Home

Sunday, 25 September 2022

விஷம் - சிறுகதை

வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட ரங்கசாமி ஐயாவின் உடல் குளிர்ப்பதனக் கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டு மாலைகள் அதன்மீது பரப்பப்பட, அதற்கு அருகிலேயே கண்கலங்க செல்வகுமார் நின்றிருந்தான். அஞ்சலி செலுத்தவந்த தெருக்காரர்கள் கூட்டம்கூட்டமாக மதிலோரமாக ஒதுங்கி நின்று தமக்குள் உரையாடிக்கொண்டிருந்தார்கள். பண்ருட்டியிலிருந்து வந்திருந்த அவருடைய மூத்த மகனும் சொந்தக்காரர்களும் செய்யவேண்டிய சடங்குகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

எனக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்வதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் வருகிறார் என்று நினைத்திருந்த சமயத்தில், அவர் என்னை நெருங்கி வந்து, “ரங்கசாமி ஐயாவை உங்களுக்கு எத்தனை வருஷமா தெரியும்?” என்று கேட்டார். ”ஆறேழு வருஷத்துப் பழக்கம் சார். அதோ எதிர்த்தாப்புல வாசல்ல வேப்பமரம் இருக்குதே, அதான் எங்க வீடுஎன்றேன். சில கணங்களுக்குப் பிறகு நானே மீண்டும், “சரியா சொல்லணும்ன்னா ரெண்டாயிரத்து ஆறுலேருந்து பழக்கம். அப்பதான் இங்க வீடு வாங்கிட்டு வந்தம்என்று திருத்திச் சொன்னேன்.

வாகனத்தைத் திருப்ப தடையாக மதிலோரமாக இருந்த பெரியதொரு கல்லைப் புரட்டித் தள்ளினார்கள். சட்டென்று வெளிப்பட்ட புழுக்களும் எறும்புகளும் நகர்ந்துசெல்லும் திசைதெரியாமல் அலைந்தன.  மதிலோரமாக ஊர்ந்து மறைவிடம் தேடிய ஒரு தேளைப் பார்த்த ஆட்கள் வேகமாக விலகினார்கள். உடனே ஒருவர் காலிலிருந்த செருப்பைக் கழற்றி அதை அடித்துக் கூழாக்கினார்.

பழக்கம்ன்னா எப்படிப்பட்ட பழக்கம்?” மேலும் கீழும் பார்த்துக்கொண்டே மீண்டும் கேட்டார் இன்ஸ்பெக்டர். உயர்ந்த உருவமும் அடர்த்தியான மீசையும் முதன்முறையாக எனக்கு அச்சத்தையூட்டின.

எதிர்வீடு. நல்ல மனுஷன். அவரும் ஸ்கூல் வாத்தியாரா இருந்து ரிட்டயர்ட் ஆனவரு. நானும் ஸ்கூல் வாத்தியாரா இருந்து ரிட்டயர்டானவன்தான். அப்பிடியே பேசிப்பேசி பழகிட்டோம். ஒன்னா வாக்கிங் போவோம். கடைத்தெரு, கடற்கரை, கோயில்னு எங்க போனாலும் சேர்ந்துதான் போவோம்.”

இதான் சொந்த ஊரா?” புருவத்தின் அருகில் ஆட்காட்டி விரலால் தடவியபடியே மீண்டும் கேட்டார்.

இங்க கெடயாது. வில்லியனூரு பக்கம். பையனுக்கும் மருமகளுக்கும் ஆபீஸ் பக்கம்ங்கறதுக்காக இங்க வீடு பாத்து வாங்கிட்டு வந்துட்டோம். நாங்க வரும்போதே அவரு இங்க இருந்தாரு.”

இந்தத் தோட்டம்?”

எல்லாம் அவர் வச்சி வளர்த்ததுதான்.”

தலையை அசைத்துக்கொண்டே காவல்துறை வாகனம் நின்றிருந்த திசையில் சில கணங்கள் பார்வையைப் படரவிட்ட பின்னர்யாரு கொலை செஞ்சிருப்பாங்கன்னு ஒங்களுக்கு ஏதாச்சிம் சந்தேகம் இருக்குதா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

ஒருகணம் நான் திகைப்பில் என்ன பேச என்று புரியாதபடி நின்றேன். என் குழப்பத்தையும் தவிப்பையும் இன்ஸ்பெக்டர் கவனித்திருக்கவேண்டும். ”எனக்கு தெரிஞ்சி அவருக்கு யாருமே எதிரி கிடையாது சார். தள்ளுவண்டியில காய்கறி விக்கறவன்கூட அவர பார்த்தா கையெடுத்து கும்புட்டு போவான். அவர் பேச்சும் சுபாவமும் அப்படி. எனக்கு ஒன்னுமே புரியலை சார்என்று நான் சொன்ன பதிலை அவர் காதுகொடுத்து கேட்டாரா இல்லையா என்பதை என்னால் சரியாகக் கணிக்கமுடியவில்லை. சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொண்டே இருந்தார். சில கணங்களுக்குப் பிறகு என்னைப் பார்த்து, “கையெடுத்து கும்புடறவன்லாம் கொல பண்ணமாட்டான்னு எப்பிடி சொல்றிங்க?” என்று சட்டென்று கேட்டார். “ஒரு நம்பிக்கைதான் சார்என்று பொதுவாகச் சொன்னதைக் கேட்டு அவர் புன்னகைத்தார்.

சாலையோர மரத்தடியில் படுத்திருந்த ஒரு நாய்மீது குட்டிநாயொன்று பாய்ந்து புரண்டது. மோதலா கொஞ்சுதலா என்பதே புரியவே இல்லை. கீச்சுகீச்சென்ற குட்டிநாயின் குரல் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. வேடிக்கையாகவும் இருந்தது. அந்தத் திசையில் பார்வையைப் பதித்திருந்த இன்ஸ்பெக்டர் சில கணங்களுக்குப் பிறகு, ”நீங்கதான் மொதல்ல பார்த்திங்களா?” என்று மெதுவாக மறுபடியும் ஆரம்பித்தார். காலையிலிருந்து இருபது முப்பது பேர்களுக்கும் மேல் இதே கேள்வியை கேட்டுவிட்டார்கள். எல்லோரிடமும் சொல்லிச்சொல்லி அந்த வார்த்தைகள் மனப்பாடமாகவே ஆகிவிட்டன.

