Home

Sunday 22 May 2022

மீரா பெஹன் : இமயத்தின் திருமகள்

 

1921ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் ஜெர்மனியின் மீது ஒருவித வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த சூழலில், அதே இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ஜெர்மனியின் இசைக்கலைஞரான பீத்தோவனின் இசையில் மனம் பறிகொடுத்து, மீண்டும் மீண்டும் அந்த இசையைக் கேட்பதில் பொழுதுகளைக் கழித்துவந்தார். பீத்தோவனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக ஓராண்டு காலம் செலவழித்து ஜெர்மன் மொழியைக் கற்றுத் தேர்ந்தார். பீத்தோவனைப்பற்றி அதுவரை ஜெர்மன் மொழியில் வெளிவந்திருந்த நூல்களையும் அவருடைய சமகால ஆளுமைகள் எழுதிய பல்வேறு நினைவுக்குறிப்புகளையும் கடிதங்களையும் தேடித்தேடிப் படித்தார். இறுதியாக பீத்தோவன் பிறந்த ஊரான வியன்னாவுக்குச் சென்று தனிமையில் தன்னை மறந்த நிலையில் பீத்தோவன் நினைவுகளிலும் இசையிலும் சிறிது காலம் மூழ்கியிருந்தார். தன் தேடலின் தொடர்ச்சியாக பீத்தோவன் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு பிரெஞ்சு எழுத்தாளரான ரொமன் ரொலான் எழுதிய பத்து தொகுதிகளைக் கொண்ட ழான் கிரிஸ்தோபிஃப் என்னும் நாவலைப் படித்தார்.

அந்த வாசிப்பனுபவம் பீத்தோவனைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. உடனே ரொமன் ரொலானைச் சந்திப்பதற்காக  1924ஆம் ஆண்டில் பிரான்சுக்குச் சென்றார். காந்தியடிகளை நேரில் சந்தித்ததில்லை என்றபோதும் அவருடைய சிந்தனைகளாலும் செயல்களாலும் ஈர்க்கப்பட்டிருந்த ரொமன் ரொலான் காந்தியடிகளைப்பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்த சமயம் அது.  பீத்தோவனிடம் தொடங்கிய அவர்களுடைய உரையாடல் ஏதோ ஒரு கணத்தில் காந்தியடிகளைப்பற்றியதாக மாறியது. பேச்சின் தீவிரத்தில் ‘காந்தி இன்னொரு ஏசு கிறிஸ்து’ என்று ரொமன் ரொலான் புகழ்ந்துரைக்க, அது ஆன்மிகத் தேடலில் இருந்த அந்த இளம்பெண்ணின் நெஞ்சில் ஆழமாக ஊடுருவிச் சென்று பதிந்தது. அன்றே கடைக்குச் சென்று அப்புத்தகத்தை வாங்கி ஆர்வத்துடன் படித்தார் அவர். சத்தியத்தின் ஒளியால் தன் மனம் நிறைவதை அவர் உணர்ந்தார். அக்கணமே எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்குச் சென்று காந்தியடிகளுக்கு அருகிலிருந்து சேவை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார். அந்த இளம்பெண்ணின் பெயர் ஸ்லேட் மேடலின்.  அப்போது அவருக்கு முப்பத்திரண்டு வயது.

மேடலின் தன் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்து அனுமதி பெற்றார். காந்தியடிகளைப்பற்றி அதுவரை ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த எல்லா நூல்களையும் திரட்டிப் படித்து, அவருடைய ஆசிரம வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொண்டார். அவருடைய சீடராக தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு நூல்நூற்கப் பயிற்சி பெற்றார். புலால் உண்பதை முழுவதுமாகத் துறந்துவிட்டு தாவர உணவுக்கு மாறினார். மது அருந்துவதையும் கைவிட்டார். தரையில் உட்கார்வதற்கும் உறங்குவதற்கும் பழகினார். இந்தியாவிலிருந்து வெளிவந்த யங் இந்தியா இதழுக்கு சந்தாதாரராகி, அதனை ஆர்வமுடன் படித்தார். ஆசிரம விதிகளுக்கு இணங்க உடலுழைப்பில் பயிற்சி பெற வயல்வெளிகளில் குடியானவர்களுடன் சேர்ந்து வேலை செய்தார்.

