Home

Sunday, 11 September 2022

சூதாட்டமும் காதலும் - (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )


உலகின் மிகப்பெரிய இலக்கிய மேதை தஸ்தாவெஸ்கி. அவருடைய குற்றமும் தண்டனையும், கரம்சேவ் சகோதரர்கள், சூதாடி, அசடன் ஆகிய நாவல்கள் இலக்கிய வாசகர்களின் உள்ளங்களில் நிரந்தர இடம்பிடித்தவை. பலவிதமான ஏற்ற இறக்கங்களும் கொண்டது அவருடைய வாழ்க்கை. அமைதியென்பதே இல்லாத அளவுக்குச் சதாகாலமும் துக்கங்களாலும் சோதனைகளாலும் துரத்தப்பட்டபடி இருந்த மனிதர் அவர். எல்லாச் சுமைகளுக்கிடையேயும் அவர் உறுதியாக மூழ்கிப் பணிபுரிந்த ஒரே களம் இலக்கியத்துறை மட்டுமே. தன் மனக்கொந்தளிப்பையெல்லாம் கொட்டித் தீர்க்கவும் அவற்றை மையப்படுத்தித் தன்னையும் தன் வாழ் வையும் பரிசீலித்துக்கொள்ளவும் ஒரு வடிகாலைப்போல அவர் பெரிதும் நம்பிச் செயல்பட்டது இலக்கியக் களத்தில் மட்டுமே என்று தோன்றுகிறது. அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையே மையமாகக் கொண்டு ஒரு நாவல் எழுதுவது என்பது சுவாரஸ்யமான ஒரு சவாலாகவே இருக்கும். மலையாள எழுத்தாளர் பெரும்படவூர் ஸ்ரீதரன் என்னும் எழுத்தாளர் அச்சவாலை முழுஅளவில் ஏற்றுக்கொண்டு ஒரு சங்கீதம் போல என்னும் படைப்பை எழுதியுள்ளார். அதன் சுவை சற்றும் குறையாத அளவில் சிற்பி  தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தில் உள்ள குறிப்புகள் இப்படைப்பை நாவல் என்று சொன்னாலும் இதை அழகான நீள்கதை என்றே சொல்லவேண்டும்.

கதையின் மையக்களம் தஸ்தாவெஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நெருக்கடியான ஒரு தருணத்தில் ஒருவரிடம் மூவாயிரம் ரூபிள்கள் கடன்படுகிறார் தஸ்தாவெஸ்கி. குறிப்பிட்ட நாளுக்குள் அத்தொகைக்கு ஈடாக 160 பக்கங்களில் ஒரு நாவல் எழுதித் தரவேண்டும் என்பது நிபந்தனை. இல்லையென்றால் அவர் அதுவரை எழுதிய படைப்புகளின் உரிமையும் அடுத்த பத்தாண்டுகளுக்கு அவர் எழுதப்போகிற படைப்புகளின் உரிமையையும் இழக்கவேண்டும். இந்த ஆபத்தான நிபந்தனையின்மீதுதான் தஸ்தாவெஸ்கி கடன்பெற்றிருக்கிறார். துரதிருஷ்டவசமாக அவரால் சொன்னபடி நாவலை எழுதித்தர முடியவில்லை. இன்னும் ஒரு மாதமே பாக்கி என்கிற நிலையில் தன் சூதாட்ட அனுபவங்களை மையமாக்கி ஒரு நாவல் எழுதும் உத்வேகம் பிறக்கிறது. மனமும் கைகளும் பரபரக்கின்றன. நண்பர் ஒருவரின் உதவியால் அன்னா என்கிற இளம்பெண் சுருக்கெழுத்தாளராக வருகிறாள். அவள் உதவியுடன் அந்த நாவலைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுதிமுடித்து விடுகிறார் தஸ்தாவெஸ்கி. இடையில் இருவர் மனங்களிலும் ஒருவர்மீது மற்றொருவருக்கு ஈடுபாடு பிறந்து காதலாக மலர்கிறது. இவ்விரண்டு விஷயங்களையும் இணைத்துக் கச்சிதமான ஒரு சித்திரத்தைத் தீட்டியிருக்கிறார் ஸ்ரீதரன்.

