பாண்டிச்சேரி கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தியாகராஜன் சிங்காரம் ஒயின்ஸ் ஷாப் வரைக்கும் தன்னைத் தேடிக்கொண்டு வருவார் என்று ராஜசேகரன் நினைக்கவே இல்லை. “எப்படி இருக்கிங்க ராஜசேகரன்?” என்றபடி தனக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபோது அவனால் நம்பவே முடியவில்லை. யாரோ தெரிந்த பழைய நண்பர் பேசுகிறார் என்றுதான் அக்கணத்திலும் நினைத்தான். ஆனாலும் முகம் குழம்பியது. சிறிது நேரம் தடுமாறினான். பதிலே பேசாமல் இரண்டு மூன்று தரம் கண்களைச் சிமிட்டியபடி உற்று உற்றுப் பார்த்தான். “என்ன ராஜசேகரன்? என்னைத் தெரியலையா? நான்தான் தியாகராஜன்” என்று அவனுடைய மணிக்கட்டைப் பிடித்து அழுத்தினார்.
“ஒங்களத் தெரியாமலா சார்? இருந்தாலும் ஒரு சின்னக் குழப்பம்.
அதான்...”
ராஜசேகரன் சட்டென்று எழுந்து நின்று அவருடைய கைகளை வாங்கிக்
குலுக்கினான். அரைமணிநேரம் நரம்புகளை மீட்டிமீட்டி மெல்லமெல்ல உச்சத்துப் போயிருந்த
போதை சட்டென ஒரே கணத்தில் வடிந்தது. உடல் முழுக்க ஒரு விறைப்பு படர்ந்தது. கைவிரல்களால்
தலைமுடியைக் கோதி ஒழுங்கு செய்தான். கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்தான்.
அந்த மேசைக்குரிய சர்வீஸ்மேன் சுவரோரமாக நின்று நம்பமுடியாதவனாக அந்தக் காட்சியைப்
பார்த்தபடி நின்றான். நாலாவது ஸ்மாலுக்காக வாய்குழற சிறிது நேரத்துக்கு முன்னர் கெஞ்சிக்
கெஞ்சித் தடுமாறிக் கொண்டிருந்தவரா இப்படி பணிவைத் தவிர வேறெதுவும் அறியாத அப்பாவியாக
நிற்கிறார் என்று ஆச்சரியத்தில் மூழ்கினான்.
“சொல்லுங்க சார், ஒரு வார்த்த சொல்லி அனுப்பியிருந்தா நானே
வந்திருப்பேனே சார். கடைவரைக்கும் நீங் கவரணுமா?
“இருக்கட்டும் ராஜசேகரன். ஒரு நல்ல செய்தியை நானே நேருல சொல்லணும்னு
நெனைச்சேன். வீட்டுக்குத்தான் போனேன். தெரியாதுன்னுதான் மொதல்ல சொன்னாங்க. அப்பறமா
அவுங்கதான் இங்க பாக்கச் சொன்னாங்க” அவர் புன்னகையுடன் அவன் தோளை அழுத்தினார். மேசையைவிட்டு
தனியே அழைத்துச் சென்றார். அந்த நெருக்கம் அவனுக்கு அக்கணத்தில் தெம்பளிப்பதாக இருந்தது.
“உங்களுக்காக ஒரு பெனஃபிட் மேட்ச் நடத்தறதுக்கு போர்ட் சம்மதம்
கெடைச்சிருச்சி. இந்த மாதத்துக்குள்ளயே நடத்திடலாம்னு தீர்மானம். தேதிய இன்னும் ரெண்டு
மூணு நாள்ள முடிவு செஞ்சிடலாம். எப்படியும் ஏழெட்டு லட்சமாவது உங்களுக்குக் கெடைக்கும்.
நிச்சயமா இது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.”
ராஜசேகரன் கண்களில் ஒரு கணம் வெளிச்சம் பரவி அடங்கியது. இருபதாண்டுக்
கால விளையாட்டு வாழ்க்கை அவன் கண்முன்னால் காட்சிகளாக விரிந்தது. மிகச்சிறிய வயதிலேயே
புகழின் உச்சத்துக்குச் சென்றவன் அவன். மிகக் குறுகிய காலத்திலேயே பெற்றதையெல்லாம்
தொலைத்துவிட்டுத் தடுமாறியவனும் அவன். தியாகராஜனின் சொற்களைக் கேட்டு அவன் கண்கள் நன்றியில்
கலங்கின. “உங்க முயற்சி இல்லைன்னா இதுக்கெல்லாம் வாய்ப்பே கெடையாது சார். ரொம்ப நன்றி
சார், ரொம்ப நன்றி” என்று
அவர் கைகளை உறுதியாகப் பற்றிக் கொண்டான்.
“இருக்கட்டும் ராஜசேகரன். இது என்னுடைய கடமை. ஏதோ உங்க போறாத
காலம். எல்லோருமே உங்களுக்கு எதிரா இருக்காங்க. உங்க பேர எடுத்தாலேயே காரணமில்லாம ஒரு
வெறுப்பு, கசப்பு, எரிச்சல், எல்லாரயும் சேத்து ஒத்துக்க வைக்கறதுக்குள்ள இப்படி காலம்
ஓடிப்போச்சி. இனிமேல நாம அதயெல்லாம் நெனைக்கக்கூடாது. இப்பவாவது சாத்தியமாச்சேன்னுதான்
நெனைக்கணும்.”
“நீங்க எனக்கு நண்பர் மட்டுமில்ல சார். கடவுள் சார். வழிகாட்ட
வந்த கடவுள்” வார்த்தைகளுக்காக
அவன் தடுமாறினான்.
“அப்படியெல்லாம் பேசாதிங்க ராஜசேகரன். வாங்க போவலாம். நானே
வீட்டுல விடறேன்.”
அவர் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இருப்பவைனப் போல் தலையசைத்தான்
அவன். பில் பணத்தைச் சேவகனிடம் கொடுத்தனுப்பினார் தியாகராஜன். இருவருமாக கடையைவிட்டு
வெளியே வந்தார்கள். காரின் முன்பக்கத்தில் அருகில் அவனை உட்காரச் சொன்னார். பக்கம்
பார்த்து முன்னும் பின்னும் நகர்த்தி சாலைக்குக் கொண்டுவந்தார். பிறகு சீரான வேகத்தில்
ஓட்டத் தொடங்கினார்.
“அந்தப் பக்கமா போகலாமே சார்...”
“அங்க காம்ப்ளெக்ஸ் வாசல்ல ஒரே கும்பல் ராஜசேகரன். அங்க இருந்த
மரத்த போக்குவரத்துக்கு இடையூறுன்னு வெட்டிட்டிருக்காங்க. பழைய மரம் வெட்டக்கூடாதுன்னு
சிலருக்கு கோபம். வெட்டாதே வெட்டாதேன்னு ஒரே சத்தம். தொந்தரவுன்னு தெரிஞ்சபிறகும் வெட்டலைன்னா
மேலமேல தொல்லைகள் வந்துட்டுதானே இருக்கும்னு சொல்றது யார் காதுலயும் எறங்கலை. தங்க
ஊசிங்கறதுக்காக நம்ம கண்ணுல எடுத்து குதிக்க முடியுமா? வரும்போதுதான் அந்த அவஸ்தையில
மாட்டிகிட்டேன்...”