அத்தருணத்தில், இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக 18.09.1924 முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அது 21 நாட்கள்  நீடித்தது. அந்த உண்ணாவிரதத்தால் சமூகத்தில் மெல்ல மெல்ல அமைதிநிலை திரும்பியது. சமூகத்துக்காக தன்னை வருத்திக்கொள்ளும் காந்தியடிகளுடைய அணுகுமுறையைக் கண்டு எல்லாச் செய்தித்தாட்களும் நெகிழ்ச்சியுடன் செய்தி வெளியிட்டிருந்தது. அவற்றைப் படித்து மனமுருகிய மேடலின் முதன்முதலாக காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். தன் பிறந்தநாளுக்காக தன் தாத்தா அன்பளிப்பாகக் கொடுத்த வைர ஊசியை விற்றதன் வழியாகக் கிடைத்த இருபது பவுண்டை காசோலையாக மாற்றி அக்கடிதத்துடன் இணைத்து அனுப்பி வைத்தார்.

மேடலினின் கடிதத்தையும் காசோலையையும் பார்த்துவிட்டு காந்தியடிகள் மனம் நெகிழ்ந்தார். நன்றி தெரிவித்து 31.12.1924 அன்று மேடலினுக்கு கடிதம் எழுதி அனுப்பினார். சபர்மதி ஆசிரமத்தில் சேர அனுமதி கோரி மேடலின் 29.05.1925 அன்று இரண்டாவது கடிதத்தை எழுதினார். அத்துடன் தான் நூற்ற கம்பளி நூலின் இரு சிறிய மாதிரிகளையும் இணைத்து அனுப்பினார். அவை காந்தியடிகளின் உள்ளத்தைத் தொட்டன. 24.07.1925 அன்று எழுதிய பதில் கடிதத்தில் ஆசிரம வாழ்க்கையின் விதிமுறைகளைச் சுருக்கமாக விளக்கிவிட்டு, ஆசிரமத்தில் இணைவதற்கான இசைவையும் தெரிவித்தார் காந்தியடிகள். அக்கடிதத்தைப் படித்து அகமகிழ்ந்த மேடலின் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு கப்பலில் பயணம் செய்து 07.11.1925 அன்று சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.

ஆசிரமம் பின்பற்றிய எல்லா விதிகளையும் மேடலின் பின்பற்றினார். முதல் நாளிலிருந்தே துளசி மஹார் என்பவர் மேடலினுக்கு நூற்பு ஆசிரியராகவும் சுரேந்திரா என்பவர் இந்தி மொழியைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் விளங்கினர். தினமும் துப்புரவுப் பணிகளிலும் தோட்ட வேலைகளிலும்  மேடலின் பங்கெடுத்துக்கொண்டார். காந்தியடிகளைத் தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக உடனடியாக ரொமன் ரொலானுக்கு தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். காந்தியடிகளிடம் ஒரு தேவதூதரையே கண்டதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். காந்தியடிகள் அவருக்கு மீரா என்று பெயர்சூட்டினார். ஆசிரமத்தைச் சேர்ந்ததவர்கள் அவரை மீரா பெஹன் என்று அழைத்தனர். கதர்ப்பணிகளிலும் பசு தொழுவப் பணிகளிலும் மீராவுக்கு ஆர்வம் இருந்தது. அவர் வேகமாக இந்தி மொழியைக் கற்றுக்கொள்வதற்காக டில்லி தர்யாகஞ்சில் இயங்கிவந்த ஒரு கன்யா குருகுலத்துக்கு அனுப்பிவைத்தார் காந்தியடிகள். மீரா அங்கு சில மாதங்களும் கங்கரி குருகுலத்தில் சில மாதங்களும் தங்கி வேகமாக இந்தியைக் கற்றுக்கொண்டார். குருகுலத்தில் படித்துவந்த பெண்கள் அனைவருக்கும் மீரா எளிய முறையில் ஆங்கிலம் கற்பித்தார்.

இரண்டாண்டு கால இடையறாத பயிற்சியின் விளைவாக மீரா இந்திமொழியில் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டார். யாருடைய துணையுமின்றி பஞ்சடிக்கவும் நூல் நூற்கவும் அவர் தேர்ச்சி பெற்றார். கிராம நிர்மாணப்பணிகளில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார். சில சமயங்களில் வாய்ப்பு கிடைக்கும்போது காந்தியடிகளின் சுற்றுப்பயணங்களிலும் இணைந்து, அவருடைய தனிப்பட்ட தேவைகளைக் கவனித்து பணிவிடை செய்தார். பர்தோலியில் சத்தியாகிரகம் நடைபெற்று வந்த வேளையில், அங்கு சென்று கதர்ப்பணிகளில் ஈடுபட்டார். அப்போது ஒரு நாள் அவருடைய தந்தையார் இங்கிலாந்தில் மறைந்துவிட்ட செய்தி கிடைத்தது. அச்செய்தியைத் தெரிந்துகொண்டதும் காந்தியடிகளிடம் பயணச்சீட்டுகளுக்கு ஏற்பாடு செய்வதாகவும் ஒருமுறை சென்று குடும்பத்தைப் பார்த்துவிட்டு வருமாறும் மீராவிடம் எடுத்துரைத்தார். ஆயினும் அந்த ஆலோசனைக்கு மீரா உடன்படவில்லை.

