Home

Monday, 17 July 2023

இளம்பாரதி நேர்காணல் - சந்திப்பு : பாவண்ணன் - இரண்டாம் பகுதி

 

மொழிபெயர்க்கும் முயற்சியில் எப்படி ஈடுபட்டீர்கள்?

 

ஐதராபாத்திலிருந்து மதுரைக்கு வந்த பிறகும்கூட தெலுங்கு மொழியில் வெளிவந்துகொண்டிருந்த யுவ பத்திரிகையை தொடர்ந்து தேடித்தேடி படித்தேன் என்று சொன்னேன் அல்லவா? அந்த இதழில் நல்ல நல்ல கதைகள் வெளிவந்தன.ஒருமுறை அவற்றைப் படித்துக்கொண்டிருந்த போது இருப்பதில் சிறப்பான ஒரு கதையை நானே தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்று தோன்றியது.  


தொடக்கத்தில் நம் மொழியறிவு அந்த வேலையைச் செய்யும் அளவுக்கு போதுமாக இருக்குமா அல்லது பாதியில் காலை வாரிவிடுமா என்றெல்லாம் யோசித்து தயங்கிக்கொண்டிருந்தேன். பிறகு அந்தத் தயக்கத்தையெல்லாம் உதறிவிட்டு மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.ஒரே அமர்வில் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்து முடித்தேன்.அது என் தன்னம்பிக்கையை வளர்த்தது.என்னால் முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது.அந்தச் சிறுகதையை மீண்டும் படித்து செப்பனிட்டு பிரதியெடுத்தேன்.அந்த நேரத்தில் கல்கி பத்திரிகையிலிருந்து விலகிவந்த பகீரதன் என்னும் எழுத்தாளர் ’கங்கை’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்திவந்தார். தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்த சிறுகதையை அந்த இதழுக்கு அனுப்பிவைத்தேன். அடுத்த மாதத்திலேயே அந்தச் சிறுகதை பிரசுரமாகிவிட்டது. அதுதான் என் மொழிபெயர்ப்பில் வெளியான முதல் சிறுகதை.அதற்குப் பிறகு சில வாரங்கள் இடைவெளிவிட்டு மஞ்சரி இதழுக்கு ஒரு தெலுங்குக் கதையை மொழிபெயர்த்து அனுப்பினேன்.அச்சிறுகதையும் பிரசுரத்துக்குத் தேர்வாகி வெளிவந்துவிட்டது. அடுத்தடுத்த பிரசுரங்கள் என் நம்பிக்கையை வளர்த்தன. அதன் பிறகு பல தெலுங்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்து பல்வேறு பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தேன். அவையனைத்தும் அடுத்தடுத்து பிரசுரமாயின.


                                                             

கல்லூரிக்காலத்தில் நீங்கள் எழுதிய கீதா என்னும் நாவலை அறுபதாண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பாக இப்போது வந்திருக்கும் சூழலில்தான் முதன்முறையாகப் படித்தேன்.நல்ல கதையோட்டம் உள்ள நாவல்.காண்டேகரின் செல்வாக்கை உங்கள் எழுத்தில் காணமுடிந்தது.காண்டேகரின் படைப்புகளைத் தேடிப் படிக்க எது தூண்டுதலாக இருந்தது?

மதுரையில் இருந்த ரதி பதிப்பகம்தான் என்னுடைய முதல் கவிதைத்தொகுதியை வெளியிட்டது. ரதி பதிப்பகத்தினர் அப்போது பிரதானமாக திரைப்படப்பாடல் புத்தகங்களைத்தான் அச்சிட்டு விற்றுவந்தார்கள். அதற்கு நல்ல சந்தைமதிப்பு இருந்ததால் அதையே தொடர்ந்து செய்து வந்தார்கள். அந்தப் பதிப்பகத்தை நடத்தியவர் ரதிமோகன் என்கிற ராமசாமி. என்னுடைய கவிதைத்தொகுதி வெளிவந்த பிறகு எனக்கு நல்ல நண்பராகிவிட்டார். ஒருநாள் நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது பாட்டுப்புத்தகங்களைவிட பல எழுத்தாளர்களிடம் நாவல்களைக் கேட்டு வாங்கி வெளியிடலாமே என்று சொன்னேன். எல்லா முக்கிய எழுத்தாளர்களும் ஏதோ ஒரு பதிப்பகத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள், நாம் யாரைப் போய் கேட்பது என்று குறைபட்டுக்கொண்டார் ரதிமோகன். அப்படியென்றால் எழுதிக்கொண்டிருக்கும் புதிய எழுத்தாளரிடம்தான் கேட்கவேண்டும் என்று சொன்னேன். சரி, யாருக்கு கடிதம் எழுதி வாங்கமுடியுமோ, அவர்களுக்கு எழுதி நீங்கள் வாங்கிக் கொடுங்கள். நாம் வெளியிடலாம் என்று தெரிவித்தார் ரதிமோகன். எனக்கு உடனே எல்லார்வி, கோமதி சுவாமிநாதன், மாயாவி என சில பெயர்கள் நினைவுக்கு வந்தன. உடனே அம்மூவருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பினோம். எல்லார்வி ஒரு நாவல் கொடுத்தார் கோமதி சுவாமிநாதன் ஒரு நாடகத்தொகுதியைக் கொடுத்தார். அவற்றை உடனுக்குடன் பிரசுரித்தோம். பலர் தம் வெளியீட்டாளர்களின் கட்டுப்பாட்டைக் காரணமாகச் சொல்லித்  தவிர்த்தார்கள். அப்போது ரதிமோகன் ”நீங்கள் ஏன் யார்யாரையெல்லாமோ கேட்கிறீர்கள்? எழுதத் தெரிந்த ஆள்தானே நீங்கள்.நீங்களே ஒரு நாவலை எழுதினால் என்ன” என்று கேட்டார்.அவர் கேள்வி எனக்குத் திகைப்பை அளித்தது. பிறகு அவருடைய கோரிக்கையையே ஒரு தூண்டுகோலாகக் கொண்டு நாவல் எழுதி அளிப்பதாகச் சொன்னேன். அவசரத்தில் சொல்லிவிட்டேனே தவிர, மனத்தில் ஒன்றும் தோன்றவில்லை. திடீரென ஒருநாள் நாவலின் உத்தேசமான கதையும் வடிவமும் மனத்தில் திரண்டெழுந்தன. அப்போது எங்கள் சித்தப்பா ஒருவர் ஊட்டியில் அரசுப்பணியில் இருந்தார். அவர் எஞ்சனீயர். அடுத்து வந்த கல்லுரி விடுப்பில் அவருடைய வீட்டுக்குச் சென்றேன். தோட்டங்களும் மரங்களும் நிறைந்து பச்சைப்பசேலென காட்சியளித்த அந்த மலையும் மலைவாசமும் எழுதுவதற்கான ஊக்கத்தை அளித்தன.  காண்டேகர் நாவல்களைப் படித்துப் படித்து அவருடைய கதைவடிவம் மனத்தில் ஊறியிருந்தது.கதைப்பாத்திரங்களின் நினைவலைகள் வழியாக தனித்தனி அத்தியாயங்களை எழுதித் தொகுப்பதன் வழியாக கதையை நகர்த்தி முடிப்பதுதான் அவருடைய கதைவடிவம். அந்தக் கதைவடிவத்தைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய நாவலை எழுத நினைத்தேன். பத்து பதினைந்து நாட்களில் அந்த நாவலை எழுதி முடித்துவிட்டேன். அதன் பெயர் கீதா.அந்த நாவலை நண்பர் ரதிமோகன் தன் ரதி பதிப்பகம் வழியாக வெளியிட்டார்.