காலையில் எப்பவும் ஒன்னா வாக்கிங் போறவங்க சார் நாங்க. இப்பிடியே லெவல் கிராஸிங் வழியா முதலியார்பேட்டை வரைக்கும் போய்ட்டு திரும்பிடுவோம். வழக்கமா தோட்டத்து வாசல்ல ரெடியா காத்துகிட்டிருப்பாரு அவர். இன்னைக்கு காணோம். இன்னமும் ரெடியாவலையோ என்னமோன்னு காலிங் பெல் அடிச்சேன். ஒரு பதிலையும் காணோம்.  தூக்கமா இருக்கலாம்ன்னு கெளம்பி போயிட்டேன். திரும்பி வந்து பார்த்த சமயத்துலயும் கதவு தெறக்கலை.  வேலை செய்ற அம்மா வாசல்லேயே நின்னுட்டிருந்தாங்க.  என்ன பாத்ததுமே ஐயா உங்க கூட வரலையான்னு கேட்டாங்க. ரெண்டு பேருமா போயி மறுபடியும் பெல் அடிச்சி பாத்தோம். ஒரு பதிலயும் காணோம். வேற வழி தெரியாம, அக்கம்பக்கத்துல நாலஞ்சி பேர கூட்டிகிட்டு வந்து கடப்பாறையால கதவ நெம்பி தெறந்தோம். பெட் ரூம்ல ஒரே ரத்தம். தல தனியா முண்டம் தனியா கெடந்தது. ஆட்ட அறுக்கறமாதிரி அறுத்து போட்டிருக்காங்க. எங்களுக்கு எதுவுமே புரியலை. உடனே ஸ்டேஷனுக்கு தகவல் சொன்னோம்.”

இன்ஸ்பெக்டர் பார்வை அலைபாய்ந்தபடியே இருந்தது. “சரி, அடக்கம்  நடக்கட்டும். நாளைக்கு காலையில வரேன். அப்ப விரிவா சொல்லுங்கஎன்று நிதானமாகச் சொல்லிவிட்டு தொப்பியை அணிந்துகொண்டு போய்விட்டார்.

பழைய நினைவுகள் எனக்குள் அலைமோதின. அவர் என்னைவிட பத்து வயது மூத்தவர். ஆனால் எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். வீட்டுக்கு முன்னால் ஒரு முன்னூறு சதுர அடியில் ஒரு தோட்டமும் பின்னால் ஒரு முன்னூறு சதுர அடியில் ஒரு தோட்டமும் இருந்தது. முன்பக்கத்துத் தோட்டத்தில் கீரையும் காய்கறிகளும் பயிரிட்டிருந்தார். பின்பக்கத்துத் தோட்டத்தில் பூந்தோட்டம் போட்டிருந்தார். சாம்பல் தூவுவது, சாணக்கரைசல் தெளிப்பது, களையெடுப்பது, பூவாளியில் தண்ணீரை எடுத்துவந்து தெளிப்பது என எதையாவது அவர் செய்துகொண்டே இருப்பார். வேலைக்கென்று யார் துணையையும் அவர் எதிர்பார்க்கமாட்டார். தன்னந்தனியாகவே செய்வார். பக்கத்தில் நான் இருந்தால், “இப்படி வாங்க, இத கொஞ்சம் புடிங்க” “தொட்டியிலிருந்து ஒரு வாளி தண்ணி எடுத்தாங்கஎன்று கேட்டுக்கொள்வார். கீரப்பாளையத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கும் நெல்லித்தோப்புக்கு அருகில் தென்றல் நகரில் ஒரு பார்வையற்றோர் இல்லத்துக்கும் வாரத்துக்கு ஒருமுறை கீரைக்கட்டுகளும் காய்கறிப்பைகளும் அங்கிருந்துதான் போகும். தெருக்கோடியில் இருந்த அம்மன் கோவிலிலிருந்தும் பெருமாள் கோவிலிலிருந்தும் தேவைப்படும் நேரங்களில் ஆட்கள் வந்து பூக்களைப் பறித்துக்கொண்டு செல்வார்கள். அவர்கள் வராத சமயங்களில் செல்வகுமார் போய் கொடுத்துவிட்டு வருவான். வேலைகிடைத்து அவன் சேலத்துக்குப் போனபிறகு அவரே எடுத்துச் சென்று கொடுத்தார்.

பண்ருட்டியில் இருக்கும் அவர் மகன் தனியாகவோ அல்லது குடும்பத்தோடோ எப்போதாவது விசேஷ தினங்களில் வந்து பார்த்துவிட்டுப் போவதுண்டு. ஒரு முறை புறப்படும் சமயத்தில்எதுக்குப்பா இங்க தனியா கெடந்து கஷ்டப்படணும்? அங்க வந்து கூட்டத்தோட ஒன்னா இருக்கக்கூடாதா?” என்று கேட்டார் அவர் மகன்.

வரேன், வரேன். என்னைக்காவது ஒருநாள் வந்துதான ஆவணும்

இருந்தாலும்….”

என்னடா இருந்தாலும் கிருந்தாலும்னு இழுக்கற? பொன்னுபோட்டா பொன்னு விளையற மண்ணுடா நம்ம மண்ணு. ரெண்டு காணி. அத சம்பாதிக்க எனக்கு முப்பது நாப்பது வருஷம் ஆச்சி தெரியுமா ஒனக்கு? அம்பது நூறுன்னு கொஞ்சம்கொஞ்சமா சேத்துவச்சி வாங்கனன். நீ வச்சி காப்பாத்துவன்னு நம்பிதான் ஒன்கிட்ட குடுத்துட்டு இங்க வந்தேன்.  ஒன்னால ஒரு நாலு வருஷம்கூட பயிர்வச்சி விவசாயம் பண்ணமுடியலை. வித்துட்டு ஒக்காந்திருக்கே. அங்க வந்து ஒன்கூட மோட்டுவளய பாத்துகினு நானும் ஒக்காரணுமா?” ஒருமுறை அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு நான் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டேன். அடுத்து சில   கணங்களிலேயே தணிந்து, “சரி போ, கெளம்பற நேரத்துல எதுக்கு வாய கெளறற? செல்வகுமார் படிப்பு முடிஞ்சி வேலையில அமரட்டும், எல்லாத்தயும் அப்பறம் பாத்துக்கலாம்என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அன்று மாலை நடையின்போது அவர் எதுவும் பேசவில்லை. முதலியார் பேட்டை பாலத்தில் உட்கார்ந்தபடி போகிற வருகிற வண்டிகளை வேடிக்கை பார்த்தார். எதிர்பாராத ஒரு கணத்தில் என் பக்கம் திரும்பிஊருல உங்க குடும்பத்துல விவசாயம் உண்டா?” என்று கேட்டார். “அதெல்லாம் அப்பா காலத்தோட போச்சிங்க ஐயா. வெத்தல தோட்டம் குமாரவேல்ன்னு அவருக்கு பட்டப்பேரு கூட உண்டு. எனக்கு மூணு அக்கா. ஒரு தங்கச்சி. தோட்டத்துல சம்பாரிச்ச பணத்துலதான் அவுங்கள கரயேத்தனாரு. என்னயும் படிக்கவச்சி வாத்தியாராக்கினாரு”. காற்றோடு பறந்துவந்த புழுதிக்கு பயந்து கைக்குட்டையால் முக்கை கொஞ்ச நேரம் மூடினேன்.

