”அம்பலவாணன் வாழ்க்கையில எனக்குக் கெடச்ச பெஸ்ட் ஃப்ரண்ட் சார். எனக்கு அட்வைஸர், மென்ட்டர் எல்லாமே அவன்தான். இப்படி அல்பாயுசுல போய்டுவான்னு ஒருநாளும் நெனச்சிகூட பார்த்ததில்ல” என்று நான் சொன்னேன். பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த எக்சைஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலையை மட்டும் அசைத்துக்கொண்டார். ஒரேஒரு கணம் மட்டுமே என்மீது அவருடைய பார்வை படிந்து விலகியது. எதிலும் நிலைகொள்ளாத தன்மையுடன் அருகிலிருந்த தென்னைமரங்களையும் அவற்றைச் சுற்றிச்சுற்றி விளையாடும் அணில்களையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.
“காலையில நாங்க ரெண்டு பேரும் தெனமும் ஒன்னாதான் வாக்கிங்
போவோம் சார். அம்பலவாணன் சக்கர
நாற்காலியில அம்மாவ உக்காரவச்சி அழச்சி வருவான். அவன் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்னு தள்ளிகினே போவோம். பார்க்ல ஒரு
ஃபெளண்டன் பக்கத்துல நாற்காலிய விட்டுட்டு அங்கயே நாலு சுத்து நடந்துட்டு வருவோம்........” என்றேன். என் சொற்கள் அவர்
நெஞ்சைத் தொட்டனவா என உறுதியாகத் தெரியவில்லை.
“அம்மாவுக்கு அந்த எடம் ரொம்ப புடிக்கும் சார். அங்க ஆடுற
பிள்ளைங்கள ரொம்ப ஆசையா பாத்துட்டிருப்பாங்க...” என்றேன். “ஒங்கள, மகாதேவன் அண்ணன, நடராஜன் அண்ணனப் பத்தி அவுங்க அடிக்கடி சொல்லிட்டே
இருப்பாங்க. ஒங்க மூனு பேர
பத்தியும் பேசாத நாளே இல்ல”
அவர் அப்போதுதான் என் மீது கவனத்தைச் செலுத்தினார். “நீங்க சின்ன வயசுல
பெரிய கிரிக்கெட் ப்ளேயர்னு சொல்வாங்க. அன்டர் சிக்ஸ்டீன் டீம்ல ஸ்டேட் லெவல்ல ஆடினிங்களாமே. அதப் பத்தி ரொம்ப
பெருமயா சொல்வாங்க. நாலு புள்ளைங்க வெள்ளயா சட்ட போட்டுகினு பேட் ஹெல்மட்
எடுத்துகினு நடந்து போவறத பாத்தா போதும் எங்க சங்கரலிங்கம் சின்ன வயசில
இப்படித்தான் போவான்னு சொல்லி சொல்லி சந்தோஷப்படுவாங்க” என்றேன் நான்.
அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்று உணர்ந்த பிறகே எனக்கு
தெம்பு வந்தது.
”ஏதோ ஒரு டிஸ்ட்ரிக்ட் மேட்ச் சமயத்துல உங்களுக்கு மலேரியா
வந்து ஆடமுடியாம போயிடுச்சின்னு சொன்னாங்க. அப்ப அவுங்க காளியம்மனுக்கு வேண்டிகிட்டு, உங்களுக்கு நல்லா
கொணமான பிறகு மொட்டை அடிச்சிகிட்டதா சொல்வாங்க”
“ஆமாமாம்” என்று அவர் புன்னகைத்தார். “ஐயோ, அது பெரிய கதை. அம்மாவுக்கு இன்னும் ஞாபகம் இருக்குதா அது? அப்ப எனக்கு வந்த
காய்ச்சல் மலேரியான்னு கண்டுபுடிக்கவே ஒரு மாசமாய்ட்டுது. கண்டுபுடிச்சதுக்குப்
பிறகு நாலே நாள்தான். கொய்னான்னு ஒரு மாத்திர கொடுத்தாங்க. சரியாய்ட்டுது. அந்த காலகட்டத்துல
அம்மா உண்மையிலயே ரொம்ப தவியா தவிச்சிட்டாங்க. உடம்பு குணமாகி நான் ஸ்கூல் போவ தயாரானதுமே அம்மா மொட்டை
அடிச்சிக்க கெளம்பினாங்க. கொஞ்சம் முடிய மட்டும் வெட்டி காணிக்கையா போட்டுடலாம்னு
அப்பா எவ்ளோ எடுத்து சொல்லிப் பாத்தாரு. அம்மா எதயும் காதுகுடுத்து கேக்கவே இல்லை. காளி தான் கொடுத்த
வாக்க காப்பாத்திட்டா, நான் என் வாக்க காப்பாத்த வேணாமான்னு கேட்டு எல்லார்
வாயயும் அடச்சிட்டாங்க. அந்த வாரமே கோயிலுக்கு போய் பொங்கல் வச்சி படைச்சி மொட்ட
அடிச்சிகிட்டாங்க.”
“கொடுக்கறேன்னு பிரார்த்தனை செஞ்சிகிட்ட பிறகு நேர்மையா கொடுக்கறதுதான
மொற. அதுல எப்படி சமரசம்
செஞ்சிக்க முடியும்?”
“அம்மாவ அந்த விஷயத்துல கட்டுப்படுத்தவே முடியாது. அந்த காலத்துல
அம்மா முழு தலமுடியோட இருந்தது ரொம்ப கொறச்சல். நாலு கொழந்தைங்க இருக்கற வீடு. வருஷத்துல யாராவது
ஒருத்தவங்களுக்கு உடம்புக்கு ஏதாச்சிம் ஒன்னு வந்து பாடா படுத்திட்டு போவும். உடனே அம்மா
காளிம்மா கோயிலுக்கு போய் வேண்டிகிட்டு வந்துருவாங்க.”
“அப்பிடியா, உங்கள பத்தி பேசும்போது மட்டும்தான் இத சொன்னாங்க. மத்த சந்தர்ப்பங்கள
பத்தி எதுவும் சொல்ல்லை.”
