Home

Sunday, 2 July 2023

பிள்ளைப் பருவத்தில் - கட்டுரை

  

     கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வழக்கம்போல அருணாவும் சிவக்குமாரும்  குழந்தை அரூப் சித்தார்த்தோடு பெங்களூருக்கு வந்திருந்தார்கள். பார்ப்பவர்களின் கவனத்தை ஒரே கணத்தில் தன்னைநோக்கி ஈர்த்துவிட வல்ல குழந்தை அரூப். பரபரப்பும் துடிப்பும் நிறைந்த அவன் பேச்சும் சற்றும் எதிர்பாராதவிதமாக பெரிய மனிதத் தோரணையோடு அவன் சொல்லும் அபூர்வமான சில சொற்கலவைகளும் அவனோடு உடனடியாக ஒட்டவைத்துவிடும். அவர்கள் வந்திருந்த சமயத்தில் நான் ஊரில் இல்லை. ஒரு வேலையாக நாகர்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அதற்கு மறுநாள்தான் சுனாமிப் பேரலைகளின் சீற்றத்துக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் கன்னியாகுமரிக் கடற்கரையில் பலியாகின. உயிரற்ற சடலங்களைப் பார்க்கப்பார்க்க பைத்தியம்பிடித்துவிடும்போல இருந்தது. இனம்புரியாத வேதனையில் தத்தளித்தது மனம். ஒருகணம்கூட அந்த ஊரில் நிற்கமுடியாதுபோலத் தோன்றியது. எப்படியோ வண்டிபிடித்து மறுநாள் மதியவேளையில் வீட்டுக்குத் திரும்பினேன். சோர்வில் துவண்டிருந்தது மனம். குழந்தை அரூப்பின் சிரிப்பும் பேச்சும் கலகலப்பும் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டக்கூடும் என்று நினைத்தேன்.

     எதிர்பார்த்ததற்கு மாறாக வீட்டுக்குள் ஆளுக்கொரு பக்கமாக களைப்போடு உட்கார்ந்திருந்தார்கள். என் மனைவி அமுதாவின் மடியில் படுத்திருந்தான் அரூப். என் முகத்தைக் கண்டதுமே சத்தம் போட்டுவிடக்கூடாது என்பதற்கு அடையாளமாக எல்லாரும் ஒரே நேரத்தில் உதட்டின்மீது விரல்வைத்து சைகை செய்தார்கள். கலவரத்தோடு அவர்கள் அருகே நானும் உட்கார்ந்துகொண்டேன். கடல்அலை பொங்கியெழுந்து கரையோரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளையும் பெரியவர்களையும் இழுத்துப் பலிவாங்கிய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்ததிலிருந்து அவன் அச்சத்தில் மூழ்கிவிட்டதாகச் சொன்னார்கள். சிரிப்பும் ஆட்டமுமாக இருந்தவனை ஒரே நொடியில் அக்காட்சி துக்கத்திலும் அச்சத்திலும் ஆழ்த்திவிட்டது. கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு அவன் அழுகை பெருகிவிட்டதாகவும் எந்தக் கணத்திலும் கடலின் அலைகள் நம் வீட்டு வாசலுக்கும் வந்து எல்லாரையும் இழுத்துச் சென்றுவிடும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறந்துவிட்டது என்றும் சொன்னார்கள். எத்தனைவிதமாக எடுத்துச் சொல்லியும் அவன் எண்ணத்தை மாற்றமுடியவில்லை என்று கலங்கினார்கள்.

     பேச்சுச் சத்தத்தில் அவன் அசைந்து எழுந்தான். கண்கள் வீங்கியிருந்தன. கண்ணீர் வரிகள் அவன் கன்னத்தில் உலர்ந்திருந்தன. அமுதாவின் மடியிலிருந்து மெல்ல எழுந்து என்னைநோக்கி வந்தான்.

     "சுனாமி பாத்தியா பெரிப்பா?"

     அவன் உதடுகளில் அந்தப் பெயர் பதிந்த விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த விபரீதத்தை குழந்தையின்முன் எப்படிச் சொல்வது என்ற தடுமாற்றத்தில் பேச்சைத் திசைமாற்ற முனைந்தேன். அதைத்தவிர வேறு எதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள விரும்பாதவனைப்போல அவன் முகம் உறைந்திருந்தது.