வாத்தியாரானதும் வெத்தலதோட்டம் வெறுத்துடிச்சா?” 

வெத்தல தோட்டத்து வேல லேசுபட்டதில்ல ஐயா. ஆள உயிரோட பலி வாங்கிடும். ஈரம் இருந்துகிட்டே இருக்கணும். ராவும் பகலுமா வெத்தல பாத்திங்களுக்கு தண்ணி கட்டறதே அவருக்கு பெரிய வேலையா இருக்கும். ஒருநாள்கூட அவர் நிம்மதியா சாப்ப்டதயோ தூங்கனதயோ நான் பாத்ததே இல்லை. காலையில எழுந்ததுமே வேகவேகமா எலய பறிச்சி கழுவி கவுளிகவுளியா கட்டி அடுக்கிவைப்பார். ரேடியோவுல ழேகால் மணி டில்லி நியூஸ் படிக்கற சமயத்துல ஒரு சாயபு சைக்கிள்ள வந்து ஏத்திம் போவாரு. அதுக்கப்பறம்தான் அப்பா உஸ்னு மூச்சு வாங்குவாரு…..”

உழைப்பாளின்னா அப்படித்தான் இருக்கணும்..”

நெஞ்சுவலின்னு திடீர்னு ஒருநாள் படுத்துட்டாரு. ஆஸ்பத்திரில அத மாத்தணும் இத மாத்தணும்னு என்னென்னமோ சொன்னாங்க. நான் வேலைக்கு சேந்த புதுசு. கையில ஒரு தம்பிடி கெடயாது.  வேற விதியில்லாம வெத்தல தோட்டத்த வித்துதான் வைத்தியம் பார்த்தோம். பொழச்சி வந்தவரு ஒரு நாலு மாசம்கூட உயிரோட இல்லை.”

ஐயா என் தோளைப் பற்றி அழுத்தினார். “சரி வாங்க, போவலாம்என்றபடி பாலத்திலிருந்து இறங்கினார். திரும்பி வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினோம். வழியில் ஒரு கடைவாசலில் நின்று தேநீர் அருந்தினோம். மீண்டும் நடக்க  ஆரம்பித்தபோது அவர் தன் கதையைச் சொன்னார்.

அவருக்குச் சொந்தமாக நிலம் கிடையாது. அவர் அப்பா ஊர் மணியக்காரர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்தவர். வெறும் கால்காணி நிலம். அடுத்தவருக்குச் சொந்தமான நிலம் என்று நினைக்காமல் வியர்வை சிந்தி அதில் பாடுபட்டார். மகனைப் படிக்கவைத்தார். படிக்கிற நேரம் தவிர எஞ்சிய நேரத்தில் அப்பாவுக்கு உதவியாக இருந்தார் அவர். பழகிப்பழகி விவசாயம் அவர் ரத்தத்தோடு கலந்துவிட்டது. அப்பா மறைந்து,  ஆசிரியராக வேலைக்குப் போனபிறகும், அந்த மண்ணை அவர் விடவில்லை. மாதச்சம்பளத்தில் சிறுகச்சிறுகச் சேர்த்து, அந்த மணியக்காரரிடம் கொடுத்து, குத்தகை நிலத்தை சொந்த நிலமாக்கிக்கொண்டார். பள்ளிக்கூடம் விட்டால்  நிலம். நிலத்தைவிட்டால் பள்ளிக்கூடம். அவர் மனம் வேறு எதையும் நாடியதே இல்லை. ஒருமுறை நெல். அடுத்த முறை மிளகாய், தக்காளி. உழைக்க அஞ்சாதவராக இருந்தார்.  கவுர்மெண்டு சம்பளம் வாங்கறவன்லாம் இப்பிடி மமிட்டி களவெட்டினு எடுத்துகினு வந்துட்டதாலதான்டா உலகத்துல மழையே வரமாட்டுது” “ஒரு சம்பளம் போதாதுன்னு, இது வேறயா?” “வாத்தியானுக்கு இருக்கிற பேராசய பார்த்தியா?” காதுபட பேசிய எந்தப் பேச்சையும் அவர் துரும்பளவுகூட மதிக்கவில்லை. விவசாயத்திலேயே மூழ்கியிருந்தார். கொஞ்சம்கொஞ்சமாய்ப் பணம் சேர்த்து, கால்காணியை அரைக்காணியாக்கினார். பிறகு அரைக்காணி முக்கால் காணியானது. அடுத்து ஒரு காணியானது. அதற்குள் இருபது வருஷங்கள் ஓடிவிட்டன.

தன்னைப்போலவே தன் பிள்ளைகளும் வளரவேண்டும் என்னும் ஆசை அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது. மூத்த மகன்மட்டுமே அவரைப்போல இருந்தான். சின்ன மகன் அதற்கு நேர்மாறாக இருந்தான். அவனுக்குப் படிப்பும் வரவில்லை. விவசாயமும் தெரியவில்லை. கூச்சமே இல்லாமல் வீட்டில் இருக்கும் நகைகளையும் பொருள்களையும் திருடினான். வாரக்கணக்கில் வீட்டுக்கே திரும்பாமல் ஊர்சுற்றிச் செலவு செய்தான். பணம் தீர்ந்து போனதும் வீட்டுக்குத் திரும்பி, பணம் கேட்டு தொல்லை கொடுத்தான். ஆரம்ப காலத்தில் அவனை அவர் பக்கம் செலுத்தாமல் தனியாகவே சமாளித்தாள் அவர் மனைவி.  அந்தப் பலவீனத்தை சுலபமாகப் புரிந்துகொண்டது அவன் கள்ளமனம். பிறகு, அந்த முயற்சிகளையே அவன் பணம் கறக்கும் வழியாக மாற்றிக்கொண்டான். சாப்பாட்டுக்கு அவர் வரும் வேளை அல்லது வயலுக்குக் கிளம்பிச் செல்லும் வேளையில் அவர் வாயைக் கிளறி வம்புக்கு இழுக்கத் தொடங்கினான்.  அவர் முதலில் மிகவும் பொறுமை காத்தார். போதும்போதும் என்கிற அளவுக்குப் புத்தி சொன்னார்.  திட்டினார். அடித்தார். அப்போதெல்லாம் அசம்பாவிதமாக எதுவும் நடந்துவிடக்கூடாதே என இடையில் புகும் அவர் மனைவி பணம் கொடுத்து அவனை உடனடியாக வெளியேற்றினாள். ஒருநாள் மாரடைப்பில் அவள் உயிர்விட்டபிறகு, அவனுடன் தனியாக மோத வேண்டியிருந்தது.