“எனக்குத் தெரிஞ்சி அம்மா அஞ்சாறு தடவ மொட்ட அடிச்சிருக்காங்க. அப்பாவுக்கு
ஒருதரம் ஸ்கூட்டர்ல போவும்போது மைனர் ஆக்சிடென்ட்ல கால்ல அடிபட்டுது. ஹேர் க்ராக். அப்ப ஒரு தரம். எங்க மகாதேவனுக்கு
எக்ஸாம் டைம்ல ஒரு தரம் அம்மை போட்டுடிச்சி. அப்ப ஒரு தரம். நடராஜனுக்கு ஒருதரம் அக்குள்ள கட்டி வந்து ஆறு மாசமா ஆறவே
இல்லை. படாத பாடு பட்டான். அப்பவும்
கோயிலுக்கு போய் வேண்டிகிட்டு வந்து மொட்ட அடிச்சிகிட்டாங்க. நான் யுபிஎஸ்சி
இன்டர்வ்யூக்கு டில்லிக்கு போயிருந்த சமயத்துல இந்த வேலை எனக்கு கெடைக்கணும்ன்னு
ஒருதரம் மொட்ட அடிச்சிகிட்டாங்க....”
சொல்லிக்கொண்டு வரும்போதே அவர் குரல் கம்மியது. சட்டென அவர் கண்கள்
நிறைந்து தளும்பின. அவரால் சில கணங்கள் எதுவும் பேச முடியவில்லை. பெருமூச்சு வாங்கி
அவர் தன்னைத்தானே திரட்டிக்கொள்வதைப் பார்த்தேன்.
மெதுவாக பேச்சை திசைதிருப்பும் விதமாக ”ஒவ்வொரு ஹாலிடேஸ்லயும் நீங்க எல்லாரும் வருவிங்கன்னு ரொம்ப
ஆவலா எதிர்பார்ப்பாங்க. வரலைன்னு தெரிஞ்சா போதும், ஃபோன் போட்டு கேளுடா ஃபோன் போட்டு கேளுடானு அம்பலவாணன
அரிச்செடுத்துடுவாங்க” என்று சொன்னேன்.
சங்கரலிங்கம் த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி
தலையசைத்துக்கொண்டே பெருமூச்சு விட்டார். “கெளம்பறதுக்கு ரெடியா டிக்கட்லாம் புக் பண்ணி வச்சிருப்பேன்
மனோகர். கடைசி நிமிஷத்துல
அங்க சோதனைக்கு போ, இங்க சோதனைக்கு போனு ஆஃபீஸ்லேர்ந்து ப்ரெஷர் வந்துடும். என்ன செய்யமுடியும்? ஒரு ராத்திரியில
வந்து போகறதுக்கு டில்லி என்ன பக்கத்துலயா இருக்குது?” என்றார்.
சங்கரலிங்கத்தின் மனைவியும் மகனும் வீட்டிலிருந்து வெளியே
வந்து கதவுக்கருகில் படிக்கட்டிலேயே அமர்ந்தனர். குளித்து முடித்திருந்தார்கள். அந்த அம்மா
ஈரக்கூந்தலை துண்டோடு சுருட்டி கொண்டை போட்டிருந்தாள்.
“சில சமயத்துல நான் தயாரா இருக்கும்போது அவளுக்கு லீவ்
கேன்சலாய்டும். நாங்க ரெண்டு பேரும்
தயாரா இருக்கும்போது அப்பதான் அவனுக்கு ப்ராஜெக்ட் அது இதுனு ஏதாவது ஒரு வேல
வந்துடும்......”
அவரால் சொல்லிமுடிக்க முடியவில்லை. தன்னிரக்கத்தில்
மூழ்கி அப்படியே மெளனத்தில் உறைந்துவிட்டார்.
வாசல் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பிப்
பார்த்தேன். ஸ்ரீதேவி ட்ரேயில் டீ கோப்பைகளை வைத்து எடுத்துவந்தாள். “என் பொண்ணு சார். ஸ்ரீதேவி. இங்கதான் ஜவஹர்ல
ஃபோர்த் படிக்கறா” என்று அறிமுகப்படுத்தினேன். “எடுத்துக்குங்க. நீங்களும் எடுத்துக்குங்க மேடம்”
வாசலில் அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு
பாட்டிக்குக் கொடுப்பதற்காக ஸ்ரீதேவி வீட்டுக்குள் சென்றாள்.
“எங்க ஸ்ரீதேவிக்கு தெனமும் அம்பலவாணன்தான் மேத்ஸ்
சொல்லிக்கொடுப்பான். அவன் படிப்புக்கும் தெறமைக்கும் டிபார்ட்மென்ட்லயே ஏதாவது
போட்டித்தேர்வு எழுதி சென்னை, பம்பாய், கல்கத்தானு போயிருக்கணும். அம்மாவுக்காக, இந்த போஸ்ட் ஆபீஸே போதும்ன்னு நின்னுட்டான்” சட்டென்று என்
கண்கள் கலங்கி குரல் இடறியதும் பேச்சை நிறுத்திவிட்டேன். ”முப்பத்தஞ்சி வயசு
சாகற வயசா என்ன? கடவுளுக்கு கண்ணே
இல்ல சார்”
அம்பலவாணன் சிதம்பரம் அஞ்சல்நிலையத்திலிருந்து புதுச்சேரி
அஞ்சல்நிலையத்துக்கு மாற்றலாகி இரு ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது நான் அங்கு
குமாஸ்தாவாக வேலைசெய்து வந்தேன். சந்தித்த முதல் நாளே நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். சிந்தனை, பேச்சு, நடத்தை, பொறுமை அனைத்திலும்
அவனிடம் தென்பட்ட பக்குவம் அவனை நோக்கி என்னைச் செலுத்திவிட்டது. என் வீட்டுக்குப்
பக்கத்திலேயே நான்தான் வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்து அவனுக்காக ஏற்பாடு
செய்துகொடுத்தேன். என் வயதை ஒத்தவன் என்பதால் என்னைப்போலவே அவனுக்கும் ஒரு
குடும்பம் இருக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் பேசத் தொடங்கிய பிறகுதான் அவன் திருமணம்
செய்துகொள்ளவில்லை என்பதையும் அவனும் அம்மாவும் மட்டுமே தங்கப் போவதையும் தெரிந்துகொண்டேன்.