     "நான் பாத்தேன் பெரிப்பா. ஒரு மரம் உயரத்துக்கு அலை பொங்கி வந்திச்சி. எல்லாரயும் இழுத்தும் போயிடுச்சி."

     கலவரம் மிதந்திருக்கும் கண்களால் என்னையே உற்றுப் பார்த்தான். அவனைப் பார்ப்பதற்கு அச்சமயத்தில் ஒரு சிலையைப்போல இருந்தது. அவன் கண்களில் தென்பட்ட உறுதியையும் பீதியையும் பார்த்ததும் உடல் நடுங்கத் தொடங்கியது. அவனை அணைத்துக்கொள்ள முனைந்தேன். என் பிடியிலிருந்து தலையைமட்டும் உயர்த்தி இன்னும் தீவிரமான குரலில் "மறுபடியும் இங்க சுனாமி வருமா பெரிப்பா?" என்று கேட்டான். நான் அவன் முதுகைத் தடவியபடி "இங்கல்லாம் வராதுப்பா, அங்ககூட இனிமேல வராதுன்னு சொல்லிட்டாங்ப்பா" என்றேன்.

     "இப்ப ஏன் வந்தது பெரிப்பா?"

     "அது ஏன் ஆளுங்களையெல்லாம் புடிக்குது?"

     "எல்லாரயும் புடிச்சிம்போயி அது என்ன செய்யும்?"

     "சாமிதானே நம்மயெல்லாம் படைச்சாரு? அப்பறம் எதுக்கு அதயும் அனுச்சி வச்சாரு?"

     என் பதில்கள் தேவையற்ற நிலையில் அவன் தொடர்ந்து ஏராளமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தான்.

     கண்ணீர் தளும்பிய அவன் கண்களையும் உலர்ந்திருந்த பிஞ்சு உதடுகளையும் ஏறித் தாழும் மெலிந்த அவன் மார்பையும் பார்க்கப்பார்க்க என் நெஞ்சு வெடித்துவிடும்போல இருந்தது. அவன் முகம் முழுக்க துயரக்களை படிந்திருந்தது.

     "சுனாமிக்கு ஏன் பெரியப்பா கோபம்?"

     "யாராவது நம்மள திடீர்னு கிள்ளினா வலியில எழுந்து ஓடுவோமில்லயா? அந்த மாதிரிதான் கடல் ஆழத்துல கிள்ளிட்டமாதிரி சின்ன தொந்தரவு. அந்த தொந்தரவு தாங்காம அலைகள் ஓடிவந்திடுச்சி. அத நாம கோபம்னு எடுத்துக்கக்கூடாதுப்பா."

     "அப்பறம் ஏன் ஆளுங்களயெல்லாம் இழுத்தும்போச்சி?"

     "ஆளுங்க அங்க நிப்பாங்கன்னு அதுக்கு தெரியவே தெரியாதே."

     "எல்லா ஊருக்கும் சுனாமி வருமா?"

     "வராதுப்பா."

     "பெங்களூருக்கு?"

     "வரவே வராது."

     வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிற வரைக்கும் அவன் அச்சத்தைப் போக்குவது சாத்தியமே இல்லை என்று தோன்றியது. அவனை தோளோடு சாய்த்துக்கொண்டு வீட்டுக்கருகே இருந்த பூங்காவுக்குச் சென்றோம். விளையாட வைத்தோம். பேசிச் சிரித்தோம். அவன் முன்னிலையில் யாருமே சுனாமி என்கிற பேச்சை எடுக்கக்கூடாது என்றும் செய்தித்தாட்களைப் புரட்டவேகூடாது என்றும் சொல்லிவைத்துக் கொண்டோம். தொலைக்காட்சியை ஓடவிடவே கூடாது என்றும் முடிவெடுத்தோம்.