மௌனமாக வேடிக்கை பார்த்தபடி வந்தான் ராஜசேகரன். சிறைச்சாலையைக்
கடந்து, ரங்கப்பிள்ளைத் தெருவுக்குள் நுழைந்து சென்று வ.உ.சி. பள்ளியைத் தாண்டிச் சென்றது
வாகனம்: பூவரச மரங்கள் சூழ்ந்த பள்ளி மைதானம் ஜன்னல் வழியாக நன்றாகத் தெரிந்தது. கூடைப்
பந்தாட்ட கோல் கம்பங்கள் பார்வையில் பட்டன. பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பள்ளியின் பழைய மாணவன் அவன். அந்த மைதானம்தான் அவனுக்கு
அந்த ஆட்டத்தைக் கற்பித்தது. அந்த மைதானக்காட்சி பள்ளிப் பயிற்சியாளர் தங்கராஜை நினைவூட்டியது.
“ஓடுடா ஓடு. குதிரை மாதிரி ஓடணும். லகான இழுத்ததும் அது சட்டென்று நின்று திசையை மாத்திக்கறமாதிரி
எந்த நிமிஷத்திலயும் நின்னு எந்தப் பக்கமா இருந்தாலும் ஓடறதுக்குத் தயாரா நிக்கணும்டா” என்று திருப்பித்திருப்பி அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சினடியில்
ஒலிப்பதைப்போல இருந்தன. அவனை முழு வீரனாக்கியதும் வெற்றி வீரனாக்கியதும் அந்த வார்த்தைகள்.
சக்தி மிகுந்த ஒரு கிரியா ஊக்கியைப்போல் அவ்வார்த்தைகள் அவனை வெகு உயரத்துக்குச் செலுத்தின.
மைதானத்தில் அவனுக்குப் பட்டப்பெயர் குதிரை. அவன் பெயருக்குப்
பதிலா அந்தப் பட்டப்பெயரையே பத்திரிகைகள் எழுதிப் பிரபலப்படுத்தின. ‘இந்தக் குதிரையின்
முன் எந்தக் குதிரையும் நிற்காது’, ‘இந்த முறையும் கோப்பையைத் தட்டி வந்தது குதிரை’, ‘குதிரையில் நாலுகால் பாய்ச்சலின்முன் எதிரணியின் ஆட்டம்
எடுபடவில்லை’. விதம்
விதமான தலைப்புகள். விதம் விதமான பாராட்டு மழைகள். எல்லாமே பழங்கதைகளாகிவிட்டன இன்று.
“என்ன யோசனை ராஜசேகரன்?” அம்சா கோயில்முன் நிறைந்திருந்த ஏராளமான
கூட்டத்துக்கிடையே அவரால் முன்னேற முடியவில்லை.
“எனக்காக நீங்க எடுக்கற முயற்சிகளுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே
தெரியலை” நெகிழ்ச்சியான
குரலில் அவன் வார்த்தைகள் வெளிப்பட்டன.
“ராஜசேகரன், என்ன இது? ஏன் இப்படியெல்லாம் பேசறிங்க? நீங்க
என் நண்பன். உங்களுக்கு நான் செய்யாம வேற யார் செய்வாங்க? சொல்லுங்க? நீங்க இருக்கவேண்டிய
பொறுப்புலதான் இங்க நான் இருக்கேன். ஏதோ கெட்ட நேரத்துல நடந்த சின்னச்சின்ன பிசகுகள்
நடக்காம இருந்தா எங்கயோ போயிருப்பீங்க. இப்படியெல்லாம் இருக்கவேண்டிய அவசியமே வந்திருக்காது...”
தெளிவான ஆங்கிலத்தில் அவருடைய குரல் ஆதரவாக ஒலித்தது. கையை
நீட்டி அவனுடைய தோளை அழுத்தினார்.
‘சின்னச்சின்ன பிசகுகள்’ என்று முணுமுணுத்தபடி ஜன்னலுக்கு வெளியே நகரும் கூட்டத்தைப்
பார்த்தான். அவை இடறச் செய்யும் என அறிந்திருந்தும் அந்தப் பிசகுகளை ஏன் செய்தோம் என்று
தன்னையே கேட்டுக்கொண்டான். அந்தப் பிசகுகளிலிருந்து ஊற்றெடுக்கிற தணியாத மோகத்தை அடக்கிக்
கொள்ள முடியாத இன்னொரு பகுதி மனத்துக்குள் கொதிப்பேற்றிய சமயத்தில் அப்படித்தானே நடந்திருக்கமுடியும்
என்று தோன்றியது. எந்தப் பிசகையும் அனுமதிக்காத உறுதிமிக்க இளைஞனாக 1986ல் அவன் பங்கேற்ற
அணி தென்மண்டல அளவில் முதன்முறையாக கோப்பையைத் தட்டி வந்து பாண்டிச்சேரிக்குப் பெருமை
சேர்த்தது. சுதந்திர இந்தியாவில் நடந்த எல்லாப் போட்டிகளிலும் முதல் சுற்று அல்லது
இரண்டாவது சுற்றிலேயே தோற்றுச் சுருண்டு ஊரைப் பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்த
அணியை ஆறு சுற்றுவரை முன்னெடுத்துச் சென்று வெற்றிக்கோப்பையைக் கொண்டுவரச் செய்தவன்
அவன். “யார் இந்தக் குதிரை?” என்று அவன் படத்தை வெளியிட்டு ஆங்கிலப் பத்திரிகைகளும்
விளையாட்டுப் பத்திரிகைகளும் கட்டுரைகள் எழுதின. ஒரு கம்பத்திலிருந்து இன்னொரு கம்பத்தை
நோக்கி அவன் கால்கள் குதிரையைப் போலத் தாவுகின்றன. மைதானத்தின் எந்த மூலையில் இருந்தாலும்
அவன் கைகளை கூடையை நோக்கி மிகச்சரியாக பந்தை எறிகின்றன. மைதானத்தைச் சுற்றி அவன் ஒரு
மந்திரவாதியைப் போல சுற்றிச் சுற்றி ஓடுகிறான். அவன் கையை அடைந்த பந்து கோல் கணக்காக
மாறுவது உறுதி. பாராட்டுகள் எல்லாத் திசையிலிருந்தும் அவனை நோக்கிக் குவிந்தன. முதலமைச்சர்
அவனுக்கு நினைவுப் பரிசை வழங்கினார். கவர்னர் தன் மாளிகைக்கு அந்த வெற்றி அணியின் வீரர்களை
அழைத்து ஒரு விருந்தளித்தார். அதே மாதத்தில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக
பாண்டிச்சேரி அணி கோப்பையைத் தட்டிவந்தது. வடநாட்டு வெள்ளை முகங்கள் யார் இந்தக் கறுப்பு
இளைஞன் என்று புருவம் உயர்த்தின. குருட்டு அதிர்ஷ்டத்தால் அடைந்த வெற்றி என்று தில்லிப்
பத்திரிகை குத்திக் காட்டி செய்தி வெளியிட்டது. அது உழைப்பால் பெற்ற வெற்றிதான் என்பதை
அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த பந்தயங்களில் வெற்றி வாகை சூடி கோப்பைகளைப் பெற்றுவந்து
நிரூபித்தான் அவன். தொடர்ச்சியான மூன்று வெற்றிகளால் வேறு எந்த மாநிலத்துக்கும் கிட்டாத
பெருமையை பாண்டிச்சேரி அடைந்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது. அதற்கடுத்த ஆண்டில்
தேசிய அணியில் விளையாட அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனுடைய தேர்வு எந்த அளவுக்கு
சந்தோஷமான விஷயமோ அதே அளவுக்கு துக்கமான விஷயம் களமிறங்காத பதிலி ஆட்டக்காரனாகவே அவன்
ஒதுக்கிவைக்கப்பட்டதாகும். பொறாமைகளும் தந்திரங்களும் நிறைந்த நிர்வாகத்தலைமை அவனுக்கு
எவ்விதமான வாய்ப்பையும் வழங்காமல் வேடிக்கை பார்த்தது. எந்தப் பயனும் இல்லாமல் மாதக்கணக்கில்
நாடுநாடாகச் சுற்ற நேர்ந்ததில் அவன் மனம் தளர்ந்து போனான். கசப்பும் விரக்தியும் நிறைந்த
அன்றைய இரவுதான் முதல் பிசகு நடந்தது. அவனைப்போலவே பதிலி ஆட்டக்காரனாக உலவிய பஞ்சாப்காரன்
திலீப்சிங் மனபாரத்தைக் குறைத்துக் கொள்வதற்காக அழைத்தபோது அவனால் மறுக்கமுடியவில்லை.