“முந்தாநாள் காலையில எப்பவும் போல கெளம்பற நேரத்துக்கு
வாசல்ல வந்து, இதோ அங்க
நின்னுகிட்டு அம்பலவாணா அம்பலவாணானு கூப்ட்டேன். வழக்கமா எனக்காக வாசல்ல சக்கரநாற்காலியோடு வந்து நிக்கற ஆளு
அவன் இன்னும் என்ன காணோம்ன்னு ஆச்சரியத்தோடு கேட்ட தெறந்தேன். பால் பாக்கெட், பேப்பர்லாம்
அப்படியே கெடந்திச்சி. என்னடா இதுனு அப்பவே எனக்கு மனசுல ஒரு கொழப்பம். எல்லாத்தயும்
எடுத்துகினு போய் காலிங்பெல்ல அடிச்சேன். சத்தமே இல்ல. செல் நெம்பர்ல கூப்ட்டேன். ரிங் சத்தம்தான் போவுதே தவிர பதில் வரலை. உள்ள அம்மா ஏதோ
சொல்ற முனகல் சத்தம் லேசா கேட்டுது. ஆனா ஏசி ஓடற சத்தத்துல எதுவும் புரியலை.”
“ஜன்னல் கதவு எல்லாத்தயும் சாத்தியிருந்ததால எதயும்
பார்க்கமுடியலை. ஒரு சந்தேகத்துல
நான் போட்ட சத்தத்த போட்டு அக்கம்பக்கத்துல இருந்தவங்க எல்லாரும் ஓடியாந்தாங்க. பக்கத்து ஊட்டு
மாடி வழியா போயி, இந்த ஊட்டு மாடியில எறங்கி உள்பக்கமா போவற வழியில இருந்த
தகரக்கதவ ஒடச்சி உள்ள போயிட்டோம். அங்க அறையில அவன் கை ரெண்டயும் விரிச்ச நெலையில மல்லாந்து
கெடந்தான். ஒடம்பு
வெறச்சிபோயிடுச்சி. கண்ணுமுழி ரெண்டும் தெறந்து கெடந்தது. அத பாத்துட்டு
படுத்துகிட்டே கைய நீட்டி நீட்டி அழுதாங்க அம்மா. நான் அவசரமா குனிஞ்சி அம்பலவாணன் ஒடம்ப தொட்டு பாத்தேன். சில்லுனு
இருந்திச்சி. யாரோ ஒருத்தர் நம்ம
தெருவுலயே இருந்த டாக்டர் ஒருத்தர அழச்சிட்டு வந்தாரு. அவர் நாடிய
புடிச்சி பாத்துட்டு மாரடைப்புல உயிர் போயிட்டுதுனு சொல்லிட்டாரு.”
“அம்பலவாணன் போன்லேருந்துதான் உங்க எல்லாருடைய
நெம்பருங்களயும் எடுத்து தகவல சொன்னேன். இந்த ஏரியா கவுன்சிலர் நமக்கு தெரிஞ்ச ஆளு. அவர்தான் பக்கத்துலயே ஒரு
க்ளினிக்குக்கு பேசி பெரிய அலச்சல் எதுவுமில்லாம டெத் சர்டிபிகேட் வாங்கி குடுத்தாரு. இல்லைன்னா
க்ரிமிட்டோரியத்துல ரொம்ப சிரமமா போயிருக்கும்.”
கோப்பைகளை எடுத்து ஸ்ரீதேவியின் தட்டில் அடுக்கி வீட்டுக்கு
அனுப்பிவைத்துவிட்டுத் திரும்பிய நேரத்தில் கதவுக்கு வெளியே வந்து ”சார், அம்மா அம்பலவாணா
அம்பலவாணானு அனத்திகினே இருக்காங்க” என்று சொன்னாள் திலகா. அம்மாவின் உதவிப்பெண்.
”இருஇரு. நான் வந்து பேசறேன்” என்று நான் வீட்டுக்குள் சென்றேன். எனக்குப் பின்னால்
சங்கரலிங்கமும் அவர் மனைவியும் வந்தார்கள்.
சாய்வுநாற்காலியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட படுக்கையில்
சாய்ந்து படுத்தபடி வாசலைப் பார்த்து அம்பலவாணா அம்பலவாணா என்று விட்டுவிட்டு
அழைப்பதைப் பார்த்தேன். நேற்று தகனத்துக்கு அவருடைய உடல் எடுத்துச் செல்லப்படும்
கணம் வரைக்கும் அவனுக்கு அருகிலேயே சக்கரநாற்காலியில் அவர் உட்கார்ந்திருந்தார். துயரம் தோய்ந்த
கண்களுடன் அம்பலவாணனையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நினைவுகள் அனைத்தும் அவருடைய மனத்தில்
அழிந்துவிட்டிருந்தன. அவருடைய அழைப்புக்குரலை வேறு எப்படி புரிந்துகொள்வது என்றே
புரியவில்லை.
அவரை திசைதிருப்பும் விதமாக சட்டென அவருக்கு அருகில் சென்று ”காலையில ஏழு
மணிக்கு ரெடியா இருங்கம்மா. நான் வந்து பார்க்குக்கு அழச்சிட்டு போறன்” என்றேன். அவர் என்னை உற்றுப்
பார்த்து “மனோகரா, அம்பலவாணன எங்கப்பா விட்டுட்டு வந்த? எங்க போனாலும்
வந்தாலும் ரெண்டுபேரும் ஒன்னாதான இருப்பீங்க?” என்றாள். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
அதற்குள் சங்கரலிங்கம் முன்னால் வந்து அம்மாவின் நலிந்த
கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டபடி அம்மாவுக்கு அருகில்
படுக்கையிலேயே உட்கார்ந்தார். “என்னம்மா, என்ன வேணும்மா?” என்றார். அம்மா அவர்மீது சில கணங்கள் பார்வையைப் பதித்திருந்தார். பிறகு “உனக்காக எத்தன தரம்
அம்பலவாணன் ஃபோன் பண்ணினான் தெரியுமா? எப்ப வந்த நீ? அவன எங்க காணம்?” என்று கேட்டார். அவர் சட்டென்று சமாளித்து “நேத்து வந்தேம்மா. அம்பலவாணன் மாத்திர வாங்க போயிருக்கான். வந்துருவான். நீங்க
படுத்துக்குங்க” என்றார்.
