Home

Monday, 17 July 2023

மொழி என்னும் அடையாளம்

 

மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தொண்டை மண்டலத்துக்கும் சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை நடுநாடு என்று பெயரிட்டு அழைத்தார்கள். தெற்கே வெள்ளாறு. வடக்கே தென்பெண்ணை. கிழக்கே வங்கக்கடல். மேற்கே திருவண்ணாமலை. இவற்றை உத்தேசமான எல்லைப்பகுதிகள் என்று ஒரு கோட்டை இழுத்துக்கொள்ளலாம். கரிசல் தமிழ், குமரித்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், தஞ்சைத்தமிழ் போல நடுநாட்டில் புழங்கிய தமிழ் நடுநாட்டுத்தமிழ் என்று அழைக்கப்பட்டது. எல்லா வட்டாரங்களிலும் தனித்துவமான வழக்குச்சொற்கள் அமைந்திருப்பதுபோல, நடுநாட்டு வட்டாரத்திலும் தனித்துவமான வழக்குச்சொற்களும் மரபுத்தொடர்களும் அமைந்திருக்கின்றன.

அடிப்படையில், இலக்கியம் என்பது மனிதமனத்தை அறியும் கலை. படைப்பாளிகள் அந்த நுட்பத்தையே வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு கோணங்களில் தம் படைப்புகள் வழியாக காலந்தோறும் முன்வைக்கிறார்கள். இலக்கியத்துக்கு மொழி, இனம், மதம், நாடு என எந்த எல்லைகளும் இல்லை. அனைத்து எல்லைகளையும் கடந்து இலக்கியத்தை வாசிக்கும் அணுகுமுறையே சிறந்த வாசிப்பு என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

அப்படியென்றால் வட்டாரம் சார்ந்து படைப்புகளைத் தொகுப்பது ஏன் என்றொரு கேள்வி எழலாம். ஒரு நூலகத்தில் பத்தாயிரம் புத்தகங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். நூலகத்தை நோக்கி வரும் ஒரு புதிய வாசகனுக்கு அப்புத்தகங்கள் எப்படி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதை ஒருகணம் யோசித்தால் நம்மால் ஒருசில உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும். முதலில் அந்த நூல்கள் உரைநடை நூல்கள் என்றும் கவிதை நூல்கள் என்றும் இரு பெரும்பிரிவாகப் பகுக்கப்படுகின்றன. பிறகு உரைநடை நூல்களில் சிறுகதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறு, இலக்கியக்கட்டுரைகள், அனுபக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் என பல தலைப்புகளில் தனித்தனியாக பகுக்கப்படுகின்றன. அடுத்து, ஒவ்வொரு பிரிவிலும் நேரடிப் படைப்புகள் என்றும் மொழிபெயர்ப்புகள் என்றும் பகுக்கப்படுகின்றன.

இந்தப் பகுப்புமுறை ஓர் எளிய வாசகனை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகிறது. பயணக்கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட ஒரு வாசகன் அப்பிரிவு சார்ந்ந்து தமிழில் வந்திருக்கக்கூடிய எல்லாப் புத்தகங்களையும் குறுகிய காலத்தில் படித்துத் தெரிந்துகொள்ள அந்தப் பகுப்புமுறை வசதியாக இருக்கும். பயணம் செய்த எழுத்தாளர்கள் யார் யார், அவர்கள் பயணம் செய்த நாடுகள் என்னென்ன, ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் பெற்ற முக்கியமான அனுபவங்கள் என்ன, பயணங்களுக்கு மனத்தைத் தகவமைக்கும் சக்தி எப்படி வருகிறது என்பதையெல்லாம் மிக எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். பகுப்புமுறை இல்லாத ஒரு நூலகச்சூழலில் படிக்க நேரும் வாசகர்கள் தேடித்தேடி அலைந்து பெற்று வாசிக்கச் செலவழிக்கும் நேரத்தைவிட மிகவும் குறைந்த நேரத்திலேயே பகுப்புமுறை இருக்கும் நூலகச்சூழலில் படிக்க நேரும் வாசகர்கள் படித்துத் தெரிந்துகொள்ள முடியும். 