மூத்தவனுக்குத் திருமணம் செய்துவைத்தபோது, தனக்கும் திருமணம் செய்துவைக்கும்படி தகராறு செய்தான். “அவன்தான் ஒனக்குப் பொறந்தானா? நான் பொறக்கலையா?” என்று வம்புக்கிழுத்தான். குடித்துவிட்டு ரகளை செய்தான். “நீ இருக்கிற லட்சணத்துக்கு, ஒரு பிச்சக்காரி கூட ஒன்ன கட்டிக்கிட மாட்டா, போடாஎன்று ஒருநாள் ஆத்திரமாகப் பேசிவிட்டு போனார். அடுத்த மாதமே எங்கெங்கோ சுற்றி அலைந்து, அவனாகவே ஒரு பெண்ணைத் தேடி கோயிலில் வைத்து தாலி கட்டி அழைத்துவந்தான். ஊரே அவன் பின்னால் வந்து நின்று வேடிக்கை பார்த்தது. அவமானத்தில் அவர் குறுகிச் சிறுத்துப் போனார். ”பாருயா பாரு, நல்லா பாரு. இவ ஒன்னும் பிச்சக்காரி இல்ல, ஒன்னாட்டம் ஒரு கவுண்டனுக்குப் பொறந்தவஎன்று அவளை இழுத்துத் தள்ளினான். மாலையும் கழுத்துமாக இருந்த அவள் தடுமாறி அவர் காலில் விழுந்தாள். அவசரமாக அவளை தூக்கி நிறுத்திவிட்டு, வேகவேகமாக நிலத்துக்குப் போய்விட்டார். அன்றுமுதல் நிலத்தை ஒட்டியிருந்த மோட்டார் கொட்டகை அவர் வாசமாயிற்று. பகலில் பள்ளிக்கூடம். இரவில் கொட்டகை. எப்படியோ காலம் ஓடியது. ஓய்வு பெற்ற பிறகு அதுவே அவர் இருப்பிடமானது. எப்போதாவது மனம் விரும்பும்போது வீட்டின் பக்கம் வந்து கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போவார்.

சின்னவனின் தொல்லைகள் கட்டுக்கடங்காமல் வளர்ந்தன. பார்க்கிற இடங்களிலெல்லாம் அவரை நிற்கவைத்து பணம் கேட்டு மிரட்டினான். பணம் கொடுக்க மறுத்தபோது சொத்தைப் பிரித்துத் தரும்படி கேட்டு சண்டை போட்டான். அவர் வாயைக் கிளறும்வகையில் அசிங்கமான வார்த்தைகளால் அவரை அவமானப்படுத்தினான். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவனோடு நிகழ்ந்த மோதல்களால் அவர் மனம் குன்றியது.  பேச்சு எல்லை மீறிய சமயங்களில், ஊர்க்காரர்கள் தலையிட்டு அவனைப் பிரித்து அனுப்பிவைத்தார்கள். 

அந்த ஆண்டு அவர் தோட்டத்தில் மிளகாய் போட்டிருந்தார். நல்ல விளைச்சல். சந்தையில் இறக்கிவிட்டு பேருந்தில் ஊர் எல்லையில் இறங்கி தோட்டத்துப் பக்கம் நடக்கத் தொடங்கிய சமயத்தில் அரசமரத்துக்குப் பின்னால் இருந்த சாராயக்கடையிலிருந்து திடீரென வெளிப்பட்ட சின்னவன் வழிமறித்தான். “ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாவணும் இன்னிக்கு. எனக்குண்டான பாகத்த எப்ப பிரிச்சிக் கொடுக்கப் போற, சொல்லுஎன்று போதையில் சத்தம் போட்டான். உடை கலைந்து, காடுபோல முடிவளர்ந்த கோலத்தில் அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. முகத்தைச் சுளித்தபடி தலையைத் திருப்பிக்கொண்டார்.

இனிமேல ஒன் பின்னாலயே அலைய என்னால முடியாது. எனக்கும் குடும்பம் இருக்குது. ஒரு டிராக்டர் வாங்கி ஓட்ட போறேன். என் பாகத்த எனக்கு பிரிச்சி குடுத்தா, அத வித்து நான் பொழச்சிக்குவன்

அவனை முறைத்துவிட்டு அவர் பதில் சொல்லாமல் விலகி நடக்க முனைந்தார்.

இந்த ஊம வேஷம்லாம் வேணாம். ஒழுங்கா ஒரு பதில சொல்லிட்டு போ”. அவன் சத்தத்தைக் கேட்டு சாராயக்கடையிலிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

கேக்கற கேள்விக்கு பதில் சொல்லாம நடக்கறியே,. நீயெல்லாம் ஒரு வாத்தியா? மானரோஷம் உள்ள ஆளா இருந்தா ஒழுங்கா எனக்கு ஒரு பதில சொல்லிட்டு போ”. காலை அகட்டி வைக்கும்போது அவன் இடுப்பிலிருந்து வேட்டி அவிழ்ந்து நழுவியது. அவன் விரல்கள் அதைப் பற்றி இழுத்துக் கட்டின.

எப்படித் திரும்பினாலும், அந்தப் பக்கம் வந்து நின்று சத்தம் போட்டான். சட்டென்றுஇந்த நாடகம்லாம் என்கிட்ட செல்லாது. ஒழுங்கா ஒரு அப்பனுக்கு நீ பொறந்தவனா இருந்தா, மொதல்ல என் கேள்விக்கு பதில சொல்லுஎன்று எகிறினான். அவர் திகைத்து நின்று நம்பமுடியாதபடி அவனைப் பார்த்தார். “சொல்லுன்னா, என்ன மொறைக்கற?” என்றபோது அவன் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது.  ஒருகணம் அவர் உறைந்துபோனார். அவனை அடித்து மிதிக்க அவர் கை பரபரத்தது.  மறுகணமே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு திசைமாறி நடக்க முயற்சி செய்தார். “நீயா குடுத்தா ஒனக்கும் மரியாத, எனக்கும் மரியாத. இல்லைன்னா கோர்ட் கச்சேரினு நாயாட்டம் அலயவச்சிருவன் பார்த்துக்கோஎன்றபடி ஆட்காட்டி விரலைக் காட்டிச் சொன்னான். அவன் பேச்சைக் கேட்டு அவர் மீண்டும் நின்று அவனைப் பார்த்தார். ”என்ன பார்வ? என்ன பார்த்தா ஒனக்கு பைத்தியக்காரனாட்டம் தோணுதா?” என்றபடி ஒரே கணத்தில் அருகில் கிடந்த ஒரு பாறையைக் குனிந்து தூக்கி  அவர் தலையைநோக்கி வீசினான். குறி தவறி அந்தப் பாறை அவர் தோளைத் தாக்கியது. அம்மா என்று அலறியபடி அவர் கீழே விழுந்தார்.

அருகில் நின்றிருந்தவர்கள் அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்கள். மூத்தவனுக்குச் செய்தி போனதும் ஓடிவந்தான். இரண்டு நாட்கள் சுய உணர்வில்லாமலேயே கிடந்தார். தோள்பட்டை எலும்பு இறங்கி முரிந்துவிட்டது. ஆறேழு இடங்களில் இணைப்புத் தண்டுகளைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்தார்கள். ஊர்க்காரர்களே சின்னவனைப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்கள். கொலைசெய்ய முயற்சி செய்த குற்றப்பிரிவில் வழக்கு நடந்து அவன் தண்டனை பெற்றான். தண்டனைக் காலத்தில் மீண்டும்மீண்டும் மூன்று நான்கு முறை தப்பிக்க முயற்சி செய்துகொண்டே இருந்ததால் அவன் தண்டனைக்காலம் நீண்டுகொண்டே போனது. மதிலேறிக் குதிக்க எடுத்த அவன் கடைசி முயற்சி தோல்வியில் முடிந்தது. விழுந்த இடத்தில் கிடந்த கூர்மையான பாறையில் அவன் தலைமோத, அகால மரணமடைந்தான். அவர் உடல்நிலையும் அப்போதுதான் தேற ஆரம்பித்திருந்தது.

தோள் இயக்கம் கிட்டத்தட்ட சரியானபிறகுதான் அவரால் வீட்டுக்குத் திரும்பமுடிந்தது. வீட்டுக்குள் கூடத்தில் ஒரு தொட்டிலில் ஒரு குழந்தையைப் பார்த்தார். கேள்விக்குறியோடு பெரியவனைப் பார்த்தார் அவர்.

சின்னவன் புள்ளதான். அவன் உள்ள போன ரெண்டாவது மாசம்  பொறந்திச்சி. ஆஸ்பத்திரி பெட்லயே புள்ளய போட்டுட்டு அந்த பொண்ணு எங்கயோ போயிடுச்சி. ஆஸ்பத்திரியில போன்ல கூப்ட்டு சொன்னதுக்கப்பறமாதான் எங்களுக்கே தெரியும். அப்பறமா நாங்க போய் தூக்கியாந்து வச்சிருக்கம்”.

தொட்டிலில் கிடந்த அந்தக் குழந்தையைப் பார்க்கப்பார்க்க அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. நிமிர்ந்து சுவரில் படமாகத் தொங்கிக்கொண்டிருந்த மனைவியின் முகத்தைப் பார்த்தபோது அவர் கண்ணீர் மேலும் பெருகியது. மூத்தவன் அவர் தோளைப் பற்றி கட்டிலில் உட்காரவைத்தான். அவர் குனிந்து அழுதுகொண்டே இருந்தார்.

என்னப்பா செய்யலாம்?” என்று கேட்டான் மூத்தவன்.

பன்னிப்பய, அவன்தான் உருப்படாம போயிட்டான். இவனயாச்சிம் ஒழுங்கா வளர்த்து ஆளாக்குவம். ஒன் புள்ளைங்களோட புள்ளயா அவனும் பொழச்சிக்கட்டுமேஎன்றார். சில கணங்களுக்குப் பிறகு, “அதான் அந்த ஆண்டவன் கட்டளயின்னா நம்மால மாத்தவா முடியும்?” என்று பெருமூச்சு வாங்கினார் அவர்.

அவர் அணுகுமுறையில் பெரிய மாற்றம் உருவானது. கழனியில் கழித்ததுபோக எஞ்சிய பொழுதையெல்லாம் வீட்டில் குழந்தைகளோடு  செலவழித்தார். குறிப்பாக, கைக்குழந்தையை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார். அது சிரித்தால் அவரும் சிரித்தார். அது அழுதால் மனம் துவண்டார். மூத்தவனின் மனைவியோ அல்லது வீட்டு வேலை செய்த பெண்ணோ ஓடோடி வந்து அதன் அழுகையை அவ்வப்போது அமர்த்தினார்கள். அமைதியடைந்து உடல்தளர்ந்து அது பொக்கைவாய் திறந்து சிரிக்கும்போது அவரும் முகம்மலர்ந்தார். அவர்தான் குழந்தைக்கு செல்வகுமார் என்று பெயர்சூட்டினார்.

சீரான வேகத்தில் கடந்துபோன பதினேழு பதினெட்டு ஆண்டுகளில் அவர் பாடுபட்டு பயிர்வளர்த்த தோட்டம் ஒரு காணியிலிருந்து இரண்டு காணியாக விரிவு பெற்றது. மூத்தவனின் பிள்ளைகள் வளர்ந்து பட்டப்படிப்புகளுக்காக கோவைக்குப் போனார்கள். செல்வகுமாருக்கு பாண்டிச்சேரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. கலந்தாய்வுக்கு அவனோடு அவரும் போனார். அன்று முதன்முறையாக அவர் கடலைப் பார்த்தார். “அம்மாடி, எத்தன கோடி வருஷமா நமக்கு காவல் காக்குதோ இது? பார்த்துகிட்டே இருந்தா நெஞ்சே வெடிச்சிடும் போல. இதுக்கு முன்னால மனுசன்லாம் வெறும் தூசுடா குமாரு…” என்றபோது அவர் கண்கள் கலங்கியிருந்தன.

பேருந்தில் ஊர் திரும்பும்போதுதான் அவர் மனம் முடிவு செய்தது. செல்வகுமாரை விடுதியில் சேர்ப்பதைவிட, பாண்டிச்சேரியிலேயே ஒரு வீட்டை வாங்கி ஒன்றாக வசிக்கும் திட்டத்தை வகுத்துவிட்டார். மூத்தவனிடம் சொன்னபோதுவயசான காலத்துல தனியா எப்படிப்பா சமாளிப்பிங்க?” என்று தயங்கினான். “எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ நெலத்த ஒழுங்கா கவனிச்சிக்க, அது போதும்என்றார். “நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். அப்புறம் ஒங்க இஷ்டம்என்ற முணுமுணுப்போடு நிறுத்திக்கொண்டான் மூத்தவன். பிறகு, தெரிந்த ஒரு ஆசிரியர் மூலமாக நாணயமான ஒரு தரகரின் முயற்சியால் பாண்டிச்சேரியில் ஒரு வீட்டை வாங்க ஏற்பாடுகள் செய்தான். ஆறேழு வீடுகள் பார்த்தார்கள். முன்னும் பின்னும் அதிக வெற்றிடத்தோடு அழகாகவும் கச்சிதமாகவும் கட்டப்பட்டிருந்தது அந்த வீட்டைப் பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துவிட்டது. “ரொம்ப நல்லா இருக்குது தாத்தாஎன்றான் செல்வகுமார். ஒரு நல்ல நாளில் பதிவு செய்துகொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு பிரான்ஸ்க்குப் போய்விட்டார் வீட்டுக்குச் சொந்தக்காரர். அடுத்த வாரத்திலேயே நாள் குறித்து புதுவீட்டில் பால் காய்ச்சினார்கள்.

தெருவைக் கடந்துபோன ஒரு மணல் லாரியின் இடைவிடாத சத்தம் என் நினைவுகளைக் கலைத்தது. ஐயா வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டியின்மீது தன்னிச்சையாக என் பார்வை திரும்பியது. சுறுசுறுப்புக்கும் வயதுக்கும் தொடர்பே இல்லை என்பதை நிறுவுவதுபோல நடமாடிக்கொண்டிருந்தவர் அவர். படுத்த கோலத்தில் அவரைப் பார்க்கவே மனம் பொறுக்கவில்லை.

மூன்றுமணிக்கு மேல் மற்ற பேரப்பிள்ளைகள் கோவையிலிருந்து வாடகைவண்டியில் வந்து இறங்கினார்கள். அவர்களுடைய கைகளைப் பற்றிக்கொண்டு செல்வகுமார் கதறினான். ”தாத்தாவ பாருங்கண்ணா, தாத்தாவ பாருங்கண்ணாஎன்று அழுதான்.

சடங்குகள் வேகவேகமாக நடந்தன. அரைமணி நேரத்தில் அமரர் ஊர்தி வந்து சேர்ந்தது. கண்ணாடிப்பெட்டியிலிருந்து அவர் உடலை எடுத்து தூக்குப்பலகையில் கிடத்தி, ஊர்திக்குள் எடுத்துச் சென்றார்கள். முக்கியமான சிலர்மட்டும் அந்த வாகனத்திலேயே ஏறிக்கொண்டார்கள். மூத்தவன் என்னையும் ஊர்திக்குள் ஏறிக்கொள்ளச் சொன்னான். வண்டி கிளம்பியது.  தூக்குப்பலகைக்கு அருகில் ரங்கசாமி ஐயாவின் காலடியில் உட்கார்ந்து ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்தபடி அழுதுகொண்டே வந்தான் செல்வகுமார். தனித்தனி வண்டிகளிலும் இரண்டு சக்கர வாகனங்களிலும் மற்றவர்கள் எங்கள் வண்டியைப் பின்தொடர்ந்து வந்தார்கள்.

மின்மயானத்தில் எங்களுக்கு முன்பாக வந்து சேர்ந்த இரண்டு குழுக்கள் காத்திருந்தார்கள். அவர்களுடைய தகனவேலை முடிய ஒருமணி நேரமானது. அதற்குப் பிறகுதான் எங்களை அழைத்தார்கள். ஊர்தியின் தூக்குப்பலகையிலிருந்து வேறொரு தூக்குப்பலகையில் உடலை மாற்றி உள்ளே எடுத்துச் சென்றார்கள். எல்லோருக்கும் கண்கள் கலங்கின. செல்வகுமார் தேம்பித்தேம்பி அழுதான். உலைக்குள் உடல் தள்ளப்பட்டு கதவு மூடப்படுவதைப் பார்த்தபடி சில கணங்கள் உறைந்து நின்றோம்.

காத்திருந்தவர்களுக்கு பணம் பிரித்துக்கொடுத்துவிட்டு வெளியே வந்தான் மூத்தவன். மீண்டும் வண்டியில் ஏறி எல்லோரும் வீட்டுக்குத் திரும்பினோம்.

குளித்துமுடித்து உடைமாற்றிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். உடல்வலியின் காரணமாக களைப்பு அதிகமாக இருந்தது. பேத்தி தயாரித்துவந்து கொடுத்த சர்க்கரை இல்லாத தேநீரைக் குடித்தபிறகுதான் ஓரளவு அந்தக் களைப்பு நீங்கியது. சிறிது நேரத்தில் உட்காரவும் பிடிக்காமல் போனது. எழுந்து நடக்கலாமா என்று தோன்றியது. ”சும்மா கொஞ்ச தூரம் வாக்கிங் போயிட்டு வந்துடறேன்மா. கதவ சாத்திக்கோஎன்று உள்ளே பார்த்து விஷயத்தைச் சொல்லிவிட்டு, தெருவில் இறங்கினேன். தன்னிச்சையாக ஐயாவின் வீட்டைநோக்கி என் பார்வை திரும்பியது. அந்த வீட்டில் விளக்குகள் எரிந்தன. பேச்சுச் சத்தம் கேட்டது.

பெருமூச்சு வாங்கியபடி வழக்கமான திசையில் நடக்கத் தொடங்கினேன். இன்னும் என் பக்கத்தில் பேசியபடியே அவர் நடப்பதுபோல இருந்தது. சட்டென்று நடப்பதை நிறுத்திவிட்டு ஆட்டோ பிடித்து கடற்கரைக்குப் போகச் சொன்னேன். புடவைச்சுருள்போல மடிந்துமடிந்து வந்த அலைகளை இமைக்காமல் பார்த்தபடி வெகுநேரம் நின்றேன். வெள்ளிக்கொலுசுபோன்ற நுரை முயல்போல துள்ளித்துள்ளி ஓடிவந்து மணலில் மோதி அடங்கிக் கரைந்தது. ரங்கசாமி ஐயாவின் நினைவுகள் கட்டுக்கடங்காமல் மீண்டும் அடிமனத்தில் புரளத்தொடங்கின.

வெகுநேரத்துக்குப் பிறகுதான் அந்தப் பாரம் சற்றே குறைந்தது. வண்டி பிடித்து வீட்டுக்குத் திரும்பினேன். யாரும் எதுவும் கேட்கவில்லை. எனக்கும் யாரோடும் பேச விருப்பமில்லை. சிற்றுண்டியை முடித்துக்கொண்டு படுக்கை அறைக்குள் போய்விட்டேன். சிறிது நேரம் படித்தேன். பிறகு சிறிது நேரம் பாட்டு கேட்டேன். பிறகு தொலைக்காட்சி பார்த்தேன். ஏதோ ஒரு விளையாட்டுச் சேனலில் ஒரு கால்பந்தாட்டத்தை ஒளிபரப்பினார்கள். அதில் ஓரளவு மனம் பதிய,  பார்க்கத் தொடங்கினேன். ஒரு கணத்தில் மனித வாழ்க்கையின் பொருளை, அந்தப் பந்தைவைத்தே விளக்கிவிடலாம் என்று தோன்றியது. எப்போது தூங்கினேன் என்று தெரியாமலேயே தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்திருக்கத் தாமதமாகிவிட்டது. ஆனாலும் நடையை நிறுத்த மனமில்லை. உடைமாற்றிக்கொண்டு கிளம்பினேன். ஐயா வீட்டுத் தோட்டத்தைப் பார்த்ததுமே ஐயாவின் நினைவு வந்தது. வழக்கமான பாதையை விட்டு வேறு பாதையில் சென்று திரும்பினேன்.