மீராவை வற்புறுத்த விரும்பாத காந்தியடிகள், பயணங்களும் புதிய மனிதர்களின் சந்திப்பும் மனமாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்ற எண்ணத்தில் கதர்ப்பிரச்சாரத்துக்காக பீகார், வங்காளம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு மீராவை அனுப்பிவைத்தார். அது நல்ல பயனை அளித்தது. கிராமத்து மக்கள் மீராவை தம் சகோதரியாகவே கருதிப் பாசமுடன் பழகினர். அவர்கள் அவரை மீரா அக்கா என்னும் பொருள்பட மீரா பெஹன் என்று அழைக்கத் தொடங்கினர்.

மிகையான வெப்பத்தின் காரணமாக மீராவின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் மீரா ஆசிரமத்துக்குத் திரும்பிவந்து ஓய்வெடுப்பதும், உடல்நிலை சீரானதும் மீண்டும் கிராம சேவைகளில் ஈடுபடுவதுமாக இருந்தார்.

12.03.1930 அன்று காந்தியடிகள் உப்பு சத்தியாகிரக யாத்திரையைத் தொடங்கியபோது, அக்குழுவுடன் மீராவும் இணைந்துகொள்ள விரும்பினார். ஆனால் காந்தியடிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஆசிரமத்திலேயே தங்கியிருந்து ஆசிரமப்பணிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுச் சென்றார். 04.05.1930 அன்று காந்தியடிகள் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இச்சமயத்தில் பீகார் முறைப்படி மீரா ஒரு புதிய இராட்டையை வடிவமைத்திருந்தார். அதைக் காந்தியடிகளைச் சந்தித்து நேரில் காட்டுவதற்காக எரவாடா சிறைக்குச் சென்றார். ஆனால் காந்தியடிகளைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. சிறை அலுவலர் அறையிலேயே அந்த இராட்டையை வைத்துவிட்டுத் திரும்ப நேர்ந்தது. வேறொரு தருணத்தில் அலுவலர் அதைக் காந்தியடிகளிடம் கொடுத்தார். அவர் அந்த இராட்டையில் நூல் நூற்றுப் பார்த்துவிட்டு, அதன் குறைநிறைகளை மீராவுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவித்தார்.

காந்தியடிகள் சிறையில் இருந்தபோது மீரா கதர் வளர்ச்சிக்காக பீகார், சென்னை, கல்கத்தா போன்ற நகரங்களுக்குச் சென்று பல கூட்டங்களில் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வெப்பத்தின் காரணமாக அடிக்கடி அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. கராச்சிக்குச் சென்றிருந்தபோது அவரைத் தட்டம்மை நோய் தாக்கியது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகே அவர் உடல்நிலை சீரடைந்தது. அந்த நேரத்தில் மீராவின் தாயார் இங்கிலாந்தில் மறைந்துவிட்ட செய்தி வந்து சேர்ந்தது. சிறையிலிருந்தபடியே காந்தியடிகள் மீராவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு கடிதம் எழுதினார்.

காந்தி இர்வின் ஒப்பந்தப்படி உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். காந்தியடிகளும் சிறையிலிருந்து வெளியே வந்தார். நாட்டுக்கு விடுதலை கிடைக்காமல் சபர்மதிக்குத் திரும்புவதில்லை என்று அவர் அறிவித்திருந்ததால், அவர் ஆசிரமத்துக்குச் செல்லாமல் வேறொரு இடத்தில் தங்கியிருந்தார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 29.08.1931  அன்று லண்டனுக்கு கப்பலில் பயணமானார். பெற்றோர் இருவரையும் இழந்துவிட்ட நிலையில் மீரா ஒருமுறை தன் வீட்டுக்குச் சென்றுவருவது நல்லது என்று தோன்றியதால் அப்பயணத்தில் மீராவையும் இணைத்துக்கொண்டார்.