     பொழுது கவியத் தொடங்கியதும் வீட்டுக்குத் திரும்பினோம். வழியில் அவனுக்கு ஒரு நகைச்சுவைக்கதையைச் சொன்னேன். அவன் உதடுகளில்மட்டும் புன்னகையின் கீற்று ஒளிர்ந்ததே தவிர வழக்கமாக பொங்கிப்படரும் ஆரவாரமான சிரிப்பைப் பார்க்கவே முடியவில்லை.  வீட்டை அடைந்ததும் அவன் புதிதாகச் சேர்ந்திருக்கும் பள்ளியைப்பற்றியும் விளையாட்டுகளைப்பற்றியும் பேசத் தொடங்கினோம். எதிர்பாராத விதமாக அவன் கவனம் மறுபடியும் கடலின் திசையிலேயே திரும்பியது.

     "பெரிப்பா, உலகத்துல கடல் பெரிசா? பூமி பெரிசா?"

     நான் சொல்லப்போகும் பதில் அவனை அடுத்து என்னவிதமான கேள்விகளைக் கேட்கத் தூண்டுமோ என்று பதற்றமாக இருந்தது. ஆனாலும் மெதுவான குரலில் "கடல்தாம்பா பெரிசு?" என்றேன். அவன் உடைந்த குரலில் "அப்படின்னா கண்டிப்பா கடல் பூமியை முழுங்கிடும்" என்றபடி தோளில் முகம் புதைத்துக்கொண்டான்.  அவன் கண்களில் தாமாகவே கண்ணீர் பொங்கிவந்தது. "சுனாமி ரொம்ப மோசம். எல்லாரயும் இழுத்துக்கும்" என்று முனகினான். தேம்பலில் அவன் மார்பு துடித்தது. தோளிலிருந்து அவன் முகத்தை நிமிர்த்த நான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. அந்த அளவுக்கு அழுத்தமாக அவன் தன் முகத்தைத் தோளில் பதித்திருந்தான். கட்டாயப்படுத்தி அவனைப் பிரித்தெடுக்க எனக்கும் விருப்பமில்லை. "அதெல்லாம் முடிஞ்சி போச்சிடா கண்ணா. இனிமே ஒன்னும் ஆவாதுடா" என்று முதுகைத் தடவிக்கொடுத்தபடி இருந்தேன்.

     சிறிது நேரத்துக்குப் பிறகு அவன் தன் தாயாரின் மடியில் அடைக்கலம் புகுந்தான். கதவு, ஜன்னல்கள் எல்லாவற்றையும் சாத்தச் சொன்னான். அவள் ஒன்றும் புரியாமல் "எதுக்குடா? காத்து வரவேணாமா?" என்றாள். "வேணாம்மா. சுனாமி வந்துரும்மா" என்று தேம்பி அழத்தொடங்கினான் அவன். அவனுடைய அழுகை அனைவரையமே கலங்க வைப்பதாக இருந்தது. அவன் வார்த்தையை மதிப்பதுமட்டுமே அச்சமயத்தில் அவனுக்கு அமைதியை வழங்கும் என்று தோன்றியது. அவன் சொன்னபடி எல்லாவற்றையும் சாத்தினோம். கைக்கு எட்டாத உயரத்தில் உத்திரத்துக்கு மேல் சின்னதாக ஒரு ஜன்னல் இருந்தது. அதையும் சாத்தச் சொன்னான். ஒரு சின்ன இடைவெளிகூட தெரியாமல் எல்லாவற்றையும் துணிச்சுருணையை வைத்து அடைத்தோம். மீண்டும் மீண்டும் அவன் உதடுகள் அனிச்சையாக சுனாமி மோசம் என்றே முனகியபடியே இருந்தன. ஏதோ ஒரு கணத்தில் அவன் து¡ங்கத் தொடங்கிவிட்டான். எந்த விளக்கையும் நிறுத்தவேண்டாம் என்று சொல்லிவிட்டு நாங்களும் படுத்துக்கொண்டோம்.