வீட்டை நெருங்கும் சமயத்தில் ஐயாவின் வீட்டிலிருந்து இன்ஸ்பெக்டர் வெளியே வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிரித்தபடியேஎன்ன சார், வாக்கிங்கா?” என்று கேட்டார். “ஆமாம்என்று தலையசைத்தபடியேவாங்க, உள்ள வந்து உக்காருங்கஎன்றபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன்.

ஐயாவைப் பத்தி தெரிஞ்சத சொல்லுங்கன்னா, ஒரேவடியா அவரு கடவுளு, அவரு நல்லவரு, பக்தி உள்ளவரு, வல்லவருன்னு ஆளாளுக்கு வசனம் பேசறாங்க. நமக்கு புடி கெடைக்கறமாதிரி ஒரு தகவலும் தேறமாட்டுது.” அவரது குரலில் சலிப்பு தெரிந்தது. எங்கள் குரலைக் கேட்டு எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்ற பேத்தி இரண்டு பேருக்கும் தம்ளர்களில் சூடான கேழ்வரகுக்கூழ் கொண்டுவந்தாள். “இப்பதான் அங்க டீ குடிச்சேன்என்று மறுத்தார் இன்ஸ்பெக்டர். “இது டீ இல்லை சார். கேழ்வரகுக்கூழ்என்று சொல்லி எடுத்துக் கொடுத்தேன்.

சூட்டுக்கு ஊதியபடி நிதானமாக இரண்டு மிடறுகள் கூழை அருந்தினார்.   பிறகு என்னிடம்உங்களுக்குத் தெரிஞ்சதயெல்லாம் சொல்லமுடியுமா? எனக்குப் பயன்படறமாதிரி ஏதாச்சிம் தகவல் கெடைக்குதான்னு பார்க்கலாம்என்று கேட்டார்.

அவரைச் சந்தித்த முதல் நாளிலிருந்து மரணம்வரைக்கும் நினைவில் பதிந்திருக்கும் சம்பவங்களையெல்லாம் சொன்னேன். ரொம்பவும் தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் சொல்லவேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. சில விஷயங்களை நானே தாண்டிச் சென்றேன். சில விஷயங்களை சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக்கொண்டேன். ஒருமணி நேரம் கடந்திருக்கும். தலையை அசைத்துக்கொண்டே அவர் எழுந்துவிட்டார்.

வண்டியில் ஏறி அமரும்போதுஅந்த செல்வகுமார் எப்பிடி? நல்லா படிக்கற பையனா?” என்று கேட்டார்.

தங்கமான பையன் சார். ஐயா வளர்ப்பு அப்பிடி. ஜிப்மர் ஸ்டூடன்ட். எம்.பி.பி.எஸ், எம்.எஸ்.லாம் இங்கதான் முடிச்சான். நல்ல ரேங்க். ஐயா இங்க வந்ததே அவனுக்காகத்தான. ஆறு மாசத்துக்கு மின்னாலதான் படிப்பு முடிச்சி சேலம் கவுர்மெண்ட் ஆஸ்பத்திரியில வேலைக்கு சேந்தான். ஞாயித்துக்கெழமையில வந்து பாத்துட்டு போவான்.  புள்ளயால கெடைக்காத பெருமை பேரனால கெடைச்சிட்டுதுன்னு அடிக்கடி மீசையை தடவிகினே சொல்வாரு ஐயாஎன்றேன்.

 காதல்கீதல்னு ஏதாச்சிம் உண்டா அவனுக்கு?”

தெரியலை சார்.”

சொந்த ஊருக்கு திரும்பி போறமாதிரி என்னைக்காவது பேசியிருக்காரா?”

அப்படிலாம் பேச்சே வந்ததில்ல. அவருக்கு இந்த ஊரு ரொம்ப புடிச்சிருந்தது.”

புதுசா வீடு ஏதாச்சிம் வாங்கறத பத்தி பேசனதுண்டா?”

இல்லையே சார்

 யாருக்காச்சிம் கடன் குடுத்திருக்கறாரா, இல்ல கடன் வாங்கியிருக்காரா?”

இல்லை சார்

பிறகு இன்ஸ்பெக்டர் கிளம்பிச் சென்றார். ஐயாவின் வீடு கொஞ்சம்கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. எனக்குத்தான் மனம் ஒருநிலையில் நிற்காமல் ஆட்டுக்குட்டிபோல அலைந்தது. ஆயிரம் முறை அவர் முகம் மனத்துக்குள் மீண்டும்மீண்டும் வந்துபோனது. அதை மறப்பது என் கட்டுப்பாட்டை மீறிய விஷயமாக இருந்தது. தூக்கம் வராமல் புரண்டுகொண்டே இருந்தேன். ஒருநாள் காலையில்கோயில்கொளம்னு அப்படியே கன்னியாகுமரி வரைக்கும் போய்ட்டு வரேன். அப்பதான் மனசுக்கு ஒரு தைரியம் வரும்என்று மகனிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

முதலில் மதுரை. அப்புறம் பழனி. தென்காசி. குற்றாலம். திருநெல்வேலி. சுசீந்திரம். கன்னியாகுமரிக்குப் போய்ச் சேர்ந்தபோது ஒரு வாரம் கடந்துபோயிருந்தது. பயண அனுபவங்களால் மனம் அமைதிநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது.

முப்புறங்களிலும் கடல் சூழ்ந்த அந்த இடம் மிகுந்த மன எழுச்சியை அளித்தது. ஒருகணத்தில் பாண்டிச்சேரி கடலின் சித்திரம் மனத்தில் விரிந்தது.  ரங்கசாமி ஐயாவின் நினைவு தானாகவே மிதந்துவந்தது. அருகில் அவர் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டேன்.

சொல்லிவைத்ததுபோல என் கைப்பேசி அப்போது ஒலித்தது. என் பேத்தியின் அழைப்பு. அந்த எண்ணைப் பார்த்ததுமே அவள் சிரித்த முகத்தை நினைத்துக்கொண்டேன். “சொல்லுடாஎன்று பேச்சைத் தொடங்கினேன். ஆனால் பேசியது அவள் அல்ல. மருமகள்.