மீராவைச் சந்தித்து பேட்டி காண்பதற்காக, இங்கிலாந்தில் பல்வேறு பிரிட்டிஷ் செய்தி நிறுவனங்கள் தம் செய்தியாளர்களை அனுப்பிவைத்தன. இந்தியாவுக்கு மீரா ஏன் சென்றார்? இந்து மதத்துக்கு மாறிவிட்டாரா? மாநாட்டில் மீராவின் பங்கு என்ன? என்றெல்லாம் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. காந்தியடிகளின் உதவியின்றி மீரா எல்லாக் கேள்விகளுக்கும் அமைதியாகவும் தெளிவாகவும் பதில் சொன்னார். காந்தியடிகளின் சேவை என்னும் மதத்தைப் பின்பற்ற ஒருவரும் மதம் மாற வேண்டிய தேவையில்லை என்றும் தனக்கு இங்கிலாந்து ஓர் அயல்நாடு என்றும் இந்தியாவே தன் தாய்நாடு என்றும் என அமைதியாக எடுத்துரைத்தார்.  இங்கிலாந்திலிருந்து திரும்பும் வழியில் இருவரும் ரொமன் ரொலானைச் சந்தித்து உரையாடினர்.

இந்தியாவுக்குத் திரும்பிய ஒருசில நாட்களிலேயே காந்தியடிகள் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். சட்டமறுப்பு இயக்கம் தொடர்பான செய்திகளை எல்லா இடங்களிலிருந்தும்  சேகரித்துத் தொகுத்து மொழிபெயர்த்து அறிக்கைகளாகத் தயாரித்து கையெழுத்துப்படிகள் எடுத்து ஒவ்வொரு வாரமும் அயல்நாட்டு  ஊடகங்களுக்கு அனுப்பும் வேலையில் மீரா ஈடுபட்டுவந்தார். அதை அறிந்துகொண்டதும் அரசாங்கம் பம்பாய் நகரத்தைவிட்டு அவர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று கட்டளையிட்டது. அதை ஏற்க மறுத்ததால் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையிலிருந்து விடுதலையடைந்ததும் பம்பாய்க்குள் மீரா ஒருபோதும் நுழையக்கூடாது என்று மீண்டும் தடை வித்தது அரசு. அதனால் மீரா சிறையிலிருந்து நேராக அகமதாபாதுக்குச் சென்றார். பிறகு கதர்ப்பிரச்சாரத்துக்காக காசிக்குச் சென்றார். அங்கு மலேரியா அவரைத் தொற்றியது. சிறிது காலம் நண்பர்கள் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அந்தச் சுற்றுப்பயணம் முடிவடையும் தருணத்தில் காந்தியடிகளின் கொள்கைகளையும் அகிம்சைவழிப் போராட்டத்தைப்பற்றியும் இங்கிலாந்து மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் என்று மீராவுக்குத் தோன்றியது. காந்தியடிகளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு அனுமதி பெற்று லண்டனுக்குச் சென்றார். எல்லா இடங்களிலும் அவருடைய உரையை மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் எல்லாம் அவர் இந்தியாவின் பக்கமிருந்த நியாயங்களை அவர்களிடம் எடுத்துரைத்தார். முன்பு ஒருமுறை காந்தியடிகளைச் சந்திக்க மறுத்த வின்ஸ்டன் சர்ச்சில் கூட மீராவுடைய உரையைக் கேட்டார். பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்கும் சென்று உரை நிகழ்த்தினார் மீரா. உரையைக் கேட்பதற்காக கூடியிருந்த மக்கள் காந்தியடிகளின் அகிம்சைக்கொள்கை தொடர்பாக எழுப்பிய பல கேள்விகளுக்கு தக்க விடைகளைக் கூறி, அவர்களுடைய ஐயங்களைப் போக்கினார். ஏறத்தாழ நான்கு மாதகாலம் நீடித்த அப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இந்தியாவுக்குத் திரும்பினார். 

அரசின் கட்டளையை மீறி பம்பாய்க்குள் நுழைந்துவிட்டதால் மீராவை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு வார விசாரணைக்குப் பிறகு, அவருக்கு  ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சிறைச்சாலையில் நிலவிய சுகாதாரமற்ற சூழலால் அவருடைய உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. அதனால் அவருடைய கோரிக்கையை ஏற்று அவரை சபர்மதி சிறைச்சாலைக்கு சிறை நிர்வாகம் அனுப்பிவைத்தது.