தங்கியிருந்த விடுதியோடு இணைப்புக் கட்டடமாக இயங்கிய பாருக்குள் நுழைந்தார்கள். எங்கும்
அரை இருள். குறைந்த நிலவு வெளிச்சத்தில் கரிய நிழல்களுடன் அசைந்தாடிய மரத்தடியைப்போல
விரிந்திருந்தது அந்த அறை. குளிரூட்டப்பட்ட அந்த அறையின் காற்று உடலின் இறுக்கத்தை
மெல்லமெல்ல லேசாக்கியது. சுவர்களில் தொங்கிய வெளிநாட்டுச் சித்திரங்களின் தோற்றம் அந்த
அறைக்கு ஒரு புராதனத் தன்மையை வழங்கியது. கண்ணாடித் தம்ளர்களும் குவளைகளும் மேசைமீது
வைக்கப்படும் ஓசையும் கரண்டிகளும் கோப்பைகளும் உரசிக்கொள்ளும் ஓசையும் அவனைச் சுண்டி
இழுத்தன. ஒவ்வொரு மேசைமீதும் கடைந்து நிறுத்திய சிற்பங்களைப் போல பல வித தோற்றங்களுடன்
காட்சியளித்த பாட்டில்கள் பளபளப்புட மின்னின. அவை திறக்கப்பட்டதும் அருவிபோல மது கோப்பைக்குள்
வழிந்து நிரம்பியது. தன் விரக்தியை மறந்து மெல்ல அந்தக் காட்சியில் மனம் பறிகொடுத்தான்
ராஜசேகரன்.
விளையாட்டாக ஒரே ஒரு ஸ்மால். எப்போதுமே அதுதான் அவன் கணக்கு.
அதை வைத்துக்கொண்டே மணிக்கணக்கில் அரட்டையடிப்பதில் வல்லவன். அன்று அவன் உறுதி குலைந்தது.
முதல் மிடறைப் பருகி கோப்பையைக் கீழே வைத்தபோது நெஞ்சுக்குள் தணியாத தாகம் கொண்ட ஒரு
யானை பிளிறும் சத்தம் அவன் செவிக்குள் கேட்டது. காட்டையே அதிரவைக்கும் அக்குரலை அவன்
மனம் கூர்மையாகக் கவனித்தத. அக்கணம் தன்னையே அவன் யானையாக நினைத்துக்கொண்டான். ஒரு
பூனைக்குரிய மரியாதைகூட இல்லாத இடத்தில் யானைக்கு என்ன வேலை என்று சிரிப்பு வந்தது.
வாய்விட்டுச் சிரித்தான். புரைக்கேறியது. கண்களில் நீர் தளும்பி இருமல் வந்தது. உடல்
குப்பென வியர்த்தது. அக்கணத்தில் சிரிப்பு அடங்கி ஒருவித இயலாமையும் ஆத்திரமும் கவிந்தன.
உடல் நரம்புகள் முறுக்குடன் எழுந்து துடிப்படைந்தன. தாகம் அடங்காத யானை நெஞ்சைப் பிளந்து
கொண்டு வெளியே குதித்துவிடும்போல இருந்தது. கோப்பையில் மிச்சமிருந்த மிடறுகளையும் வேகமாகக்
குடித்துமுடித்தான்.
இறால் வறுவலைக் கொறித்துக்கொண்டிருந்த திலீப்சிங்
மென்மையாக புன்னகைத்தான். நட்பும் ஆதரவும் கொண்ட புன்னகை.
“இன்னொரு லார்ஜ் சொல்லட்டுமா தோஸ்த்?” என்று கையைத் தொட்டான். வழக்கத்தை மீறி பீறிட்ட
ஆர்வத்தை அவன் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது.
“இன்னைக்கு ஒருநாள்தானே ராஜசேகரன்? ஏன் வேணாம்ன்னு சொல்றிங்க?
ரிலாக்ஸ் பண்ணவந்த இடத்து ஏன் இப்படி கணக்குப் பாக்கறிங்க ராஜசேகரன்?”
திலீப்சிங்கின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமலிருக்க அவன்
முயன்றாலும் அவனுடைய ஆழ்மனம் அக்கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னபடி இருந்தது.
“எல்லாரயும்போல நீங்களும் மதுமேல கெட்ட அபிப்பிராயம் வச்சிருக்கிங்க
ராஜசேகரன். அதெல்லாம் அறியாமைகள். நம் மனசை மீறி என்ன நடந்துவிடம் சொல்லுங்கள்..?”
மன்றாடுவதைப் போலவும் புரியவைப்பதைப்போலவும் கனிவோடு பேசினான்
அவன். ராஜசேகரன் மனம் நெகிழ்ந்தான். நிமிர்ந்து அவனுடைய கண்களையே பேசாமல் உற்றுப் பார்த்தான்.
“உங்களுக்கு கட்டுப்படுத்திக்கொள்கிற சக்தி ரொம்ப அதிகம் ராஜசேகரன்.
எதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல போவக்கூடாதுன்னு நெனைக்கறிங்க. எல்லாமே சரிதான்
சும்மா தெரிஞ்சிக்கறதுக்காக நான் ஒரு கேள்வி கேக்கறேன். பதில் சொல்விங்களா? இன்னொரு
லார்ஜ் அடிக்கறதனால ஏதாவது நஷ்டம் வருமா? இல்லவே இல்லை. மன இறுக்கம் இன்னும் கொஞ்சம்
தளரும். அமைதி கெடைக்கும். அது வேணாமா?”
“இருக்கட்டும் சிங். அதெல்லாம் வேணாம். இன்னும் கொஞ்ச நேரம்
பேசியிருந்துட்டு கௌம்பலாம். வேணுமில்லா இன்னும் ஒரு இறால் வறுவல் சொல்லு”
ராஜசேகரனின் குரல் தளர்ந்திருந்தது.
“ஒரு லார்ஜ். ஒரே ஒரு லார்ஜ். அமைதி வேணாமா ராஜசேகரன்?”
உதடுகளை நாவால் வருடியபடி தடுமாறி முடிவின் இரு விளிம்புகளிடையே
ஊசலாடி. பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக கண்களைச் சிமிட்டினான் ராஜசேகரன். மறுகணமே
கோப்பைகள் மீண்டும் பொன்னிறத் திரவத்தால் நிரம்பின.
உள்ளம் பரபரக்க தன் கோப்பையை இழுத்து உறிஞ்சினான். பிச்சிப்பூவின்
மணம் தாக்கியதைப்போல இருந்தது.
உருகி உருகிப் பேசினார்கள் இருவரும். ஆசியப் பந்தயங்கள்.
ஒலிம்பிக் பந்தயங்கள். ரஷ்யாவிலும் ஜப்பானிலும் வரும் ஆண்டுகளில் நடைபெற இருக்கிற சிறப்புப்
பந்தயங்கள். பேச்சு தாவித்தாவி எங்கோ போனது.
“இன்னும் ஒரு லார்ஜ் சொல்லட்டுமான பாஸ். இந்த இரவு போல இன்னொரு
வாய்ப்பு இனிமேல எங்க கிடைக்கப்போவுது பாஸ்? நீங்க ஒரு பக்கமா போயிடுவீங்க. நான் ஒரு
பக்கமா போயிடுவேன். இந்தப் பிரிவத் தாங்க முடியலை பாஸ்.’
ஒரு கோரிக்கையைப்போல கெஞ்சிய அந்தக் குரலைக் கேட்டு அவள்
மனம் இளகியது. “நீ கெஞ்சும்போது ஒரு குழந்தையைப்போல இருக்கிறதடா உன் முகம்” ராஜசேகரன் நெருங்கி அவன் கன்னத்தைத் தொட்டுக் கிள்ளினான்.
“இந்தக் குழந்தையின் சந்தோஷத்துக்காக இன்னொரு லார்ஜ் சொல்லட்டுமா பாஸ்?” அவன் குழைவாகக் கேட்டான். ராஜசேகரன் மகிழ்ச்சியோடு தலையசைத்தான்.
அவன் மனமும் உடலும் இந்தத் தரைமீதே இல்லை. தாவித்தாவி ஆகாயத்தைநோக்கி பட்டம்போல எம்பியது.
நிரப்பப்பட்ட கோப்பைகள் வெகுசில நிமிடங்களிலேயே காலியாகின.
“இந்த நாளை என் வாழ்க்கை முழுக்க மறக்கமாட்டேன் பாஸ். ஒரு
பறவையின் இறகுபோல நான் லேசா இருக்கேன் தெரியுமா? மனசுக்குள்ள என்னென்னமோ ஆசைகள். பாரங்கள்.
கோபங்கள். தவிப்புகள். ஏமாற்றங்கள். எல்லாமே தூசு மாதிரி பறந்துபோயிடுச்சி. வெய்ட்லெஸ்
பேப்பர் மாதிரி இருக்குது மனசு.”
“அது எப்படி நான் நெனைக்கறதயெல்லாம் நீ சொல்ற?” ராஜசேகரனின்
குரல் தழுதழுத்தது.
“அதான் பாஸ் இந்தப் பானத்தோட மகிமை. ஒருத்தவங்க மனசு இன்னொருத்தவங்களுக்குக்
கண்ணாடிமாதிரி தெரிஞ்சிடும். அபூர்வமான அந்த இடத்த நாம தொட்டுட்டோம் பாஸ். இந்த அலை
வரிசையிலயே நெலைச்சிருக்கறதுதான் ஆனந்தம் பாஸ். பரமானந்தம். இந்த ஆனந்துக்காக உலகம்
முழுக்க வேற தெசையில் தேடித்தேடி மக்கள் அலை பாயறாங்க பாஸ். அதுக்காக உயிரயே விடறாங்க.
இந்த திசையில இது கொட்டிக் கெடக்குதுங்கறது அவுங்க கண்ணுக்குத் தெரியலை பாஸ். எது எதுக்கோ
பயந்து எதுஎதுக்கோ கட்டுப்பட்டு இந்த மாபெரும் பரமானந்தத்தை மிஸ் பண்ணிடறாங்க பாஸ்...”
இன்னுமொரு லார்ஜ் அருந்திப் பார்க்கலாம் என்று தன் மனம் நினைப்பதை
அவன் அதிசயமாக உணர்ந்தான். அது ஒரு சாகசப் பயணத்தைப்போலத் தோன்றியது. ஒருபோதும் இன்னொரு
இரவு இப்படி அமையப்போவதில்லை என்ற எண்ணம் எழுந்தது. இந்தப் பரமானந்தத்தைப் பற்றி இனி
மற்றவர்களிடம் பேசிப்பேசித்தான் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்த ஆனந்தத்தின் இறுதிச்
சொட்டையும் அவன் ஆசைதீரச் சுவைக்க நினைத்தான்.
அவன் வாய் திறந்து சொல்வதற்குள் “ப்ளீஸ், இன்னுமொரு லார்ஜ்
சொல்லட்டுமா பாஸ்” என்று
கேட்டான் திலீப்சிங். நம்ப முடியாதவனாக அவனைப் பார்த்துச் சிரித்தான் ராஜசேகரன். சரிசரி
என்று தலையசைத்தான்.
கோப்பையில் நிரப்பப்பட்ட பானத்தை துளித்துளியாக ஆசையாக உறிஞ்சினான்.
நாவில் படிந்திருந்த ஈரத்தை உதடுகளில் தடவினான். பிறகு நாக்கை நீட்டி உதடுகள்மீது பரவவிட்டுச்
சுழற்றியபடி சுவைத்தான்.
நேரம் ஏறத்தாழ நள்ளிரவை நெருங்கியிருந்தது. தொகையைச் செலுத்திவிட்டு
திலீப்சிங் எழுந்தான். ராஜசேகரன் கால்களை ஊன்றி எழ முயன்றான். ஒரு காலை ஊன்றி இன்னொரு
காலை எடுப்பதற்குள் அவன் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தான். “வா பாஸ் வா” என்று உதவிக்கு வந்தான் திலீப்சிங். ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு
விடுதிக்குச் சென்றார்கள். லிப்ட் பாய் புன்னகையோடு அவர்களை உள்ளே அழைத்தான். இரண்டாம்
தளத்தில் லிப்ட் நின்றது. “குட்நைட் சாப்” என்றான் லிப்ட் பாய். இருவரும் வெளியே வந்து நின்றார்கள்.