 

அனல்காற்று உங்களுடைய முக்கியமான மொழிபெயர்ப்பு நூல். மொழிபெயர்ப்பதற்கு மிகவும் கடினமான வடிவம் கவிதை என்று பலரும் சொல்வதுண்டு. அக்கவிதைகளை நீங்கள் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்ததற்கு ஏதேனும் காரணம் உண்டா?

தெலுங்கு மொழியில் நாராயண ரெட்டி பெரிய கவிஞர்.சிநாரெ என்று சுருக்கமாக அவரைக் குறிப்பிடுவார்கள். தெலுங்கு மொழியில் வசன கவிதை மரபை உருவாக்கிய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.1970இல் அவர் மன்ட்டுலு மனுவுடு என்கிற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டார். அதற்கு முன்னாலேயே அவர் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைத்தொகுதிகளை எழுதியிருந்தார். அவர் கவிதைகள் மிக எளிமையான சொற்களோடு இருப்பதுபோலத் தோன்றினாலும் ஆழமான தாக்கத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டிருப்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.என் விருப்பக்கவிஞர்களில் ஒருவராக அவர் மாறிவிட்டார்.அவரைத் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதுவரைக்கும் சிறுகதைகளையும் அவ்வப்போது என் வாசிப்பில் நல்லதாகத் தோன்றும் ஒருசில கவிதைகளையும் மட்டுமே  மொழிபெயர்த்துவந்த நான் முழுமையாக ஒரு கவிதைத்தொகுதியை  மொழிபெயர்த்ததில்லை. அதனால் மண்ட்டலு மானவுடு கவிதைத்தொகுதியை தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்கிற ஆசை உருவானது. அது அந்த ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமிய்ன் விருதைப் பெற்றிருந்தது. அதனால் உடனே நாராயண ரெட்டிக்கு என் விருப்பத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அவரும் எனக்கு உரிய அனுமதியை வழங்கி கடிதம் எழுதினார். அதற்குப் பிறகு ஒருசில நாட்களிலேயே அத்தொகுதியை மொழிபெயர்த்து முடித்தேன். அதற்கு அனல்காற்று என்று பெயர் சூட்டினேன். கையெழுத்துப்பிரதியிலேயே அத்தொகுதியை என் நண்பரான மீரா படித்துப் பார்த்துவிட்டு கவிதைகள் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். அதற்குப் பிறகே எனக்கு ஒரு நம்பிக்கை உருவானாது. அத்தொகுதியை நண்பர் மீராவே தன்னுடைய அன்னம் பதிப்பகம் வழியாக வெளியிட்டார். தெலுங்கு மொழியைப்போலவே தமிழிலும் அத்தொகுதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

உங்களுக்கு சாகித்ய அகாதெமி விருதைத் தேடித் தந்த மய்யழிக்கரையோரம் நாவலை மொழிபெயர்த்தபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

அந்த நாவலின் மொழிபெயர்ப்புதான் என்னை தமிழில் ஒரு மொழிபெயர்ப்பாளனாக நிலைநிறுத்திக்கொள்ள உதவிய புத்தகம். அந்த வேலையை நான் செய்யத் தொடங்கிய விதத்தைக் கேட்டால் நீங்கள் ஒரு கதையையோ கட்டுரையையோ எழுதிவிடுவீர்கள். சித்தம்போக்கு சிவன் போக்கு என்பதுபோல மலையாளத்திலும் தெலுங்கிலும் வழக்கமாக நான் படிக்கும் பல பத்திரிகைகளில் வாசிக்கும் கதைகளில் எனக்குப் பிடித்ததை மட்டும் மொழிபெயர்த்து அவ்வப்போது மஞ்சரி மாதிரி மொழிபெயர்ப்புக்கதைகளுக்கு இடமளிக்கிற பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளிவந்துகொண்டிருந்தன. என் நண்பரான நா.பார்த்தசாரதி அவற்றைப் படிக்கும்போதெல்லாம் பாராட்டி எப்போதாவது சில கடிதங்கள் எழுதுவார்.அல்லது நேரில் சந்திக்கும்போது இந்த இந்த கதைகளைப் படித்தேன், பிடித்திருந்தது என்று தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார்.அப்படித்தான் காலம் போய்க்கொண்டிருந்தது.  சிவகங்கைக்கல்லூரியில் என் வேலையிலிருந்து  ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டது. வழக்கமாக மற்ற அரசுப்பணிகளில் பிறந்த மாதத்தைக் கணக்கிட்டு அந்தக் குறிப்பிட்ட மாத இறுதியில்  ஓய்வுபெறும் வண்ணம் அமைத்துவிடுவார்கள். ஆசிரியர் பணியில் மட்டும் எந்த மாதமாக இருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட கல்வியாண்டு இறுதி வரைக்கும் வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெறலாம். அப்படி ஒரு வசதி ஆசிரியர் பணியில் உண்டு.அதனால் கல்லூரியில் வயதுப்படி ஓய்வடைந்தாலும் கல்வியாண்டின் இறுதி நாள்வரை நான் பணியாற்றினேன்.

