண்டாவது குருவியின் பக்கமாக நெருங்கி வந்தது. இரண்டு குருவிகளுக்கும் இடையே வெறும் ஓரடி இடைவெளிமட்டுமே இருந்தது. இரண்டும் நெருங்கிநிற்கப் போகின்றன என்று நினைத்த கணத்திலேயே இரண்டாவது பறவை வேகவேகமாக இறக்கையை அடித்தபடி எழுந்து மரக்கிளையைநோக்கித் தாவியது. இலைத்தளிர்களால் நிரம்பிய சின்னக் கிளையின் நுனியில் நின்று குனிந்து பார்த்தது. அடுத்த நிமிடமே முதல் பறவையும் பறந்துசென்று அதே இடத்தில் உட்கார்ந்தது. நெருங்கிநெருங்கி இரண்டாவது குருவியின் வாலைக் கொத்தியது. வாலை படபடவென்று அடித்துக்கொண்ட இரண்டாவது குருவி முதல் குருவியின் முதுகில் செல்லமாகக் கொத்தியது. இரண்டு குருவிகளும் மாறிமாறி கீச்கீச்சென்று சத்தமாக  பேசிக்கொண்டன. சிறிது நேரம் ஒரே இரைச்சல். ஒன்றிடம் ஒன்று முறையிடுவதுபோல. அல்லது ஒன்றிடம் இன்னொன்று விளக்கம் தருவதைப்போல. பிறகு இரண்டு குருவிகளும் கிளையைவிட்டு மெதுவாக இறங்கி பழையபடி வேரடியில் இணைந்து நின்றன.
    வேகவேகமாக ஓடிமறையும் திரைக்காட்சியைப்போல அந்தக் குருவி நாடகம் தோன்றியது. அந்தத் தருணத்தில் உண்மையிலேயே எங்கள் தேடுதல் உட்பட எல்லா விஷயங்களும் மறந்துபோயின. உடல் சிலிர்ப்பதைப்போல இருந்தது.
    "லவ் பேர்ட்ஸ்ன்னு சொல்லி கடையில கூண்டுல வச்சி விப்பாங்களே, பாத்திருக்கியா நீ?" திடீரென பசவராஜ் கேட்டான். எங்கள் கவனம் முற்றிலுமாக அவன்பக்கம் திரும்பியது.
    "ம். பாத்திருக்கேன்.." நான் உற்சாகமாக அவன்பக்கமாகத் திரும்பினேன்.
    "அந்தப் பறவைங்கதான் நீ சொல்லறமாதிரி கலர்கலரா இருக்கும். உலகத்திலேயே அதிசயமான நிறக்கலவைகள் அதுக்கு உண்டு. நீ சொல்ற நிறமெல்லாம் அந்தமாதிரி பறவைகளுக்குத்தான் பொதுவா இருக்கும். எனக்கு என்ன தோணுதுன்னா, யாரோ ஒருத்தவங்க அந்த மாதிரி லவ்  பேர்ட்ஸ் வாங்கி வளர்த்து வந்திருக்கலாம். அந்தப் பறவைங்கமேல உயிரா இருந்திருக்கலாம். அந்தப் பறவைங்க கூண்டுக்குள்ள கொஞ்சறதயும் சந்தோஷமா விளையாடறதயும் பாத்து அவுங்களும் சந்தோஷப் பட்டிருக்கலாம். திடீர்ன்னு ஒரு நாள் ஆண்பறவையோ பெண்பறவையோ ஏதோ ஒன்னு உடம்புக்கு முடியாம இருந்து இறந்துபோயிருக்கலாம். இல்லைன்னா, அவுங்க விட்டிலயே பூனையோ எதுவோ ஒன்னு எதாவது ஒரு பறவையை அடிச்சி முழுங்கியிருக்கலாம். தனியா இருந்து சங்கடப்பற பறவையை பாக்கறதுக்கு வருத்தப்பட்டு அத வளத்தவங்க கூண்டை திறந்துவிட்டிருக்கலாம். நீ பாத்தது அப்படிப்பட்ட ஒரு தனிமைப்பறவையா இருக்கலாமோ என்னமோ...."
    அவன் சொன்ன சாத்தியப்பாட்டை அப்படியே உண்மையாக ஏற்றுக்கொள்ளலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனாலும் ஏதோ ஒரு பத்து விழுக்காடு அளவு அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தோன்றியது.
    "நாம மறுபடியும் கண்ணால பாக்கறவரைக்கும் நீ சொல்றதையே உண்மைன்னு வச்சிக்குவோம்.."
    அமைதியாக அந்த உரையாடலை தற்காலிகமாக ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தேன். எல்லாருமாக அலுவலகத்துக்குப் பேசியபடி திரும்பினோம். வேறு எந்தத் திசையிலாவது அது பார்க்கக்கிடைக்குமா என்று நப்பாசையோடு பார்த்தபடி நடந்தேன்.
    மறுநாள் மாலை.  மைதானத்துக்கு அருகே வரச்சொல்லியிருந்த நண்பருக்காகக் காத்திருந்தேன். வழக்கம்போல  மைதானம் பிள்ளைகளின் ஆட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஓவென்று ஒரே சத்தம். ஒரே நேரத்தில் நாலைந்து குழுக்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். யார் அடித்த பந்து எந்தத் திசையில் போகிறது என்பதே தெரியவில்லை. கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் பந்தை எடுத்துப்போடச்சொல்லி சிறுவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
    என் அருகே வந்து விழுந்த ஒரு பந்தை எடுத்து வீசிவிட்டுத் திரும்பியபோது பழைய பறவையைப் பார்த்தேன். பச்சைப்பறவை. என் உடலில் ஒரு சின்னச் சிலிர்ப்பு பூப்பதைப் பார்த்தேன்.  காணமுடியாமல் போய்விடுமோ என்று இத்தனை நாட்களும் என் நெஞ்சைப் பாடாய்ப்படுத்திய பறவை அமைதியே உருவாக குரோட்டன்களின் இடையே நடந்துபோனது. அதே அழகான சாம்பல்நிறத்தலை. பச்சை நிற உடல். விறைப்பான வால். என்ன அழகு. என்ன அழகு. அதன் மேனியைத் தொட்டுத்  தடவவேண்டும் போல இருந்தது. அதைக் காட்டுவதற்காக பத்து நாட்களாக நான் பட்ட சிரமமெல்லாம் ஒரே கணத்தில் கரைந்தது. என்னோடு சேர்ந்து அதைப் பார்ப்பதற்கு வேறு யாரும் இல்லையே என்பது சற்றே வேதனையாக இருந்தது.
    பசவராஜ், ஹெக்டே என என்னுடைய எல்லா நண்பர்களையும் அக்கணத்தில் நினைத்துக்கொண்டேன். மறுபடியும் அப்பறவையைப்பற்றி பேச்செடுத்தால் ஒருவேளை அவர்கள் என்னைப் பித்தனாக நினைக்கக்கூடும் என்று தோன்றியது.  நினைத்தால் நினைத்துக்கொண்டுபோகட்டும். நஷ்டமில்லை என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன்.  மறுபடியும் என் மனத்தில் நிலைத்துவிட்ட அதைப் பார்க்க நினைத்ததே பெரும்பேறு என்று தோன்றியது. அப்படி ஒரு பறவை மண்ணில் இருப்பதை எனக்கு நானே உறுதிசெய்துகொள்வதற்கு அத்தருணத்தை அந்தப் பறவையே எனக்கு வழங்கியதாக சொல்லிக்கொண்டேன்.