08.05.1933 அன்று காந்தியடிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இரு மாதங்களுக்குப் பிறகு அவர் சபர்மதி சிறைக்குச் சென்று மீராவைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் உடல் மிகவும் மெலிந்திருந்தபோதும் குன்றாத வலிமையுடன் அவருடைய மனம் இயங்குவதை மீராவால் உணரமுடிந்தது. உடல்நலம் சற்றே தேறியாதும் ராஸ் என்னும் கிராமத்தை நோக்கி காந்தியடிகள் ஒரு யாத்திரையைத் தொடங்கினார். எவ்விதமான காரணமும் சொல்லாமல் அவரையும் அவரோடு பயணம் செய்த கஸ்தூர் பா வையும் முப்பது ஆசிரமவாசிகளையும் காவல்துறை கைது செய்து ஓராண்டு காலம் சிறைத்தண்டனை வழங்கியது. அத்தண்டனையை எதிர்த்து காந்தியடிகள் சிறையிலேயே சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். உரிய காரணம் எதுவுமில்லாமல் அவரை அவசரத்தில் கைது செய்த அரசு, வேறு வழி தெரியாமல் அவரை உடனடியாக விடுதலை செய்தது.

வார்தா ஆசிரமம் அமைக்கப்படும் முன்பாக காந்தியடிகள் சிறிது காலம் மகன்வாடியில் தங்கியிருந்தார். அந்த ஆசிரமத்துக்கு அருகில் சிந்தி என்னும் கிராமம் இருந்தது. அக்கிராமத்தின் வழியாக தனிமையில் நடைப்பயிற்சிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மீரா. அப்போது, அக்கிராமத்துச் சாலையில் இருமருங்கிலும் ஆண்களும் பெண்களும் மலம் கழித்து அசுத்தம் செய்வதைக் கண்டு மீரா வருத்தம் கொண்டார். அதை உடனே காந்தியடிகளிடம் தெரிவித்தார். “சுகாதார வழிமுறைகளைப்பற்றி கிராமத்தினரிடம் எடுத்துரைக்க வேண்டியது நமது கடமை. ஒருவேளை அவர்கள் நம் சொற்களைக் காதுகொடுத்துக் கேட்க மறுத்தால் அச்சாலையை நாமே துப்புரவு செய்யவேண்டும்” என்று காந்தியடிகள் கூறினார். உடனடியாக மீராவும் ஆசிரம ஊழியர்களும் சிந்தி கிராமத்தினரை நேரில் சந்தித்து சுகாதாரத்தின் அவசியத்தைப்பற்றி எடுத்துரைத்தனர். அவர்களுடைய அறிவுரையை மக்கள் ஒருசிறிதும் பொருட்படத்தவில்லை. எனவே, காந்தியடிகளின் சொல்லுக்கிணங்க, வாளி, மண்வாரிகளுடன் தொண்டர்களை அழைத்துச் சென்று சிந்தி கிராமச் சாலைகளைச் சுத்தம் செய்யும் பணியில் மீரா ஈடுபட்டார்.

அவர்கள் செய்யும் பணிகளை மக்கள் கூடிநின்று வேடிக்கை பார்த்தனரே தவிர, நாள்தோறும் தெருக்களை அசுத்தம் செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் மனம் மாறும் வரை அக்கிராமத்திலேயே தங்கி சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்த மீரா, அஙகேயே ஒரு குடிசையில் தங்கிவிட்டார். நாட்கள் செல்லச்செல்ல, கிராமத்தினருக்கு சுகாதாரத்தின் அருமை புரியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அருகிலிருந்த சேகான், பகிசா ஆகிய கிராமங்களுக்குச் சென்று, சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார் மீரா. அப்போது தன்னை நாடி வந்த தொழுநோயாளிகளுக்கும் சிகிச்சை பெறுவதில் உதவி செய்தார். அப்போது ஒருநாள் அவருடைய சகோதரி இறந்துவிட்ட செய்தி மீராவுக்குக் கிடைத்தது.  காந்தியடிகளும் மற்றவர்களும் அவருக்கு ஆறுதல் கூறினர். ஆசிரமத்துக்கு வந்த பிறகு அவருடைய வீட்டில் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் நிகழ்ந்தபோதும், அத்துயரத்தை ஏற்றுக்கொண்டு ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கிவிட்ட மீராவின் மன உறுதியையும் தியாகத்தையும் காந்தியடிகள் பாராட்டினார்.

