“அங்க பாருங்க சார் வானவில். என்ன அழகு. என்ன வர்ணம். நம்பவே
முடியாதபடி நமக்கு வேண்டப்பட்ட ஒருத்தவங்க திடீர்னு வாசல்ல வந்து நின்னு சிரிக்கற மாதிரி
இருக்குது பாருங்க. மழைச்சாரல்தான் உலகத்துலயே சந்தோஷம்னா, அந்தச் சாரல் நேரத்துல இப்படி
வானவில் பாக்கறதுதான் ரொம்பரொம்ப சந்தோஷம், என்ன சொல்றீங்க நீங்க?”
“உண்மைதான், வானவில்ல எப்பப் பாத்தாலும் ஒடனே வயசு கொறஞ்சி சின்னப் புள்ளயா மாறிடுது மனசு, ரொம்ப உற்சாகமா இருக்குது.”
“சேம்பிளுக்கு மேசைல பிரிச்சிப்போட்ட பொடவயப்போல மினுமினுன்னு
கண்ண பறிக்கறமாதிரி இருக்குது பாருங்க. இந்தப் பின்னணியில ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் என்ட்ரிய
வச்சா ரொம்ப பொருத்தமா இருக்கும். ஒரு பக்கம் அதிசயமான வானவில். இன்னொரு பக்கம் மனசக்
கவரக்கூடிய அதிசயமான ஹீரோயின். அந்தக் காட்சிய படமா எடுத்தா ரொம்ப அழகா வரும் தெரியுங்களா?”
“நல்லாதான் வரும். ஆனா மழயோ சாரலோ சினிமாவுல காட்டனா அடுத்த
காட்சிலயே யாராவது நனஞ்சிட்டு ஆடறமாதிரி காட்டறதுதானே வழக்கமா இருக்குது. வானவில்ல
யாரு காட்டறாங்க?”
“நா காட்டுவேன் சார். முதல் காட்சியிலேயே காட்டுவேன்.”
“நீங்க என்ன சினிமாக்காரரா?”
“ஆமாம். குலசேகர். இயக்குநர் குலசேகர். உங்க பேரு?”
“பாலு. எல்.ஐ.சி.ல வேல செய்றேன்.”
“மாமல்லபுரமே ஒரு அதிசயமான கடற்கரை. பாக்கறதுக்கு அதிசயமான
வானவில். பேசறதுக்கு உங்கள மாதிரி அதிசயமான நட்பு. என் வாழ்க்கையில இன்று ரொம்ப சந்தோஷமான
நாள்னு தோணுது.”
“என்ன படம் எடுத்திருக்கிங்க இதுவரைக்கும்? நான் பார்த்த
ஞாபகம் இல்லயே?”
“இதுவரைக்கும் வரலை. இனிமேல வரும் மிஸ்டர் பாலு. எட்டு படங்களுக்கு
ஸ்க்ரிப்ட் எழுதி வச்சிருக்கேன். ஒவ்வொன்றும் முத்து. அத எடுத்துகிட்டு அப்படியே நோ
ஷுட்டிங்க் போயிடலாம். அந்த அளவுக்கு பக்கா£வா தயாரிச்சிருக்கேன். பதிமூனு வருஷம் கோடம்பாக்கத்துல
இருந்தன. பதினெட்டு படங்கள்ள அஸிஸ்டண்ட் டைரக்டரா வேல பாத்தேன். என் துரதிருஷ்டம் தனியா
படம் அமையலை. நானும் எவ்வளவோ முட்டிமோதி பாத்துட்டேன். ஒன்னும் நடக்கலை. பழம் நழுவி
பால்ல உழறமாதிரி எல்லாமே நடக்கும். அப்பாடி, வாழ்க்கையில விடிவு காலம் வந்துடிச்சின்னு
நிம்மதியா படுப்பேன். விடியற நேரம் அந்த வாய்ப்புக்கு ஆபத்து வந்துடும். இங்க கூட சாதி
பாக்கறானுங்க சார். ஒங்க சாதிக்கு இதெல்லாம் சுட்டுப்போட்டாக்கூட வராது போப்பான்னு
மூஞ்சிக்கு நேராவே சிரிச்சிகிட்டே சொல்வானுங்க சார்.”
