2009ஆம் ஆண்டின் இறுதியில் விட்டல்ராவ் பெங்களூருக்கு வந்தார். அவருடைய வீடு தம்புசெட்டிபாள்ய சாலையில் ராகவேந்திர நகரில் இருந்தது. அப்போது நான் அல்சூரில் குடியிருந்தேன். இடைப்பட்ட தொலைவு பன்னிரண்டு கிலோமீட்டர்தான் என்றாலும் இரு இடங்களையும் இணைக்கும் நேரடிச் சாலையோ, நேரடிப் போக்குவரத்தோ இல்லை. இரு பேருந்துகள் மாறிச் சென்று இறங்கி, இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடக்கவேண்டும். சில சமயங்களில் நண்பர் திருஞானசம்பந்தத்துடன் இணைந்து அவருடைய இரண்டுசக்கர வாகனத்தில் செல்வதும் உண்டு. எப்படியோ, மாதத்துக்கு ஒருமுறையாவது அவரைச் சந்திக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
அவரோடு உரையாடுவது என்பது எப்போதும் உற்சாகமூட்டும் அனுபவம். அந்த உற்சாகத்துக்காகவே
நான் அவரை நோக்கி அடிக்கடி சென்றுகொண்டே இருந்தேன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சென்னை
நகரில் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் அவரை ஒரு தகவல் சுரங்கமாக தகவமைத்துவிட்டன. ஓவியம்,
சிற்பம், எழுத்து என கலை சார்ந்த எல்லாத் துறைகளிலும் அவருக்கு நல்ல பயிற்சியும் அனுபவமும்
இருந்தன. எதைப்பற்றிப் பேசத் தொடங்கினாலும், அதைப்பற்றிய முழு வரலாற்றையும் தொகுத்துச்
சொல்லும் திறமையும் பொறுமையும் அவரிடம் இருந்தன. எதைச் சொன்னாலும் அதை காதுகொடுத்துக்
கேட்கும் வகையில் கச்சிதமாகவும் அழகாகவும் ஒரு சிறுகதையைச் சொல்வதுபோல சித்தரித்துச்
சொல்லும் தன்மையும் அவரிடம் இயல்பாகவே குடியிருந்தன.
ஒரு சிறுகதைக்கான கருவை அவர் மனம் கண்டெடுத்த தருணத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கினாலும் சரி, தொலைபேசி நிலையத்துக்குள் புகுந்துவிட்ட பாம்பைப் பிடிப்பதற்கு ஆள் தேடி அலைந்த அனுபவத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கினாலும் சரி, மூன்று பாம்புகளுக்கு நூறு ரூபாய் என்று பேரம் பேசி பிடித்துக்கொண்டு செல்லும் பாம்பாட்டி, அதே பாம்புகளை அவனுக்குப் பணம் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் அவனே அதிகாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுச் செல்லும் தந்திரத்தைப்பற்றி விவரிக்கும்போதும் சரி, எதைச் சொன்னாலும் ஒரு சிறுகதையைப்போலச் சொல்லும் மொழியாற்றல் அவரிடம் இருந்தது.
கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக, நான் அவரிடம் தொடர்ச்சியாக உரையாடியபடி இருக்கிறேன்.
நேரில் சந்தித்து உரையாட இயலாத சமயங்களில் தொலைபேசி வழியாக உரையாடுகிறேன் சமீப காலத்தில்
கொரானா அச்சத்தால் வீட்டுக்கு வெளியே உலவச் செல்வதற்கு தடை உருவாகி, வீட்டோடு முடங்கியிருந்த
பல மாதங்களில் தொலைபேசிதான் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. நேருக்கு நேர் பார்த்தபடி
அமர்ந்து உட்கார்ந்து உரையாடவில்லை என்கிற குறையைத் தவிர, வேறெந்தக் குறையும் இல்லை.
நேரம் நகர்வது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தோம். ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாகச் சொல்வதற்கு
அவரிடம் ஏராளமான செய்திகள் இருந்தன. அவருடைய உரையாடல் ஒருபோதும் அலுப்பூட்டியதில்லை.
போதும் முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் எழுந்ததில்லை.