     புகையைப்போல குழந்தையின் மனத்தில் அச்சம் மெல்லமெல்ல புகுந்து அடைத்துக்கொள்கிறது. அந்த அச்சத்தையொட்டி அது கட்டி எழுப்பிக்கொள்ளும் கற்பனைகள் அந்த அச்சத்தை மேலும்மேலும் அதிகரிக்கின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் மாறிமாறிப் பிறந்து மறைகிற அப்பருவத்தில் நாம் கட்டாயப்படுத்தி எதையும் அதன் மனத்தில் திணிக்கக்கூடாது. முதியவர்களின் பார்வையில் அக்கற்பனைகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் அக்கற்பனைகள் ஒருவிதத்தில் கடவுள் அவர்களுக்கு வழங்கும் கனவுகள். ஒரு தோட்டத்தில் பூத்துக் குலுங்குகிற பூக்களைப்போல கற்பனைகள் மாறிமாறி அவர்கள் மனத்தில் பிறந்தபடி இருக்கின்றன. இக்கற்பனைகள்வழியாகவும் கட்டுக்கதைகள்வழியாகவுமே குழந்தைகள் இந்த உலகத்தை முதன்முதலாக உணர்ந்துகொள்கிறார்கள். குழந்தைக் கற்பனைகள் வழியாகத்தான் மானுட உலகம்  ஒருபோதும் கேட்கமுடியாத ஆயிரக்கணக்கான கேள்விகள் உருவாகின்றன. குழந்தைமை உதிர்ந்த பிறகு அக்குழந்தைகளாலேயே அக்கேள்விகளை உருவாக்க முடிவதில்லை.

     முன்பு எப்போதோ பார்த்த 'காடு' என்னும் கன்னடத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சிறுவனுடைய உருவம் மனத்தில் திரண்டெழுந்தது. அவனும் எங்கள் ஊருப்பைப்போல கற்பனையான அச்சத்தில் நடுங்குபவன். அவன் நடுங்குவதற்குக் காரணம் ஒரு பறவையின் அழைப்பு. அந்தப் பறவையின் பெயர் ஆட்காட்டிப் பறவை. அந்தப் பறவை தரையில் நடமாடுகிற குழந்தைகளின் பெயர்களையெல்லாம் தெரிந்துவைத்துக்கொள்ளும். தன்னந்தனியாக எந்தச் சிறுவனாவது காட்டில் அகப்பட்டுக்கொண்டால் அவன் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அச்சிறுவன்மீது அதிகமான பிரியம்கொண்டிருப்பவர்களின் குரலில் அந்த அழைப்பை முன்வைக்கும். தப்பித் தவறி அவன் பதில் சொல்லிவிட்டால் அவன் இருக்கும் இடத்தை அது அறிந்துகொள்ளும். உடனே இறங்கிவந்து ஆகாயத்துக்குத் து¡க்கிச் சென்றுவிடும். அந்த அழைப்புக்குப் பதில் சொல்லாமல் இருப்பதுமட்டுமே அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கிற வழி. அப்படி ஒரு நம்பிக்கை அங்கே வசிக்கிற சிறுவர்களிடம் இருக்கிறது. அச்சிறுவர்கள் அனைவரும் அக்காட்டின்வழியாகத்தான் கிராமத்திலிருந்து பள்ளிக்குச் சென்று திரும்புவது வழக்கம். ஆட்காட்டிப்பறவை கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் அனைவரும் அவசரம்அவசரமாக காட்டைக் கடப்பார்கள். அவற்றின் ஒலியைக் கேட்டால் மறுஒலி தராமல் வேகவேகமாக கடந்துவிடுவார்கள்.

     ஒருநாள் தாமதமாக திரும்பிவரும் சிறுவன் காட்டைக் கடப்பதற்குள் இருட்டிவிடுகிறது. பதற்றத்தில் அவனும் தவறான வழியில் நடக்கத் தொடங்கிவிடுகிறான். களைப்பிலும் அச்சத்திலும் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு மரத்தடியில் அச்சத்துடன் அமர்ந்துவிடுகிறான். அவன் உடல் நடுங்குகிறது. குறித்த நேரத்தில் அவன் திரும்பாததால் அவன் பெற்றோர்கள் காட்டுக்குள் தேடி வருகிறார்கள். அவனுடைய பெயரைச் சொல்லி அழைத்தபடி காட்டுக்குள் அலைகிறார்கள். மரத்தடியில் அமர்ந்திருக்கும் அச்சிறுவனுக்கும் அக்குரல் கேட்கிறது. தன் தந்தையின் குரல் என்பதையும் அவனால் அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது. அதே நேரத்தில் ஆட்காட்டிப்பறவையின் ஞாபகம் வந்து அவனைத் தடுக்கிறது. தன் தந்தையின் குரலில் அவனை அழைப்பது அப்பறவைதான் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அவன் மறுமொழி கொடுத்துவிட்டால் பறவையிடம் பலியாகிவிடுவோம் என்று அஞ்சுகிறான். அதனால் கண்களை மூடிக்கொண்டு எந்தப் பதிலையும் சொல்லாமல் தரையோடு தரையாக ஒட்டிக்கொண்டு படுத்துவிடுகிறான். மறுநாள்தான் அவன் கண்டெடுக்கப்படுவதாக அக்கதை செல்லும்.

