Home

Sunday, 15 May 2022

குமாரவனம் - சிறுகதை

 தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள் உரசிக்கொள்கிற சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன. எங்கோ ஒரு நீர்நிலை இருப்பதுபோல மின்னும். கண்கள் கூசும் அளவுக்கு நீரலைகள் நெளிவது போலத் தெரியும். சட்டென ஒரு நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும். உடல் வலியையும் அசதியையும் பொருட் படுத்தாமல் சில கணங்கள் வேகவேமாக நடப்பான். எவ்வளவு தொலைவு நடந்தாலும் அந்த நீர்நிலையை அவனால் நெருங்க முடிவதில்லை. கண்பார்வையிலிருந்து அந்த நீர்நிலை திடுமென மறைந்துவிடும். மறுகணமே அளவுக்கு அதிகமான சோர்வு அவனை அழுத்தும்.

சட்டென வானில் சில கொக்குகள் பறப்பதைப் பார்த்தான். அவனுக்குள் மீண்டும் நம்பிக்கை சுரந்தது. கண்டிப்பாக அங்கு ஏதாவது குளமோ அல்லது ஏரியோ இருக்கக்கூடும் என நினைத்தான். எதிரில் நாலைந்து பெண்கள் நடந்து வந்தார்கள். குளித்து வரும் அடையாளம் அவர்களிடம் தென்பட்டது. சட்டென அவன் நம்பிக்கை மேலும் வலுப்பட்டது. அந்த நீர்நிலையின் இடத்தைப் பற்றி அவர்களிடம் கேட்க நினைத்தான். அந்தப் பெண்கள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து வேகவேகமாக அவனைக் கடந்து போன விதம் ஆச்சரியத்தைத் தந்தது. சலிப்புடன் தொடர்ந்து நடந்தான். முதலில் அடர்ந்த தோப்பொன்று தென்பட்டது. நுழைந்ததுமே குளிர்ந்த காற்றை உணர்ந்தான். உடல் சோர்வுக்கு அக்காற்று இதமாக இருந்தது. தோலாடைகளுடன் இரண்டு பெண்கள் மீண்டும் தென்பட்டார்கள். வேகமாக அவர்கள் கடந்துவிடும் முன்பு அவர்கள் முன்பு அவசரம் அவசரமாகச் சென்றுஇங்கே குளம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டான். அப்பெண்கள் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் பார்வை அச்சத்தில் தத்தளித்தது. சட்டென அப்பார்வை ஒரு ஆணின் பார்வைபோலத் தெரிந்தது. மறுகணமே தன் பிழைக்காகத் தன்னை நொந்து கொண்டான்.

இங்கே குளம் எங்கே இருக்கிறது?” இளன் மறுபடியும் கேட்டான்.

இந்தப் பாதை முடியும் இடத்தில்.”

உடனே அந்தப் பெண்கள் கிளம்பிப் போய்விட்டார்கள். “இரண்டு நாட்களாகத் தொடர்பயணம். குதிரையும் நானும் களைத்துப் போய்விட்டோம். எப்படியோ எங்கோ வழிதவறிவிட்டதுஎன்று அவன் சொன்ன சொற்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. சில மான்கள் சட்டென ஒரு பாதையிலிருந்து வெளிப்பட்டு பாதையைக் கடந்து மறுதிசையில் ஓடின. அப்போதுதான் சற்றே தள்ளி மரத்தடியில் சில நடுவயதுப் பெண்கள் சுள்ளிகள் சேகரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்கள் அவனையோ அக்குதிரையையோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அப்பெண்கள் தற்செயலாகவாவது அவன் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூடும் எனச் சில கணங்கள் தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தான். வனத்தில் யாரையுமே எதிர்கொள்ளாததைப்போல அவர்கள் தம் வேலையில் மூழ்கியிருந்தார்கள். சலிப்புடன் குதிரையின் கடிவாளத்தை இழுத்தபடி குளத்தை நோக்கி நடந்தான்.

நாலாபுறமும் விழுதுகள் இறங்கிய ஆலமரத்தின் அடியில் ஒரு குடில் தென்பட்டது. குடிலின் ஓரமாய் அழகான பூந்தோட்டம் தெரிந்தது. மறுபக்கம் திண்ணையில் ஒரு இளநங்கை முயல் குட்டிகளுக்குத் தழையை ஊட்டியபடியிருந்தாள். அந்தக் குடில் அழகான தவச்சாலை போலிருந்தது. எந்தக் கணமும் குடிலுக்குள்ளிருந்து வெண்தாடியுடன் ஒரு முனிவர் வெளிப்படக்கூடும் என்று நினைத்தான்.