ஒவ்வொரு அறையின் எண்ணையும் நெருங்கி நின்று பார்த்துக்கொண்டே
நடந்தார்கள் இருவரும். 204 ஆம் எண்ணுள்ள அறையின் முன் நெடுநேரம் நின்றார்கள். “இது
நம்ம அறை இல்லை பாஸ். நம்ம அறை அங்க இருக்குது” என்று அழைத்தான் திலீப்சிங். “தெரியும்டா, இது கோச் அறைதானே?”
என்று கேட்டான் ராஜசேகர்.
“ஆமாம். கோச் அறைதான்”.
“கூப்புடறா அவன...”
சற்றும் யோசிக்காமல் கதவை ஓங்கித் தட்டத் தொடங்கினான் ராஜசேகரன்.
மனநிலை பிறழ்ந்தவனைப் போல ஒரு கையால் அழைப்புமணியை அழுத்தியபடியும் மறுகையால் கதவைத்
தட்டியபடியும் நின்றான். எரிச்சலோடும் தூக்கக் கலக்கத்தோடும் எழுந்துவந்து கதவைத்திறந்த
கோச் இருவருடைய தோற்றத்தையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார். யோசிக்கக்கூட
நேரமில்லாமல் இருவரும் சராமாரியாக கோச்சைத் திட்டத் தொடங்கினார்கள். விடுதிக்காவலர்கள்தாம்
அவர்களைப் பிரிக்க வேண்டியதாக இருந்தது. மறுநாள் அவர்கள் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
வெளியேற்றப்பட்ட குதிரை. போதையில் ஆடிய குதிரை. காத்திருந்து காத்திருந்து களம் புகாமலேயே
வெளியேறிய கதிரை. அவமானத்தைத் தேடித்தந்த குதிரை. குதிரைக்கு கல்தா. சவுக்கடிப்பட்ட
குதிரை. விதம்விதமான தலைப்புகளில் பத்திரிகைகள் எழுதி அவன் கதையை அக்குவேறு ஆணிவேறாக
பிரித்துப்போட்டன. தேசிய அணியின் கதவுகள் அவர்களைப் பொறுத்தவரையில் நிரந்தரமாக மூடப்பட்டன.
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஆணைப்படி அவர்கள் ஓராண்டுக்கு எவ்விதமான ஆட்டத்திலும்
ஆடமுடியாத சூழல் உருவானது.
“என்ன ராஜசேகரன்? என்ன யோசிக்கிறிங்க? இறங்குங்க. வீடு வந்தாச்சி.”
தியாகராஜனுடைய குரல் அவன் நினைவுகளைக் கலைத்தது. புன்னகைத்தபடி
கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தா. அவன் மனம் மீண்டும் சின்னச்சின்னப் பிசகுகள் என்று
முணுமுணுத்து அடங்கியது.
வாகனத்தின் சத்தம் கேட்டு சுமங்கலி கதவைத் திறந்து கொண்டு
வெளிப்பட்டாள். இறுகியிருந்த அவள் முகம் தியாகராஜனுடைய இருப்பை உணர்ந்ததுமே மாறியது.
“வாங்க வாங்க. அங்கதான் இருந்தாரா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“ஆமாம் மேடம். அங்கியிருந்துதான் அழைச்சிட்டு வரேன். உங்ககிட்ட
ஒரு விஷயம் சொல்லணும். இந்த மாசக் கடையில சாருக்காக ஒரு பெனஃபிட் மேட்ச் நடத்தப்போறோம்.
அதே சமயத்துல அரசாங்கமும் எங்க க்ளப்பும் அவர கௌரவிக்குது. நீங்களும் வந்து கலந்துக்கணும்”
சுமங்கலி குழப்பமாகச் சிரித்தாள்.
“கொஞ்சம் இருங்க. டீ போடறேன். சாப்ட்டுட்டு கௌம்பலாம்.”
“ஒண்ணும் கவலப்படாதீங்க. மேட்ச் முடியட்டம். விருந்து சாப்பாடே
சாப்படறேன்” சிரித்துக்கொண்டே
விடைபெற்றார் தியாகராஜன். கார்வரை வந்து வழியனுப்பிய ராஜசேகரனுடைய சட்டைப்பையில் ஐந்நூறு
ரூபாய்த் தாளை வைத்துவிட்டு “சும்மா வச்சிக்குங்க” என்றபடி கிளம்பினார்.
ராஜசேகரன் புதுசாக வீட்டுக்கு வருவதைப்போல மீண்டும் வீட்டுக்குள்
வந்தான். சுமங்கலி அவனை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. பேச்சுவார்த்தைகள் குறைந்து
பல வருஷங்கள் கடந்துவிட்டன. ஒற்றை அல்லது இரட்டை வார்த்தைகளின் துணையோடு தான் வாழ்க்கை
ஓடிக்கொண்டிருந்தது. ஒருகணம் அவளை உற்றுப் பார்த்தான். பெருமூச்சு வந்தது. அவளது புறக்கணிப்புக்கு
முற்றிலும் தகுதியானவன்தான் நான் என்று சொல்லிக்கொண்டான். வேறொரு பெண்ணாக இருந்தால்
அந்தத் தில்லிக்காரக் கோச் போல வீட்டை விட்டே வெளியேற்றியிருக்கக்கூடும். இந்தக் குதிரையும்
தெருவில் குப்பைகளையும் கூளங்களையும் தின்று செத்துப்போயிருக்கும். அப்பாவிப் பெண்
குடும்பத்தை நடத்த தனியார் பள்ளியொன்றில் வேலையொன்றையும் தேடிக்கொண்டு வேளாவேளைக்கு
தட்டு நிறைய சோற்றையும் போட்டு குதிரையின் பாரத்தையும் சேர்த்துச் சுமக்கிறது. அக்கணத்தில்
அவன் மனம் அபூர்வமான ஒரு முடிவைத் தொட்டது. இனிமேல் ஒருபோதும் மதுவைத் தொடுவதில்லை
என. வாழ்க்கையில் கிடைத்திருக்கிற கடைசி வாய்ப்பு இது. இதையாவது சரியாகப் பயன்படுத்தி
நல்லபடியாக மீண்டு வரவேண்டம் என்று நினைத்தான். எதுவும் புரியாமல் ஓரமாக நின்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த மகள் கல்பனாவை அழைத்து “இந்தாம்மா, நீயும் அம்மாவும் நல்லா
ஒரு டிரஸ் எடுத்துக்குங்க” என்று கையிலிருந்த ஐந்நூறு ரூபாயைக் கொடுத்தான். பிறகு தயக்கத்தோடு
தன் அறைக்குச் சென்று துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றான். அழுகை முட்டிக்கொண்டு
வந்தது. நினைவுகள் அவனை மறுபடியும் ஆக்கிரமிக்கத் தொடங்கின.
ஒழுங்கு நடவடிக்கைக்குப் பிறகு மாநிலக் குழுவிலும் அவனுக்கு
இடம் கிடைப்பது அரிதான செயலாக இருந்தது. ஐந்நூறு பந்தயங்கள் நடந்தால் ஏதாவது ஒரு பந்தயத்தில்
கிடைக்கும். அவன் மனம் ஏமாற்றத்தில் தளர்ந்துபோனது. விரக்தியின் புகலிடமாக
அப்போதுதான் அவன் மதுவை நிரந்தரத் துணையாக மாற்றிக் கொண்டான்.
சுமங்கலிக்கும் கல்பனாவுக்கும் பிடிக்காதவனாக மாறியதெல்லாம் அப்போதுதான். தியாகராஜன்
உதவியால் பாண்டிச்சேரி காவல்துறையின் அணிக்கு பயிற்சியாளராக இயங்கும் வாய்ப்பு வந்தது.
குறைவான சம்பளம்தான். ஆனால் பெருகிக் கொண்டே போகும் சிங்காரம் ஒயின்ஸ் கடைப் பாக்கியைத்
தீர்க்கப் போதுமான பணம். மனத்துக்கும் பிடித்த வேலை. மூன்றாண்டக் காலம் பிரச்சனையே
இல்லாமல் கழிந்தது. ஊரும் உலகமும் தன்னை ஒதுக்கிவைத்துவிட்டது என்னும் சோர்வு எப்போதாவது
திடீரென உருவாகித் தாக்கும் வேதனையைத்தான் அவனால் தாங்கவே முடியாது. மூச்சுமுட்டக்
குடித்துவிட்டு போதையில் கிடந்து உருண்டால்தான் அந்தப் பாரத்திலிருந்து மீளமுடியும்.
முக்கியமான ஒரு பந்தயத்துக்கு நாள்குறித்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக தலைகாட்டிய
சோர்வாலும் துக்கத்தாலும் போதையை நாடிப் போக வேண்டியதாயிற்று. அவனால் பயிற்சிக்குப்
போகவே முடியவில்லை. அவன் வேலை பறிபோனது. தியாகராஜனுடைய இடைவிடாத முயற்சியால் இந்தியன்
வங்கிக் கிளையின் அணிக்கான பயிற்சியாளராக நியமனமானான். இவன் ஆலோசனைகள் அந்த அணிக்குப்
பல வெற்றிகளையும் கோப்பைகளையும் பெற்றுத் தந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள்
அந்த வேலையையும் அவன் தொலைத்துவிட்டு நின்றான். பயிற்சியின்போது அவன் போதையில் இருந்ததாக
நிர்வாகம் சுமத்திய குற்றத்தை அவனால் மறுக்க முடியவில்லை.
“அதக்குடிச்சி, இதக்குடிச்சி, ஒருநாள் எங்க ரத்தத்தையே குடிக்கப்போற
நீ. அப்பவாவது உன் போதை தெளியுமோ, தெளியாதோ, அந்தத் தெய்வத்துக்குத்தான் வெளிச்சம்...”
பத்து ரூபாய் இருந்தால் கொடுக்கும்படி கேட்ட ஒருநாள் கொண்டைக்கூந்தல்
அவிழ ஆத்திரத்தோடு சுமங்கலி சொன்ன வார்த்தைகள் அவன் நெஞ்சை ஆணிகளைப் போலத் தைத்தன.
தன் இயலாமையைப் பெரிதும் நொந்துகொண்டான். விளையாட்டைத் தவிர வேறெதுவும் தெரியாத அசடனாக
இருப்பதைப்பற்றிய வெட்க உணர்வு ஒரு நெருப்பைப்போல அவன் நெஞ்சில் பற்றியெரிந்தது. அப்போதுதான்
அவனுக்காக ஒரு பெனஃபிட் மேட்ச் நடத்தி கௌரவிக்கும் திட்டத்தோடு யார்யாரிடமோ அலையத்
தொடங்கினார் ராஜசேகரன்.
தலைமீது விழும் தண்ணீர் தன்னையே கரைத்துவிட
எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான் ராஜசேகரன்.
இந்தத் தண்ணீரோடு தண்ணீராகக் கலந்து கழிவுக்குழாய் வழியே வெளியேறி சாக்கடைகளோடு சாக்கடையாக
கலந்து வெளியேறி விடலாம் என்று தோன்றியது. காலம் முழுக்க சாக்கடையாக வாழ்ந்தவனுக்கு
அதுதான் சரியன முடிவாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டான். கூடத்தில் படித்துக் கொண்டிருந்த
கல்பனாவின் அருகே வந்து உட்கார்ந்தான். அவளுடைய பார்வை விசித்திரமாக இருந்தது. “என்ன
கணக்கு போட்டுப் பாக்கறியா? உனக்கு கணக்கு ரொம்ப புடிக்குமா?” என்று கேட்டான். அவள்
தயங்கியபடியே மெதுவாக தலையசைத்தான். அவளுடைய புத்தகத்தை வாங்கி ஒருகணம் புரட்டிப் பார்த்தான்.
“பிதாகரஸ் தீரம்லாம் உனக்கு இருக்குதா? ரொம்ப ஈசி தெரியுமா அது” என்று சிரித்தான். நம்ப முடியாமல் அவனையே வெறித்துப் பார்த்தாள்
கல்பனா. “இங்க பாரு” என்றபடி
ஒரு சின்னத்தாளில் செங்கோண முக்கோணம் வரைந்து கால்மணிநேரம் விளக்கினான். அவன் விளக்கங்கள்
ஆணியடித்ததைப்போல அவள் நெஞ்சில் இறங்கின. தன் தவறான முன்தீர்மானத்தை நினைத்து மனம்
கூசினாள்.
சாப்பாட்ட வேளையில் சுமங்கலி கல்பனாவை அழைத்தாள். அவள் அவனைப்
பார்த்தாள். “போய்ச் சாப்புடும்மா, போ, அம்மா கூப்படறாங்க பாரு, அப்பா எப்பவும் லேட்டாத்தான
சாப்படுவேன், போ” என்று
அனுப்பிவைத்தான் அவன். சிறிது நேரத்துக்குப் பிறகு அவனுடைய சாப்பாட்டத் தட்டை மேசையில்
வைத்துவிட்டுச் சென்றாள் சுமங்கலி. வழக்கமாக தாமதமாக போதையில் வருகிறவனுக்கு எடுத்துச்
சாப்பிட வசதியாக வைக்கிற இடம். மெதுவாக மேசைக்கு அருகில் சென்று உட்கார்ந்து சாப்பிட்டான்.
பிறகு பாத்திரங்களைக் கழுவி மேசையிலேய கவிழ்த்துவைத்தான். வாசலுக்குச் சென்று தெருவை
வேடிக்கை பார்த்தபடி சிறிது நேரம் உட்கார்ந்தான். அருகில் தெரிந்த கோயில் கோபுரத்தை
உற்றுப் பார்த்தான். மேகங்களும் நட்சத்திரங்களும் நிறைந்த வானத்தையும் குவித்த கைகளைப்போன்ற
தோற்றம் தரும் கோயில் கோபுரத்தையும் அவன் மனம் இணைத்துப் பார்த்தது. கோபுர உச்சி மட்டுமல்ல,
கோயிலே வணங்குவதற்காக குவித்த கைகளைப் போலத்தான் தோன்றியது. அகன்று விரிந்த இயற்கைக்கு
மானுடம் செலுத்தும் வணக்கம் என்று சொல்லிக்கொண்டான். அவன் மனம் நெகிழ்ந்தது. எவ்விதப்
பரபரப்பும் இல்லாமல் அவன் மனம் நிம்மதியில் திளைத்திருப்பதை ஆச்சரியப்படும் வகையில்
உணர்ந்தான். குனிந்து அந்த கோபுரத்தைப் பார்த்து வணங்கினான். கதவைச் சாத்திக் கொண்டு
உள்ளே அறைக்கு வந்து படுத்தவன் எப்போது உறங்கினோம் என்று தெரியாமலேயே உறங்கிப்போனான்.
காலையில் எழுந்ததும் அறையைச் சுத்தம் செய்தான். பிறகு கூடத்தக்கு
வந்து ஒட்டடை அடித்தான். சுமங்கலி பள்ளிக்குக் கிளம்பி தயாராக நின்றாள். கல்பனாவும்
பள்ளிப்பையோடு வந்தாள். “கௌம்பணும்” என்று மொட்டையாகச் சொன்னபடி தயக்கத்தோடு நின்றாள் சுமங்கலி.
“போய் வாங்க. நீங்க வரதுக்குள்ள வீட்டை சுத்தமாக்கி வச்சிடுவேன்” என்றான் ராஜசேகரன். பதில் எதுவும் சொல்லாமல் தயங்கினாள்
சமங்கலி. “என்னம்மா, எதயாவது எடுத்தும்போயி வித்துக் குடிச்சிடுவேன்னு நெனைக்கறியா?
அப்படியெல்லாம் ஆகாதும்மா. பயப்படாம போய்ட்டுவா” உயரத்தில் கம்பி ஜன்னலோடு ஒட்டிக்கொண்டிருந்த சிலந்திவலையைத்
துப்புரவாக்கியபடி சொன்னான் ராஜசேகரன். சுமங்கலியும் கல்பனாவும் வெளியே சென்றார்கள்.
பத்து பத்தரை மணிவரைக்கும் வேலை இருந்தது. வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் இருந்த
அழுக்குக் கோலம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. குளித்துவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு
இரவில் பார்த்த கோயிலுக்குச் சென்றான். இடதுபுறமாக ஓங்கி நின்ற இரண்டு காட்டுவாழை மரங்களை
இயந்திரமொன்று வெட்டி அறுத்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் சென்று விசாரித்தான்.
“இங்க ஒரு தியான மண்டபம் வரப்போவுது சார். ஆயிரம் பேர் ஒரே
நேரத்துல உக்காந்து தியானம் பண்ணலாம். இந்த மரங்கள வெட்டி எடுத்தாத்தான் மண்டபம் கட்டமுடியும்னு
எஞ்சினியர் சொல்லிட்டாரு. அதான் வேலை நடக்குது. வர மார்கழி மாசத்துக்குள்ள மண்டபம்
தயாராகணும்.”
உள்ளே சென்று கருவறையைப் பார்த்து வணங்கினான். ஒருகணம் கைகுவித்து
நிற்கம் கோபுரஉச்சி நினைவுக்கு வந்துபோனது. அவ்வளவு உச்சியில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தும்
வணங்கி நிற்கும் மனம் மனிதர்களுக்கு மட்டும் ஏன் வருவதில்லை என்ற கேள்வி எழுந்தது.
புன்னகைத்தபடி வெளியே வந்தான்.
பத்து நாட்களில் அவன் மனம் முழு அளவில் வீட்டோடு படிந்துபோனது.
மூலையில் பழுதாகி வெகுகாலமாக நின்றிருந்த சைக்கிளை எடுத்து மெல்லமெல்ல சீராக்கி புதிய
பாகங்களை வாங்கிப் பொருத்தி சரிப்படுத்தி மகளுக்குக் கொடுத்தான். “ஓட்டத் தெரியாதுப்பா...”
என்று தயங்கியவளுக்கு சாயங்கால நேரங்களில் கோயில் மைதானத்துக்கு அழைத்துச் சென்று ஓட்டுவதற்குக்
கற்பித்தான்.
கல்பனாவே சைக்கிள் ஓட்டுக்கொண்டுவர பின்பக்கம் ஒரு பாதுகாப்புக்காக
மட்டும் பிடித்தபடி வீட்டக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஒருநாள் மாலையில் தியாகராஜன்
வந்து நின்றார். “வர 26ந்தேதி நாள் குறிச்சாச்சி. டில்லி டீமும் பஞ்சாப் டீமும் வரோம்னு
ஒத்துக்கிட்டாங்க. கரன்சிங்னு ஒரு ப்ளேயர், அவன்தான் போன்ல பேசனான். ஒங்க பேர்ல என்னமா
மரியாதை வச்சிருக்கான் தெரியுங்களா? அவரத் தெரியாம எப்படி சார் இருக்க முடியும்னு கேக்கறான்?
அவர் போட்டாவ ஃப்ரேம் பண்ணி வீட்டுக்குள்ள வச்சிருக்கேன்னு சொல்றான். அவர் ஆட்டத்த
பாத்துதான் நாங்கள்ளாம் ஆடக் கத்துக்கிட்டோம் சார்னு சொல்றான். எனக்கு கண்ணெல்லாம்
கலங்கியே போயிடுச்சி. உண்மையிலயே நீங்க பெரிய யோகக்காரர்தான்” என்று தோளைத் தொட்டு அழுத்தினார். சுமங்கலி அதற்குள் தேநீர்கோப்பைகளோடு
வந்து நின்றாள்.
“நான்தான் ஏற்கனவே விருந்துக்கே சொல்லி வச்சிருக்கேனே. இதெல்லாம்
எதுக்குங்க?” என்று சிரித்தார் தியாகராஜன்.
“இருக்கட்டும் எடுத்துக்குங்க” என்றாள் சுமங்கலி புன்னகையோடு.
அவர் விடைபெற்றுக் கொண்டார். வாசல்வரை சென்று வண்டியில் உட்கார்ந்த
பிறகு அடங்கிய குரலில் “சிங்காரம் ஒயின்ஸ்க்கு இப்பல்லாம் போறதில்லையாமே. திஸ் ஈஸ்
குட் பிகினிங். மை பெஸ்ட் விஷஸ்” என்று சொன்னார். நிதானமாக சிரித்தபடி அவருடைய கைகளை வாங்கிக்
கொடுத்தான் ராஜசேகரன். காரணமில்லாமல் ஒரு கணம் தியாகராஜனுடைய கண்கள் தளும்பின.
அந்த நிதானம் அவனுடன் ஒரு கவசத்தைப்போல நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது.