விட்டல்ராவுடன் உரையாடி முடித்த பிறகும் கூட, சிறிது நேரம் வரைக்கும் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம்
என்னும் எண்ணமே மனத்தில் எஞ்சியிருக்கும். அவர் குரல் ஆழ்நெஞ்சில் எதிரொலித்தபடியே
இருக்கும். அது ஒரு விசித்திர அனுபவம். அப்போதெல்லாம் எதைப்பற்றிப் பேசினோம், என்னென்ன
பேசினோம் என்பதை நாட்குறிப்பில் எழுதிவைக்க வேண்டும் என மனம் விழையும். ஆயினும் எழுதிவைத்ததில்லை.
நினைவில் எது எஞ்சுகிறதோ, அது மட்டும் எஞ்சினால் போதும் என்று இருந்துவிட்டேன்.
ஒருநாள் நான் எழுதிமுடித்த என் வாழ்வில்
புத்தகங்கள் புத்தகத்தைப்பற்றி அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பள்ளிக்கூட காலத்தில்
நான் படித்த புத்தகங்களைப்பற்றியும் பத்திரிகைளைப்பற்றியும் சின்னச்சின்ன கட்டுரைகளாக
அதில் எழுதியிருந்தேன். பால்யகாலத்தைப்பற்றிய கட்டுரைகள் என்றதும் அவர் அதைப்பற்றிச்
சொல்லுமாறு ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார். என் கைபேசியிலேயே அக்கட்டுரைகள் இருந்ததால்,
அப்போதே அவற்றைத் திறந்து அவரிடம் படிக்கக் கொடுத்தேன். அவரும் அதை வாங்கி என் முன்னிலையிலேயே
படித்துமுடித்தார். “உங்க பள்ளிக்கூடம், உங்க ஆசிரியர்கள், உங்க நண்பர்கள் பற்றிய சித்திரங்கள்
எல்லாமே ரொம்ப உயிர்ப்போடு இருக்குது பாவண்ணன்” என்றார். நான் குறிப்பிட்ட சிறார் பத்திரிகைகளைப்
படிக்க தன் மகளுக்குப் பயிற்சி கொடுத்த விதத்தை நினைவிலிருந்து சொன்னார். பிறகு ஏதோ
ஒரு கணத்தில் அவருடைய பால்ய காலத்தில் படித்த பத்திரிகைகளை நோக்கித் திரும்பிவிட்டது.
எண்பது வயதான ஒருவர் தன் பத்து வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, என்னமோ சில கணங்களுக்கு
முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்லும் சிறுவனைப்போல புத்துணர்ச்சியோடும் உற்சாகத்தோடும்
விரிவாகவே விவரித்தார். அவர் தன் அக்காவைப்பற்றிச் சொன்னபோது, எனக்கு உண்மையிலேயே அந்த
அக்கா அவருக்குப் பின்னால் நின்றிருப்பதுபோல ஓர் எண்ணமே எழுந்தது. அவர் தீட்டிய சொற்சித்திரம்
வழியாக அவர் உயிர்பெற்று நடமாடுவதுபோலவே உணர்ந்தேன்.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் விட்டல்ராவ் விவரித்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும்
அசைபோட்டபடி திரும்பினேன். எப்போதும் தோன்றுவதுபோல அந்த பால்யகாலச் சித்திரத்தை ஒருமுறை
எழுதிப் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. இத்தனை ஆண்டு காலமாக உரையாடும் சமயத்தில்
உருவாகாத ஒரு மன எழுச்சி அத்தருணத்தில் ஏற்பட்டது. அக்கணத்திலேயே அதன் தொடக்கமும் உச்சமும்
முடிவும் அமையவேண்டிய விதங்களைப்பற்றிய தோராயமான ஒரு வரைபடம் நெஞ்சில் எழுந்துவிட்டது.
இரவு உணவுக்குப் பிறகு மடிக்கணினியைத் திறந்து ஒரே மூச்சில் வேகமாக எழுதி முடித்தேன்.
மறுநாள் காலையில் எழுந்ததும் அக்கட்டுரையைப் படித்தேன். எந்தத் திருத்தமும் தேவைப்படவில்லை. மனம் நிறைவாக
உணர்ந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, விட்டல்ராவுடன் உரையாடிய முந்தைய தருணங்களையெல்லாம்
இதேவிதமாக சின்னச்சின்ன சொற்சித்திரங்களாக எழுதினால் என்ன என்றொரு எண்ணம் தீப்பற்றியதுபோல
எழுந்தது. அதை என்னால் தடுக்கமுடியவில்லை. அக்கணத்தின் விழைவுக்கு நான் இசைந்துபோக
வேண்டியிருந்தது. தன்னிச்சையாக அடுத்தடுத்த அத்தியாயங்கள் சார்ந்த நினைவுகள் பொங்கிவந்தன.
விட்டல்ராவின் முதல் முயற்சியைப்பற்றிய சித்தரிப்பைத் தொடர்ந்து, தமிழ் எழுத்துலகில்
அவர் தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக்கொண்டார் என்பதை உணர்த்தும் வகையில் அடுத்த கட்டுரையை
எழுத அக்கணமே தொடங்கிவிட்டேன். அந்த அனுபவங்களையெல்லாம் ஏற்கனவே பல்வேறு தருணங்களில்
தன் உரையாடல்களில் சொல்லியிருக்கிறார். எழுத எழுத அந்நினைவுகள் தன்னைத்தானே கோர்த்துக்கொண்டு
வெளிப்படத் தொடங்கின.
இத்தொகுதியில் சித்தரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு எந்தக் காலவரிசையும் இல்லை. வேண்டுமென்றால்,
என் நினைவுகளின் வரிசை என்று சொல்லிக்கொள்ளலாம். எழுத உட்காரும் தருணத்தில் என் மனத்தில்
எந்த நினைவு முட்டிமோதி வெளிப்பட்டதோ, அதையே நான் தொடர்ச்சியாக எழுதினேன். கடந்த ஒரு
மாதமாக ஒவவொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் எழுதிக்கொண்டே சென்றேன். சில நினைவுகள் இலக்கியம்
தொடர்பானவை. சில நினைவுகள் மனித உறவுகள் தொடர்பானவை. சில நினைவுகள் அவருடைய குடும்பநிகழ்ச்சிகள்
தொடர்பானவை. எல்லாக் கட்டுரைகளையும் எழுதித் தொகுத்த பிறகு, ஒருமுறை வேகமாகப் படித்துமுடித்தேன்.
விட்டல்ராவின் பன்முகத்தன்மை வெளிப்படும் வகையில் அமைந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது.
12.05.2022 அன்று விட்டல்ராவுக்கு எண்பது வயது முழுமையடைகிறது. அவர் மீது நான்
கொண்ட அன்புக்கும் மதிப்புக்கும் அடையாளமாக அன்று அவருடைய உரையாடல்களைக் கொண்ட நூலையே
பரிசாகக் கொடுக்கவேண்டும் என நினைத்தேன். முதல் கட்டுரையை எழுதும்போது அந்த எண்ணம்
என் மனத்தில் இல்லை. பத்து கட்டுரைகளுக்கும் மேல் எழுதிமுடித்த பிறகு, இன்னும் பத்து
பதினைந்து கட்டுரைகளை அதே வரிசையில் எழுதமுடியும் என்னும் நம்பிக்கை உருவான பிறகு,
அந்த எண்ணம் ஆழமாக வேரூன்றியது. அன்றே நண்பர் நடராஜனை தொலைபேசியில் அழைத்து என் விருப்பதைத்
தெரிவித்தேன். அக்கணமே அத்திட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார் நடராஜன். அதுமட்டுமின்றி,
எளிமையான மனத்துடன் எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி நம் காலகட்டத்தில் வாழும் மகத்தானதொரு
படைப்பாளியை, இப்படி ஒரு புத்தகத்தைக் கொண்டுவருவதன் வழியாகக் கொண்டாடுவோம் என்று உற்சாகமான
குரலில் சொன்னார். அக்குரல் இன்னும் என் நெஞ்சில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நண்பர்
நடராஜனை இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
கடந்த ஒரு மாதமாக நான் இந்த உலகத்திலேயே இல்லை. விட்டல்ராவும்
நானும் பன்னிரண்டு ஆண்டு காலமாக உரையாடிக் களித்த பல்வேறு காலகட்டங்களின் நினைவேணிகள்
வழியாக தாவித்தாவி மேலே செல்வதும் கீழே இறங்குவதுமாக இருந்தேன். நினைவுகளைப் பிரித்து
அடுக்குவதிலேயே ஒவ்வொரு பொழுதும் கழிந்தது. ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்ததுமே முதல் வாசகியாக படித்தவள் என் மனைவி அமுதா. ஒவ்வொரு கட்டுரையையும் அவள் ஆர்வத்துடன்
படித்தாள். என் முயற்சிக்கு ஊக்கமளித்து எப்போதும் எனக்கு உற்ற
துணையாக விளங்கும் அமுதாவுக்கு என் இனிய அன்பு.