சாலையில் இருபக்கங்களிலும் மரங்கள் அடர்ந்திருந்தன. இதமாக வீசிய காற்று உடலைத் தழுவியதும் களைப்பு குறைந்த மாதிரி இருந்தது. எங்கு பார்த்தாலும் விதம் விதமான பறவைகள். ஒரு கிளையில் உட்கார்வதும் சில கணங்களுக்குப் பிறகு இறகுகளைப்  படபடவென்று அடித்தபடி பறந்து மேலெழுவதும் வேகவேகமாகத் தரையில் இறங்கி அப்பாவி போல நாலுபுறமும் பார்த்துக் கீச்கீச்சென்று சத்தமிட்டன. நின்று அப்பறவைகளின் பாடலைக் கேட்கவேண்டும்போல இருந்தது. தண்ணீருக்கான தவிப்பு முன்னோக்கித் தள்ளியது. தண்ணீரை நினைத்ததுமே நெஞ்சு உலர்ந்தது. எச்சிலை மறுபடியும் கூட்டி விழுங்கினான்.

சட்டென்று புதரின் இடைவெளியிலிருந்து ஏழெட்டுப் பெண்கள் வெளிப்பட்டார்கள். எல்லாருமே இடுப்பில் குடம் சுமந்திருந்தார்கள். வெற்றுக் குடங்கள். அவனைத் தாண்டி அதே திசையில் வேகவேகமாக நடந்ததைப் பார்த்த பிறகு அவர்களும் குளத்துக்குத்தான் செல்கிறார்கள் போலும் என்று நினைத்தான். அவர்கள் அவனைக் கடந்த தருணத்தில் இனிய பூமணமொன்று கமழ்ந்தது. இதுவரை அறியாத பூமணம். காலமெல்லாம் அந்த வாசத்தை நுகர்ந்தபடி இருக்கலாம் போலிருந்தது. அந்த வாசம் தன்னைவிட்டுத் தள்ளிப்போவதை பெரும் வேதனையாக உணர்ந்தான். அவர்களில் யாருமே ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் போனது ஏமாற்றத்தையளித்தது.

குளத்தை நெருங்க நெருங்கக் குளிர்ந்த காற்று வீசியதை உணர்ந்தான். இனிய சாரல் போலிருந்தது காற்று. ஒரு பெரிய வெள்ளித்தட்டுபோல வெயிலில் குளம் தகதகத்தது. துணியொன்று காற்றில் அலையலையாய் நெளிவதைப்போல அலைப்பரப்பு நெளிந்தது.

அவன் வேகமாக நடக்கத் தொடங்கினான். குளத்துத் தண்ணீரைக் கண்டதும் அவன் ஆவல் அதிகரித்தது. குதிரை அவனுக்கு இணையாக நடந்தது. பக்கவாட்டில் ஒரு பெண் கோடலியால் விறகு பிளப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். இன்னொரு பக்கம் ஏழெட்டுப் பெண்கள் சேர்ந்து ஒரு குடிசையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் மண்ணைக் குழைத்துக்கொண்டிருந்தாள். மற்றொரு பெண் சுவரெழுப்பிக்கொண்டிருந்தாள். குடிசைக்கு மேல் வேய கிளைகளை அளவாக நறுக்கியபடி இருந்தாள் இன்னொருத்தி. தொலைவில் பசுக்களை மேய்க்கும் ஒரு மூதாட்டி. மற்றொரு பக்கத்தில் நிழலில் ஓடிப் பிடித்து விளையாடும் இளம்பெண்கள். அவர்கள் மாற்றிமாற்றி வீசிய பந்து அந்தரத்திலேயே அலைபாய்வது போலிருந்தது. அவர்கள் அழகு அவனைச் சுண்டியிழுத்தது. ஒரு கணம் தாகத்தை மறந்து அவர்களை உற்றுப் பார்த்தான். அவனது இருப்பால் சிறிதும் பாதிக்கப்படாதவர்களைப்போல அவர்கள்  சுதந்திரமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிரிப்பும் துள்ளலும் அவனைப் படுத்தின.