 

ஒருநாள் நான் கல்லூரியில் பாடவகுப்பு ஆசிரியர் அறையில் உட்கார்ந்திருக்கும்போது எங்கள் கல்லூரி முதல்வர் கூப்பிட்டு அனுப்பினார்.உடனே அவரைச் சந்திக்கச் சென்றேன்.நான் போனதும் வெகுநாட்களாக காத்திருந்த உங்கள் பணி ஓய்வு ஆணை வந்துவிட்டது என்று சொன்னபடி ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பிவந்து நண்பர்களிடம் காட்டி பேசிக்கொண்டிருந்தேன். அதே நேரத்தில் என் பெயருக்கு நேரிடையாக எழுதப்பட்ட ஒரு கடிதம் வந்திருந்தது. அதை எடுத்துவந்து உறையைத் திருப்பிப் பார்த்தால் அனுப்புநர் பகுதியில் நேஷனல் புக் டிரஸ்ட் முத்திரை குத்தியிருந்தது.உடனே பிரித்துப் பார்த்தேன். ’மய்யழிப்புழையூடே தீரங்களில்’ நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் வேலை உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் “உங்களுக்கு ஓய்வே இல்லை சார். ஒரு வேலை முடியும்போது இன்னொரு வேலை தொடங்கிவிட்டது. இனிமேல் நீங்கள் நிரந்தர மொழிபெயர்ப்பாளர்” என்று சொன்னார்கள். அந்தச் சொற்கள் பலித்துவிட்டன.


பிற எழுத்தாளர்களும் நண்பர்களும் உங்கள் எழுத்து முயற்சிகள் பற்றி எவ்விதமான எண்ணம் கொண்டிருந்தனர்?

என்னைச் சுற்றியிருப்பவர்கள் அவ்வப்போது கூறும் ஊக்கமொழிகள் என்னை இடைவிடாமல் இயங்கவைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மொழிகள் கடந்தும் ஊர் எல்லைகளுக்கு அப்பாலும் எனக்கு அமைந்த நண்பர்கள் அசாதரணமான வரப்பிரசாதம் என்றே கருதுகிறேன். இத்தகு வாய்ப்புகள் மற்றவர்களுக்கு எளிதில் அமைவதில்லை. அவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் நட்புரைகள் எனக்கு பக்கபலமாக இருந்து வந்திருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு துறை என்றில்லாமல் கதை, கட்டுரை, கவிதை என்ற போக்கில் இயங்கியதால் எனக்கு பல்வேறு ரசனையுள்ள நண்பர்கள் அறிமுகமானார்கள். சிறுவர் இலக்கியம், அறிவியல் இலக்கியம், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறைகளிலும் எனக்கு நாட்டம் இருந்ததால் பல்வேறு ரசனை கொண்ட நண்பர்களுடன் பழகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நிலம், மொழி, துறை என பல எல்லைகளைக் கடந்து என் இலக்கியச்சார்பு அமைந்ததால் எனக்கு ஊக்கமளித்தவர்கள் எல்லாத் திசைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் அளித்த உற்சாகம் என்னை மேன்மேலும் வளரச் செய்தது. சிறுவர் பத்திரிகை முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் வரிசை வரை என்னுடைய பங்களிப்பு இருந்தது. பத்திரிகைத்தளம் மட்டுமன்றி வானொலி நிலையங்களில் பல்வேறு துறைகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் அமைந்தன. பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றும் வாப்புகளும் கிடைத்தன.

 

சில வாய்ப்புகளை சில தவறவிட நேர்ந்ததுண்டு. குறிப்பிட்டுச் சொல்வதானால் குழந்தைகள் ககலைக்களஞியம் தயாரிப்பில் ஈடுபடமுடியாமல் போனதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அழ.வள்ளியப்பா அவர்களும் பெ.தூரன் அவர்களும் கலந்து பேசியதன் விளைவாக குழந்தைகள் கலைக்களஞ்சியம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அந்தத் தயாரிப்பில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் இருவருமே விரும்பினார்கள். கலைக்கதிர் இதழில் நான் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதியதன் விளைவு அது. அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள முடியாதவாறு அப்போது கல்லூரி ஆசிரியர்கள் போராட்டமொன்று அப்போது நடைபெற்றது. போராட்ட நிகழ்வுக்கான ஆயத்தக்கூடம் எங்கள் வீடுதான். சிவகங்கைக் கல்லூரியின் ஆசிரியர் போராட்ட நிகழ்வுகள் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. சிவகங்கை, மதுரை, வேலூர் சிறைச்சாலைகளில் நாங்கள் அடைபட்டிருந்த காலம் அது. என்னுடைய இயலாமையைத் தெரிவித்ததால் பெ.தூரன் அவ்ர்கள் வேறொருவரை அந்தப் பணிக்குப் பயன்படுத்திக்கொண்டார். அவருடன் இணைந்து பணியாற்றமுடியாததான அந்த ஆதங்கம் இன்றளவும் என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் கலைக்களஞ்சியம் அருமையான தமிழ்ப்பணி அல்லவா !

 

இன்னொரு சமயத்தில் பெ.தூரன் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் சென்னைக்கு வந்து குமரிமலர் அலுவலகத்தில் சந்திக்குமாறு தகவல் அனுப்பியிருந்தார். நானும் சென்னைக்குச் சென்று குமரிமலர் அலுவலகத்தில் அவருக்காகக் காத்திருண்டேன். அப்போது அங்கே த.நா.குமாரசாமி உட்கார்ந்திருந்தார். நான் அவருக்கு வணக்கம் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ”ஓ, தெலுங்கிலிருந்து மொழிபெயர்ப்பவர் நீங்கள்தானா, உங்கள் மொழிபெயர்ப்பு ஆக்கங்களைப் படித்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு என் கைகளைப் பற்றிக் குலுக்கினார். தொடர்ந்து ”உங்க மொழி மிகவும் நன்றாக உள்ளது. ரொம்ப அழகாக மொழிபெயர்க்கிறீர்கள். தொடர்ந்து செய்து வாருங்கள்” என்று பாராட்டும் விதமாகச் சொன்னார். அப்போது எதிர்பாராத விதமாக பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மனாபனும் அங்கிருந்தார். அவரிடம் என்னை த.நா.குமாரசாமி அறிமுகப்படுத்தினார்.  அவரும் மிகவும் மகிழ்ச்சியோடு “உங்க மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிச்சிருக்கேன். தொடர்ந்து செய்யுங்க. எதையும் தொடர்ச்சியா செய்யணும். அப்பதான் நிலைச்சி நிற்கமுடியும்” என்று ஊக்கப்படுத்தும் விதமாகச் சொன்னார். நாங்கள் மூன்று பேருமாகச் சேர்ந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த படைப்புகளைப்பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அன்று பெ.தூரன் வரவில்லை. விடுவித்துக்கொள்ள முடியாத ஏதோ ஒரு வேலையில் சிக்கிக்கொண்டிருப்பதாக அவர் அனுப்பிய செய்தி மட்டும் வந்தது. அதனால் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறி தீபம் அலுவலகத்துக்குச் சென்றேன். அந்த அலுவலகம் மெளண்ட்ரோடில் இருந்தது. தீபம் ஆசிரியர் பார்த்தசாரதி என் இளமைக்காலத்து நண்பர். மதுரையில் இருக்கும்போது நானும் அவரும் ஒருகூட்டுப் பறவைகளாக ஒன்றாகப் பழகி வந்தோம். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை படிக்கிற சமயத்தில் அவர் தீபம் இதழைத் தொடங்கினார். இதழுக்கு தீபம் என்னும் பெயரைப் பரிந்துரைத்ததில் எனக்கும் பங்குண்டு. அவரைப் பார்த்து பேசுவதற்குத்தான் அந்த அலுவலகத்துக்குச் சென்றேன். அவரும் சமீபத்தில் வெளிவந்திருந்த என் மொழிபெயர்ப்புக்கதையைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து தன் மேசை மீது குவிந்திருக்கும் சிறுகதைப்பிரதிகளைச் சுட்டிக்காட்டி ”கதைகளை எழுதுவதற்கு இந்த மாதிரி ஆயிரம் பேர் இருக்கிறார்கள், ஆனால் மொழிபெயர்ப்பு செய்யத்தான் ஆட்களே இல்லை. அந்த இடம் காலியாகவே நிரப்பப்படாமலேயே உள்ளது. நீங்கள் மொழிபெயர்ப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். இன்றைய தேதிக்கு அது காலத்தின் தேவை” என்று சொன்னார். இப்படி யாரைச் சந்தித்தாலும் மொழிபெயர்ப்பின் திசையில் போ என்று சொல்லி அனுப்பிவைப்பது போல ஒரே விஷயத்துக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னார்கள். அது என்னமோ அசரீரி வாக்கு போல இருந்தது. நானும் அச்சொல்லை கெட்டியாக பற்றிக்கொண்டேன்.

 

1951 முதல் 1990 வரை சிறுகதை, கவிதை என படைப்பிலக்கியத்தில் தீவிரமாகவும் அவ்வப்போது சில மொழிபெயர்ப்பு முயற்சிகளிலுமாக இயங்கி வந்த நீங்கள் அதற்குப் பிறகு முற்றிலுமாக மொழிபெயர்ப்பு முயற்சியில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டீர்கள். அது சார்ந்து உங்கள் நெஞ்சில் ஏதேனும் இழப்புணர்ச்சி ஏற்பட்டதுண்டா?

 

நீங்கள் சொல்வது உண்மைதான்.ஆரம்பத்தில் கொஞ்ச காலம் அப்படியும் இப்படியுமாக இருந்தேன். பிறகு அந்த ஊசலாட்டத்திலிருந்து விடுபட்டு மொழிபெயர்ப்பையே என்னுடைய களமாக வடிவமைத்துக்கொண்டேன். தொடக்கத்தில் அதை நினைத்து சற்றே வருத்தப்பட்டதுண்டு. ஒருவேளை தமிழில் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்த ஆளாக இருந்திருந்தால், ஒரு படைப்பாளியாக மட்டுமே நீடித்திருபேன். பிறமொழிப் படைப்புகளையும் படித்தறியும் வாய்ப்பு இருந்ததால், அந்தப் படைப்புகள் என் படைப்புகளைவிட உண்மையிலேயே சிறப்பாக இருந்ததால், சிறப்பான ஒன்றைத்தானே நான் அறிமுகம் செய்கிறேன் என்கிற திருப்தி ஏற்பட்டது. ஒரு மொழிபெயர்ப்பு என்பது இன்னொருவருடைய படைப்பு என்றபோதும், அது என் மொழியில் வெளிப்படுகிறது என்பதில் எனக்கும் பெருமை உண்டு அல்லவா? அந்த மகிழ்ச்சியையே பெரிதென என் மனம் நினைத்து அமைதியடைந்தது. அதற்குப் பிறகு எந்த வாட்டமும் இல்லை. ஒரே திசையில் கவனமாகச் செல்கிற பிரயாணியைப்போல, மொழிபெயர்ப்பின் திசையில் முனைப்புடன் நான் நடக்கத் தொடங்கினேன்.

கவிஞர் மீராவுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எப்படி உருவானது?