எங்கள் வீட்டுக்கு விட்டல்ராவ் வரும்போதெல்லாம் அப்பா என்று
அன்புடன் அழைத்து உபசரிப்பதில் அவள் எப்போதும் மகிழ்ச்சியடைவாள். சமையல் குறிப்புகள்
சார்ந்து அவர்கள் இருவரும் உற்சாகமுடன் உரையாடிக்கொள்வதை நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பேன்.
அவரால் உரையாடமுடியாத சங்கதியே இந்த உலகத்தில் இல்லை என்று அப்போது நினைத்துக்கொள்வேன்.
சமையலைப்பற்றி உரையாடினாலும் சரி, திரைப்படத்தைப்பற்றி உரையாடினாலும் சரி, ஒரே விதமான
உற்சாகத்துடன் அவர் பேசுவதை பலமுறை கவனித்திருக்கிறேன். அந்த ஆற்றலையும் ஈடுபாட்டையும்
நான் அவரிடம் மட்டுமே நான் கண்டிருக்கிறேன்.
என் நண்பன் பழனி நல்ல ரசனையுணர்வு மிக்க வாசகன். அவனும் தொடர்ச்சியாக இக்கட்டுரைகளை வாசித்துவந்தான். ஒவ்வொரு
கட்டுரையிலும் விவரிக்கப்படும் நிகழ்ச்சியைச் சார்ந்து, அதற்கு இணையான எங்கள் இளமைப்பருவத்து
நினைவுகளை நாங்கள் அப்போது பகிர்ந்துகொள்வோம். ஒருவகையில் அவனும் விட்டல்ராவைப்போலவே
சிறந்த உரையாடல்காரன். அவனுடைய உரையாடல்கள் வழியாக நான் அடைந்த புத்துணர்ச்சியை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.
நண்பன் பழனிக்கு என் அன்பார்ந்த நன்றி.
இன்னொருவரையும் இக்கணத்தில் நான் நினைத்துக்கொள்கிறேன். அவர் இயற்கையோடு கலந்துவிட்ட
தெய்வத்திரு கமலா விட்டல்ராவ். தன் நோய் சார்ந்த வலிகளையும் வேதனைகளையும் மறைத்துக்கொண்டு
புன்னகை படர்ந்த முகத்துடன் விட்டல்ராவுக்கு
அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி அவர் உரையாடிய தருணங்களை ஒருபோதும் மறக்கமுடியாது.
நோய்த்துன்பங்களை மறந்து அவர் வயதில் அவரளவுக்கு புத்தகங்களை வாசித்த வேறொரு பெண்மணியை
நான் பார்த்ததில்லை. புத்தக வாசிப்பில் அந்த அளவுக்குத் தீராத விருப்பமுற்றிருந்தார்
அவர். விட்டல்ராவைச் சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் என் பையில் அவருக்காக புத்தகங்களைக்
கொண்டு செல்வேன்.
மரணத்துக்கு வெகு அருகில் சென்றுவிட்ட கணத்தில் மருத்துவமனையில் இருக்கும்போது
கூட நான் கொடுத்த புத்தகத்தைத்தான் அவர் படித்துக்கொண்டிருந்தார் என்று அடிக்கடி சொல்வார்
விட்டல்ராவ். அவர் படித்துமுடித்த பக்கத்துக்கு
அடையாளமாக அவர் செருகிவைத்த குறிப்பட்டையை அந்தப் புத்தகத்திலிருந்து விட்டல்ராவ் எடுத்துக்
காட்டியபோது, ஒருகணம் என் உடல் தளர்ந்து நிலைகுலைந்தது. விட்டல்ராவும் நானும் உரையாடிய
தருணங்களிலெல்லாம், அமைதியான சாட்சியாக எல்லாவற்றையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பார்
அவர். அந்த உரையாடல்களின் தொகுதியாக எழுதப்பட்டிருக்கும் இந்நூலையும் எட்டாத உலகத்திலிருந்து
மெளன சாட்சியாக அவர் படித்துக்கொண்டிருப்பார் என நினைத்துக்கொள்ள விழைகிறேன். இப்புத்தகத்தை
அவர் மிகவும் விரும்பக்கூடும். திருமதி கமலா விட்டல்ராவுக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பணம்
செய்வதில் மிகவும் மனநிறைவடைகிறேன்.
27.04.2022
மிக்க
அன்புடன்
பெங்களூரு பாவண்ணன்