கரையை நெருங்கினான். ஏராளமான கொக்குகள் பறந்த வண்ணமும் கூரையின்மீது இறங்கியவண்ணமும் இருந்தன. எங்கெங்கும் ஏராளமான பெண்கள் குளித்தபடியும் விளையாடியபடியும் இருந்தார்கள். பார்த்த இடமெங்கும் பெண்களைக் கண்டு அதிசயப்பட்டுப் போனான். தொலைவில் சில யானைகள் தெரிந்தன. அவற்றின் துதிக்கைகளைத் தடவியபடி பெண்கள் வந்தார்கள். அவற்றின் பிளிறலில் கொக்குகள் அஞ்சி வேறுபக்கம் பறந்தன. உடனே அந்தப் பெண்கள் அதட்டினார்கள். மறுகணமே அந்த யானைகள் அடங்கின. உப்பிய வயிற்றை ஆட்டியபடி அவன் பின்னால் நடந்தன. குளத்தில் இறங்கித் தண்ணீர் குடித்தன.

எங்கெங்கும் பெண்களைப் பார்த்ததும் அவனுக்குள் குழப்பமும் அச்சமும் உருவாகின. நிகழ்பவை அனைத்தும் ஒருகணம் கனவோ எனத் தோன்றியது. வனத்துக்குள் நுழைந்த கணத்திலிருந்து பார்த்ததையும் பார்த்தவர்களையும் அவன் மனம் மீண்டும் அசை போட்டது. அந்தக் கணம் வரை ஒரு ஆணைக்கூடத் தான் சந்திக்கவில்லை என்று நினைத்ததும் உடல் முழுக்க ஏதோ ஒரு பீதி பரவியது. இதயத்துடிப்பு அதிகரித்தது. உண்மையிலேயே அவர்கள் பெண்கள்தாமா அல்லது பெண்கள் உருவத்தில் இருக்கிற ஆண்களோ என்று தோன்றியது. திரும்பி உற்றுப் பார்த்தான். உண்மையிலேயே பெண்கள். அடர்ந்த செறிவான கருங்கூந்தல். செழிப்பான உடல்வாகு. சிரித்தபடி அவர்கள் தமக்குள் பேசிய பேச்சுகள் பெண்களின் குரல்களாகவே இருந்தன.

அடியே மைத்ரி, பந்து எங்கே?” என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் கேட்டாள். அந்த இளம்பெண் இன்னொரு பெண்ணின் கூடையில் ஒளித்து வைத்திருந்த பந்தைக் கொண்டுவந்து தந்தாள். ஒளித்து வைத்த பெண் அவளைச் செல்லமாகக் கடிந்துகொண்டாள். அதற்குள் இன்னொருத்தி ஓடிவந்து அப்பந்தைத் தட்டிவிட்டாள். உருண்டோடும் பந்தைப் பிடிக்க வேறொருத்தி ஓடினாள். அவள் பின்புறம் அவன் மனத்தைச் சஞ்சலத்துக்குள்ளாக்கியது. ஏக்கத்துடனும் அச்சத்துடனும் அவர்களைக் கடந்தான்.

குளம் மிகுந்த ஆரவாரமாகக் கிடந்தது. பல பெண்கள் குளத்துக்குள் இறங்கி ஆடிக்கொண்டிருந்தார்கள். அத்தனை பெண்கள் ஒரு சேரச் சேர்ந்து குளிக்கிற காட்சியை அவன் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை. ஒவ்வொரு கணமும் அவன் தடுமாற்றம் கூடுதலாகியது. அந்த வனத்தை அவனால் புரிந்துகொள்ளவே இயலவில்லை. தனது இருப்பிடத்திலிருந்து சற்றே தொலைவில் இருக்கிற இடத்தில் எங்கெங்கும் பெண்களே நிறைந்த இப்படியொரு வனம் இருப்பது புதியதாக இருந்தது. தன் வனத்திலிருப்பவர்களுக்கு இது தெரியாதா அல்லது தெரிந்தும் தன்னிடம் மறைத்துவிட்டார்களா என்று குழம்பினான். கனவு கண்டதைப் போலிருந்தது. மெலிந்தும் உயர்ந்தும் குள்ளமாகவும் பருமனாகவும் பலவிதமான பெண்களே எங்கெங்கும் நிறைந்திருந்தார்கள். மரத்தடியில் பெண். குளக்கரையில் பெண். குடிசையில் பெண். பசுக்களை மேய்த்தபடியும் பெண். புதிராகவும் பீதியாகவும் உணர்ந்தான். தண்ணீரை அருந்திவிட்டு உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடவேண்டும் என்று உள்ளூர விரும்பினான். ஆனால் எங்கும் நகர்ந்துவிடாதபடி நிலத்தில் அழுத்தமாய் அவன் கால்கள் பதிந்திருக்க, கண்கள் பெண்கள் நடுவே அலைமோதிக் கிடந்தன.

கரையை நெருங்கினான். கரையோரம் ஒரு தென்னை விழுந்து கிடந்தது. அதில் உட்கார்ந்திருந்த பத்துப் பதினைந்து பெண்கள் கால்களைத் தண்ணீரில் தொங்கவிட்டிருந்தார்கள். கைகளால் தண்ணீரை அள்ளி ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டிருந்தார்கள். நொடிக்கு நொடி அவர்கள் சிரிப்பொலி அதிகரித்தபடி இருந்தது. குளத்தில் கால் வைத்ததும் குளுமையில் உடல் சிலிர்த்தது. கரையோரத்தில் இருந்த ஒருத்திஎன்ன வேண்டும்?” என்று கேட்டாள். அக்குரலின் இனிமை அவனை மேலும் தடுமாற வைத்தது. அத்தனை இனிய பெண்குரலை அவன் அதுவரை கேட்டதே இல்லை. அவன் நாக்குக் குழறதாகம். தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான். கூடவே குளத்துத் தண்ணீரைக் குடிக்க இந்தப் பெண்களின் அனுமதி எதற்கு என்கிற எண்ணமும் ஓடியது.

வாளிப்பான உடல்வாகு கொண்ட அப்பெண்குடிக்கலாமேஎன்று உடனேயே பதில் சொன்னாள். அவள் பதிலில் பரிவு தெரிந்தது. மறைமுகமாக கேலியும் கிண்டலும் பொதிந்திருப்பதாகவும் தோன்றியது. தண்ணீர் குடிக்காமல் அவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன். அதற்குள்தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்என்று மறுபடியும் ஒருமுறை சொன்னாள் அப்பெண். அவள் உதடுகளின் அசைவையே அவன் உற்றுப் பார்த்தபடி இருந்தான். அவன் தடுமாறிக்கொண்டிருந்த தருணத்தில் குளத்தில் இறங்கிய குதிரை தாகம் தீருமட்டும் தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து நிம்மதியாக மூச்சுவிட்டது.“என் பெயர் இளன். அருகேயுள்ள வனத்தில் சிரார்த்த தேவனின் மகன். குதிரையேறிச் சுற்றும்போது வழி தவறி விட்டதில் நிறைய அலைந்துவிட்டேன்.

அப்பெண்கள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். எதுவும் பேச்சில்லை. அவன் குனிந்து வேட்கை தீர தண்ணீரை அள்ளிக் குடித்தான். அத்தண்ணீரின் சுவை ஆச்சரியமாக இருந்தது. அதுவரை அப்படியொரு சுவையான தண்ணீரைத் தான் குடித்ததே இல்லை என உணர்ந்தான்.

அம்மா என்று மூச்சு வாங்க எழுந்து அப்பெண்களைப் பார்த்தான். அவர்கள் அப்போதும் எதுவும் பேசவில்லை. மெதுவாகக் கரையேறி மரத்தடியில் உட்கார்ந்தான். நிழல் களைப்புக்கு இதமான இருந்தது. தலைக்குமேல் அண்ணாந்து பார்த்தான். கிளைகளுக்கிடையே கட்டப்பட்ட பரண்களில் பெண்கள் உட்கார்ந்து கதைபேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இன்னொரு பக்கத்தில் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தார்கள் வேறு சில பெண்கள்.