பகுப்புமுறை என்பது வாசகர்களுக்காக உருவாக்கி அளிக்கப்படும் ஒரு வசதி. வட்டாரம் சார்ந்த பகுப்புமுறை, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகளைத் தொகுத்து ஒரு வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு தொகுப்பைப் படிக்கும் வாசகர் தன் எண்ண அலைவரிசைக்குப் பொருந்திவரும் சில படைப்புகளை அத்தொகுப்பில் கண்டறியக்கூடும். அதைத் தொடர்ந்து, அப்படைப்பை எழுதிய எழுத்தாளரின் பிற படைப்புகளைத் தேடி எடுத்துப் படிக்க அவர் விரும்பக்கூடும். அந்த விருப்பம் அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் எழுதிய பிற சிறுகதைத்தொகுதிகளையும் நாவல்களையும் நோக்கிச் செலுத்தக்கூடும். இந்த விசையின் வழியாகவே ஒவ்வொரு தலைமுறைக்கும் இலக்கியம் அறிமுகமாகிறது.

அத்தகைய அறிமுகத்தையே இன்றைய தலைமுறைக்கு இத்தொகுதி வழங்குகிறது. நடுநாட்டில் பிறந்த 46 எழுத்தாளர்கள் எழுதிய முக்கியமான சிறுகதைகளை இத்தொகுதி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு எழுத்தாளருடைய பங்களிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக, அவர் எழுதிய முக்கியமான சிறுகதையை இத்தொகுதி முன்வைத்திருக்கிறது. அது ஒரு வாசல். அந்த வாசல் வழியாக, தம்மைக் கவரும் படைப்புகளை எழுதியிருக்கும் எழுத்தாளர்களின் பிற படைப்புகளைத் தேடிச் செல்வதற்கான சாத்தியத்தை இத்தொகுதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  இப்படி ஒன்றைத்தொட்டு ஒன்றென சென்றுகொண்டே இருப்பதே இலக்கிய வாசிப்புப்பயணம். ஒருவகையில் பகுப்புகளையும் தொகுப்புகளையும் பயணத்துக்கான வழிகாட்டிக்குறிப்புகள் என்று குறிப்பிடலாம்.

நடுநாட்டுப்பகுதிகள் தொடக்கத்தில் வேளிர்களின் அரசாட்சியின் கீழ் இருந்தன. பிறகு, வெவ்வேறு மன்னர்களின் கட்டுப்பாட்டுக்கு மாறிமாறிச் சென்றன. இறுதியில் வரலாறு அப்பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து நிறுத்தியது. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர்கள் தென்னிந்தியாவில் தம் ஆட்சியை இழந்தபோது, நடுநாட்டுப் பகுதிகளை நவாபுகள் ஆட்சி செய்யத் தொடங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கிந்தியக்கம்பெனியிடம் நவாபுகள் தம் பகுதிகளை இழந்தார்கள். கிழக்கிந்தியக்கம்பெனி நவாபுகளிடமிருந்து கைப்பற்றிய ஆற்காடு பகுதிகளை நிர்வாக வசதிகளுக்காக தென்னாற்காடு, வட ஆற்காடு என்று இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டனர். நடுநாட்டுப் பகுதிகள் தென்னாற்காட்டு எல்லைக்குள் அடங்கின. போன நூற்றாண்டின் இறுதியில் அந்த மாவட்டமும் விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் என இரு பகுதிகளாகப் பிரிந்தன. சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. எல்லைப்பகுதி என்பது ஓர் இலக்கியத்தொகுதிக்கு உத்தேசமான ஒரு வரைபடமே தவிர, கறாரான வரைபடம் அல்ல. இங்கிருந்து சிதறிப்போன சில பகுதிகளும் இருக்கலாம். சேர்ந்துகொண்ட சில பகுதிகளும் இருக்கலாம்.