சிவகங்கை கல்லூரியில் வேலை கிடைத்த செய்தியை என்னுடைய நண்பரான மீனாட்சி புத்தக நிலையம் செல்லப்பனுக்குத் தெரியப்படுத்தினேன். அப்போது அந்தக் கல்லூரியில் ஏற்கனவே மீரா என்கிற மீ.ராஜேந்திரன் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் செல்லப்பனைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் அந்தத் தகவலை அவருடன் பகிர்ந்துகொண்டார். அந்தத் தகவலைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியோடு கல்லூரிக்குச் சென்று நம் கல்லூரிக்கு ஒரு கவிஞர் வரப்போகிறார், நமது தமிழ்த்துறைக்கு ஒரு வலிமையான கை கிடைத்துள்ளது என்றெல்லாம் துறையில் உள்ள பிற ஆசிரியர்களிடம் சொல்லி செய்தியைப் பரப்பிவிட்டார். குறிப்பிட்ட நாளில் சிவகங்கை கல்லூரிக்குச் சென்றதும் நான் முதலில் முதல்வரைப் பார்த்து பணியில் சேர்வது தொடர்பான கடிதத்தை கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். பிறகு தமிழ்த்துறை இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து நண்பர் ராஜேந்திரனைச் சந்திக்கச் சென்றேன். அவரும் அப்போதுதான் வகுப்பை முடித்துக்கொண்டு  துறைக்குத் திரும்பியிருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் உடனே என்னை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார். சார் பெரிய கவிஞர், நாம் இவருக்கு இலக்கணப்பாடத்தை ஒதுக்கிக் கொடுத்துவிடலாம். நம் கல்லூரியிலிருந்தும் சில கவிஞர்கள் உருவாக அது வழிவகுக்கும் என்றெல்லாம் அவர் ஒரு வேகத்தில் அடுக்கிக்கொண்டே சென்றார். நான்  வேதியியல் துறையில் சேர்ந்திருப்பதாக அவர்களிடம் தெரிவித்ததும் அவர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்துவிட்டனர்.  கொஞ்ச நேரம்தான்.அப்புறம் சிரித்துப் பேசிப் பழகத் தொடங்கிவிட்டோம்.

 

சிவகங்கையில் நாங்களும் மீராவும் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருந்தோம். ஒருநாள் எங்கள் உரையாடலின்போது, தனக்குப் பொருத்தமான ஒரு புனைபெயரை யோசிப்பதாகச் சொன்னார். பிறகு அவராகவே நாலைந்து பெயர்களைச் சொன்னார். அவை அவருக்கே அவ்வளவாக நிறைவாக இல்லை. ஏன் சுற்றி வளைத்து எங்கெங்கோ தேடுகிறீர்கள்.உங்கள் பெயரிலேயே உங்கள் புனைபெயர் உள்ளதே என்று சொன்னேன்.அவருக்குப் புரியவில்லை. திகைப்போடு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். தலைப்பெழுத்தான மீயையும் உங்கள் பெயரின் முதலெழுத்தான ராவையும் சேர்த்து மீரா என்று வைத்துக்கொண்டாலே நல்ல புனைபெயராகிவிடுமே என்று சொன்னேன். மீரா மீரா என்று சொல்லிப் பார்த்தார். அவருக்கும் அது பிடித்துத்தான் இருந்தது. ஆனால் அது பெண்ணின் பெயராக இருக்கிறதே என்று யோசித்தார். .எழுதி எழுதி நிலைகொண்டுவிட்டால் இந்தப் பெயர் உங்களுக்கு நிரந்தரமாகிவிடும் என்று நான் அவரிடம் சொன்னேன். சில கணங்கள் யோசித்தார். பிறகு ஏற்றுக்கொண்டார். அன்று முதல் அவர் மீராவாக மாறிவிட்டார்.கவிஞராக அவர் பெயர் நிலைத்துவிட்டது.

 

சிவகங்கை கல்லூரியில் வேலை செய்துவந்தபோது 1973 ஆம் ஆண்டில்  ஒரு பெரிய போராட்டம் நடைபெற்றது. எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்களும்  அப்போராட்டத்தில் இறங்கியிருந்தோம். தனக்கு விருப்பமுள்ள ஒருவரை  வேலைக்கு வைத்துக்கொள்வது, விருப்பமில்லாத ஒருவரை வேலையைவிட்டு நீக்குவது, குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்காமல் ஒத்திப் போடுவது என கல்லூரி நிர்வாகம் அப்போது தன் விருப்பம்போல செயல்பட்டு வந்தது. அதை எதிர்த்துத்தான் போராட்டத்தைத் தொடங்கியிருந்தோம். மீரா, தர்மராஜன், நான் உள்ளிட்ட முப்பது முப்பத்தைந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தோம். முடிவில்லாமல் அது நீண்டுகொண்டே போனது. அப்போது கோவில்பட்டி கல்லூரியில் வேதியல் துறையில் பணியாற்ற அழைப்பு வந்தது, பேசாமல் நீங்கள் அங்கே போய் சேர்ந்துவிடுங்கள் என்று மீரா எனக்கு ஆலோசனை சொன்னார். நான் மறுத்துவிட்டேன். போனால் எல்லோரும் ஒன்றாகப் போகவேண்டும், இல்லாவிட்டால் எல்லோரும் எதுவந்தாலும் எதிர்கொண்டு ஒன்றாகவே இங்கேயே இருப்போம் என்று சொல்லிவிட்டேன். அதேபோல தூரனிடமிருந்து கூட அப்போது ஒரு அழைப்பு வந்தது. அப்போது அவர் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவருக்குத் துணையாக வேலை செய்ய வருமாறு அழைத்திருந்தார். மீரா கூட அந்த வேலை நல்ல வேலை, போய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்திச் சொன்னார். சென்றால் எல்லோரும் ஒன்றாக செல்வோம், இல்லையென்றால் இங்கேயே இருப்போம் என்கிற முடிவில் நான் உறுதியாக இருந்தேன். அந்தப் போராட்டத்திலிருந்து நானாவது தப்பித்துச் சென்று எங்காவது நல்ல வேலையில் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். வாழ்வாக இருந்தாலும் சரி, தாழ்வாக இருந்தாலும் சரி, எல்லா நிலைகளிலும் ஒன்றாகவே இருப்போம் என நான் நினைத்தேன்.

 

மீராவுக்கும் எனக்கும் நட்பு இருந்தது. அவர் என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் ஊக்கம் கொடுத்து தூண்டிக்கொண்டே இருந்தார். அந்த அன்புக்கும் நெருக்கத்துக்கும் ஈடு இணையே இல்லை. அதற்கு ஓர் எளிய நன்றி பாராட்டும் விதமாக ஒரு புத்தகத்தையே காணிக்கையாக்குவதுதான் சிறந்த வழி என்று எனக்குத் தோன்றியது.சொந்தமாக ஒரு புத்தகத்தை எழுதி முடித்து அதை அவருக்குக் காணிக்கையாக்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.ஆனால் அதுவரை காத்திருக்க எனக்குப் பொறுமையில்லை. என் மொழிபெயர்ப்பு நூலையே அவருக்குக் காணிக்கையாக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் அவரே வெளியிட்ட என் மொழிபெயர்ப்பு நூலான அனல்காற்று தொகுதியில்  ’முயற்சியே, உன் மனிதப் பெயர் என்ன, - மீரா.- இந்தப் புத்தகம் உனக்குக் காணிக்கை’ என்று எழுதியிருந்தேன். அது எனக்கு மிகவும் மனநிறைவை அளித்தது.

 

ஆங்கிலம் வழியாக நீங்கள் மொழிபெயர்த்த ஆன்டன் செகாவ் சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன்.அது எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு.ஆங்கிலம் வழியாக மொழிபெயர்ப்பதை ஏன் அந்த ஒரே தொகுதியோடு நிறுத்திவிட்டீர்கள்?

எனக்கு நெருக்கமான நண்பரொருவர் மதுரையை மையமாகக் கொண்டு பாரதி பதிப்பகம் என்கிற என்கிற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் விற்பனை நிலையத்தையும் தொடங்கினார்.ஒருநாள் அவர் ஆன்டன் செகாவ் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு கேட்டார்.நட்புக்காக அந்த வேண்டுகோளை நான் ஏற்றுக்கொண்டேன்.துரதிருஷ்டவசமாக அந்த வேலையை நான் சிவகங்கையில் இருந்த காலத்தில் முடிக்க முடியவில்லை. புதுச்சேரியில் குடியேறிய பிறகே ஆற அமர செய்து முடித்து அவருக்கு அனுப்பிவைத்தேன். அதைத்தான் அவர் ’பந்தயம்’ என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

 

இரண்டாம் தொகுதி கொண்டுவருவதைப்பற்றிய இந்தக் கேள்வியை  நீங்கள் பந்தயம் தொகுதி வந்த காலத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பாரதி பதிப்பகம் நண்பர் கூட இன்னொரு தொகுதி கொண்டு வரலாம், பத்து கதைகளை மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்று கேட்டார். அப்புறம் செய்யலாம் என நினைத்து தொடக்கத்தில் அந்த முயற்சியை ஒத்திவைத்தேன். பிறகுதான் யோசிக்கும்போது ஒரு விஷயம் மனத்தில் தோன்றியது.ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க ஏராளமான மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒரு புத்தகம் இன்று இல்லாவிட்டாலும் நாளையோ நாளை மறுநாளோ தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுவிடும். ஆனால் பிற மாநில மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பு செய்வதற்கு அந்தந்த மொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களே தேவைப்படுகிறார்கள். இப்போது தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழிகளிலிருந்து நான் செய்கிற மொழிபெயர்ப்புகளை இன்று வேறொருவர் செய்வது சாத்தியமில்லை. ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குச் செய்யும் மொழிபெயர்ப்புகளை இன்னொருவர் எளிதாகச் செய்துவிட முடியும்.  அதனால் நான் மட்டுமே செய்யமுடிந்த ஒரு வேலையில்தான் என் முழுக்கவனமும் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதனால் என் நேரத்தை அதற்கு மட்டுமே செலவழிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.செகாவ் கதைகளை இன்னொரு தொகுதியாகக் கொண்டுவர ஆர்வம் காட்டாததற்கு அதுதான் காரணம். நான் செய்யாவிட்டாலும் என்னைத் தொடர்ந்து செகாவ் கதைகளை சுப்பாராவ், சந்தியா நடராஜன், எம்.கோபாலகிருஷ்ணன் என பல எழுத்தாளர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.

 

மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த உங்கள் மனைவியார் உங்கள் இலக்கிய ஆர்வத்தைப்பற்றி என்ன கருதினார்? அவருக்கும்  இலக்கிய ஈடுபாடு இருந்ததா?

என் மனைவிக்கு இலக்கியம் சார்ந்த எந்த பெரிய ஆர்வமும் இல்லை.அதனால் என் படைப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் படிக்க அந்த அளவுக்கு ஆர்வம் காட்டியதில்லை.நேரமிருக்கும்போது ஒன்றிரண்டு படிப்பார்.அவ்வளவுதான்.அதே சமயத்தில் என் ஈடுபாட்டைப்பற்றி ஒருநாளும் குறைபட பேசியதுமில்லை. குறுக்கிட்டதும் இல்லை

 

பணி நிறைவுக்குப் பிறகு வசிப்பதற்கு புதுச்சேரியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?ஏதேனும் சிறப்புக்காரணம் உண்டா?

நானும் பணிநிறைவு பெற்றுவிட்டேன். மனைவியும் பணிநிறைவு பெற்றுவிட்டார். அப்போது இரண்டு பேரும் சிவகங்கையில்தான் இருந்தோம். மய்யழிப்புழையூடே தீரங்களில் நாவல் மொழிபெயர்ப்பு வேலையையும் அங்கிருக்கும்போதே முடித்துவிட்டேன். எதிர்பாராத விதமாக என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. மருத்துவ வசதிக்காக சென்னையில் வீடெடுத்து தங்கலாம் என்று முடிவெடுத்தோம். அந்தத் திட்டப்படி சென்னைக்கு ஒருமுறை வந்து வாடகைக்கு வீடு தேடி கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டோம்.  அப்போது எங்கள் உறவுக்காரர் ஒருவருடைய பிள்ளைக்கு புதுச்சேரியில் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்துக்காக நான் புதுச்சேரிக்கு வந்திருந்தேன். அப்போது கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் இருந்தார். அவரும் அந்தத் திருமணத்துக்கு வந்திருந்தார். அவரும் நானும் பல செய்திகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சிவகங்கையிலிருந்து சென்னைக்குச் செல்கிற திட்டத்தைப்பற்றியும் சொன்னேன். ”சென்னையைவிட புதுச்சேரியில் மருத்துவ வசதி நிறைய உண்டு, பேசாமல் நீங்கள் புதுச்சேரிக்கு வந்து சேருங்கள்” என்று சொன்னார். அவர் சொன்ன பிறகு அதை மீறிச் செல்ல எனக்கும் மனமில்லை. ஏற்கனவே எங்கள் பெரியப்பா மகன் அப்பாசாமி பற்றிச் சொல்லியிருக்கிறேன் அல்லவா, அவரும் இதே புதுச்சேரியில்தான் இருந்தார். ஒரு பக்கம் நட்பு, இன்னொரு பக்கம் உறவு. அதையெல்லாம் யோசித்துப் பார்த்துவிட்டு சென்னை திட்டத்தை கைவிட்டு புதுச்சேரியிலேயே வீடு பார்க்கத் தொடங்கினோம். இப்போது நாங்கள் இருக்கும் இந்த வீடு அப்போது விலைக்கு வந்தது. அதை வாங்கி குடும்பத்தோடு சிவகங்கையிலிருந்து புதுச்சேரிக்கு வந்துவிட்டோம்.

 

புதுச்சேரி வாசம் உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு உகந்ததாக இருக்கிறதா?

ஆமாம். உகந்ததாகவே இருக்கிறது. இங்கு வந்த பிறகு எண்ணற்ற மொழிபெயர்ப்புகளைச் செய்துமுடித்தேன். முதலில் வெள்ளைத்தாளில் வரிவரியாக எழுதி மொழிபெயர்ப்பு வேலையை முடித்துவிட்டு, பிறகு கணிப்பொறியின் உதவியோடு நானே தட்டச்சிட்டு முடிக்கிறேன். தட்டச்சு செய்துகொள்வது எனக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது. அதுவும் நான் படிப்படியாகக் கற்றுக்கொண்ட கலைதான். அச்சுப்பிழை, இலக்கணப்பிழை எதுவும் நேராதபடி கவனமாக இருக்க அது உதவுகிறது.

நான் கணிப்பொறியைப் பயன்படுத்த நேர்ந்ததற்கு ஒரு பின்னணி உண்டு, மதுரையில் நான் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் குடும்பம் குட்ஸ்ஷெட் தெருவில் இருந்தது.  அதே தெருவில் தட்டச்சு மையம் இயங்கி வந்தது. விடுமுறை நாட்களில் அங்கு சென்று தட்டச்சு கற்றுக்கொண்டேன். தொழில்முறையாக எனக்கு அது பெரிதும் உதவியாக இருந்தது. ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு இருந்த நிலைமை மாறி தமிழிலும் தட்டச்சு செய்யலாம் எனும் வசதி வந்து சேர்ந்தது. அது என் சொந்த எழுத்து வேலைக்கு மிகவும் உதவியாக அமைந்தது. உடனே சொந்தமாகவே ஒரு தட்டச்சு இயந்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டு போதிய அளவு பயிற்சி எடுத்துக்கொண்டேன்.  பத்திரிகைகளுக்கு அனுப்பவேண்டிய சிறுகதைகளையும் கவிதைகளையும் தட்டச்சு செய்து அனுப்பத் தொடங்கினேன்.  அந்த வழிமுறை என்னை மேலும் உற்சாகமுடன் இயங்குவதற்குத் தூண்டுகோலாக இருந்தது.

காலப்போக்கில் எனது எம்.எஸ்.சி (வேதியியல்) படிப்பை முடித்துக்கொண்டு சிவகங்கை கல்லூரியில் பணியாற்றச் சென்றேன். அப்போதும் தட்டச்சுப்பொறியை என்னோடு எடுத்துச் சென்று பயன்படுத்தினேன். அப்போது பத்திரிகை உலகத்தில் ஒரு சின்ன மாற்றத்தைப்பற்றிச் சொல்லவேண்டும். அதுவரை ஆனந்தவிகடன் இதழில் பணியாற்றி வந்த மணியன் என்பவர் அங்கிருந்து வெளியேறி இதயம் பேசுகிறது என்னும் இதழைத் தொடங்கி நடத்தத் தொடங்கினார், புதிய இதழ் என்பதால், இயல்பாக எனக்கிருந்த உந்துதலில் தெலுங்கு மொழிபெயர்ப்புச்சிறுகதை ஒன்றை அவ்விதழுக்கு அனுப்பிவைத்தேன். அந்தச் சிறுகதை அவ்விதழில் பிரசுரமானது. இதயம் பேசுகிறது அலுவலகத்திலிருந்து எனக்கு அன்பளிப்பாக ஓர் இதழ் அஞ்சலில் வந்து சேர்ந்தது. அந்தப் பத்திரிகையில் எழுத்தாளர் சுஜாதா அப்போது வரலாற்றின் போக்கில் கணிப்பொறியின் வளர்ச்சி பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரைத்தொடரின் அத்தியாயம் வெளிவந்திருந்தது.  கணிப்பொறியின் பயன்பாடு பற்றி சிறப்பானதொரு அறிமுகத்தை அக்கட்டுரை கொடுத்தது. அந்த இதழுக்குப் பிறகு ஒவ்வொரு இதழையும் நானே கடையில் வாங்கி தொடர்ந்து படித்துவந்தேன். அந்தத் தொடர் முடிவடைந்ததும் அக்கட்டுரைகளையெல்லாம் தொகுத்து புத்தகமாக்கி அகரம் வெளியீடாக மீரா கொண்டுவந்தார்.  அகரம் என்பது சிவகங்கைக்கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்று வந்த சூழலில் உருவான பதிப்பகம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், ஏற்கனவே பல புத்தகங்களை வெளியிட்ட அனுபவத்தில் சுஜாதாவின் கட்டுரைத்தொடரைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார் மீரா. அந்தப் புத்தகம் அச்சாகிக்கொண்டிருந்த வேளையில்  மெய்ப்புத்திருத்தம் பார்ப்பவனாக நான் இருந்தேன். ’பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்’ என்று சொல்வதைப்போல எனக்கு சுஜாதாவின் கட்டுரைத்தொடர் வழியாக கணிப்பொறியின் அறிமுகம் கிடைத்தது. அந்த நேரத்துக்குச் சரியாக சிவகங்கையில் கணிப்பொறி மையமொன்று தொடங்கப்பட்டது. தமிழ்வழித் தட்டச்சு செய்ய ஏற்கனவே நான் பழகியிருந்ததால், கணிப்பொறியில் தமிழில் தட்டச்சு செய்வது எனக்கு எளிதாகவே இருந்தது. பயிற்சி மையத்தில் சேர்ந்து தேவையான பயிற்சியில் ஈடுபட்டேன்.   அன்றுமுதல் என்னுடைய இலக்கிய முயற்சிகள் அனைத்தும் கணிப்பொறி வழியாகவே வெளிப்பட்டன.  “எதையும் நீங்க சீக்கிரமாவே கத்துக்கிடறீங்க” என்ற மீராவின் உற்சாகமொழி இன்றைக்கும் என் நினைவில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