பார்வையைச் சட்டெனத் தாழ்த்தினான் இளன். அவனை ஏதோ கலவர உணர்வு அரிக்கத் தொடங்கியது. திடுமென ஒரு தேர் ஓடி வரும் சத்தம் கேட்டது. மெல்ல புழுதி மண்டலம் எழுந்து வானை நோக்கி சுருண்டுசுருண்டு எழுந்தது. குதிரைகளின் குளம்பொலிச் சத்தம் நெருங்கநெருங்க அவன் இதயத்துடிப்பு அதிகரித்தது. எழுந்து ஓட வேண்டும்போல இருந்தது. அதே கணத்தில் அசையவிடாமல் செய்தது ஓர் ஈர்ப்பு. புழுதி பறக்க ஓடிவந்த தேர் குளக்கரையில் நின்றதும் சுற்றிலும் ஆடிக்கொண்டிருந்த பெண்கள்பார்வதி பார்வதிஎன்று சொல்வது கேட்டது. தேரில் பார்வதியைச் சுற்றி உட்கார்ந்திருந்த பெண்கள் வேகமாக இறங்கி அவள் இறங்கத் துணை புரிந்தனர். அப்போதுதான் தேரோட்டியைக் கவனித்தான் இளன். அவளும் பெண்.

அவள் குளத்தில் இறங்கினாள். ஒருமுறை குளத்தைச் சுற்றிப் பார்த்தாள். மறுபக்கம் யானையைக் குளிப்பாட்டியபடியிருந்த பெண்கள் எல்லாரும் எழுந்து கரைக்கு வந்தார்கள். அங்கு நின்றிருந்த எல்லாப் பெண்களும் தன்னையே பார்ப்பதாகத் தோன்றியது இளனுக்கு. அந்த எண்ணம் ஒருவிதப் பதற்றத்தைத் தந்தது.

சட்டென எழுந்து குதிரையை நடக்கவிட்டுத் தொடர்ந்தான். அவனுக்கு எல்லாமே குழப்பமாகவும் கனவு போலவும் தோன்றியது. யாரிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டுபோல இருந்தது. சுற்றிலும்  எங்கு பார்த்தாலும் பெண்கள். சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்பதபடியே இருந்தார்கள். அல்லது தமக்குள் சந்தோஷமாகச் சிரித்தபடி களியாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள்.

சிறிது தொலைவில் மானோடு தன்னந்தனியாக ஒரு பெண் ஆடிக்கொண்டிருந்தாள். அவளை நெருங்கிக் கேட்கலாம் என்று தோன்றியது. அவள் முகத்தில் ஏதோ ஒரு விதத்தில் அவனுக்கு நம்பிக்கையளிக்கும் குறிப்புகள் தென்பட்டன. உடனே அவளை நோக்கி நடந்தான். மெலிந்த உருவம். சுருள்முடி. வட்டமுகம். தளிர்நிறக் கன்னங்கள் செழுமையாக இருந்தன. பெரிய கண்கள். அவளை நெருங்கிவணக்கம்என்றான். தன் குரல் வித்தியாசமாக ஒலித்த விதம் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் சற்றே கலவரத்துக்குள்ளானவளாக நிமிர்ந்துஎன்ன வேண்டும்என்பது போலப் பார்த்தாள்.

இப்போது தேரில் போனது இந்த வனத்தில் அரசியா?” தடுமாறிக் கேட்டான் இளன்.

ஆமாம்என்றாள். அவள் கண்கள் அவனை ஊடுருவின. அதன் வெளிச்சம் அவனை மேலும் மேலும் பதற வைத்தபடி இருந்தது.

பார்வதி என்றார்களே? அப்படியென்£ல்....?”

ருத்ரனின் மனைவி பார்வதி. இந்தக் குமாரவனத்துப் பேரரசி.”

இதன் பெயர் குமாரவனமா?”

ஆமாம்.”

நான் பக்கத்து வனத்தைச் சேர்ந்தவன். திசைமாறி இங்கு வந்து விட்டேன். இங்கிருந்து எப்படி வெளியே செல்வது என்று சொல்ல முடியுமா? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.”

வெளியே செல்வதா, நல்ல கதை. இங்கிருப்பவர்கள் பெரும்பாலோர் திசைமாறி வந்து அகப்பட்டவர்கள்தாம். ஒருமுறை உள்ளே வந்தவர்கள் மறுமுறை வெளியே செல்வது அரிது...”

ஐயையோ...” அலறினான் இளன். “நான் எப்படியாவது வெளியேற வேண்டுமே. எனக்கு உதவ மாட்டாயா நீ...?” அழாத குறையைக் கெஞ்சினான்.