“என்.எஃப்.டி.சி.க்கு அனுப்பிப் பாக்கலாமே.”
“அதுக்கெல்லாம் ரொம்ப விதிமுறைகள் இருக்குது சார். இருந்தாலும்
அங்கயும் முயற்சி செய்யாம இல்ல. என் முதல் ஸ்க்ரிப்ட்ட அங்கதான் அனுப்பனேன். நட்சத்திரங்கள்னு
பேரு. ஆங்கிலத்துல மொழிபெயர்த்து ஏழெட்டு செட் காப்பி எடுத்து அனுப்பி வச்சேன். மூணு
வருஷமா கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருந்துட்டு நாலாவது வருஷம் திரும்பி வந்துடிச்சி.
வடநாட்டுக் காரனுங்களுக்கு நம்மளயெல்லாம் பாத்தா ஏதோ வெளிநாட்டுக்காரன பாக்கறமாதிரி
நெனப்பு சார். அவனுங்க மூலமா நமக்காக எதுவும் நடக்காது.”
“உங்க இயக்குநர் உங்களுக்கு எந்த உதவியும் செய்யலையா?”
“செற்றதுக்கு மனசில்ல சார். நீங்க நல்ல மனுஷன்தான். ஆனா நல்ல
இயக்குநர் இல்லன்னு அவர் முன்னாலேயே ஒருநாள் சொல்லிட்டேன். அதுல அவருக்கு ரொம்ப வருத்தம்.
தொடக்கத்துல ஸ்க்ரிப்ட்ல ஏதாவது பலவீனமான அம்சங்கள் சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாரு.
நீதான்டா தைரியமான அஸிஸ்டன்ட்னு வார்த்தைக்கு வார்த்தை பாராட்டுவாரு. காட்சிங்கள எப்படி
மாத்தலாம்னு ஐடியாவெல்லாம் கேப்பாரு. ஆனா நாளாவ நாளாவ தப்புங்கள எடுத்துச் சொன்னாலேயே
கோபம் வர ஆரம்பிச்சிடச்சி. அவர விட்டு விலகி வேற ரெண்ட மூனு பேர்கிட்ட வேல செஞ்சேன்.
ஒன்னும் சரியா அமையலை.”
“எப்படி இந்தத் துறையில இவ்வளவு ஆர்வம் வந்தது மிஸ்டர் குலசேகர்?”
“எங்க அப்பாதான் சார் காரணம். பாண்டிச்சேரியில முத்தியால்பேட்ட
பக்கம் எங்க வீடு. அவரு சாதாரண ஆலைத் தொழிலாளி. ஒவ்வொரு ஞாயித்துக் கெழமயிலயும் கந்தன்
தியேட்டர்ல சினிமா பாக்கறதுக்கு அழச்சிட்டுப் போவாரு. அந்த தியேட்டர நெனைச்சாலேயே எனக்கு
சந்தோஷம் வந்துரும். ஏதோ சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ட்டு திரும்பனதப்போல. காலையிலேயே
அம்மா கிண்டல் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. என்ன தொழிலுக்கு தொரைங்க ரெண்டுபேரும் ரெடியாயிட்டிங்களான்னு
சிரிச்சிக்கிட்டே கறிக்கு மசாலா அரைப்பாங்க. செகன்ட் இயர் டிகிரி படிக்கறவரைக்கும்
அவரும் நானும் சேந்து ஆயிரம் படமாவது பாத்திருப்பம். மில்லுல வேல செய்றபோது தற்செயலா
சாரத்திலேருந்து கீழ உழுந்து தலையில அடிபட்டு செத்துட்டாரு. திடீர்னு மின்சாரம் நின்னுபோனமாதிரி
அவர் எங்கள உட்டுட்டு போயிட்டாரு. அவர் இல்லாத உலகத்துல எனக்கு எதுவுமே புடிக்கலை.
அவர் உயிரோட இருந்திருந்தா எப்படியாவது ஒரு நல்ல நெலைமைக்கு முன்னேறியிருப்பேன்.”
“அவரும் நீங்களும் சினிமாவப்பத்தி நெறைய பேசிக்குவிங்களா?”