நடுநாட்டு மொழி என்பதே நடுநாட்டின் அடையாளம். நடுநாட்டில் பிறந்து, நடுநாட்டின் மொழியைப் பேசி எழுதி வருகிறவர்கள் அனைவருமே நடுநாட்டு எழுத்தாளர்களே. புதுவைப்பிரதேசத்தைச் சேர்ந்த படைப்புகள் இத்தொகுதியில் இடம் பெற்றிருப்பதற்கான காரணத்தை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். இன்று தமிழகத்தின் ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்டதாக புதுச்சேரி இருக்கலாம். நீண்ட கால பிரெஞ்சு ஆட்சியின் விளைவாக சில சொற்கள் புதுச்சேரித்தமிழுடன் கலந்து புழக்கத்துக்கு வந்திருக்கலாம். ஆயினும் நடுநாட்டு மொழியே அதன் வேர். அதை யாரும் மறுக்கமுடியாது.

ஒருவருடைய மொழியே ஒருவருடைய அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வசதியாக மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய சிறுகதையொன்றை எடுத்துக்காட்டாக குறிப்பிட விரும்புகிறேன். அச்சிறுகதையின் தலைப்பு சுவருடன் பேசும் மனிதர். இந்தக் கதையில் ஒரு மனிதர் ஏன் சுவருடன் பேசுகிறார் என்னும் புதிரை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கிறார் முத்துலிங்கம். அந்தச் சிறுகதையில் இடம்பெறும் மனிதர் ஈராக்கில் பிறந்தவர். தந்தையார் பணி தொடர்பாக  இடம் மாறியபோதெல்லாம் அவரும் இடம் மாறிச் சென்றார். ஈரானிலும் சிரியாவிலும் அவர் கல்வி கற்றார். பாரசிக மொழி வழியாக பொறியியலில் படிப்பில் பட்டம் பெற்றார். ஆனால் போர்ச்சூழல் காரணமாக அவரால் ஈராக்கில் வாழ முடியவில்லை. தஞ்சம் கேட்டு கனடா தேசத்துக்கு வந்துவிட்டார். புதிய தேசத்தில் அவருடைய பொறியியல் பட்டத்துக்கு மதிப்பில்லை. ஆங்கிலத்தை அவரால் கற்க முடியவில்லை. கைத்தொழில் கற்றுக்கொள்வதே அப்போது அவருக்கு சிறந்த வழியாகத் தோன்றியது. மூன்று மாத பயிற்சியில் முடிவெட்ட கற்றுக்கொண்டார். முடிதிருத்தம் செய்யும் கடையைத் தொடங்கி வருமானத்துக்கு வழி தேடிக்கொண்டார். ஆனால் அவ்வளவு பெரிய தேசத்தில் அவருடைய தாய்மொழியைப் பேச ஒருவரும் இல்லை. அவருடைய தாய்மொழி அராமிக். இயேசு பேசிய மொழி. தன் மொழியில் யாருடன் பேசி தன் மொழியறிவைத் தக்கவைத்துக்கொள்வது என அவருக்குப் புரியவில்லை. அதனால் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன் சுவர் முன்னால் உட்கார்ந்து அராமிக் மொழியில் தனக்குத்தானே பேசிக்கொள்வதாக, தன்னிடம் உரையாடும் வாடிக்கையாளரிடம் குறிப்பிடுகிறார். கீழே விழுந்த முடியை திரும்பவும் ஒட்டமுடியாது. மொழியும் அப்படித்தான். பேசிப் புழங்காவிட்டால் ஒரு மொழியின் அழிவை யாராலும் தடுக்கமுடியாது என்று முத்தாய்ப்பாக அவர் குறிப்பிடும் சொற்கள் கதையின் கட்டுமானத்துக்கு வெளியேயும் பொருளுடையது.

நடுநாட்டு மொழியில் பேசக்கூடியவர்கள் நடுநாட்டுப்பகுதியிலேயே வாழவேண்டும் என எந்த விதியுமில்லை.  இந்தியாவிலேயே வாழவேண்டும் என்றுகூட நாம் குறிப்பிடமுடியாது. உலகில் எந்த மூலையில் வசிப்பவர்களானாலும், நடுநாட்டு மொழியில் உரையாடுகிறவர்களாகவும் எழுதுகிறவர்களாகவும் இருந்தால் போதும். அவர்கள் நடுநாட்டு அடையாளம் கொண்டவர்களே.