பஞ்சாபில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மீரா பணியாற்றவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். உடனே மீரா ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் என்னும் கிராமத்துக்குச் சென்றார். அங்கிருந்த சர்க்கா சங்க அலுவலகத்தில் தங்கியபடி, பெண் நூற்பாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர பயிற்சி அளிப்பது, குழந்தைகளைக் குளிக்கவைத்து சுகாதாரத்துடன் பேணுவது, வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு கிராம மக்களின் தூய்மையான வாழ்வுக்கு வழிகாட்டினார். சில மாதங்களுக்குப் பிறகு சிவாலிக் மலைத்தொடரச் சேர்ந்த ஓயெல் என்னும் கிராமத்துக்கும் பாலாம்பூர் என்னும் கிராமத்துக்கும் சென்று தன் பணிகளைத் தொடர்ந்தார். இறுதியாக வார்தாவுக்கு வந்து சேர்ந்தார். எந்த இடத்தில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஆயிரம் கெஜம் நூல் நூற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1942இல் கமலாதேவி, மிருதுளா பெஹன் இருவரும் இணைந்து குஜராத்தில் சூரத்துக்கு அருகில் நவசாரி என்னும் கிராமத்தில் பெண்களுக்கான முகாம் ஒன்றை நடத்தினர். மீரா அவர்களுக்கு உதவியாக அக்கிராமத்துக்குச் சென்று முகாமை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த வட்டாரத்தில் கிடைக்கும் பொருட்களையும் கைவினைஞர்களையும் மட்டுமே பயன்படுத்தி பணிகளை விரைவாகச் செய்துமுடித்தார் மீரா. முகாம் தொடங்கி, பயிற்சி ஆரம்பமானதும் பெண்களுக்கு சுகாதாரப்பணிகளிலும் துணிகள் சலவை செய்யும் பணிகளிலும் பயிற்சியளித்தார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும் ஆங்கிலேய அரசு தன்னிச்சையாக கூட்டு நாடுகளின் படைகளுக்கு ஒரு ராணுவத்தளமாக இந்தியாவைப் பயன்படுத்தத் தொடங்கியது. போர் நடவடிக்கைகளுக்காக இந்தியக் கருவூலத்தில் இருந்த பணத்தைச்  செலவழித்தது. அந்நியநாட்டைச் சேர்ந்த படைவீரர்கள்  இந்தியாவில் குவிக்கப்பட்டனர். அப்போது, காந்தியடிகள் ‘அயல்நாட்டுப் படைவீரர்கள்’ என்ற தலைப்பில் அரிஜன் இதழில் தலையங்கம் எழுதினார். அவருடைய பிற கட்டுரைகளும் பேட்டிகளும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அச்சமயத்தில் அலகாபாத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம் தொடர்பான தன் கருத்துகளை உள்ளடக்கிய தீர்மான நகலை காந்தியடிகள் எழுதினார். அப்போது அவருடைய உடல்நிலை பயணத்துக்கு உகந்ததாக இல்லாததால், அந்த நகலையும் நேரு மற்றும் மெளலானா அபுல்கலாம் ஆசாத்துக்கும் எழுதிய கடிதங்களையும் எடுத்துக்கொண்டு அலகாபாத்துக்குச் செல்லுமாறு மீராவிடம் கேட்டுக்கொண்டார். மீரா உடனடியாக அலகாபாத்துக்கு விரைந்து சென்று கடித உறைகளை உரியவர்களிடம் சேர்ப்பித்தார். காந்தியடிகளின் மூலத்தீர்மானம் சில திருத்தங்களுடன் அச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இராஜேந்திர பிரசாத், பிரபுல்ல கோஷ், சங்கரராவ் தேவ் போன்றவர்களுடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார் மீரா. போராட்டத்தைத் தொடங்கும் விதத்தில் காந்தியடிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை ஒதுக்கிக் கொடுத்தார். ஒரிசாவுக்குச் சென்று, கிழக்குக் கடற்கரையோரத்தில் ஏற்பட வாய்ப்புள்ள ஜப்பானியப் படையெடுப்பை எதிர்க்க, அகிம்சையின் அடிப்படையில் மக்களைத் திரட்ட ஆயத்தம் செய்யும் பணிகளில் அங்கிருக்கும் தொண்டர்களுக்கு உதவுமாறு மீராவிடம் கேட்டுக்கொண்டார். அவருடைய ஆலோசனைக்கு இணங்கி, மீரா உடனடியாக ஒரிசாவுக்குச் சென்றார்.

ஏறத்தாழ ஒருமாத காலம் ஒரிசாவில் தங்கியிருந்தார் மீரா. மழைக்காலம் தொடங்கியதால், ஜப்பானியப்படையெடுப்பு அபாயம் சிறிது குறைந்தது. எனவே சேவாகிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயற்குழுவில் கலந்துகொள்வதற்காக ஆசிரமத்துக்குத் திரும்பினார். காந்தியடிகள் அவரை உடனே டில்லிக்கு அனுப்பிவைத்தார். வைசிராயைச் சந்தித்து ’இந்தியாவைவிட்டு வெளியேறு’ தீர்மானத்தைப்பற்றி எடுத்துரைக்கும் பணியை ஒப்படைத்தார். வைசிராய் லின்லித்ஹோவ் மீராவைச் சந்திக்க விரும்பவில்லை. அவருடைய தனிச்செயலரான லெயித்வெயிட்டுடன் பேசுமாறு சொல்லப்பட்டது. மீரா அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். ஆனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. எனவே, தில்லியிலிருந்து புறப்பட்டு காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பம்பாய்க்குச் சென்றார்.