“நாங்க பேச ஆரம்பிச்சாலே பேச்சு தானா எப்படியாவது அந்தத்
தெசைக்கு போயிடும். நான் விதம்விதமா கதசொல்லி காட்டுவேன் அவருக்கு. சினிமாவுல சாத்தனூர்
அணைக்கட்ட பாத்துட்டு ஒருநாளு நெஜமாவே அங்க கூட்டும்போனாரு. அந்த அணைக்கட்டுல மட்டுமே
நடக்கறமாதிரி அவருக்கு நான் ஒரு கதய சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். எதிர்காலத்துல
நீ ரொம்ப பெரிய ஆளா வருவடான்னு திரும்பித்திரும்பி சொல்லிட்டே இருந்தாரு.”
“உங்க சினிமா ஆசயபத்தி மத்தவங்கள்ளாம் என்ன பேசிக்கிட்டாங்க?
உங்க அம்மா என்ன நெனைச்சாங்க?”
“எங்க அம்மாவுக்கு என்ன ஆதரிக்கணும்னுதான் ஆச. வெளிய சொல்லிக்கமாட்டாங்க.
நாபத்திரெண்டு வயசாவுது எனக்கு. இதுவரைக்கும் ஏன்டா எங்கனா போயி ஒரு நூறு ரூபா சம்பாதிக்க
கூடாதான்னு ஒரு வார்த்த கூட கேட்டதில்ல. எனக்கு கொடுத்த சுதந்திரத்துக்கு ஆதரவுன்னுதான
பேரு?
“அக்கா, தங்கச்சி தம்பிங்க?”
“அவுங்களுக்கெல்லாம் நான் ஒரு தென்டத்தீனின்னு நெனைப்பு.
கழுத வயசானாலும் அம்மா சம்பாதிக்கற ஒக்காந்து கொட்டிக்கறான்னு திட்டுவாங்க.”
“நண்பர்கள்?”
“அவுங்கள பொருத்தவரையிலும் நான் ஒரு மர கழண்ட கேஸ். பொழைக்கத்
தெரியாதவன். டிகிரில ஆறு செண்டம் அந்தக் காலத்துல. எதுக்கும் பிரயோஜனம் இல்லாம சுத்தறாம்
பாருன்னு தலையில அடிச்சிக்குவாங்க.”
“மனசுக்கு நெருக்கமா யாருமே இல்லயா?”
“நெருக்கமா? கொஞ்சம் நெருங்கி வந்தவன்னு சொன்னா தமயந்திய
சொல்லணும். படமெல்லாம் அப்பறமா பண்ணலாம். மொதல்ல எதாவது பேங்க் எக்ஸாமோ யுபிஎஸ்சியோ
எழுதி வேலய தேடற காரியத்த பாருப்பான்னு சொல்லிட்டே இருந்தா. பாண்டிச்சேரியில அஜந்தா
டாக்கீஸ் பக்கத்துல அவ வீடு. ரெண்டுமூணு வருஷமா பேசத் தொடங்கனா இதத்தான் பேசுவா. அவ
வழிக்கு நான் வரமாட்டேன்னு தெரிஞ்சதுமே ஒதுங்கி போயிட்டா. இப்ப டெலிபோன் டிப்பார்ட்மெண்ட்ல
பெரிய ஆபீஸர்.”
“எந்த நேரத்துலயும் சினிமாவப் பத்திதான் யோசிப்பிங்களா?”
“சினிமாவத் தவிர வேற எந்த விஷயமம் என் மனசுல கெடையாதுங்க
சார். உதாரணத்தக்கு ஒரு பத்திரிகய படிக்கறம்னு வைங்க. அதுல பத்து செய்தி இருக்கும்.
தலைவர் வீர ஆவேசம் தொண்டர்கள் கண்ட ஊர்வலம். கணவனும் மனைவியும் குழந்தைகளோடு தற்கொலை.
கிண்டல் செய்த இளைஞர்களால் துரத்தப்பட்டதால் இளம்பெண் சாவு. வங்கிக்கொள்ளை. எதப் படிச்சாலும்
அத உடனே மனசு அசைகிற சித்திரங்களா மாத்தி படமாத்தான் பாக்கும். என்ன காஸ்ட்யூம்ஸ்,
எவ்வளவு லைட்டிங், என்ன வசனம், பின்னணி இசை என்ன மாதிரி இப்படி மாத்திமாத்தி யோசிப்பேன்.