மாத்திரை என்றதுமே நான் திரும்பி திலகாவின் பக்கம் திரும்பி “அம்மாவுக்கு
மாத்திரய கொடுத்துட்டியா திலகா?” என்று கேட்டேன். “அம்மா இப்பதானே டீ சாப்ட்டாங்க. இனிமேதான்
கொடுக்கணும்” என்றாள் அவள். மேசையில்
வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து மாத்திரை அட்டையை எடுத்தாள். சங்கரலிங்கம் அந்த
அட்டையை வாங்கி பெயரைப் பார்த்துவிட்டு ஒரு மாத்திரையை எடுத்து அம்மாவின்
உள்ளங்கையில் வைத்துவிட்டு “போட்டுக்குங்கம்மா” என்றபடி தண்ணீர்த்தம்ளரை எடுத்துக்கொடுத்தார். அம்மா மாத்திரையை
விழுங்கியதும் உதட்டோரம் படிந்த தண்ணீர்க்கோட்டை துண்டால் தொட்டு துடைத்தார். ”கொஞ்ச நேரம் டிவி
பாருங்க சரியா? எதயும்
யோசிக்க்காதிங்க” என்றார். பிறகு திலகாவின் பக்கம் திரும்பி “அம்மாவுக்கு எந்த
ப்ரோக்ராம் புடிக்கும்?” என்று கேட்டார்.
”ஐயா கார்ட்டூன் சேனல்தான் அம்மாவுக்கு வச்சிவிடுவாரு”
‘சரி, அதயே வச்சிவிடு. அம்மா பாப்பாங்க”
“அம்மா, பாத்துட்டே இருங்க. நாங்க வெளியே உக்காந்திருப்போம்”
“அம்பலவாணன் எங்க?”
‘வருவான் வருவான். நீங்க டிவி பாருங்க”
நாங்கள் வெளியே வந்தோம். “ரெண்டு நாளாவே அம்மா சரியா தூங்கல இல்லயா? அதான் கொஞ்சம்
கொழப்பத்துல இருக்காங்க. நல்லா தூங்கி எழுந்தாங்கன்னா சரியாய்டும்” என்று சங்கரலிங்கத்தை
அமைதிப்படுத்தும் விதமாகச் சொன்னேன்.
சங்கரலிங்கத்தின் மனைவி அவரிடம் “அவுங்க ரெண்டு
பேரும் ஹோட்டல்லேர்ந்து கெளம்பிட்டாங்களான்னு கொஞ்சம் கேட்டுப் பாருங்க.” என்று சொன்னாள். அவர் பையிலிருந்து
கைபேசியை எடுத்து எண்களை அழுத்திவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தார்.
”கெளம்பிட்டியா?”
“வந்துட்டே இருக்கோம்ண்ணே”
அவர் கைபேசியில் சொன்ன பதில் எங்களுக்கு தெளிவாகக் கேட்டது. “சரி சரி” என்று கைபேசியை
அணைத்து பையிலிட்டபடி “இங்கதான் வராங்களாம்” என்று மனைவியிடம் தகவலைச் சொன்னார். பிறகு, என்னிடம் ஏதோ சொல்ல
விழைவதுபோல “எங்கள பத்தி
அம்பலவாணன் ஏதாவது சொல்லியிருக்கானா?” என்று சட்டென்று தொடங்கினார்.
“எங்க அண்ணன் டில்லியில இருக்காருனு சொன்னதுண்டு. மத்தபடி குறிப்பா
எதுவும் சொன்னதில்ல” என்றேன்.
“அப்பா நைண்டிஃபோர்ல ரிட்டயரானார். நைண்டிஃபைவ்ல
யுபிஎஸ்சி எழுதி நான் டில்லிக்கு போயிட்டேன். இவ என்னுடைய பேட்ச்மெட். இந்திக்காரங்க. அப்பாவுக்கு எங்க கல்யாணத்துல இஷ்டமில்லை. ஆனாலும் நான்
கட்டாயப்படுத்தினேன்ங்கறதுக்காக மறுப்பு சொல்லாம எனக்கு கல்யாணம்
பண்ணிவச்சி டில்லிக்கு அனுப்பி வச்சிட்டார். அந்த சமயத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமா போக்குவரத்து இல்லாம போய்ட்டுது. பையன் பொறந்த சமயத்துல அழச்சிட்டு வந்து ஒருதரம் காட்டிட்டு
போனன்.”
அவர் குரல் நடுங்கியது. மூச்சை இழுத்து வாங்கி தன்னைத் திடப்படுத்திக்கொண்டார். ”நைண்டி சிக்ஸ்ல
மகாதேவனுக்கு கல்யாணம். ஆடிட்டிங் படிச்சிட்டு நல்ல பொசிஷனுக்கு போயிட்டான். நைண்டி எய்ட்ல
நடராஜன் பேங்க் எக்ஸாம் எழுதி வேலைக்கு போயிட்டான். ஐதராபாத்ல போஸ்டிங். தனியா சாப்பாட்டுக்கு கஷ்டப்படணுமேன்னு அப்பா அவனுக்கு
அப்பவே கல்யாணம் செஞ்சி வச்சிட்டாரு. அதுக்கப்பறம் அவனுக்கு எங்கெங்கயோ மாத்தல் கெடச்சாலும்
குடும்பத்த ஐதராபாத்லயே செட் பண்ணிகிட்டான். அதே வருஷம் அப்பா தவறிட்டாரு”
”எப்படி?”
“ஹார்ட் அட்டாக். இதே மாதிரிதான். நல்லா ஹெல்தியாதான் இருந்தாரு. ராத்திரி படுத்தவர்
காலையில எழுதிருக்கலை. தூக்கத்திலயே உயிர் பிரிஞ்சிட்டுது. எஸ்.டி.டி.ல கூப்ட்டு தகவல
சொன்னான் அம்பலவாணன். அப்ப அவன் ப்ளஸ் டூ முடிச்சிருந்தான். அன்னைக்கும் இதேபோல
எல்லாருமே ஃப்ளைட் புடிச்சி வந்து தகனம் செஞ்சிட்டு போனோம். அன்னையிலிருந்து
இன்னைக்கு வரைக்கும் எங்க அம்மாவுக்கு அம்மாவா இருந்து இத்தன காலமும் அவன்தான்
ஒத்தையில பாத்துகிட்டான். இருபத்திரண்டு வருஷமும் ஒரு பல்லக்குத்தூக்கியாட்டம் எங்க
அம்மாவ தோள்ல வச்சி தாங்கனான்.”