இங்குள்ள நண்பர்களுடைய தொடர்பு உங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளதா?

புதுச்சேரிக்கு வந்த சமயத்தில், கி.ரா.வுக்கு அடுத்தபடியாக எனக்குத் தெரிந்த ஒரே எழுத்தாளர் அரிமதி தென்னகனார். அவரை  ஒருமுறை காரைக்குடியில் நடைபெற்ற குழந்தைகள் எழுத்தாளர் சங்க மாநாட்டில் சந்தித்து பேசியிருக்கிறேன். அவருடைய முகவரி என் கையில் இருந்தது.முதலில் அவரைத் தேடிச் சென்று பார்த்துப் பேசினேன்.எனக்கு புதுச்சேரியைச் சேர்ந்த எல்லா எழுத்தாளர்களையும் தேடிப் போய் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அதை அவரிடம் தெரிவித்தேன். உடனே அவர் தன்னுடைய மேசையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். அதில் புதுச்சேரியில் வாழும் எழுத்தாளர்கள் அனைவரைப்பற்றியும் எழுதியிருந்தது. அது ஒரு நல்ல கையேடாக இருந்தது.இதை வைத்துக்கொண்டு அனைவரையும் நீங்கள் சந்திக்கலாம் என்று அவர் சொன்னார்.ஒரு புதையலைப் பெற்றுக்கொள்வதைப்போல நான் அப்புத்தகத்தைப் பெற்றுக்கொண்டேன்.அந்தப் புத்தகத்தின் உதவியோடு நான் முதன்முதலில் பிரபஞ்சனைச் சந்திக்கச் சென்றேன்.அவர் அந்த முகவரியில் இல்லை. அங்கிருந்தவர்கள் வேறொரு முகவரியைக் கொடுத்தார்கள்.என்னால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் அங்கிருந்தபடியே எழுத்தாளரான ராஜ்ஜா என்பவரைச் சந்திக்கச் சென்றேன்.நல்ல வேளையாக அவர் வீட்டில் இருந்தார்.என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அவர் சில பேரை அறிமுகப்படுத்தினார்.நாயகர் அறிமுகமானார்.பஞ்சு அறிமுகம் கிடைத்தது.குறிஞ்சிவேலன் அறிமுகமும் கிடைத்தது.எழுத்தாளர் ரஜனி அறிமுகமானார்.இன்னும் நிறைய எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள்.முதுமை காரணமாக அவர்களுடைய பெயர்கள் உடனுக்குடன் நினைவுக்கு வரவில்லை.ஒருவர் வழியாக ஒருவரென பல எழுத்தாளர்களைச் சந்தித்தேன்.

 

எழுத்தாளர் ராஜ்ஜா ஒருமுறை அரவிந்தர் ஆசிரமத்தில் வசித்துவந்த மனோஜ்தாஸ் என்னும் எழுத்தாளரைச் சந்திக்க அழைத்துச் சென்றார்.மனோஜ்தாஸ் நல்ல அன்பான மனிதர்.நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.தன்னுடைய புத்தகமொன்றை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.ஒரிய மொழியில் அவர் எழுதிய சிறுகதைகளை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தொகுதியாக வெளியிட்டிருந்தார்.வீட்டுக்கு வந்த பிறகு அதை படித்துப் பார்த்தேன். அந்தக்  கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒரு இருபது கதைகளுக்கும் மேல் மொழிபெயர்த்துவிட்டேன். இன்னும் சில  பாக்கியிருக்கின்றன. பிறகு செய்யலாம் என எடுத்து வைத்தேன். ஆனால் செய்யவில்லை.சில சமயங்களில் அப்படித்தான் நேர்ந்துவிடுகிறது.ஒத்திவைக்கிற பல விஷயங்களை பிறகு எப்போதும் செய்யமுடியாதபடி தேங்கி நின்றுவிடுகின்றன. மனோஜ்தாஸின் சிறுகதைகள் அப்படித்தான் நின்றுவிட்டன. அவர் உயிருடன் இருக்கும்போதே அக்கதைகளைப் புத்தக வடிவில் பார்த்திருந்தால் மகிழ்ந்திருப்பார்.ஆனால் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போய்விட்டது. அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் எனக்குள் இருக்கிறது.இனி, செய்வதற்கு ஒன்றுமில்லை. அவ்வளவுதான். ஆனால் கதைகளைத் தொடர்ந்து  சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய அமுதக்கனி என்னும் நாவலை மொழிபெயர்த்தேன். அவர் உயிருடன் இருக்கும்போதே அது நூல்வடிவமும் பெற்றுவிட்டது. புத்தகத்தை நானே அவரைச் சந்தித்து கொடுத்துவிட்டு வந்தேன். அதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.