உதவியா? உனக்கு உதவும் வழி எனக்குத் தெரிந்திருந்தால் நான் ஏன் இன்னும் இங்கிருக்கிறேன்அவள் கசந்த சிரிப்புடன் சொன்னாள்.

இளனுக்கு மூச்சே நின்றதைப்போல இருந்தது. “அப்படியென்றால் என் கதி...?”

இங்கிருக்கும் எல்லாருக்கும் என்ன கதியோ அதே கதிதான் உனக்கும். குமாரவனத்துப் பெண்களின் கூட்டத்தில் நீயும் ஒருத்தியாக இருந்து காலம் தள்ளலாம்”. அவள் நிதானமாகவும் குறும்பாகவும் சொன்னாள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது.

பெண்ணே, என்ன சொல்கிறாய் நீ...?” கிட்டத்தட்ட அலறினான் இளன்.

உண்மையைத்தான் சொல்கிறேன். குமாரவனத்துக்குள் நுழையும் யாரும் மறுகணமே பெண்ணாகி விடுவார்கள். குமாரவனத்தில் ருத்ரனைத் தவிர எல்லாரும் பெண்கள்தாம்”.

நீ சொல்வதெல்லாம் நிஜம்தானா? என்னால் நம்பவே முடியவில்லையே”.

உன்னிடம் நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? இன்னும் நீ உன் உடம்பைப் பார்த்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஒருமுறை உன்னை நீயே பார்”.

நெருப்பு தீண்டிய மாதிரி இருந்தது. அதிர்ச்சியில் அவன் உடல் தூக்கிவாரிப் போட்டது. சட்டெனத் தநது முகத்தைத் தொட்டுப் பார்த்தான். மழமழப்பான கன்னங்களும் மெலிந்த உதடுகளும் அவனுக்கே அருவருப்பைத் தந்தன. தனது முகமா இது என அதிர்ச்சி கொண்டான். “ஐயோஎன்று தலையில் கைவைத்தான். சட்டென தலைபபாகை அவிழ இடுப்புவரை நீண்டு விழுந்தது கூந்தல். ஆடைக்குள் மார்பு திமுறுவதை உணர்ந்தான்.

பீதியில் அவன் அலறினான். எப்படி மீள்வது என்று புரியாமல் ஒரு கணம் உறைந்து நின்றான். மறுகணமேபெண்ணே, இதன் சாப விமோசனம் உனக்குத் தெரியாதா? தயவு செய்து சொல். இனி எப்போதும் குமாரவனத்தின் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கமாட்டேன். தயவு செய்து விமோசனம் சொல்என்று ஆவேசத்துடன் கெஞ்சினான். அதற்குள் ஏழெட்டுப் பெண்கள் அங்கே கூடிவிட்டார்கள். “சத்தியமாகச் சொல்கிறேன். நான் குமாரவனத்துக்குள் வந்தது தெரியாமல் செய்த பிழை. என்னை மன்னித்து கொள்ளுங்கள். இங்கிருந்து வெளியேற வழிகாட்டுங்கள்எல்லாரையும் பார்த்துக் கைகூப்பி வேண்டினான்.

இரு இருஎன்றாள் ஒருத்தி. “இந்தக் குமாரவனத்துக்குள் எங்கள் சொந்த முடிவு எனபதே எதுவும் இல்லை. ருத்ரனே எல்லாக் கட்டளையும் பிறப்பிக்கிறவன். ருத்ரனே பலம். ருத்ரனே வழி. ருத்ரனே வாழ்க்கை. ருத்ரன் கொடுத்த சாபத்தை ருத்ரனாலேயே மாற்றியமைக்க முடியாது என்பதை நீ அறிய மாட்டாயா-?”

இளனுக்கு அங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று புரியாமல் குழப்பமாக இருந்தது. குழப்பம் பெரும்பாரமாக தலையை அழுத்த சோர்ந்து உட்கார்ந்தான். அழுதான். தன் எதிர்காலம் ஒரு பெரும் கேள்விக் குறியாக மாறியதை நினைத்து அச்சத்துக்குள்ளானான். சட்டென ஒரு கணத்தில் தன் உடல் ஒரு பெண்ணுக்குரியதைப் போல குலுங்கியதை உணர்ந்து கூசினான்.

(தமழரசு மலர் - 2000)