     அச்சம் சார்ந்த கனவுகள் என் பால்யத்திலும் இருந்தது.  வகுப்பு இடைவேளை சமயத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது நெருங்கி வந்த நண்பன் "நான் ஒரு மந்திரம் போட்டிருக்கேன். உன் சிலேட் உடைஞ்சி போயிட்டிருக்கும் போய்ப் பாரு" என்றான். எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அச்சத்தோடு ஒட்டமாக ஓடி புத்தகப் பையைத் திறந்து பார்த்தபோது சிலேட் உடைந்திருந்தது. உடைந்ததற்கான காரணம் நண்பன் சொன்ன மோசமான மந்திரத்தின் சக்திதான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் அக்காரணம் எங்கள் வீட்டினரால் ஏற்கப்படவே இல்லை. வசைபாடியபடி அடுத்ததாக வாங்கிக்கொடுத்த புதிய சிலேட்டும் அதே மந்திரத்தால் உடைபட்டுப் போனது. அப்போதும் நான் சொன்ன காரணம் ஏற்கப்படவே இல்லை.

     எங்கள் வகுப்பில் ஒரு முழுப் பலப்பத்துக்கு ஒற்றை மயிலிறகைத் தரும் நண்பனொருவன் இருந்தான். தொடக்கத்தில் அவன்  ஒரே ஒரு மயிலிறகு வைத்திருந்ததாகவும் பிறகு அது ஏராளமான குட்டிகள் போட்டதாகவும் அக்குட்டிகளைத்தான் இப்போது பலப்பத்துக்காக நண்பர்களுக்குக் கொடுப்பதாகவும் சொன்னான். அவனிடம் இறகு வாங்கிவைத்தால் அது கூடியவிரைவிலேயே பெருகிவிடும் என்று ஆசைகாட்டி அழைத்தான். மயிலிறகின் குட்டிகளைப் பார்க்கும் ஆசையில் எழுதுவதற்காக வைத்திருந்த பலப்பங்களைக் கொடுத்துவிட்டு மயிலிறகுகளை வாங்கினேன். ஒவ்வொரு புத்தகத்துக்கு நடுவிலும் ஒவ்வொரு இறகை பாதுகாப்பாக வைத்துவிட்டு தினமும் உருவாக இருக்கும் குட்டிக்காக திறந்துதிறந்து பார்த்து ஏமாந்துபோனேன். இறகு விற்ற நண்பனிடம் கேட்பதற்கும் அச்சமாக இருந்தது. கேட்காமல் இருப்பதற்கும் உள்மனம் ஒப்பவில்லை. ஒருநாள் தயங்கித்தயங்கி அவனை வழிமறித்து விஷயத்தைச் சொன்னேன்.

     "இன்னும் என் மயிலிறகு ஏன் குட்டியே போடலை?"

     என் கேள்வியைக் கேட்டதும் அவன் ஒருகணம் என்னையே உற்றுப் பார்த்தான்.

     "குட்டி போடாத மயிலிறகைக் குடுத்துட்டு என்ன ஏமாத்திட்டியா?"

     அவனிடமிருந்து பதில் வருவதற்குள் அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டேன். அக்கேள்வியையே பொருட்படுத்தாதவனாக என்னைப் பார்த்து மிகவும் சாதாரணமான குரலில் "ஆமா, எத்தன மணிக்கு குட்டி இருக்குதா இல்லயான்னு தெறந்து பாப்ப?" என்று கேட்டான். அதைக் கேட்டதுமே நான் எதையோ தவறு செய்துவிட்ட குற்றஉணர்ச்சி எழுந்தது.

     "காலையில ஏழு, ஏழரை மணிக்குப் பாப்பேன்."