08.08.1942 அன்று பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் “இந்தியாவை விட்டு வெளியேறு” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்முறைக்கு இடமில்லாத வகையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதை அன்று வலியுறுத்திப் பேசினார் காந்தியடிகள். மறுநாள் அதிகாலையில் ஆசிரமத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் காந்தியடிகளையும் மகாதேவ தேசாயையும் மீராவையும் கைது செய்து அழைத்துச் சென்று ஆகாகான் மாளிகையில் சிறைவைத்தனர். சில நாட்களுக்குப் பிறகு கஸ்தூர் பா வும் சுசிலா நய்யாரும் அதே சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு முதலில் மகாதேவ தேசாயும் பிறகு கஸ்தூர் பா வும் சிறையிலேயே இயற்கையெய்தினர். 06.05.1944 அன்று காந்தியடிகளும் மீராவும் சுசிலா நய்யாரும் விடுதலை பெற்றனர்.

காந்தியடிகளின் அனுமதியோடு இமயமலையை நோக்கிச் சென்ற மீரா ஹரித்துவாருக்கு அருகில் முல்டாஸ்பூர் மஜ்ரா என்ற கிராமத்தில் கிசான் ஆசிரமம் ஒன்றை அமைத்து வழக்கமான கிராமப்பணிகளில் ஈடுபட்டார். கூடுதலாக அவருக்கு பசுக்களைப் பராமரிப்பதிலும் ஆர்வம் பிறந்தது. அதற்குப் பிறகு ரிஷிகேஷுக்கு அருகிலும் பிச்புரி கிராமத்திலும் ஆசிரமங்களைத் தொடங்கி, விவசாயம், பசு பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த சமயத்தில் அவசர காலங்களில் விமானங்களை இறக்கவும் ஓடுதளமாகப் பயன்படுத்தவும் ஏராளமான அளவில் விவசாய நிலங்களை அரசு வளைத்துவைத்திருந்தது. 1946இல் காங்கிரஸ் கையில் ஆட்சி மாறிவந்திருக்கும் சூழலில் அந்நிலங்களை விவசாயிகளுக்கு வழங்கும் கோரிக்கையுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்காக ஒருமுறை டில்லிக்குச் சென்றார் மீரா. பல கட்ட சந்திப்புகளுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் பிறகு அந்நிலங்கள் விவசாயிகளுக்குக் கிடைத்தன. அதற்குப் பிறகு அரசு ‘உணவு உற்பத்தியைப் பெருக்குவோம்’ திட்டத்துக்கு கெளரவ ஆலோசகராக மீராவை நியமித்தது.

பசுக்களும் எருதுகளும் இல்லாமல் இந்தியா உயிர்வாழ முடியாது என்று மீரா உறுதியாக நம்பினார். போர்க்காலத்தில் ஏராளமான கால்நடைகள் அழிந்துவிட்டன. படைவீரர்களின் உணவுத்தேவைக்காக லட்சக்கணக்கான பசுக்களும்  எருதுகளும் கொல்லப்பட்டன. நாடு விடுதலை பெற்ற சூழலில் கால்நடைப் பெருக்கத் திட்டத்தை நிறைவேற்றுவது மிகமிக முக்கியமான செயல் என்பதை மீரா அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். அரசு உடனடியாக மீராவின் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. ரிஷிகேஷ் அருகில் வனத்துறைக்குச் சொந்தமான 2146 ஏக்கர் நிலத்தை அத்திட்டத்துக்காக ஒதுக்கிக் கொடுத்தது. ஒவ்வொரு நாளும் வனத்தை வாழ்வதற்கு ஏற்ற வகையில் சுத்தப்படுத்தி குடில்கள் அமைத்து ஓர் ஆசிரமத்தை உருவாக்கினார் மீரா.

கால்நடைகளுக்குத் தேவையான அனைத்தும் அங்கேயே விளையும் வகையில் நிலத்தைப் பண்படுத்தி மேம்படுத்தினார். அக்கம்பக்கத்துக் கிராமங்களில் வசிப்பவர்களின் பசுக்கள் அங்கே வரவழைக்கப்பட்டு ஆரோக்கியமான வகையில் பராமரிக்கப்பட்டது. கிராமத்தினரால் கைவிடப்படும் பசுக்களை ஆசிரமத்தினரே வாங்கிப் பராமரித்தனர். பசுக்களை இனப்பெருக்கம் செய்வதற்குத் தேவையான காளைகளும் ஆசிரமத்திலேயே வளர்க்கப்பட்டன. சேவை மனப்பான்மையுடன் இப்பணிகளை நிர்வாக விதிகளின்படி மீரா செய்துவந்தார்.  