எல்லாமே ஏகப்பட்ட படங்களுடைய துண்டுத் துண்டு காட்சிங்களா மாறிடும்,”
“பிறகு?”
“எல்லாமே ஒரு கற்பனைதான், ஒரு நிமிஷம் பெர்க்மன நெனச்சிக்குவேன்,
அவடைய படம் மனசுக்குள்ள ஓடும். அந்தக் காட்சிகள் நான் எடுத்தா எப்படி செய்வேன்னு நெனைச்சிக்குவேன்,
நம்ம ஊருக்கு பொருத்தமா ஒரு கதயே மனசுக்குள்ள உண்டாயிடும்.”
“அப்புறம்?”
“திடீர்னு மனசு பெர்க்மன்கிட்டேருந்து தாவி அகிரா குரோசுவாகிட்ட
போய் நிக்கும். இல்லன்னா, ரித்விக் கட்டக்கிட்ட போயி நிக்கும். உடனே அவுங்க படங்கள
நெனச்சி கூறுபோட ஆரம்பிச்சிடுவேன்.”
“க்ரிட்டிக்கல் அனாலிஸஸ் போலவா?”
“கிட்டத்தட்ட அந்த மாதிரிதான். அதுக்கப்புறம் நான் தயாரா
வச்சிருக்கற முதல் படம் நட்சத்திரங்கள நெனைச்சிக்குவேன். அதுலேருந்து ஒரு காட்சி ஞாபகம்
வரும். அத எப்படி எடுக்கறதுன்னு யோசிச்சி பாப்பேன். ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் அந்தக்
காட்சியப்பத்தி தெளிவா விளக்கிச் சொல்லுவேன். அவுங்கள நடிக்கச் சொல்லித் திருத்துவேன்.
திருப்தியாகற வரைக்கும் விடமாட்டேன். மறுபடியும் மறுபடியும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவேன்.
நல்ல லைட்டிங். பொருத்தமான பின்னணி. பொருத்தமான நடிப்பு. பொருத்தமான வசனம். எல்லாமே
பொருத்தமா அமைஞ்சி ஒரு காட்சிய படம்பிடிச்சி முடிக்கும்போது மனசு ஆனந்தத்துல அப்படியே
எகிறி ஆகாயத்துல பறக்கறமாதிரி இருக்கும். அந்த பூரிப்புக்கு ஈடு இணையே ஒலகத்துல கெடையாது.”
“இந்த அளவுக்குத் தெறம இருந்தும் எந்த வாய்ப்புமே ஏன் வரவே
இல்ல உங்களுக்கு?”
அத எப்படி சொல்லுறது? என் திறமயப் பத்தி விதம்விதமான கற்பன
செஞ்சி வச்சிருந்தேன். ஸ்பாட்ல ஒரு காட்சிக்கான படப்பிடிப்பு நடக்கும். பெரிய டைரக்டர்
இப்பிடி எடுன்னு சொல்வாரு. நான் அத வேறவிதமா எடுக்கலாம்னு மாத்திச் சொல்வேன். எனக்கு
நீ அசிஸ்டென்டா உனக்கு நான் அசிஸ்டென்டான்னு அவுங்களுக்கு ஒரே கோபம். போவச் சொல்லிடுவாங்க.
எதுவுமே நடக்காதமாதிரி மறுநாளும் நான் போய் நிப்பேன். அன்னிக்கு இப்படி ஏதாவது நடந்துடும்.
வெளிய அனுப்பிருவாங்க. கூட இருக்கற அசிஸ்டெண்டுகளுக்கும் பயம் வந்திடச்சி. என்னால அவுங்க
பொழைப்புல மண் விழுந்திடுமோன்னு ஒரு கலக்கம். ஒருநாளு அறைய காலி பண்ணவச்சி ஊரோட கொண்டாந்து
விட்டுட்டாங்க. கோடம்பாக்கம் பக்கமா தயவுசெஞ்சி இனிமே இவன அனுப்பாதிங்கன்னு எங்க அம்மாவ
பாத்து பெரிய கும்பிடு போட்டுட்டு போயிட்டாங்க.”
“கோடம்பாக்கத்துக்கு அதுக்கப்பறமா நீங்க போகவே இல்லையா?”