     நான் சொல்லி முடித்த கணமே "அதான் உன் கண்ணுக்கு குட்டிங்க தெரியலை?" என்று விரலைச் சொடுக்கினான்.

     "இங்க பாருடா, ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு நேரம் இருக்குது தெரியுமா? சூரியன் உதிக்கறதுக்கு முன்னால கொஞ்சம் இருட்டா கொஞ்சம் வெளிச்சமா இருக்கும் பாரு, அந்த நேரத்துல புத்தகத்த தெறந்து பாக்கணும். அதான் குட்டிய  பாக்கறதுக்கு சரியான நேரம். மத்த நேரங்கள்ள ஒன்னால பாக்கவே முடியாது. புரியுதா?"

     வகுப்பில் பாடம் எடுப்பதைப்போல நிறுத்தி நிதானமான குரலில் சொல்லிவிட்டு தோளையும் ஒரு தட்டு தட்டிவிட்டு நகர்ந்தான். அவன் சொன்ன நிபந்தனைகளையே நான் அசைபோட்டுக்கொண்டிருந்தேன். மறுநாள் எப்படியும் அவன் சொன்ன நேரத்துக்குள் எழுந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். மறுநாளே அது சாத்தியமாகவில்லை என்றாலும் அந்த வாரத்தில் ஏதோ ஒரு நாளில் சாத்தியமானது. ஆனால் அப்போதும் என் இறகுகள் குட்டி போடவே இல்லை. என் தோல்வி எனக்கு மிகப்பெரிய அவமானமாகவும் துக்கமாகவும் இருந்தது. அந்த நண்பனிடம் வருத்தத்தோடு என் குறையை முறையிட்டேன்.

     "என்னடா நீ? எதுக்கும் லாயக்கில்லாம இருக்கறியே. இன்னிக்கு காலையில கூட நான் நாலஞ்சி குட்டிங்கள பாத்துட்டுதான் வந்தேன் தெரியுமா? நீ பாக்கற நேரத்துல ஏதோ தப்பு இருக்குதுன்னு நெனைக்கறேன். சரியான நேரத்துக்கு முன்னாலயே இல்ல பின்னாலயோ தெறந்திருப்பன்னு தோணுது. இதுக்கெல்லாம் வருத்தப்படாதடா. தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டே இரு."

     ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு அவன் நகர்ந்துவிட்டான். எவ்வளவோ முயற்சிகள் செய்தும்கூட அந்த ஆண்டு முழுதும் என்னால் அக்குட்டிகளைப் பார்க்கவே முடியவில்லை.

     ஏமாற்றங்கள் விதைக்கப்படுவதைப்போலவே அச்சங்களும் அந்த பாலியத்தில் விதைக்கபட்டதுண்டு. இடைவேளை சமயத்தில் ஆடுவதற்காகவும் சிறுநீர் கழிப்பதற்காகவும் எங்கள் பள்ளியை ஒட்டியிருக்கும் புளியந்தோப்பை நோக்கி நாங்கள் ஓடுவோம். அங்கேதான் இரண்டு ஐஸ்காரர்கள் பெட்டியை அறைந்து அறைந்து ஓசையெழுப்பி மாணவர்களை தம்பக்கமாக இழுக்க முயற்சி செய்வார்கள். மூன்று பைசாவுக்கும் ஐந்து பைசாவுக்கும் ஐஸ்கள் கைமாறியபடி இருக்கும். இன்னொரு மரத்தடியில் நின்றபடி நண்பனொருவன் அந்தப் பக்கமாக ஐஸ் வாங்கிக்கொண்டு செல்லும் சிறுவனை அதிகாரத்தோடு அழைப்பான். ஐஸ் துளிகள் சொட்டச்சொட்ட அச்சிறுவன் அவன் அருகில் வந்து நிற்பான். அதிகாரம் சற்றும் குறையாத குரலில் "என்னடா கையில?" என்று அதட்டுவான்.

     "ஐஸூ."

     "ஒழுங்கா பாதிய எனக்கு குடுத்துடு."

     அக்கணத்தில் ஐஸ் வைத்திருக்கும் சிறுவனின் கண்களில்  மிரட்சி தெரியும்.