1947 ஆம் ஆண்டு இறுதியில் மீரா தன் இதயப்பரிசோதனைக்காக டில்லிக்குச் சென்றார். எதிர்பாராத விதமாக மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்காக மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஓய்வுக்காக அவர் பிர்லா மாளிகை விடுதியில் தங்கியிருந்தார். அப்போது டில்லியில் எங்கெங்கும் மதக்கலவரங்கள் வெடித்தபடி இருந்தன. கல்கத்தாவில் அமைதியை நிலைநாட்டிவிட்டு, காந்தியடிகள் தில்லிக்குத் திரும்பி அமைதி நிலவப் பாடுபட்டுக்கொண்டிருந்தார். முதலில் அரிஜன் காலனியில் தங்கியிருந்த காந்தியடிகள், மற்றவர்களின் வேண்டுகோளை ஏற்று பிர்லா மாளிகையில் தங்குவதற்காக வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காந்தியடிகளும் மீராவும் அன்று சந்தித்துக்கொண்டனர்.

தன் பணிகளைப்பற்றி காந்தியடிகளுக்கு சுருக்கமாக எடுத்துரைத்த மீரா ரிஷிகேஷ் ஆசிரமத்துக்கு வருகை புரியும்படி கேட்டுக்கொண்டார். காந்தியடிகள் “நான் வருவது, வராததைப்பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து சேவை செய்” என்று நிதானமான குரலில் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டார். காந்தியடிகளின் அச்சொற்கள் அவர் நெஞ்சில் பெரும்பாரமாக அமர்ந்துவிட்டன. அமைதியாக ரிஷிகேஷ் ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டார். சில நாட்களிலேயே காந்தியடிகள் பிரார்த்தனைக்கூடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அச்செய்தி மீராவை பெரிதும் நிலைகுலைய வைத்துவிட்டது.

வணிக நோக்கங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதை பலமுறை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் மீரா. ஆயினும், அதற்கு உரிய பலன் ஏற்படவில்லை. எதிர்பாராத விதமாக 1949இல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆசிரமம் கடுமையாகச் சேதமடைந்தது. இத்தனை ஆண்டு காலமாக இல்லாத அளவுக்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வன அழிப்புக்கும் உள்ள தொடர்பைப்பற்றி பத்திரிகைகளில் அவர் விரிவான கட்டுரைகளாக எழுதினார்.

இயற்கையாக வளர்ந்த ஓக் மரங்களை வெட்டுவதும் புதிதாக பைன் மரங்களை வளர்ப்பதும்தான் முக்கியமான காரணங்கள். ஓக் மரங்களின் இலைகள் நிலத்தில் உதிர்ந்து மழைநீரைச் சேகரித்து மண்ணுக்குள் அனுப்புகின்றன. ஆனால் பைன் இலைகளுக்கு மழைநீரைச் சேகரிக்கும் ஆற்றல் இல்லாமையால் அவை நீரை வழிந்தோடச் செய்து வெள்ளமாக மாற்றுகிறது. ஓக் மரங்களை வெட்டுவது, ஒருவருடைய இதயத்தை வெட்டி மரணத்துக்கு வழிவகுப்பதற்குச் சமமானது என பல விரிவான எடுத்துக்காட்டுகளை முன்வைத்து மீரா தொடர்ச்சியாக எழுதினார். ஆயினும், அக்கட்டுரைகளை பொதுமக்களோ அரசோ பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. தன்னலம் அவர்களுடைய கண்களை மூடிவிட்டது.

பசுலோக் மண்டல் கலைக்கப்பட்ட பிறகு பிலாங்கனா பள்ளத்தாக்கிற்கு அருகில் கோபால் ஆசிரமத்தையும் காஷ்மீரில் கயோபால் என்னும் இடத்தில் ஓர் ஆசிரமத்தையும் தொடங்கி பத்தாண்டுகளுக்கும் மேலாக கிராமப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் மீரா. எங்கும் நீண்ட காலம் அவரால் வாழ முடியவில்லை. கிராம முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட முயற்சிகளுக்கு அரசு சார்பான உதவிகளோ ஊக்கமோ கிட்டாத நிலையில் இந்தியாவில் இமயமலைப்பகுதிகளில் இருப்பதில் பொருளில்லை என்ற முடிவோடு 1959இல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார்.

 

(கிராம ராஜ்யம் – மே 2022 )