“போகாம எப்படி இருக்கமுடியும்? அங்க இங்க பாய்கீழ தலையணைகீழன்னு
அம்மா சேத்து வச்சிருக்கற காச எடுத்துகிட்டு மறுபடியும் வண்டி ஏறிடுவேன். அவனுங்க முன்னால
போய் நின்னு அதிர்ச்சி குடுப்பேன். அது அவுங்க படப்பிடிப்புக்கு கௌம்பற நேரமா இருக்கும்.
சிரிச்சி பேசி ஏமாத்தி என்ன எப்படியாவது அறைக்குள்ளயே அடச்சி வச்சிட்டு தந்திரமா போயிடுவானுங்க.
ராத்திரி வந்துதான் தெறந்து சாப்பாடுலாம் குடுப்பானுங்க. கோபம் வந்த அடிச்சிடுவானுங்க.
எப்படியாவது மறுபடியும் ஊருக்கு அழச்சிவந்து விட்டுட்டு போவானுங்க. அம்மாவுக்கு அவமானமா
இருக்கும். அழுவாங்க.”
“அவங்க எப்பவும் ஒங்கள கண்டிச்சதில்லையா?”
“ஒன்னுமே சொல்லல அவுங்க. ராத்திரிப்பூரா அப்பா படத்துக்கு
முன்னால ஒக்காந்துட்டு அழுதிட்டிருந்தாங்க. அதப் பார்த்ததும் என் மனசு கலங்கிடுச்சி.
நம்ம ஆச ஈடேறலன்னாலும் பரவாயில்ல. நம்மால அம்மாவுக்கு தொல்ல இருக்கக்கூடாதுன்னு எல்லாத்தயும்
நிறுத்திட்டேன். அம்மாவே ஆச்சரியப்படற மாதிரி அடங்கி ஒடுங்கிட்டேன்.”
“சினிமா?”
“அது என் மூச்சுமாதிரி. அதப்பத்தி யோசிக்கறத நிறுத்த முடியாதுங்க
பாலு. நிறுத்தினா நான் செத்துடுவேன்.”
“ஓ. சாரி.”
“எனக்கு புடிச்ச மாதிரி ஸ்க்ரிப்ட் தயார் செய்ய ஆரம்பிச்சேன்.
என்னைக்காவது எனக்கொரு வாய்ப்பு வரும்ங்கற நம்பிக்கையில ஏழு ஸ்க்ரிப்ட் எழுதனேன். கிட்டத்தட்ட
நாலு வருஷங்கள் இதுக்காக கஷ்டப்பட்டேன்.”
“மறுபடியும் உங்க நண்பர்ங்கள பாக்கலியா?”
“யாரயும் பாக்கல. பாக்கக்கூடாதுன்ன முடிவெடுத்து எல்லாத்தயும்
விட்டுட்டேன்.”
“இவ்வளவு தூரம் மாமல்லபுரத்துக்கு எப்படி வந்திங்க?”
“இங்க எங்க ஆயாவுடைய வீடு இருக்குத. அமாவப் பெத்த ஆயா. சின்ன
வயசுல கோடவிடுமுறைக்கு இங்கதான் அம்மா எங்களயெல்லாம் கூப்ட்டுக்னு வருவாங்க. இந்தக்
கடற்கரை. இந்தக் கோயில் எல்லாமே என் மனசுக்கு ரொம்ப புடிச்ச இடம். சின்ன வயசுல ஆகாயத்தயும்
கடலயும் கோயிலயும் மாத்தி மாத்தி பாத்தபடி பலமணிநேரம் மெய்மறந்து அப்படியே உக்காந்திருப்பேன்.