     "குடுக்கலைன்னா இன்னைக்கு ராத்திரியே உனக்கு காய்ச்சல் வரும். இவ்ளோ பெரிய ஊசிய எடுத்து டாக்டர் உனக்குப் போடுவாரு."

     பயந்துபோன அச்சிறுவன் உடனே கையிலிருக்கும் ஐஸ் தண்டை முறித்து பாதியைக் கொடுத்துவிடுவான்.

     கொடுக்கப்பட்ட துண்டை லாவகமாக வாய்க்குள் வைத்து உறிஞ்சியபடி வேறொரு திசையில் நடந்துவிடுவான் அவன். சில சிறுவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டும் பொருட்படுத்தாதவர்களாக நிற்பார்கள். அவர்கள் கண்களில் அவன் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் தெரியும். சிறிதும் யோசிக்காமல் உடனடியாக அவன் "குடுக்க இஷ்டமில்லைன்னா தாராளமா போ. ஆனா இன்னிக்கு ராத்திரி உங்க அம்மா செத்துருவாங்க" என்று சாதாரணமாகச் சொல்வான். அதைக் கேட்டதும் சிறுவனுடைய நெஞ்சம் நடுங்கிவிடும். "ஐஸ் வேண்டுமா அம்மா வேண்டுமா" என்ற கேள்விக்கு அம்மாவின்பக்கமே அவன் மனம் சாய்ந்துவிடும். உடனடியாக எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஐஸைத் துண்டாக்கிக் கொடுத்துவிடுவான். இந்த வார்த்தைகள் அவன் எதிர்பார்ப்பை முழு அளவில் முழுமை செய்ததால் அதையே எல்லாரிடமும் பின்பற்றத் தொடங்கினான். அவன் வெற்றிகள் தினமும் பெருகியபடியே இருந்தன.

     ஒருநாள் வழக்கம்போல ஐஸ் வாங்கிச் சென்ற ஒரு சிறுவனை மடக்கி வழக்கமான வாசகத்தைச் சொன்னான். அச்சிறுவன் அதைப் புரிந்துகொள்ளாதவனைப்போல வாங்கிய ஐஸை வாய்க்குள் வைத்து உறிஞ்சத் தொடங்கினான். சிறுவனுடைய பயமின்மை உடனடியாக அவனை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. முதலில் சொன்னதையே மீண்டும் அழுத்தி இன்னொரு முறையும் சத்தமாகச் சொன்னான். அப்போதும் அச்சிறுவன் காதிலேயே வாங்காதவனைப்போல மீண்டும் ஐஸை உறிஞ்சினான். கோபத்தில் அவன் கண்கள் சிவந்துவிட்டன.  "உங்க அம்மா செத்துருவாங்கடா, உங்க அம்மா செத்துருவாங்கடா" என்று நாலைந்து முறை ஆவேசமாக திருப்பத்திருப்பிச் சொன்னான். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட சிறுவன் "எங்க அம்மா எப்பவோ செத்துட்டாங்க. போடா" என்று சொன்னபடி ஐஸை மறுபடியும் உறிஞ்சினான். அதன்பிறகு அவனால் அங்கே நிற்கமுடியவில்லை. வேகவேகமாக நடந்து பள்ளி வளாகத்துக்குள் சென்று கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிட்டான். பிள்ளைகளை மடக்கி ஐஸ் பறிக்கும் வேலை அன்றோடு முடிந்துபோனது.

     நள்ளிரவைத் தொட்டுக்கொண்டிருந்தது நேரம். விளக்கு எரிந்தபடியே இருந்தது. எல்லாருமே ஆளுக்கொரு பக்கம் படுத்திருந்தார்கள். அரூப் தன் தாயின் மடியிலேயே இன்னும் தலைவைத்திருந்தான். அவளும் அக்கோலத்திலேயே சுவரில் சாய்ந்திருந்தாள்.  மடியில் புரண்டுபடுத்த அவன் உதடுகள் தன்னிச்சையாகப் பிரிந்து "சுனாமி வந்துரும்மா, எல்லாரயும் இழுத்துக்கும்மா" என்று முனகின. படபடப்போடு அவன் மார்பு ஏறித் தாழ்வதைப் பார்க்க துயரமாக இருந்தது. நகர்ந்து அவன் தலையைத் தொட்டு வருடினேன்.

 

(2011)