இப்படி ஒரு விரிந்த பார்வையுடன் நண்பர் ஜீவகாருண்யன் தன் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக நடுநாட்டுடன் தொடர்புடைய 46 எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடித் தொகுத்துள்ளார். தமிழ்ச்சூழலில் கி.ராஜநாயணன் தொகுத்த கரிசல் கதைகள் தொகுதிக்கும் சு.சண்முகசுந்தரம் தொகுத்த நெல்லைச்சிறுகதைகள் தொகுதிக்கும் பெருமாள்முருகன் தொகுத்த கொங்குச்சிறுகதைகள் தொகுதிக்கும் சோலை.சுந்தரபெருமாள் தொகுத்த தஞ்சைச்சிறுகதைகள் தொகுதிக்கும் கிடைத்த வரவேற்பும் ஆதரவும் ஜீவகாருண்யன் தொகுத்திருக்கும் நடுநாட்டுச் சிறுகதைகள் தொகுதிக்கும்  கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

கோவை, நெல்லை, மதுரை வட்டாரங்களில் இருப்பதைப்போல பெரிய இலக்கிய அமைப்புகளோ இலக்கிய வாசகர் திரளோ நடுநாட்டுப்பகுதியில் இல்லை என்பது துயரத்துக்குரிய உண்மை. கோவையில் நடைபெறும் ஓர் இலக்கிய அமைப்பில் கண்மணி குணசேகரனின் உரையைக் கேட்க குறைந்தபட்சமாக இருநூறு முன்னூறு பேர் திரண்டு வந்ததை நான் அறிவேன். அதே கண்மணி குணசேகரனின் உரையைக் கேட்க விழுப்புரம், கடலூர், புதுச்சேரி என எந்த ஊராலும் நாற்பது ஐம்பது பேர்களுக்கு மேல் வருவதில்லை. அதுவும் இளைஞர்களின் முகங்களை எந்த இலக்கியக்கூட்டத்திலும் பார்க்க முடிவதில்லை. பார்வையாளர்களின் எண்ணிக்கைக்குறைவுக்கு  காரணம்   தேடுவது கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி தேடுவதுபோல. இலக்கியத்தின் மீதான ஆர்வம் மிகமிகக் குறைவு என்பதுதான் ஒரே காரணம். இலக்கியத்தின் மீது ஆர்வம் பிறக்கவேண்டும் என்றால் மொழியின் மீது ஆர்வம் இருக்கவேண்டும். மொழியின் மீது ஆர்வம் வரவேண்டும் என்றால் கல்வி மீது ஆர்வமும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.  இரண்டும் நம்மிடம் இல்லை  என்பதே கசப்பான உண்மை.

கடந்த பத்தாண்டுகளாக பள்ளியிறுதித்தேர்வு முடிவும் மேல்நிலைப்பள்ளி இறுதித்தேர்வு முடிவும் வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் பத்திரிகைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களை நான் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன். தமிழ்நாட்டில் மொத்தமாக முப்பத்தெட்டு மாவட்டங்கள் உள்ளன. மாவட்டவாரியாக மாணவமாணவிகள் பெற்ற தேர்ச்சி விவரங்களை அப்பகுதியில் படித்துப் பார்ப்பேன். அப்பட்டியலில் எல்லா ஆண்டுகளிலும் இறுதி ஐந்து இடங்களில் நான்கு இடங்கள் நடுநாட்டை ஒட்டியவை. மாறாத ஓர் உண்மையாக கடந்த பல ஆண்டுகளாக இது நீடிக்கிறது. கல்வி நம் மீட்சிக்கான பெருவழி என்று தெரிந்தபோதும், கல்வி கற்பதை நம் சூழல் ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை? மாணவர்களும் கல்வியை ஏன் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை? மாணவர்களின் பெற்றோர்களும் ஏன் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை? எல்லாமே புரியாத புதிர்கள். ஏதேனும் ஓர் உளவியல் குழுதான் இதை முன்னிறுத்தி ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.