சங்கீதம் எப்போதும் ஒரே தன்மையுடையதல்ல. அது ஒருநேரம் இளம்தென்றலின் வருடல். அடுத்த கணமே சூறாவளியின் பேயாட்டம். ஒரு சமயத்தில் சிற்றோடையின் சலசலப்பு. மறுசமயத்தில் காட்டருவியின் பயங்கரம். தஸ்தாவெஸ்கியின் மனமும் ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது. ஒருகணம் குழந்தைமனம். மறுகணம் பித்தேறிய தீவிரமான படைப்புமனம். இன்னொரு கணத்தில் சூதாட்டக் களியூறி கடனுக்காக அலைகிற மனம். வேறொரு கணத்தில் எல்லாவற்றின்மீதும் அவநம்பிக்கையுற்று சோர்ந்து குன்றி ஒடுங்கும் மனம். அவருடைய மனத்தின் படிமமாக சங்கீதம் அழகாக கட்டமைக்கப்படுகிறது. இப்படி ஒரு படிமத்தைக் கண்டடைந்ததே இக்கதைச் சித்திரத்தின் வெற்றியாகும். இச்சங்கீதத்தை அணுகத் தெரியாமல் முதலில் தவித்து, அஞ்சி ஒதுங்கி, அரற்றி, மெள்ளமெள்ள லயித்து சுரம்பிசகாமல் மீட்டுபவளாக மாறுகிறாள் அன்னா. தஸ்தாவெஸ்கி படைப்பு மனநிலையில் வேகவேகமாகச் சொல்லிச் செல்லும் அத்தியாயங்களை முதலில் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு பிறகு தட்டச்சு எந்திரத்தில் விரித்தெழுதி நாவலை முடிப்பவள் அவள்தான். உரிய நேரத்தில் முடித்தாலும் உரயவரிடம் சேர்ப்பிப்பதில் எதிர்பாராத சிக்கல்கள் முளைத்ததும் துணிச்சலுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெற்று மிகப்பெரிய ஆபத்தான கட்டத்திலிருந்து மீட்பவளும் அவள்தான். இறுதியில் அவளையே வாழ்க்கைத்துணையாக தஸ்தாவெஸ்கி ஏற்றுக்கொள்கிறார்.

அன்னாவுக்கும் தஸ்தாவெஸ்கிக்கும் காதல் அரும்பும் இடத்தை பெரும்படவம் ஸ்ரீதரன் சித்தரிக்கும் விதம் நம்பகத் தன்மையுடன் அழகாகப் பதிவாகியுள்ளது. அத்தியாயத்தை வாய்மொழியாகச் சொல்லிச்செல்கிற ஒரு தருணத்தில் பெதோஸ்யா என்பவன் தஸ்தாவெஸ்கியைப் பார்க்க வருகிறான். தஸ்தாவெஸ்கியின் மனைவியுடைய முதல் கணவனுக்குப் பிறந்த மகன் அவன். வயது முதிர்ந்த இளைஞன். ஆனாலும் தன் செலவுக்கு, ஏற்கனவே கடன் நெருக்கடிகளிடையே உழன்று கொண்டிருக்கும் தஸ்தாவெஸ்கியைச் சார்ந்திருப்பவன். அவனது வருகையால் உருவாகும் மனச்சமநிலைக் குலைவால் எழுத்து வேலையைத் தொடரமுடியாமல் தவிக்கிறார் தஸ்தாவெஸ்கி. சொல்லில் எதிர்பார்த்த ஓட்டம் பதிவதில் தடுமாற்றம் நிகழ்கிறது. ஒரு மாற்றத்துக்காக நதிக்கரையோரம் நடந்துவிட்டு வரலாமா என்று அன்னாவை அழைக்கிறார் தஸ்தாவெஸ்கி. அக்கணம் வரை அவள்மீது காதல் நாட்டம் எதுவுமில்லாமலேயே இருக்கிறார் தஸ்தாவெஸ்கி. நடக்கும்போது இருவருக்குமிடையேயான உரையாடல் அவர் எழுதிய நாவல்களைப்பற்றியதாக இருக்கிறது. அன்னாவின் பேச்சில் தெரிந்த முதிர்ச்சியும் அவளுடைய ரசனைமனமும் அவரை மிகவும் கவர்கின்றன. திடுமென மனஎழுச்சிகொண்டு தன் பழைமையைப்பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் தஸ்தாவெஸ்கி. அருள்வந்த ஒரு மனிதரைப்போல ஆவேசமாக வெகுநேரம் தொடர்ந்து பேசிய பிறகு, ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்தி அதன்பிறகு ஒரு தெய்வச்செயலைப் புரிவதைப்போல அன்னாவின் கரத்தைப்பற்றி உள்ளங்கையில் முத்தமிடுகிறார். அப்போதுதான் அவர் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்துகிறார். இந்த அத்தியாயம் முழுக்க ஒரு சங்கீதத்தைப்போலவே தஸ்தாவெஸ்கியின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. மாறிமாறி வெவ்வேறு ராகங்களை வெளிப்படுத்தும் சங்கீதத்தைப்போல அன்றைய தினத்தில் அவருடைய மனம் வெவ்வேறு உணர்வுப் புள்ளிகளிடையே தாவித்தாவிப் பயணம் செய்கிறது. இப்புள்ளிகளை பெரும்படவம் ஸ்ரீதரன் எழுத்தில் பதிவாக்கியிருக்கும் விதம் மிகச்சிறப்பாக இருக்கிறது.

நல்ல வாசிப்பனுவபம் கொண்ட இந்தப் படைப்பு 1992 ஆம் ஆண்டில் மலையாளத்தில் முதன்முதலாக வெளிவந்துள்ளது. மலையாளத்தில் வெளிவந்தபோது பயன்படுத்திய கோட்டுச்சித்திரங்களையே இடையிடையே பயன்படுத்தி வெளியிட்டிருக்கும் கவிதா பதிப்பகம் பாராட்டுக்குரியது.

(ஒரு சங்கீதம்போல மலையாள மூலம்: பெரும்படவம் ஸ்ரீதரன், தமிழில்: சிற்பி. கவிதா பதிப்பகம், மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை. விலை. ரூ60)

(03.06.2004 திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை)