Home

Monday 17 July 2023

மிகையுமின்றி குறையுமின்றி

  

சிற்றூரில் பள்ளியிறுதி வரைக்கும் படிக்கும் இளைஞனான ஆறுமுகம் புகுமுக வகுப்பில் சேர்ந்து படிப்பதற்காக கிராமத்தைவிட்டு வெளியேறி திருநெல்வேலிக்கு வருகிறான். பொருநை நாவலின் முதல் காட்சி அப்படித்தான் தொடங்குகிறது. 

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் ஆறுமுகத்துக்கு இடம் கிடைக்கிறது. கல்லூரி விடுதியிலேயே அவன் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்கிறார் அவனுடைய அப்பா. புகுமுக வகுப்பையும் அதைத்தொடர்ந்து இளநிலை பட்டப்படிப்பையும் அதே கல்லூரியில் படித்து முடிக்கிறான். நான்காண்டு கால கல்லூரி வாழ்க்கையின் நினைவுப்பதிவுகளைத் தொகுத்து நாவலாக்கியிருக்கிறார் சுந்தரபாண்டியன். ஏற்கனவே ஆராரோ என்னும் தலைப்பிலேயே ஆறுமுகத்தின் பள்ளி வாழ்க்கை அனுபவங்களை ஒரு தனி நாவலாக சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுதி வெளியிட்டார்.  அதன் தொடர்ச்சியாக இந்த நாவலை எழுதியுள்ளார்.

தாமிரபரணி ஆற்றின் அழகையும் வளத்தையும் தந்தையும் மகனும் சேர்ந்து பார்க்கும் காட்சியொன்று நாவலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. நான்காண்டு காலம் படிப்பை முடித்துவிட்டு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் சமயத்தில் அதே தாமிரபரணியைக் கண்ணாரக் கண்டு களித்தபடி வெளியேறுகிறான் ஆறுமுகம். பொருநை எப்போதும்போல மாற்றமில்லாமல் இளமை மாறாத அழகுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அவனோ வளர்ந்து பட்டதாரியாக மாறி சென்னையை நோக்கிப் பறந்துசெல்லும் ஆவலோடு இருக்கிறான். மாறா இயற்கையின் முன்னிலையில் மாறிக்கொண்டே இருக்கிறது மானுட வாழ்க்கை. ஆறுமுகத்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறுசிறு மாற்றங்களை நாவல் சித்தரிக்கிறது.

நாடக ஆர்வம், திரைப்பட ஆர்வம், அரசியல் ஆர்வம் அனைத்தும் கொண்ட சுறுசுறுப்பான களங்கமற்ற இதயம் கொண்ட இளைஞனாக நாவல் முழுவதும் வருகிறான் ஆறுமுகம். அவன் நெல்லையில் படித்த காலத்தை ஒட்டிய கதை என்றாலும், நாவலில் அவனுடைய நெல்லை அனுபவங்களைவிட விடுமுறைக்காலங்களில் ஊருக்குத் திரும்பி வந்து நண்பர்களோடு அலைந்து திரிந்த அனுபவத்தொகைகளே அதிகமாக நிறைந்திருக்கிறது. எந்த இடத்தில் நடைபெற்ற போதும். எல்லாமே ஆறுமுகத்தின் அனுபவங்கள். நெல்லையைச் சுற்றுவது என்பது கல்லூரிச்சுற்றுலா என்னும் பெயரில் ஆசிரியர்களின் வழ்ழிகாட்டலோடு செல்லும் பயணங்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன.

கிராமத்து அனுபவங்களில் சில காட்சிகள் மறக்கமுடியாத சித்திரங்களாக நெஞ்சில் இடம்பிடித்துவிடுகின்றன. ஒரு காட்சியில் ஆறுமுகத்தை தன் மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு நிலத்துக்குச் செல்கிறார் அவனுடைய அப்பா. மிதிவண்டியை மிதித்தபடி தன் பழைய நினைவுகளை அவனிடம் பகிர்ந்துகொள்கிறார். நிலத்துக்கு அருகில் உள்ள மரத்தடியில் மிதிவண்டியை நிறுத்திவிட்டு மகனுடன் சேர்ந்து தன் நிலத்தை ஒரு பார்வை பார்க்கிறார். அந்த நிலத்தை வாங்கிய பழைய பின்னணியைப்பற்றி ஆறுமுகத்திடம் விவரிக்கிறார். தன் இளமைக்காலத்தில் பிழைப்பதற்காக கொழும்புக்குச் சென்று வேலை பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவர் அவர். ஒரு துண்டு நிலம் கூட அப்போது அவரிடம் இல்லை. ஒரு நாள் மாட்டுக்கு புல் அறுப்பதற்காக அந்த நிலத்தை ஒட்டிய பகுதிக்கு வந்திருக்கிறார். நிலத்தின் வரப்பில் அவர் புல் அறுப்பதைப் பார்த்த நிலத்துக்குச் சொந்தக்காரன் அவரை வாய்க்கு வந்தபடி திட்டி விரட்டிவிடுகிறான். அதைக் கேட்டு வெறும் கையோடு அங்கிருந்து வெளியேறிவிடுகிறார் அவர். அக்கணத்தில் தன் மனத்தில் அந்த நிலத்தை எப்பாடு பட்டாவது தன் வாழ்நாளுக்குள் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று சபதமெடுத்துக்கொள்கிறார். அதற்காகாவே கடுமையாக உழைத்து, சிறுகச்சிறுக சேர்க்கத் தொடங்குகிறார். போதிய பணத்தைத்  திரட்டிய பிறகு அந்த நிலத்தை விலைகொடுத்து வாங்கி தன் சபதத்தை நிறைவேற்றிக்கொள்கிறார். அதுவரை யாருக்குமே சொல்லாத கதையை அன்று அப்பா தன் மகனிடம் சொல்கிறார்.

தான் விரட்டியடிக்கப்பட்ட நிலத்தை விலைகொடுத்து வாங்கிச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என ஆறுமுகத்தின் அப்பாவுக்கு ஒருவகையான இலட்சியம் இருந்ததுபோலவே ஆசிரியரான இராமதாஸின்   மனைவியின் நெஞ்சில் வேறொரு வகையான இலட்சியம் இருக்கிறது. அந்த இலட்சியமே அவளை இயக்குகிறது. இளைஞனான ஆறுமுகத்தை எப்படியாவது வளைத்துப்போட்டு தன் மகளுக்கு மணம்முடித்து மாப்பிள்ளையாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவளுடைய நெஞ்சிலிருக்கும் விசித்திரமான இலட்சியம். இலட்சியம் வேறுவேறாக இருந்தாலும், இலட்சிய வேட்கை ஒருவரை  எந்த அளவுக்கு ஒருவரை தீவிரமாகச் செயல்படவைக்கும் என்பதற்கு இருவருமே எடுத்துக்காட்டானவர்கள். சமூகத்தில் ஒருவருக்கு அது நல்ல பெயரை ஈட்டிக் கொடுக்கிறது. இன்னொருவருக்கு அது அவப்பெயரை ஈட்டிக் கொடுக்கிறது.

ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நெல்லையிலிருந்து ஊருக்குத் திரும்பி வரும் ஆறுமுகம் கிராமத்தில் நாடகம் நடத்தும் அனுபவத்தை விரிவாகவே எழுதியிருக்கிறார் சண்முகசுந்தரம். முதல் நாடகம் சாக்ரடீஸ். திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்களையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆறுமுகம் சாக்ரடீஸாக நடிக்கிறான். இறுதிக்காட்சியில் நச்சுக்கோப்பையை ஏந்தி உன்னையே நீ அறிவாய், வருகிறேன் என்று உணர்ச்சிபொங்க சொன்னபடி விஷத்தை அருந்துவதற்கு முனைகிறான். மேடைக்கு அருகில் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த ஆறுமுகத்தின் சித்தப்பா வேகவேகமாக மேடை மீது ஏறி வந்து “ஐயையோ, என் அண்ணன் மகன் விஷம் குடிக்க போகிறானே, வேண்டாம்டா வேண்டாம்” என்று கூவியபடி கையிலிருந்த கோப்பையைத் தட்டிவிடுகிறார். மிகச்சிறந்த காட்சி.

பொருநை நதிக்கரை அனுபவங்களைவிட, கிராமத்து அனுபவங்களே மிகுதியாக நாவலில் இடம்பெற்றுள்ளன. எந்த அனுபவமாக இருந்தாலும், மனிதர்களின் குணங்களையும் ஈடுபாடுகளையும் சித்தரிப்பதில் சுந்தரபாண்டியன் திறமைசாலியாகவே இருக்கிறார். எளிய சித்தரிப்பு மொழியின் உதவியோடு அவரால் மனிதர்களை ஒரு புகைப்படத்துக்குரிய துல்லியத்தோடு காட்டமுடிகிறது. மிகையாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் ஆறுமுகத்தைச் சுற்றியுள்ள மனிதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அதுவே இந்த நாவலின் மிகப்பெரிய பலம். 

 

(பொருநை  - நாவல். சுந்தரபாண்டியன். காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை -24. விலை. ரூ.150)

 

(காவ்யா தமிழ் – ஏப்ரல்  செப்டம்பர் 2023)