இத்தருணத்தில் இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். இதே பத்திரிகைகளில் பெரிய பண்டிகைகளின் கொண்டாட்ட முடிவுக்குப் பிறகு இன்னொரு புள்ளிவிவரமும் வெளிவரும். அது மதுவிற்பனை விவரம். தேர்வுகளில் தேர்ச்சிப்பட்டியலில் இறுதி இடங்களில் இருந்த அதே நான்கு பகுதிகளும் மதுவிற்பனையில் முதல் நான்கு இடங்களுக்கு வந்துவிடும். அதைப் பார்த்து பலமுறை வேதனைப்பட்டிருக்கிறேன். இந்தத் தலைகீழ் மாற்றத்துக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கல்வி பரவலாகாத சூழலில் உடலுழைப்பை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு அனைவரும் தள்ளப்படுகிறார்கள். உடலுழைப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக நம் ஆற்றலை உறிஞ்சக்கூடியது. உடலின் களைப்பை நீக்கி ஊக்கம் பெற மதுவின் பக்கமாகத் திசைதிரும்பிச் செல்லும் கூட்டம் மெல்ல மெல்ல திரும்பி வரமுடியாத ஒரு புள்ளிக்குச் சென்று அழிந்துபோகிறது. இந்தியாவிலேயே இளம்விதவைகள் நிறைந்த கிராமங்களில் ஒருசில கிராமங்கள் நம் பகுதியில் உள்ளன என்பது திகைப்பூட்டும் உண்மை. அக்கிராமத்தில் அனைவரும் இருபத்தைந்து முதல் முப்பது வயதுக்குட்பட்ட பெண்கள். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்குத் தாயானவர்கள். அவர்களும் போதிய கல்வியறிவு இல்லாதவர்கள். மீண்டும் உடலுழைப்பையே நாடிச் செல்லும் கட்டாயத்தில் இருப்பவர்கள்.

ஓர் இலக்கியத்தொகுதிக்கான முன்னுரையில் இதைக் குறிப்பிடுவது சிலருடைய பார்வையில் பொருத்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால் ஆபத்தை நோக்கி அழைத்துச் எல்லும் புற்றுநோயை எவ்வளவு காலத்துக்குத்தான் மறைத்துவைக்க இயலும். இந்த இழிவான சூழலிலிருந்து மாற்றம் உருவாக கல்வி வழியாக அனைவரும் அடையும் வெற்றி ஒன்றுதான் ஒரே தீர்வு. பண்பட்ட வாழ்க்கைச்சூழலை அமைத்துக்கொள்வது என்பது அடுத்த தீர்வு.  மது மட்டுமல்ல, நம் மதியை மயக்கக்கூடிய எல்லாவற்றிலிருந்தும் உறுதியாக விலகி நிற்பது என்பது அதற்கடுத்த தீர்வு. நம் வாழ்க்கைச்சூழல் மாற மாற, நம் ஆர்வங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறக்கூடும்.  அப்போது இலக்கியம் சார்ந்த ஆர்வமும் கலை சார்ந்த விழிப்புணர்வும் எழக்கூடும். அன்று எழுத வரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த புதிய கண்மணி குணசேகரனுக்கு அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் அமையக்கூடும்.

அப்படியென்றால் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 46 பேர்களும் எப்படித் தோன்றினார்கள் என்று ஒரு கேள்வி எழலாம். உண்மைதான். ஒருவகையில் பாலையிலிருந்து முளைத்த வாழைகள் அவர்கள். தீவிரமான ஈடுபாட்டின் வழியாகவும் தொடர்ச்சியான உழைப்பின் வழியாகவும் தன்னைத்தானே நிலைநாட்டிக்கொண்டவர்கள். இந்த மண்ணில் தோன்றிய முன்னோர் செய்த நற்பயனின் விளைவாக இந்த மண்ணுக்கே கொடையாகப் பிறந்தவர்கள். எடுத்துப் படிக்கவோ பாராட்டவோ பத்து பேர் கூட இல்லாத சூழலிலும் ஒரு நம்பிக்கையோடு எழுதிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் நானூறு பேர்களாக, நாலாயிரம் பேர்களாக பெருகும் நாள் விரைவில் அமையவேண்டும். அந்நாளே இந்த நடுநாட்டுக்குப் பொன்னாள்.

தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் இத்தொகுதி நிலைத்து நிற்கவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

 

( எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன் ‘நடுநாட்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் தொகுத்து நிவேதிதா பதிப்பகம் வழியாக வெளிவந்திருக்கும் தொகைநூலுக்கு எழுதிய முன்னுரை )