ஐயாவ கொலை செஞ்சது வெளி ஆள் இல்லயாம்பா. நம்ம செல்வகுமாராம். இப்பதான் வேன்ல போலீஸ் வந்து அழச்சிகிட்டு போவுது

கன்னத்தில் அறைபட்டதுபோல இருந்தது. “என்னம்மா சொல்ற?” என்று குழப்பத்தோடு கேட்டேன். “உண்மைதான்பா. என் கண்ணால பார்த்துட்டு வந்துதான் ஒங்ககிட்ட சொல்றேன். என்னாலயே அதிர்ச்சிய தாங்கமுடியலை. நீங்க தைரியமா இருங்கஎன்றாள். அப்புறம் அவள் சொன்னதையெல்லாம் அரைகுறையாகத்தான் மனம் வாங்கியது. கைப்பேசியை பைக்குள் போட்டபோது உடல் நடுங்கியது. பக்கத்தில் நின்றிருந்த தூணையொட்டிச் சாய்ந்துகொண்டேன். அருகில் வித்தை முடித்த பாம்பாட்டியொருவன் உட்கார்ந்து பீடி புகைத்துக்கொண்டிருந்தான். அவன்முன்னால் வெள்ளைத் துணிகளால் மூடப்பட்ட ஆறேழு பாம்புப்பெட்டிகள் இருந்தன.

உணர்ச்சிக்கொந்தளிப்புகளால் யோசிக்கக்கூட முடியவில்லை. ஒருகணம் கூட அதற்குப் பிறகு என்னால் அந்த ஊரில் இருக்கமுடியவில்லை. விடுதிஅறையை காலி செய்துவிட்டு, வண்டி பிடித்து ஊருக்குத் திரும்பினேன். மனம் உலைபோல பொங்கியபடியே இருந்தது. மாத்திரை போட்டுக்கொண்டு கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்தேன். ஊர்வரும்வரை ஏதேதோ கனவுகள். குழப்பமான நினைவுகள்.

அழைத்துப்போக பேருந்து நிலையத்துக்கு மகன் இரண்டுசக்கர வாகனத்தோடு வந்திருந்தான். பெட்டியை அவன் வாங்கிக்கொண்டதும், பின்னிருக்கையில் உட்கார்ந்தேன். கட்டுப்படுத்த முடியாமல்நீயும் பார்த்தியா?” என்று கேட்டேன். “இல்லப்பா, அனிதாதான் சொன்னாஎன்று பதில் சொன்னபடி வண்டியைக் கிளப்பினான்.  எனக்கு செல்வகுமாரைப் பார்க்கவேண்டும்போல இருந்தது. நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறமாதிரி நாலு கேள்வி கேட்கவேண்டும் என மனம் துடித்தது.

நெல்லித்தோப்பு சிக்னலில் வண்டி நின்றபோது தற்செயலாக இன்ஸ்பெக்டர் வாகனமும் பக்கவாட்டில் வந்து நின்றது. ஒரே நேரத்தில் இரண்டுபேரும் பார்த்துக்கொண்டோம். “என்ன சார், விஷயத்த கேள்விப்பட்டிங்களா?” என்று கேட்டார். பிறகு “என்னமோ நல்லவன் கில்லவன்னு ஆளாளுக்கு சொன்னிங்க. கடைசியில செஞ்சிவச்சிருக்கற காரியத்த பாத்திங்களா?என்றபோது கசப்பு வெளிப்பட்டது. எனக்கு பேச்சே வரவில்லை. பெருமூச்சோடு ஆமாம் என்பதுபோல தலையசைத்தேன். என் மனத்தை அறிந்தவர்போலஸ்டேஷன்லதான் இருக்கான், வந்து பாக்கறிங்களா?” என்று கேட்டார். நான் உடனெ வண்டி மாறி உட்கார்ந்தேன்.

“ஒரு துப்பும் கெடைக்காம ஆரம்பத்துல ரொம்ப கொழம்பிட்டோம். இப்பிடிப்பட்ட கேஸ்ங்க வந்தா வழக்கமா செல்போன் நடமாட்டத்த சும்மா ஒரு ஆதாரத்துக்காக தோண்டுவோம். அதுலதான் அவன் நெம்பர் மாட்டிச்சி. ஊட்டுக்குப் போயி விசாரிச்சா ஏறுமாறா பதில் சொன்னான். ஸ்டேஷன்ல வச்சியும் கேட்டுப் பார்த்தோம். டாக்டர்க்கு படிச்ச பையனாச்சேன்னு மரியாதயா பக்குவமாதான் மொதல்ல பேசனோம். ஒன்னும் சரிவரலை. அப்பறம் நம்ம கைவரிசைக்குதான் வாய தெறந்தான். அவன் அப்பன்காரன் சாவுக்கு இவருதான் காரணமாம். பழிக்கு பழியாம். என்ன கருமமோ போங்க சார், ஒலகத்துல படிச்சவனும் வெறி புடிச்சி அலயறான், படிக்காதவனும் வெறி புடிச்சி அலயறான். நடுவுல நாம என்னத்த செய்யறது சொல்லுங்க?

இன்ஸ்பெக்டர் பேசிக்கொண்டே வந்தார். ஸ்டேஷன் வந்த பிறகுதான் நிறுத்தினார். அவர் பேசப்பேச அவனைக் கேட்க நினைக்கிற கேள்விகளின் சூடு எனக்குள் ஏறிக்கொண்டே இருந்தது.

அவன் அடைக்கப்பட்ட அறையின்முன் என்னை அழைத்துச் சென்றார் அவர். என் வருகையையே உணராதவனாக நின்றிருந்தான் செல்வகுமார்.

குமாரு, இதுதான் நீ காட்டற நன்றியாடா?நெஞ்சிலிருந்து வார்த்தைகள் வெடித்தன. ஆனால் ஒரு சொல்கூட அவனைச் சென்று சேரவே இல்லை. அந்தத் தோற்றம். அவன் கண்கள். கொஞ்சம்கூட என்னால் நம்பவே முடியவில்லை. அவன் யாரோ போல இருந்தான். என்னை அவன் பார்த்த பார்வையில் துளிகூட ஈரம் இல்லை. பொங்கிப்பொங்கி வந்த சொற்கள் அப்படியே அடங்கின. வெறுமையும் பைத்தியமும் மின்னும் அவன் முகத்தை என்னால் ஒருகணம் கூடப் பார்க்கமுடியவில்லை. விழுவதுபோல உடல் நடுங்கியது. உதடுகளைக் கடித்தபடி இன்ஸ்பெக்டரின் கைகளைப் பற்றி போயிடலாம் சார்என்று கண்களால் தெரியப்படுத்தினேன்.

 

( தீராநதி – 2013 )