நிலா வெளிச்சத்துல பாக்கறதுக்கு இன்னும் ரொம்ப அழகா இருக்கும். திடீர்னு போன மாசம்
கனவுல இந்த கடற்கரையப் பாத்தேன். புத்தம் புதுசா வேறமாதிரி இருந்திச்சி. சட்டுனு ஒரு
எண்ணம் உதிச்சிது. உடனே மனசுகொள்ளாத அளவுக்கு பரபரப்பு. ஒரே துடிப்பு. இந்த கரையில
பல கோயில்ங்கள கட்டனான் பல்லவ மன்னன். கடலுக்கு ஏதோ ஒரு பொருமல். அகங்காரம். தனக்கு
நெருக்கமா நிக்கறதுக்கு இதுக்க என்ன தகுதின்னு நெனைக்கறமாதிரி. காலம்காலமா இந்த கோயில்ங்கள
பாத்து பொருமிகிட்டே இருக்குது. உன்ன விடமாட்டேன்னு கோயில்ங்கள பாத்து ஒவ்வொரு நிமிஷமும்
பாஞ்சிகிட்டே இருக்குது. நூற்றாண்டு கணக்கா தொடருது இந்த பாய்ச்சல். ஒவ்வொரு கோயிலா
விழுங்கி சிரிச்சிக்கிட்டே இருக்குது கடல். இன்னும் நீதான் பாக்கி சத்தமா ஒரு அகங்காரச்
சிரிப்பு கேட்டுட்டே இருக்குத. அழியப் போவறதபத்தி எந்தக் கவலையும் இல்ல, இருக்கறவரைக்கும்
எப்படி இருக்கறேன்ங்கறதுதான் முக்கியம்னு உறுதியா நிக்குது கோயில். ஒருபுறம் ஆர்ப்பாட்டமான
கடலுடைய அலையோசை. இத வச்சி ஒரு வாழ்க்கையையே சொல்லலாம்ன்னு தோணிச்சி. என்ன மாதிரி ஒரு
சராசரி மனிதனுடைய வாழ்க்கை. அத ஸ்க்ரிப்ட்டா எழுத நெனைச்சேன். ஆயா வீட்டக்கு போய்வரட்டுமான்னு
அம்மாகிட்ட கேட்டேன். அம்மாவே சுப்ட்டாந்து விட்டுட்டு போனாங்க. ‘அலையோசையும் மணியோசையும்’னு
அந்த ஸ்க்ரிப்டக்கு பேரு. வேலய முடிச்சாச்சி. என்னுடைய எட்டாவது ஸ்க்ரிப்ட்.”
“ரொம்ப அருமையா கதையயும் பின்னணியயும் இணைக்கறிங்க குலசேகர்.
கவித்துவமா இருக்குது. மத்த ஸ்க்ரிக்ப்டுங்களயும் கேக்கணும்போல தோணுது.”
“கேளுங்களேன் பாலு. காசா பணமா? கததானே? முத
ஸ்கிரிப்ட் நட்சத்திரங்கள். அதபத்தி சொல்லட்டுமா?”
“சொல்லுங்க குலசேகர்.”
“அது ஒரு மனிதனுடைய வாழ்வுப் பயணம் சார்ந்தது. சராசரி மனிதன்
அவன். ரொம்ப நல்லவன். சமூக அறத்துக்கு கட்டுப்பட்டவன். நீதிகளுக்கும் நியாயங்களுக்கும்
கட்டுப்பட்டவன். ஆனால் யாரும் அவனோடு சீரான உறவ வச்சிக்க விரும்பலை. தமக்கு அப்பப்போ
தேவைப்படற சின்னச்சின்ன பொய்கள், திருட்டுகள், வம்புகள், வஞ்சகங்களுக்கு அவனால எந்த
உதவியும் கெடைக்கறதில்ல. நட்சத்திரங்கள நாம தரைக்கு எறங்க விடறதில்ல. நாமும் அதுங்கள
நேருக்குநேர் சந்திக்க வானத்துக்கு போகறதில்ல. தள்ளிநின்னு பாத்து சந்தோஷப்பட்டு சிரிச்சிட்டு
மறந்துடறோம். நல்லவங்களோட உறவக்கூட நாம் உள்ளூர விரும்பறதில்லங்கறத நினைவூட்டற விதமா
படம் போகும்.”
“உண்மையிலயே பிரமாதம் குலசேகர்”
“ரெண்டாவது ஸ்க்ரிப்ட் ஒரு நாடோடியின் நாட்குறிப்புகள். இளைஞன்
ஒருவன் உற்சாகத்தின் காரணமா இந்த நாட்டை ஒரு நாடோடியா சுத்திப் பாக்கணும்னு கௌம்பறான்.
அவன் போகிற இடங்கள், பாக்கற மனிதர்கள், ஒவ்வொரு கட்டத்திலயும் அவன் சந்திக்கிற கசப்புகள்.
சின்னச் சன்ன சந்தோஷங்கள், கொலை வழக்கு, குற்றம், சிறைத்தண்டனை, விபச்சாரம்னு கதை நெடுக
நிறைய அனுபவங்கள் அவனுக்கு.”
“அருமையா இருக்குது”
“மூணாவது ஸ்க்ரிப்ட் கனகாம்பரங்கள்?”
“பூவோட பேரா?
ஆமாம். ஒங்களுக்கு ஆச்சரியமா இருக்குதா பாலு? எங்க பக்கத்துல
அவ்வளவா தண்ணிப்பாசனம் அதிகமா இல்லாத எடங்கள்ள இருக்கறவங்க ஒரு போகத்துக்கு கனகாம்பரம்
போட்டுடுவாங்க. செடி ரொம்ப செழிப்பா சீக்கிரம் வளந்துடும். பூ மலர்ற சமயத்துல ஒரு தோட்டுத்துல
அம்மா, அப்பா, அக்கா, தம்பி, அண்ணன், அண்ணின்னு குடும்பமே வேல செய்யும். காலையில நாலுமணிக்கு
பனியில தலைக்கு சாக்கு போட்டுக்னு பறிப்பாங்க. எட்டுமணிக்கு எல்லாம் எடபோடப்பட்டு வியாபாரிங்க
கைக்கு போயிடும். பன்னென்டு மணிக்கு மீனம்பாக்கம் போயிடும் சரக்கு. அன்னைக்கு சாயங்காலமே
பெங்களூர், மும்பைன்னு பறந்துரும். தோட்டத்துக்காரனுக்கு கிலோவுக்கு பதினாலு ரூபா பதினைஞ்சி
ரூபா கெடைக்கும். வியாபாரிக்கு இருநூற்றி அம்பதுலேருந்து
முந்நூறு வரைக்கும் கெடைக்கும். கிட்டத்தட்ட இந்த பூ யேபாரத்தப் போலவே இன்னொரு யேபாரமும்
இங்க நடக்குது. அது கெடைக்கும் இது கெடைக்கும்ன தப்பான வழியில ஆசைகாட்டி கிராமங்கள்ளேருந்து
சின்னச்சின்ன பொண்ணுங்களயெல்லாம் அழச்சிட்டு போயி முறைகேடா பயன்படுத்திட்டு பாலியல்
சித்திரவதைக்கு ஆளாக்கி மும்பை, கல்கத்தா, தில்லின்னு பெரிய பெரிய நகரங்களுக்கு கனகாம்பரத்த
அனுப்பறமாதிரி அனுப்பி பணம் சம்பாதிக்கிற கூட்டத்துடைய யேபாரம். அந்த நயவஞ்சகத்தனங்கள
முன்வைக்கறமாதிரி அந்த ஸ்கிரிப்ட் எழுதனன்.”
“நெஞ்சத் தொட்டுட்டிங்க குலசேகர். உண்மையிலேயே அற்புதம்.
ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்றமாதிரி இந்த மூணு நாலு ஸ்கிரிப்டே ஒங்க தெறமைய
உலகத்துக்கு காட்டறதுக்கு போதும். உண்மையிலேயே ஒவ்வொன்னும் பெரிய சிரகம்னுதான் சொல்லணும்.”
“அப்படியா?”
“நீங்க சொல்லற அவுட்லைன கேக்கும்போதே ஏதோ படம் பாக்கற மாதிரி
இருக்குது. நெஜமாவே திரையில பாத்தா எப்படி இருக்குமோ?”
“பெர்க்மன் படம்மாதிரி இருக்கும் பாலு. ஏன் உறைஞ்சிட்டிங்க?
நம்ப முடியலையா? ஆனா எனக்கு அந்த தன்னம்பிக்கை இருக்குது. ஒவ்வொரு காட்சியயும் தங்கத்திலேருந்து
நகை செய்யறமாதிரி எழைச்சிஎழைச்சி செய்வேன் பாலு. எந்த அளவுக்கு ஆழமா போனாலும் சிரமத்த
பாக்காம போயி பூமிக்குள்ள ஒரு ஊத்த எப்படி கண்டுபிடிப்பமோ அந்த அளவுக்கு காட்சி நல்லபடியா
அமையறவரைக்கும் சிரமப்பட்டு எடுப்பேன். ஊத்துத்தணிய கண்டுபிடிக்கற சிலிப்புதான் ஒரு
படைப்பாளியுடைய சிலிப்பு, பெர்க்மனா இருந்தாலும் சரி, குலசேகரா இருந்தாலும் சரி, அந்த
சிலிர்ப்பு ஒன்னுதான்.”
“ஒங்க நம்பிக்கை எனக்கு சந்தோஷமா இருக்குது.”
“இன்னும் நம்பிக்கை இருக்குது மிஸ்டர் பாலு. இந்த படங்கள்
கேன்ஸ், பிரான்ஸ், சிகாகோ, பெர்லின்னு எல்லாத் திரைப்பட விழாக்கள்ளயும் இடம்பெற்று
விருது வாங்கும். கேடயங்கள் கெடைக்கும். அப்ப குலசேகர் இந்திய அளவுல பேசப்படற முக்கியமான
இயக்குநரா இருப்பான். போட்டி போட்டுகிட்டு எல்லாரும் பேட்டி எடுக்க வருவாங்க. அவுங்களுக்கெல்லாம்
எதப்பத்தி எப்பிடி விரிவா பேட்டி தரணும்ன்னுகூட எழுதி வச்சிருக்கேன். அப்படியே அச்சுக்கு
அனுப்பிடலாம். கச்சிதமான பேட்டி. அந்தப் பேட்டி என்னயும் என் திறமையையும் என் மனசயும்
இந்த உலகத்துக்கு உணர்த்தும்.”
“ஆனா இந்த ஸ்க்ரிப்டுங்கள்ளாம் இன்னும் படமாவலயே குலசேகர்.”
“இருக்கலாம். அது என்னோட பிரச்சன இல்ல. என்னப் பொருத்த வரிக்கும்
எல்லாப் படங்களையும் முழுசா மனசுக்குள்ள எடுத்து பார்த்துட்டேன். உலக அரங்குகள்ளயும்
அது ஓடியாச்சி.”
“ஏன் ரொம்ப சங்கடமா பேசறிங்க?”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. சங்கடம் சந்தோஷம் எல்லாத்தயும்
தாண்டி வந்துட்டேன். இப்ப என் மனம் உணர்வதெல்லாம் ஒருவகையான நிம்மதி. எதயோ எறக்கி வச்சிட்ட
மாதிரி நிம்மதி.”
“குலசேகர். ஏதோ வானவில்ல பத்தி பேச ஆரம்பிச்ச ஒங்கள ஆர்வக்
கோளாறுல எதைஎதையோ கேட்டு ரொம்ப இம்சப் படுத்திட்டேன்னு தோணுது. தயவுசெஞ்சி என்ன மன்னிச்சிடுங்க.”
“அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்ல பாலு. நீங்க கௌம்பறதுன்னா
கௌம்பலாம். நான் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும். இன்னிக்கு பௌர்ணமி இல்லயா? சந்திரோதயம்
பாக்கணும்.”
“நிமிர்ந்து நிக்கற இந்தக் கோயில பாக்கும்போதெல்லாம் ஒங்க
ஞாபகம்தான் வருது குலசேகர். இனிமேல எந்தக் கோயில பாத்தாலும் ஒங்க ஞாபகம்தான் கண்டிப்பா
வரும்.”
“நீங்க ரொம்ப நெகிழ்ந்து போயிருக்கிங்க பாலு.”
“உங்க அனுபவம், ஆழம், அசபோடற தெறமை எல்லாமே என்னை அண்ணாந்து
பாக்க வைக்குது. ஆல் த பெஸ்ட்டுன்னு சொல்ற அளவுக்கு எனக்கு எந்த அனுபவமும் கெடையாது.
உங்க தெறம உலகத்துக்கு சீக்கிரமா புரியணும்ன்னு கடவுள்ட்ட வேண்டிக்கறேன். உங்களோடு
ஒருமுறை கைலுக்கலாமா?
“தாராளமா குலுக்கிக்கலாம் பாலு. போய் வாங்க. வாய்ப்பிருந்தா
பிறகு எப்பவாவது சந்திக்கலாம். வணக்கம்.”
(உயிர்மை - 2005)