நன்கொடைக் காட்சிப் பந்தயம், நண்பர்கள் சந்திப்பு, விருந்தினர்களின் பாராட்டுகள், முதல்வரின்
புகழ்வார்த்தைகள், கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் சார்பில் தரப்பட்ட காசோலை,
மறுநாள் எல்லாச் செய்தித் தாட்களிலும் இடம்பெற்றிருந்த செய்திகள், குதிரைக்குக் கிடைத்த
கௌரவம், குதிரையின் சாதனைகள் சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட பொன்னெழுத்துக்கள், நீடூழி
வாழ்க குதிரை எனச் செய்திகளில் இடம்பெற்ற விதம்விதமான தலைப்புகள், சுமங்கலியின் கணக்குக்கு
நன்கொடைக் காசோலையை மாற்றியது, குடும்பத்தினரை அழைத்து விருந்தளித்தது என எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
அவன் நிதானத்தைக் கைவிடவே இல்லை. இது புதிய பிறவி என்பதுபோல அவன் நடந்துகொண்டான்.
விருந்தினர்களை அனுப்பிவைத்த பிறகு அவன் உறங்கப்போனான். வழக்குத்துக்கு
மாறாக தலைநிறைய பூக்களை வைத்துக் கொண்டிருந்த சுமங்கலி தயங்கித் தயங்கி “ஏன் தனியா
இங்க படுத்துக்கணும்? அங்க உள்ள வந்து படுக்கலாமே?” என்று அழைத்தாள். “இருக்கட்டும்மா,
எனக்கு இதுதான் வசதி. நீ போய் படுத்துக்கம்மா” என்று நிதானமாகவே சொல்லி அனுப்பினான். அலமாரியைத் திறந்து
அங்கிருந்த ஆல்பங்களை எடுத்தான். கான்பூர், போபால், கொச்சின், கல்கத்தா, பெங்களூர்
என பல இடங்களில் பந்தயங்கள் நடந்தபோது எடுத்த படங்களின் தொகுப்புகள். அவன் அணி வென்றபோதெல்லாம்
அவ்வப்போது செய்தித்தாட்களில் வந்த செய்தித் தொகுப்புகள். செய்திகளுக்கு வைக்கப்பட்டிருந்த
தலைப்புகள் அவனை பெரிதும் கவர்ந்தன. ஒருபக்கச் செய்தியின் சாரம் அந்த ஒற்றை வரித் தலைப்பில்
இருந்தது. எல்லாவற்றுக்கும் அடியில் அவனடைய திருமணப் படத்தொகுப்பும் இருந்தது. சுமங்கலியின்
இளம்வயதத் தோற்றம் கவர்ச்சியாக இருந்தது. அந்த அழகையும் மென்மையையும் தன்னுடைய துரதிருஷ்டமான
வாழ்க்கை கசக்கிவிட்டதை நினைத்து குற்ற உணர்வு கொண்டான். குழந்தையின் வெவ்வேறு காலகட்டப்
படங்கள் அழகாக இருந்தன. எல்லாத் தொகுப்புகளையும் ஒருசேர எடுத்து மறுபடியும் அலமாரிக்குள்
வைத்துவிட்டுப் படுத்தான். படுத்ததுமே உறங்கிப் போனான்.
நள்ளிரவைத் தொடும் நேரத்தில் சட்டென்று விழிப்பு வந்தது.
ஜன்னல் வழியே பார்வை படர்ந்தது. நிலவும் சில நட்சத்திரங்களும் தெரிந்தன. மரங்களற்ற
கோயில் மைதானம் தெரிந்தது. இந்த மரங்கள வெட்டி எடுத்தாதான் மண்டபம் கட்ட முடியும்னு
எஞ்சினீயர் சொல்லிட்டாரு என்ற வார்த்தைகள் நினைவின் ஆழத்திலிருந்து மீண்டெழுந்தன. படுக்கையிலிருந்து
எழுந்து அருகிலிருந்த கழிப்பறைக்குச் சென்று திரும்பினான். தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துபோனது.
சுமங்கலியின் அறையில் ஒளிர்ந்த இரவு விளக்கின் நீல வெளிச்சம் நீளவாக்கில் இழுத்த ஒரு
கோடுபோல கதவிடுக்கில் தெரிந்தது. மெதுவாக எழுந்து சத்தமெழுப்பாமல் வெளியே வந்தான்.
அவர்கள் அறையின் கதவைத் திறந்தான். இரவு விளக்கின் வெளிச்சத்தில் சுமங்கலியின் முகம்
நீலம் கலந்த வெண்மையுடன் ஒளிர்ந்தது. முன்நெற்றிக் குழல்
மின்விசிறிக் காற்றில் அலைபாய்ந்தது. கழுத்துவரை போர்வையை
இழுத்துப் போர்த்தியிருந்தாள். கழுத்தடியில் பூச்சரம் நசுங்கிக் கிடந்தது. அவளருகில்
கல்பனா ஒரு செல்லப்பிராணியைப் போல சுருண்டு படுத்துக் கிடந்தாள். இருவரையும் நோக்கி
காற்றில் முத்தமிட்டான். சத்தமெழாமல் பின்வாங்கி நடந்தான்.
அருகிலிருந்த சமையலறைக்குச் சென்று குவளை நிறைய தண்ணீர் நிறைத்துக்கொண்டு
தன் அறைக்குத் திரும்பினான். படுக்கையில் படுத்தபடி வானத்தையும் மேகத்தையும் கோபுரத்தையும்
பார்த்தான். சுமங்கலியின் கனிந்த முகம் ஞாபகத்தில் மிதந்துவந்தது. திருமணமான தொடக்க
நாட்களில் அவள் முகத்தில் பரவியிருந்த கனிவை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான்
மீண்டும் பார்ப்பதாக அவனாகவே நினைத்துக் கொண்டான். இது தொலைந்து போகக் காரணமாக பாவி
நான்தான் நான்தான் என்று நெஞ்சில் அறைந்தபடி மௌனமாக அழுதான். மெல்ல கண்களைத் துடைத்துக்கொண்டு
சட்டைப்பைக்குள் இருந்த மாத்திரைப்பட்டியை எடுத்து ஒவ்வொன்றாக கிள்ளி பத்தையும் திரட்டி
மொத்தமாக வாய்க்குள் போட்டுக்கொண்டு ஒரு குவளை தண்ணீரையும் அருந்தினான். அடுத்தநாள்
மாலைப் பத்திரிகைகளில் தன்னைப்பற்றி எப்படிப்பட்ட செய்திகள் வரும் என்று நிதானமாக அசைபோட்டான்.
‘காலமெல்லாம் ஆடிய குதிரை கண்மூடியது’, ‘குதிரையின் திடீர் மரணம்’. ‘ஏற்றமும் இறக்கமும் - குதிரையின் வாழ்க்கையை முன்வைத்து
சில குறிப்புகள்’ பற்பலவாகத்
தோன்றிய தலைப்புகளின் வசீகரத்தை நினைத்துச் சிரித்தபடி உறக்கத்தில் அமிழத் தொடங்கினான்.
(உயிர்மை -2006)