அவரை அறியாமல் கண்களில் நீர் வழிவதை நான் பார்த்தேன். பையிலிருந்து
கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டார் அவர். அவர் மனைவியும் மகனும் முகத்தைச் சுருக்கி அவரை ஒருமுறை
பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் எழுந்து வீட்டுக்குள் சென்றனர்.
“அவனுக்கு நான் ஒன்னுமே செஞ்சதில்ல. ஒரு நல்ல நாள்
கெட்டநாள்ல சட்டதுணி கூட எடுத்துக் குடுத்ததில்ல. அவனா சொந்தமா படிச்சான். அவனா ஏதோ ஒரு வேலைக்கு போனான். ஆனா அம்மாவ
பக்கத்துலயே வச்சி காப்பாத்தனான். நாங்க யாருமே செய்யாத வேலைய அந்த சின்ன புள்ள செஞ்சான். நான் டில்லியில
எப்படி இருக்கறன், என்ன வேல செய்யறன், எப்படிப்பட்ட வீட்டுல இருக்கறன் எந்த விஷயமுமே அம்மாவுக்கு
தெரியாது. ஒருநாள் கூட
அவுங்களுக்கு நான் ஒருவாய் சோறு போட்டதில்லை. அம்மாவ டில்லிக்கு அழச்சிம் போயி பக்கத்துல வச்சிக்கணும்னு
எனக்கு ரொம்ப ஆசை. அதுவும் அப்பா போனப்பறம் அது எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியாவே
ஆயிட்டுது. அந்த பேச்ச
எடுத்தாவே, என் ஒய்ஃப் இந்த
குளிர் வயசானவங்களுக்கு ஒத்துக்காது, சும்மா இருங்கன்னு என் வாய அடச்சிடுவா.”
எங்கள் தெருமுனையில் இரு கார்கள் ஆரன் ஓசையுடன்
திரும்புவதைப் பார்த்தேன். “அவுங்கதான். வந்துட்டாங்க போல” என்று சொல்லிவிட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டார்
சங்கரலிங்கம்.
முதலில் வந்து நின்ற காரிலிருந்து மகாதேவன் இறங்கினார். சென்னைக்காரர். காரை அவரே
ஓட்டிக்கொண்டு வந்திருந்தார். கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தார். நான் திலகாவை அழைத்து
நாற்காலிகளைக் கொண்டுவரச் சொன்னேன். “வாங்க சார்” என்று அவருக்கு வணக்கம் சொன்னேன். அவர் ஒரு
புன்சிரிப்புடன் தலையசைத்துக்கொண்டார்.
“மகா, இவரும் அம்பலவாணனும் ஒரே ஆஃபீஸ்ல வேல செய்றவங்க. கலீக்ஸ்” என்று சொன்னார்
சங்கரலிங்கம்.
“ஓ. ஐ சி” என்றபடி புருவங்களை உயர்த்தி புன்னகைத்தார் அவர்.
பின்கதவைத் திறந்துகொண்டு மகாதேவனின் மனைவியும் நடராஜனின்
மனைவியும் இரு பிள்ளைகளும் இறங்கினார்கள். ”எப்படி இருக்குது ஜெய்ராம் ஸ்டே?” என்று ஒரு
பேச்சுக்காக அவரிடம் கேட்டேன். “ஒன் டே டூ டேஸ்க்கு ஓகே. ரூம் சர்வீஸ்தான் ரொம்ப மோசம். அவசரத்துக்கு ஒரு
காபி சொன்னா, கொண்டுவர அர மணி
நேரம் எடுத்துக்கறாங்க” என்று அந்த அம்மா முகத்தைச் சுளித்தாள்.
பெண்கள் இருவரும் வீட்டுக்குள் சென்றதும், பிள்ளைகள் என்னிடம்
வந்து “அங்கிள், இங்கேயிருந்து பீச்
எவ்வளவு தூரம்?” என்று கேட்டனர். ”என்னடா பேச்சு இது? பீச்சுக்கு போற
நேரமா இது?” என்று முகத்தில்
கடுமை படர கேட்டார் மகாதேவன். “இருக்கட்டும் விடுங்க சார். சின்ன புள்ளைங்கதான?” என்று அவரிடம் சொன்னேன் நான். பிறகு பிள்ளைகளிடம் திரும்பி “கால் மணி நேரத்துல போயிடலாம் தம்பி” என்றேன். அதைக் கேட்டு “ஸோ க்விக்லி. வெரி நைஸ்” என்றபடி
துள்ளிக்கொண்டே வீட்டுக்குள் சென்றனர்.
இரண்டாவது காரிலிருந்து முன்கதவைத் திறந்துகொண்டு நடராஜன்
இறங்கினார். திலகா கொண்டுவந்த
நாற்காலியில் அவரை அமர்ந்துகொள்ளச் சொன்னேன்.
“ஹோம் நிலவரம் எப்படி இருக்குதுனு நேரா பாத்துட்டு வரலாம்னு
போயிருந்தோம். அதான் இங்க
வரதுக்கு கொஞ்சம் நேரமாய்ட்டுது”
”பரவாயில்லை. எப்படி இருக்குது ஹோம்? எல்லா வசதிகளும் இருக்குதா? நல்லபடியா கவனிச்சிக்குவாங்களா?” என்று கேட்டார்
சங்கரலிங்கம்
“எக்சலன்ட் ஹோம். எல்லாமே இருக்குதுண்ணே. தனி ரூம். தனி பெட். டே அட்டென்டர் தனியா. நைட் அட்டென்டர் தனியா இருக்காங்க. வீக்லி மெடிக்கல்
செக் அப். ஹைஜனிக் ஃபுட். இன்டிபென்டன்ட்
டிவி. சீனியர்
சிட்டிசன்ஸ்க்காகவே பாத்து பாத்து செஞ்சிருக்காங்க.”
“பெரிய இடமா?”
“ஒரு பெரிய கிராமமே உள்ள இருக்குண்ணே. மொத்தம் இருநூறு
அம்பது இன்டிபென்டன்ட் ரூம்ஸ். இருநூறு டபுள் ரூம்ஸ். எல்லாமே வில்லா டைப்ல இருக்குது. ரூம் முன்னால ஒரு
சின்ன கூடம். தோட்டம். எல்லாமே உண்டு. இருபத்திநாலு மணி
நேரமும் கரெண்ட் சர்வீஸ், தண்ணி. அதுக்கு மேல என்ன வேணும்?”
”பொழுதுபோக்கு?”
“ஒரு பெரிய ஆடிட்டோரியம் இருக்குது. வீக்லி ஒன்ஸ்
ஏதாவது ப்ரோக்ராம். ஒரு வாரம் ம்யூசிக். ஒரு வாரம் பக்தி. ஒரு வாரம் சினிமா. ஒரு வாரம் ஏதாவது ஒரு கலைநிகழ்ச்சி. எல்லாமே
சிஸ்டமாடிக்கா இருக்குது.”
“அப்படியா?”
“வாரத்துக்கு ஒருநாள் நாம ஸ்கைப்புல பேசிக்கலாம். ரோல்நெம்பர் படி
அதுக்கொரு டைம்டேபிள் போட்டு கொடுத்திடுவாங்களாம். அதுக்கு மேல என்ன வசதி வேணும்?”
“அதெல்லாமே சரி, பேமெண்ட்.”
“மாசத்துக்கு இருபதாயிரமாம். ஆன்லைன்லயே கட்டிடலாம்னு சொல்றாங்க. ஒவ்வொரு மாசமும்
அட்வான்ஸா கட்டிட்டு போவணும். அது ஒன்னுதான் அவுங்க நிபந்தனை.”
சங்கரலிங்கம் ஒருகணம் மெளனத்தில் மூழ்கியிருந்தார். பிறகு மகாதேவன்
பக்கமாகத் திரும்பி “நீ என்ன சொல்றடா மகா?” என்று கேட்டார்.
“இதுல சொல்றதுக்கு என்னண்ணே இருக்குது? நாம எல்லாருமே
ஆளுக்கொரு திசையில இருக்கறோம். யாராலயும் கூடவே அழச்சிம் போயி வச்சிக்க முடியாது. அப்பறம் ஹோம்
வாழ்க்கைக்கு பழகிக்கறது பல விதங்களில் அம்மாவுக்கு நல்லதுண்ணே. செலவும் பெரிய தொகை
எதுவுமில்ல. ஆளுக்கு ஒரு மாசம்
கட்டிடலாம்.”
சங்கரலிங்கம் ஆழமாக பெருமூச்சை இழுத்துவிட்டார். “ஹோம்ல விடறது நல்ல
ஐடியாதான். தப்பில்லை. நாம இருக்கற
ஊருக்குள்ளயே ஒரு ஹோம்ல விட்டா நல்லா இருக்குமேன்னு தோணுது. எல்லாருமே சேந்து
கைவிட்டுடறமோனு ஒரு குற்ற உணர்ச்சி வருது.”
“ஹோம்னு முடிவு செஞ்ச பிறகு அது எந்த ஊர் ஹோமா இருந்தா
என்னண்ணே? எல்லாமே ஒன்னுதான். ஏதாவது
எமர்ஜென்சின்னா ஃப்ளைட் புடிச்சி வந்துரலாமே.”
அதற்குள் பெண்களும் பிள்ளைகளும் வெளியே வரிசையாக வந்தார்கள். “கெளம்பலாமா? பொழுதோட போனாதான, கடற்கரையில கொஞ்ச
நேரம் புள்ளைங்க ஆடமுடியும்?” என்றார்கள்.
“சரி, வாங்க” என்று மகாதேவனும் நடராஜனும் எழுந்தார்கள். அனைவரும்
நடந்துசென்று இரண்டு கார்களிலும் ஏறிக்கொண்டார்கள்.
“நீங்க வரலையா?” என்று சங்கரலிங்கத்திடம் கேட்டாள் அவர் மனைவி.
அவர் இல்லை என்பதுபோல தலையசைத்தார். “நீங்க கெளம்புங்க. நான் அம்மாகூட
இருக்கேன்.”
”சரி, நாங்க போய்ட்டு வரம்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள் அவள். ஒருகணம் என்னைப்
பார்த்து ”சொல்ல மறந்துட்டேன். எங்களுக்காக
எதுவும் செய்யவேணாம்னு வீட்ல சொல்லிடுங்க சார். நாங்க எல்லாருமே வெளிய சாப்டுட்டு வருவோம். வரும்போது
அவங்களுக்கும் பார்சல் வாங்கிட்டு வரோம்” என்றாள்.
வண்டிகள் புறப்பட்டுச் சென்றன.
நான் தயக்கத்துடன் சங்கரலிங்கத்திடம் திரும்பி “என்ன சார் இது? என்னமோ ஹோம் அது
இதுனு பேசறாங்க?” என்று பதற்றத்துடன்
கேட்டேன். அவர் இயலாமையை வெளிப்படுத்தும்
பார்வையுடன் என்னைப் பார்த்து தலையசைத்தபடி பெருமூச்சுவிட்டார். “நான் என்ன
செய்யமுடியும் மனோகர்? அம்மாவ அழச்சிட்டு போயி வச்சிக்கறதுல எல்லோருக்குமே ஏதோ ஒரு
சின்ன சங்கடம் இருக்குது. தனியாவும் விடமுடியாது. அதிலேர்ந்து தப்பிக்க இருக்கற ஒரே வழி ஹோம்தான்” என்றார்.
“என்ன சார் சங்கடம்? பெத்த அம்மாவ வச்சி காப்பாத்தறது ஒரு சங்கடமா சார்?”
சங்கரலிங்கம் அதைக் கேட்டு தலைகுனிந்தார்.
”இன்னைய சூழல்ல எல்லாமே சங்கடமா மாறிப் போச்சு மனோகர். டில்லிக்கு
அழச்சிட்டு வரக்கூடாதுங்கறதுல என் ஒய்ஃப் ரொம்ப புடிவாதமா இருக்கா. என்னால பாத்துக்க
முடியாதுனு கட் அன்ட் ரைட்டா சொல்றா. அவ சொல்றதுக்கு தலயாட்டறத தவிர என்னால எதயும்
சொல்லமுடியலையே. என் நெலமைதான
அவனுங்களுக்கும் இருக்கும்?”
”அம்பலவாணன் அம்மாவ ஒருநாளும் பாரமா நெனச்சதே இல்ல சார்.”
“எதுக்குடா இந்த பையன் அம்மா அம்மானு உயிர விடறான்னு நானும்
யோசிச்சி பாத்திருக்கேன் மனோகர். எல்லாரயும் போல ஒரு கல்யாணத்த பண்ணிகிட்டு பொண்டாட்டி
புள்ளைனு இருக்காம, இப்படி விட்டேத்தியா இருக்கானேனு அடிக்கடி தோணும். அவன் வெறும்
விட்டேத்தி இல்ல, நாலு கோணங்கள்லயும் யோசிச்சிதான் இப்பிடி ஒரு முடிவோட
இருந்திருக்கான்னு இப்ப தோணுது. அவன் பெரிய மகாத்மா மனோகர். அவன் குணத்துல நூத்துல ஒரு பங்கு கூட எங்க யாருக்குமே
கெடயாது.”
“இங்க வந்து ரெண்டு வருஷம் ஆவுது. வீடு, ஆபீஸ் ரெண்ட தவிர
அவனுக்கு வேற எதுவுமே தெரியாது சார். பாண்டிச்சேரியிலயே இருந்துட்டு பாண்டிச்சேரி கடற்கரையை பாக்காத
ஒரே ஆள் அவனாத்தான் இருக்கமுடியும். கடற்கரை எந்தத் திசையில இருக்குதுங்கற விஷயம் கூட
அவனுக்குத் தெரியாது சார். ஒரு சினிமா, ஒரு நாடகம், ஓட்டல் எதுக்குமே அவன் வந்தது கெடயாது. அம்மாவ தவிர
அவனுக்கு வேற எந்த சிந்தனையுமே இல்ல.”
”அவன் ஒரு அதிசயப் பிறவி மனோகர். அதுல எனக்கு
சந்தேகமே இல்ல. அவனுக்கு மூத்தவனா
என்னை சொல்றது பெரிய அவமானம்.”
“அம்மாவ ஒரு கொழந்தமாதிரி பாத்துகிட்டான் சார் அவன். அம்மாவ குளிக்க
வைக்கறது, ட்ரஸ் போட்டுவிடறது, தல சீவி விடறது
எல்லாமே அவன் செய்வான் சார். பெட்பான் வைக்கறது, அலம்பி விடறது எதுக்குமே அவன் கூச்சப்பட்டதே இல்ல. அம்மாவுக்கு அவர்
செய்யறத பாத்து பாத்து மனசு திருந்தன ஆள் சார் நான். ஊருல தனியா கஷ்டப்பட்டிருந்த அம்மாவயும் அப்பாவயும் இப்ப
நான் வீட்டுல வச்சி பாத்துக்கறதுக்கு அவன்தான் காரணம். எங்கயோ ஒரு ஹோம்ல
கொண்டுபோய் அம்மாவ விட்டா இந்த வேலையெல்லாம் அவுங்களுக்கு யார் சார் செய்வாங்க?,”
சங்கரலிங்கம் முகம்திருப்பி படிக்கட்டைப் பார்த்தபடி கசந்த
குரலில் “அவன் போனதுக்கு
பதிலா நான் போயிருக்கலாம். எங்க அம்மாவுடைய இறுதிக்காலம் இத்தன நாள் இருந்தமாதிரியே
இருந்து நல்லபடியா முடிஞ்சிருக்கும். கணக்க தப்பா போட்டுட்டார் கடவுள்” என்றார்.
”கடவுள் தப்பு செய்யல சார், நாமதான் தப்பு செய்யறோம். தப்புனு தெரிஞ்சிகூட தயக்கமே இல்லாம செய்யறமே, அத என்னன்னு
சொல்றது?”
என் குரலில் தன்னிச்சையாக படிந்துவிட்ட கடுமை அவரை
மெளனமாக்கிவிட்டதை என்னால் உணரமுடிந்தது.
“இங்க பாருங்க சார், அம்மாவ நான் பாத்துக்கறேன். அம்பலவாணன் மாதிரியே நான் அவுங்கள பாத்துக்கறேன் சார். எங்க அம்மாவோடு
சேத்து அவுங்களயும் நான் ஒரு அம்மாவா பாத்துக்குவேன். எனக்கு அதுல
ஒன்னும் கஷ்டமில்லை. ஹோம் ஹீம்னு பேசற வேலயெல்லாம் வேணாம். ஒங்க தம்பிங்கள
கூப்ட்டு சொல்லிடுங்க”
என் குரலில் தொனித்த உறுதியைக் கண்டு அவர் ஒருகணம்
ஆடிவிட்டார். “மனோகர், நான் சொல்றத
கேளுங்க. நீங்க ஏதோ ஒரு
வேகத்துல பேசறீங்க. அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை” என்றார்
சங்கரலிங்கம்.
“சுலபம், கஷ்டம் எல்லாத்தயும் நான் பார்த்துக்குவேன் சார். நீங்க எதுவும்
சொல்லவேணாம். அம்மா விஷயத்துக்கு
இனிமே என் பொறுப்பு. போதுமா? இதோட அந்த சிந்தனைக்கு ஒரு முடிவு கட்டிடுங்க. அம்பலவாணன் அம்மா
எனக்கும் அம்மாதான்.”
“ஒரு நிமிஷம் மனோகர்”
”நான் ஏதோ கசப்புலயும் வேகத்துலயும் சொல்லறதா நெனைக்காதிங்க. மனப்பூர்வமாதான்
சொல்றேன். என் வார்த்தைக்கு
எதிரா என் பொண்டாட்டி என்னைக்கும் ஒரு வார்த்தயும் சொன்னது கெடயாது. வேணும்ன்னா அவளயும்
இங்க வந்து சொல்லச் சொல்றன். எந்த பேச்சுக்கும் எடமில்ல. அம்மாவுக்கு இனிமே நாங்க பொறுப்பு” என்று உறுதியாகச்
சொல்லிக்கொண்டே படியேறி உள்ளே சென்று, உறங்கிக்கொண்டிருந்த அம்மாவுக்கு அருகில் சென்று அமர்ந்தேன். என் மனம் அடங்கி
சட்டென்று குளிர்ந்துவிட்டதுபோல இருந்தது.
சிறிது நேரத்துக்குப் பிறகு “ஒரு நிமிஷம் என் கூடவாங்க” என்று சங்கரலிங்கத்தை பக்கத்திலிருந்த என் வீட்டுக்கு
அழைத்துச் சென்றேன். திண்ணையில் அமர்ந்திருந்த என் அம்மாவிடம் அவரை
அறிமுகப்படுத்திவைத்தேன். குரல் கேட்டு சுமித்ரா நைட்டிக்கு மேல் தோளில் போட்டிருந்த
துண்டில் கையைத் துடைத்தபடியே வெளியே வந்து ”வாங்க” என்றாள்
சங்கரலிங்கத்திடம் தெரிவித்த எல்லா விஷயங்களையும் நான்
சுமித்ராவிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு “ஒனக்கு என்ன தோணுதோ, அவருகிட்ட நீயே சொல்லு” என்றேன்.
“இதுல எங்களுக்கு ஒரு சிரமமுமில்ல சார். நீங்க கவலப்படாம
போய்ட்டு வாங்க. அவர் சொல்றமாதிரி
இனிமே அம்மா எங்க பொறுப்பு” என்றாள் சுமித்ரா.
அதைக் கேட்டு சங்கரலிங்கம் கைகுவித்து சுமித்ராவை
வணங்கினார். “ஒங்க எல்லாருக்குமே
ரொம்ப பெரிய மனசும்மா. நாங்கள்ளாம் பெரிய பெரிய சிட்டில இருக்கோம்னுதான் பேரு. இத்தன காலமும் அங்க
இருந்து எங்களால பணத்தத்தான் சம்பாதிக்க முடிஞ்சது. என் தம்பி இந்த சின்ன ஊருல இருந்துட்டு உங்களமாதிரி நல்ல
மனுஷங்கள சம்பாதிச்சிருக்கான்”
அடுத்த நாள் காலையில் நானும் சுமித்ராவும் ஸ்ரீதேவியும்
ட்ரேயில் டீ எடுத்துக்கொண்டு அம்பலவாணன் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மாவைக்
குளிக்கவைத்து புதிய நைட்டியை அணிவித்திருந்தாள் திலகா. அம்மாவின் முகம்
தெளிந்திருந்தது. ஸ்ரீதேவி கொடுத்த டீயை புன்னகையோடு வாங்கிக்கொண்டார் அம்மா. சங்கரலிங்கத்தின்
மனைவியும் மகனும் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
”என்ன சார், தம்பிங்ககிட்ட சொல்லிட்டீங்களா?” என்று நான்
சங்கரலிங்கத்துடன் பேச்சு கொடுத்தேன்.
“சொல்லிட்டேன் மனோகர். முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டினாங்க. அவருக்கு எதுக்கு
தேவையில்லாத சிரமம்னு சொன்னாங்க. அப்பறம் ஹோம்க்கு கொடுக்கற பணத்த அவருக்கு நாம
கொடுத்துடலாம்ன்னு சொன்னாங்க” என்றார்.
“பணம்லாம் ஒரு மேட்டரா? விடுங்க சார்”
தன் பர்சிலிருந்து விசிட்டிங் கார்ட் ஒன்றை எடுத்து என்னிடம்
கொடுத்தார் சங்கரலிங்கம். “எப்ப வேணும்ன்னாலும் நீங்க என்ன கூப்பிடலாம் மனோகர். இனிமே நானும்
உங்ககிட்ட அடிக்கடி பேசறேன். அம்மா விஷயத்துல எப்பவாவது உங்களுக்கு சிரமம்னு
தோணிச்சின்னா உடனே எனக்கு ஃபோன் பண்ணி சொல்லலாம்.”
நான் தலையசைத்துக்கொண்டேன்.
வெளியே கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நாங்கள் வெளியே
வந்தோம். மகாதேவனுடைய
குடும்பத்தினரும் நடராஜனின் குடும்பத்தினரும் இறங்கி வந்துகொண்டிருந்தார்கள். ”வாங்க சார், வாங்க” என்றபடி நாங்கள்
வாசலுக்குச் சென்றோம்.
அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக அறைக்குள் படுத்திருக்கும்
அம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு சுருங்கிய முகத்துடன் வெளியே வந்து மீண்டும் கார்களில் ஏறி
உட்கார்ந்தார்கள். அவர்களுடைய பெட்டிகளை எடுத்துச் சென்று திலகா காரில்
வைத்துவிட்டுத் திரும்பினாள். சங்கரலிங்கம் தொண்டையைச் செருமிக்கொள்வதையும் மூக்கை
உறிஞ்சிக்கொள்வதையும் பார்த்தேன். ”என்னங்க இது, சின்ன புள்ளயாட்டமா? சும்மா இருங்க. பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க?” என்று அவரைப் பார்த்து முகத்தைச் சுருக்கிக்கொண்டு அடங்கிய
குரலில் சொன்னாள் அவர் மனைவி.
ஆனால் எந்தக் குரலும் தீண்டாத உலகில் அவர் இருந்தார். அவர் உதடுகள்
துடிக்க மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருந்தார். ஒருகணம் அனைத்துத் தடைகளையும் உடைத்துவிட்டு வாய்விட்டு
ஓசையுடன் அழுதார். கண்ணீர் அவர் கன்னத்தில் வழிந்தது.
நான் படியிலிருந்து இறங்கி அவரை நோக்கிச் சென்றேன். அவர் என்னை
நேருக்குநேர் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டார். நான் முன்னால் நகர்ந்து அவர் தோளைப் பற்றிக்கொண்டேன்.
“சார், நேத்து சொன்னதயே இன்னைக்கும் நான் சொல்றேன். அம்மாவ
பாத்துக்கறது என்னுடைய கடமை. அம்பலவாணனுக்காக நான் அந்த கடமைய ஏத்துக்கறேன். எங்க போஸ்ட் ஆபீஸ்ல ஒருத்தர்
லீவ்ல போனார்னா, பக்கத்துல
இருக்கறவங்க அவுங்க வேலையயும் சேத்து செய்யறது ஒரு பழக்கம். அம்பலவாணன்
செத்துட்டதாவே என் மனசு நெனைக்கலை சார். கொஞ்சம் பாத்துக்கடா வரேன்னு சொல்லிட்டு எங்கயோ
போயிருக்கான்னுதான் தோணுது. அவன் வேல வேற, என் வேல வேறன்னு பிரிச்சி பாக்கற ஆளில்ல நான். எனக்கு எல்லாமே ஒரே
வேலதான். வருத்தப்படாம
போய்ட்டு வாங்க”
அவர் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்க கார்கள்
புறப்பட்டுச் சென்றன.
(2020)